Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சசிதீராவின் இருளில் தேடும் ஒளியாய் நீ!---2

Advertisement

ஒளி 2 :-

காலத்தின்
கணக்குகளில்
செலவாகும் வரவும் நீ!!
சுழல்கின்ற பூமியில்
மேலே சுழலாத பூமி நீ!!
இறைவா நீ ஆணையிடு!!
தாயே நீ எந்தன் மகளாய்
மாற!!


அழைப்பை ஏற்பதா வேண்டாமா என்ற யோசனையின் நடுவே இரண்டாம் முறை அடிக்க ஆரம்பித்தது. வேறு வழி இல்லாமல் அழைப்பை ஏற்றாள்.

“ஹலோ ! அம்மு !”

“அம்மா !”

“எப்படி இருக்க அம்மு ? நான் கூப்பிடும் போதும் எடுக்க மாட்டேங்குற? நீயும் கூப்பிட மாட்டேங்குற? என்ன ஆச்சு ?”

“அம்மா ! ஒன்னும் இல்லை , நான் நல்லா தான் இருக்கேன் . இங்க கொஞ்சம் வேலை அதிகம் , இப்ப வேற போஸ்டிங் மா! முன்ன இருந்ததை விட இனி பொறுப்பு அதிகம் மா! அதான் பேச முடில.”

“நீங்க எப்படி இருக்கீங்க ? டென்ஷன் ஆகாதிங்கமா?”

“நான் நல்லா இருக்கேன் , நீ அடிக்கடி பேசினால் நான் ஏன் இப்படி பதற போறேன் , நானும் உனக்கு நிறைய வேலை இருக்கு அதனால் தான் நீ பேச முடிலனு சொல்றதை நம்பறேன் ."

“அம்மா !”

“சரி சாப்பிட்டாயா ?”

“ம்ம்ம்..”

“எப்ப ஊருக்கு வர”?

“அம்மா ! இங்க இன்னும் நிறைய வேலை இருக்கு .. கண்டிப்பா இப்ப முடியாது."

“அம்மு! ஒரு காலத்தில் நான் தான் உன்ன கவர்ன்மெண்ட் வேலைக்கு போகசொன்னேன் , இப்ப அதையே என்கிட்ட சாக்கு சொல்லாத.. எப்ப எங்க போனாலும் ஒரு கும்பலோட இருக்க நீ, எங்க எல்லாரையும் விட்டு ஏன் இந்த தனிமை வாசம் என தெரில... ஆளுக்கு ஒரு இடத்தில எதுக்கு, ஒன்னு நீ இங்க வா, இல்ல என்னை அங்க கூட்டிட்டு போ.. நீ ஊருக்கு வந்து ஒரு வருஷம் கிட்ட ஆக போகுது ! நான் உன்னை பார்த்து ஆறு மாதம் கிட்ட ஆகுது ! மாமா வரேன்னு சொன்னாலும் வேணாம் னு சொல்லிட்டு இருக்க! இப்ப ஊர் திருவிழாக்கு நீ வந்து தான் ஆகணும் அவ்ளோ தான்."

“இப்படி ஊருக்கு கூப்பிடுவீங்கனு தான்மா , நான் போன் எடுக்கறதே இல்ல.”

“இப்பாவது ஒத்துகிட்டேயே நீயா தான் எடுக்கலனு “

“அச்சோ !” என மானசீகமாக தலையில் கை வைத்தாள்.

“சரி சொல்லு எப்ப வர ?”

“அம்மா! இன்னும் கொஞ்சம் நாள் போகட்டுமா நான் வரேன்” ?

“இன்னும் எவ்ளோ நாள் அம்மு ?”

“தெரியலையே! இன்னும் நான் என்ன தேடறேன்? எனக்கு என்ன தான் வேணும்னு தெரியலையே? எதற்கு இந்த ஓட்டம் எதில் இருந்து தப்பிக்க இந்த ஓட்டம்” என மனதினில் நினைத்தவாறே அமைதியானாள் .

“அம்மு!”

“அம்மு!”

“ஹான்! சொல்லுங்கம்மா !”

“நீ தான் சொல்லணும் இந்த முறை கண்டிப்பா நீ ஊருக்கு வந்தாகணும், அவ்ளோ தான் நான் போன் வைக்கிறேன்” என வைத்து விட்டார்.

முன்பெல்லாம் எத்தனையோ முறை, “உனக்கு யார்மா சாந்தினு பெயர் வைச்சாங்க ? அப்படியே அந்த பேருக்கு எதிர்மறையா இப்படி சாந்தம் இல்லாம இருக்கனு” கேலி பேசியது உண்டு கூடவே அவளின் தந்தையும்.

“ஆமா அம்மு! அந்த பேர்ல தான்மா விழுந்துட்டேன் சாந்தினு பேர் வைச்சு இருக்காங்க கண்டிப்பா பொண்ணு அமைதியான பொண்ணா இருக்கும்னு நம்பி கல்யாணம் பண்ணேன்... இப்ப பாரு எங்கே அமைதினு பாட வேண்டி இருக்கும் போல என் நிலைமை” என இவளிடம் ரகசிய குரலில் கேலி செய்வார்.

அதுவும் அம்மா காதில் விழுந்து ரெண்டு பேருக்கும் நிறைய மண்டகப்படி கிடைக்கும்.

ஆனால் எங்க ரெண்டு பேருக்கும் அம்மா என்றால் அவ்வளவு உயிராக, அம்மாவை சீண்டிக் கொண்டும் அப்பாவிடம் சீராட்டிக் கொண்டும் இவர்கள் இரண்டு பேரின் இளவரசியாய் வாழ்ந்த அந்த காலங்கள் மறுபடியும் வந்து விடாதா?

வெளி உலகம் தெரியாத சாதாரண குடும்ப தலைவியாக இருந்தாலும், குடும்பம் என்று வரும் போது தன்னை விட மற்றவர்களை அன்பாலும் கண்டிப்பிலும் பாதுகாக்கும் தாயின் அரவணைப்பிலும்,

அதே போல் வெளி உலகம் பல தந்தாலும் எனது உலகம் நீங்களே, அதுவும் என்னை எப்போதும் இளவரசியாக சீராட்டிய தந்தையின் பாசத்திலும் முக்குளித்த அந்த நாட்கள் மறுபடியும் வாராதா..

“அப்பா !” என ஏக்க பெருமூச்சு விட்டபடியே அலைபேசியை கீழே வைத்து விட்டு வேலையை தொடர்ந்தாள்.

அம்மா பேசியதை மனதில் நினைத்தவாறே எல்லாம் ஒதுக்கி வைத்தாள்.

“இந்த முறை எப்படியும் ஊருக்கு போய் ஆகணும் ,இதுக்கு மேல எல்லாரையும் சமாளிக்க முடியாது. ஆனால் அவங்க ஊருக்கு கூப்பிடற காரணத்தை தான் என்னால எதிர் கொள்ள முடியலையே, இப்ப என்ன பண்றது?காரணம் கேட்டால் என்னனு சொல்லுவேன் , எனக்கே சரியா தெரியாத விஷயத்தை அவங்க கிட்ட என்னனு சொல்றது ? அதுவும் சின்ன மாமா கேட்டால் கண்டிப்பா எதாவது உளறி வைக்க போறேன்”..

“தேவுடா ! என்னை கொஞ்சம் காப்பாற்றேன்.”

“ம்ம்ம்ம் எப்படியாவது இதை சமாளிக்கணுமே ... சமாளிப்போம்.” என அவளுக்குள் பேசியபடியே உறங்க சென்றாள்.

எப்போதும் பாடல் கேட்டுக்கொண்டே உறங்கும் வழக்கம் கொண்டவளுக்கு என்னவோ உறக்கம் எட்டவில்லை... ஏதோ ஏதோ நினைவுகள் , வேண்டாம் என விட்டு விலகிய நினைவுகள் இன்று ஏனோ இப்படி படுத்துகிறதே என அலைபேசியை எடுத்து நேரம் பார்க்க , அப்பொழுது ஒலித்த பாட்டை கேட்டுக்கொண்டே எழுந்து உட்கார்ந்து விட்டாள்.

“ நான் நினைக்கறதை நான் பேசறனோ இல்லையோ நீ நல்லா பாடற” என்றபடியே பாடலை ரசித்தாள்,

எங்கோ
இருந்து நீ என்னை இசைக்கிறாய்! இப்படிக்கு உன் இதயம்!
ஹோ… என்ன சொல்வேன் இதயத்திடம் உன்னை தினமும் தேடும்!
என் பேச்சை கேட்காமல் உன்னைத்
தேடும்…

“அவங்க இப்ப எங்க இருப்பாங்க ? எப்படி இருக்காங்கனு தெரில ? அதுக்குள்ள நாலு வருஷமாகிடுச்சு, அவங்களுக்கு என்னை ஞாபகம் இருக்குமா? எந்த நம்பிக்கையில் அவங்களை நான் தேடறேன் ? அந்த நம்பிக்கை அவங்களை என்கிட்ட கொண்டு வந்து சேர்க்குமா?” என யோசித்தபடியே உறங்கினாள்.

மறுநாள் வழக்கம் போல அலுவகம் சென்று நேற்றைய கூட்டத்தின் அறிக்கையை ஆராய்ந்தாள். அப்பொழுது அவளின் இணை செயலாளரை அழைத்தாள்.

“எஸ் மேடம் !”

“வாங்க உட்காருங்க.”

“இல்லை பரவாயில்லை மேடம் !”

“அட ! உட்காருங்க சேகர் சார், என்னோட கேபின் தானே , என்னை விட வயசுல மூத்தவங்க நீங்க உட்காருங்க”

அவர் சிறு சிரிப்புடன் அமர்ந்தார்.

“என்ன சார் சிரிக்கிறீங்க ?”

“இல்ல நேத்து கூட்டத்தில நீங்க பேசும் போது ரொம்ப கறார் பேர்வழி என்று நினைத்தேன் ஆனால் நீங்க அப்படி இல்லை போல மேடம்” என்றதும் அவள் சிறு சிரிப்புடன் அதனை ஏற்றாள்.

“நேற்றைய கூட்டத்தின் சுற்றரிக்கை எல்லா மாவட்டத்துக்கும் அனுப்பிட்டீங்களா ?”

“எஸ் மேடம்!”

“எல்லா ஊழியரின் தர அறிக்கைகள் போரம் ரெடி ஆகி விட்டதா ?”

“ரெடி ஆகிடுச்சு ,நீங்க ஒரு முறை அதை பார்த்துட்டு சைன் பண்ணால் போதும் மேடம்! “

“குட் ! என்னோட டேபிளில் வைச்சுடுங்க நான் பார்த்துட்டு சைன் பண்றேன்.”

“அப்புறம் இந்த வாரம் ஒரு ரெண்டு நாள் லீவில் நான் ஊருக்கு போறேன் , எதுவானாலும் எனக்கு கூப்பிடுங்க..பார்த்துக்கோங்க..”

“சரி மேடம் ! அப்பறம்ம்ம்....”

“சொல்லுங்க!”

“நான் இன்னும் 10 நாளில் என்னுடைய சொந்த ஊருக்கு மாற்றல் வாங்கிட்டு போகிறேன்”.

“ஆமா சார்! எனக்கும் நியூஸ் கிடைச்சுது. உங்களைப் பத்தியும் உங்கள் நேர்மையை பத்தியும் கேள்விப் பட்டிருக்கேன்... உங்களோட சேர்ந்து வேலை செய்ய முடியாமல் போனது கொஞ்சம் வருத்தம் தான்.. அனுபவம் நிறைஞ்ச நீங்கள் இன்னும் கூட இருந்திருந்தால் நல்லா இருந்திருக்கும்.”

“அதுக்கு என்ன மேடம், நீங்க ஆரம்பமே நல்ல விதமாக தான் ஆரம்பிச்சு இருக்கீங்க.. எல்லாம் நல்லபடியாக நடக்கும்.. எனக்கும் உங்களோட சேர்ந்து வேலை செய்ய முடியாம போனதில் வருத்தம் தான்! சர்வீஸ் இன்னும் ஒரு வருஷம் தான் அதனால் தான் குடும்பத்தோட இனி சொந்த ஊரில் இருந்தடலாம்னு என வெயிட் பண்ணி இந்த மாற்றல் வாங்கினேன்.”

“ம்ம்ம் புரிகிறது சார்! என்னுடைய வாழ்த்துக்கள் சார்!”

“தேங்க் யு மேடம்!”

“என் இடத்திற்கு மாற்றாக 10 பேர் செலக்ட் ஆகி இருக்காங்க... அதிலிருந்து ஒருவரை நீங்க தான் நியமனம் செய்யணும்.. பட்டியலை கொண்டு வரவா..”

“வேண்டாம் சார்... நீங்களும் தேர்வாணைய அதிகாரியும் சேர்ந்து செலக்ட் பண்ணிடுங்க...ஏன்னா என்னை விட இந்த துறையில் உங்களுக்கு அனுபவம் அதிகம் அதனால் நீங்களே பொருத்தமானவங்கள தேர்வு செய்துடுங்க.”

“சரி மேடம்!”

“நீங்க ஊருக்கு போயிட்டு வாங்க.. அதற்குள் இதை முடிச்சு வைக்கிறேன்.”

“சரிங்க சார்! தேங்க் யு!”

“இருக்கட்டும்” என சொல்லி அவர் கிளம்பி விட்டார்.

அந்த வாரத்தின் இறுதியில் தன் குடும்பத்தை எவ்வாறு சமாளிப்பது என யோசித்தபடியே இவள் சொந்த ஊரான காஞ்சிபுரத்திற்கு பயணமானாள்.





நீ
தொலைந்ததின் தேடலோ!
நான் உன்னை தொலைத்ததின் தேடலோ!
அல்லது உன்னில் நான் தொலையப் போவதின் தேடலோ!
எதுவாயினும் இந்த தேடல்
சுகமானதே!
Nice
 
தேடும் முன்பே வந்த பொருள்
வாழ்வில் நிலைப்பதில்லை
தேடி தேடி கண்ட பொருள்
எளிதில் தொலைவதில்லை
 
Top