Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சிரிப்பும் சிந்தனையும்

Advertisement

Joyram

New member
Member
சிரிப்பும் சிந்தனையும்
சிரிப்பு

ஒரு மனிதனை தனித்துக் காட்டுவது இரு குணங்கள். சிரிப்பும் , சிந்தனையும் . சிரிப்பு என்றால் நகைச் சுவைச் சிரிப்பை தனியாக குறிப்பிடவில்லை. சிரிப்பு என்பது ஒருவரின் முகமலர்ச்சி. எப்படி இதழ் விரிந்த ஒரு மலரின் புத்தம் புது மலர்ச்சி அதைப் பார்ப்பவர் கண்ணுக்குத் தெரிகிறதோ, ஒருவருடைய முகமலர்ச்சியும் அவர் முகத்தில் தனித்து தோன்றுவதையும் நாம் கவனிக்க முடியும். ஆங்கிலத்தில் cheerful என்று சொல்லப் படுவதை இதற்கு ஒப்பிடலாம். சிரிப்பு என்பது மிகவும் அழகான, அற்புதமான இதமான சொல். தினம் சிரித்து வாழ்ந்திடில் அதுதான் வாழ்க்கை. சிலருக்கு சிரிப்பு ஒரு வரமாக அமைகிறது. எப்போது பார்த்தாலும் அவரின் முகம் புன்னகை பூத்த மாதிரி இருக்கும். இவர்கள் உண்மையிலுமே கொடுத்து வைத்தவர்கள். ஏனெனில் இவர்களால் பிறருக்கு கோபத்தை கொடுப்பது என்பது மிகவும் கடினமான காரியம். மாறாக, இன்னொருவர் கோபமுடன் இருந்தால், அதை தணிக்கவும் சிரித்த முகத்தால் முடியும். எந்த ஒருவரும், எப்படிப் பட்ட முகமாக இருப்பினும், புன்னகை பூத்தால் அது மற்றவருக்கு இனிமையாகத் தான் இருக்கும். முக அழகு அல்லது பொலிவு என்பது ஒரு வரம். எல்லோருக்கும் அது கிடைப்பதில்லை. ஆனால், இருக்கும் முகத்தை மலர்ச்சியாக, சிரிப்புடன் வைத்துக் கொள்வது ஒருவருக்கு சாத்தியம் ஆகும். சிரித்து ஆட்கொள்ளுதல் இன்பமான செயலே. ஆனால் சிரித்துக் கொல்லுதல் அல்ல. மனநல நோயாளிகளின் சிரிப்பு கூட உண்மையான சிரிப்பே. ஏனெனில் அவர்களை அறியாமல் சிரிப்பதால் அது கள்ளம் இல்லாத புன்னகையே. கள்ளம் இல்லாமல், அப்பாவித் தனமாக செய்யப்படும் ஒவ்வொரு செயலும், புனிதமான செயல்களே. நான் சிரிப்பு என்று குறிப்பிடுவது இத்தகைய கள்ளமில்லா சிரிப்பைத் தான். ஆனால் அந்த மாதிரி கள்ளம் இல்லாத வெள்ளை சிரிப்பை இந்நாளில் பார்க்க வேண்டும் என்றால், பக்தி சினிமா படங்களில் கடவுள் பாத்திரங்கள் சிரிப்பதைத் தான் சொல்ல வேண்டும். துரதிருஷ்டவசமாக அந்த சிரிப்பும், பணம் கொடுத்து வரவழைக்கப் படுவதுதான். சிரித்த முகத்தில் ஆனந்தம் பொங்கும். அது இல்லாத முகத்தில் கடுகும் எள்ளும் தான் வெடிக்கும். அதனால் தானே சொல்கிறோம் 'அந்த ஆள் சிரிச்சு சிரிச்சே காரியத்தை முடிச்சிக்கிறான்' என்று.

சிந்தனை

சிந்தனை என்பது ஒரு மனிதனின் உள்ளே இயங்கும் எண்ண ஓட்டங்கள். தெரிந்து செய்யும் சிந்தனை, தெளிவான சிந்தனை, அரிய சிந்தனை, உயரிய சிந்தனை, ஆரோக்கியமான சிந்தனை, ஆற்றல் அளிக்கும் சிந்தனை, பக்தி சிந்தனை, தேவையுள்ள சிந்தனை, தேவையில்லாத சிந்தனை , நல்ல சிந்தனை, கெட்ட சிந்தனை, அடடா, சிந்தனையில் தான் எத்தனை விதங்கள்! சிந்தனகளை விவரிப்பது என்பது கடலின் தண்ணீர் அளவை அளப்பது போல. சாத்தியமே இல்லை. ஒவ்வொருவரின் சிந்தனையும் ஒரே மாதிரி இருப்பதில்லை. சிந்தனை விஷயங்களும், சிந்தனை செய்யும் விதமும், தரமும் ஒவ்வொருவரிடமும் மாறுபட்டதாக உள்ளது. அதைவிட முக்கியம், சிந்தித்தவர் அவரின் சிந்தனைகளை செயல் படுத்துகிறாரா, எப்படி செயல் படுத்துகிறார் என்பதுதான். இத்தகைய சிந்தனைகளின் விளைவே ஒரு ரமண மஹரிஷி, ஒரு காந்தி, ஒரு ஐன்ஸ்டீன், ஒரு சாக்ரடிஸ், ஒரு அலெக்ஸாண்டர், ஒரு ஷேக்ஸ்பியர், ஒரு பெர்னாட்ஷா, ஒரு கௌதம புத்தர், ஒரு சார்லி சாப்ளின், ஒரு ஆல்பர்ட் ஹிட்ச்காக், ஒரு ஹிட்லர், ஒரு பில் கேட்ஸ், ஒரு விவேகானந்தர், ரைட் சகோதரர்கள், ஒரு பிகாஸோ, ஒரு ரவி வர்மன், ஒரு லியோனார்டா டாவின்ஸி, ஒரு சர்ச்சில், ஒரு ஆப்ரஹாம் லிங்கன், ஒரு நெல்சன் மண்டேலா, இது போன்ற அதி உயரந்த மனிதப் பிறப்புகள் அல்லது படைப்புகள்.

சிந்தனையாளர்கள் சிந்திப்பதில் மட்டும் இருந்தால் ஒன்றும் நடக்காது. அந்த சிந்தனையை மக்கள் முன் கொண்டு வந்து, அவர்களின் ஒப்புதலுடன் அந்த சிந்தனைகளை நடை முறை படுத்தும் போதுதான் சிந்தனையின் விளைவுகள் புலப்படுகின்றது. நீங்களும் நானும் கூடத் தான் நிறைய சிந்திக்கிறோம். ஆனால் எந்த அளவுக்கு அவை புதுமையானவை, உபயோகமானவை, மக்கள் மனதை தட்டி எழுப்புகின்றவை என்பது தான் முக்கியம்.

சிந்தனைகளை பகிர்ந்து கொள்ளும் போது தான் அது எந்த அளவுக்கு சமுதாயத்தில் ஏறறுக் கொள்ளப் படுகிறது மற்றும் அதை பொறுத்து, சிந்திப்பவரின் எண்ணம் எந்த அளவுக்கு சமுதாயத்தால் ஏற்றுக் கொள்ளப் படவில்லை என்பதும் தெரிய வருகிறது. பல சிந்தனையாளர்கள் என்று சொல்லிக் கொண்டிருப்பவர்கள் கருத்துக்களைப் பார்த்தால், அது அரைத்த மாவையே மீண்டும் அரைப்பதைப் போலத் தான். ஆங்கிலத்தில் சொல்வது போல் " old wine in the new bottle" என்கிற பாணியில் மற்றவர் சிந்தனைகளையே அவரவர் புதிய பாணியில் சொல்பவர்களாக இருக்கிறார்கள். வாழ்க்கையைப் பற்றி, ஆன்மீகம் பற்றிய புரட்சிகரமான,தீவிரமான தம் கருத்துக்களை கிட்டதட்ட ஒரு ஒளிவு மறைவின்றி தெரிவித்து மறைந்தவர் ஓஷோ ரஜ்னீஷ். இவர் பெயரை கேள்வி பட்டவுடன் இவரை 'ஒ,அந்த செஸ் சாமியார் தானே' என்றுதான் பலரும் முணுமுணுப்போம். ஆனால் இவருடைய எழுத்துக்களை படிக்கும்போது ' ஆஹா என்ன அற்புதமாக ஒரு விஷயத்தை அலசி விளக்குகிறார்' என்பது தெரிய வரும். உங்களில் எவருக்காவது இவரின் கருத்துக்களை அறிந்து கொள்ள கொஞ்சம் ஆவல் இருந்தால் இவரின் சில புத்தகங்களை படியுங்கள் அல்லது சுலபமாக இவரது பேச்சுகள் சிலவற்றை யூடுபே இல் கேட்டு பாருங்கள். ஓஷோவை நாம் ஏற்றுக்கொள்ள தேவை இல்லை என்றாலும் அவரின் பல கருத்துக்கள் நாம் சிந்திக்க கூடியதாகவும் , நிறைய ஒப்புக்கொள்ள கூடியதாகத்தான் இருக்கும். பலருக்கு இவர் கூறும் கருத்துக்கள் மறைமுகமாக ஒத்துப் போனாலும், சமுதாயத்தின் கட்டுக் கோப்பை தகர்க்காமல் இருக்கவும், ஏனைய இதர சாமியார்கள் மற்றும் ஆன்மீக வாதிகளின் புகழையும் பெயரையும் குலைக்காமல் இருக்கவும் , இவர் கருத்துக்களை எதிர்த்தார்கள். எதிர்த்தும் வருகிறார்கள்.

உயர்ந்த சிந்தனை செய்பவர்கள் அதிகம் பேச மாட்டார்கள். விஞ்னானிகள் நல்ல உதாரணம். நிறைய பேசுபவர்கள் சிந்திக்க மாட்டார்கள். யார் உதாரணம் என்பதை நீங்கள் நன்றாக அறிவீர்கள். மேலே குறிப்பிட்ட ஓஷோ ரஜ்னீஷ்ம் கூட " Silence shared in words" என்ற தலைப்பில் நிறைய ஆடியோ மற்றும் வீடியோ பேச்சுகளை கொடுத்துள்ளார்.

இருப்பினும், ஒவ்வொரு தனிமனிதனுக்கும் அவன்,ஏன், எதற்காக, எவ்வாறு, என்ன சிந்திக்க வேண்டும் என்பதை தேர்வு செய்ய பூரண சுதந்திரம் உண்டு. பொதுவாக, ஒருவன் சிந்திக்கும் விதத்தில் அவன் வாழ்க்கை அமைகிறது. நல்ல சிந்தனை, கெட்ட சிந்தனை, உயர்ந்த, தாழ்ந்த சிந்தனை, இவை யாவுமே மனிதனும் சமுதாயமும் பாகுபடுத்தியவைகளே. பரந்த அளவில் மனித எண்ணம் எல்லாமே சிந்தனைகளே.

அதிகம் சிந்திப்பவன், புகழ் அடையலாம், பணம் அடையலாம், திருப்தி அடையலாம். ஆனால் சிந்திப்பவர்கள் எல்லோருக்கும் இவை அமைவதில்லை. இது தான் வாழ்க்கையின் பல முரண்பாடுகளில் ஒன்று. எப்படி நல்லவன் என்று சமுதாயம் கருதும் குணத்தையும் நடத்தையும் கொண்ட ஒருவன், வாழ்க்கையில் பல துன்பங்களை எதிர் கொள்கிறானோ அதைப் போல. இந்த நேரத்தில் கவியரசு கண்ணதாசன் பாடல் வரிகளை இங்கே பதிவு செய்ய விரும்புகிறேன். " புத்தியுள்ள மனிதரெல்லாம் வெற்றி காண்பதில்லை, வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலி இல்லை".

ஆகவே சிந்தனைக்கும், ஒருவன் வாழுகின்ற வாழ்க்கை தரத்திற்கும் சம்பந்தம் உண்டு என்கிற அவசியம் இல்லை. இதற்கு விதி, சதி என்று பல வித காரணங்கள் கூறப்படுகிறது. அதைப் பற்றி நான் எதுவும் இங்கு கருத்துக்களை தெரிவிக்க விரும்பவில்லை. ஏனெனில் இதற்கும் மேலாக எழுதினால் நீங்கள் என்னை எழுத்து.காம்லிருந்து எடுத்து விடுவீர்கள்.

முடிவுரை

சிரிப்பு சிந்தனை இந்த இரண்டையும் மேற்கூறிய கோணங்களில் நோக்குகையில், ஒருவன் அதிகம் சிந்தித்து அவதிப் பட்டு, எப்போதாவது சிரித்து வாழ்வதைக் காட்டிலும், குறைவான சிந்தனையுடன், நிறைய சிரித்து, நிறைவு காண்பவனை நான் மிகவும் அதிருஷ்டம் வாயந்தவன் என்று சொல்வேன். முகமலர்ச்சியும் சிரிப்பும் நகைச் சுவையும் இல்லாத வாழ்க்கை, நெய்யே சேர்க்காத மைசூர்பாகு போன்றது.

சிரிப்பு தான் வாழ்க்கையின் பச்சை விரிப்பு
சிந்தனைகள் காயப்படுத்தும் தோலுரிப்பு!
சிரிப்பு அதிகம் இருந்தால் அது அன்பளிப்பு
அதிக சிந்தனை, ஒரு பெரிய சுமை திணிப்பு!

Joyram
 
Top