Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சிறுகதை: அவள் கிடைத்துவிட்டாள்...

Advertisement

praveenraj

Well-known member
Member
அந்த ரயில்நிலையமே ரொம்ப பரபரப்பாக இருந்தது . பின்னே ஜனசங்கமம் தானே எப்போதும் அங்கு . தினம் தினம் திருவிழா என்ற வாக்கியத்திற்கு எடுத்துக்காட்டே இதுப்போன்ற இடங்கள் தானே . பெரும் பேருந்து நிலையம் , ரயில் நிலையம் , விமான நிலையம் தினமும் ஆயிரமாயிரம் புது முகங்களை சந்திக்கிறது . விடிந்தால் தீபாவளி என்னும் போது கூட்டத்திற்கு பஞ்சம் இருக்குமா என்ன ? கிட்டத்தட்ட சென்னை மாநகரமே மொத்தமாக படையெடுத்து செல்வதைப்போல் அல்லவா திரண்டிருக்கிறார்கள் .

அவ்வளவு கூட்டத்திலும் அங்கிருக்கும் கடைகள் எல்லாமும் ஜரூராய் வியாபாரங்களைப் பார்த்துக்கொண்டிருந்தது . எல்லோரும் விடிந்தால் தீபாவளி விடுமுறை என்று குதூகலிக்க பாவம் இந்த தீபாவளியை விட்டால் அடுத்து பொங்கல் தான் இதுபோல் வியாபாரம் பார்க்கவே முடியும் என்று அங்கிருக்கும் குறு சிறு வியாபாரிகள் எல்லோரும் தேனீக்களைப் போல் சுறுசுறுப்பாய் இருக்க அதைக் காட்டிலும் அதிக பரபரப்பில் இருந்தார் உலகநாதன் . ஒரு ஆவல் ,, ஒரு ஏக்கம் ,, ஒரு படபடப்பு எல்லாமும் சுமந்துக் கொண்டு அவசர அவசரமாக ஷாலிமார் எக்ஸ்பிரஸில் தனது ரிட்டயர்ட் போலீஸ் பவரை வைத்து ஒரு டிக்கெட் வாங்கி ட்ரெயினுக்காக காத்துக்கொண்டிருந்தார் .சப் இன்ஸ்பெக்டராக இருந்து ரிட்டையர் ஆகி கிட்டத்தட்ட 5 வருடங்கள் ஆகிறது . எத்தனையோ வித்யாசமான கேஸ்களை எல்லாம் பார்த்தாகிவிட்டது . கொலை , கொள்ளை , திருட்டு , கடத்தல் ஆள்மாறாட்டம் , கற்பழிப்பு ஏன் தற்கொலையைக் கூட பார்த்துவிட்டார் . ஆரம்பத்தில் போலீஸ் வேலை என்னும் போதே அவளின் உற்றார் உறவினர்கள் எல்லோரும் இவனுக்கு இது சரிப்பட்டு வருமா ? என்று கிண்டலும் அச்சமும் பட அதையெல்லாம் தூக்கிசாப்பிடும் விதமாக 57 வயது வரை பணியில் கிட்டத்தட்ட 38 வருடங்கள் பணியனுபவம் கொண்டு செவ்வனே தன் கடமையை செய்து விட்டார் . ஒரு மாதம் கூட தாக்கு பிடிக்கவே மாட்டான் என்று எண்ணியவர்கள் வியக்கும் விதமாய் இருமுறை சிறந்த காவலர் என்ற பட்டத்தையும் வாங்கி ஓய்வு பெற்றுவிட்டார் .

எல்லாமும் பெற்றுவிட்டார் என்று கேட்டால் ஆம் எல்லாமும் . ஆரம்பத்தில் நான் கையூட்டு வாங்கவே (அதாங்க லஞ்சம் ) மாட்டேன் என்று வீரவசனம் பேசியவரையே இரண்டு வருடங்களுக்குள் மனம் மாற்றம் செய்து விட்டனர் தன் சகாக்கள் . இதில் அவர்கள் தவறு என்று ஒன்றுமே இல்லையே ,,, ஊரோடு ஒத்து வாழ் என்பது தானே பழமொழி . இல்லை நான் ஒருவன் மட்டும் தலைகீழாக தான் குதிக்கப்போகிறேன் என்று சொல்லி வாழ்ந்திட முடியுமா ? அப்படி வாழ்ந்திருந்தால் தான் பணியின் கடைசி நாள் வரை வேலை செய்து அவர்கள் வைக்கும் பேர்வெல் பார்ட்டியை அனுபவித்து இருக்க முடியுமா ? எல்லாம் வடிவேல் பாணியில் சொல்ல வேண்டுமென்றால் , இங்கு நல்ல மீன்கள் விற்கப்படும் என்று பணியில் சேர்ந்தவர் இறுதியில் விற்றால் போதும் என்ற நிலைக்கு தள்ளப்பட்டு விட்டார் .. சரி அதெதுக்கு இப்போ ? மணியைப் பார்த்தவர் கடவுளை வேண்டிக்கொண்டார் . வாய் மந்திரங்களை ஓதிக்கொண்டே இருந்தது ,,, எப்படியாவது இந்த முறை பார்த்துவிடமாட்டேனா ? உண்மையாக இருக்காதா ? நினைக்கையிலே மனம் வலித்தது .

தொண்டை வறண்ட போது தன் பையிலிருந்து ஒரு தண்ணீர் குடுவையை
எடுத்து சற்று பருகியவர் சுற்றி முற்றி பார்த்தார் . தீபாவளி களைக்கட்டி விட்டது . எல்லோரும் பரபரப்பாக இருந்தனர் . எல்லோருக்கும் இவருமே பரபரப்பாக தான் காட்சியளித்தார் . அதற்குள் கட்டக் வரைச் செல்லும் ஷாலிமார் எக்ஸ்பிரஸ் வந்து சேர்ந்தது . ஏறி முந்தி எப்படியோ ஒரு இருக்கையை பிடித்து விட்டார் . பின்னே இதற்காக தானே 10 மணி ட்ரைனுக்கு 7 மணிக்கெல்லாம் ஸ்டேஷன் வந்துவிட்டார் . தூரத்தில் ஒரு பெண் தன் இடுப்பில் ஒரு குழந்தையை தூக்கிவரக் கண்டவர் அவரையும் அறியாது மீண்டும் அவர் மணிபர்ஸில் கை சென்றது . அதில் சுமார் 30 வருடங்களுக்கு முன்பு 6 மாத குழந்தையாய் எடுத்த குழலியை பார்த்தார் . கண்கள் கலங்கியது . அதை வருடிக்கொடுத்தார் . அருகில் இன்னொரு புகைப்படமும் இருந்தது . அதில் இவர் குழலி மற்றும் செல்லத்தாயி ஆகியோர் இருந்தனர் . அது கலர் போட்டோ தான் . ஒருமுறை அவர்கள் சொந்த ஊர் திருவிழாவிற்கு போன போது நெருங்கிய நண்பரின் தம்பி கல்யாணத்தில் ஆசையாய் அந்த போட்டோக்ராபரிடம் கேட்டு எடுத்துக்கொண்டது .

தூரத்தில் அவளைக் கண்டார் . இது அவள் தானா ? என்று அவருக்குள் ஒரு சந்தேகம் . முகம் மட்டும் அப்படியே இருந்தது . அங்கிருக்கும் சுத்தம் செய்பவர்கள் அணிந்திருந்த உடையை அணிந்திருந்தாள் . அதைக் கண்டதுமே ஊர்ஜிதப்படுத்திக்கொண்டார் . இது அவளே தான் . எப்படி மறக்க முடியும் ? தன் குழந்தையைக் காணவில்லை என்று 10 வருடங்களுக்கு முன்பு வந்தவளாயிற்றே ,, அதெப்படி ஞாபகம் இருக்கிறதென்று கேட்கறீர்களா ? பாம்பின் கால் பாம்பறியும் என்பதைப்போல் குழந்தையை இழந்து தவிப்பவருக்கு தானே தவிப்பவர்களின் கஷ்டம் புரியும் ... எவ்வளவோ அரும்பாடுப் பட்டு அவரின் மகளைக் சைல்ட் ட்ராபிக்கிங்ல் இருந்து காப்பாற்றியவராச்சே ? அதும் கடத்தல் காரனுக்கு உதவிய தன் மேலதிகாரியை எதிர்க்கும் அளவுக்கு பலமும் பதவியும் இல்லையே . கறைப்படாத கையாக இருந்திருந்தாலாவது ஏதாவது செய்திருக்கலாம் . போலீசாக இருந்தும் கடவுளை மட்டுமே வேண்டும் நிலை அவருக்கு வந்ததை நினைத்து வெதும்பினார் . இவளின் கண்ணீரைப் பார்த்து ஒருவழியாக ஏதேதோ செய்து மீட்டுக் கொடுத்ததும் விட்டாரே ,,, என்னமோ இவரின் குழந்தையே கிடைத்ததைப்போன்று ஒரு உணர்வு . இப்போது அக்குழந்தையைப் பார்க்கவேண்டும் என்று தோன்ற கடவுளாக பார்த்து வழிவிட்டதைப்போல் அவளின் 15 வயது மதிக்கத்தக்க குழந்தையையும் கண்டுவிட்டார் . மணியைப் பார்த்தார் இன்னும் ட்ரெயின் எடுக்க 10 நிமிடங்கள் இருக்கக்கண்டு போய் அவர்களை சந்திக்கலாம் என்றும் கூட நினைத்தார் . வேண்டாம் என்று முடிவுக்கு வந்தவர் அமைதியாக இருக்க ,, ஏன் கடவுளே ஏன் எனக்கு இந்த சோதனை என் பொண்ணு கிடைக்குமா ?

அன்று அவரின் பிள்ளைக்கு அனுவல் விடுமுறை . மூன்றாம் வகுப்பு படிக்கும் மகள் நான்காம் வகுப்பு செல்லப்போகிறாள் . கல்யாணம் ஆகி பல வருடங்கள் கழித்து பிறந்தவள் . காசிக்கு போய் வந்தால் பாவம் விலகும் என்பது பழமொழி . போனார் பாவம் விலகியதோ இல்லையோ குழந்தை கூட்டத்தில் மிஸ்ஸிங் . தன் போலீஸ் பலத்தை வைத்து முயற்சித்தும் பலனில்லை . இதன் கவலையே அவரின்
மனைவியை படுத்தப்படுக்கையாகியது . ஊரிலிருப்பவன் பொல்லாப்புக்கு ஆளானால் இப்படி தான் முடியும் என்று காதுப்படவே பேசினார்கள் . அன்றிலிருந்து இன்றுவரை அவரின் பிறவிப் பயனாக எப்படியாவது தன் மகளை கண்டுபிடித்திட வேண்டும் என்பது தான் . அலைந்துகொண்டிருந்தார் ,, இருக்கிறார் . மனைவியும் இல்லை இப்போது . காலமும் கடந்துப்போனது . அவரின் புதிருக்கு பதிலே இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை . தான் வாழ்ந்து மறைவதற்குளாவது எப்படியாவது தன் மகளைப்பற்றி எதாவது துப்பு கிடைக்குமா என்று தவிக்கிறார் . இப்பொதுக்கூட தன் நண்பனின் நண்பன் மூலமாக கிடைக்கப்பட்ட தகவல் படி அவர் சொன்ன அங்க அடையாளங்களுடன் கிட்டத்தட்ட அதே வயதில் ஒரு பெண் இருப்பதாக ஒரு செய்தி . அதற்காக தான் இப்போது இந்த பயணமும் . ட்ரெயின் புறப்பட்டது .

கடவுளே என் பெண்ணாக இருந்திடக் கூடாதா ? அவளை நான் என் வாழ்வின் இறுதியிலாவது பார்த்துக்கொள்ள ஒரு வாய்ப்பை வழங்குவாயாக என்று வேண்டிக்கொள்ள கிட்டத்தட்ட 20 மணிநேர பயணம் முடிந்து கட்டக் வந்திறங்கினார் . தீபாவளி அன்று . ஊரே கோலாகலம் கொண்டிருந்தது . அவருக்கு மட்டும் என்று அவர் மகள் கிடைக்கிறாளோ அன்று தான் தீபாவளி . ஆவலாய் அழைக்க வந்த நண்பரை பார்த்து கேட்க அவரோ அங்கிருந்த மருத்துவமனைக்கு கூட்டிச்சென்றார் .

மனம் பதைபதைத்தது . எதுவும் ஆகிவிடக் கூடாதென்று . இப்போது அது தன் மகளாய் இருக்க வேண்டும் என்ற வேண்டுதல் சென்று அவள் நல்லபடியா இருக்க வேண்டும் என்று வேண்டிக்கொண்டார் .

சார் , நீங்க சொன்ன மாதிரியே தான் 30 வயசாகும் னு நினைக்கிறேன் . இங்க ஒரு ஆக்சிடென்ட்ல கான்ஷியஸ் போய் அட்மிட் பண்ணியிருக்காங்க . கிட்ட தட்ட 22 வருடங்களுக்கு முன்பு தொலைந்துபோனவள் . அவளின் முகமே கிட்டத்தட்ட மறந்துப்போனது . அவளைப் பார்க்க என்ன அடையாளம் எதாவது சொல்லுங்க என்றவரிடம் இடதுகை மச்சம் என்று சொல்ல பார்த்தால் அதே போல் ஒரு மச்சம் இருக்க மேற்கொண்டு எதுவும் தேவைப்படாமல் பார்த்துக்கொண்டு அவள் கண்விழிக்கும் வரை காத்திருந்தனர் .

முழித்தவள் தான் எங்கிருக்கிறோம் ? தான் யாரு என்று பிதற்ற , தமிழ் மொழி அல்ல ,,

என்ன மொழி இது ?

பெங்காலி .

அவளின் முன்னால் கண்ணீர் சிந்த காத்திருந்தவரைக் கண்டு அங்கிருந்த செவிலியர் உன் அப்பா என்று பெங்காலியில் சொல்ல உடனே அவரை அணைத்துக்கொண்டாள் .

இவரும் இத்தனை நாட்கள் ஏக்கம் தீர பெண் பிள்ளையை அணைத்து ஆறுதல் செய்தார். என்ன அழுகைக்கும் பாசத்திற்கும் பாஷை தெரியவேண்டுமா என்ன ?

டாக்டர் வந்தார் சில பரிசோதனைகள் செய்து , நினைவு எப்போது வேண்டுமானாலும் திரும்பலாம் என்று சொல்லி சென்றார் . அதுவரை அவருக்கு வேண்டிய நினைவுகளை ஞாபகப்படுத்த சொன்னார்கள் . பெரிய பார்மாலிட்டீஸ் எதுவும் வேண்டாமல் அவளை அழைத்து வந்தார் . பெங்காலியில் அவளின் பெயர் குஷியாக இருக்கவேண்டும் என்று அவளிடம் இருந்த ஒரு நோட் புத்தகத்தில் இருந்ததை பார்க்க ஆசிரமத்தில் வளர்ந்தவள் என்று குறிப்பும் காட்ட ,,, கல்யாணத்தில் விருப்பமில்லாததால் தனியாகவே இருப்பதாக சொல்லிவிட்டாள் .

ஊருக்கு அழைத்து வந்தவர் அவளுக்காக இவர் பெங்காலி கற்றுக்கொள்ள இவருக்காக அவள் தமிழ் கற்றுக்கொள்ள முயன்றனர் . இவரின் பாசம் மற்றும் வீடு முழுக்க அவளின் நினைவு சின்னம் அம்மாவின் புகைப்படம் எல்லாமும் கண்டுகொண்டாள் . மாதங்கள் உருண்டோடியது . தமிழ் ஓரளவுக்கு பேசவே கற்றுக்கொண்டாள் .

தந்தை மகளின் உறவும் நல்லபடியாகவே வளர்ந்தது . தனக்காக ஒவ்வொன்றும் பார்த்துப்பார்த்து செய்யும் தந்தையை கண்டு உருகினாள் . பின்னே இந்த பாசத்துக்கு தானே ஏங்கினாள் ? ஒரு ஆறு மாதம் கடந்திருக்கும் . அவளுக்கு நன்றாக தமிழ் பேச வந்தது . இந்த வாழ்க்கையும் அவளுக்கு ஓரளவுக்கு செட் ஆகியது . அவளுக்கு திருமணம் ஏற்பாடும் செய்ய தொடங்கினார் . திருமணமும் நிச்சயிக்க பட்டது . அங்கேயே அவர்கள் ஊரிலே ஒரு நல்ல பையனுக்கு பேசி திருமணம் தேதி குறிக்கப்பட்டது .

அந்த நாள் ஒரு அழைப்பு வந்தது . அதே நண்பரிடம் இருந்து . இந்த மாதிரி அவர் தயங்க ,,

என்ன ஆச்சு ?

அது ,,, அது ஒரு தப்பு நடந்திடுச்சி ,,,

என்ன ?

குஷி குழலி இல்ல ,,,

என்ன உளற ?

குஷி உன் பொண்ணு குழலி இல்ல . நீ சொன்ன அதே அடையாளங்களுடன் தமிழும் பேசும் அதே 30 வயது பெண்ணை பற்றி இன்பர்மேஷன் வந்திருக்கு . எல்லாமும் ஒத்துப்போகுது . இரு அந்த பெண்ணுடைய போட்டோ அனுப்புறேன் .

வந்தது . பார்த்தவர் டேய் இவ என் பொண்ணு இல்ல ,,, வேற யாரோ

இல்ல அவசரப்படாத நாம வேணுனா ஒரு dna டெஸ்ட் ,,

முட்டாளா நீ ? எனக்கு தெரியாதா யாரு என் பொண்ணுன்னு ? வை . இன்னும் 4 நாளுல என் பொண்ணுக்கு கல்யாணம் . முடிஞ்சா வந்து வாழ்த்து ,,,,

டேய் டேய் ,,

அழைப்பு துண்டிக்கப்பட , குழலி உள்ளே வந்தாள் . அப்பா அவரோட அப்பா அம்மா வந்திருக்காங்க ,,,

நீ போ டா நான் வரேன் .

கதவை சாற்றியவர் அந்த புகைப்படத்தையே உற்றுப் பார்த்தார் . அப்படியே அவரின் செல்லத்தாயின் முக சாயல் . கண்களில் கண்ணீர் . இத்தனை வருஷமா தேடுனேன் கிடைக்கல ,,, இப்போ ஒரு பொண்ணுக்கு நான் தான் உன் அப்பான்னு எல்லா ஹோப்பும் கொடுத்து கல்யாணம் வரை வந்து திடீர்னு நீ என் பொண்ணில்லனு சொல்லி அவளோட இந்த 30 வருட ஆசையை கனவை கலைக்க நான் விரும்பல குழலி . இல்ல இல்ல மாயங்கி ,,, பாவம் அப்பா பாசமே தெரியாம வளர்ந்தவ மொழியை கூட கத்துகிட்டா,, நீ மாயங்கியாவே வாழு . உனக்குனு வேண்டியதை உன் தலையெழுத்தை அந்த கடவுள் பார்த்துக்கட்டும் . நான் என் குஷியோட இல்ல இல்ல குழலியோடவே இருந்துக்கறேன் . அதுனால தான் உன்னைப் பற்றி நான் எதையும் தெரிந்துக்க ஆசை படல ,,, ஆனாலும் உன் புருவத்துக்கு மேல சின்ன மச்சம் சொல்லுது நீ என் பொண்ணு தான்னு ,,, போதாக்குறைக்கு உன் அம்மாவைப் போலவே சாயல் . நீ நல்லா இருக்கனும் . இருப்ப என்றவர் அந்த புகைப்படத்தை ஒருமுறை கண்களில் நிறைத்து டெலீட் கொடுத்து கதவை திறந்து வெளியேறினார் உலகநாதன் !(முற்று
ம் ).
 
Last edited:
எழுதி இரண்டரை வருடங்களுக்கு மேல் ஆகிறது. Unedited version தான். படிச்சிட்டு உங்க கருத்தை சொல்லுங்க...
 
குழந்தைகளை தொலைத்து விட்டு வாழ்வது நரக வாழ்க்கை. உண்மையான மகள் கிடைத்தும் அவரால் சேர்த்துக்கொள்ள முடியவில்லை. நல்ல சிறுகதை.
 
Top