Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சிவப்பிரியாவின் கள்வனே கள்வனே - 2

Advertisement

Priya

Well-known member
Member
கள்வன் - 2

தன் எதிரே தட்டில் முழுநிலா போல் இட்லிகள் மூன்று மெதுமெதுவென ஆவிபறக்க ஒய்யாரமாய் வீற்றிருக்க, அதையே பாவமாய் பார்த்து வைத்தாள் இனியா.

அவளின் பாவனையை கேலி இழையோட நோக்கிய இனியன், “என்ன முகம் அடுத்த தெரு வரைக்கும் போகுது?” என்று சீண்டினான்.

அவனின் கேலியை உதாசீனம் செய்தவள் தன் காரியத்தில் தீவிரமானாள், “என் செல்ல அம்மால்ல நீ… கார்லிக் பிரட் செய்து தாயேன்…” என்று கெஞ்சலாய் கொஞ்சினாள்.

“ஒழுங்காய் சாம்பார் தொட்டு இட்லி சாப்பிடு இனியா. கண்ட கண்ட எண்ணையில் பொறித்த துரித உணவுகளை சாப்பிட்டு உடம்பை கெடுத்து வைக்கிறாய். மதியத்திற்கு பிஸிபேளாபாத் பாக்ஸில் வைத்திருக்கிறேன், ஒழுங்காய் காலி செய்து விட்டு தான் வரவேண்டும்.”

“க்கும்… லஞ்ச் பாக்ஸ் என்னவோ காலியாக தான் வரும் ஆனால் அதை யார் சாப்பிட்டார்கள் என்று உனக்கு தெரியவாப் போகிறதுமா…” அக்காவின் சூட்சுமம் உணர்ந்த தம்பியாய் உண்மையை போட்டுடைத்தான் இனியன். அவனுக்கோ தன் அக்கா தன்னை விட்டுவிட்டு அவள் மட்டும் வெளி உணவுகள் சாப்பிடுகிறாள் என்ற கடுப்பு. அதுவும் நேற்று நன்றாக பீசாவை மொக்கிவிட்டு தனக்கு வாங்கி வரவில்லை என்ற வஞ்சத்தை தீர்த்துக் கொண்டான்.

“என்னடா சொல்ற? அவள் வீட்டு உணவுகளை சாப்பிட முரடு பிடிப்பாள் தான். அதற்காகவெல்லாம் என் பெண்ணை குறை சொல்லாதே… உன் லஞ்ச் பாக்ஸ் என்றுமே காலியாக வருவதில்லை. அந்த கடுப்பை அவளிடம் ஏவாதே…” என்று மகளுக்கு பரிந்து கொண்டு வந்தார் அதுவரை அமைதியாய் உண்டுகொண்டிருந்த ரமேஷ்.

“அதானே என்றுமே கொடுத்துவிட்டதை நீ முழுதாக சாப்பிட்டதில்லை. பாதியை திரும்பக்கொண்டு வந்துவிடுவாய், நீ அவளைச் சொல்கிறாயா?” என்று கீதாவும் மகளுக்கு பரிந்துகொண்டுவர, இது என்னடா நம் திட்டம் நமக்கே திரும்புகிறது என்று ஆவென பார்த்து வைத்தான் இனியன்.

நமட்டு சிரிப்பு சிரிப்பது இப்போது இனியாவின் முறை ஆயிற்று.

இனியாவை பார்த்து பற்களை நறநறவென்று கடித்தவன், “நான் ஒன்றும் சும்மா வீணாக்கவில்லை, நம் தெருமுனையில் இருக்கும் நாயிற்கு யாரும் உணவு கொடுப்பதில்லை. அதற்காக எடுத்து வருகிறேன். சில மனிதாபிமானமற்ற ஜீவன்களுக்கு அது புரியாது.” கடைசி வார்த்தைகளுக்கு இனியாவை பார்த்து அழுத்தம் கொடுத்தவன் மீசையில் மண் ஒட்டவில்லை என்று தெள்ளத் தெளிவாய் வெளிப்படுத்தினான்.

இனியாவின் சிரிப்பு இன்னும் பெருகியது. அவளுக்குத் தெரியாதா அவன் மீதம் கொண்டு வருவதால் தான் தன் அம்மா உணவை வீணடிக்க விரும்பாது அதை தெருவில் ஆதரவற்று இருக்கும் நாய்களுக்கு வைத்து விடுகிறார்கள் என்று.

“இரண்டு பேரும் வாயை மூடிக்கிட்டு சாப்பிடுகிறீர்களா?” கீதா அதட்டல் போட,

“வாயை மூடிக் கொண்டு சாப்பிடும் வித்தையை கொஞ்சம் சொல்லிக் குடுமா… நீயும் இதையே தினமும் அச்சு பிசகாமல் சொல்கிறாய் நாங்களும் கற்றுக் கொள்கிறோம்.” இப்படி வாய் நீண்டது வேறு யாருக்குமல்ல இனியாவுக்குத் தான்.

“பாப்பா…” ரமேஷின் அழுத்தமான அழைப்பில் பேச்சை நிறுத்தி இட்லியை பிய்த்து விழுங்கினாள் இனியா.

இது தான் அவளின் அழகான கட்டுக்கோப்பான குடும்பம். ஒருவரை ஒருவர் கேலி செய்து, கூட்டு சேர்ந்து கொண்டாலும் ஒவ்வொருத்தரின் மரியாதைக்கும் முக்கியத்துவம் அளிக்கப்படும். அனைவரின் பேச்சும் அவ்வீட்டில் எடுபடும்.

“ஹான் அப்பா உன்னிடம் முக்கியமான விஷயம் ஒன்று சொல்ல வேண்டும்,” என்று சாப்பாட்டின் ஊடே ஆரம்பித்தாள் இனியா.

அவளை ஒட்டியே கீதாவும், “நானும் உன்னிடம் முக்கியமான விஷயம் பேச வேண்டும் இனியா.”

இனியா என்னவென்று பார்க்க, ரமேஷ் அந்த பேச்சை தள்ளிப்போடும் விதமாய், “நீ சொல்லு பாப்பா…” என்று பேச்சை திசை திருப்பினார். அவருக்கு கீதா இனியாவின் திருமண விஷயத்தில் அவசரப்படுகிறாரோ என்று தோன்றியது. அவரின் இந்த செயலை கண்டுகொண்ட கீதா அவரை முறைத்துவிட்டு மகள் சொல்ல வருவதை கூர்ந்தார்.

“இன்று மாலை நாம் ஏ.ஆர் ஹாஸ்பிடலில் இருக்கும் சர்கரை நோய் நிபுணரை பார்க்கலாம் பா… நீயும் இப்போது பார்க்கும் மருத்துவர் தூரத்தில் இருப்பதால் நேரத்திற்கு காண்பிக்க மாட்டேன் என்கிறாய். ஏ.ஆர் ஹாஸ்பிடல் இங்கிருந்து பக்கம் தானே. மாதாமாதம் நேரத்திற்கு சென்று வந்துவிடலாம்.”

“என்ன திடீரென்று இப்படி சொல்கிறாய்? நினைத்த உடனே எல்லாம் டாக்டரை மாற்ற முடியாது பாப்பா. யோசித்து செய்வோம்.” மருந்து, மாத்திரை என்றாலே ஒவ்வாமை வந்துவிடும் ரமேஷுக்கு. ஏதோ கீதாவின் உருட்டல், மிரட்டலில் தினமும் மாத்திரை உட்கொண்டு மூன்று மாதத்திற்கு ஒருமுறை மருத்துவரை சந்திக்கிறார். மகள் இப்போது அதற்கு வேட்டு வைத்துவிட்டாள்.

“அப்பா… நீ எங்கள் மீது வைத்திருக்கும் பாசமும், அக்கறையும் எங்களுக்கும் உன் மேல் இருக்குமல்லவா? அனைத்தையும் விட உன் ஆரோக்கியம் எங்களுக்கு முக்கியம்பா. அக்கா சொல்வதை அடம் பிடிக்காமல் கேளேன்...” என்று பெரிய மனிதனாய் பேசியது இனியனே.

“என்ன அடம் பிடிக்கிறேனா?” என்று அடமாய் கேட்டார் ரமேஷ்.

“அதில் சந்தேகம் வேறு வருகிறதா? இனியும் பிறகு பார்க்கலாம், கொஞ்சம் விசாரித்துவிட்டு போவோம் என்றெல்லாம் எங்களை ஏமாற்ற முடியாது. இனியா எல்லாம் தெளிவாக விசாரித்துவிட்டு தான் வந்திருப்பாள், அப்படித்தானே இனியா?”

தந்தையை சம்மதிக்க வைக்கும் பொறுப்பை தன் தம்பி எடுத்துக்கொண்டதில் உற்சாகமாய் தலையாட்டினாள் இனியா.

“சரி… சரி… அக்காவும் தம்பியும் ஏதோ பேசிவைத்துக் கொண்டு என்னை கார்னர் செய்கிறீர்கள் என்று மட்டும் புரிகிறது. வரவில்லை என்றால் சும்மாவா விடப் போகிறீர்கள்? ஆனால்… என் ரிப்போர்ட்ஸ் எல்லாம் உடனே தேடி எடுக்க முடியாதே… எங்கிருக்கிறது என்று தெரியவில்லை…”

“ஹா… ஹா… அப்பா உனக்கே இது கொஞ்சம் அதிகமாய் தெரியவில்லை… சீப்பை ஒளித்து வைத்தால் திருமணம் நின்றுவிடும் என்பது போல் இருக்கு நீ சொல்கின்ற காரணம். அதெல்லாம் நாங்கள் பார்த்துக் கொள்கிறோம். நீ நேரத்திற்கு வீட்டிற்கு வந்துவிடு.” என்று அவரை கண்டுகொண்டு அங்கலாய்த்தான் மகன்.

“டேய்… டேய்… நான் உன் அப்பா டா. என்னிடமே இவ்வளவு வாயடித்து அதிகாரம் செய்கிறாய்,” சிறிதும் கோபமற்ற குரலில் ரமேஷ் கொக்கி போட,

“தகப்பனுக்கு பாடம் எடுத்த முருகரை பின்பற்றும் இந்த அடியேனும் அதற்கு விதிவிலக்கு அல்ல…” என்று கூசாமல் உண்மையற்ற கூற்றை முன்னிறுத்தி டயலாக் அடித்தான்.

“டேய்… பேச்சை குறை. பேச்சை குறை… எல்லாரும் கடுப்பாகிறார்கள்.” இனியா அவன் காதில் கிசுகிசுக்க, தோள்களை குளுக்கிக் கொண்டான்.

இந்த சம்பாஷனைகளை அமைதியுடன் கேட்டுக்கொண்டிருந்த கீதாவிற்கு மனம் நிறைந்தது. என்ன தான் கணவர் தன் பேச்சை கேட்டு நடந்தாலும் அவருக்கு உடன்பாடு இல்லாத விஷயங்களில் என்றுமே தன் பேச்சு எடுபட்டதில்லை என்ற குறையுண்டு. ஆனால் இன்றோ பிள்ளைகள் அவரை கிடுக்கிப்பிடி போட்டதும் மனிதர் ஒத்துக்கொண்டதில் மகிழ்ச்சி என்றால் மகள் இப்படி பொறுப்புடன் செயல்படுவது கூடுதல் களிப்பு. இத்தனை நாட்கள் தானுண்டு, தன் கேலிகளிப்புகள் உண்டு என்றிருந்தவள் இன்றோ பொறுப்பாய் தன் தந்தையின் குணமறிந்து அதற்கேற்றாற் போல் செயல்படுவது அவள் திருமணத்தை பற்றி அவர் போட்டு வைத்திருக்கும் கணக்கை தீவிரப்படுத்தியது.

“அம்மா என்ன திட்டம் போடற? அமைதியாக இருக்க?” மகள் கேட்க,

“நான் என்ன சொல்வது இனியா, மூன்று மாதத்திற்கு ஒரு முறை டாக்டரிடம் போவது, ஆறு மாதத்திற்கு ஒரு முறை டெஸ்ட் எடுப்பது என்பது மாறி எப்படியோ இவர் ஒழுங்காக உடம்பை பார்த்துக் கொண்டால் போதும்.” பதிலளித்தார் அன்னை.

தன் குடும்பத்திலேயே டெபாசிட் இழந்ததை கண்டு நொந்து கொள்ள மட்டுமே முடிந்தது அந்த ஆங்கிலப் பேராசிரியரால்…

◆◆◆

மேல் பார்த்த வீட்டிற்கு நேரெதிராய் நிர்மலமாய் அவ்வீட்டின் சோகத்தைத் தாங்கி நின்றது அந்த 2பிஹச்கே வீடு.

பத்துக்கு பத்து கொண்ட சிறிய சாப்பாடு அறையில் போடப்பட்டிருந்த உணவு மேஜையில் அமைதியுடன் உண்டு கொண்டிருந்தவனை யோசனையாய் பார்ப்பதுமாய் பின் திரும்புவதுமாய் இருந்தவரை கண்டவன் கேள்வியுடன் புருவத்தை உயர்த்தினான்.

“நான் ஒன்று சொன்னால் கோபித்துக் கொள்ளமாட்டாயே?”

“என்னமா?” கேட்டது மகன்.

“உனக்கும் இருபத்தேழு வயதாகிறது. கல்யாணம் செய்து செட்டில் ஆக சரியான வயது. நான் பெண் பார்க்கவா?”

“அம்மா… இப்போது என்ன அவசரம்? எனக்கு பொறுப்புகள் நிறைய இருக்கின்றது. அதை முடிக்காமல் நான் திருமணம் செய்வதாய் இல்லை. நீங்களும் அந்த எண்ணத்தையெல்லாம் மூட்டை கட்டிவிட்டு நமக்கு இப்போது இருக்கும் பிரச்சனையை சரி செய்ய முயற்சியுங்கள். சும்மா நம் நேரம் சரியில்லை… ஆடி போய் ஆவணி வந்தால் சரியாகிவிடும், பால்குடம் சுமந்து நேர்த்திக்கடன் செய்தால் நம் கஷ்டங்கள் எல்லாம் தூரபோய்விடும் என்று கோவில் கோவிலாய் சுற்றாமல் பக்கத்தில் இருந்து என்ன செய்ய முடியும் என்று பாருங்கள்.”

“அதில்லைடா… எல்லாம் நேரத்திற்கு செய்துவிட வேண்டும். நீ எடுத்துக் கொண்ட பொறுப்பு எப்போது முடியும் என்றெல்லாம் சொல்ல முடியுமா? நம் கையில் இல்லாத ஒன்றிற்கு காலக்கெடு விதித்து அது நிறைவேறினால் தான் நீ உன் வாழ்க்கையை பார்ப்பாய் என்று சொல்வது எந்த விதத்திலும் நியாயம் இல்லை.” கவலையுடன் வந்தது அத்தாயின் குரல். அவருக்கென்ன கவலைக்கா பஞ்சம்…

கண் மூடினால் தூக்கத்தை துளை போட்டுக்கொண்டு உள் புகுந்து உட்கார்ந்துவிடுகிறது. கண் திறந்தாலோ கண்ணெதிரே மனம் சுக்கு நூறாய் நிமிடத்திற்கு நிமிடம் உடைகிறது. அவரும் எவ்வளவு தான் தாங்குவார்…

சில வருடங்களாக துயரையே கண்ட மனது சிறு ஆனந்தத்தை எதிர்பார்த்து இப்போது இவன் முன் மண்டியிடுகிறது.

“என் வாழ்க்கையை மட்டும் பார்த்துக்கொண்டு நான் மட்டும் சந்தோஷமாய் இருந்தால் என் மனமே என் செயலை ஏற்காதுமா… ப்ளீஸ்…”

“நீயாவது மகிழ்ச்சியாக வாழ்வதை பார்க்க வேண்டுமடா… நடந்த, நடக்கின்ற எதற்கும் நீ காரணம் இல்லைடா. கொஞ்சம் யோசியேன்.” இறைஞ்சியது அவர் குரல்.

“அம்மா...நீ கொஞ்சம் புரிந்துக்கொள்ள முயற்சி செய்மா… நாளை மனைவி என்று ஒருவள் வந்து இதை நீ செய்யக்கூடாது, இவ்வளவு செலவு எதற்கு, நமக்கு ஏன் இந்த தலைவலி என்று சொன்னால் நிச்சயம் என்னால் ஒரு நிலையாய் இருக்க முடியாது. வருபவளையும் விடமுடியாது, எடுத்துக் கொண்ட இலட்சியத்தையும் விடமுடியாது திண்டாட்டமாய் போய்விடும். நான் தானேமா இதெல்லாம் செய்ய வேண்டும்.”

“இன்பன் என்று பெயர் வைத்துக்கொண்டு நீ இப்படி இன்பத்தை தொலைத்து ஓடினால் எப்படிடா?”

“என் வாழ்க்கையில் இப்போது என்ன குறைந்து விட்டதென்று நீ இப்போது இப்படிப் பேசுகிறாய்? எனக்கு நம்பிக்கை இருக்கிறது, இன்னும் சில நாட்களில் எல்லாமே சரியாகிவிடும். ஆபிஸில் லோனிற்கு அப்ளை செய்திருக்கிறேன்… இந்த வீட்டை வங்கியில் பிணையாய் வைத்தால் பணத் தேவையை ஈடு கட்டிவிடலாம்.”

“அதெல்லாம் எனக்குத் தெரியாது. நீயே இப்படி நடக்குமோ, அப்படி நடக்குமோ என்று ஒன்றை நினைத்து கற்பனை செய்துகொண்டு இதை மறுக்கிறாய். திருமணம் செய்துகொண்டு இருவருமாய் இதை பார்த்துக் கொள்ளுங்கள். இந்த ஒரு மாற்றம் நம் வாழ்க்கையின் பாதையை மாற்றும் என்று தோன்றுகிறது.” என்று திடமாய் ஒலித்தது இன்பனின் அன்னை சிவகாமியின் குரல்.

“நீ முடிவு செய்துவிட்டு என்னிடம் பேசுகிறாய்… என்னவோ செய்…”

அவனுக்குமே அன்னையின் துயரை சகிக்க முடியவில்லை. தன் திருமணம் ஒரு நல்ல மாற்றத்தை இவ்வீட்டில் கொண்டு வருமென்றால் அவனுக்கும் அதில் மகிழ்ச்சியே. அதனால் அன்னையின் கெஞ்சலுக்கு செவி சாய்த்து, தன் சம்மதத்தை மறைமுகமாய் தெரிவித்தான்.


*^*^*

போட்டியின் முதல் நாளே பொங்கல் விழாவிற்கு ஈடாய் களைகட்டியது கனவுபட்டறை. நான் கவனித்தவரை அனைவரும் அறிமுகத்தோடு கதையை துவங்கியிருக்க, நானோ நேராக முதல் பதிவை போட்டுவிட்டேன். அறிமுகமற்ற எனக்கு நீங்கள் அளித்த ஆதரவை கண்டு நெகிழ்ந்துவிட்டேன். பொதுவாகவே ஸ்கூல், காலேஜ் முதல் நாள் பிறகு இன்டெர்வியூ தவிர எங்கும் என்னை தனியே அறிமுகப்படுத்தி கொண்டதில்லை அதுவே இங்கேயும் தொடர்ந்துவிட்டது. என்னை பற்றி நானே சொல்வதை விட மற்றவர்கள் ஏதோவொரு வகையில் என்னை தெரிந்துகொள்ள வேண்டும் என்றே விரும்புவேன். ஒரு அக்மார்க் அமைதிப்பேர்வழி… அவ்ளோ தான் நான்…

மற்றபடி கதை எழுதுவதில் புதியவள் அல்ல ஆனால் கத்துக்குட்டி. இந்த போட்டியில் கலந்து கொண்ட நோக்கமே பாதியில் நிறுத்தியிருந்த என் எழுத்துப் பயணத்தை துவங்கத்தான்… கதைக்களத்தை யதார்த்தமாய் கொண்டுபோக வேண்டும் என்று முயன்றாலும் என் கற்பனை எப்போதுமே உள்ளே புகுந்து ஆட்டத்தை கலைத்துவிடும். இருப்பினும் கதையின் ஊடே நான் வெளிப்படுத்த முனைவது என் கண்முன் நிகழ்ந்த நிகழ்வுகளை வைத்தோ அல்லது நான் கேள்விப்பட்ட விஷயங்களும் என் சுய சிந்தனைகளும் அதில் நான் கற்று உணர்ந்தவையுமே கற்பனையினூடே எட்டிப்பார்க்கும். மற்றதையெல்லாம் என்னுடன் இந்த கதையில் பயணித்து அறிந்து கொள்ளுங்கள்… தவறு இருந்தால் தவறாமல் சுட்டிக்காட்டவும்... தங்களின் கருத்துக்களே என்னை செப்பனிட்டுக்கொள்ள உதவும்...

அடுத்த பதிவு புதன்/வியாழனில் வரும்.

என்றும் அன்பு மற்றும் நன்றியுடன்,
சிவப்பிரியா.
 
Top