Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சுகமதி'யின் விரல் மீறும் நகங்கள் - 02 ( PART 01 )

Advertisement

Yazhvenba

Well-known member
Member
வணக்கம் FRIENDS,

கதையை வாசித்து, விருப்பம் தெரிவித்து, கருத்துக்களை பகிர்ந்து கொண்டு... உடன் பயணிக்கும் அனைவருக்கும் எனது நன்றிகள். மறக்காமல் கதையின் நிறை, குறைகளை சுட்டிக் காட்டுங்கள் FRIENDS..

இதோ இரண்டாம் அத்தியாயத்தின் முதல் பாகம்...


*****


விரல் மீறும் நகங்கள் – 02 (PART 01)



காரினுள் ஏறும் முன்பு நின்று நிதானமாகத் திரும்பிப் பார்த்தான் வெற்றிச்செல்வன். அவன் வேகத்திற்கு ஈடு கொடுத்து வேகம் கூட்டி நடந்து வந்ததாலோ என்னவோ மெலிதாக மூச்சிரைத்தது செந்தாமரைக்கு.



அவனை அழைக்கத் தான் வெகுநேரமாக முயன்றாள். ஆனால், அழைக்கும் முறை? அதில் எழுந்த குழப்பத்தில், பின்னோடே வெளி வாசல் வரை வந்துவிட்டிருந்தாள்.



இப்பொழுது அவனே திரும்பிப் பார்க்கவும், அவள் அப்படியே நின்று விட்டாள். அவன் தீர்க்கமாய் வேறு பார்க்கவும், அந்த பார்வையின் வீரியத்தில் முகத்தை வேறு பக்கம் திருப்பிக் கொண்டாள். பார்ப்பவர்களுக்கு ஏதோ ஊடல் கொண்ட காதலர்களின் தோற்றம்.



முன்பின் தெரியாத பெண், புதிதாய் ஊருக்கு வருகிறாள்; அவளுக்கு உடனேயே பள்ளிக்கூடத்தில் வேலை. தங்க ஒரு பாதுகாப்பான இடம். அவளைப்பற்றி யாருக்கும் போதிய விவரங்கள் தெரியவில்லை; பார்க்க வெகு லட்சணமாய் இருக்கிறாள்; இதையெல்லாம் வைத்து ஊர் மக்கள் மேலோட்டமாய் ஜோடித்த விஷயம் தான்... ‘செந்தாமரையும், வெற்றிச்செல்வன் ஐயாவும் காதலர்கள். செந்தாமரையின் வீட்டில் காதலுக்கு எதிர்ப்பு கிளம்பியதால் இங்கே ஐயாவைத்தேடிக் கிளம்பி வந்துவிட்டாள். இப்பொழுது பெரிய வீட்டு ராஜேஸ்வரி அம்மாள் ஒப்புதல் தந்தால் இருவருக்கும் விரைவில் திருமணம்’ என்பது. ஊருக்குள் கண், காது, மூக்கு வைத்து ஒரு காதல் கதை உலாவிக் கொண்டிருந்தது.



இவர்கள் இருவரின் தோற்றத்தைப் பார்த்த வீரமணி, “அம்மா ரொம்ப கோபமா இருக்காங்க போல பாண்டி” என காரோட்டியின் காதை கடிக்க,



“எனக்கும் அப்படி தான் தோணுது அண்ணே! பின்ன அம்மாவும் இங்க வந்து ஒரு மாசம் ஆச்சு. இந்த ஐயா இப்ப தான பாக்க வராரு. அந்த கோபம் இருக்காதா?”



“ஏன்டா கிறுக்கு புடிச்சவனே, ஐயா அம்மாவை அடிக்கடி பார்க்க வந்தா, ஊருக்குள்ள இவங்க ரெண்டு பேரு விஷயம் தெரிஞ்சுடாது” என்று கடிந்தான் வீரமணி.



“ஆமா அண்ணே. நீங்க சொல்லறதும் சரிதான். கொள்ளை அறிவு உங்களுக்கு. இல்லாட்டி ஐயாவுக்கு மூணாவது கை மாதிரி நீங்க இருக்க முடியுமாண்ணே” என மெய்சிலிர்த்தான் பாண்டி.



வெகுநேரம் செந்தாமரை பேசாதிருக்கவும், “என்ன?” என்றான் வெற்றிச்செல்வன். ஏதோ ஒரு தோரணை தெரிந்தது அவன் பேச்சில். அது அவளுக்குச் சுத்தமாய் பிடிக்கவில்லை.



அந்த பிடித்தமின்மை குரலிலும், வார்த்தைகளிலும் வெளிப்பட, “என்ன நீங்க பாட்டுக்கு வரீங்க. இப்போ நீங்க பாட்டுக்கு கிளம்பறீங்க?” எனச் சற்று அதிகார தொனியிலேயே கேள்வி கேட்டாள்.



‘என்ன இந்த பெண் என்னிடம் கேள்வி கேட்கிறதா!’ என்று மெலிதாக அதிர்ந்தான் அவன். ஊருக்குள் யாரும் அவ்வளவு எளிதில் செய்யத்துணியாத செயல்.



அவளுக்குப் பதில் கூறும் முன்பு, “வீரா…” என அழைப்பு கொடுக்க,



“இதோ இங்க தான் இருக்கேங்க ஐயா…” என வந்து நின்றான் அவன்.



அவனது செய்கையில் தலையில் அடித்துக் கொள்ளலாம் போல இருந்தது வெற்றிக்கு. அவனிடம் சலித்தபடி, “ம்ப்ச்… ரெண்டு பேரும் போய் டீ குடிச்சுட்டு வாங்க” என நூறு ரூபாய் தாளை எடுத்து நீட்டினான்.



“இப்ப தானே ஐயா உள்ள தந்தாங்க…” என காரணம் புரியாமல் வீரமணி தலையைச் சொரிய,



நல்லவேளையாக பாண்டி இடையில் புகுந்து காப்பாற்றினான். “அண்ணே நான் குடிக்கலை வாங்க” என வீரமணியை இழுத்துச் சென்றவன், “இதோ வந்துடறோங்க ஐயா” என வெற்றிச்செல்வனிடம் கூறிவிட்டு நகர்ந்தான்.



“என்ன அண்ணே, கூறே இல்லையா உங்களுக்கு. ஐயா ஏதோ அம்மா கிட்டத் தனியா பேச பிரியப்படறாரு. அப்போ போய் நந்தி மாதிரி குறுக்க புகுந்துட்டு. இதுக்கு தான் கால காலத்துல கல்யாணம் ஆகணும்ன்னு சொல்லறது” எனப் பாண்டி வீரமணியை வறுத்தெடுக்க… அவர்களுக்குள் சொற்போர் தொடங்கிற்று.



அவர்கள் சென்றதை உறுத்திப்படுத்திய வெற்றிச்செல்வன், “என்ன கேட்ட?” என்றான் செந்தாமரையிடம். இப்பொழுதும் தொனி மாறவில்லை அவனுக்கு.



“என்ன கேட்பாங்க? யாரு என்ன கேட்க முடியும்ன்னு தானே இப்படி எல்லாம் செய்யறீங்க. இதே பரமேஸ்வரன் ஐயாவா இருந்திருந்தா இத்தனை குளறுபடி செய்ய மாட்டாரு. சொன்ன நேரத்துக்கு வரது ஆகட்டும், விழா முடியறவரை பொறுமையா இருக்கிறதாகட்டும்…” என அவள் பட்டியலிட,



“ஒரு அவசர வேலை…” என்றான் அவளுக்குத் தகவலாக. அவன் இப்படி பொறுமையாக விளக்கம் தருபவனெல்லாம் இல்லை. அதிசயமாக விளக்கம் தந்திருந்தான். அது அவளிடம் கட்டுண்டிருக்கும் காரணத்தால் இருக்கும் என்பது அவனது யூகம் .



அவளுக்கு அது எல்லாம் தெரிந்திருக்க வாய்ப்பில்லாத காரணத்தால் வம்பு வளர்த்தாள். “அப்போ இங்கே வரேன்னு ஒத்துக்கிட்டு இருக்கவே கூடாது” என்றாள் விடாமல்.



“இதுல உனக்கென்ன பிரச்சனை?”



“எனக்கென்ன பிரச்சனைன்னு எல்லாரும் ஒதுங்கிடறதால தான் எதுவும் முறையா நடக்க மாட்டேங்குது” சம்பந்தமே இல்லாமல் போர்க்கொடி தூக்கி நின்றாள்.



“லூசா நீ… என்ன பிரச்சனை உனக்கு? காலையில தாமதம் ஆயிடுச்சு. அதுக்கு இப்படி குதிப்பியா நீ? கொஞ்சம் கூட மரியாதை இல்லாம” அவள் வம்பிற்கு நிக்கவும், இவனும் சற்று அதட்டினான்.



கூடவே அவனின் எண்ணம், ‘சண்டையிடும் இடமா இது? அதுவும் ஊருக்குள் இருவரைக் குறித்தும் தாறுமாறாகக் கதைகள் பிணைக்கப்பட்டு உலாவ விட்டிருக்கும் இந்த நேரத்தில்?’ என்றிருந்தது.



ஆம், வெற்றிச்செல்வன் அறிந்தே இருந்தான், ஊருக்குள் உலாவிக்கொண்டிருக்கும் கதைகளை. என்ன, தனக்குத் தெரியும் என்பது போல வெளியில் காட்டிக் கொண்டதில்லை.



“உங்களுக்கு மட்டும் மரியாதை தெரியுதோ?” அவனது அழைப்பில் இவளும் சண்டைக்கு நின்றாள்.



“பைத்தியமா நீ?” கூடக் கூட பேசுகிறாளே என்னும் எரிச்சல் அவனுக்கு.



“என்ன நீங்க? லூசா, பைத்தியமான்னு? என்ன பேச்சு பேசறீங்க? இதே பரமேஸ்…” என அவள் அவனது தந்தையின் பெயரை மீண்டும் உச்சரிக்கும் போதே,



அவனது பொறுமை மொத்தமாகப் பறந்தது. “ஸ்ஸ்ஸ்... வாயை மூடு. இன்னும் ஒரு வார்த்தை வரக்கூடாது. முதல்ல எங்க அப்பாவோட என்னைப் பொருத்திப் பார்க்கிறதை நிறுத்து. என்னால அவரு மாதிரி எல்லாத்தையும் நியாயமா தட்டி கேட்கிறேன்னு அலைஞ்சு திரிஞ்சு தப்பு செஞ்சங்களைத் தப்பிக்க வைக்க முடியாது. அவரை மாதிரி வேடிக்கை பார்க்கவும் முடியாது. என் அப்ரோச் வேற! இனி ஒரு முறை அவரோட கம்பேர் செஞ்ச…” என்று பொறுமை இல்லாத நிலையில் மிரட்டலாக வெளிவந்தது அவனது வார்த்தைகள்.



இவர்கள் இருவரையும் வெகுநேரம் நோட்டம் விட்டுக்கொண்டிருந்த பெண் ஒருத்தி, உடனடியாக ராஜேஸ்வரி அம்மாவை அழைத்திருந்தாள்.



“என்ன விஷயம்? எதுவும் தகவல் தெரிஞ்சதா?” என தன் ஆளுமையான, அதிகாரக்குரலில் ராஜேஸ்வரி அம்மா கேட்க,



“அம்மா ஊருக்குள்ளே பேசிக்கிறது நிஜம் தான் போல, ரொம்ப நேரமா ஐயாவும், அந்த புதுசா வந்த பொண்ணும் பேசிக்கிட்டே இருக்காங்க. ஐயா அவரு கூட இருந்தவங்களை அனுப்பிட்டு, தனியா நின்னு அந்த பொண்ணுகிட்ட பேசிட்டு இருக்காரு”



“எனக்கு முன்னாடியே சந்தேகம், ஏதோ பிரச்சனைன்னு இன்னைக்கு விழாவுக்குத் தாமதம் ஆயிடுச்சு. அப்பவும் பள்ளிக்கூடத்துக்கு போகணும்ன்னு கிளம்பறானே! அதான் உன்னைக் கண்காணிக்கச் சொன்னேன். என் சந்தேகம் சரி தான். அப்ப நான் சொன்ன மாதிரியே செஞ்சுடு. அந்த பொண்ணுக்கு மயக்க மாத்திரை போட்டுத் தானே டீ கொடுத்து இருக்க?”



“ஆமாங்கம்மா”



“சரி மயங்கிடுவா. நம்ம வைத்தியச்சியை விவரத்தைச் சொல்லி அனுப்பி வைக்கிறேன்” என்றபடி அழைப்பைத் துண்டித்தார்.



ராஜேஸ்வரிக்கு கோபம் கனன்றது. ‘அப்படியே அப்பன் புத்தி’ என நரநரத்தவர் மேற்கொண்டு என்ன செய்ய வேண்டும் என்று வைத்தியச்சியிடம் விஷயத்தைக் கூறினார்.



இந்த விஷயங்கள் ஒருபுறம் நடக்க, பேசிக்கொண்டிருந்த பொழுதே செந்தாமரை மயங்கி விழப்போனாள். வெற்றிச்செல்வன் வேகமாய் வந்து தாங்கிக்கொள்ள, சுயநினைவை முழுவதும் இழந்த நிலையில் அவன் மேலேயே சரிந்தாள்.



என்ன செய்ய எனப் புரியாமல் வெற்றிச்செல்வன் குழம்ப, உடனடியாக வீரமணியை அழைத்தவன், “வீரா நம்ம டாக்டரை வர சொல்லு” என்று பணித்திருந்தான்.



அவன் பேசி முடித்த நேரம், முன்பு ராஜேஸ்வரி அம்மாவிடம் கைப்பேசியில் பேசிய பெண் ஓடி வந்து, “ஐயா கொஞ்சம் பிடிச்சுக்கோங்க. இங்க ஆபிஸ் ரூம் ல படுக்க வெச்சுடலாம். வைத்தியச்சியை கூப்பிட்டு விடறேன்” எனக் கூறி உதவிக்கு வந்தாள்.



அந்த நேரம் அவனுக்கு எதுவும் ஓடவில்லை. ‘நல்லா தானே பேசிட்டு இருந்தா?’ என்று தான் சிந்தனை முழுவதும்.



அவர்கள் சென்ற சிறிது நேரத்தில் வைத்தியச்சி வந்திருக்க, கூடவே சிறு கூட்டமும் கூடியிருந்தது. எப்படி கூட்டம் கூடினார்கள் என்று தான் வெற்றிச்செல்வனுக்கு புரியவில்லை.



வைத்தியச்சிக்கோ கொஞ்சம் நடுக்கம். ஒரு திருமணமாகாத பெண்ணை கருவுற்றிருக்கிறாள் என்று பொய் சொல்ல வேண்டும். அது பொய் என்று தெரிந்தால் நம் நிலை? என வெகுவாகப் பதறினார். ஆனால் வேறு வழி இருக்கவில்லை. ராஜேஸ்வரி அம்மாவின் பேச்சை அவரால் மீற முடியாது.



ஒருவழியாகத் தயங்கித் தயங்கி விஷயத்தைச் சொல்லிவிட, அனைவருக்கும் பலத்த அதிர்ச்சி. வெற்றிச்செல்வனுக்கும்.



அவனின் அறிவு இந்த விஷயத்தை உடனே சமாளி எனக் கூக்குரலிட, மனதிற்குள் அவனாகவே எதையோ சில நொடிகள் ஜோடித்து அனைத்தையும் கதையாக இணைத்தான்.



“நல்ல விஷயம் சொன்னீங்க பாட்டி. இவ்வளவு சீக்கிரமா நாங்க இதை எதிர்பார்க்கலை” என வைத்தியச்சியை முதலில் அதிரச் செய்தான் வெற்றிச்செல்வன்.



சுற்றி நின்றிருந்தவர்களிடம், “அவ வீட்டுல ஒத்துக்கலை. அவசரமா ரிஜிஸ்டர் ஆபீஸ்ல கல்யாணம் செஞ்சுக்க வேண்டியதா போச்சு. இங்க அப்பச்சி கிட்டச் சம்மதம் வாங்கிட்டு முறைப்படி ஊரறிய கல்யாணம் வெச்சுக்கலாம்ன்னு நினைச்சோம்” என்று அவனாக ஒரு கதையை ஜோடித்துக் கொண்டிருந்தான்.



அவன் சொல்வதைக் கேட்ட அந்த பெண் குழம்பிப் போனாள். 'என்ன ஐயாவுக்கு ஏற்கனவே கல்யாணம் முடிஞ்சதா?' என பெரிதாக அதிர்ந்தாள். உடனடியாக தனியாகச் சென்று ராஜேஸ்வரி அம்மாவிடம் விஷயம் சொல்லப்பட, அவருக்குப் பயங்கர கோபம். இது எப்படி சாத்தியம்? எனப் புரியாமல் குழம்பினார்.



அதற்குள் இங்கு வீரமணியின் அழைப்பால் மருத்துவர் வந்திருக்க, “வாங்க டாக்டர். என்னோட வைப். திடீர்ன்னு மயங்கிட்டாங்க” என வெற்றிச்செல்வன் மயங்கிக் கிடந்த செந்தாமரையை காட்டினான்.



மருத்துவரை அங்கே எதிர்பார்க்காத வைத்தியச்சி பதற்றமானாள்.



“என்ன சார் கல்யாணம் ஆனதைச் சொல்லவே இல்லையே!” என்றபடி மருத்துவர் செந்தாமரையைப் பரிசோதிக்க,



“அவசரமா ரிஜிஸ்டர் ஆபிஸ் ல நடந்தது. முறைப்படி இங்கே நடக்கும்போது அழைப்பு வரும் டாக்டர்” என்றான் வெற்றிச்செல்வன். அவனுக்கு ஒரே குழப்பமும், தவிப்பும். முயன்றவரை வெளியில் இயல்பாக இருந்தான்.



“நத்திங் டு வொர்ரி. சாதாரண மயக்கம் தான்” என மருத்துவர் கூற,



“கன்சீவ் ஆ இருக்காங்களா டாக்டர்?” என்றான் வெற்றிச்செல்வன் சந்தேகமாக.



“இல்லையே யார் சொன்னது?” எனக் குழம்பினார் அவர். கூடவே, “ஊரறிய கல்யாணம் தான செய்யறதா சொன்னீங்க. இல்லை சீமந்தமா?” எனக் கேலி வேறு செய்தார்.



“முதல்ல கல்யாணம் தான் டாக்டர்” எனப் பதில் தந்திருந்தாலும், வைத்தியச்சியை யோசனையாகப் பார்த்தான்.



“அது… சரியா கணிக்க முடியலைப் போலத் தம்பி” என வைத்தியச்சி சமாளிக்க, வெற்றிச்செல்வனுக்கு யோசனை எழுந்த பொழுதும் மேற்கொண்டு எதுவும் துருவவில்லை.



மருத்துவரிடம் மட்டும், அவள் எப்போது எழுவாள்? ஏன் மயங்கி விழுந்தாள்? என்று கேள்வியாய் கேட்டு குடைந்தான். அவருக்கே சிரிப்பு வந்துவிட்டது.



இந்த களேபரம் ஓய்ந்ததும், ‘தான் அள்ளிவிட்ட பொய்கள் தெரிந்தால், இவள் என்ன எல்லாம் குதிப்பாளோ?’ என்ற சிந்தனை வெற்றிச்செல்வனை ஆட்கொண்டது. 'எப்படி இவளுக்குச் சொல்லி விளக்குவது? இனி சொன்னதைப் பின்வாங்கவும் முடியாதே!' என்றெல்லாம் யோசித்துக் கொண்டிருந்தான்.



‘நிச்சயம் இவகிட்ட சொல்லிச் சமாளிக்க முடியாது!’ என அவளைப் புரிந்தவனாக அனுமானித்தான். 'என்ன நடக்கும்?' என்று யோசித்தால் குழப்பத்தையும் தாண்டி புன்னகை தான் வந்து நின்றது.



அதற்குள் வெற்றிச்செல்வன் கூறிய விஷயங்கள் ஊர் மக்களின் வாயிற்கு அவலாகிக் கொண்டிருந்தது.

*****

-- தொடரும் ...
 
அடங்கொன்னியா
செந்தாமரை கர்ப்பிணின்னு அம்மாக்காரி பொய் சொல்ல வைச்சா எங்களுக்கு ரெஜிஸ்டர் மேரேஜ் ஆகிடுச்சுன்னு மகன் வெற்றிச்செல்வன் பொய் சொல்லுறானே
என்னாங்கடா ஆளாளுக்கு புளுகு மூட்டையை அவுத்து விடுறீங்க
 
Last edited:
Aiyayo இது என்ன இப்படி ஆகி pochi.... அவன் பாட்டி ஏன் ava mela இப்படி abaandama பழி poda solli irukaanga..perganent nu... Rendu perum lovers nu ஊர் முழுக்க solraangala gossip... Ava etharchiya pesa வந்தா அவன் kita.... Nalavelai அவன் kuda இருந்ததது naala பொய் ah solli samaalichaan avan illanaa ava perganent nu solli இருந்தா எப்படி எல்லாம் பேசி இருபாங்க... Ivan கல்யாணம் ah aadichi nu sollitaan... Senthaamari oda reaction ennava irukkum... Senthaan வெற்றி... Super Super Super pa.. Semma episode.. Eagerly waiting for next episode
 
Top