Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சுட்டும் விழிச் சுடரே,அத்தியாயம்-7

Advertisement

Bhavatharini

Tamil Novel Writer
The Writers Crew
6R_7efK2bwiQmhB2_XFT3nYsUx2olms9mNCwmykx554b3P6GEeyZZCp8pzRcnPtCG1BVaPLq9G9ZiAz--acbJDjG6kOIotprfINpVZn3r5HviIrfO7_hHJhVKqmkKRWkx-yPmy1G



அன்புள்ள தோழர்களே!

உங்கள் அன்பிற்கும், ஆதரவிற்கும் மிக்க நன்றி!.

படித்து விருப்பம் மற்றும் கருத்துகள் கூறிய அனைத்து உள்ளங்களுக்கும் மனமார்ந்த நன்றி!. உங்களது மேலான கருத்துகளை என்னிடம் பகிர்ந்து கொள்ளுங்கள்.



சுட்டும் விழிச் சுடரே,அத்தியாயம்-7..


முதல் வருட இறுதிதேர்வுக்கு பின் யாழினியும், அகிலனும் பேருந்தில் மல்லூர் நோக்கி வாழ்வில் மறக்கமுடியாத நினைவுகளை தரப்போகிற நிகழ்வுகளோடு பயணித்துக் கொண்டிருந்தார்கள். யாழினி, அகிலனின் கோபமான முகத்தை பார்த்து ரசித்து கொண்டிருந்தபோது, பேருந்து நாமக்கல் நெடுஞ்சாலையில் வேகம் பிடித்து சென்றுக்கொண்டிருந்தது.

பேருந்திற்கு முன்னால் சென்ற காரின் பின் சக்கரம் திடீரென்று பழுதாகி தாறுமாறாக சாலையின் குறுக்கே சென்று நின்றது. பேருந்து ஓட்டுநர் வேறு வழியில்லாமல், காரின் மேல் மோதக் கூடாது என்பதற்காக பேருந்தின் வழித்திருப்புதலை(steering) நன்றாக வலதுபுறம் ஒடித்து வளைத்தபடி ஓட்டினார்.

இடதுபுறம் இருந்த ஒரு சிலர் வலதுபுற இருந்தவர்களை கீழே தள்ளிக் கொண்டு விழுந்தார்கள். இடதுபுறத்தில் அமர்ந்திருந்த யாழினி அவனது முகத்தை பார்த்தபடி அமர்ந்திருந்ததால் தன் கட்டுப்பாட்டை மீறி ஒரு கையில் அகிலனையும், மறு கையில் கம்பியை எவ்வளவுதான் திடமாக பிடித்தாலும், பிடிக்க முடியாமல் தனது வலப்பக்கத்தில் அமர்ந்திருந்த அகிலனைத் தள்ளிக் கொண்டே சென்றாள். அவன் உறுதியாக ஒரு கையில் இருக்கையின் முன்னால் இருந்த கம்பியையும் இன்னொரு கையில் அவளைத் தாண்டி இடதுபுறம் இருந்த சன்னல் கம்பியை இருக்கி பிடித்து கொண்டு விழாமல் இருக்கையின் ஓரம் வரை இருவரும் சென்றார்கள்.

ஆனால், யாழினியோ எங்கு பிடித்தாலும் வழுக்கி, சறுக்கிக் கொண்டே அவனின் மேல் விழுந்தபடி, அவளது இதழ், மூக்கு, முகம் என அனைத்தும் அவன் முகத்தில் பதிந்தது. என்ன முயற்சித்தும் பேருந்து ஒரு பக்கமாக சாய்ந்து சென்றதால் அவளால் அவனை விட்டு சிறிதும் விலக முடியவில்லை. ஒரு சில நிமிடங்களுக்கு பின் ஓட்டுநர் பேருந்தை இடதுபுறம் வளைத்து நிலைப்படுத்தி நிறுத்தினார். அகிலனே அவளை விலக்கி அமரவைத்து விட்டு, அவனும் அமைதியாக அமர்ந்து கொண்டான். அமைதி என்பதைவிட அவனுடைய உள்ளம் பட்டபாடு அவனுக்கும் கடவுளுக்கும் மட்டும் தான் தெரியும். நாம் பிறர்க்கு கொடுக்கும் முத்தத்தை விட, முத்தம் பெறுவது இத்தனை சுகமா! விரும்பாத முத்தமே இப்படி என்றால், விரும்பி தந்திருந்தால் என் உயிர் பிரிந்து இருக்குமோ! என்று ஸ்தம்பித்து உட்கார்ந்திருந்தான்.

இவனுக்கு இப்படி என்றால் காதல் செய்துவிடக்கூடாது என்று நித்தமும் போராடும் யாழினிக்கு வெட்கம் பிடுங்கி அவளையே விழுங்கியது. ‘தொடாதே, இடிக்காதே என்று சொல்லிட்டு நானே அவன்மீது மொத்தமாக விழுந்தேனே! அவனாக விலக்கும் வரை என்னால் நகரக் கூட முடியவில்லையே. ஐயோ! என்ன பண்ணி வச்சிருக்கேன்’, என்று விவரிக்க முடியாத அளவிற்கு ஒரு உணர்ச்சி பெருங்கடலில் தத்தளிக்கும் நிலைமைக்கு தள்ளப்பட்டாள்.

அப்படியே சன்னல் வழியாக வெளியே குதித்து விடலாம் போல இருந்தது. மீண்டும் அவன் முகத்தைப் பார்க்கும் சக்தி அவளுக்கு இல்லை. முகத்தில் இரு கையையும் வைத்து மூடியபடி அமர்திருந்தாள்.


அடுத்த இரண்டு நிறுத்தத்தில் மல்லூர் வந்துவிட ’அப்பாடா!’ என்றிருந்தது. பெரிய மனப்போரட்டத்துடன் பையை எடுத்துக்கொண்டு எழுந்திருக்க, அகிலன் "என் டிக்கெட்" என்று கையை நீட்ட, அவள் இருந்த அதிர்வில் இரண்டு டிக்கெட்டையும் எடுத்து கொடுத்தாள். அதை வாங்கியபடி, மென்மையாக அவள் கரங்களைப் பற்றினான், யாழினி திரும்பி பார்க்க அவளிடம் "ஐ மிஸ் யூ யாழு" என்றான், அவளும் தலையாட்டிவிட்டு பதில் கூறமுடியாமல் சர்வமும் அடங்கி போய் இறங்கிச் சென்றாள். யாழு என்று செல்லமாக அழைத்ததில் யாழினி கிறங்கி போனாள், அதன் பிறகு எப்பொழுது அண்ணனை பார்த்தாள், எப்படி அண்ணனின் வண்டியில் ஏறினாள், எப்படி வீட்டுக்கு வந்தாள்! இதில் எதுவுமே அவள் நினைவில் இல்லை. அவள் திரும்பி முழுவதுமாக சுயநினைவு பெற இரண்டு நாட்கள் ஆகியிருக்கும். பேய் அடித்தது என்பார்களே அந்த மாதிரி தான் திரிந்துக் கொண்டிருந்தாள்.


விடைபெறும் போதெல்லாம்

வினாவாக்குகிறாய்

என் வாழ்க்கையை!


பரிசாக்கிய அழகிய

தருணங்களை…

பத்திரபடுத்துவேனோ!

பாழாக்குவேனோ!


இவளுக்கு இப்படி என்றால், அகிலன் பேருந்து நின்ற எந்த நிலையத்திலும் இறங்காமல், பேருந்தின் இறுதி நிலையம் நாமக்கலை தாண்டி கரூர் வரை சென்று, மீண்டும் ஏற்காடுக்கு நடுநிசியில் வந்து சென்றான்..

அடுத்த நாள் அவனின் தொடையைத் தொடும் போது வலியை உணர்ந்தவன், ’ பஸ் சாயும்போது அவளுடைய காலா , கையா எதை வைத்து அழுத்தி இருப்பாள்’ என்று எண்ணும் போது வலி போய் இதமாக உணர்ந்தான். ’இதுதான் காதலில் வலியும் சுகம் என்பார்களோ’ என்று அவனையே எண்ணி தனியாக சிரித்துக்கொண்டான்.

அவன் தானாக சிரிப்பதைப் பார்த்த அவன் தாய் தனலட்சுமி "என்னடா தம்பி, தனியா சிரிச்சுட்டு இருக்க? என்னப்பா ஆச்சு? என்று கேட்டார். அந்த ஊரு பக்கம் அம்மாக்கள், மகனை தம்பி என்றும் அழைப்பார்கள்.

"ஒண்ணுமில்லம்மா, சும்மா பஸ்ல நடந்ததை யோசிச்சுட்டு இருந்தேன்" என்றான் அகிலன்.

"அது என்னன்னு சொன்னா, நாங்களும் கேட்டு சிரிப்போம் இல்ல!" என்றார்.

"அது தான், நான் ஒன்னும் இல்லைன்னு சொல்லிட்டேன்ல!" என்றான் அவனின் நக்கலை விடாமல்.

"தம்பி! இப்போ நீ வேற பார்க்க மூக்கும் முழியுமா இருக்கிறியா! கண்டவர் கண்ணும் படும். பொழுதோட ஆறு மணிக்கு சுத்தி போடறேன், எங்கும் போயிடாத" என்றார் லட்சுமி அம்மா.

"ஆமா அம்மா, என்னை ஒரு பொண்ணு குறு குறுன்னு பார்க்குது! நீ சுத்தி போடும்மா" என்று அதே தோணியில், பாவமாக அப்பாவி போல் கூறினான் அகிலன்.

"பார்த்துப்பா, சூதாரணமா நடந்துக்கோ, இல்லைன்னா இந்த காலத்துப் பிள்ளைங்க துப்பட்டாவில் வளைச்சுப் போட்டுகிட்டு போய்டுவாளுக" என்றார் .

'அவள் துப்பட்டாவில முடிஞ்சு பல மாசம் ஆச்சு! இப்போ நீ பிள்ளைய மீட்கிறீங்களாக்கும்' என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டு மீண்டும் சிரித்தான் அகிலன்.

இந்த சம்பாசனையை கேட்ட அவனுடைய அண்ணன் அருள்," ஆமா இவனைத்தான் காணாம்னு பொண்ணுங்க குறுகுறுன்னு பார்க்கிறார்கள். இவன் பெரிய ஆணழகன், அதான் பொண்ணுங்க வீட்டுக்கு வெளியே க்யூகட்டி நிற்கிறார்கள் போல. போடா போ ஏதாவது ஊருக்கு ஒதுக்குப்புறமாக ஒரு அருக்காணியும் ஒரு கோமளவள்ளியும் தான் உனக்கு சிக்குவாள்" என்றார் கேலியாக.

"ஒருநாள் நீ வேணா பாரு ஐஸ்வர்யராய் மாதிரி ஒரு ஆள கூட்டிட்டு வந்து நிறுத்திறேன். நம்ப வம்சத்துலே இல்லாத அழகு சிலையாட்டம்" என்றான் அகிலன்.

"டேய்! அப்போ ஆல்மோஸ்ட் ரெடி பண்ணிட்ட போல! அம்மா, உன் சிங்க குட்டி கல்யாணத்துக்கு கூப்பிடுவான்னா? இல்லையான்னு தெரியல" என்றார் அருள்.

'ஐயோ! அண்ணன் போட்டு வாங்கி மாட்டிவிடுறானே!' என்று அகிலன் திக்குமுக்காடினான்.

அதற்குள் அவங்க அம்மா "என் பையன் அப்படி எல்லாம் பண்ண மாட்டான்டா, நீ தோட்டத்துக்கு போ, தென்னமரத்துக்கு மடை மாத்திடனம்னு உங்கப்பா சொன்னாங்க, சாப்பிட்டு கிளம்பு" என்றார்.

"ஆமா, உன் பையன நீதான் மெச்சுக்கணும். நான் போய்ட்டு வந்தே சாப்பிட்டுக்கிறேன், தண்ணீர், மடையை ஒடைச்சிக்கிட்டு போய்ட போகுது" என்று கூறி விட்டு லுங்கியை மடித்துக் கட்டிக்கொண்டு நகர்ந்தான் அருள்.

போகும் போது அகிலனை பார்த்து "துரைக்கு இங்க என்ன வேலை? தோட்டத்துப் பக்கம் வா" என்று கூப்பிட்டார்.

"ஹா, ஹா என்று வேணுமென்றே சிரித்து விட்டு, அங்க எனக்கு என்ன வேலை இருக்கு?" என்றான்.

"இங்க வேலைக்கா பஞ்சம், குவிந்து கிடக்குது, வயல் வயலாக பாய்ந்து கொண்டிருந்த தண்ணீர், இப்போ தண்ணி இல்லாததால், தென்னை மரத்தை சுற்றி வாய்க்கால் போடணும், உரம் வைக்கணும், மயில் வேற அதிகமாகிடுச்சு வேலி போடணும்." என்று அருள் கூறிக்கொண்டிருக்கும் போதே,

"ஏய்! போதும், போதும்! சும்மா சிக்கினான்னு அடுக்காதே, நான் செய்கிற மாதிரியான வேலையா சொல்லு" என்றான் அகிலன்.

"நீ செய்கிற மாதிரியான வேலைன்னா….பைக்கில் சுத்திற வேலையாவே சொல்லுறேன்" என்றான் அருள்.

"சொல்லு, என் லெவல்க்கு இருந்தாப் பார்க்கிறேன்" என்றான் அகிலன்.

"இன்னும் வறட்சி காலத்துல தண்ணீர் வாய்க்கால் வழியாக பாய்ச்சுவது கூட பெரிய கஷ்டமாகிடும். அதனால இந்த வருஷம் எப்படியும் சொட்டு நீர் போட்டாகனும். அதற்கு நமது அரசாங்கத்தில் நிறைய சொட்டு நீருக்கான மானியம் தருகிறார்கள், அதை அந்த தாலுகாவில் போய் விசாரித்துவிட்டு வரலாம், அப்புறம் பிரதம மந்திரியோட ஒரு திட்டத்தில் ஒரு ஏக்கருக்கு ஆறாயிரம் ரூபாய், வருடத்துக்கு தருகிறார்கள், அதை என்னன்னு போய் பார்த்துட்டு வரலாம், நம்ம ஊருல இருக்கிற நூறு பேரு, ஒண்ணா சேர்ந்தா ஐந்து லட்ச ரூபாய் மதிப்புள்ள நெல் கதிர் அறுக்கும் இயந்திரம் முற்றிலும் இலவசமாக வாங்குறதுக்கு பணம் தராங்க, இது எல்லாத்தையும் என்னால கவனிக்க முடியல. நீ தெண்டமாதானே ஒரு மாசம் இங்க இருக்க, கூட வந்தேனா எனக்கு கொஞ்சம் உதவியா இருக்கும்." என்று அருள் அடுக்கி கொண்டே போனார்.

கையை கூப்பி தலைக்கு மேல் காண்பித்து "ஐயா சாமி, பைக்கை வச்சுட்டு நீ போ, எனக்கு கொஞ்சம் வெளிய வேலை இருக்கு." என்றான் அகிலன்.

"இதுக்குத்தான் இவ்வளவு கேட்டியாடா " என்று கையை ஓங்கி அடிக்க வந்தான்.

"அம்மா, உன் செல்ல பிள்ளைய அடிக்கிறான். உடம்ப பாரு, ஜிம் போகாமலே சிக்ஸ் பேக் வெச்சுருக்கான். இவன் அடிச்சா நான் தாங்குவேனா? இவனுக்கு முதல்ல ஒரு கல்யாணத்தைப் பண்ணு, அப்போதான் இவனெல்லாம் அடங்குவான்." என்றான் அகிலன். உண்மையில் உடல் உழைப்பால், நல்ல கட்டுமஸ்தான ஆணழகன் அருள்.

"எங்கடா! விவசாயம்னாவே இந்த காலத்துல பொண்ணுங்க கல்யாணத்துக்கு ஒத்துக்க மாட்டிங்கிறாளுக.” என்று வருத்தப்பட்டுக்கொண்டே

“ஏப்பா அருள், அங்க மடை உடைஞ்சே போகியிருக்கும், நீ கிளம்பு. உனக்கே பொண்ணு கிடைக்க மாட்டேங்குது, இவனாவது படிச்சு ஒரு நல்ல கம்பெனி வேலைக்கு போகட்டும்." என்றார் லட்சுமி அம்மா அனைவரையும் போல்.

"இருடா இரு, என்ன இருந்தாலும் கடைசியில இங்கதான் வரணும். அன்னைக்கு இருக்குடா உனக்கு" என்று கூறிவிட்டு மண்வெட்டி எடுத்துக்கொண்டு, மீண்டும் ஒருமுறை லுங்கியை மடித்து கட்டிக்கொண்டு வேகமாக கிளம்பினார் அருள்.

அருள் எம்.எஸ்.சி கணிதம் படித்து இருந்தாலும் விவசாயத்தின் மீது கொண்ட நாட்டத்தால் அவர் தந்தையோடு சேர்ந்து அவரும் இயற்கை விவசாயம் செய்து வருகிறார்.


நிலங்கள் வீடு ஆயின

களங்கள் காடு ஆயின

விவசாயி விண்ணோடு போறான்

விவசாயம் மண்ணோடு போகிறது.....

உரிமைக்காக பிச்சை எடுத்தோம்

இருநூறு ஆண்டு _ இனி

உணவுக்காக பிச்சை எடுப்போம்

எத்தனை ஆண்டோ ?.....



விவசாயத்தை துறந்த நாடு

உருப்பிட முடியாது _

-உண்மை இன்று புரியாது…..



தொடரும்….
 
Last edited:
தோழி பவதாரிணி கடைசியில் உண்மையை அழகாக சொல்லியிருக்கீங்க....மிக்க நன்றி. அருமை தோழி......:love::love:(y)(y)
 
தோழி பவதாரிணி கடைசியில் உண்மையை அழகாக சொல்லியிருக்கீங்க....மிக்க நன்றி. அருமை தோழி......:love::love:(y)(y)
மிக்க நன்றி தோழி. ??
 
Top