Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

டிங் டாங் காதல் - 3

Advertisement

Bookeluthaporen

Well-known member
Member
வீட்டில் அணியும் ஆகாய நீல நிற சுடிதாரில் மதியம் இரண்டு முப்பது மணி போல் கிளம்பி நின்ற மகளைச் சந்தேகமாகப் பார்த்த மஹேஸ்வரி, "உன்ன நாங்க கொடும படுத்துற மாதிரியே காமிச்சுக்கோ. நல்ல டிரஸ் தான் போட்டு போயேன் வைஷு"

"அதெலாம் அந்த வீடு பையன கரெக்ட் பண்ண போறப்ப போட்டுக்குறேன். இந்த ட்ரேஸ்க்கு என்ன மஹேஷு குறைச்சல் இப்ப கூட இத போட்டுட்டு போனா உன் பொண்ணு பின்னாடி நாலு பசங்க சுத்துவாங்க மோய்"

சமையலறையிலிருந்து ஒரு கரண்டி பறந்து வந்து அவள் காலுக்கடியில் விழ, 'ஆத்தி கொஞ்சம் ஓவரா தான் போய்ட்டேனோ'

"மா ஷெரூ வந்ததும் கெளம்பிடுவேன் மா" பவ்யமாகப் பேசி சமாளித்தாள். ஷெர்லின், வைஷ்ணவி உற்ற தோழி. பள்ளி முதல் எங்குச் சென்றாலும் ஒன்றாகவே செல்வார்கள்.

"யாரோ என்ன பத்தி பேசுன மாதிரி இருந்துச்சு" அப்பொழுது தான் உள்ளே வந்தவள் நேராகச் சென்றது சித்தார்த்தின் அறை அருகே தான்.

கதவின் ஓரம் சென்று நின்றவள் உள்ளே தன்னுடைய நாயுடன் விளையாடிக்கொண்டிருந்த சித்தைப் பார்த்து பின் உதட்டில் சிரிப்புடன் தோழி அருகே வந்தாள்.

தோழியை முறைத்து, "ஏண்டி நீயும் அவனை வார வாரம் பாத்துட்டே தான் இருக்க, பொசுக்குன்னு போய் ப்ரொபோஸ் பண்ணிட வேண்டியது தான?"

படு சீரியஸாக பேசிய தோழியின் முகத்தைப் பார்த்துச் சிரித்த ஷெரூ, "உன் அண்ணனை சும்மா சைட் தான் அடிக்கிறேன், உடனே இளிச்சவாய் ஒருத்தி சிக்கிட்டான்னு அவன தலைல கட்டிவைக்க பிளான் போட்டுட்டியா?"

"இல்ல நீ மாட்டேன்னு சொன்னா எதுத்த வீட்டுல ஒரு பொண்ணு வந்துருக்கு அதுக்கு செட் பண்ணி விடலாம்னு நெனச்சேன். பரவால்ல அவன் வாழ்க்கையும் தப்பிச்சிடுச்சு" தோழியைக் காலை வாரி அவள் முறைப்படியும் பரிசாக வாங்கிக்கொண்டாள்.

"ஆமா இப்ப ஏன் என்ன அவசரமா வர சொன்ன?"

"எதுத்த வீட்டுல போய் சாப்பிட்டு வரலாம் ரொம்ப பாசமா கூப்பிட்டாங்க" - வைஷ்ணவி

மெதுவாக அவள் காதருகே வந்த ஷெர்லின், "ஏன்லா... பையன் எதுவும் இருக்கானா அங்க?"

விஷமமாகத் தோழியைப் பார்த்துச் சிரித்த வைஷ்ணவி, "பலே ஆளுடி நீ. ஒரு அடிமை எனக்கு நேர்ல சிக்கிருக்கு வச்சு செய்ய தான் போறோம். ஆனாலும் என்ன பத்தி தெரிஞ்ச ஒரே ஆள் நீ தான்"

மார்தட்டி பெருமை பேசிய தோழியைப் பார்த்து கேவலமாகச் சிரித்தவள், "மொச புடிக்கிற நாய் மூஞ்சிய பாத்தா தெரியாதா. பாவம் அவன்... ஆனா என்னால வர முடியாது நீ போயிடு வா"

"ஏன் ஏன் வர முடியாது? இங்கையே இருந்து என் நொண்ணன் கூட மொக்க போட போறியா?" - வைஷ்ணவி

"பைத்தியம் புடிச்ச மாதிரி பேச கூடாது முன்ன பின்ன தெரியாதவங்க வீட்டுக்கு வழிஞ்சு கட்டிட்டு போகணுமா?" - ஷெர்லின்

"ஏன் போக கூடாதாம்? நான் போகல?" - வைஷ்ணவி

"நீ மானம்கெட்டவ போவ. நான் அப்புடியா... கூப்புடாதவங்க தல வாசலை பாக்க கூட மாட்டேன்" - ஷெர்லின்

"இப்ப வர முடியுமா முடியாதா?" - வைஷ்ணவி

"இவ்ளோ தூரம் நீ கெஞ்சி கேக்குறனாள வர்றேன், அடுத்த வாரம் எங்க கோவில் திருவிழாக்கு நீ வர்றேன்னு சொல்லு நான் இப்ப வர்றேன்" நிபந்தனையோடு வரச் சம்மதித்தாள் ஷெர்லின்.

இப்பொழுது சரி என்று சொல்லி வைப்போம் என்று எல்லா பக்கமும் தலையை ஆட்டி, "வர்றேன் தோழி. இப்போ போவோமா?" "என் டிரஸ் ஓகேவா?"

"டிரஸ் மாத்துனா மட்டும் இந்த மூஞ்சியும் சேந்து மாறிடுமா... வாடி" என்றவள் சமையலறையில் மகனுக்காகப் பார்த்துச் பார்த்து சமையல் செய்துகொண்டிருந்த அன்னையிடம் சென்று, "மஹேஷு ஒரு நூறு ரூபா தாள வெட்டு"

அவளைப் புரியாமல் பார்த்தவர், "எதுக்கு?" என்றார்.

"ஒரு விசேஷ வீட்டுக்கு போனா வெறும் கையோடையா போவாங்க? மொய் வைக்க வேணாம்? அதான் நூறு ரூபா இருந்தா முக்கு கடைல போய் ரெண்டு பொம்மை கிளியை கிபிட் பேக் பண்ணி வாங்கி குடுத்துடுவேன்"

அவள் கூறுவதும் சரியாகத் தோன்ற, அஞ்சறைப் பெட்டியிலிருந்து பணத்தை எடுத்தவர், "உனக்கு மூளை எல்லாம் இருக்க தான் செய்யிது ஆனா என்ன ரொம்ப கம்மியா இருக்கு. இந்த ஆயிரம் ருபாய் மொய் வச்சிட்டு, ஒன்னு மன்னா பழக போறோம் ரெண்டு கிளி பொம்மையை வாங்கி குடுத்தா நல்லாவா இருக்கும்"

"இந்த பக்கம் ஐநூறு தாள தள்ளு"

அருகிலிருந்து ஷெர்லின் வைஷ்ணவி காதில் குசுகுசுக்க அவளைப் பார்த்து முறைத்த வைஷ்ணவி, அன்னை உள்ளே சென்றதை உறுதி செய்து, "அசிங்கமா இல்ல இப்டியா ஒரு பிள்ளை பேசுறது? ஐநூறு தள்ளணுமாம்ல. சில்லி கேர்ள். ஆயிரமா கேளு" என்றாள்.

வாசலை நோக்கி வைஷ்ணவி நடக்க, மீண்டும் சித்தார்த்தின் அறைக்கதவை நோக்கி, "வர்ட்டா பாய்ஸ் ஹீரோ" தெளிவாக அவன் காதில் கேட்டது என்ற பிறகே தோழியை பின் தொடர்ந்தாள்.

"ஆமா அந்த பையன் பேர் என்ன?" வாசலில் மாட்டியிருந்த கண்ணாடியில் தன்னுடைய துப்பட்டாவைச் சரி செய்தவள், "எந்த பையன்?' என்றாள்.

"அது தான் இப்ப கொடும படுத்த கெளம்பிருக்க பையன்" "தெரியாது... அவனை என்ன கல்யாணமா பண்ணிக்க போறேன் சும்மா நம்மள பத்தி செயல்ல செஞ்சு காமிக்க போறேன்"

"சரி ஆளு நல்லா இருந்தா நான் கரெக்ட் பண்ணிக்கிறேன்" - ஷெர்லின்

"உன் அண்ணனை நீ கரெக்ட் பண்ணி சீர் அதிகமா வாங்கலாம்னு பிளான் பண்றியா?"

வைஷ்ணவியை வியப்பாகப் பார்த்த ஷெர்லின், "இப்ப தான் கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்னு சொன்ன?"

"சொன்னேன் ஆனா கரெக்ட் பண்ண மாட்டேன்னு சொல்லலையே" - வைஷ்ணவி

"வாழ்க்கைல எப்படி முன்னேறலாம்னு இப்டி யோசிச்சிருந்தா ரெண்டு வருஷம் சும்மாவே இருந்துருக்க தேவையில்லை"

வெளியில் ஏதோ வேலையாக வந்த சித்தார்த் இருவர் பேசுவதைக் கேட்டு ஒரு சகோதரனாகப் பேசினான்.

"வந்துட்டாருயா பூமர்" வழக்கம் போல் அவனை மதிக்காமல் வைஷ்ணவி ஷெர்லினை இழுத்து வெளியில் சென்றுவிட்டாள் சகோதரனின், "ஆமா நாங்க பூமர் இவ கட்டபொம்மன் பேத்தி அளந்து தான் பேசுவா" பேச்சைக் காதில் கேட்டும் கேட்காமலும்.

எதிர் வீட்டு வாசலில் இருவரும் நிற்க ஷெர்லின் மனதில் ஒரு தயக்கம், வைஷ்ணவியோ வீட்டைச் சுற்றும் முற்றும் பார்த்து, "எலிவேஷன் இன்னும் கொஞ்சம் நல்லா பண்ணிருக்கலாம்"

கட்டிடப் பொறியாளராகத் திருத்தங்கள் கூறிய தோழியைப் பார்த்து, "டிகிரியே முடிக்காம நாலு அரியர் வச்சிருக்க நாம இதெல்லாம் சொல்லலாமா மன்னா?"

கிண்டலாகக் கூறிய ஷெர்லினை பார்த்து, "பல்லு விளக்காம பட்டாணி சாப்புடுறவங்க இத பேசலாமோ அமைச்சரே"

வைஷ்ணவியைப் பார்த்து சற்றும் குறையாத நக்கலுடன், "பட்டாணி தானே மன்னா சில நாய்க மூணு நாள் குளிக்காம கூட பால் காய்ச்சு வீட்டுக்கெல்லாம் வருதுங்க"

மாட்டிக்கொண்டதை வெளியில் காட்டாமல் முழித்தவள், "அவர்கள் தண்ணீரை மிச்சமாக நினைத்திருப்பார்கள் அமைச்சரே. நிச்சயம் பத்ம பூஷன் விருதை வழங்கிவிடுங்கள்" அதையும் பெருமையாகக் கூறினாள்.

"சாணி பாத் (குளியல்) வேணா தரலாம் மன்னா"

முகத்தைப் பாவமாக வைத்து, "ஐயோ பாவம் அமைச்சரே என்ன இருந்தாலும் அவர்கள் நம் மக்கள் அல்லவா?"

"சாகட்டும் மன்னா இது போன்ற தெண்ட கருமாத்திரங்கள் இருந்தால் பூமிக்குத் தான் பாரம்"

"சரி அந்த பாதாள கிணறு எங்கே உள்ளது?" பொறுத்தது போதுமென பொங்கி எழுந்துவிட்டாள் வைஷ்ணவி.

திரும்பி வைஷவியின் மொட்டை மாடியைக் காட்டிய ஷெர்லின், "அங்கிருந்து குதியுங்கள் மன்னா நேராகப் பாதாளம் என்ன பரலோகத்திற்கே சென்றுவிடலாம்"

ஷெர்லின் கழுத்தைப் பற்றியவள், "அது எனக்கில்லையடா ஒரு மங்குனி அமைச்சருக்கு" அவள் கழுத்தை வைஷ்ணவி நெறிக்க அடக்க முடியாமல் சிரிப்பு தான் வந்தது ஷெர்லின்க்கு, அவள் சத்தத்தைக் கேட்டு வெளியில் வந்த மஹாலக்ஷ்மி இன்முகமாய் வைஷ்ணவியை நோக்கி வந்தார். "வா மா வைஷ்ணவி.

உள்ள வர வேண்டியது தானே என்ன வெளியவே நிக்கிற" என்றவர் பார்வை ஷெர்லின் பக்கம் திரும்பி, "இது யாருமா உன் தங்கச்சியா?" என்றார்.

சங்கோஜமாக நெளிந்தவள், "ஆமா ஆண்ட்டி. ஒரு இருபது வருஷம் முன்னாடி திடீர்னு யாரோ கதவை தட்டுனாங்க. வெளிய வந்து பாத்தா ஒரு கொழந்த. அப்ப எடுத்து வளக்க ஆரமிச்சோம். விக்ரமாதித்தன் கழுத்துல மாட்டிக்கிற வேதாளமா மாறிடுச்சு"

அவள் பேச்சே மகாலட்சுமிக்கு பிடித்துப்போனது எந்த விதமான ஒளிவு மறைவும் இல்லாது தன்னுடைய குணத்தை அப்படியே காட்டிய அந்த பெண்ணை யாருக்குத் தான் பிடிக்காமல் போகும், அதுவும் எப்பொழுதுமே அமைதியாக இருக்கும் தங்கள் இல்லத்தினுள் பழகியவருக்கு அவள் பேச்சில் இருக்கும் கிண்டலும் கேலியும் சிரிப்பைத் தடையில்லாமல் கொடுத்தது.

"நான் அவளோட ப்ரன்ட் ஆண்ட்டி. தனியா வர கூச்சப்பட்டு என்னையும் கூப்பிட்டா"

உண்மையைக் கூறிய ஷெர்லினை ஆசிரியமாகப் பார்த்து, "என்னமா பொய் சொல்றியேமா நீ... வீடு நல்லா பெருசா கட்டிருக்காங்க அப்ப கண்டிப்பா சாப்பாடும் நல்லா இருக்கும்ன்னு இவ தான் ஆண்ட்டி எனக்கு கால் பண்ணி வர்றேன்னு ஒரே அழுகை" தோழியிடம் தலையைத் திருப்பி, "பொய் பேசுறது மிகப் பெரிய பாவமாம் ஷெரூ... அப்பா அடிக்கடி சொல்லுவாருல. நீங்களே சொல்லுங்க ஆண்ட்டி உங்க வீட்டுக்கு வர்றதுல எனக்கு என்ன கூச்சம் இருக்க போகுது"

இந்த பூனையும் பால் குடிக்குமா என்ற முகம் அந்த நிமிடத்தில் தத்தெடுத்திருந்தாள் வைஷ்ணவி. ஆனால் ஷெர்லின்க்கு மட்டுமே தெரியும் இந்த பூனை பீரே அடிக்குமென்று, "சரி தான் வைஷு நான் வீட்டுக்கு போறேன்... நீ சாப்பிட்டு வந்து கூப்புடு"

இப்ப பேசுடி என்ற ரீதியில் அவள் நகரப் போக வைஷ்ணவிக்கு முன் முந்திக்கொண்டு, "நில்லுமா வீட்டுக்கு வந்துட்டு சாப்புடாம போனா எப்படி. சாப்பிட்டு போகலாம்" என்ற மஹாலக்ஷ்மி மேல் மெச்சும் பார்வையைப் பதித்தாள் வைஷ்ணவி.

"சாப்புடுறதுக்கு முன்னாடி வீட்ட சுத்தி பாக்கலாமா ஆண்ட்டி?" "சிவில் என்ஜினீயராமா ஆண்ட்டி" காலை வாரிய ஷெர்லினுக்கு இல்லம் திரும்பியதும் நடக்கப் போகும் விபரீதங்களைப் பற்றித் தெரிந்தாலும் இந்த இடத்தில் வைஷ்ணவி அசிங்கப் பட வேண்டும் என்ற ஒரே ஒரு குறிக்கோள் தான்.

இருவருக்கும் உள்ளே செல்ல வழியை விட்டவர், "நீ சிவில் என்ஜினீயரா வைஷ்ணவி" என்றார் ஆசிரியமாக.

"இவளை பாக்க படிக்காத தற்குறி மாதிரி தான ஆண்ட்டி தெரியுது. நிறையபேர் இதையே தான் சொன்னாங்க"

மீண்டும் தன் வேலையைக் கையிலெடுத்து மஹாலக்ஷ்மியையும் வைஷ்ணவியையும் தொடர்ந்து வீட்டிற்குள் நுழைந்தாள் ஷெர்லின்.

மஹாலக்ஷ்மியின் சிரிப்பைக் கேட்டு அப்படியே பிரேக் அடித்தார் போல் நின்ற வைஷ்ணவி சிட் அவுட்டில் இருந்த கண்ணாடி துண்டை காட்டி, 'சொருகிடுவேன்' வாயை அசைத்து மிரட்டினாள். அதில் இன்னும் சிரிப்பு வர அவளை போலவே சத்தமே வராமல், 'போடி' என்றாள் ஷெர்லின்.

"சிட் அவுட் கொஞ்சம் பெருசா வேணும்ன்னு தான்மா இவ்ளோ பெருசா போட்டோம்" சரி எனத் தலையை அசைத்து வரவேற்பறையில் நுழைந்தனர் அனைவரும்.

நல்ல விசாலமா முறையில் ஒரு குட்டி விசேஷம் நடக்கும் வகையிலிருந்து அந்த வரவேற்பறை, ஆங்காங்கே குப்பை விசேஷ வீடெனக் கூறியது. ஒரு பக்கத்திலிருந்து மரு பக்கம் திரும்ப அங்கே அவர்கள் உறவினர்கள் ஆங்காங்கே அமர்ந்து பேசிக்கொண்டிருந்தார், மரு பக்கமிருந்த சுவரில் டீவியை வைக்க ஒரு நீண்ட திட்டும் அதன் மேல் பெரிய இடைவேளை விட்டு வித்தியாசமான வடிவில் செதுக்கிய இரண்டு குறு திட்டுகளும் இருந்தது.

அப்படியே வைஷ்ணவியின் கண்கள் தரையில் படிய, அப்பொழுது தான் கவனித்தாள் அங்கு சுவரில் சாய்ந்து ஒரு இளம் பெண் உறவுகளுடன் சிறிது பேசிக்கொண்டிருக்க அவள் மடியில் படுத்திருந்தான் கார்த்திக், கண்களை மூடி. இன்னும் பட்டு வெட்டி சட்டையில் தான் இருந்தான், ஒரு கால் சற்று தூக்கியிருக்க அவள் கணுக்காலில் ஒரு தீக்காயம் போல் இருந்ததையும் சில நொடிகளிலேயே பார்த்துவிட்டாள் வைஷ்ணவி.

"ஆளு பாக்க என் ரேஞ்க்கு இல்லனாலும் பரவால்ல ஓகே தான்" வைஷ்ணவியின் காதில் வந்து கிசுகிசுத்தாள் ஷெர்லின் பெரிய மனதுடையவளாக.

அவளைத் திரும்பிப் பார்த்த வைஷ்ணவி, "உன் ரேஞ்க்கு பிச்சைகாரன் தான் கரெக்ட். கட்டிக்கிறியா?"

"மன்னன் எவ்வழியோ அமைச்சரும் அவ்வழியே மன்னா"

இவை அனைத்தும் கிசுகிசுவாகவே ஓடிக்கொடுக்க, இவர்களைப் பார்த்த ஒரு பெண், "சுபி உன் ப்ரன்ட்ஸ் வந்துருக்காங்க" என்று இவர்களைக் காட்டிவிட, "இல்ல அண்ணி, இது எதுத்த வீட்டு பொண்ணு" மஹாலக்ஷ்மி அறிமுகப்படுத்தினார்.

"வைஷ்ணவி இது தான் என்னோட பொண்ணு, சுபத்ரா" என்று சுபத்ராவிற்கும் குறிப்பாக அறிமுகப்படுத்தினார்.

அவன் சகோதரியோ என்று மனதில் எண்ணி "ஹாய் சுவி, இது என்னோட தோஸ்து ஷெர்லின். இன்னொரு பேர் இருக்கு மானம்கெட்ட ஷெர்லின்"

மஹாலக்ஷ்மி விட்டதை வைஷ்ணவி செய்துமுடித்தாள், அதைக் கேட்டு சுபத்ரா சிரிக்க, "ஒரே அசிங்கமா போச்சு குமாரு" சிரிப்புடன் அதையும் சமாளித்தாள் ஷெர்லின். தோழியின் வளமை இதுவென அறிந்து தான் உடன் வந்தது, ஆக இதையும் அனுபவித்தாள்.

அதன் பிறகு மொத்த வீட்டையும் இருவருக்கும் சுற்றிக் காட்டிய மஹாலக்ஷ்மி மீண்டும் வரவேற்பறை அழைத்துவந்து, "நான் சாப்பாடு பரிமாற போறேன், சுபி கொஞ்சம் வாடா"

மகளையும் அழைக்க அவள் மறுப்பு கூறாமல் மடியில் படுத்திருந்த சகோதரனின் தலையை அவன் உறக்கம் கெடாமல் மெதுவாகத் தூக்கி தரையில் வைக்கப் போக அவனோ எவ்வளவு அசதியாக இருந்தாலும் சிறு அசைவிலும் எழுபவன் இப்பொழுது நன்றாக முழித்திருந்தான்.

"நான் அம்மா கூட பரிமாற போறேன் ண்ணா" சுபத்ரா பேசிய பொழுது வைஷ்ணவி, ஷெர்லின் சிட் அவுட் நோக்கிச் சென்றிருக்க அவன் முழித்ததைக் கவனிக்க மறந்தனர், "பயபுள்ள எஸ்கேப் ஆகிட்டான்" புலம்பியவாறே சென்றாள்.

உள்ளே முகத்தை கைகளில் தேய்த்து அன்னையைப் பார்த்தவன், "நீங்க ரொம்ப டயர்டா இருக்கீங்கமா. நான் பாத்துக்குறேன். கொஞ்சம் நேரம் ரெஸ்ட் எடுங்க" என்றான்.

"சுபி நீ வாடா" தங்கையை அழைத்துச் சென்றான் மாடிக்கு.

மாடியில் கார்த்திக்கின் அறையைத் தவிர்த்து மீதியிருந்த மொத்த இடத்தையும் சாமியனா பந்தல் போட்டு சுற்றிலும் அடைத்தும் பந்திக்காக விட்டிருந்தனர். மூன்று அல்மோனார்ட் விசிறிகள் இருக்க, பூட்டியிருந்த கார்த்திக்கின் பூட்டியிருந்த கதவைப் பார்த்து அதைக் கடந்து சென்று அங்கிருந்து பார்த்தல் தன்னுடைய அறை எப்படித் தெரிகின்றது என்பதையும் பார்த்துக் குறித்து வைத்துக்கொண்டாள் வித விதமான கோணங்களிலிருந்து.

"போதும்டி வந்து ஒக்காரு" தோழியின் நினைவூட்டலுக்கு பிறகே வந்து இருக்கையில் அமர்ந்தாள்.

சில நொடிகளில் கையில் கப்புடன் வந்த கார்த்திக் வைஷ்ணவியைப் பார்த்து அதிர்ந்தான் என்றாள், வைஷ்ணவியோ நமட்டு சிரிப்புடன் அவனைப் பார்த்து பிறகு அவன் பின்னால் வந்த அவன் தந்தைக்கு கை காட்டி, "நீங்க சாப்டாச்சா சுபி?"

"சாப்பிடலானா நீ ஊட்டி விட போறியா?" - ஷெர்லின்

"இல்ல நீ செஞ்ச தீஞ்ச பிரியாணியை குடுக்கலாம்னு நெனச்சேன்" - வைஷ்ணவி

"சூடு தண்ணி வைக்க தெரியுமா வைஷு?" - ஷெர்லின்

"தண்ணி சூடு பண்ண தெரியாது ஆனா கம்மிய காய வச்சு சூடு வைக்கிறது நல்லாவே தெரியும்" - வைஷ்ணவி

"அதுக்கு ஸ்டவ்வ பத்த வைக்க தெரியணும் ஏட்டு ஏகாம்பரம்" - ஷெர்லின்

இருவரின் காலை வாரும் படலத்தைச் சிரித்தபடியே பார்த்துக்கொண்டிருந்த சுபத்ரா, "நீங்க எப்பயுமே இப்டி தானா?" அவர்களின் பேச்சைக் கேட்டுக்கொண்டிருந்த கார்த்திக்கின் சந்தேகத்தைத் தங்கை கேட்டுவிட்டாள்.

"பேசிக்கலி வி ஆர் டீசென்ட் பெல்லோவ்ஸ். ரொம்ப ரேர்ரான டைம்ல மட்டும் தான் இப்டி பேசிக்குவோம். கோவிச்சுக்காமா சாப்பாடு போடுறீங்களா?" வாயைத் திறந்தே கேட்டுவிட்டாள், "பசிக்கிது" என்று.

தலையில் அடித்து, "சாரி சாரி ஒரு நிமிஷம்" தங்கைக்கு முன்னே கையில் இலையோடு கார்த்திக் வர அவன் பின்னால் சுபத்ரா இரண்டு வாட்டர் கேன்களோடு வந்து இருவருக்கும் வைத்தாள்.

பிறகு கார்த்திக் கடலைமிட்டாயை எடுக்கக் கூட்டுகளை எடுக்கச் சென்ற சுபத்ரா, "அண்ணா கீழ அம்மாகிட்ட கரண்டி மட்டும் வாங்கிட்டு வரியா? கூட்டுக்கும் இல்ல, சாதத்துக்கு இல்ல"

என்கவும் சரியெனத் தலையை ஆட்டி கார்த்திக் கீழே செல்ல, அவன் கொடுத்த கடலை மிட்டாய் பையைப் பார்த்த சுபத்ரா, "உங்க நல்ல நேரம் தான் கடலைமிட்டாய் இருக்கு. இல்லனா இந்நேரம் அண்ணன் காலி பண்ணிருப்பான்"

"ஓ உன் அண்ணனுக்கு அவ்ளோ புடிக்குமா?" கதையைக் கேட்க ஷெர்லின் கிளறினாள்.

"புடிக்குமாவா?" ஷெர்லின் கேள்வியில் அதிர்ச்சியானவள், "சின்ன வயசுல அவன் பட்ட பேர் கடலைமிட்டாய் திருடன். பொட்டி கடைல போய் கடைக்காரருக்கு தெரியாம நெறைய தடவ டப்பாவோட திருடிட்டு வந்துடுவான். ஒரு தடவ அப்பாகிட்ட மாட்டி பெண்ட் எடுத்துட்டாரு" அந்த நாட்களின் நினைவில் சுபத்ராவின் இதழ்களில் மெல்லிய புன்னகை.

அந்த கதை முடிந்தவுடன் கார்த்திக் அங்கு வந்தான். சகோதரி கூட்டுகளை வைக்க அதன் பிறகு சாதத்தை எடுத்தவன் ஷெர்லின் இலையில் முதலில் வைத்து பிறகு வைஷ்ணவிக்கு வைக்க வர, அவன் முகத்தை மட்டும் பார்த்துக்கொண்டிருந்தாள்.

சாந்தமான முகம் அசதியில் கலைத்திருந்தது, மாநிறம். கூர்மையான நாசி என்று கூறிவிட முடியாது ஆனால் சற்று கூர்மை தான். தடித்த சிவந்த உதடுகள், இரண்டு நாட்கள் முன்னர் தான் சவரம் செய்தது போல் இருந்தாலும் ஆண்மகனுக்குக் கம்பீரமாய் இருந்தது தாடியும், மீசையும். அவன் கண்களைக் காணச் சென்ற வைஷ்ணவியின் கண்கள் ஷாக் அடித்தார் போல் ஆனதன் காரணம் அவள் கண்களை ஏறிட்ட அதே நொடி அவள் இலையிலிருந்து அவள் விழிகளைப் பார்த்தான் கார்த்திக்.


"போதுமா?" அவன் இதழ்கள் கேள்வி எழுப்பிய பின்னர் தான், அந்த விழிகளிலிருந்து விடுபட்டு இலையைப் பார்த்து, "பந்தில எப்பவும் போதுமானு கேக்க கூடாதுங்க... இன்னும் வைக்கவான்னு கேக்கணும்" திருத்தினால் பெண்ணவள்.

தன்னை அறியாமலே அவன் இதழ்கள் கடையோராம் விரிந்திட, "இன்னும் வைக்கவா?" என்றான்.

"வைக்கலாமே... இவளுக்கு சாப்பாடு இல்லனாலும் பரவால்ல என் வயித்த நிரப்பி விட்ருங்க" என்ற தோழியை முறைத்த ஷெர்லின், "ஆமா அதுவும் பத்தலனா ஒரு கரண்டி மண்ண அல்லி வைங்க அதையும் சாப்புடுவா"

"சைடு டிஷ் நம்ம பார்டர் கடை மட்டன் கொத்து வைங்க தாராளமா சாப்டலாம்"

"எதுக்குங்க அத சாப்பிடணும்? சாப்பாடு காலி ஆகட்டும் அஞ்சே நிமிசத்துல என்னோட அண்ணன் உங்களுக்கு சமைச்சு தந்துட மாட்டான்" பெருமை வழிந்தோடச் சகோதரனைப் புகழ்ந்தாள் சுபத்ரா.

"உங்க அண்ணனுக்கு சமைக்க தெரியுமா?" ஆசிரியமாகக் கேள்வி வந்தது வைஷ்ணவியிடமிருந்து.

"அவன் கல்னரி ஆர்ட்ஸ்ல மாஸ்டர் டிகிரி பன்னிருக்கான்ங்க"

முதலில் அதைப் புரியாமல் விழித்தவள் பிறகு சட்டென மண்டை மேல் பல்பு எரிய, "ஓ சமையல் காரரா?" நக்கல் இல்லை அது அவளுக்குப் புரிந்த மொழி.

ஷெர்லின் கேட்ட வாழைக்காய் கூட்டை அவள் இலையில் வைக்கப் போனவன் கை வைஷ்ணவியின் கேள்வியில் அதிர்ச்சியாய் அவளிடம் படிய, அவனைக் கண்டுகொள்ளாமல் உணவில் மும்முரமானவை பார்த்து அப்படியே நின்றான்.

அவன் இப்பொழுது வைக்கப்போவதில்லை என்றான பின்னர், அவன் கையை அப்படியே தன் கைக்கொண்டு இறக்கிய ஷெர்லினை வேகமாகப் பார்த்தவனிடம், "உங்க கை ஏர்ல ஸ்டக் ஆகிடுச்சு ண்ணா அதான் ஹெல்ப் பண்ணேன்"

அவள் கேலியைப் புரிந்து, "சாரி மா" என்றான் சிறு புன்னகையுடன்.

அதன் பிறகு கார்த்திக் சென்று சுவரில் சாய்ந்து நின்றுகொள்ள உணவுண்டு முடித்த சுபத்ராவிடம் சற்று தொலைவில் நின்று ஷெர்லின் பேசிக்கொண்டிருக்க, குற்றாலத்தின் காற்றில் கண்ட மேனிக்குப் பறந்துகொண்டிருந்த தன் சிகையைச் சரி செய்துகொண்டே கைப்பேசியைப் பார்த்தவனையே அவ்வவ்வ பொழுது மேய்ந்தது வைஷ்ணவியின் மீன் விழிகள்.

இலையிலிருந்த கடலைமிட்டாயை வேகமாக உண்டவள் அவனைப் பார்த்து, "கடலைமிட்டாய்" சத்தமாக அழைக்கவில்லை ஆனால் நிச்சயம் அவனுக்குக் கேட்டிருக்கும்.

அதிர்ச்சியாக அவளைப் பார்த்தவன், சகோதரியைப் பார்க்க அவளோ பேச்சில் மூழ்கியிருந்தாள்.

"உங்கள தான் கூப்புடுறேன்ங்க கடலைமிட்டாய்" கடலைமிட்டாயில் அழுத்தம் அதிகம்.


Vanakkam... Update epdi iruku??

Comment pannungooooooooooooo...
 
அப்பாடி இந்த புள்ளைங்க பேசறது
கேட்டு சிரிப்பார்கள் இருக்கு
 
??? ennaa vaai idhugalukku.. vaishuvum sheruvum panra alaparaiyila sirichu mudiyala.. vaishu semmaya sight adikuraa karthik a.. waiting for next update
:love:
 
Top