Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

டிங் டாங் காதல் - 4

Advertisement

Bookeluthaporen

Well-known member
Member
எதற்காக அவள் தன்னை அப்படி அழைத்தாள்? சகோதரி எதுவும் கூறி இருப்பாளோ என்ற சந்தேகத்தில் கார்த்திக் முழித்துக்கொண்டிருக்க அவனைப் பார்த்தவள், "ஏங்க எதுக்கு இந்த முழி? கண்ணு வெளில வந்து விழுந்துட போகுது. கடலைமிட்டாய் தான வேணும்ன்னு சொன்னேன்"

அதிகமாக யோசித்துவிட்டோமோ என்ற யோசனையோடு அவள் கேட்ட கடலை மிட்டாயை எடுக்கச் சென்றான். சில நொடிகள் குழம்பி நின்ற அவன் முகத்தைப் பார்த்துச் சிரிப்பைக் கட்டுப்படுத்த முடியவில்லை ஆனாலும் அவனை இன்று எப்படியாவது சீண்டிவிட வேண்டும் அதற்காகவே இப்பொழுது விட்டுவைத்தாள்.

அவள் கேட்ட மிட்டாயை இடையில் வைத்தவன் நகரப் போகத் தடுத்தது அவள் பேச்சு, "நீங்க எப்பயுமே அமைதியா தான் இருப்பிங்களா?"

அவளைப் பார்த்து மௌனமாய் சிரித்தவன், கடலைமிட்டாயை அவள் அருகில் வைத்து, "இல்லங்க பேச வேண்டிய இடத்துல பேசுவேன்"

அதுவே போதும் அளவாகத் தான் பேசுவேன் என்று அவன் கூறியது அவளுக்கு உணர்த்த.

"ஆனா நான் அப்டி இல்லங்க அமைதியா இருந்தா பைத்தியம் புடிச்சிடும்... நாம இருக்க இடமே அதிரனும்" அவள் பேசி முடிக்கவில்லை...

?

வரியா....
வரியா....
வரியா....
வரியா....

?

புதுப்பேட்டை பாட்டை தன்னுடைய ரிங்டோனாக வைஷ்ணவி வைத்திருக்க, அவளுடைய குணத்தை ஏற்கனவே யூகித்திருந்தவன் மனம் இப்பொழுது அடித்து கூறியது அவள் ராங்கி என.

?
தண்ணி கொண்டு வார பொண்ணே
தண்ணி நல்லா இல்லே

தண்ணி கொண்டு வார பொண்ணே
தன னா ன ன ன னா

?

வைத்திருந்த பாடலுக்கு சிறிதும் கூச்சப்படாமல் கார்த்திக்கிடம் ஒரு நிமிடம் என்று சைகையால் தெரிவித்து, "மம்மி பிஸியா இருக்கேன்..."

"சாப்டுட்டு இருக்கியா?" சரியாக கேட்டார் அவள் அன்னை.

"கற்பூரம் தான் போ. அதுக்கு தான வந்தேன், ஒடனே துப்பறிவாளன் மாதிரி உங்களையே பெருமையா நெனச்சுக்க வேணாம். வர்றேன்" என்றதோடு இணைப்பை துண்டித்திருந்தாள்.

இணைப்பைத் துண்டித்து பாத்திரங்களை எடுத்து வைத்துக்கொண்டிருந்த கார்த்திக் பக்கம் திரும்பியவள், "மிஸ்டர் வெங்கடேஷ் பட்" அவள் அழைப்பிலே தன்னை தான் கிண்டல் செய்கிறாள் என்று புரிந்தாலும் அமைதியாய் தன்னுடைய வேலையைச் செய்துகொண்டிருந்தான்.

"செஃப் அவர்களே" இந்த முறை மரியாதை தூக்கலாக இருக்கத் திரும்பினான் அவள் பக்கம், "கொஞ்சம் வைட் ரைஸ் வச்சு மோர் ஊத்துங்க" எதுவும் பேசாமல் சகோதரி பக்கம் பார்த்து பிறகு வைஷ்ணவிக்கு உணவைப் பரிமாறினான்.

"சமையல் எங்க சொன்னிங்க?" அவனுக்கு எப்படித் தெரியும் அவன் வந்ததே இன்று காலை தான், குனிந்து குழம்பி இருந்த பாத்திரத்தைப் பார்த்தான் எம்.எஸ் பவன் என்று சிகப்பு நிறத்தில் எழுதியிருந்தது.

"எம்.எஸ் பவன்" என்றான்.

"அந்த கடை அவ்வளவா நல்லா இருக்காதே இன்னைக்கு எப்படி நல்லா இருக்கு?" வியப்பாகப் பேசியவள் ஓரமாக இருந்த உருளை கூட்டை எடுத்து மீண்டும் உண்டாள்.

"சாப்பாடு டிக், வரவேற்பு டிக், பரிமாறுதல் ஓகே குட், பாஸ் மார்க் குடுக்கலாம். ஆனா உங்க வீட்டு எலிவேஷன் மட்டும் இன்னும் கொஞ்சம் இம்ப்ரூவ் பண்ணிருக்கலாம்"

மொட்டை மாடியைக் கண்களாலே அளந்தவள், "எப்படியும் வீடு மட்டும் 1500 ஸ்குவயர் பீட் இருக்கும். கீழ ஒரே ஒரு மாஸ்டர் பெட்ரூம், ரெண்டு பத்துக்கு பத்து ரூம், ஒரு கிட்சன் மட்டும் தான் இதுல நீங்க படிய அப்டியே லிவிங்ல இருந்து கொண்டு வந்துருக்கலாம் பாக்க மார்டனா இருக்கும், நிலக்கதவு இன்னும் கொஞ்சம் டிசைனா, பெருசா வச்சு சைடுல சிங்கள் டெக்கர் கிளாஸ் குடுத்து இருந்து, பிரண்ட் டிசைன் மட்டும் மாத்தி விட்டா போதும்... பில் கேட்ஸ் வீட்டுக்கே டப் குடுத்துருக்கும்"

அவ்வளவு திருத்தங்கள் கூறியும் அவனிடம் ஒரு மாற்றமும் இல்லை புருவத்தை உயர்த்தி "ஓ" அவ்வளவே.

"நானும் சொன்னேங்க டிசைன் மாத்துங்கன்னு லுக்க மாத்துங்கன்னு. கேக்கல" அளந்து பேசுபவனுக்கு அதே தான் திரும்பி வேண்டியிருந்தது ஆனால் நிறுத்துபவளா வைஷ்ணவி, அதனால் தான் இடைபுகுந்தான் கார்த்திக், "அவங்களுக்கு தெரியும்ங்க" என்று.

இலையிலிருந்து மோரையும் சாதத்தையும் ஊறுகாயோடு வெளுத்து வாங்கிக்கொண்டிருந்தவளுக்கு அவன் பேச்சு அதிர்ச்சியையே தந்தது.

ஆனாலும் விடாமல், "அப்ப எனக்கு ஒன்னும் தெரியாதுன்னு சொல்றிங்க?"

உண்டு முடித்தாலும் இலையை மூடாமல் அவனைப் பார்த்தவளிடம், "அவங்க சிவில் என்ஜினீயர்ஸ்"

தன்னை பார்த்தால் சிவில் என்ஜினீயர் போல் தெரியவில்லையா என்ற ஆசிரியத்தில் தன்னையே ஒரு முறை சந்தேகித்தவள், "ஹலோ நானும் சிவில் என்ஜினீயர் தான்"

"எவ்ளோ பெர்ஷன்டேஜ்?"

"என்ன ஒரு 73 இருக்கும்... என்னங்க மார்க் வச்சு ஒருத்தரோட திறமையை இடைப்போட முடியாது" அவர்களைச் சுற்றியிருந்த அத்தனை தேவதைகளும் கைகொட்டிச் சிரித்தது அவனுக்குக் கேட்கவில்லை.

"சரி, ப்ராஜட்ஸ் ஏதாவது?" எவ்வளவு தான் அவளும் சமாளிப்பாள்... அதற்குமேல் முடியவில்லை, 'சரி கோவமா பேசி ஓடிடுவோம்' என்ற யோசனையுடன் வேகமாக இருக்கையிலிருந்து எழுந்தவள், "என்னங்க சாப்பாடு போட்டு அசிங்க படுத்துறீங்களா?"

அவள் ஆவேசத்தில் பேச, தான் தான் அவசரத்தில் அதிகமாகப் பேசிவிட்டோமோ என்ற பயத்தில், "சாரிங்க நான் எதார்த்தமா தான் கேட்டேன்" ஒரு நொடி அவன் கண்கள் காலியாக இருந்த மாடியைப் பார்த்து திடீரென தோன்றிய யோசனையில், "இந்த காலி இடத்துல அடுத்து ரூம் எடுக்குற ஐடியா இருந்த உங்ககிட்ட குடுக்க தான் கேட்டேன்" இப்பொழுது அதை விட பக் என்றிருந்தது.

'சும்மா போற சனியனை கொண்டைல எடுத்து மாடிட்டியேடி வைஷு' என்ன கூறி சமாளிக்கலாம் என்று யோசித்துக்கொண்டிருக்கும் பொழுதே,

"ஸ்கேல் வச்சு ஒரு கோடு கூட நேரா போட தெரியாது அவளுக்கு. இதுல வீடு கட்ட சொன்னா என்ன பண்ணுவா?"

அவ்வளவு தான் இவ்வளவு நேரம் காட்டிய கெத்து எல்லாம் மொத்தமாகக் காற்றில் பறக்க விட்ட தோழியை இயலாமையோடு வைஷ்ணவி பார்க்க, ஷெர்லினுக்கு தான் வைஷ்ணவி ஓட்டிய ரயிலின் கதை தெரியாதே எப்பொழுதும் போல் சாதாரணமாக நின்றாள்.

"விடுங்க வைஷ்ணவி எல்லாருக்கும் படிச்சது எல்லாம் தெரிஞ்சிடுமா என்ன?" வைஷ்ணவிக்கு உதவியாய் வந்து நின்றாள் சுபத்ரா.

"மறக்கும்டா. ஆனா 73 பெர்ஷன்டேஜ் வாங்குனவங்களுக்கு மறக்காதுல?" சுபத்ராவிடம் பேசினாலும் அவன் பார்வை வைஷ்ணவி மேல், இதழில் எந்நேரமும் வெடித்துச் சிதறும் சிரிப்பை மடக்கியபடி.

"நாங்க கெளம்புறோம் சுபி, வாங்க ஷெர்லின் அவர்களே இல்லனா வீடு கட்டிட்டு வரிங்களா"

தோழியைப் பார்த்து பாசமாக அழைக்க அவளுக்கோ அதிர்ச்சி, "நீங்க இந்நேரம் பேஸ்மன்ட் போட்ருபிங்களே வைஷ்ணவி அவர்களே"

"நான் பேஸ்மன்ட் போடுறதுக்கு முன்னாடி தான் நீங்க டாரெக்டா முப்பதாவது மாடி கட்டிடீங்களே மிஸ் ஷெர்லின்"

இருவரையும் குறுக்கிட்டு, "கட்டிட வல்லுனர்களே... போதும்" கையை எடுத்தே கும்மிட்டுவிட்டாள் சுபத்ரா சிரிப்புடன். "ஹாஹா வாங்க... எனக்கும் சாப்பிட்ட சாப்பாடுக்கு தூங்கணும் போல இருக்கு"

சுபத்ராவை அழைத்து முன்னே போன ஷெர்லின், மெதுவாகத் தோழி பக்கம் திரும்பிக் கண்ணடிக்க வைஷ்ணவி தலையில் அடித்துக்கொண்டாள். பிறகு இருவரும் கீழே சென்றனர் என்று உறுதியானபினர் வேட்டியை மடித்துக்கட்டி பாத்திரங்களைக் கீழே கொண்டு போகத் தயாராகிக்கொண்டிருந்த கார்த்திக்கிடம், "ம்ம்ஹ்ம்ம்..."

தொண்டையை செருமி, "கடலைமிட்டாய்" என்றாள். பெருமூச்சை விட்டு தலையை ஆட்டியவன், மீதமிருந்த மொத்த கடலைமிட்டாயையும் அவள் முன் எடுத்து வந்து நீட்டினான் மௌனமாய்.

அந்த பையையும் அவனையும் மாறி மாறி பார்த்தவள், "இப்ப யாரு இத கேட்டா?" என்கவும் புரியாமல் விழித்தான் கார்த்திக்.

"இனிமே ஏதாவது கடைல கடலைமிட்டாய் காணம்ன்னு சொன்னா உங்க வீட்டை தான் கை காட்டுவேன்" உதட்டைச் சுளித்துக் கூறியவள் வேக வேகமாக படியிறங்கி ஓடினாள் உதட்டில் சிரிப்புடன், 'சரியான லூசு'

'அஞ்சு நிமிஷம் தானே கீழே போனேன்' எப்படி பெண்களால் சில நிமிடங்களில் இத்தனை விடயங்களை பேசிக்கொள்ள முடிகின்றது என்ற ஆச்சிரியம் எழ, வைஷ்ணவி சென்ற படியை மிரட்சியுடன் பார்த்து நின்றான். கைபேசி சுணுங்கியபிறகு தான் நடப்பிற்கு வந்தவன் கைபேசியை எடுத்து தந்தையின் அழைப்பை ஏற்றான்.

"சொல்லுங்க பா"

"தம்பி எங்க இருக்க?"

"மாடில தான்பா, பாத்திரம் எல்லாம் எடுத்து வச்சிட்டு இருக்கேன். சமையல்காரரு இன்னும் அரை மணி நேரத்துல வண்டி அனுபுறேன்னு சொன்னாரு"

"சரி பா நீ இரு நான் அங்க வர்றேன்" தந்தையின் இணைப்பை துண்டித்தவன் தந்தைக்கு அதிகம் வேலை வைக்க கூடாதென வேகமாக பாத்திரங்களை எடுத்துவைத்தான்.

"பொறுமை கார்த்தி, நான் ரெண்டு வேலை பாத்தா என் உடம்புக்கும் நல்லது தான்" மகனுக்கு துணையாய் உதவ வந்த சுப்பிரமணிக்கு வேகமாக வேலையை செய்துகொண்டிருந்த மகனை பார்த்ததும் அவன் எண்ணம் புரிந்துகொண்டார்.

தந்தையின் புரிதலை என்னை புன்னகை தோன்ற, "நீங்க ரொம்ப அலுப்பா தெரிஞ்சிங்கபா அது தான் நானே பண்ணிடலாம்னு வந்தேன்"

"நல்லா தான்டா இருக்கேன். வா இந்த புடி கீழ போய் வச்சிடலாம்"

பெரிய கேரியர் ஒன்றை காட்டி நின்றார், "இல்ல பா வேஷ்டி கூட மாத்தாம இருக்கீங்க. நான் அவங்கிட்ட சொல்லி மேல வந்து எடுத்துட்டு போக சொல்லிடறேன். விடுங்க"

மகன் கூறுவதும் சரியெனப்பட அதை விட்டு இரண்டு நாற்காலியை நேருக்கு நேர் போட்டு அமர்ந்துகொண்டு, "நைட் என்னபா பண்ணலாம்?"

"நானே ஏதாவது செஞ்சிடுறேன் பா ஒரு இருவது பேர் தான இருப்போம்?"

"நேத்தும் தூங்கல இன்னைக்கும் இப்டியே இருக்குற முடிவா? ஒன்னும் வேணாம் கடைல வாங்கிக்கலாம்"

எதிரிலிருந்த நாற்காலியை காட்டி "உன்கிட்ட பேசணும் கார்த்தி இப்டி ஒக்காரு" இதை எதிரிப்பதே இருந்தவன் அமைதியாக வேட்டியை எடுத்துவிட்டு தந்தை முன் அமர்ந்தான்.

பொதுவாகவே கார்த்திக் அமையானவன் அதுவும் தான் அளவுக்கு அதிகமாக மதிக்கும் தந்தை முன் மொத்தமாக நல்லவனாகிவிடுவான். மகனின் அமைதியும் ஒழுக்கமும் சுப்பிரமணியத்தை கர்வமாய் உணரவைத்தாலும், அவனை பற்றியும் குடும்பத்தை விட சில நேரங்களில் அவன் சிந்திக்க வேண்டும் என்பது அவரின் எண்ணம்.

மகனையே ஆராய்ந்துகொண்டிருந்தவர், "வேலைய என்ன பண்ண போற கார்த்தி? மதுரைலேயே ஏதாவது ரூம் எடுத்து தங்க போறியா?"

"இல்ல பா வேலைய விட்டுட்டு வந்துட்டேன்"

மகனை நிதானமாக பார்த்தவர், "உனக்கு ஒரு பொண்ணு உன்னோட மாமா சொன்னாரு கார்த்தி, அத பத்தி பேச தான் வந்தேன். நீ வேலைய விட்டுட்டன்னு இவ்ளோ ஈஸியா சொல்ற" கோவமாக வார்த்தைகள் வரவில்லை ஆனால் கண்கள் அனல் கக்கியது.

"இன்னும் கொஞ்ச நாள் ஆகட்டும் பா" நெளிந்துகொண்டே கூறினான்.

"வயசு இருபத்தி எட்டு உனக்கு" கைபேசியை பாக்கெட்டிலிருந்து எடுத்து அவன் முன் நீட்டினார்.

மறுக்காமல் வாங்கியவன் அவர் காட்டிய பெண்ணின் புகைப்படத்தை பார்த்து, "ஓகே தான்பா ஆனா இன்னும் கொஞ்ச நாள் ஆகட்டும். ஒரு ஆறு மாசம்..." இழுத்தான் அசௌகரியமாக.

"பொண்ணு வீட்டுல அவசரப்படுத்துறாங்க கார்த்தி பொண்ணோட அண்ணன் அமெரிக்கா போகணுமாம், இன்னும் மூணு மாசத்துல கல்யாணம் பண்ணனும்னு கேக்குறாங்க"

தந்தைக்கு என்ன கூறுவதென்று புரியாமல் விழித்தான் விழிகள் மொத்தமாய் அங்குமிங்கும் அலைபாய்ந்தது, ஏதோ காற்றில் அவன் பதில் இருப்பதுபோல். அலைபாய்ந்து விழிகள் ஓரிடத்தில் சட்டென நின்றது. அவள் தான். அவளே தான், இவனை தான் பார்த்துக்கொண்டிருந்தாள். அவன் தன்னை கண்டுகொண்டான் என்று தெரிந்தும் பார்வையை அகற்றாமல் இன்னும் அவனை தான் பார்த்துக்கொண்டிருந்தாள்.

வேகமாக தந்தை இருக்கும் நினைவு வர, "வேணாம்பா. வேற இடம் பாக்கலாமே நான் இன்னும் கொஞ்சம் ஸ்ட்ராங் ஆகிறேன் கேரியர்ல"

தலையை குனிந்து யோசித்தவர், "லவ் ஏதாவது இருந்தா கூட சொல்லு கார்த்தி, உன் விருப்பம் தான் எங்களோட விருப்பம்"

"இல்லபா" புயலென வந்தது அவன் பதில். இந்த நொடி வரை அவன் மனதில் எந்த எண்ணமும் அல்ல, "அப்டி எதுவும் இருந்தா கண்டிப்பா நான் சொல்லுவேன்" சரி என தலையை அசைத்தவர் அவன் தோளை தட்டி கீழே இறங்கி சென்றார்.

அவர் இறங்கியதும் ஏதோ துணுக்குற்றவனாய் வைஷ்ணவி இருந்த பக்கம் திரும்ப, அவள் சுப்பிரமணி சென்ற திசையில் அவர் வீட்டிற்குள் நுழைந்துவிட்டாரா என்று பார்த்துக்கொண்டிருந்தாள்.

'என்னமோ பிளான் பண்றா' சரியாக யூகித்தவன் எழுந்து தன்னுடைய அறைக்குள் செல்ல போக அவன் வீடு மாடியில் ஒரு சிறு கல் வந்து விழுந்தது, அவனுக்கு சற்று பின்னால். அவளை திரும்பி பார்த்தவன் விழிகளில் அச்சம், கோவம், எரிச்சல் எதுவும் இல்லை.

"என்ன கல் விழுந்ததும் என்ன பாக்குறீங்க?"

குற்றம் சாட்டும் பார்வையுடன் அவனை பார்க்க, பிறகு அவளே, "ஆனா கெஸ்சிங் கரெக்ட் தான். கல் எரிந்தது அடியேன் தான்" இதில் பெருமை வேறு.

"சொல்லுங்க" என்றவன் பார்வை தங்களை யாரும் பார்த்துவிடுவார்களோ என்ற பயத்தில் தெருவையே சுற்றி பார்த்தான்.

"உங்க பேர் என்ன?"

'இதற்காகவா இந்த கூத்து?' கேள்வி எழுந்தாலும் நிச்சயம் சுபத்ராவிடம் கேட்டிருப்பாள் தானே என்ற சந்தேகமும் உடன் எழுந்தது, இருந்தும் இவளிடம் பேச்சை வளர்ப்பது ஆபத்து என்று உணர்ந்து, "கார்த்திக்" வாய் வார்த்தையாக வந்தாலும், 'கடலைமிட்டாய்' என்ற பேரும் இணைந்தே வந்தது.

'ஓ' என்று வாயை வைத்து அவள் யோசிக்க இது தான் சாக்கென தப்பிக்க முயன்றவனுக்கு, "பேர் நல்லா இருக்கு உங்களுக்கு தான் செட் ஆகல"

அவன் கைகள் அவன் அறையின் கதவை திறக்க, செவிகள் அவள் வார்த்தைகளை கேட்டது, "ஆனா அக்னி நட்சத்திரம் கார்த்திக் டக்கர்"

அவ்வளவு தான் அறையினுள் சென்று நிம்மதி பெருமூச்சை விட்டு நின்றவனுக்கு, எதனுள்ளோ சிக்கிக்கொண்ட உணர்வு.

Mmm... Epdi iruku???

Comments Please.......
 
இவ அடஙகவே போறது இல்லா???

அடேய் நீ ஏன் டா அவளை பார்துட்டு ஆறு மாசம் போகட்டும் சொன்ன???????
 
Top