Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

டெய்சி ஜோசப்ராஜின் 'என் கண்களில் காண்பது உன் முகமே' அத்தியாயம் 3

Advertisement

'என் கண்களில் காண்பது உன் முகமே' அத்தியாயம் 3

அத்தியாயம்: 3 ‘கண்ணானக் கண்ணே! என் தோள்மீது சாயவா!’

தாரா காரணமில்லாமல் பரிதவித்த மனதை அடக்கியவள், கண்களில் ஒரு வித்தியாசமான ஒளியோடு திரு திருவென முழித்துக் கொண்டிருந்தவனை ஆச்சரியத்தோடு பார்த்து,

“டேக் கேர் புருஷா, ரொம்ப யோசிச்சு மூளையை சித்திரவதைக்கு உள்ளாக்காதே; உன்னுடைய மறைந்து கிடக்கும் ஞாபகங்கள் விரைவில் முழுவதுமாத் திரும்ப கிடைத்துவிடும்!” என்று அவனை அன்பாய் கன்னத்தில் தட்டிவிட்டு, தன் மென்மையான ஒப்பனைகளைத் தொடங்கினாள்.

அலங்காரங்கள் எதுவும் இன்றியே வாலிப மனங்களைச் சுண்டி இழுக்கக் கூடிய ஒய்யார அழகியான டாக்டர் தாரா, நெடுநெடுவென்ற உயரத்தையும், தன் உடம்பின் அனைத்து வளைவு, சுளிவுகளையும் தன்சேலைக்கட்டில் மறைத்தவள், முகத்தை மற்றொரு முறை கண்ணாடியில் பார்த்து, காதோரம் சுருண்டிருந்த ஒரு முடிக் கற்றையை ஒதுக்கி விட்டுக் கொண்டே,,,

திட்டுத் திட்டாய் நீலம் போடப்பட்ட ஆகாயத்தையும்; அதில் அள்ளித் தெளிக்கப்பட்டிருந்த நட்சத்திரங்களையும் உள்ளடக்கிய நீலவானம் போல, ஆகாய வண்ணத்தில், உடலெங்கும் வெள்ளைப் பூக்கள் கொட்டப்பட்டு, மொடமொட வென்று கஞ்சி போடப்பட்ட அந்த பருத்திப் புடவையை நேர்த்தியாக மடிப்பு வைத்து தன் எடுப்பான அங்கங்களை மறைத்து அதைத் தன் இடது தோள் பட்டையிலும், மெல்லிய இடுப்பின் நடுவிலும் பின் செய்து முடித்தவள்,

கழுவித் துடைத்தது போலிருந்த அந்த பளிங்கு நெற்றியின் கீழ்; வளைந்து நின்று கண்களுக்கு குடை பிடித்த புருவங்களுக்கிடையில்; ஒரு சிறிய புள்ளி போல் ஒரு கருப்பு ஸ்டிக்கர் பொட்டை ஒட்டிவிட்டு அவனை ஓரக் கண்ணில் பார்த்து இரசித்தாள்.. அவளின் அந்த செய்கையை அவன் பலமுறை கிண்டல் செய்துள்ளான்.

“இந்தப்பொட்டை எலக்ட்ரான் மைக்ரோஸ்கோப் அடியில் வச்சுப் பார்த்தாக்கூட கண்டு பிடிக்க முடியாது! மூக்கும், முழியுமா திருத்தமா இருக்க முகத்துக்கு நீ ஏன் இப்படி வஞ்சகம் செய்ற?” என்று பலமுறை கேட்டுள்ளான்,

“இருடி! நம்ம கல்யாணம் முடிந்தவுடன் ஒரு வட்ட நிலா சைசுக்கு உன் நெற்றியில் செக்கச் சிவந்த குங்குமம் வச்சு; உன் கண்ணுக்குக் காஜலால் கரை போடுவதுதான் என்னோட முதல் வேலையாயிருக்கும்!” என்று கூறி, அன்று அவளைத் தன் பார்வையால் வெட்கப்பட வைத்தவன், இன்று ஒரு திருடனைப் போலத் திருதிருவென்று விழித்துக் கொண்டிருந்தான்.

முடிவில் ஹீல்ஸே இல்லாத தட்டையான செறுப்பை மாட்டிக் கொண்டு, அவனைப் பார்த்து மென்மையாகச் சிரித்துவிட்டு, சிறிய ஹேன்ட்பேக்கை தோளில் தொங்க விட்டவள், கையில் கார் சாவியை எடுத்துக் கொண்டே, அவனைப் பார்த்த அவள் மனம் ஏனோ காரணமின்றி படபடவென்று அடித்துக் கொள்ளத் தொடங்கியது.

“பத்திரமா இருந்துக்க பவி, அம்மா சீக்கிரமா வந்திருவேன்! டேக் கேர் கௌதம்” என்று அவனையும் அவன் மடியிலிருந்த இரண்டு வயது நிறம்பிய பெண் குழந்தை பவியையும் குழந்தைகளாகப் பாவித்துக் கொஞ்சிய அந்தக் காட்டன் பிரின்ஸஸ் அவர்களுக்கு டாட்டா சொல்ல,

அந்தக் குழந்தை பவி குறும்பாய் சிரித்துவிட்டு, ‘சீக்கிரமா வந்துருமா’ என்றது மழலையில். ஆனாலும் அவனுடைய அந்தத் திருட்டுப் பார்வை அவள் தலை மீது சொட்டென்று சிதறி விழும் பறவை எச்சம் போல சிதறிவிழ; அவனை விழி விரித்துப் பார்த்தவள்,

“என்ன சார், நினைவுகள் உயிர்த்த பின்பும் இப்படி உயிர்ப்பே இல்லாம இருக்கீங்க? நான் ஒண்ணும் உங்களையோ, உங்களோட பவித்ரத்தன்மையையோ கொள்ளை அடிச்சிடலை! எல்லாம் பத்திரமா உங்கக்கிட்டதான் இருக்கு!” அதைக் கேட்டு வெடுக்கென்று திரும்பிப் பார்த்து அவளை முறைத்தவன்,

“நீ பத்திரமா ஆஸ்பத்திரிக்கு போயிட்டு வா தாரா! நம்ம பஞ்சாயத்தை அப்புறம் வச்சுக்கலாம்,” என்றவன், அவளை வாஞ்சையுடன் உற்று நோக்கினான். அந்தப் பார்வையில் ஆயிரம் அர்த்தங்கள் இருந்ததை தாரா அப்பொழுது உணரவில்லை! அவளைக் கடைசியாக நடுத்தீர்ப்பு நாளில் பார்ப்பவன் போல ஆழமாய்ப் பார்த்து; இத்தனை நாள் தன் கண்ணின் இமைபோல காத்து வந்த அந்த ஓவியத்தை தன் மனதில் நிறைத்துக் கொண்டே, ஞானம் வந்த பின் போதி மரத்தடியில் அமர்ந்திருந்த புத்தபகவான் போலத் தன் இதற்கடையில் அவன் தன் சிரிப்பை நெளிய விட,

“இந்தச் சிரிப்புக்கு என்னடா அர்த்தம்? நான் மருத்துவமனை கிளம்பும் போது டென்ஷன் பண்ற பார்த்தியா!? என்று பதிலுக்கு முறைத்தவள்,

“நான்தான் பெரிய தப்புப் பண்ணிவிட்டேன்,,,, என்றவள் நிறுத்தி நிதானமாக “நீ உன்னுடைய பழைய நினைவுகள் இல்லாமல் கட்டிலில் கிடந்த பொழுதே, உன்னை இறுக்கி அணைச்சு; முத்தம் கொடுத்து; கலைச்சுப் போட்டு உன்னை என்னோட புருஷனாக் கொண்டாடித் திருமணம் முடிச்சிருக்கணும்!” என்றாள் குறும்புடன்!

“சீ! சீ! அசிங்கமா பேசாத, நீ ரொம்ப நல்ல பொண்ணு! உன்னால தப்பெல்லாம் செய்ய முடியாது! இப்படி எல்லாம் பேசி உன் தரத்தை தாழ்த்திக்காத!”

“நான் என்ன வேற யாருக்கிட்டயுமா இப்படிப் பேசுறேன், என் வருங்கால புருஷன்கிட்டதானே பேசுறேன்!? இப்பவும் ஒண்ணும் கெட்டுப் போகலை நாளைக்கே நம்ம கல்யாணத்தை வச்சுக்கலாமானு யோசிச்சுக்கிட்டிருக்கேன், நான் ராத்திரி வர்றதுக்குள்ள, நம்ம கல்யாணத்துக்கு என்ன ஜாமான் எல்லாம் வாங்கணும்னு ஒரு லிஸ்ட் போட்டு வை! எவ்வளவு நேரமானாலும் பர்ச்சேசிங்க் முடிச்சிட்டுத்தான் தூங்கப் போறோம்! கல்யாணத்துக்கு முன்னாடி நம்ம ஃபர்ஸ்ட் நைட்டா, இல்லை கல்யாணத்துக்கப்புறம் நம்ம ஃபர்ஸ்ட் நைட்டான்றதை மட்டும் முடிவு பண்ணி வை!” என்று கிண்டலாய்க் கூற

“சீ போடி!” என்று அவன் வெடுக்கென்று பதிலுரைத்தான்.

இப்படி தாரா அவனிடம் பேசுவது மிகவும் சகஜமான ஒன்றுதான்,,,ஆனாலும் கடக்கவே முடியாத ஆழ்கடலோ, இல்லை ஏறவே முடியாத மிக உயர்ந்த மலைச்சிகரமோ, ஏதோ ஒன்று நந்தியாய் அவர்கள் நடுவில் படுத்துக்கிடப்பது போல் அவனுக்குத் தோன்றியது!

‘நந்தி,,, நந்தி,,,’ அம்மா கூறிய கதைகளில் இந்த நந்தியும் உண்டு,,,! அவனுடைய தொடர் சிந்தனைகளைத் தாராவின் பேச்சு கலைத்தது!

“நீ நம்ம கல்யாணத்துக்குச் சொன்ன ஒரு வருடக்கெடு முடியப் போகுது இல்லையா!? அதனால ஏற்கனவே எங்க சீஃப் டாக்டர்கிட்ட நம்ம கல்யாணத்துக்காக ரெண்டு நாள் லீவ் கேட்டிருந்தேன்! அதுக்கு அந்த அராத்து என்ன பதில் சொன்னுச்சுனு தெரியுமா?

“கல்யாணம்தானே மேடம், தாலி கட்டிக்கிட்டு ஆஸ்பத்திரிக்கு வந்திருங்க, வேணும்னா உங்க புருஷனைப் பக்கத்திலயே உட்கார வச்சுக்குங்க! எனக்கு ஒரு அப்ஜக்ஷ்னும் இல்லைனு சொல்றார். நீ என்னடா சொல்ற?”

“வந்து???,,,,என்ற கேள்வியோடு பதில் சொல்லப் போனவனின் சிந்தையில் அவன் தன் தாயிடம் பேசிய ஒரு 3டி படம் ஒன்று ஓடத்துவங்கியது!

‘இன்னைக்கு வந்து,,, மா நான்தான் கவர், இன்லான்ட் லெட்டர், கார்டு எல்லாத்திலும் டேட் ஸ்டாம்ப் அடிப்பேன், ‘எப்படி மம்மி? அவ்வளவு கரெக்டா எந்தத் தேதியில போஸ்டாயிருக்குனு கண்டுபிடிக்கவே முடியாதளவுக்கு, குரு அண்ணாச்சி டேட் ஸ்டாம்ப் அடிக்கிறாரு!” என்று டீனேஜ் கௌதம் மம்மியைக் கேட்க,

“அதெல்லாம் ஒரு ட்ரிக் தம்பி! எந்த டாக்டராவது எழுதிக் கொடுக்கும் மருந்து சிட்டையில் உள்ள மாத்திரை பெயரை உன்னால் படிக்க முடியுமா?!” அவன் அம்மாவுடன் நடந்த உரையாடலில் அவன் அதிர்ந்து போய் அமர்ந்திருக்க,

“என்னாச்சு கௌதம்?” தாராவின் கேள்வியில் இந்த உலகிற்கு இழுத்து வரப்பட்டவன்,

‘என் மூளைக்குள் கொட்டும் ஞாபகங்களை இவளுக்கு நான் எப்படி புரிய வைப்பேன்?’ என்று கலங்கியவன், அவளிடம் ஒரு முறைப்போடு பேசினான்,

“ஏன் உங்க மருத்துவமனையிலும் என்னை ஒரு காட்சிப் பொருளாக்கலாம்னு பார்க்கிறியா?” கோபம் இருப்பது போல் வீம்புக்கு நடித்தானவன்.

“இல்லடா என்னோட சீஃப் இன்னும் நிறைய ஐடியாஸ் வச்சிருக்கார்! என்னை அந்த மருத்துவமனையுடனே கட்டிப் போட நினைக்கிறார், ஆனால் ஃபர்ஸ்ட் உன்னைக் நான் கட்டிக்க நினைக்கிறேன், உனக்கு அதில ஒண்ணும் ஆட்சேபனை இல்லையே?” என்றவளின் கேள்விக்கு கோழி திருடின கள்வனைப் போல் திருதிருவென விழிக்கத் தொடங்கினான் கௌதம். தாரா தன்னிடம் சீப் டாக்டர் கூறியதைத் தொடர்ந்து கூறினாள்.

“டாக்டர் தாரா மூளை ரிப்பேர்னு சொல்லி இப்ப நிறைய சின்னப் பசங்க வர ஆரம்பிச்சிட்டாங்க! மூளைமாற்று அறுவை சிகிச்சைக்கென்று ஒரு தனி செக்ஷ்னே ஆரம்பிக்கலாமானு ஒரு யோசனை இருக்கு! அதுக்கு உங்களைத்தான் தலைவியாப்போடப் போறேன்” என்று சொல்லி என் டென்ஷனை ஏற்றியவருக்குத் தெரியாது, நான் என்னுடைய மென்டல் பேஷண்டையேக் கல்யாணம் பண்ணிக்கப் போறேனு! அது தெரிஞ்சா அதுக்குத் தனியா ஒரு கதாகாலட்சேபமே நடத்திருவாரு. என்னோட சீஃப் ஒரு விவஸ்த்தையே இல்லாத ஆளு! அதுதான் அதுக்கு இன்னும் ஒரு கல்யாணம்கூட ஆகலை!” என்று அவள் நெற்றியைச் சுருக்கிக் கொண்டு கூற,

ஞாபகங்களை இழந்திருந்த கௌதம் என்றால் ‘இந்த நெற்றிச் சுருக்கம் இந்த அழகிக்கு செட்டாகலை’ என்று அவள் நெற்றிச் சுருக்கத்தை நீவிவிட்டிருப்பான்! ‘நீ சிரிக்கும்பொழுது மூக்கில் விழும் சுருக்கம் அவ்வளவு அழகு’ என்று அவள் மூக்கைத் திருகி இருப்பான். அவள் வாழ்க்கையில் அவன் விளையாண்ட அந்தக் குட்டிக் குட்டி விளையாட்டுக்கள் எல்லாம் இப்பொழுது பொய்யாகிவிடுமா!?

‘அவை எல்லாம் அவன் தன் ஞாபகங்கள் தொலைந்திருந்த காலத்தில் அறியாது இழைத்த தெரியாத தவறுகள், என்று, அந்த நினைவுகளை புறம் தள்ள நினைத்தாலும், அந்த நினைவுகள் அழிய மறுத்தது! அது என்ன பென்சில் வைத்து வரையப்பட்ட ஓவியங்களா ரப்பர் வைத்து அழிப்பதற்கு? அவை காலத்தால் அழிக்க முடியாத நினைவுகளால் இருவர் மனதிலும் வரையப்பட்ட ஓவியங்கள்!

அவன் அமைதியாய் இருப்பதைப் பார்த்தவள், “என்ன சார், அமைதியான நதியில் உங்களோட ஓடத்தை தொலைச்சிடீங்களா!” என்று அவள் கேள்வி எழுப்ப, அவனுடைய அமைதியால் அவளுக்குத் தன் ப்ளானைப் பற்றி சந்தேகம் வந்துவிடக்கூடாதென்று நினைத்தவன்

“லூசுகளுக்கு ஒரு லூசுதானே HOD யா, தலைமை பொறுப்பில் இருக்க முடியும்!” என்று எப்பொழுதும் போல் ஒரு பதிலைக் கூறிப் போலியாய் சிரித்துவிட்டு,

“உன்னோட பெற்றோர் கொண்டு வந்த திருமணப் ப்ரப்போசலுக்கு பதில் கூறிட்டியா தாரா?” என்று ஒரு வெடி குண்டைத் தூக்கிப் பதில் கேள்வியாய்ப் அவளிடம் போட்டான். ஒரு மாதத்திற்கு முன்னால் அவளுடைய பெற்றோரும் அண்ணாவும் ஒரு கல்யாணப் பிரப்போசலோடு தாராவைப் பார்க்க வந்திருந்தனர்! கொஞ்ச நேரம் பவியைத் தங்கள் கரங்களில் அள்ளியவர்கள்,

“எங்க புஜ்ஜுமா! அபிமா! எப்படி இருக்கீங்க?!” என்று ஸ்பெல்லிங்க் மிஸ்டேக்கோடு அவளைப் பேர் சொல்லி அழைத்துக் கொஞ்ச! அவனுக்கோ அவர்களிடமிருந்து தன் குழந்தையைப் பறித்துக் கொண்டு ஓட வேண்டும் போலிருந்தது!

அதன் பின் அவர்கள் தாராவின் திருமணப் பேச்சை எடுத்தவுடன், அவள் ஏன் அவ்வளவு கோபப்பட்டாள் என்று அவனுக்குப் புரியவில்லை.

“அண்ணா!” என்று கத்தியவள், “இன்னொரு முறை கல்யாணம்கிற பேச்சோடு, அம்மா, அப்பாவைக் கூட்டிக்கிட்டு இங்க வர்றதுனா என்னைப் பார்க்க வரவே வேணாம்! இது என்னோட லாஸ்ட் வார்னிங்க்!” என்று உச்சஸ்தாயில் மேலும் கத்த,

“நீ எத்தனை நாளைக்குமா இப்படித் தனி மரமா நிக்கப் போற, உனக்கும் வயசு இருப்பத்தெட்டு முடியப்போகுது! உனக்குனு ஒரு துணை வேணாமா, உன்னொட கு,,,! என்று ஆரம்பித்த பொழுதே!

“என்னோட குட் புக்சில் யார் இருக்காங்கன்னு நான் ஏற்கனவே சொல்லிவிட்டேன் நான் என் எதிர்காலத்தைப் பத்தி ஏற்கனவே எடுத்த அதே முடிவில் உறுதியா இருக்கேன்!” என்று அவர்களை அவள் சமாளிக்க இவனோ ‘ங்கே’ என்று விழித்துக் கொண்டு அங்கே அமர்ந்திருந்தான் அன்று. இன்று அது அவன் ஞாபகத்தில் வர,

“உன்னோட பெற்றோர் பார்த்த வரனுக்குப் பதில் சொல்ல உனக்கு ஒரு மாதம்தான் டைம் கொடுத்திருக்காங்க தாரா! அதுல இன்னும் ஒரு நாள்தான் பாக்கி இருக்கு! நீ அவங்களுக்கு ஓகேனு பதில் கொடுக்கப் போறியா? இல்லை நானே மெசேஜ் கொடுத்துறவா?!”

“என்ன என்னைக் கட்டிக்க சம்மதம்னு குறுஞ்செய்தியில் கூறப் போறியா மை டியர் புருஷா?” என்று அவள் கொஞ்சலாய்க் கேட்க, அவன் மனம் அலுமினிய டப்பாவாய் நெளிந்து போனது! அவனுக்கு ஏற்பட்டிருக்கும் தர்மசங்கடம் ஆண் வர்க்கத்தில் யாருக்குமே ஏற்படக்கூடாதென்று மனதிற்குள் புகைந்தவன்,

“யாருடி உன் புருஷன்!?” என்று கேட்டுக் கொண்டே, அவளிடம் வந்தவன்,

“நான் உருகி உருகிக் காதலிச்சவளைக் கல்யாணம் பண்ணி, அதுக்கு சாட்சியாய் இதோ என் கையில் ஒரு அழகான குழந்தை இருக்கு! இதுக்கு என்ன பதில் சொல்லப் போற?!” அவன் கேள்வியில் ஒரு வெறுமை இருந்தது! அவளைப் பற்றிய நினைவுகளை நான் தொலைச்சிருந்தாலும், சூன் ஐ வில் கெட் தோஸ் மெம்மரிஸ்!” என்றவன், “எனக்கு இந்த நிலமையில இன்னொரு கல்யாணமும் இன்னொரு பொண்ணும் ரொம்பத் தேவைதான்!” என்றான். அதற்கு அவள் கூறிய பதில் இன்னும் கொடுமையாயிருந்தது! அவன் சுழற்றிப் போட்ட கூக்ளி பந்தை! அவன் சற்றும் எதிர்பாராமல் சிஃஸருக்குத் தூக்கி அடித்தாள் தாரா!

“நல்லா யோசிச்சுப் பாரு! நீ நினைவு இழக்கும் பொழுது உன் குழந்தை இப்படியா இருந்தது?!” என்ற கேள்விக்கான பதிலை யோசிக்க டைம் கொடுத்தவள்,

“இது உன்னோட குழந்தையே இல்லை; என்னோட குழந்தைதானு சொல்லியிருந்தா நீ என்னடா செஞ்சிருப்ப?!”

அந்தக் கேள்வியில் அவன் முற்றிலுமாக சுருண்டு போனான், அந்தக் குழந்தையையே சிறிது நேரம் வெறிக்க வெறிக்கப் பார்த்தவன், அந்தக் குழந்தையின் முகத்தில் தாராவின் சாயல் இலேசாக இருப்பது போல் தோன்றவே அவனுக்கு மறுபடியும் பயங்கரமான தலைவலி வருவதற்கான அறிகுறிகள் தோன்றியது. இன்றுவரை சிந்துவோ அவன் குழந்தையோ அவன் ஞாபகத்தில் தரிசனம் தர மறுக்கிறார்கள்

தன் குழந்தையைத் தன்னிடமிருந்து யாரும் பறித்துவிடுவார்களோ என்ற பயம் அவனைத் துறத்த, அவன் தன் குழந்தையை மேலும் இறுக்கிக் கொண்டு அதன் தலையைத் தன் மேல் சரித்துக் கொண்டு அப்படியே கட்டிலில் சரிந்தான்!

அவள் உடனே தன் கையில் மாட்டியிருந்த ஹேன்ட் பேக்கையும், காலில் மாட்டியிருந்த செறுப்பையும் வாசலிலேயே உதறியவள் அவனிடம் ஓடி வந்து அவன் தலையைத் தன் மடியில் தாங்கிக் கொண்டாள்.

“அது உன் குழந்தைனா அப்ப உன் புருஷன் எங்கடி?” என்று தன் நெற்றியை அழுத்தப் போனவளின் கரத்தைப் பிடித்துக் கொண்டு அடிக் குரலில் கேட்டவனின் குரல் பிசிரடிக்க,,, "என் சிந்து செத்துப் போனாளா இல்லை உயிரோடிருக்காளான்னு கண்டு பிடிக்க எனக்கு இன்னும் கொஞ்ச நாள் தவணை கொடு தாரா!” என்றவன், “பிளீஸ் தாரா! என்னைத் தொடாத, நீ மருத்துவமனைக்குக் கிளம்பு! உனக்காக உன் வரவுக்காக அங்க பல நோயாளிகள் காத்திருப்பாங்க, என் ஒருவனுக்காக உன் லட்சியத்தைக் கோட்டை விடாத, இத்தனை நாள் என்னை உன் பாதுகாப்பில் வைத்துப் பார்த்ததுக்கு ரொம்ப நன்றி!” அவன் அழுதுவிடுவான் போலத் தோன்றியது அவளுக்கு!

“வேணும்னா ஒரு வோட் ஆஃப் தாங்க்ஸ் எழுதி வாசிச்சிட்டு இந்த நாடகத்துக்கு ஒரு முற்றும் போட்டுவிடேன்!” என்று கூறிவிட்டு அவனை வெறிக்க வெறிக்கப் பார்த்தாள் தாரா.

“இது உண்மையான நன்றியறிதல் தாரா!” என்றான் அவன் கலங்கிய கண்களுடன். அவன் ‘நன்றி’ என்று சொன்னதைக் கேட்டவள் கோபமாகக் கத்தினாள்!

“இப்ப நீ என்னடா சொல்ல வர்ற?!”

“சுரைக்காய்க்கு உப்பில்லை, பாவக்காய்க்கு பருப்பில்லைனு சொல்ல வர்றேன்!” அவன் தலைவலி ஏற, ஏற அவன் குரல் உயர்ந்து கொண்டே போனது!

“ப்ளீஸ் தாரா! எனக்கு மூளைக்குள்ள வலிக்கிற மாதிரி இருக்கு!” என்று கத்தியவன் தன் மனதிற்குள்ளாகவே பேசத் தொடங்கினான்.

‘நான் என் காதல் மனைவியைத் தேடிப் போகணும்! நான் இல்லாம அவ என்ன செய்றாளோ தெரியலியே!?’ ஆனாலும் அந்த சிந்து நதியின் ஓட்டத்தில் அவன் மனதில் ஏதோ ஒரு தடங்கல் தோன்றியது! ஓடிக் கொண்டிருக்கும் வண்டியின் சக்கரங்களில் ஒன்று பங்ச்சர் ஆகி, காற்று இறங்கி தள்ளாடுவது போல அவன் மனம் ஏன் இப்படித் தள்ளாடுகிறதென்று அவனுக்குப் புரியவில்லை. அவன் மனம் மடமடவென்று புலம்பத் தொடங்கியது. எங்களுக்கிடையில் 2100 கிமீ இடைவெளியில் முன்ணூத்தி அறுபஞ்சு நாள் ஓடிப் போயிருச்சா!?

“ஓ மை காட்!” என்று அவன் தலையில் அடித்துக் கொள்ள அவன் வலி மேலும் மேலும் பெருகத் தொடங்கியது! அவன் தன் குழந்தை பவியோடு தன் தாயை சந்திக்கக் கோவை கிளம்பியது அவன் ஞாபகத்தில் இருந்தது,

‘பின்னர் ஏன் சிந்து அவனுடைய காதல் மனைவி அவனுடன் வரவில்லை?’

‘டேய் மடையா! உன்னிடம் இரண்டு வயதிற்கு மேலுள்ள குழந்தை உள்ளதென்றால் உங்களுக்குத் திருமணம் முடிந்து குறைந்தது நான்கு வருடங்களாவது இருக்கணும், ஆனால் இதுவரை ஒரு முறைகூட மாமியாரும் மருமகளும் சந்திக்கவில்லை என்று உன் மர மண்டைக்குப் புரியலையா?’ கௌதமின் மூளை பட்டென்று அவன் இதயத்தில் அடித்து; புதியதொரு செய்தியை அவன் ஞாபகத்தில் பதிவிறக்கம் செய்ய; அவன் முற்றிலுமாக அதிர்ந்து போனான். ‘இது என்ன புதுக்கதை, நீ சொல்ற ஃப்ராடுக்கதையைக் கேட்க பின்னர் வருகிறேன்’ என்று தன் மெம்மரியை அதட்டியவன்,

‘என்னை என் சிந்துவிடமிருந்து திசை திருப்பிவிட நீ நாடகம் போடுறியா?’ என்று தன் இன்னர் வாய்சிடம் கடிந்தவன் தன்னைக் கரிசனத்தோடு பார்த்த தாராவின் கண்களைத் துளைத்து விடுபவன் போல் பார்க்க. அவன் மனதில் நடந்து கொண்டிருந்த நாடகங்களைப் புரிந்து கொள்ளாத தாரா,

“கொஞ்சம் அமைதியா இருப்பா, எப்பவும் போல உன் தலையை நீவிவிட்டு, உன் மூளை அமைதியடைய ஒரு ஊசி போட்டு விடுறேன்! உன் வலி இப்பச் சரியாயிரும்!” வலியில் துடித்தவனுக்கு அவளை எதிர்த்து ஒன்றும் செய்ய முடியவில்லை! ஆனாலும் அவன் கையிலிருந்த குழந்தையை அவளிடம் தர மறுத்துவிட்டான். அவள் சரியான இடத்தில் தலையைப் பிடித்துவிட வலி கொஞ்சம் கொஞ்சமாகக் குறையத் தொடங்கியது!

“உன்னுடைய மூளை ரொம்ப சோர்ந்து போயிருக்கு கண்ணா! அதுக்கு மிக அதிகமான அழுத்தம் கொடுத்தா ஒரு கட்டத்தில் அது வெடித்துச் சிதறிவிடும்! உன் ஞாபகங்கள் அதுவா உன்னை நோக்கி நீந்தி வரட்டும். அதுக்கப்புறம் விரைவில் நாம ரெண்டு பேரும் சேர்ந்து உன் கடந்த காலத்தைத் தேடி இமயமலை ஏறலாம்!” அவள் சாந்தமாய் பதில் கூற,

“எப்படி எப்படி? நீ என்னைக் கூட்டிக்கிட்டு இமயமலை ஏறப் போறியா?” அவன் கேள்வி முற்றுப் பெறாமலேயே அவன் வலியில் துடிக்க, வீட்டிற்குள் ஓடி மருந்து கிட்டைத் தூக்கிக் கொண்டு ஓடி வந்தவள், அவசர அவசரமாகச் சிரிஞ்சை ஸ்டெரிலைஸ் செய்து அவனுக்குச் செலுத்த வேண்டிய மருந்தை செலுத்தி, தன் மடியில் கிடந்தவனை பார்த்து அவள் பாடத் தொடங்க அந்தப்பாடல் அவனைக் கிறங்கடித்தது!

“கண்ணான கண்ணே கண்ணானக் கண்ணே என்மீது சாயவா
புண்ணான நெஞ்சை பொன்னான கையால் பூப்போல நீவ வா!
நான் காத்து நின்றேன் காலங்கள் தோறும் என் ஏக்கம் தீருமா?
நான் பார்த்து நின்றேன் பொன்வானம் எங்குமென் மின்னல் தோன்றுமா?
கண்ணீராய் மேகங்கள் தூவும் கண்ணீர்சேரும் கற்கண்டாய் மாறுமா?
ஆராரிராரோ ராரோராரோ ஆராரிராரோ ராரோராரோ
! தொடரும்
Super nice
 

Advertisement

Top