Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

தருதரன் - பாகம் 1

Advertisement

Hariharan

Member
Member
சகாப்தன், வெளியே பதைபதைப்போடு காத்துக்கொண்டிருந்தான். அறைக்குள் ஓலமும் 'உஷ்'னமும் ஓரளவு அடங்கியிருந்தது. அவன் பரபரப்பு விண்ணை எட்டியது. சாரல் முடிந்து அமைதிக்கு பின் சடேரென சல சலவென்று பொழியும் மழைச்சாரல் போல் வந்தது அவ்வழுகுரல். எச்சில் மென்று, வாயில் படரி, உள்ளே விழுங்கி, தொண்டை அடைத்து, விக்கி விம்மி வந்தது அவ்வழுகுரல். சகாப்தனுக்கு படபடப்பு இன்னும் அதிகரித்தது. லேசென திறந்த அவ்வரைக் கதவழியே வந்த பெண் அவள் புழுக்கூட்டை போல் துணியால் சுற்றியிருந்த அக்குழந்தையை அவனிடம் நீட்டினாள். சகாப்தன் அக்குழந்தையின் முகத்தை கூட பார்த்தானோ இல்லையோ யாம் அறியோம், ஆனால் வேக வேகமாக அதன் தலையை சுற்றியிருந்த துணியை விளக்கி தலை முடியை உன்னிப்பாக கவனிக்கலானான். அவன் தேடியது கிடைத்தது போலும். உற்சாகம் பொங்க "ஆஹா!", என்று துள்ளி குதித்தான்.

"இவனே! இவனே எனக்கடுத்த வாரிசு!", என்று கம்பீரமாக கர்ஜித்தான்.

"என்ன சொல்றீங்க, அரசே?", என்று அருகில் இருந்த மந்திரி விளங்காமல் விளித்தான்.

"இதோ பார். தலையில்", சகாப்த்தன் சுட்டிக்காட்டிய இடத்தில் ஒரேயொரு முடி மட்டும் நல்ல இரத்தச் சிவப்புச் சாயலில் பளபளத்தது. "சிவப்புக் கூந்தல். நம் முன்னோர்கள் சொல்லி வைத்தது போலவே. இவனே நம்மை காக்க வந்த அவதாரம்!", என்று அக்குழந்தையை வானில் உயர்த்தி பிடித்து மூர்க்கமாக கத்தினான்.

"ஆனால் அரசே… உங்கள் மூத்த குமாரர்கள்…"

"இந்நாட்டை விட்டு வெளியேற வேண்டும். மூத்தவன் இருக்கையில் இளையவன் அரியணை ஏறுவது குலத்துக்கே கேடு."

மயான அமைதி அங்கு நிலவியது. தூரத்தில் பல பிரதேசம் கடந்து கலைத்து வந்த காற்றானது அவர்களை ஆரத்தழுவிச் சென்றது. கூடவே ஒரு மையில் இரகையும் அக்காற்று அழைத்து வந்திருந்த நிலையில் அவ்விரகு அக்குழந்தையின் அழுதுச் சிவந்த முகம் மேல் அழகாக அமர்ந்தது.

அதை பார்த்த சகாப்த்தன், "நல்ல சகுனம். இறைவன் அருள் புரிந்துவிட்டான். இப்போதே இவனுக்கு பெயரை சூட்டி விடுகிறேன். இன்றிலிருந்து இவன்… "

பெயரை கூறி முடிப்பதற்குள் அருகிலிருந்த பெண் தாழ்மையாக தடுத்தாள். "மன்னிக்கவும் அரசே… பிறந்திருப்பது பெண் குழந்தை…"

சகாப்த்தன் தலை குனிய அவன் முகத்தில் இருந்த பிரகாசம் மங்கி இருண்டது. பின்னர் சட்டென நிமிர, அவன் முகம் ஆயிரம் சூரியனை போல் ஜொலித்தது. "அற்புதம்! மிக அற்புதம்! என் சந்தோஷம் இரட்டிப்பாகிவிட்டது!"

சுற்றியிருந்தவர்கள் ஒன்றும் விளங்காமல் விழித்தனர்.

மன்னர் கூறினார்: "ஓர் ஆணுக்கு நிகரான வீரமும்; ஓர் ஆணையே விஞ்சிய சமயோசிதமும் பொருந்தியவர்கள் பெண்கள் அன்றி வேறு யாராக இருக்க முடியும்?"

"இப்போதே இவள், என் மகளுக்கு பெயர் சூட்டுகிறேன்!"

அக்குழந்தையின் காதில் ரகசியமாக அப்பெயரை மன்னர் ஓதினார். குழந்தை அப்பெயரை ஏற்றுக்கொண்டதுபோல் சிரித்தது.

அரண்மனை மாடம் இவ்விதம் மகிழ்ச்சியில் தழைக்க, வாசலில் மூவர் எங்கோ புறப்பட தயாராய் இருந்தனர்.

மன்னன் சகாப்தன் அவர்களைக் காண கீழிறங்கி வந்தான். அம்மூவரும் பவ்வியமாக கை கூப்பி வணங்கினர். "தந்தையே. ஆசிர்வதியுங்கள்", என்று அவர் பாதத்தை தொழுதனர். சகாப்தன் அவர்களை சற்றும் கவனிக்காமல் வெளியே நடந்தான். மூவரும் பின்னாலேயே தொடர்ந்தனர்.

அரண்மனை மிக விசாலமாக, தங்க நிறத்தில் ஜொலித்தது. அதை சுற்றி பல சிரிய மாட மாளிகைகள், ஒவ்வொரு மாளிகைக்கும் துணையாக, தோரணமாக தோட்டங்கள். ஆங்காங்கே அழகிய வேலைப்பாடுகள் அமைந்த பளிங்குக் குளங்கள். மன்னர் அவையனைத்தையும் கடந்து கோட்டை மதிலை ஒட்டி இருந்த ஒரு மரத்தடியில் அமர்ந்தார். அம்மரம் விசித்திரமான தன்மை கொண்டிருந்தது. அதன் தண்டு, வைரத்தை உருக்கி வார்த்தது போன்ற வெள்ளை நிறத்திலும்; இலைகள் நல்ல இரத்தச் சிவப்பு நிறத்திலும்; பார்ப்பதற்கே பிரமிப்பு ஊட்டும் தோற்றத்தில் அமைந்திருந்தது. மன்னர் அம்மரதில் சாய்ந்து கொஞ்ச நேரம் கண் அசந்தார். அந்த மூன்று வாலிபர்களும் அவரையே பார்த்த வண்ணம் கால் கடுக்க நின்றுகொண்டிருந்தனர். தொண்டை கணைக்கும் சத்தம். "கிளம்பிவிட்டீர்கள் அல்லவா?", என்று மன்னர் கேட்டார்; கண் மூடியவாரே.

மூவரும் ஒருமித்தமாக "ஆம் தந்தையே", என்று பதிலளித்தனர்.

"கிளம்புங்கள்."

அவ்வளவு தான். அதற்கு மேல் ஒருவார்த்தை கூட அங்கு பரிமாற்றி‍க்கொள்ளப்படவில்லை. அவ்வளவே அவர்கள் மூவருக்கும் அவர்கள் தந்தைக்கும் இடையே இருந்த பந்தம். விதியை நொந்து கொண்டு புறப்படலானர்.

அம்மூன்று சகோதரர்களுமே பதின் வயதை எட்டியவர்கள் போலத்தான் தோன்றினர். மூத்தவன், மூத்தோன் எனப்படும் சோமன்; இடையவன், இடையோன் எனப்படும் சேந்தன்; கடைசி சகோதரன், கடையோன் எனப்படும் தருதரன். முதல் இருவரும் விரு விருவென வேகமாக நடந்து முன்னேறி செல்ல, அவ்வேகத்திற்கு ஈடு தர இயலாமல் தருதரன் தடுமாறி நின்றான். மூட்டை பிடித்துக்கொண்டு குனிந்து மேலும் கீழுமாக மூச்சி வாங்கிக் கொண்டிருந்தான்.

இதை பார்த்த மூத்த அண்ணன்கள் அவனிடத்து திரும்ப சென்று ஓய்வெடுக்கும்படி கேட்டுக்கொண்டனர். அவன் வேண்டாம் என்று மறுத்துவிட்டான். "இன்னும் கொஞ்சம் தூரம் தானே? அறை காதம் நடந்தால் மாமாவின் வீடு வந்துவிடுமல்லவா? வாருங்கள், நான் சமாளித்து கொள்வேன்", என்று அவன் முந்திக்கொண்டு நடக்களானான். இரண்டடிக்கு மேல் எடுத்து வைக்க இயலவில்லை. அப்படியே தரையில் விழுந்துவிட்டான். மூத்தவனும் இலையவனும் ஒருவர் முகத்தை ஒருவர் மாறி மாறி பார்த்துக்கொண்டனர். "நீயே சொல்லிவிடு அண்ணா", என்று இடையன் தூண்டிவிட மூத்தவன் தருதரன் அருகில் ஒரு கால் ஊன்றி அமர்ந்தான்.

"தம்பி. நாம் எந்த மாமா வீட்டிற்கும் செல்லவில்லை", என்றான்.

"பின்?", தருதரன் விழித்தான்.

"மோட்சதிற்கு செல்கிறோம்"

தான் காதில் கேட்டது சரிதானா என்று அவனுக்கே விளங்கவில்லை.

"என்ன உலருகிறாய் அண்ணா? புத்தி மங்கிவிட்டதா?"

"நீயே சொல். இனி இங்கு இருந்து என்ன பிரயோஜனம்?". இரண்டாம் அண்ணன் சேர்ந்துகொண்டான்.

"வீட்டை விட்டு துறத்தியடிக்கப்பட்டோம். அதாவது, அவர்கள் துறத்துவதற்கு முன் மரியாதையாக நாமே விலகி வந்துவிட்டோம். நாம் மூவரும் இருக்க, அரியணையில் வேறொருவர் ஏறினால் குழப்பம் வராதா? இனி எங்கு போவோம்? என்ன செய்வோம்? இவ்வுலகில் ரசிக்கத்தான் என்ன இருக்கிறது? நாம் இருப்பதாலும் எந்த மாற்றமும் நேரப்போவதில்லை; நாம் இல்லாமல் போனாலும் எந்த குடியும் முழுகிவிட போவதில்லை. ஆதலால் இது ஒன்றே ஒரே வழி"

"அண்ணா. எனக்கு ஒன்றும் விளங்கவில்லை. எதற்கு இந்த முடிவு? இதை என்னிடம் ஏன் முன்னமே சொல்லவில்லை?", என்று தருதரன் பதட்டத்தில் நா தழுதழுக்க கேட்டான்.

"இதோ. இவ்வாறு நீ அஞ்சுவாய் என்று தான் சொல்லவில்லை"

"ஆம் தம்பி. எங்களை காட்டிலும் உனக்கு தான் இங்கு வாழ அறுகதையே இல்லை. என்ன திறன் உன்னிடம் இருக்கு சொல்? பாட வருமா? ஆட வருமா? பத்து காதம் மூச்சு வாங்காமல் ஓடத்தான் வருமா?"

"குதிரை ஓட்டச் சொன்னால் குதிரையை பார்த்து நீ ஒடுவாய்"

"பெரும் யானையில் இருந்து சிறு பூச்சிவரை கண்டால் உனக்கு பயம்"

"நான் சொல்வதை கேள். சூழ் சூழ் பாழ் உலகிது. சுற்றிலும் வஞ்சம். யாரும் யாருக்கும் உண்மையாய் இல்லை. அதுவாவது பரவாயில்லை. தங்களுக்கு தாங்களே உண்மையாய் இல்லாமலும் கூட சில மூடர்கள் இருக்கிறார்கள். முன்னே போனால் நட்பாய் சிரிப்பார்கள். முதுகை பார்த்து எள்ளி நகைப்பர்கள். தேவையா? நாங்களே வெருத்துவிட்டோம். உன்னால் தனியாய் ஒரு நிமிடம் கூட தாக்கு பிடிக்க முடியாது. உன் பெயரிலேயே தருதிரம் இருக்கிறது"

"ஆம். அது ஒரு தனி கதை. உனக்கும் தெரியுமே. நீ பிறக்கும்போது ஒரு கருப்பு பூனை எங்கோ இருந்து வந்து உன் கன்னத்தை நக்கிச் சென்றது. அன்று பீடித்த தருதரம் தான்; இன்றளவும் உனை விட்டபாடில்லை. நீ தொட்டதெல்லாம் நாசம். எடுத்த காரியம் எதுவும் ஈடேராது"

"அதனால் நான் சொல்வதை கேள். ஒன்றாக சொர்கம் செல்வோம் வா"

'வா அப்பனே! வா! எங்களோடு புறப்படு! ஒன்றாய் சாவோம் வா!'. கோர அகோர முகத்துடன் அவ்விரு சகோதரர்களும் தருதரனை நோக்கி வந்தனர். தினரிவிட்டான் அவன். நெருங்க நெருங்க, இரு பெரும் கரிய நிழல் உருவமாய் அவர்கள் உருவெடுக்க அவன் செய்வதறியாது திக்குமுக்காடி போனான்.

வேண்டாம் என்பதுபோல் இரு கைகளை ஆட்டி "போதும் நிறுத்துங்கள்!", என்று அலறினான்.

"நிறுத்துங்கள் இந்த பைத்தியக்காரத்தனத்தை!"

"என்ன சொன்னாய்? அடேய் மூடனே!"

மூத்தவன் தருதரனின் சட்டையை பிடித்து தூக்கினான்.

"சரி நீயே சொல் என்ன செய்யவேண்டும்? ஆண்டியாக சுற்றலாமா? இந்த பாழும் உலகை? ஹான்? அதற்கும் சிரிப்பார்களடா! எள்ளி நகையாடுவர்!"

"நிறுத்து! நிறுத்து! போதும்! சந்தேக பெருவழியே! உன் பார்வை எப்போதும் நல்ல விஷயத்தை நோக்கி செல்லவே செல்லாதா? ஆம் இங்கு தீய பல கொடிய விஷயங்களும் இருக்கத்தான் செய்கிறன. அதை மட்டுமே உத்து பார்த்துக் கொண்டிருந்தால் இப்படி புலம்பத்தான் வேண்டும். நல்ல விஷயத்தை கொஞ்சம் நோக்கிப்பார். இவ்வுலகே சொர்கமாய் தெரியும்"

"அதைத்தான் இத்தனை ஆண்டு காலமாக தேடி வெருத்துவிட்டேன் என்கிறேனே! அப்படி நான் காணாத என்ன நல்ல விஷயத்தை கண்டாய்யாக்கும் நீ?"

"ஓர் ஆணுக்கு வேறென்ன நல்ல விஷயம் இருக்கப்போகிறது. பெண் தான். வாரும் என்னோடு. என் காதலியை அறிமுகம் செய்து வைக்கிறேன்"

இருவருமே ஆச்சர்யத்தில் சிலையாய் சமைந்து நின்றனர். அவர்கள் கரத்தை பற்றிக்கொண்டு இவன் இழுத்துச் சென்றான். நடந்து நடந்து ஒரு அடர்ந்த வனாந்திறத்துக்கு கூட்டி வந்தான். வனம் மிக மிக அமைதியாய் காட்சியளித்தது. அவ்விருவரும் அச்சத்தில் நடுங்கிக்கொண்டே வந்தனர்.

"அப்பனே! இன்னும் எவ்வளவு தூரம்?"

"ஆம்! எவ்வளவு தூரமடா? ரகசியமாக கூட்டிச்சென்று எதேனும் மிருகத்துக்கு பலியிட என்னமா என்ன?"

மூத்தவனும் இடையவனும் இப்படி மாறி மாறி புலம்ப அவனுக்கு சிரிப்புதான் வந்தது. அவ்வனத்தின் நடு பகுதிக்கு வந்த நிலையில் ஒரு அடர்ந்த புதரை விளக்குகிறான். உள்ளே ஒரு கோவில் போன்ற அமைப்பு இருக்கிறது. அதாவது ஒரே ஒரு கற்சிலை. அதை காக்க சுற்றி சுவர் இல்லாமல், நான்கு தூண்கள், ஒரு மேல் கூரை மட்டுமே கொண்ட ஒரு மண்டபம்.

அச்சிலை முன் மூவரும் வந்த நிலையில் "இதோ என் காதலி", என்று சிலையை தருதரன் சுட்டிக்காட்ட; மூத்தவர்கள் இருவரும் குழப்பத்தில் விழிக்க; தன் சகோதரனின் மன ஆரோகியம் பற்றிய கவலை ஒரு பக்கம் இருக்க; "என்ன நினைக்கிறீர்கள்?", என்று அவன் தொடர்ந்து கேட்ட கேள்விக்கு "அழகாய் இருக்கிறது", என்று தங்களையே அறியாமல் பதில் கூறினர்.

தருதரன் அச்சிலையின் முகத்தை பரிதாபமாக வருடினான்.

"அவள் இதழில் படரும் சிரிப்பை மட்டுமே நீங்கள் கண்டீர்கள் போலும். அவள் விழியில் வழியும் வருத்தம் உங்கள் கண்களுக்குப் புளனவில்லையோ?", என்று சோகமாக வினவினான்.

இவன் என்ன சிலையை காதலிக்கிறேன் என்கிறான்? அவர்களுக்கு ஒன்றுமே விளங்கவில்லை. தருதரனின் மனோநிலையை புரிந்துகொள்ள அவ்விரு மூத்த சகோதரர்களும் முயற்சி செய்தனர். ஆனால் இவனோ அவர்களை கண்டுகொல்வதாகவே தெரியவில்லை. உன்னிப்பாக வேறு எதையோ கவனிப்பது போல் தோன்றியது. சட்டென சிலைமுன் திரும்பினான். மெல்லிய ஒரு குரல். பாம்பு பேசுவது போல். "சாவை கொண்டுவா; என்னை தருகிறேன்!", என்றது. 'நீயா பேசினாய்?', என்பது போல் அச்சிலையை நோக்கினான். மீண்டும் அதே குரல்: "சாவை கொண்டு வா; என்னை தருகிறேன்!". அடுத்த நொடி தன் கையில் இருந்த வாளை எடுத்து தன் கழுத்தை அறுத்துக்கொண்டான்.
 
Last edited by a moderator:
Top