Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

தருதரன் - பாகம் 5

Advertisement

Hariharan

Member
Member
ஒருவழியாக! தான் மீட்க வந்த அனைத்தும் மீட்டுவிட்ட நிலையில் திரும்பி அந்த காட்டிற்குள், அந்த புதர்களுக்கு அப்பால், அந்த நான்கு தூண்கள் ஒரு கூரை கொண்ட அந்த மண்டபத்தை அடைந்தான் தருதரன்.

சிலையின் தலையை முதலில் பொருத்தினான். பின்னர் அந்த இரண்டு மாலைகளையும் அவள் கழுத்தில் அணிவித்தான். அடுத்த நொடி பெரும் வெளிச்சப் பெருவெடிப்பு அங்கு நிகழ்ந்தது. அவன் கண்கள் கூச, சிமிட்டிக்கொண்டே ஓரக்கண்ணால் அந்த அற்புதத்தை ரசித்தான். ஒளி வடிவில் அவன் காலனிடத்தில் கண்ட அப்பெண், உருவம் பெற்று தேவ கன்னிகையாக அவன் முன் காட்சியளித்தாள். அவனை கண்ட அடுத்த நொடி பறந்து வந்து அவனையவள் கட்டிக்கொண்டாள். எத்தனை யுகங்களாக தேக்கி வைத்த ஏக்கமோ… அவள் பாசத்தில் அவன் எலும்புகள் எல்லாம் நொறுங்கிவிடும் போல் அவனுக்கு தோணும் அளவு இருக தழுவினாள்.

இருவரும் இவ்வாறு இன்ப மழையில் தழைத்து நிற்க, அவர்கள் இருவரையும் தூரத்தில் ஒரு வேடன் குறி வைத்து காத்துக்கொண்டிருந்தான். எதிர்பாரா சமயத்தில் அவன் வில்லில் இருந்து புறப்பட்ட அவன் அம்பானது தருதரனின் முதுகை துளைத்து இதையத்தை தைத்தது. ஆனால் பயப்பட தேவையில்லை… அது வேறு யாரும் இல்லை... அவன் மன்மதன் எனப்படும் காம வேடனே. மற்றும் அவன் எய்தது அவனது பிரசித்தமான மலர்கணைகயை மட்டுமே. அந்த அம்பு தருதரனை துளைத்த நொடியில் அவனுக்கு தன் முன் ஜென்ம நினைவுகள் எல்லாம் வெள்ளம் போல் பாய்ந்து அவன் மனதிற்குள் புகுந்தது.

காலமறியா ஆண்டில் நடக்கும் இக்கதைக்கும் பல ஆண்டுகளுக்கு முன், புவியை சுற்றி பார்க்க வந்த ஒரு தேவ கன்னிகையை வேடன் ஒருவன் பறவை என நினைத்து தன் அம்பால் வீழ்த்தி விடுகிறான். வீழ்ந்த அந்த மங்கையை பார்த்த உடனே அவனுக்கு அவள்மேல் காதல் மலர்ந்தது. அவளை தன் வீட்டிற்கு கொண்டு சென்று சிகிச்சை அளித்து குணப்படுத்தினான். கன்னிகை சுயநினைவு அடைந்ததும் தன் தவறை கூறி மன்னிப்பு கேட்கிறான். அவளோடு காலம் உள்ளவரை சந்தோஷமாக வாழவேண்டும் என்ற அவன் அடிமன ஆசையையும் அவளிடம் சொல்கிறான். அவன் நேர்மையும், காதலும் புரிந்த கன்னிகை அவன் ஆசையை நிறைவேற்றினாள். அவனையே மணந்து புவியிலேயே தங்கினாள். அவனோடு இன்புற்று இருப்பது போக, தன் தெய்வ சக்தியை கொண்டு மக்களுக்கும் பல உதவிகள் செய்து அவள் தன் காலத்தை கழித்து வந்த நிலையில், புவி மாந்தர்கள் அவளிடம் பெரும் பக்தி கொண்டு அவளுக்கு புவிவீழ்ந்தாள் மங்கை என பெயர் சூட்டி வணங்க ஆரம்பித்தனர்.

இவ்வாறாக காலம் இன்பம், இன்பம், இன்பம் மட்டுமே என்று நகர்ந்து சென்று கொண்டிருக்கையில் முட்டுக்கட்டையாக வந்தது ஒரு கொடிய நோய், அவ்வேடனுக்கு பெரும் துன்பமாக. அந்த நோயால் தாக்கப்பட்டு வேடன் படுத்த படுக்கையானான்.

தன் சக்திக்கும் அப்பாற்பட்ட நோய் அது என்று புவிவீழ்ந்தாள் புரிந்துகொண்டாள். தன் கடைசி காலத்தை வலியும் வேதனையுமோடு கழித்து கடைசியாக அமைதியில், தன் மனைவியின் மடியிலேயே உயிர் நீத்த போது வேடன் வயது முப்பது. புவி வீழ்ந்தாளோடு அவன் கழித்தது வெறும் ஆறு ஆண்டு காலமே. ஆனால் அவள் வயது ஒரு நொடி கூட கூடியதாக தெரியவில்லை. அவள் தான் தேவ கன்னிகை ஆயிற்றே.

தன் இறுபத்திநான்கு ஆண்டு கால வேக வைக்கும் வெருமையில் குளிர் காற்றாக வந்த அந்த மங்கைக்கு நன்றி சொல்லி அவனை அழைத்து செல்ல வந்த காலனோடு அவன் புறப்பட தயாரானான். கண்ணீரும், கவலையுமாக அம்மங்கை அவனிடம் "கொடுத்த வாக்கை இப்படி மீறுவது உமக்கே ஞாயமா?", என்று கேட்டாள்.

வேடனுக்கு அவள் என்ன சொல்கிறாள் என்பது விளங்கவில்லை.

"காலம் உள்ளவரை சந்தோஷமாக வாழ்வோம் என்றல்லவா வாக்களித்தீர்! இப்போது என்னை மட்டும் அனாதையாக விட்டு விட்டு செல்கிரீரே இது தகுமா?!"

அவனை அழைத்து செல்ல வந்த காலனிடமும் அவள் முறையிட்டாள்.

"கால தேவரே! என் கணவரோடு நான் காலம் உள்ளவரை சந்தோஷமாக வாழ அனுமதியுங்கள்! தையை கூர்ந்து!", என்று மன்றாடி தரையில் வீழ்ந்து கெஞ்சினாள்.

காலன் மருமொழியாக "தேவி! உன் ஆசையை நிறைவேற்றினால் என் வேலை பாழ் படும்! தன் காலம் முடிந்த உயிர்களை அழைத்து செல்வதே என் வேலை! இந்த உயிரை எடுத்து சென்றால் தான் என்னால் அண்டத்தின் சமநிலையை காக்க முடியும்!", என்றார்.

"அப்படியானால் என் உயிரையும் சேர்த்து எடுத்து கொள்ளுங்கள்!", என்றாள் அம்மங்கை. "நாங்கள் இருவரும் வெவ்வேறு அல்ல. நான் ஒரு பாதி என்றால் அவர் மருபாதி".

"முட்டால் தனமாக பேச வேண்டாம் தாயே! உனை பார்த்தால் எனக்கும் பரிதாபமாக தான் உள்ளது. சரி... இப்படி பட்ட தூய காதலை பிரித்த பாவம் எனக்கு வேண்டாம்! ஒன்று செய்வோம்! ஒரு போட்டி வைத்து கொள்வோம்! இந்த உயிரை இப்போது நான் விட்டு விடுகிறேன். இது மீண்டும் பிறந்து உனை தேடி வந்தால் நீ அதோடு மீண்டும் ஒன்றாக வாழலாம். அப்படி அது உன்னை தேடி வராவிடில் அந்த உயிர் எனக்கு சொந்தம். அப்போது நீ விட்டுக்கொடுத்து தான் தீர வேண்டும். சம்மதமா?", என்று கேட்டார்.

ஒரு நொடி கூட வீணடிக்காமல் "சம்மதம்", என்றாள்.

"ஆனால் ஒரு சிக்கல். இந்த உயிர் இல்லையென்றாலும் ஏதேனும் ஓர் உயிரை கொண்டு சென்றால் தான் அண்டம் சமநிலை குளையாமல் இயங்க முடியும். இல்லையேல் ஒரு பக்கம் கனத்த தராசு போல் கவிழ்ந்து விடும். ஆகையால் இந்த உயிர் என் உடமையா அல்ல உன் உடமையா என்று தீர்மானம் ஆகும்வரை உன் உயிர் என்னோடு வர வேண்டும்", என்றார்.

அதற்கும் அவள் தயக்கமின்றி ஒப்புக்கொண்டாள். அதன் பேரில் அவள் உயிர் உடலை விட்டு பிரிக்க பட்டது. அவள் உடல் சிலையாக சமைந்து நின்றது.

இந்த முழு வரலாறும் தருதரன் கண் முன்னே வந்து ஒரு நொடி பொழுதில் அவனுக்கு எல்லாவற்றையும் நினைவூட்டி விட்டு சென்றது.

"நாம் இருவரும் ஜென்ம காதலர்களா?", என்று அந்த பெண்ணை கேட்டான்.

அவளும் ஆம் என்று மகிழ்ச்சி கலந்த ஆனந்த கண்ணீரோடு தலையசைத்தாள்.

"இப்போதும் நான் சாதாரண மனிதன் மட்டுமே. என் காலம் மிஞ்சி போனால் ஐம்பது ஆண்டுகள் தான் நீடிக்கும். அதன் பிறகு என்ன செய்வாய்?"

"மீண்டும் காலனிடம் சவால் விட்டு உன்னை மீட்பேன்", என்று சிரித்து கொண்டே பதிலளித்தாள்.

"அம்மையே! தேவியே! என் உள்ளம் கவர்ந்த எனதன்பு காதலியே! உனை நீங்கி நான் நரகம் செல்ல நேரினும் உனக்காக மீண்டு வருவேனடி! இது சத்தியம்", என்று கூறி அவளை ஆர தழுவிக்கொண்டான் தருதரன்.

ஜென்ம ஜென்மமாய் நீளும் ஒரு காதல் காவியம் அங்கு துளிர்விட்டு மலர ஆரம்பித்தது.

கடையோன் எனப்படும் தருதரனும், புவிவீழ்ந்தாள் மங்கையும் காலம் கனிந்தவரை சந்தோஷமாக வாழ்ந்தனர்.
 
Last edited by a moderator:
Top