Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

தள்ளாடும் கரையில் நின்று - 18

Advertisement

துமி

Well-known member
Member
அத்தியாயம் 18

மாணிக்கம் தன் வீட்டின் ஊஞ்சலில் ஆடிக் கொண்டிருந்தார்.

“ஐயா வர சொன்னீங்களாம்…” என்று பரமசிவம் பொய்யான பணிவுடன் பேச ஆரம்பித்தான்.

“ஆமா ஒரு முக்கியமான விசயம். அதான் வர சொன்னேன். இன்னொரு ஆளும் வர வேண்டியது இருக்கு. வந்ததும் பேச ஆரம்பிச்சடலாம்.” என்றார் மாணிக்கம்.

மாணிக்கம் அப்படி சொல்லி அரைமணி நேரம் கடந்தே, வினோதனின் தாயார் தெய்வானை அங்கு வந்து சேர்ந்தார்.

“உங்களுக்கும் என் மாப்ளைக்கும் தகராறுனு எனக்கு தெரியும்‌.” என்று மாணிக்கம் பேச்சை ஆரம்பிக்க,

“ஐயா உங்க மாப்பிள்ளையா தான் வந்து பிரச்சனையை ஆரம்பிச்சது. நான் வேணும்னு எதுவும் பண்ணலங்க.” என்று பம்மினான் பரமசிவம்.

கேரளாவிலே தங்கிவிட்டவனை ஆள் அனுப்பி அழைத்து வர சொல்லி இருந்தார் மாணிக்கம்.

“யார்ரா இவன்? நான் முழுசா பேசறதை கேளுங்க…” என்ற மாணிக்கம்,

“உங்களுக்கும் என் மாப்ளைக்கும் எப்படி ஆகாதோ அப்படி தான் எனக்கும் அவனுக்குமே ஆவாது. என் தொழிலை என்கிட்ட இருந்த பறிச்சவன் அவன். இத்தனை நாள் சரியான நேரத்துக்காக தான் காத்துட்டு இருந்தேன். இப்ப தான் எல்லாம் கூடி வந்திருக்கு. தைரியமா அவன் மேல கம்ப்ளெயின்ட் குடுங்க. மிச்சத்தை நான் பாத்துக்கறேன்.” என்றார்.

“உங்க குடும்ப தகறாருல எங்களை இழுக்கறீங்களே ஐயா. நாளப்பின்ன நீங்களே ஒன்னு சேந்துட்டா எங்க பொலப்பு என்னங்க ஆகுறது?” என்று பின் வருவதை யோசித்து கேட்டார் தெய்வானை.

“அவனை ஆயுசு முழுக்க ஜெயில்ல வச்சி பாக்கனும்ன்றது தான் என்னோட ஆசையே! நீங்க கவலைபடாம அவன் மேல கம்ப்ளையின்ட்ட குடுங்க… மத்ததெல்லாம் நான் பாத்துக்கறேன்.” என்று வாக்குறுதி கொடுத்தார் மாணிக்கம்.

“ஐயா நான் அந்த பொண்ணுகிட்ட…” என்று மண்டையை சொறிந்தான் பரமசிவம்.

“அதெல்லாம் நான் பாத்துக்கறேன். என் பொண்டாட்டியை விட்டு குடும்ப பொண்ணு பேரு இப்படி கெட்டு போவலாமானு கேட்டு அதைலாம் ஒன்னும் இல்லாம பண்ணிடறேன். நீ நான் சொன்னதை மட்டும் செய்!” என்று கட்டளை இட்டார் மாணிக்கம்.

தெய்வானைக்கு நந்தினி மற்றும் பச்சுவின் மேல் இருந்த கோபமும், பரமசிவத்திற்கு அவன் மீது இருந்த பகையும் மாணிக்கத்தின் திட்டத்திற்கு உதவ சொல்லியது.

முதலில் மாணிக்கம் சென்று கொலை முயற்சி வழக்கை பதிவு செய்ய, பின்னாலே வந்து, தெய்வானை கொலை மிரட்டல் வழக்கை பதிவு செய்தார்.

பச்சு தனக்கு வந்த தகவலின் படி தேவையான விசயங்களை நம்பகமானவர்களிடம் தெரிவித்தவன், நந்தினியிடமும் நிலவரத்தை விவரித்தான்.

இன்றோடு, பச்சு கைதாகி மூன்று நாள்கள் ஆகின்றன. 24 மணி நேரத்தில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு, 15 நாட்கள் ரிமாண்டில் அவனை வைத்துள்ளனர். என்ன செய்வதென்றே தெரியாமல் பித்து பிடித்தது போல அமர்ந்திருந்தாள் நந்தினி.

“அக்கா இப்படியே உக்காந்திருக்காத கா. பாக்கவே கஷ்டமா இருக்கு. அண்ணே எப்படினாலும் வெளிய வந்திடும்.” என்று சொன்னான் கௌசிக்.

பதில் பேசாமல் அமர்ந்திருந்தாள் நந்தினி.

“அண்ணே சொன்ன வக்கீல் திடீர்னு ஊருல ஒரு வேலை இருக்குனு போயிட்டாரு கா. இல்லைனா அப்பவே அண்ணனை வீட்டுக்கு கூட்டிட்டு வந்திருக்கலாம்.” என்று விஜி ஆறுதல் சொன்னான்.

வக்கீல் என்ற வார்த்தை நந்தினி மந்தமாய் இருந்த மூளையை குத்தியது.

“அவரு எப்ப வருவாரு கேட்டியா?” என்று கௌசிக் விஜியிடம் கேட்டான்.

“இன்னும் இரண்டு நாள் ஆவுமாம் டா. வேற வக்கில்ல பாக்கலாம்னு சொன்னாலும் அண்ணே வேண்டாம் அந்த வக்கீலை தான்‌ பாக்கனும்னு சொல்லீடுச்சு.” என்று வருத்ததோடு சொன்னான் விஜி.

இதில் ஏதோ உள்ளர்த்தம் இருப்பதாக தோன்றியது நந்தினிக்கு.

“விஜி அந்த வக்கீல் வந்ததும் சொல்லு… நாம போயி அவரை பாக்கலாம்.” என்றாள் நந்தினி.

“நீங்க எதுக்கு அக்கா அலைஞ்சிட்டு… நாங்க பாத்துக்கறோம்.” என்று கௌசிக் சொல்ல,

“எனக்கு ஒன்னுனா உங்கண்ணன் அலைவாரா மாட்டாரா?” என்று கேட்க அவர்களால் பதில் சொல்ல முடியவில்லை.

“இருந்தாலும் இந்த மாதிரி நேரத்துல எதுக்குகா…” என்று விஜி இழுக்க,

“என் பிள்ளையும் இதெல்லாம் தெரிஞ்சிக்கட்டும் டா. கஷ்டப்படாமலே வளந்தா உருப்பட முடியாது.” என்று அவள் சொல்ல, மற்றவர்கள் எதுவும் பேசவில்லை.

இரண்டு நாட்களை கணவனை நினைத்தே ஓட்டினாள். வயிற்றில் குழந்தை இருந்ததால், அதற்காக வேண்டி நேராநேரத்திற்கு அன்ன ஆகாரம் எடுத்துக் கொண்டாள் நந்தினி. கணவனின் நினைவை பொருட்டு, அவள் குழந்தையை தண்டிக்கவில்லை.

பச்சு சொன்ன வக்கீல் வந்துவிட்டதாக தகவல் வந்ததும், நந்தினி கௌசிக்கையும் விஜியையும் அழைத்துக் கொண்டு அவரை பார்க்க சென்றாள்.

“உங்க ஹஸ்பண்டை எதுக்கு அரெஸ்ட் பண்ணிருக்காங்கனு தெரியுமா?” என்று அந்த வழக்கறிஞர் சந்தான மூர்த்தி கேட்டதும், எதுவுமே தெரியாமல் திருதிருவென விழித்தாள் நந்தினி.

“என்னம்மா இந்த காலத்து பொண்ணு நல்லா விவரமா இருக்க வேணாமா? இப்படியா எதுவுமே தெரியாம இருக்கறது?” என்று சந்தான மூர்த்தி கேட்க, குன்றி போய் விட்டாள் நந்தினி.

தனக்கு இப்படி ஒன்று நேர்ந்திருந்தால், கணவன் இப்படியா தன் நினைப்பில் ஒன்றுமே செய்யாமல் இருப்பான் என்ற கேள்வி அவளை வாட்டியது. அதையெல்லாம் துடைத்து விட்டு, கணவனை காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணத்தோடு, முழுமூச்சாக நிமிர்வுற்றாள் நந்தினி.

“இப்ப என்ன நான் பண்ணனும் சொல்லுங்க சார்.” என்று சொல்லும் பொழுதே நந்தினியின் முகத்தில் அதி தீவிர தன்மையும் உடன் தெளிவும் இருந்தது.

“முதல்ல போலிஸ் ஸ்டேஷன் போயி எப்ஐஆர் காப்பியை வாங்கனும். உங்க ஹஸ்பன்ட் மேல என்னலாம் ஜார்ஜ் ஷீட் போட்டுருக்காங்கனு தெரிஞ்சிக்கனும்.” என்று சந்தான மூர்த்தி சொல்ல, தலையை ஆட்டினாள் நந்தினி.

அனைவரும் காவல் நிலையத்திற்கு சென்றனர். சந்தான மூர்த்தி முதல் தகவல் அறிக்கையின் நகலை கேட்டு வாங்கிக் கொண்டிருக்க, நந்தினி வெளியே கடும் வெயிலில் நின்றுக் கொண்டிருந்தாள்.

“அக்கா நீ வீட்டுக்கு போக்கா… அண்ணனை அப்படியா நாங்க விட்டுருவோம்?” என்று கௌசிக் கேக்க, பதிலே சொல்லாமல் அழுத்தமாக நின்றாள் நந்தினி.

சந்தான மூர்த்தி கூட வந்து சொல்லிப் பார்த்தார். அசையவே இல்லையே அவள்!

முதல் தகவல் அறிக்கையின் படி, பச்சையப்பன் மீது கொலை முயற்சி மற்றும் கொலை மிரட்டல் என இருவேறு குற்றங்களின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது. வினோதனின் தாயை பச்சு அடித்தது பற்றி இன்றளவும் நந்தினிக்கு தெரியாமல் இருக்கவே, அது அவளுக்கு அதிர்ச்சியாக இருந்தது!

“இதெல்லாம் எப்பவோ நடந்தது. இப்ப உங்க ஹஸ்பன்ட் மேல கம்ப்ளெயின்ட்டா பண்ணிருக்காங்கனா அதுலையே தெரியுது, அவங்க இதெல்லாம் வேணும்னா தான் செய்யறாங்கனு. இதுக்கு பின்னாடி எதாவது மோடிவ் இருந்தாகனும் இல்லைனா, இரண்டு பேரும் ஒரே நேரத்துல கம்ப்ளெயின்ட் குடுக்க வாய்ப்பில்லை.” என்று சந்தான மூர்த்தி சொன்னார்.

வக்கீல் பேச பேச, எங்கோ நிரடுவது போல தோன்றியது நந்தினிக்கு.

“உங்க ஹஸ்பன்டோட மாமா எக்ஸ் எம்எல்ஏ தானே? நாம வேணா அவரை வச்சி ட்ரையல் அப்போ மூவ் பண்ணுவோம்.” என்று சந்தான மூர்த்தி சொல்ல,

“வேண்டாம்.” என‌ அவசரமாக தடுத்தாள் நந்தினி. ஏனெனில், பச்சு எப்பொழுதும் சொல்லும், ‘என் மாமா குடும்பத்தை நம்பாத…’ எனும் வார்த்தைகள் அவள் மண்டைக்குள் ஓடியது‌. அப்பொழுது குழந்தை சட்டென உதைக்க, வயிற்றை பிடித்துக் கொண்டு அமர்ந்து விட்டாள் நந்தினி.

“என்னாச்சு மா? என்ன பண்ணுது?” என்று பதறிப் போய் கேட்டார் சந்தான மூர்த்தி.

பச்சுவின் வழக்கை போல எத்தனையோ பார்த்தவர். அவர் அனுபவத்திற்கு இதெல்லாம் தூசி தான். ஆயினும் இப்படி கர்பினியான மனைவி கணவனுக்காக அலைவது, பிடிவாதமாக காவல் நிலைய வாசலிலே நிற்பதெல்லாம் அவருக்கு புதிது.

ஒருவர் மீது வைக்கும் நேசமானது, குருட்டுதனமானதாகவும், முட்டாள்தனமானதாகவும் அதே சமயம் இந்த உலகிலே அதீத வலிமை வாய்ந்ததாகவும் இருக்கும் விந்தை, அறிவியலிற்கு கூட அப்பாற்பட்டது.

“ஒன்னுமில்லை சார். குழந்தை உதைக்குது அவ்வளவு தான்.” என்று வலி நிரம்பிய புன்னகையோடு அவள் சொல்ல, பார்த்துக் கொண்டிருந்த அனைவருக்குமே உள்ளம் கலங்கியது.

“நான் முதல்ல உங்க ஹஸ்பன்ட மீட் பண்ணி, அவர்கிட்ட டீட்டெயில்ஸ் கலெக்ட் பண்ணுறேன். அதுவரைக்கும் நீங்க வீட்டுல பொறுமையா இருங்க மா.” என்று வக்கீல் சொல்லி விட அதற்கு மேல் அவள் என்ன செய்ய?

சந்தான மூர்த்தி சொன்ன படி வழக்கு விசயமாக பச்சையப்பனை விசாரிக்க சென்றார்.

“உங்க மேல இருக்க இரண்டு கேசையும் நீக்கனும்னா கொஞ்சம் கஷ்டம் தான்‌. பரமசிவம் குடுத்ல கேஸ்ல நீங்க தான் அவரை அடிச்சிங்கன்றதுக்கு சாலிடான எவிடென்ஸ் எதுவும் இல்லை‌. ஆனா தெய்வானை குடுத்த கேஸ்க்கு நிறைய ஐ விட்னஸ் இருக்கு. அதை பிரேக் பண்ணுறது தான் ரொம்ப கஷ்டம். இந்த கேஸ்க்கு யாரோ பொலிட்டிக்கலாவும் பிரஷர்‌ போடுறாங்கனும் கேள்வி பட்டேன்.” என்று சந்தான மூர்த்தி ஆரம்பிக்க,

“நீங்க நினைச்சா முடியாதது இல்லை சார்.” என்றான் பச்சையப்பன் வினயமாக.

சந்தான மூர்த்தியின் மாமனார் கலியபெருமாள், அவர்கள் ஊரின் மாஜிஸ்ட்டரேட் ஆக உள்ளார் என்பதை தெரிந்துக் கொண்டு தான், சந்தான மூர்த்தி மட்டுமே தன் வழக்கில் வாதாட வேண்டும் என பச்சையப்பன் பிடிவாதமாக கூறியது‌.

“சோ எல்லாம் தெரிஞ்சி தான் ப்ளான் பண்ணிருக்கீங்க? பொலிடிக்கல் ஆளுங்க இன்வால்வ் ஆகிருக்கறதால செலவு பயங்கரமா ஆகும் பரவாலையா?” என்று சந்தான மூர்த்தி கேட்க,

“எவ்வளவு ஆனாலும் பரவால சார். நான் பாத்துக்கறேன். என் குழந்தை பொறக்கறதுக்கு முன்னாடி நான் வெளிய வந்திடனும் அது போதும் எனக்கு.” என்று சொன்னவளின் கண்களில் இருந்த தவிப்பு சந்தான மூர்த்திக்கு புரிந்தது.

சந்தான மூர்த்திக்கு சற்றே கருணை உள்ளமும் உண்டு என்பதால், தாங்கள் படும் கஷ்டத்தினை கண்டு, கலியபெருமாளிடம் சிபாரிசு செய்யவும் வாய்ப்புண்டு என்பது பச்சையப்பன் அவரை வக்கீலாக தேர்வு செய்ய மற்றொரு காரணமாகும்.

சந்தான மூர்த்தி விலாவாரியாக, பச்சையப்பனிடம் நடந்ததை கேட்டு தெரிந்துக் கொண்டார்.

“தன்‌ மேல கேஸ் திரும்ப வாய்ப்பிருக்குனு தெரிஞ்சும், பரமசிவம் கம்ப்ளெயின்ட் பண்ணுறது எங்கையோ இடிக்குதுல?” என்று தன் சந்தேகத்தை கேட்டார் சந்தான மூர்த்தி.

அதற்கு பச்சையப்பன் சிரித்துக் கொண்டே, “எல்லாம் எனக்கு தெரிஞ்ச ஒரு ஆள் செய்யற வேலை தான் சார். அதுக்கு தான் எவிடென்ஸ் தேடிட்டு இருக்கேன்.” என்று சொன்னான்.

“பை தி வே உங்க மாமாட்ட ஹெல்ப் கேட்டா…” என்று வக்கீல் பேச ஆரம்பிக்க,

“அவரு தான் சார் நான் சொன்ன ஆளு.” என்று அப்பொழுதும் சிரிப்பு தொலையாமல் பச்சையப்பன் சொல்ல, சந்தான மூர்த்தி விளங்கிக் கொண்டார்.

“உங்க ஹஸ்பன்ட மீட் பண்ணினேன். அவரு எவ்வளவு செலவானாலும் பரவாலனு சொல்லுறாரு.” என்று சந்தான மூர்த்தி பூடகமாகவே ஆரம்பித்தார்.

கணவனது ட்ரெயினிங்கால், அவர் என்ன சொல்ல வருகிறார் என்பது நந்தினிக்கு விளங்கியது.

ஒரு துண்டு காகித்தில் பத்து லட்சம் என்று எழுதி, அவளின் முன்பு வைத்தார். அதை பார்த்த உடனே நந்தினிக்கு தூக்கி வாறி போட்டது!

“இ.. இவ்வளவு?” என்று அகல கண்களை விரித்தாள்‌.

“உங்க ஹஸ்பன்ட் தான் மா எவ்வளவுனாலும் பாத்துக்கலாம்னு சொன்னாரு…” என்று சொன்னார் சந்தான மூர்த்தி.

“எப்போ சார் வேணும்?” காற்று போல் மெதுவாக ஒலித்தது அவள் குரல்.

“எவ்வளவு சீக்கிரம் ரெடி பண்ணுறீங்களோ அவ்வளவு சீக்கிரம் உங்க ஹஸ்பென்ட்க்கு ஜாமின் வாங்கி தர முடியும்.” என்றார் சந்தான மூர்த்தி.

“சரிங்க சார். நான் ஏற்பாடு பண்ணுறேன்.” என்று கவலைபடற சொன்னவள் தன் வீட்டிற்கு வந்தாள்.

எப்படி பணத்தை திரட்டுவது என்ற கேள்வியே மண்டைக்குள் வட்டமிட்டுக் கொண்டிருந்தது.

இதோ அதோ என்று நாட்கள் ஓடி பச்சையப்பனை கைது செய்து இன்று பத்து நாட்கள் ஆகிறது.

பச்சையப்பனை காணவென கௌசிக் வந்திருந்தான்.

“அண்ணே அக்கா உங்களை பாத்துட்டு வர சொன்னுச்சுணே…” என்ற கௌசிக்கை புன்னகையுடன் எதிர் கொண்டான் பச்சு.

பச்சையப்பன் கணக்கிட்டது போல மட்டும் நடந்திருந்தால், முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யும் முன்பே வெளியே வந்திருப்பான். மனிதன் நினைத்ததெல்லாம் நடந்துவிட்டால் தெய்வத்திற்கு என்ன வேலை?

“அந்த வக்கீலு…” என்றவன், போலீசை திரும்பி பார்த்துவிட்டு, நன்றாக அவன் பக்கம் குனிந்து, “பத்து லட்சம் கேக்குறாரு.” என்றான்.

“பரவால. நான் எதிர்பார்த்ததை விட கம்மியா தான் கேட்டுருக்காரு. பேங்க்ல இருக்க பணத்தை எல்லாம் எடுத்து குடுக்க சொல்லிடு.” என்று சொல்லியவன்,

“நந்தினியை… நல்லா பாத்துக்கோங்கடா…” என்று சொல்லும் பொழுது லேசாக கண்கள் கலங்கியது. அதுவரையிலும் தங்களுக்கு ஆதர்ச பிம்பமாக இருந்து, சகோதரத்துவத்துடன் பழகி வந்த பச்சுவை காண கௌசிக்கிற்கு சகிக்கவில்லை. கண்ணீர் வந்துவிட்டது அவனுக்கு.

“அக்காவை நாங்க பாத்துக்கறோம். எதுக்கும் நீ பயப்படாம இரு.” என்று சொல்லிவிட்டு சென்றான் கௌசிக்.

நந்தினியும் பேங்கில் இருந்த பத்து லட்சத்தை எடுத்து, சந்தான மூர்த்தியிடம் கொடுத்து விட்டாள். ஆனாலுமே, பல இடங்களில் மீண்டும் மீண்டும் பணம் கேட்டனர்.

தன் நகையினை அடகு வைத்து பணத்தை பிரட்ட முயன்றாள் நந்தினி. சொல்லி வைத்தது போல, அவளுக்கு கடன் தர‌ யாருமே முற்படவில்லை. நகையை விற்பதாக கூட கேட்டுப் பார்த்தாள். அப்பொழுதுமே யாரும் அவளுக்கு உதவ முன்வரவில்லை.

எல்லா பக்கமும் கதவு அடைத்தது போல இருந்தது. அதுவே அவளுக்கு மிகப்பெரும் சோர்வை கொடுத்தது.

அயர்ந்து போய் நந்தினி அமர்ந்திருந்தாள்.

“அக்கா உங்க அண்ணாட்ட வேணா கேட்டு பாப்போமா?” என்று விஜி கேட்க,

“வாயை மூடுடா…” என்று அவசரமாக அவனை அடக்கினான் கௌசிக்.

“அக்கா அவன் தெரியாம ஏதோ சொல்லாட்டான் அக்கா. நீ எதும் நினைச்சிகாத…” என்று விளக்கம் சொன்னான் கௌசிக்.

சில விநாடிகள் யோசித்த நந்தினி, “விஜி சொல்லுறது சரி தான் கௌசிக்கு. என் அண்ணன்ட்ட போயி கேப்போம்.” என்று சொன்னாள் நந்தினி.

கௌசிக் தயங்கி நிற்க, “உங்க அண்ணன் வெளிய வரணும்னா நான் என்ன வேணாலும் பண்ணுவ ஏன் கௌசிக். வா போலாம். விஜி நீயும் கூட வா.” என்றாள் நந்தினி.
 

ஒரு ஆட்டோவில் சென்று இறங்கினர் மூவரும். அந்த வீட்டில் மீண்டும் காலடி எடுத்து வைக்க வேண்டும் என்று நினைக்கும் பொழுதே உடல் எல்லாம் கூசியது நந்தினிக்கு. எல்லாவற்றையும் விட தன் கணவன் மட்டுமே முக்கியம் என்று நினைத்து வீட்டிற்குள் நுழைந்தாள் நந்தினி.

நந்தினி வீட்டை விட்டு சென்றதும் அனைத்து வேலைகளும் அபிநயாவின் தலையிலே விழுந்தன. சுகுமாரிக்கு மூட்டுவலியின் காரணமாக வேலை செய்ய முடியாததால், அவரை கரித்துக் கொட்டுவதே அபிநயாவின் அன்றாட வேலையாகிப் போனது.

“போக வேண்டிய வயசுல போயி சேராம, இன்னமும் உக்காந்திட்டு என் உசிரை வாங்குவது.” என்பது அபிநயாவின் தினசரி புலம்பல்.

மகள் இருந்த பொழுது ஒரு நாள் கூட இப்படியான பேச்சுகளை கேட்டதில்லை சுகுமாரி. அவருக்கு பதில் அனைத்து பேச்சுகளையும் நந்தினி தானே தாங்கிக் கொண்டிருந்தாள். இப்பொழுது நன்றாகவே மகளின் அருமை புரிந்தது சுகுமாரிக்கு.

வீட்டில் நடப்பவை அனைத்தும் ஹரிக்கும் தெரியும். தன் வயிறு வஞ்சகமில்லாமல் நிறைவது வரையிலும் அவன் எதுவுமே கண்டுக் கொள்வதில்லை. நந்தினி இல்லாமல் அந்த வீடு அப்படி தான் ஓடிக் கொண்டிருந்தது.

திறந்து கிடந்த வீட்டின் வழியே உள்ளே நுழைந்தாள் நந்தினி. வீடு தூசு துப்புமாக, ஒட்டடை படிந்து கிடந்தது. பல நாட்களாக சுத்தம் செய்யாமல், சுவர் எல்லாம் அழுக்கேறி போய் இருந்தது. தன்னையும் அறியாமல் ஒரு ஏளனப் சிரிப்பு வந்து வந்தது அவளுக்கு.

“இந்த வீட்டுல வச்சது வச்ச இடத்துல இருக்கவே மாட்டேங்குது.” என்று கத்திக் கொண்டே வந்த அபிநயா, நந்தினியை கண்டாள்.

“ஏய் எதுக்கு டி இப்ப இங்க வந்த? வெளிய போடி முதல்ல… எங்களை அசிங்கப்படுத்தற மாதிரி வீட்டை விட்டு ஓடி போயிட்டு…” என்று அபிநயா பெருங்குரலெடுத்து கத்த, பட்டென ஒரு அடி வைத்தாள் நந்தினி.

“நான் மட்டும் தான் பேசுவேன்‌‌. நீ பேசினனது வையி‌… கொன்னுடுவேன்!” என்று ஆரம்பத்திலே மிரட்டினாள் நந்தினி.

“என்ன டி ஆளுங்களை கூட்டிட்டு வந்து அராஜகம் பண்ணுறியா?” என்று கௌதமையும் விஜியையும் சுட்டி காட்டி கேட்டாள்‌ அபிநயா.

அபிநயா போட்ட கூச்சலில் உள்ளே இருந்து வெளியே வந்தார் சுகுமாரி.

“நந்தினி…” என அவர் பாசமாக அழைக்க, அவரை பார்த்ததும் அவசரமாக கண்ணீர் வழிந்தது நந்தினிக்கு. அதை துடைத்துக் கொண்டவள், சோபாவில் சென்று அமர்ந்தாள்.

“ஏய் எதுக்கு டி எங்க வீட்டுல வந்து உக்காருற?” என்று அபிநயா எழுந்து வந்து மீண்டு அவளிடம் கத்த,

“இது என் தாத்தாவோட சம்பாத்தியத்துல கட்டுன வீடு. சட்டப்படி எனக்கு இதுல முழு உரிமையும் இருக்கு. நடுவுல வந்த உனக்கு தான் இந்த வீட்டுல இருக்க உரிமை இல்லை.” என்று நந்தினி ஒரு போடு போட, ஆடி போய் விட்டாள் அபிநயா‌.

“என்ன… என்ன சொல்லுற நீ? இது என் புருசன் வீடு நான் இங்க தான் இருப்பேன்.” என்று உரிமை குரல் கொடுத்தாள் அபிநயா.

“இது என் தாத்தா காசுல அப்பா கட்டின வீடு. நீயே இருக்கப்போ நான் இருக்க கூடாதா?” என்று மூச்சுவாங்க கேட்டாள் நந்தினி.

நந்தினியும் அபிநயாவும் வழக்காடிக் கொண்டிருக்ககையிலே ஷமியை தூக்கிக் கொண்டு உள்ளே வந்தான் ஹரி. எங்கோ கடைக்கு போய் வந்திருப்பான் போல.

“நீ எதுக்கு டி இங்க வந்த?” என்று நந்தினியை பார்த்ததும் எகிறிக் கொண்டு வந்தான் ஹரி.

நந்தினியை மறைத்தது போல கௌசிக்கும் விஜியும் நின்றுக் கொண்டிருந்தனர்.

“கௌசிக் விஜி நகர்ந்துக்கோங்க. நான் பாத்துக்கறேன்.” என்ற சொல்லவும் தான் இருவரும் நகர்ந்தனர்.

“உன்கிட்ட ஒட்டி உறவாடலாம் நான் இங்க வரல. என் புருசனை பெயில்ல எடுக்க எனக்கு கொஞ்சம் பணம் தேவையா இருக்கு. அதான் உன்கிட்ட கேக்கலாம்னு வந்தேன்.” என்று தான் வந்ததற்கான காரணத்தை நறுக்கி தெறித்தது போல சொன்னாள் நந்தினி.

“என்ன தைரியத்துல நான் பணம் குடுப்பேன்னு வந்துருக்க?” என்று ஹரி எடுத்தெறிந்து பேச,

“என்ன தைரியத்துல அப்பா எனக்குனு எழுதி வச்ச நிலத்தை அடகு வச்சி, சொந்தமா நீ நிலம் வாங்குனியோ அதே தைரியத்துல தான் வந்து கேக்குறேன்.” என்று நந்தினி சொல்ல, ஹரிக்கு வியர்த்து விட்டது.

“ஏய் கொஞ்சம் விட்டா என்ன டி ஓவரா பேசிட்டே போற…” என்று அபிநயா உண்மை எல்லாம் வெளி வந்துவிடுமோ எனற பயத்தில் துள்ளினாள்.

“என்னை ரொம்ப கோவப்படுத்தாத அபிநயா. அப்பறம் அது உனக்கு தான் நல்லதில்லை.” என்று சொன்னாள் நந்தினி.

“என்னடி என்ன பண்ணுவ? ஆளுங்களை வச்சி மிரட்டுவியா? அடிப்பியா?” என்று அபிநயா கேட்க,

“என் நகை எல்லாம் திருடிட்டனு போலிஸ்ல கம்ப்ளெயின்ட் குடுப்பேன்.” என்று சொன்னாள் நந்தினி.

“நீ தான் உன் நகையெல்லாம் எடுத்துட்டு போயிட்டியே…” என்று அபிநயா பாயின்ட்டாக பேச,

“அதுக்கு உன்கிட்ட ஆதாரம் இருக்கா?” என்று கேட்டு அபிநயாவை வாயடைக்க செய்தாள் நந்தினி.

“அதுமட்டுமில்ல எனக்கு தெரியாம என்னோட ஐஞ்சு பவுன் டாலர் செயினை வித்து லேட்டஸ்ட் டிசைன்ல நெக்லஸ் வாங்குனியே அதுக்கு பேரு திருட்டு தானே?” என்று நந்தினி கேட்க, திருட்டு முழி முழித்தாள் அபிநயா.

“இங்க பாரு நந்தினி. இத்தனை வருசம் உன்னை சும்மா வீட்டுல வச்சி சோறு போட்டதுக்கு…” என்று ஹரி பேச ஆரம்பிக்க,

“உன் வீட்டு வேலையெல்லாம் யார் செஞ்சா?மூணு வேளை சோறு ருசியா யார் ஆக்கிப்போட்டா? உன் பிள்ளை மோண்டா பேண்டா எல்லாத்தையும் யார் பாத்தா? சம்பளம் இல்லாத வேலைக்காரியா தானே இருந்தேன்?” என்று‌ நந்தினி கேட்கும் பொழுது அவளையும் மீறி களைப்பு அவள் முகத்தில் தென்பட்டது.

முகம் பொலிவிழந்து களைத்து போய் காணப்பட்ட நந்தினியை காண, சுகுமாரிக்கு மனம் கனத்தது. என்ன இருந்தாலும் பெற்ற தாய் அல்லவா!

நந்தினி இந்த அளவு பேசுவாள் என்பதை இன்று தான் நேரில் காண்கிறான் ஹரி. அவனுக்கு அது அதிர்ச்சியாக இருந்தது.

“பணம் தர முடியாதுனு சொன்னா என்ன பண்ணுவ?” என்று அவன் திமிராக கேட்க,

“தாத்தா சொத்து பேத்திக்கும் சொந்தம். கோர்ட்ல கேஸ் போடுவேன். எனக்கு காசு கிடைக்கிது கிடைக்கலன்றதுலாம் மேட்டரே இல்ல. உங்க எல்லாரையும் நடுத்தெருவுல நிறுத்துவேன்! ஒரு வேளை சோத்துக்கு கூட வழி இல்லாம தெருவுல பிச்சை எடுக்க விட்டுருவேன்.

என்னடா ஓவரா பேசுறாளேனு பாக்காத… நான் ஒரு வார்த்தை சொன்னா போதும். என் புருசன் எனக்காக எல்லாத்தையும் செஞ்சி முடிச்சிருவாரு!” என்று பெருமிதத்தோடு பேசினாள் நந்தினி.

“இவ வாய் மட்டும் தான் பேசுவானோ. எதுவும் செய்ய மாட்டானு நினைக்காத. குறைஞ்சபட்சம் உன் பொண்டாட்டி மேல திருட்டு கேசு குடுத்து அவளை ஜெயில்ல தூக்கி வைப்பேன்‌.” என்றாள் நந்தினி.

ஹரிக்கும் சரி அபிநயாவிற்கும் சரி எதுவுமே பேச முடியவில்லை.

“இப்ப என்ன தான் வேணும்?” என்று ஹரி கடுப்புடனே கேக்க,

“எனக்கு பணம் வேணும்.” என்றாள் நந்தினி.

“எவ்வளவு?” என்று கேட்டான் ஹரி.

“ஐஞ்சு லட்சம்.” என்றாள் நந்தினி.

ஏதோ ஒரு சில ஆயிரங்கள் கேட்பாள் என்று நினைத்த ஹரிக்கு, அவள் கேட்ட தொகை மயக்கமே வரவழைப்பதாக இருந்தது.

“எதுக்கு அவ்வளவு காசு?” என்று ஹரி கேட்க,

“சொன்னேல்ல… என் புருசன் வெளிய எடுக்கனு…” என்றாள் நந்தினி.

“இவ்வளவு காசு குடுத்து தான் அவன் வெளிய வரணும்னா அதுக்கு அவன் ஜெயில்லையே இருக்கலாம்.” என்று அபிநயா சொல்ல‍,

“இவ்வளவு நாள் நான் அமைதியா போனதுக்கு காரணம்,‌ ஷமி தான். அவளுக்கு அம்மா வேணும்னு தான் பொறுமையா இருந்தேன். இது மாதிரி நீ பேசிட்டே இருந்தின்னா, உன்னை போலீஸ்ல பிடிச்சி குடுத்துட்டு, நான் ஷமியை தூக்கிட்டு போயிடுவேன். உன்னை மாதிரி கேவலமான பிறவியோட வளர்றதை விட, அம்மா இல்லாம ஷமி வளர்றது எவ்வளவோ மேல்!” என்று மிரட்டினாள் நந்தனி.

அபிநயாவிற்குள் இருந்த அன்னை எனும் சாவியை திருகிவிட்டாள் நந்தினி. அதனால் வாயை மூடிக் கொண்டாள் அபிநயா.

“இப்ப என்கிட்ட ஐஞ்சு லட்சம் இல்லை. நான் அப்பறம் தர்றேன்.” என்று சொல்லி, அவளை கிளப்பி விட முயன்றான் ஹரி.

“நீ வாங்குன நிலத்தை விப்பியோ இல்ல, உன் பொண்டாட்டி நகையை அடகு வைப்பியோ… அது எனக்கு தேவை இல்ல. எனக்கு தேவை பணம். நீ அதை எப்படி ஏற்பாடு பண்ணுறன்றது எனக்கு முக்கியமில்ல.” என்று அதிகாரமாக சொன்னாள் நந்தினி.

“அது வந்து…” என்று ஹரி ஆரம்பிக்க, நந்தினியின் பார்வை அவனை தாண்டி, பயத்தில் சுவர் ஓரமாய் ஒட்டிக் கொண்டிருந்த ஷமியின் மீது படிந்தது. கொஞ்சம் வளர்ந்து உடல் இளைத்து காணப்பட்டாள். நந்தினிக்கு அவளை பார்க்க பாவமாக இருந்தது.

“ஷமி குட்டி இங்க வாங்க…” என்று அழைத்தாள் நந்தினி.

வர மாட்டேன் என்று மறுத்தாள் ஷமி. இத்தனை நாள்களில் சிறுமி என்பதால், நந்தினியை முற்றிலுமாக மறந்து போய் இருந்தாள்.

“அத்தையை அதுக்குள்ள மறந்துட்டீங்களா? அத்தை வயித்துக்குள்ள குட்டி பாப்பா இருக்கு. வந்து பாருங்களேன்.” என்று அவள் அழைக்க,

“குட்டி பாப்பாவா?” என்று கேட்டபடியே ஓடி வந்து நந்தினியின் அருகில் வந்து அமர்ந்துக் கொண்டாள் ஷமி.

ஷமியை அருகில் அமர்த்திக் கொண்டு, பூடகமாக ஹரியையும் அபிநயாவையும் பார்த்தாள் நந்தினி. அதில் அபிநயா உண்மையாலுமே பயந்து போய்விட்டாள்.

“என்னங்க…” என்று அபிநயா நடுக்கத்துடனான குரலிலே அழைத்தாள். ஹரிக்கும் நிலவரம் புரிந்தது. பணத்தை வாங்கமல் நந்தினி செல்ல மாட்டாள் என்பதால், பங்கிற்கு சென்று பணத்தை எடுத்து வர முடிவு செய்தான் ஹரி.

“என்கிட்ட இப்ப ஒரு ஒன்னரை லட்சம் இருக்கு.” என்று ஹரி சொல்ல,

“விஜி அவரோட கூட போயி அந்த பணத்தை வாங்கி, நான் சொல்லுற வீட்டுல குடுத்துடு. அப்பறம் கௌசிக்கு நீ அந்த அடகு கடைக்காரன் இருக்கான்ல. அவன்ட்ட எனக்கு தான் காசு பொறட்டறோம்னு சொல்லாம, வேற யார் பேராச்சும் சொல்லி கடன் வாங்க முடியுதா பாரு.” என்று மளமளவென கட்டளைகளை பிறப்பித்தாள் நந்தினி.

“சரிங்க அக்கா…” என்ற விஜி ஹரியை முறைத்துக் கொண்டே அவனுடன்‌ சென்றான்.

அபிநயா நந்தினியை பார்த்து பார்த்து பொறுமிக் கொண்டே இருக்க, “நானும் வந்ததுல இருந்து பாத்துகிட்டே இருக்கேன். அக்காவ அந்த பேச்சு பேசுறீங்க… அக்கா மாதிரி மெதுவாலாம் பேச மாட்டேன். அடிச்சி வாயை உடைச்சிருவேன்.” என்று கோபத்தில் மிரட்டினான் கௌசிக். சொன்னதை செய்வேன் என்பது போல நின்றான் கௌசிக்.

கௌசிக்கை பார்த்து ஓடி ஒளிந்துக் கொண்ட அபிநயாவை காண சிரிப்பு வந்தது நந்தினிக்கு. அதை ஆதூரமாக பார்த்துக் கொண்டிருந்தார் சுகுமாரி.

மருமகள் குழந்தையோடு உள்ளே சென்று கதவை அடைத்ததும் மெதுவாக சமையல் அறைக்குள் சென்று, இரு குவளை காபியினை போட்டவர், நந்தினிக்கு ஒன்றும் கௌசிக்குக்கு ஒன்றுமாக நீட்டினார்.

சுகுமாரியின் முகத்தை பார்த்தாள் நந்தினி. அதில் மகளின் மீதான கனிவே தெரிய, நீட்டிய காபியை எடுத்துக் கொண்டாள்.

“டாக்டர் என்ன சொன்னாங்க? நீயும் குழந்தையும் நல்லா இருக்கீங்களா?” என்று கேட்டார் சுகுமாரி. அவரின் கண்கள் உண்மையான அக்கறையை வெளிப்படுத்தியது.

“ம்ம் இரண்டு பேரும் நல்லா இருக்கோம்.” பட்டும் படாமலே பேசினாள் நந்தினி.

ஹரி வந்து பணத்தை கொடுக்க, அதை வாங்கியவள், “திரும்பவும் வேணும்னா நான் வந்து கேப்பேன். எனக்குனு இருக்க ஒரே அண்ணன் நீ தானே! எனக்கு குடுக்காம நீ யாருக்கு தரம் போற?” என்று நக்கலாக சொல்லி விட்டு கிளம்பினாள் நந்தினி.

தாங்கி தாங்கி நடந்துக் கொண்டே சுகுமாரியும் தன் பெட்டியை எடுத்துக் கொண்டு கிளம்பினார். மற்றவர்கள் பேசிக் கொண்டிருக்கும் பொழுதே தன் பெட்டில் தேவையானவற்றை எடுத்து வைத்துவிட்டார் சுகுமாரி.

“நீ எங்கம்மா கிளம்பற?” என்று கோபத்தில் கத்தினான் ஹரி.

செருப்பை போட்டுக் கொண்டிருந்த நந்தினி, ஹரியின் குரலில் அப்படியே நின்றாள்.

“நந்தினி வீட்டுக்குப்பா…” என்றார் சுகுமாரி.

“எவன் கூடையோ ஓடிப்போன ஓடுகாலி அவ. இப்ப வந்து அவனுக்காக என்னைய மிரட்டி பணம் வாங்கிட்டு போறா… அவளுக்காக இவ்வளவு நாள் உன்னைய பாத்துக்கிட்ட என்னைய விட்டுட்டு போறியா?” என்று அவன் கத்த,

“உன்னை மாதிரி தானே டா அவளும் எனக்கு பிள்ளை. உன்னை பெத்த அதே வயித்துல தானே டா அவளையும் பெத்தேன். இத்தனை நாளு ஒரு கண்ணுல வெண்ணையும் ஒரு கண்ணுல சுண்ணாம்பாவும் உங்களை வளத்திட்டேன். பாவம் டா அவ… பிள்ளைதாச்சி தனியா இருக்கா. அவளுக்கு கூடமாட ஒத்தாசைக்கு கொஞ்ச நாள் இருந்துட்டு வரேன்.” என்று சுகுமாரி சொல்லிவிட்டு, நந்தினியோடு இணைந்து பச்சுவின் வீட்டிற்கு வந்துவிட்டார்.
 
நந்தினி 🔥🔥🔥🔥

ஹரி தங்கச்சி ஓடி போயிட்டா அவ சொத்தும் இனி நமக்கு தான் என்று நிம்மதியா இருந்து இருக்க போல 👿👿👿👿👿👿👿👿👿

அபி உன்னை அடிச்சு அடிச்சு நந்து கை தான் வலிக்கும் போல 😏😏😏 உனக்கு எல்லாம் புத்தி வர வாய்ப்பே இல்லை 🤗🤣🤗🤗

நந்தினி அவ கிட்ட தப்பா நடந்ததை வெளியே சொல்ல மாட்டாள் என்கிற தைரியத்தில் கேஸ் கொடுக்க வைக்கிறான் மாமன் காரன் 🥶🥶🥶🥶🥶🥶🥶🥶🥶

வக்கீல் இவ்வளவு ஃபீஸ் வாங்குறியே கொஞ்சமும் நியாயம் இல்லை 😡😡😡😡😡😡😡😡😡


சுகுமாரி மருமக சோறு போடலை என்றதும் மக மேல் பாசம் வந்திருக்கா 🤭🤭🤭🤭🤭🤭🤭
 
Last edited:
Top