Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

தாலாட்டும் தென்றல் 11.....

Advertisement

Srija Venkatesh

Well-known member
Member
அத்தியாயம் 11.

கணவன் பேசப் பேச எரிச்சலானாள் ராணி. நாம் நினைப்பது என்ன? நடப்பது என்ன? என்ற கோபம் அவளுக்கு. இந்த அண்ணன் ஏன் அவரிடம் கொஞ்சிக்கொண்டிருக்கிறார்? என எண்ணினாள். ஆனால் நிதி சாதாரணமாக விடத் தயாரில்லை.

"மச்சான். இது தான் என் பே ஸ்லிப். இதுல என் சம்பளம் எவ்வளவுன்னு போட்டிருக்கு பார்த்தீங்களா?" என்றான் உறுதியான குரலில்.

"என்ன? 50,000முனு போட்டிருக்கு. அதைத்தான் நானும் கேக்குறேன். மாசம் சுளையா 50,000 வாங்குற நீ, என் தங்கச்சியை ஏன் இப்படிப் பணம் இல்லேன்னு சொல்லி கொடுமைப்படுத்துற?"

"ராணி தான் உலகம் தெரியாதவன்னா நீங்களுமா? சொல்றேன் கேளுங்க, வீட்டு வாடகை 12,000 ரூவா, அது தவிர மேயிண்டனன்ஸ் 1000 ரூவா கட்டணும், அப்புறம் எனக்கு ஆபீஸ் போக பெட்ரோல், மளிகை சாமான், பைக் வாங்குன ஈ எம் ஐ..." என மூச்சு வாங்க நிறுத்தினான்.

"இதெல்லாம் ஒரு செலவா? ஏன் நீ எங்க கிட்ட கேக்கலாம் இல்ல? நாங்க மாசா மாசம் பணம் அனுப்பிட்டு போறோம். அதுக்காக இப்படி ராணியை வேலைக்காரி ஆக்கணுமா?" என்றான் மாணிக்கம் கோபமாக.

"மச்சான்! தயவு செஞ்சு புரிஞ்சுக்குங்க. என் வருமானத்துல உங்க தங்கச்சியை நல்லா தான் வெச்சுக்கிட்டு இருக்கேன். நம்புங்க" என்றான்.

பொங்கி எழுந்தாள் ராணி.

"அண்ணே! இவுரு சொல்லுறதை நம்பாதீங்க. சம்பாதிக்குற பணத்தையெல்லாம் அவங்க அம்மாவுக்கு அனுப்புறாரு. ஆனா என்னை வேலைக்காரி மாதிரி வேலை செய்யச் சொல்லுறாரு. வீட்டுல போட்டுக்க எனக்கு வாங்கித்திருக்குற நைட்டியைப் பாருங்கண்ணே!" என்று கொடியிலிருந்த உடையை காட்டினாள். சற்றே சாயம் போய் இருந்தது அது. அதைக் கணதும் மாணிக்கத்துக்குக் கண்களில் நீர் வந்து விட்டது.

"ராணி! ராணிக்கண்ணு! இதை மாதிரியாம்மா நீ போடுற? நம்ம வீட்டுல வேலை செய்யுறவங்க கூட இப்படி உடுத்த மாட்டாங்களே" என்று சொல்லி விட்டு நிதியின் பக்கம் திரும்பினான்.

"போதும்ப்பா போதும். நீ என் தங்கச்சியை கொடுமைப்படுத்துனது போதும். இனிமே பேச எதுவுமே இல்ல. இப்பவே நீ என் கூடக் கிளம்பு. இனியும் உன்னை இங்கே விட்டு வெச்சிருக்க முடியாது" என்று கத்தினான்.

அதை மறுத்து ராணி ஏதாவது சொல்வாள் என எதிர்பார்த்தான் நிதி. ஆனால் அவள் வாயே திறக்காமல் அழுது கொண்டே இருந்தாள்.

"ராணி! இப்ப என்ன நடந்து போச்சுன்னு நீ இப்படி அழுற? நான் உன்னை ஏதாவது சொன்னேனா? நமக்குள்ள சண்டை வந்துதா? இப்படி எதுவுமே நடக்காத போது, நீ ஏம்மா என்னை விட்டுப் பிரிஞ்சு போகணும்னு நினைக்குற?" என்றான் நிதி மென்மையாக.

"இன்னும் என்ன நடக்கணும்னு நீ நினைக்குற? அங்க எங்க வீட்டுல ராணி மாதிரி இருந்தவளை கூட்டிக்கிட்டு வந்து வேலை வாங்கி சாவடிச்சுக்கிட்டு இருக்கியே நீ? இதுவே என் இடத்துல சபா அண்ணன் இருக்கணும். உன் மூஞ்சி முகரையெல்லாம் வீங்கிப் போயிரும்" என்றான் மாணிக்கம் கத்தலாக.

சட்டெனக் கோபம் வந்தது நிதிக்கு. அவனும் தன் பங்குக்குக் குரலுயர்த்திக் கத்தினான்.

"திரும்பத்திரும்ப அடிப்பேன்., உதைப்பேன்னு சொன்னா என்ன அர்த்தம்? எனக்கு கை கால் இல்லியா? என்னால திருப்பி அடிக்க முடியாதா என்ன? ராணியோட அண்ணன்ற மரியாதைக்குப் பார்க்குறேன். இல்லேன்னா எனக்கும் பேசத்தெரியும், அடிக்கவும் தெரியும்" என்றான்.

அவ்வளவு தான் கொத்தாக சட்டையைப் பற்றினான் மாணிக்கம். இன்னும் சில நொடிகளில் அடித்தே விட்டிருப்பான். ஆனால் நிதி தடுத்து தன்னை விடுவித்துக்கொண்டு தள்ளிச் சென்றான். அவனுக்கு பெருத்த அதிர்ச்சியாக இருந்தது. ஆனால் ராணி மிகவும் நல்லவள் போல அண்ணனின் கால்களில் விழுந்தாள்.

"அண்ணே! அவரை அடிக்காதண்ணே! என் தாலிக்காக எல்லாத்தையும் பொறுத்துப் போ அண்ணே" என்று கதறினாள். எல்லாவற்றையும் நாடகம் போலப் பார்த்திருந்த நிதிக்கு வெறுப்பில் சிரிப்பு வந்தது.

"ஏன் ராணி இப்படி இருக்கிறாள்? அவளுக்கு என்ன வேண்டும்? வீட்டு வேலை செய்யச் சொன்னது அத்தனை பெரிய தவறா? அவள் தானே என்னை வலுக்கட்டாயமாக சென்னை அழைத்து வந்தாள்? ஆரம்பத்தில் என்னையே சுற்றிச் சுற்றி வந்தாளே? பிறகு என்ன ஆனது?" என எண்ணிக் குழம்பினான். நிதி யோசித்துக்கொண்டிருக்கும் போது அங்கே அண்ணனுக்கும் தங்கைக்கும் அழுகை முட்டியது. ராணியை அணைத்துக்கொண்டு அழுதான் மாணிக்கம்.

"தங்கச்சி! உன் வாழ்க்கை இப்படி ஆயிடிச்சேம்மா? நான் என்ன செய்வேன்?" எனப் புலம்பினான். மீண்டும் கோபம் வர தன்னை அமைதிப்படுத்திக்கொண்டு பேசினான்.

"மச்சான்! எதுக்கு இவ்வளவு உணர்ச்சி வசப்படுறீங்க? இப்ப என்ன நடந்தது? நியாயமாப் பார்த்தா என்னை நீங்க அடிக்க வந்ததுக்கு நான் தான் கோபப்படணும். ஆனா நான் அப்படிச் செய்யலியே? கொஞ்சம் நிதானமா யோசிங்க. அப்ப தப்பு யாரு மேலன்னு தெரியும்" என்றான். கணவனை நோக்கி எழுந்து வந்தாள் ராணி.

"இன்னமும் உனக்குப் புரியல்ல இல்ல? உன் மேல தப்பே இல்லேன்னு நெனச்சுக்கிட்டு இருக்க இல்ல? சரி! அப்படியே இருக்கட்டும். அண்ணே! நீ பேசாம ஊரைப் பார்க்க போய்ச் சேரு. நான் என் தலையெழுத்துப்படி வாழ்ந்துட்டுப் போறேன்" என்றாள் கண்ணீரின் ஊடே. எரிச்சல் மண்டியது நிதிக்கு.

"என்னடி பெருசா டிராமா போடுற? எதுக்கு இத்தனை ஆர்ப்பாட்டம்? அலட்டல்?" என்றான் கத்தலாக.

மாணிக்கம் எழுந்து வந்தான்.

"நான் இருக்கும் போதே நீ இவளை இப்படிப் பேசுறியே? நாங்க யாரும் இல்லாத நேரத்துல என்னென்ன பேசியிருப்ப? போதும் உன் சகவாசம். தங்கச்சி! உன் புடவை நகை எல்லாத்தையும் எடுத்துக்கிட்டுப் புறப்படு. நாம இப்பவே ஊருக்குப் போகலாம்" என்றான். அண்ணன் சொல்லைத் தட்டாத தங்கை போல எழுந்து தனது உடைகளைப் பேக் செய்ய முற்பட்டாள் ராணி.

பகீரென்றது நிதிக்கு.

"இது என்ன சிறுபிள்ளைத்தனம் ராணி? இது தான் இனி உன் வீடு. நம்ம வீடு. சென்னையில வாழணும்னு ஆசைப்பட்டு தானே வந்தே? இப்ப ஊருக்குப் போனா என்ன அர்த்தம்?" என்று தடுத்தான். அவனது கைகளை அகற்றினாள் ராணி.

"இதைப் பாரு நிதி, நீ நல்லவன் தான். ஆனா காசு விஷயத்துல பயங்கர கஞ்சம். அப்படியே உங்கிட்ட இல்லேன்னா எங்க அண்ணனுங்க தரதை வாங்கிக்க வேண்டியது தானே? இதுல என்ன ரோஷம் வேண்டிகெடக்கு? உனக்கு என்னை விட உன் மானமும் ரோஷமும் பெருசாப் போச்சு. எனக்கு என் சவுரியம் பெருசு" என்றாள் அழுது கொண்டே.

"சரி! இப்ப நீ ரொம்ப உணர்ச்சி வசப்பட்ட நிலையில இருக்க. நான் எதுவும் சொல்லல்ல. உங்க அண்ணனோட போயி பத்து நாள் ஊர்ல இருந்துட்டு வா. அது வரைக்கும் நான் அட்ஜஸ்ட் செஞ்சுக்கறேன். எப்படி இருந்தாலும் நான் தானே சமைக்குறேன். ஒண்ணும் சிரமமில்ல" என்றான்.

"ஹூம்! இந்தக் குத்தல் பேச்சுக்கு ஒண்ணும் குறைச்சல் இல்ல! இதைப் பாரு! நான் பத்து நாள்ல வருவேன்னு உறுதி கொடுக்க முடியாது. உனக்கு நான் வேணும்னா எங்க ஊருக்கு வந்து எங்க அண்ணனுங்க கிட்ட மன்னிப்புக் கேட்டு அப்புறம் என்னைக் கூட்டிக்கிட்டு வா! இல்லேன்னா உன் வழி உனக்கு, என் வழி எனக்கு" என்றாள் கூசாமல். அது வரையில் இடைவெளிக்குப் பிறகு அண்ணனைப் பார்க்கிறாள். அதனால் உணர்ச்சி வசப்படுகிறாள் என நினைத்த நிதிக்கு அவள் சொன்னது பெருத்த அதிர்ச்சியாக இருந்தது. விளையாட்டுக்குச் சொல்கிறாளா? இல்லை வினையாகச் சொல்கிறாளா? என தவித்தான். மனைவியை பற்றித் திருப்பினான்.

"ராணி! இது நம்ம வாழ்க்கை. விளையாட்டு இல்ல. நமக்குக் கல்யாணமாகி மூணு மாசம் கூட முடியல்ல. நீ என்னன்னா? உன் வழி என் வழின்னு பிரிச்சுப் பேசுற. இது நல்லாவே இல்லம்மா. தயவு செஞ்சு எதையும் விளையாட்டா நினைக்காம நல்லா யோசிச்சுப் பாரு" என்று கெஞ்சாத குறையாகப் பேசினான்.

"உனக்கு வேளாவேளைக்கு சமைச்சுப் போடவும் துணி உணத்தவும் ஆள் வேணும்னு தானே சொல்ற?" என்றாள் ராணி கடுமையாக.

சட்டென அவளைப் பிடித்திருந்த பிடியை உதறினான்.

"சே! நீ எல்லாம் ஒரு மனுஷியா? நான் என்ன சொன்னா நீ என்ன பேசுற? உன்னை கொஞ்சிக்கிட்டு இருக்கேன் பாரு. என்னைச் சொல்லணும்" என்று சொல்லி விட்டு சட்டையை மாட்டிக்கொண்டு வெளியில் சென்று விட்டான்.

சற்றே பயந்து போனாள் ராணி.

"ஒருவேளை நிதி உண்மையைத்தான் சொல்கிறாரோ? நான் தான் பெரிதாக அலட்டுகிறேனோ? ஆனால் அவரும் தான் என்ன?என் மேல் அக்கறையே இல்லையே? என்னடா இவள், சிறு பெண்ணாயிற்றே? வீட்டில் வேலை செய்து பழக்கமே இல்லையே? நாமே எல்லாவற்றையும் செய்வோம். இல்லை ஆளைப் போடுவோம் என நினைக்கவில்லையே? இப்போது அண்ணனைப் பார்த்ததும் கொஞ்சுகிறார். ம்ஹூம்!இதற்கெல்லாம் நான் இளகவே கூடாது. " என உறுதி செய்து கொண்டாள்.

மாணிக்கம் அண்ணன் சபாவிடமும், தம்பி முத்துவிடமும் பேசினான். அவர்களும் ராணியை உடனே அழைத்து வரும்படி சொல்லி விட்டார்கள். அதோடு நிதியை அறைந்து விட்டு வர வேண்டும் எனவும் கொந்தளித்தார்கள். மாணிக்கத்திடம் பேசிய அதே உணர்ச்சிகரமான பேச்சுக்களை மற்ற அண்ணன்களிடமும் பேசினாள் ராணி.

"அண்ணே! என்ன இருந்தாலும் அவரு என்னைத் தொட்டு தாலி கட்டுனவரு. அவரை அடிச்சா எனக்குத்தான் அவமானம்" என அழுதாள். அங்கே அவளது தாயாரும் தன் மகளின் நல்ல மனதை நினைத்துக் கண்ணீர் வடித்தாள்.

மறு நாளே தங்கையை அழைத்துக்கொண்டு வாடகைக் கார் ஒன்றை அமர்த்திக்கொண்டு ஊர் நோக்கி விரைந்தான் மாணிக்கம். பின் சீட்டில் சாய்ந்தவாறு அமர்ந்திருந்தாள் ராணி. அவளுக்கு ஒரே மகிழ்ச்சி. நான் இல்லாமல் நிதியால் இருக்கவே முடியாது. அதனால் அடுத்த வாரமே அடித்துப் பிடித்துக்கொண்டு ஓடி வருவார். அப்படி வரும் போது மாதா மாதம் அண்ணன்கள் கொடுக்கும் பெரிய தொகையை வாங்கிக்கொள்ள வேண்டும் என்று கண்டிஷன் போட வேண்டும். அப்போது தான் வேலைக்காரி வைத்துக்கொண்டு, வெளியிலும் சுற்ற முடியும். முடிந்தால் ஊரிலிருந்தே ஒருத்தியை வீட்டோடு வைத்துக்கொள்ள வேண்டியது தான். சமையலுக்கும், இதர வேலைகளுக்கும் அது தான் சரி. அப்போது தான் நாங்கள் சுற்றி விட்டு இரவு வெகு நேரம் கழித்து வந்தாலும் உணவு தயாராக இருக்கும். யாராவது உறவுக்காரக் கிழவி இல்லாமலா போய் விடுவாள்? என எண்ணிக்கொண்டே மெல்ல உறங்கிப் போனாள்.

முன் சீட்டில் அமர்ந்திருந்த மாணிக்கத்துக்குப் பெருமையான பெருமை. பாழாக இருந்த தங்கையின் வாழ்க்கையை காப்பாற்றி விட்டோம். சபா அண்ணனால் கூட முடியாததைத் தான் சாதித்து விட்டோம் என்ற பெருமிதம். அது தந்த நிம்மதியில் அவனும் உறங்கி விட்டான்.

ஊரில் அண்ணி சங்கரியும், சென்னையில் நிதியும் உறக்கம் வராமல் நிம்மதியின்றித் தவித்துக்கொண்டிருந்தனர்.
 
Top