Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

தாலாட்டும் தென்றல் 6....

Advertisement

Srija Venkatesh

Well-known member
Member
அத்தியாயம் 6.

நிதி என்கிற அருள் நிதியை மற்றவர்கள் வருவதற்குள் அனுப்ப வேன்டுமே என்ற பதட்டத்தில் ராணி சொன்னதன் தாக்கம் அத்தனை உறைக்கவில்லை சங்கரிக்கு. அவன் போனதும் ராணி தன் அறைக்குள் புகுந்து கொண்டாள். பிறகு மற்ற வேலைகள், சபாவின் வருகை என ராணியிடம் தனியாகப் பேசுவது தள்ளிப் போனது. அன்று வீட்டுக்கு தங்கத்தின் தூரத்து உறவுக்கார அண்ணன் ஒருவரும் அவரது மனைவியும் வந்திருந்தார்கள். பக்கத்து ஊரில் ஏதோ கல்யாணத்துக்கு வந்தவர்கள் தங்கத்தையும் பார்க்க வேண்டும் என வந்தனர். அவர்களை சுற்று வட்டாரத்தில் இருக்கும் கோயில்களுக்கு அழைத்துச் சென்று விட்டாள் தங்கம்மாள். மதியத்துக்கு அவர்களுக்கு உணவும் கட்டிக் கொடுத்தாயிற்று. சபாவும் அவனது சகோதரர்களுக்கும் அலுவலகத்துக்கு சாப்பாடு கேரியரில் அனுப்பியாயிற்று.

மதியம் ஒரு மணி வாக்கில் சாப்பாடு போடும் படி சொல்லிக்கொண்டு வந்தாள் ராணி. இருவரும் அமர்ந்து உண்ணும் போது மெல்லப் பேச்சுக் கொடுத்தாள்.

"ஏம்மா? அன்னைக்கு எதுக்கு அந்தப் பையனை நம்ம வீட்டுக்குக் கூட்டிக்கிட்டு வந்தே?"

"சும்மா தான் அண்ணி. அவன் நம்ம வீட்டையும் உங்களையும் பார்க்கணும்னு சொன்னான். அதான் கூட்டிக்கிட்டு வந்தேன்."

"ஆ! என்னைப் பார்க்கணும்னு சொன்னானா?"

"ஆமாண்ணி! நான் எப்பப் பார்த்தாலும் நம்ம வீட்டைப் பத்திப் பேசுவேன் இல்ல. அதான் பார்க்க வந்தான்"

"சரி! நீ கண்டிப்பா உங்கண்ணங்ககளைப் பத்தியும் தான் பேசியிருப்பே? உங்கம்மாவைப் பத்தி சொல்லியிருப்பே? ஆனா அவங்களை ஏன் அவன் பார்க்கல்ல?"

சற்று நேரம் மௌனம் சாதித்தாள் ராணி. வசமாக மாட்டிக்கொண்டாயா? என்று எண்ணினாள் சங்கரி. ஆனால் ரணியா மாட்டுவாள்?

"அண்ணி! முதல்ல நீங்க அவனைப் பத்தி என்ன நினைக்கறீங்க? இவன் எனக்கு சரிப்பட்டு வருவானா? இதைப் பத்தி யோசிச்சுட்டுத்தானே நான் அவன் காதலுக்கு ஓகே சொல்ல முடியும்? " என்றாள்.

அசந்தே போனாள் சங்கரி. இது தான் இன்றைய காதலா? யோசித்து, சரி வருமா என சிந்தித்து, எல்லாம் சரி என்றால் காதல். ஒரு வேளை இல்லையென்றால்..? வாய் விட்டு அதைக் கேட்டே விட்டாள் சங்கரி.

"அதனால என்ன அண்ணி? வெறும் நண்பர்களா இருப்ப்போம். அவ்ள தானே?" என்றாள் சளைக்காமல்.

இதெல்லாம் என்ன? கதைகளிலும், சினிமாக்களிலும் தான் கண்டதும் காதல், பொருந்தாக் காதல் எனக் காட்டுவார்கள் போலிருக்கிறது. இன்றைய இளைய தலைமுறை நிச்சயம் புத்திசாலிகள் தான், என எண்ணிக் கொண்டாள். ஆனாலும் ஏதோ ஒன்று ஒப்புக்கொள்ள முடியாதது போலத் தோன்றியது.

"இப்ப என்ன முடிவு செஞ்சிருக்கே?" என்றாள் சங்கரி.

"இன்னும் எந்த முடிவும் எடுக்க முடியல்ல அண்ணி! பார்ப்போம்" என்று முடித்து விட்டாள். இப்போதைக்கு ஆபத்து ஒன்றுமில்லை எனத் தெரிந்ததும் நிம்மதிப் பெருமூச்சு விட்டாள் சங்கரி. ஆனால் அவளது நிம்மதிக்கு ஆயுள் மாலை வரை தான்.

தங்கம்மாவும், அவளது அண்ணன் மாசிலாமணி, மனைவி செண்பகம் மூவரும் வந்து இறங்கும் போது முகங்களில் பிரகாசம். அதிலும் தங்கம்மா மிகவும் உற்சாகமாக இருந்தாள். அண்ணனையும் அண்ணியையும் வழக்கத்தை விட அதிகம் உபசாரங்கள் செய்தாள். வந்தவர்கள் கிளம்பிப் போய் விட்டார்கள். போகும் போதே நல்ல முடிவாச் சொல்லு" என்று உரைத்து விட்டுச் சென்றார்கள். என்ன விஷயம் என்பது இரவு தெரிந்தது.

"என்னங்க! மாசி அண்ணன் மகன் ஸ்ரீதரன் சென்னையில ஏதோ கம்பெனி வெச்சு நல்ல நிலையில இருக்கானாம். அவனுக்கு நம்ம மகளைக் கேக்குறாங்க" என்றாள் ஆனந்தமாக.

சண்முகத்துக்கும் சந்தோஷம் தான்.

"ஆஹா! ஸ்ரீதரன் தானே? நல்லாத் தெரியும். மெட்டல் பேஸ்ட் கம்பெனியும், கார் ஷோரூம் ஒண்ணும் வெச்சிருக்கான். நல்ல வசதி தான். ஆனா பையனுக்கு 30 வயசு இருக்குமே?" என்றார்.

"ஆமாங்க! 31 ஆவுதாம். இத்தனை ஆண்டுகளா தொழில் தொழில்னு இருந்ததுனால அவனால கல்யாணத்தைப் பத்தி நெனச்சுப் பார்க்க முடியலையாம். இப்ப நல்ல நிலைக்கு வந்ததால தான் சம்மதிச்சானாம். அண்ணி சொன்னாங்க" என்றாள்.

வயது அதிகம் என்றதும் ராணியின் முகம் சுருங்கியது.

"ஏங்க! ஆம்பிளைங்களுக்கு 31 வயசெல்லாம் ஒரு வயசே இல்லீங்க! சென்னையில சொந்த வீடு கூட கட்டிக்கிட்டு இருக்கானாம். அவனுக்கு நம்ம மகளைக் கட்டிக்கொடுத்தா அவ பேருக்கு ஏத்தா மாதிரி ராணியாவே இருப்பா" என்றாள் தங்கம். அவள் கண்களில் கனவுகள்.

"எனக்கு ஒண்ணும் பிரச்சனை இல்லை தங்கம். இதுக்கு உன் மகனுங்க ஒத்துக்கணும், எல்லாத்துக்கும் மேலா நம்ம ராணிக்கு இதுல இஷ்டம் இருக்கணுமே?" என்றார் சண்முகம்.

"ராணிக்கு என்னங்க தெரியும்? நாம சொன்னா தட்டவா போறா?" என்றாள் நம்பிக்கையாக.

அதற்குள் சபாவும் மற்றவர்களும் வரவே பேச்சு தடைப்பட்டது. சங்கரி உணவு பரிமாற அவர்கள் உண்ணும் போதே பேச்சை ஆரம்பித்தாள் தங்கம். எல்லா விவரங்களையும் கேட்டு விட்டு வேண்டாம் எனத் தலையசைத்தான் சபா.

"ஏண்டா வேண்டாம்? எவ்வளவு நல்ல இடம்? உனக்கு என்ன பைத்தியமா?" என்றாள் தங்கம் ஆத்திரமாக.

"என்னம்மா நீ? உன்னாலயோ எங்களாலயோ தங்கச்சியைப் பிரிஞ்சி இருக்க முடியுமா? நீங்களே யோசிச்சுப் பாருங்க. நாலு நாள் சேர்ந்தாப்புல அவளைப் பார்க்காம நம்மால இருக்க முடியுமா?" என்றான்.

யோசிக்க ஆரம்பித்தாள் தங்கம்.

"அண்ணன் சொல்றது சரி தானேம்மா? ஒரு முறை அவ கல்லூரியில உல்லாசப் பயணம் கூட்டிக்கிட்டுப் போனாங்க தேக்கடிக்கு. அவ கிளம்பிப் போன அடுத்த நாளே நானும் மாணிக்கமும் போயி அவளைக் கூட்டிக்கிட்டு வந்துட்டோமே? நினைவிருக்கா? அவ வர வரைக்கும் நீ எப்படி அழுதே?" என்றான் முத்தழகன்.

தங்கத்தால் இதற்கு பதிலே சொல்ல முடியவில்லை.

"இப்ப என்னடா செய்ய? எனக்கு இஷ்டம்னு நான் மாசி அண்ணன் கிட்ட சொல்லிட்டேனே? அவங்க என்னைத் தவறா நினைச்சுட்டாங்கன்னா? என்ன செய்ய?" என்றாள் தங்கம் இரங்கிய குரலில்.

"அதுக்காக ஏம்மா கவலைப் படுற? அந்தப் பையனை செய்யுற தொழிலை நம்ம ஊர்ல செய்யச் சொல்வோம். அதுக்கு அவன் ஒத்துக்கிட்டு வந்தான்னா மேற்கொண்டு பேசுவோம். இல்லைன்னா நாம வேண்டாம்னு சொல்லையே?" இந்த அழகான யோசனையைச் சொன்னவன் மாணிக்க வேலன்.

அப்படியே செய்வதாகத் தீர்மனிக்கப்பட்டது. ஆனால் சங்கரிக்குத்தான் இவர்கள் ஏதோ தவறு செய்கிறார்கள் எனத் தோன்றிக்கொண்டே இருந்தது. ஏனெனில் ராணிக்குச் சென்னையில் வசிக்க வேண்டும் என்ற ஆர்வம் உண்டு என்பதும் அவளுக்குத் தெரியும். சம்பந்தப்பட்ட அவளே பேசாமல் இருக்கும் போது நமக்கென்ன வந்தது? என ஒதுங்கிக் கொண்டாள். ஆனால் இரவு தனித்திருக்கும் போது கணவனிடம் புலம்பவே செய்தாள்.

"என்னங்க! இதை விட நல்ல சம்பந்தம் கிடைக்குமா? என்னைக்கா இருந்தாலும் ஒரு பொண்ணு, கல்யாணம் கட்டி இன்னொருத்தன் வீட்டுக்குப் போக வேண்டியவ தானே? இப்ப நானே வரலியா?" என்றாள்.

"உன்னை மாதிரி இல்லை என் தங்கச்சி. அவளுக்கு சொந்தம் பந்தம் எல்லாம் இருக்காங்க. அவ ஏன் எவன் வீட்டுக்கோ போயி கஷ்டப்படணும்?" என்றான் கோபமாக.

"அப்படி நினைக்காதீங்க! வீட்டோட உங்க தங்கச்சியை வெச்சிருக்கலாம். ஆனா அவளுக்குக் கல்யாணம் ஆகி, மாப்பிள்ளை வந்த பிறகு அவரையும் கூடவே வெச்சிருக்குறது, கொஞ்சம் பிரச்சனைகளை உண்டாக்கும். நல்லா யோசிங்க" என்றாள்.

"நல்லா யோசிச்சு தான் இந்த முடிவுக்கு வந்திருக்கேன். உனக்கு என்ன? ராணி மேல பாசமே இல்லையா?" என்றான் கடுங்கோபமாக. இதற்கு மேலும் பேசினால் தேவையில்லாமல் சண்டை தான் வரும் என உணர்ந்தவளாக படுத்து உறங்கி விட்டாள். தீர்மானித்தவாறே மாசிலாமணியிடம் விஷயம் சொல்லப்பட்டது. கேட்டதுமே அவர் ஒரே வார்த்தையில் முடியாது என்று விட்டார். "என் மகன், வீட்டோட மாப்பிள்ளையா இருக்க சம்மதிக்க மாட்டான்" என்பதே அவர் பதில். விட்டது கவலை என மற்றவர்கள் தங்கள் வேலையில் ஆழ்ந்தார்கள்.

டிவில் சின்னத்தம்பி படத்தைப் பார்த்துக்கொண்டிருந்த சங்கரிக்கு பகீர்ன்றது. என்னடா இது? நம்ம வீட்டுக் கதை போல இருக்கிறதே? அதே மாதிரி மூன்று முரட்டு அண்ணன்கள், அதே போலத் தங்கையின் காதல். ஒரு வேளை இதில் வரும் குஷ்பூவைப் போல யாருக்கும் தெரியாமல் ராணி நிதியின் கையால் தாலி கட்டிக்கொண்டு விட்டாளோ? எனப் பயந்தாள் சங்கரி. பிறகு படம் பார்க்கவே தோன்றவில்லை. எழுந்தவள் ராணியின் கழுத்தை உற்று உற்றுப் பார்த்தாள். அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் என்பதைப் போல அவளுக்கு ஏதோ மஞ்சள் கயிறு இருப்பதைப் போலவே பட்டது.

"என்ன அண்ணி? என்ன பார்க்குறீங்க?"

"ஒண்ணுமில்ல, உன் கழுத்துல ஏதோ பூச்சி மாதிரி இருந்ததே?" என்று சொல்லி அருகில் வந்து தொட்டே பார்த்தாள். நல்ல வேளை எதுவும் இல்லை. நிம்மதிப் பெருமூச்சோடு "ஒண்ணுமில்ல" என்றாள் சங்கரி. சிரித்தாள் ராணி.

"அண்ணி! இப்ப நீங்க பார்த்த அதே படத்தை நான் நேத்தே பார்த்தாச்சு. நான் திருட்டுத்தனமா தாலி கட்டிக்க மாட்டேன். கவலைப் படாதீங்க." என்றாள். அசடு வழிய உள்ளே சென்றாள் சங்கரி. ரணியின் கல்யாணப் பேச்சு முடிந்தது என நினைத்தாள் சங்கரி. ஆனால் சபாவும், முத்தழகனும், மாணிக்க வேலனும் தினம் ஒரு வரனைப் பற்றிப் பேசினர். அவர்கள் சொன்ன வரன் ஒருவரையுமே சங்கரிக்கே பிடிக்கவில்லை. ஒருவன் மணல் காண்டிராக்ட் எடுப்பவன். படிப்பு வெறும் +2வோடு சரி. மற்றொருவன் ரியல் எஸ்டேட் பிசினஸ். படிப்பும் பொறியியல் முடித்திருந்தான். ஆனால் அவனுக்குப் பெண்கள் தொடர்பு அதிகம் எனக் கேள்விப்பட்டிருந்தாள். இப்படி ஒவ்வொன்றும் தட்டிப் போனது. எல்லாவற்றையும் மௌனமாக வேடிக்கை பார்த்திருந்தாள் ராணி. நிதி என்பவனைக் காதலிப்பதாக அவள் சொல்லவே இல்லை.

அப்போது தான் ஒரு நாள் எல்லாருக்கும் பிடித்த மாதிரியான வரன் ஒன்று வந்தது. பையன் டிகிரி முடித்து விட்டு உள்ளூரிலேயே செங்கல் சூளை, கலவை தயாரிக்கும் கம்பெனி என வைத்திருந்தான். பூர்வீக சொத்தும் அதிகம். அப்பா, அம்மாவுக்கு ஒரே மகன். ஆனால் இரு அக்காக்களுக்குப் பிறகு பிறந்தவன். சற்று தோலைவில் இருக்கும் காலனியில் வீடு. பார்க்கவும் நன்றாக இருக்கிறான் என அனைவரும் சம்மதித்துப் பெண்பார்க்க வரச் சொல்லலாம் என எண்ணினர். அப்போது தான் தன் காதலை வீட்டில் போட்டு உடைத்தாள் ராணி. அதோடு அண்ணிக்கும் தெரியும் என ஒரு வார்த்தை சொல்லி விட்டதால் வீட்டில் பூகம்பம் வெடித்தது.
 
Top