Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

தாலாட்டும் தென்றல் 8....

Advertisement

Srija Venkatesh

Well-known member
Member
அத்தியாயம் 8.

சிவன் கோயிலில் வைத்து ராணிக்குத் தன்னால் முடிந்த அளவு நல்ல புத்தி சொல்ல வேண்டும் என நினைத்துக்கொண்டு அவளை அழைத்துச் சென்றாள். ஆனால் அவளுக்குக் காத்திருந்தது அதிசயமான ஒரு விஷயம். சாமி கும்பிட்டு முடித்து, பிரசாதத்தையும் வாங்கிக் கொண்டு ஒரு ஓரமாக அமர்ந்தனர் நாத்தனாரும், மதனியும். அமைதியான நீண்ட பிரகாரங்கள், காதில் ஒலிக்கும் ஓம் நமச் சிவாய என்ற மந்திரம் என எல்லாம் சேர்ந்து தெய்வீகமாக இருந்தது.

"ராணி! நான் உங்கிட்ட சில விஷயங்கள் பேசணும்னு நினைக்கறேன்ம்மா. ஏன்னா இதைப் பத்தி நம்ம வீட்டுல உங்க அம்மா பேசுவாங்கன்னு எனக்குத் தோணல்ல. உன்னை என் தங்கச்சியாக் கூட நான் நினைக்கல்ல, என் மகளாவே நெனச்சு சொல்றேன். சொல்லலாமா?" என்றாள் சங்கரி.

அண்ணியின் கைகளைப் பிடித்து தன் கரங்களுக்குள் வைத்துக் கொண்டாள் ராணி.

"என்ன அண்ணி நீங்க? எங்கிட்டக் கேக்கணுமா? தாராளமா சொல்லுங்க" என்றாள் சுவரில் சாய்ந்து அமர்ந்து கொண்டு.

"கண்ணு! உனக்குக் கல்யாணமாகப் போகுது. பிறந்த வீடு எவ்வளவு முக்கியமோ, அதே அளவு புகுந்த வீடும் முக்கியம் இல்லியாம்மா?"

"ஆமா அண்ணி!"

"எல்லாத்துக்கும் மேல கட்டுன புருஷன் ரொம்ப முக்கியம். நிதி, வீட்டோட மாப்பிள்ளையா வர சம்மதிச்சுட்டாரு. ஆனா இதுல பல பிரச்சனைகள் வரலாம் ராணி! உங்க அண்ணன்கள் மூணு பேருமே கொஞ்சம் எடுத்தெறிஞ்சு பேசுற டைப்பு. உங்க அம்மாவும், அப்பாவும் எதுலயும் பட்டுக்க மாட்டாங்க. நாளைக்கே உங்க அண்ணனுக்கும் நிதிக்கும் பிரச்சனை வரலாம். அதனால நீ கொஞ்சம்... கொஞ்சம் என்ன? ரொம்பவே பக்குவமா நடந்துக்கணும் கண்ணு"

"சரி அண்ணி"

"பக்குவம்னா, ஒரு வேளை அவரு உங்கிட்டக் கோவப்படலாம். அப்ப நீ வார்த்தைக்கு வார்த்தை எதுர்த்துப் பேசாம பணிஞ்சு போகணும். புரியுதா ராணி?

"நல்லாப் புரியுது அண்ணி!"

"உங்கிட்ட இன்னொரு விஷயம் கேக்கணும்னு நெனச்சேன். நிதியோட அம்மா. பாவம் அவங்க. தனியா இருக்கணும். அதைப் பத்தி யோசிச்சியா ராணி?" என்றாள் மெதுவாக.

ராணியின் முகத்தில் எந்த உணர்ச்சியும் இல்லை. பதில் பேசவும் இல்லை.

"நம்ம நாட்டுல பாரம்பரியமா, பொண்ணுங்க தான் கல்யாணமானப்புறம் புகுந்த வீட்டுக்குப் போவாங்க. அங்க நாத்தனார், மச்சினர்னு ஏகப்பட்ட உறவுகள் இருக்கும். அதுல அவங்க அட்ஜஸ்ட் பண்ணிக்கிட்டுப் போகணும். "

"நீங்க இப்போ இருக்குறா மாதிரி. இல்லியா அண்ணி?" என்றாள் சட்டென ராணி.

"இல்லம்மா! நான் எந்த விதமான அட்ஜஸ்ட்மெண்டும் பண்ணிக்கல்ல. ஏன்னா என்னோட இயல்பே இது தான். எனக்கு வீட்டைப் பார்த்துக்கவும், சமையல் செய்யவும் ரொம்பப் பிடிக்கும், அதனால என்னைப் பத்தின பேச்சு இப்போ வேண்டாம் சரியா? இது உன்னோட எதிர்காலம். அதைப் பத்தி தான் பேசணும்."

"சரி அண்ணி"

"உனக்குக் கடவுள் புண்ணியத்துல் நாத்தனாருங்க கல்யாணமாகி வேற வீட்டுல இருக்காங்க. மச்சினர்கள்னு யாருமில்ல. அதனால நான் என்ன சொல்ல வரேன்னா, தயவு செஞ்சு அம்மாவையும் மகனையும் பிரிக்காதே ராணி."

"இல்லியே? நான் பிரிக்கலையே? அவங்களாத்தானே நான் தனியா இருந்துக்கறேன்னு சொன்னாங்க?" என்றாள் ராணி.

"நல்லா யோசிச்சுப் பாரு ராணி! அவங்க எப்ப அப்படி சொன்னாங்க. தன்னால தன் மகன் கல்யாணம் நின்னிருமோன்னு நெனச்சு அப்படி சொன்னாங்க. அவங்க பெரிய மனசை நாம புரிஞ்சுக்கணும், இல்லியா?"

மீண்டும் மௌனமானாள் நாத்தனார். சங்கரி தொடர்ந்தாள்.

"ராணிக்கண்ணு! என்ன இருந்தாலும் நீ ரொம்பச் செல்லமா வளர்ந்த பொண்ணு. நீ இங்கேயே இருந்தா எப்பவுமே உங்க அண்ணன்களோட நிழல்ல தான் இருக்கணும். உனக்குன்னு ஒரு குடும்பம், வாழ்க்கை வேணும் இல்லம்மா?" என்றாள் இதமாக.

அண்ணியை நோக்கி சிரித்தாள் ராணி.

"இதைப் பத்தியெல்லாம் நாங்க யோசிக்காம இருப்போமா அண்ணி?" என்றாள். வாயடைத்துப் போனாள் சங்கரி.

"ஆங்! நீ என்ன சொல்ற ராணி?"

"ஆமாண்ணி! நானும் நிதியும் இதைப் பத்தி நிறையே பேசிட்டோம்."

"என்ன முடிவு எடுத்திருக்கீங்க?"

மீண்டும் அண்ணியின் கைகளைப் பிடித்துக்கொண்டாள். அவளது முகம் சீரியசாக இருந்தது. என்ன குண்டு வரப் போகிறதோ எனக் கலங்கினாள் சங்கரி.

"அண்ணி! நான் சொல்றதேக் கேட்டு நீங்க கோவப்படக் கூடாது. இதை மத்தவங்க கிட்ட சொல்லவும் கூடாது. சரியா?" என்றாள் ராணி. வயிற்றைக் கலக்கியது சங்கரிக்கு. எதற்கு இந்தப் பீடிகை?

"உம்! சரி! நான் சொல்ல மாட்டேன் ராணி! ஆனா சந்தர்ப்பம் வரும் போது, அண்ணிக்கு இது தெரியுமேன்னு சொல்லி நீ என்னை மாட்டி வைக்கக் கூடாது. என்ன?" என்றாள் தற்காப்பாக. அதைக் கேட்டதும் ராணியின் முகம் சுருங்கி விட்டது.

"உன்னைக் குத்திக் காட்டணும்னு நான் இதைச் சொல்லல்லடா! ஆனா என் நிலைமையையும் நீ புரிஞ்சுக்கணும் இல்ல? அதுக்குத்தான் சொன்னேன்." என்றாள் சமாதானமாக.

ராணி புன்னகைத்தாள். "இப்ப உங்களுக்கு என்ன தெரியணும் அண்ணி?" என்றாள்.

"கோவிச்சுக்காதே ராணி! நீங்க என்ன முடிவு எடுத்துருக்கீங்க? அதைப் பத்தி தானே பேசிக்கிட்டு இருந்தோம்?" என்றாள் மீண்டும் அழுத்தமாக.

"உம்! ஆமா ஆமா! சரி சொல்றேன். ஆனா இதை எக்காரணம் கொண்டும் அண்ணன் கிட்ட சொல்லக் கூடாது"

"இல்லை சொல்லு"

"வந்து அண்ணி! வந்து...நிதிக்கு சென்னையில ஒரு கம்பெனியில நல்ல வேலை கெடச்சிருக்கு. மாசம் 50,000 சம்பளம்." என்றாள் மகிழ்ச்சியான குரலில். வியர்த்துப் போனது சங்கரிக்கு.

"ராணி! என்னம்மா இது? புதுசா இருக்கு?"

"அது! வந்து...நீங்க சொன்னா மாதிரியே தான் நாங்களும் யோசிச்சோம். அதனால நாங்களே தனியா இருக்கலாம்னு முடிவு செஞ்சோம். உள்ளூரிலேயே தனியா வீடு எடுத்தா அண்ணனுங்க சும்மா இருக்க மாட்டாங்களே? அதனால தான் நிதி சென்னையில வேலை தேடிக்கிட்டாரு. அவரு ஃபிரெண்டு கிட்ட சொல்லி வீடு கூட பார்க்கச் சொல்லியிருக்காரு" என்றாள் அமைதியாக.

அசந்தே போனாள் சங்கரி. எவ்வளவு வேலை செய்திருக்கிறார்கள்? யாருக்குமே எதுவுமே தெரியவில்லையே? இதனை சாமர்த்தியம் என்பதா? இல்லை தைரியம் என்பதா? யோசிக்க யோசிக்க ஆச்சரியம் அதிகமானதே தவிரக் குறையவில்லை.

"எல்லாம் சரிதான் ராணி! ஆனா கல்யாணத்துக்கப்புறம் நீ சென்னை போறதை உங்க அண்ணன் கிட்ட எப்போ சொல்லப் போற? அவங்களுக்குத் தெரியாம எத்தனை நாள் மறைக்கப்போறே? முதல்ல எதுக்கு மறைக்கணும்?" எனக் கேட்டாள் சங்கரி. இதை ஏன் மறைக்க வேண்டும் என உண்மையிலேயே அவளுக்குப் புரியவில்லை.

"உம்! கட்டாயம் சொல்லத்தான் போறோம் அண்ணி! ஆனா கல்யாணம் முடிஞ்ச பிறகு."

"ஏன் இப்பவே சொன்னா என்ன?"

"என்ன அண்ணி? புரியாமப் பேசுறீங்க? இப்பவே சொன்னா, உள்ளூர்லயே வேலை பார்க்குற மாப்பிள்ளை தான் வேணும்னு சொல்லிட்டா? அதான்" என்றாள்.

மேலும் மேலும் வியப்பு கூடிக்கொண்டே போனது. உலகமே தெரியாது என அனைவரும் சொல்லும் ராணியா இப்படியெல்லாம் யோசிக்கிறாள்? என எண்ணிக் கொண்டாள் சங்கரி.

"எனக்கு ரொம்ப சந்தோஷம் தான் ராணி. ஆனா பாவம் மத்தவங்களுக்கு ரொம்ப ஏமாத்தமா இருக்கும்" என்றாள் சங்கரி.

"உம்! ஆனா அதுக்காக நாங்க எங்க வாழ்க்கையை மாத்திக்க முடியாது இல்ல?" என்றாள் உறுதியாக. மீண்டும் வாயடைத்துப் போனது சங்கரிக்கு.

"ஆனா...எனக்கு உண்மையைச் சொல்லு! நீ உன்மையிலேயே இதை விரும்புறியா? உன்னால உங்க அண்ணனுங்களை விட்டுப் பிரிஞ்சு இருக்க முடியுமா? அது மட்டுமில்ல ராணி..தனியா குடித்தனம் செய்யுறதுல நிறைய விஷயம் இருக்கு"

"தெரியும் அண்ணி! நான் ஆசைப்பட்டதால தான் நிதி, சென்னையில் வேலை தேடிக்கிட்டாரு. எனக்கு இந்தச் சின்ன ஊருல இருந்து அலுத்துப் போச்சு. கொஞ்சம் நல்லா டிரெஸ் செஞ்சுக்கிட்டா உடனே எல்லாரும் ஆன்னு பார்ப்பாங்க. சுத்தி சுத்தி நம்ம சொந்தக்காரங்க. நான் எங்கியாவது போனா, உன் தங்கச்சியை அங்கே பார்த்தேன், இங்கே பார்த்தேன்னு போட்டுக் கொடுப்பாங்க. இதையெல்லாம் விட்டுட்டு சுதந்திரமா இருக்கணும் அண்ணி." என்றாள் கண்களில் கனவுகளோடு.

மீண்டும் அடிவயிற்றில் கலக்கியது சங்கரிக்கு. எதுவோ எங்கோ இடறுகிறதே? என நினைத்துக்கொண்டாள்.

"வந்து...ராணி! தனிக்குடித்தனம்னா இது மட்டும் இல்லம்மா. நிறைய பொறுப்புக்கள் இருக்கும், நிறைய வேலைகள் இருக்கும். அதுக்கெல்லாம் நீ தயாரா?" கொஞ்சம் பயத்துடனே தான் கேட்டாள்.

"நாங்க ரெண்டே பேரு தானே அண்ணி? வீட்டு வேலைக்கு ஆள் வெச்சுக்கிட்டா போச்சு. நிதியே சூப்பரா சமைப்பாராம். அப்புறம் என்ன? மத்த சின்ன சின்ன வேலைகளை நான் செஞ்சுக்குவேன். அப்படி இல்லைன்னா இருக்கவே இருக்கு ஹோட்டல். அதுவும் அங்க ஆர்டர் செஞ்சா வீட்டுக்கே வந்து குடுத்துட்டுப் போயிருவாங்களாம்" என்றாள் கண்களில் கனவு மிதக்க.

பயமும் குழப்பமும் வந்து சூழ்ந்து கொண்டது சங்கரியை. ஒரு முறை பேசும்போது மிகவும் முதிர்ச்சியாகவும் எல்லாவற்றையும் நன்கு யோசித்து முடிவு செய்தவள் போலவும் பேசுகிறாள். ஆனால் அடுத்த நிமிடமே சிறு குழந்தை போல விஷயத்தின் தீவிரம் தெரியாமல் பேசுகிறாள். தனிக்குடித்தனம் என்பது எவ்வளவு பெரிய விஷயம்? வெறும் 50,000 ரூபாய் சம்பளத்தில் வாடகை கொடுத்து, வேலைக்காரி வைத்து கட்டுப்படியாகுமா சென்னையில்? அதோடு அலுவலகம் போகும் நிதியால் எத்தனை நாள் தொடர்ந்து சமையல் வேலையைக் கவனிக்க முடியும்? இவளானால் சமைக்கும் நோக்கமோ, வீட்டு வேலை செய்யும் நோக்கமோ இல்லாதது போலவே பேசுகிறாள்.

ஒருவேளை நான் தான் தேவையில்லாமல் கவலைப் படுகிறேனோ? தன் வீடு, தன் கணவன் என வரும் போது பெண்களுக்கு தானாக பொறுப்பும் பக்குவமும் வந்து விடுமோ? அப்படித்தான் இருக்கும். ராணி நிச்சயம் எல்லாவற்றையும் யோசித்து அவனோடு பேசித்தானே இந்த முடிவுக்கு வந்திருக்க வேண்டும்? அப்படி இருக்க நான் ஏன் கவலைப் பட வேண்டும்? எல்லாம் நல்லபடியாக நடக்கும். என முடிவு செய்து கொண்டாள். ஆனால் அதற்கும் மேலே யோசிக்க முடியாமல் கல்யாண வேலைகள் தலைக்கு மேலே இருந்தன. குறிப்பிட்ட நாளில் நல்ல நேரத்தில் அருள் நிதி, ராணியின் கழுத்தில் தாலி கட்டினான்.
 
கல்யாணம் நடந்திருச்சா.....சங்கரி இனி நீ நீங்கள் கவலைப்படாத...எல்லாம் அவங்க பாடு....அவ நல்லா விவரமாத்தான் இருக்கா...

நிதி..உன்னையப் பார்த்தா...அய்யோ அய்யோ ???
 
Last edited:
கல்யாணம் நடந்திருச்சா.....சங்கரி இனி நீ நீங்கள் கவலைப்படாத...எல்லாம் அவங்க பாடு....அவ நல்லா விவரமாத்தான் இருக்கா...

நிதி..உன்னையப் பார்த்தா...அய்யோ அய்யோ ???
உண்மையிலேயே நிதி பாவம் தான். ஹூம்!
 
Top