Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

தாலாட்டும் தென்றல் 9....

Advertisement

Srija Venkatesh

Well-known member
Member
அத்தியாயம் 9.

ராணியின் கல்யாணம் முடிந்து ஆராவரங்கள் அடங்கிய பிறகு மெல்ல தனது குண்டைப் போட்டாள் ராணி. நிதிக்கு சென்னையில் வேலை கிடைத்திருக்கிறது என்றும் தாங்கள் அங்கே செல்லப் போவதாகவும் அறிவித்தாள். மூன்று அண்ணன்மார்களும் கொதித்து எழுந்தனர். நிதியைக் கண்ட மேனிக்குத் திட்டினர். அவன் தான் சதி செய்து ராணியைத் தங்களிடமிருந்து பிரிக்கப் பார்க்கிறான் என ஆடித்தீர்த்தனர். இல்லை என்று சொல்ல வாய் வராமல் ஊமையாக வேடிக்கைப் பார்த்திருந்தாள் சங்கரி. கண்டிப்பாக தன் கணவனை விட்டுக் கொடுக்க மாட்டாள் ராணி, சென்னை செல்லும் யோசனை தன்னுடையது தான் எனச் சொல்வாள் என எதிர்பார்த்தாள் அவள். ஆனால் ராணி வாயே திறக்கவில்லை. ஒரு கட்டத்தில் வீட்டு மாப்பிள்ளையான அருள் நிதியை எங்கே அடித்து விடுவார்களோ என பயந்தாள். சட்டென தணிந்து போனான் அவன்.

"மச்சான், நான் வேணும்னா அந்த வேலையை வேண்டாம்னு சொல்லிடறேன். நீங்க இப்படிப் பேசுறது எனக்குக் கஷ்டமா இருக்கு" என்றான்.

ஓடி வந்து முதுகில் தட்டினான் மாணிக்கம்.

"இது கேக்க எவ்வளவு நல்லா இருக்கு? இப்பவே அந்தக் கம்பெனிக்கு வேலை வேண்டாம்னு எழுதிப் போடு. என்ன பெரிய சம்பளம் குடுத்துருவாங்க? மிஞ்சிப்போனா 30,000 குடுப்பாங்களா? அதை நான் குடுக்கறேன். நீ இங்கேயே இரு" என்றான் சபா.

இந்த திருப்பத்தை எதிர்பாராத ராணி, திகைத்தாள். கணவனுக்குக் கண்ணைக் காட்டினாள். அவனுக்கு என்ன புரிந்ததோ? பேசாமல் நின்றான்.

"அண்ணே! நீங்க என் மேல பாசம் வெச்சிருக்கீங்க. புரியுது. ஆனா அவருக்கு கொஞ்சம் ஈகோ அதிகம். உங்க கிட்ட எப்படிக் கை நீட்டி சம்பளம் வாங்குறதுன்னு யோசிக்குறாரு. ஆனாலும் எனக்காக விட்டுக் கொடுக்குறாரு" என்றாள் நைச்சியமாக.

கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் நடந்த வாக்குவாதத்தில் அழுது, கெஞ்சி சிரித்து தன் காரியத்தை சாதித்துக்கொண்டாள் ராணி. வரும் 20ஆம் தேதி ராணியும், நிதியும் சென்னைக்குப் பயணப்படுவதாக தீர்மானிக்கப்பட்டது. நிதியின் அலுவலக நண்பர்கள் வீடு பார்த்து விட்டதாகவும், உடனே போய் குடியேறலாம் எனவும் சொன்னாள் ராணி. சங்கரிக்கு ஆச்சரியத்துக்கு மேல் ஆச்சரியம். ராணிக்கு எப்படி இந்த தைரியமும் தன்னம்பிக்கையும் வந்தது என யோசித்தாள். அதே நேரம் எல்லாமே ஒரு வேளை சிறுபிள்ளைத்தனத்தின் எதிரொலியாகவே இருக்குமோ? எனவும் பயந்தாள்.

ராணியும், நிதியும் சென்னை கிளம்பும் அன்று எதிர்பாராத விதமாக சபாவின் தொழிலில் ஏதோ சிக்கல் வரவே அண்ணன்களால் வர முடியாமல் போனது. ஆகையால் அண்ணி என்ற முறையில் சங்கரி தான் புதுமணத் தம்பதியினரை அழைத்துக்கொண்டு கிளம்பினாள். சபா அவளிடம் நிறையப் பணம் கொடுத்து வைத்திருந்தான். வீட்டுக்குத் தேவையான பொருட்கள் வாங்க, மிக்சி, கிரைண்டர் இப்படி சாதனங்கள் வாங்க என செலவு செய்யச் சொல்லியிருந்தான். இது தான் முதல் முறை சங்கரி சென்னை செல்வது. ஸ்டேஷனில் இறங்கி ஆட்டோவில் பயணித்து வீட்டை அடைந்தார்கள். மிகப்பெரிய கட்டிடம். ஆனால் சற்றே பழசாக இருந்தது. அடுக்குமாடி குடியிருப்புகள். படிகள் ஏறி வீட்டை அடைந்தார்கள். இரண்டாவது மாடியில் வீடு. லிஃப்ட் இல்லை. சினிமாவில் வரும் அப்பார்ட்மெண்டுகள் போல இல்லை இது. சுற்று முற்றும் பார்த்தவாறே நடந்தாள்.

வீட்டைத் திறந்து உள்ளே நுழைந்தார்கள். வீடு மிகவும் சிறியதாக இருந்தது. ஒரு ஹால், ஒரு பெட்ரூம் கிச்சன். சிறிய பால்கனி. ஊரில் அத்தனை பெரிய வீட்டில் இருந்து விட்டு ராணி எப்படி இதில் வாழப் போகிறாள்? என்ற கேள்வியோடு கிச்சனை ஒழுங்கு செய்ய ஆரம்பித்தாள். சிறியதாக இருந்தாலும் வசதியாக இருந்தது. நிறைய ஷெல்ஃபுகள் இருந்தன. இதை எப்படி அலங்கரிக்கப் போகிறாய்? எனக் கேட்பதற்குள் பாத்ரூமுக்குள் போய் புகுந்து கொண்டாள் ராணி. அன்றைய தினம் சமைக்க வேண்டாம் எனச் சொல்லி விட்டு ஹோட்டலில் இருந்து ஆர்டர் செய்தான் நிதி. சுவையான சாப்பாடு வீடு தேடி வந்தது. சாப்பிட்டு விட்டு இருவரும் அறைக்குள் போய்ப் புகுந்து கொண்டனர். சற்றே எரிச்சல் வந்தாலும் சின்னஞ்சிசிறிசுகள் என எண்ணிக் கொண்டாள்.

மூன்று மணி சுமாருக்குக் கதவைத் திறந்தவள் எரிச்சல் பட்டாள்.

"என்ன அண்ணி? இன்னமும் டீ போடலையா?" என்றாள்.

"பால் எங்கே இருக்கு?" என்றாள் சங்கரி.

"இல்லேன்னா போய் வாங்கிட்டு வர வேண்டியது தானே?" என்றாள் ராணி.

இனிமேலும் பேசாமல் இருந்தால் நன்றாக இருக்காது என எண்ணி "இதைப் பாரு ராணி, இது உன் வீடு. நான் இப்ப கெஸ்ட். நியாயப்படி நீ தான் டீ போட்டுத்தரணும். பால் வாங்கினாக் கூட காய்ச்சுறதுக்கு அடுப்பு எங்க? பாத்திரம் எங்கே? புதுக்குடித்தனம்னா ஜாலியா இருக்கலாம்னா நெனச்சே?" என்றாள் சுள்ளென.

"அக்கா! நான் போய் டீ வாங்க்கிட்டு வரேன். பக்கத்துல தான் கடை இருக்கு" என்றபடி ஓடினான். ஏனோ மனதை பயம் அச்சுறுத்த பேசாமல் கிச்சனுக்குள் போய் அமர்ந்து கொண்டாள் சங்கரி. இன்னமும் எத்தனை வேலைகள் இருக்கின்றன? இப்படிப் பொறுப்பிலாமல் இருந்தால் என்ன செய்ய? என்று எரிச்சல் பட்டாள்.

"அண்ணி! இந்த வீட்டுக்கு என்னென்ன தேவைன்னு லிஸ்ட் போடுங்க. சாயங்காலமே போய் வாங்கிட்டு வந்துடலாம். நீங்க எப்படியும் இன்னும் மூணு நாள் தங்கணும் இல்ல? அதுக்குள்ள எல்லாத்தையும் ஒதுங்க வெச்சுக் குடுத்துருங்க. எனக்கு இதெல்லாம் பழக்கமில்லை இல்லியா?" என்றாள் நயமாக.

காதலிக்கத் தெரியுமாம், வீட்டை விட்டு வெளியே தான் வாழ வேண்டும் எனப் பிடிவாதம் பிடித்து வரத் தெரியுமாம். ஆனால் வீட்டுக்குத் தேவையான பொருட்கள் தெரியாதாம். நன்றாக இருக்கிறதே நியாயம்? என எண்ணிக் கொண்டாள். சூடாக டீ குடித்ததும் கொஞ்சம் தெம்பு வந்தது. நிதி மிகவும் உதவியாக இருந்தான். பேப்பரில் சங்கரி சொல்லச் சொல்ல லிஸ்ட் போட்டான். நடு நடுவே ராணி தேவையில்லாமல் ஏதேதோ பொருட்களைச் சொல்லி எரிச்சல் மூட்டினாலும் பொறுமையாக இருந்தான். ஏகப்பட்ட பொருட்கள் வாங்க வேண்டியது இருக்கவே இரு நாட்களாக அவற்றைப் பிரித்துக்கொள்ளலாம் என எல்லாவற்றையும் திட்டமிட்டாள் சங்கரி. பாத்திரங்கள் முதல் கேஸ் அடுப்பு வரை முதல் நாளில் என்றும், மிக்சி, கிரைண்டர், இன்ன பிற சாதனங்களை மறு நாள் வாங்கிக்கொள்ளலாம் எனவும் பேசினார்கள். அதன் படியே எல்லாம் செய்தாயிற்று. சங்கரி பணம் கொடுக்க முன் வந்த போது நிதி தான் சற்றே சங்கடப்பட்டானே ஒழிய ராணி எதுவுமே பேசவில்லை. பொருட்களை வைத்த பிறகு வீடு இன்னமும் சின்னதாக ஆனது போலத் தோன்றியது. வாஷிங்க் மெஷின் முதற்கொண்டு செட் செய்தாயிற்று.

சங்கரி கிளம்பி வந்து விட்டாள். இவள் எப்போது போவாள் என எதிர்பார்த்தது போல விடை கொடுத்தாள் ராணி. கடந்த மூன்று நாட்களில் ராணி அண்ணன்களிடம் பேசியது தான் அதிகம். வீட்டை செட் செய்யவோ, சமைக்கவோ அவள் வரவே இல்லை. கட்டிய கணவனே பேசாமல் இருக்கும் போது நமக்கென்ன? என்று விட்டு விட்டாள் சங்கரி. அண்ணி கிளம்பியதும் உற்சாகம் தொற்றிக்கொண்டது ராணியை. இது என் வீடு. இதில் உண்மையிலேயே நான் ராணி என உல்லாசாமாக வளைய வந்தாள். சமைக்கவே தெரியாது என்பதால் நிதி பாதி நேரம் சமைத்தான், மற்ற நேரம் கடையில் வாங்கிக்கொண்டார்கள். அந்த மாத இறுதியிலேயே பிரச்சனை ஆரம்பித்தது. நிதிக்கு வரும் சம்பளத்தில் வாடகை கொடுத்து, கரண்டு பில் கொடுத்து என எல்லாவற்றையும் கொடுத்த பிறகு கையிலிருந்த பணம் கொஞ்சம் தான். ஆனால் அது பெரும்பகுதி உணவு வாங்கவே செலவழிந்து போனது. அதோடு நினைத்தால் பீச், நினைத்தால் சினிமா என செலவுகள் கட்டுமீறிப் போயின.

அன்று நிதி ஆபீஸ் விட்டு வரும் போது நன்றாக அலங்கரித்துக்கொண்டு காத்திருந்தாள் ராணி. மனைவியை அத்தனை அழகாகப் பார்த்ததும் உற்சாகம் பொங்கியது அவனுக்கு. கட்டியணைத்துக்கொண்டான்.

"என்னங்க! சீக்கிரம் குளிச்சு ரெடியாயிட்டு வாங்க. நாம ஏதாவது மால் போகலாம். போற வழியில சமூசாவோ இல்லை வேற ஏதாவதோ வாங்கிச் சாப்பிடலாம். என்ன?" என்றாள் ஆசையாக.

அன்று அவன் மதிய உணவே சாப்பிடவில்லை. காரணம் கையில் காசில்லை. ஆனால் ராணி இப்படிப் பேசியதும் சட்டென கோபம் வந்தது அவனுக்கு.

"சே! உனக்கு வேற வேலையே இல்லியா? எப்பப் பார்த்தாலும் வெளிய போகணும், சாப்பிடணும். இதானா? என்னை மனுஷன்னு நெனச்சியா? இல்லை பணம் காய்க்குற மரம்னு நெனச்சியா?" என்றான் கோபமாக.

ராணியிடம் இது வரை யாருமே கோபமாகப் பசியது..அவ்வளவு ஏன் பார்த்தது கூட இல்லை. கணவன் கண்டித்ததும் அவளுக்குள் ஆத்திரம் மூண்டது. ஓவெனக் கத்தினாள். அதே நேரம் கண்ணீரும் பெருகியது.

"எதுக்கு இப்ப என்னைத் திட்டுன? நான் ஒண்ணுமே செய்யல்ல! எங்கண்ணனுங்க என்னை ஒரு நாள் கூட கோபமாப் பார்த்தது கூட இல்ல. உனக்கு என்ன திமிரு? உன் வீட்டு ஏழை புத்தி தானே உனக்கும் இருக்கும்? பணம் இல்ல, காசு இல்ல. இதைத் தவிர ஏதாவது சொல்லியிருக்கியா நீ?" என அழுதாள்.

மனைவி பேசிய வார்த்தைகள் ஒவ்வொன்றும் ஊசி போலக் குத்தின நிதியை.

"என்ன ரொம்பப் பேசுற? நான் ஏழைன்னு தெரிஞ்சு தானே கல்யாணம் செஞ்சுக்கிட்ட? இப்ப என்ன புதுசா?" என்றான்.

கணவன் தன்னை சமாதானப்படுத்துவான், சினிமாவில் பார்ப்பது போலக் கொஞ்சுவான், வெளியில் அழைத்துச் சென்று உடை வாங்கிக்கொடுப்பான் என்ற கற்பனையில் இருந்த ராணிக்கு கனவுகள் உடைந்ததைப் போலைருந்தது.

"என் மேல உனக்கு அன்பே இல்ல. இத்தனை நாள் நடிச்சிருக்க, அப்படித்தானே? இல்லைன்னா என்னை இப்படிப் பேசுவியா?" என்றாள் மீண்டும் கண்ணீர் பொங்க.

"முதல்ல நீ அழுறதை நிறுத்து. இப்ப என்ன நடந்ததுன்னு இப்படி ஒப்பாரி வைக்குற? பேசினது நீ தான். என்னைப் பார்த்து எழை வீட்டுப்பையன், அது இதுன்னு சொன்னா எனக்கு என்ன மான ரோசமே இருக்கக் கூடாதா?" என்றான் சற்றே தணிந்து.

"ஏதோஅ வாய் தவறி வந்திரிச்சு. நீயும் தானே என்னைத் திட்டினே?" என்றாள்.

இருவரும் ஒருவருக்கொருவர் ஏதேதோ சமாதானம் சொல்லி விட்டு பக்கத்துக் கடையிலிருந்து இட்லி வாங்கி சாப்பிட்டுவிட்டு உறங்கிப் போனார்கள். ஆனால் அந்த நிகழ்ச்சிக்குப் பிறகு அவர்களுக்குள் வாக்குவாதங்களும் சச்சரவுகளும் அதிகமாயின. அலுவலக நண்பர்கள் என் மனைவி சமைத்தது, என் மனைவி கை வேலை செய்தது என பெருமை அடித்துக்கொள்ளும் போது மனம் வலிக்கும் நிதிக்கு. ஒருவர் "ஏன் தினமும் ஹோட்டல்ல சாப்பிடுறீங்க?" என்று கேட்டே விட்டார். உடம்பு சரியில்லை என ஏதேதோ சொல்லி சமாளித்து விட்டாலும் அன்றைய இரவு ராணி நல்ல மூடில் இருக்கும் போது அவளிடம் பேசினான் நிதி.

"ராணி! எங்க ஆபீஸ்ல குமாரண்ணன்னு ஒருத்தர் இருக்காரு தெரியும் இல்ல? நமக்கு இந்த வீடு கூடப் பார்த்துக் கொடுத்தாரே?"

"ஆங்! நல்ல நினைவிருக்கு. நாம கூட அவர் வீட்டு விருந்துக்குப் போனோமே?"

"ஆமா! அவரே தான். அவர் என்னை ஒரு கேள்வி கேட்டாரு பாரு. என்னால பதிலே சொல்ல முடியல்ல"

"அப்படி என்ன கேட்டாரு?"

"ஏன் தினமும் ஹோட்டல்ல சாப்பிடுறீங்க? உங்க மனைவி சமைக்க மாட்டாங்களா?" அப்படீன்னாரு.

சற்று நேரம் அமைதியாக அமர்ந்திருந்தாள் ராணி.

"அதுக்கு நீ என்ன சொன்ன?" என்றாள் சில நிமிடங்களுக்குப் பிறகு.

"உனக்கு உடம்பு சரியில்ல, சமைக்கத் தெரியாதுன்னு என்னவோ சொல்லி சமாளிச்சேன்"

"எனக்கு சமைக்கத் தெரியாதுன்னா சொன்ன?"

தலையை ஆட்டினான் நிதி.

பொங்கி எழுந்தாள் ராணி.

"யாரு சொன்னா எனக்கு சமைக்கத் தெரியாதுன்னு. எங்க அண்ணி கிட்ட எல்லாமே கத்துக்கிட்டேன். நாளையில இருந்து பாரேன். நான் உனக்கு சமைச்சுத் தரேன்" என்றாள் வீராப்பாக.

நிம்மதியானான் நிதி. ஒரு பெரிய பிரச்சனை முடிந்தது என எண்ணிக் கொண்டான். அன்றைய இரவு நினைவாக காலை 6 மணிக்கு அலாரம் வைத்து விட்டு படுத்தாள். மறு நாள் வழக்கம் போல ஆறரைக்கு நிதி எழுந்த போது சமையலறையில் ஏதையோ போட்டு உருட்டிக்கொண்டிருந்தாள் ராணி. சூடாக டீ கிடைக்கும் என எண்ணிக் கொண்டான். அவன் மீண்டும் சமையலறைக்குப் போன போது சிரித்து விட்டான். வாணலியில் ரவை பாதி வெந்தும் வேகாமலும் ஒட்டிக்கொண்டிருந்தது, தரையில் வெங்காயம் தக்காளி நறுக்கியவைகள் அப்படியே தரையில் கிடந்தன. வெங்காயத் தோல் ஒரு புறம் பறந்து கொண்டிருந்தது.

"என்னடி செய்யுற?"

"ரவா உப்புமா செய்யலாம்னு நெனச்சேன். அது இப்படி ஆயிடிச்சு" என்றாள் அசடு வழிய.

"ரவா உப்புமா கூட உனக்கு செய்யத் தெரியாதா?"

"எங்க அண்ணி செய்யும் போது பார்த்திருக்கேன். அவங்க ஈசியா செய்வாங்க. இந்த ஊருல ரவை, தண்ணி எதுவுமே சரியில்ல போல" என்றாள்.

சற்றே கோபம் வந்தாலும் பக்கென சிரித்து விட்டான். பிறகு அவனே செய்தும் காட்டினான். அதைத் தொடர்ந்த் சில நாட்களில் எல்லாம் கற்றுக் கொண்டாள் ராணி. உப்புமா செய்ய, குழம்பு வைக்க, பொரியல் வதக்க எனத் தேர்ந்தாள். ஒரு வாரம் முழுக்க அவனுக்கு வாய்க்கு ருசியாக செய்து போட்டாள். காலையில் இஞ்சி போட்ட டீ கூடக் கொடுத்தாள். வாழ்க்கை சுமுகமாக ஓடிக்கொண்டிருந்த போது தான் இரண்டாவது அண்ணன் மாணிக்கம் வந்து சேர்ந்தான்.
 
Rani sema vevarama irukale kd paiya pulla iva inga jolly ah oor suthanum nalla dress pannanum nu plan panni vanduruka, inda loose annan vandu irukane enna Panna porano, sankari odimgiye iruma nee nice update dear thanks.
 
Top