Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

தேடியுணைச் சரணடைந்தேன் - 2

Advertisement

Vathani

Tamil Novel Writer
The Writers Crew

ஆத்தா நான் வந்துட்டேன் மொமென்ட்.. ஹீ ஹீ யாரெல்லாம் கட்டையை வச்சுருக்கீங்களோ, அவங்க எல்லாம் அப்படிக்கா ஓரமா போட்டுட்டு, கதையைப் படிச்சிட்டு நாலுவரி நல்லத்தனமா சொல்லுங்க. மீ வைட்டிங்.

நன்றி தெய்வங்களே..:love::love::love::love::love::love::love::love::love:






தேடியுனைச் சரணடைந்தேன் - 2

நெற்றி முத்தம்
நெடுந்தூர பயணம்
நெஞ்சோர உறக்கம்
இவையாவும் வேண்டும்
"உன்னோடு ஒரு நாள்"

"பாலா எல்லாம் ரெடியா, வண்டிக்கு முன்னாடி எலுமிச்சை பழம் வச்சாச்சா, எங்க உன் பொண்டாட்டியக் காணோம்" என்ற நாச்சியின் குரல் கொடுக்க,

"எல்லாம் ரெடிதான்மா, நீங்க ஒரு தடவை சரியான்னுப் பார்த்துடுங்க, அவ வரமாட்டா, வரவும் வேணாம் விடுங்க,” என மனைவியின் மீது எரிச்சலைக் காட்ட,

"என்னடா விளையாடுறீங்களா, என் பேரன் வாழ்க்கையில மொத மொதல ஒரு நல்லக்காரியம் நடந்திருக்கு, அதப் பொறுக்காமா மூஞ்சைத் தூக்கி வச்சிகிட்டு இருக்காளா அவ" என நான் உனக்கு அம்மா என்பதைக் காட்டும் விதமாக, நாச்சியார் பாலனிடம் கத்த,

"அவளைப்பத்தி தெரியும்தான விடுங்கம்மா, மத்த வேலையைப் பார்ப்போம், வீட்டுல இருக்குறத் தூணோட தூணா வந்து நிக்கிறதுக்கு, அவ வரவே வேணாம் விடுங்க..” எனத் தாயின் கோபத்தில் மகன் பணிந்துப் பேச,

"இல்ல பாலா.. இதுக்கு நான் சரின்னு சொல்ல மாட்டேன். அவ வரனும், வந்துதான் ஆகனும்" எனத் திட்டவட்டமாகக் கூறிவிட்டார். அமுதவல்லியின் அந்தக் குரலை இதுவரை யாரும் எதிர்த்துப் பேசியது இல்லை. பாலனும் அதற்கு விதிவிலக்கல்ல. உடனே ‘சரிம்மா’ என்றதோடு மனைவியைத் தேடி போனார்.

"அப்பா யாரைக் கேட்டு இந்தக் கல்யாணத்தை நடத்துனீங்க, என்னைப் பத்தி புகழைப்பத்தி யோசிக்கவே இல்லையா, நாளைக்கு என் மகன் வந்து கேட்டா, என்ன பதில் சொல்வேன்" என்று பேசிய வனிதாவை முறைத்து பார்த்தார் பாலா.

“கேட்குறா தான மாமா சொல்லுங்க, நாளைக்கு அவ பையன் வந்து கேட்டா என்ன சொல்லுவா..? எனக் குத்தலுடன் பேசிய மருமகனின் முகத்தை நிமிர்ந்து பார்க்கமால் தலை குனிந்தார் வணிதாவின் தந்தை ராமசாமி.

“என்னக் கிடைச்சது சாக்குன்னு கிண்டல் செய்யுறிங்களா” என்ற கணவனிடம் நேரடியாக சண்டைக்கு நின்றவளை, அற்ப புழுவை போல் பார்த்த பாலா,

“உன்னையெல்லாம் பார்க்கக் கூட பிடிக்கல, என்ன ஜென்மமோ நீ. உன் மகன் உன் மகன்னு சொல்றியே, அவன் தான் ஒரு பொண்ணை மணமேடையிலையே அம்போன்னு விட்டுட்டு, உன் ஒட்டுமொத்த நம்பிக்கையையும், ரெண்டு குடும்ப மானத்தையும், வாங்கிட்டு ஒடிப்போயிருக்கான். அவனைப்பத்திக் கவலைப்படுற, நீயெல்லாம் என்ன ஜென்மமோ..”

“ஒடிப்போனவனைப் பத்தி பேச வேணாம், எனக்கு என் புள்ளையோட வாழ்க்கை முக்கியம். அவனை நல்லமுறையில் அனுப்பி வைக்கனும். இல்ல நான் மாட்டேன்னு நீ மொரண்டு பிடிச்சிட்டு இருந்த.. அப்புறம் என்னை நீ வேற மாதிரி தான் பார்ப்ப.. ஞாபகம் வச்சுக்கோ, இது இது வரைக்கும் ஒரு அம்மாவா அவனுக்கு எந்த நல்லதும் பண்ணது இல்ல, இனியும் அப்படி இருக்க முடியாது, ஒழுங்கா கிளம்பி வா” என மனைவியின் முன்னேக் கத்தியவர், மாமனாரிடம் “நீங்க கொடுத்த இடம் தான் இவ இப்படி ஆனதுக்குக் காரணம்” எனச் சொல்லி விட்டு வெளியே போய்விட்டார்.

"பாருங்கப்பா உங்க மாப்பிள்ளையைத் தலையில் தூக்கி வைச்சி ஆடுனிங்கல்ல இப்போ பாருங்க, என்ன பேச்சு பேசிட்டு போறாரு,” என்றுத் தகப்பனிடம் குற்றப் பத்திரிக்கை வாசிக்க,

"போதும் நிறுத்து வனிதா, இதுக்கு மேல நீ பேசுறதைக் கேட்க நான் ஆள் இல்ல.. இங்கே இப்போக் கேள்விக் குறியானது என் பேத்தியோட வாழ்க்கை, அது உனக்குப் புரியுதா இல்லையா.? பெத்தவங்க இருந்திருந்தா என் வாழ்க்கை இப்படி ஆகிருக்குமான்னு என் பேத்தி பரிதவிச்சுப் போயிருந்தா, அந்த எண்ணம் ஒரு நொடி அவ மனசுல வந்திருந்தா, ஒரு தாத்தாவா நான் தோத்துட்டேன். பெத்த மக மாதிரி வளர்த்த நீயும் தோத்துட்ட, இனியும் உனக்கு புரியுற மாதிரி பேச எனக்கு தெரியல” என்றவர்,

"மங்கையோட வாழ்க்கை எனக்கு முக்கியம் அதைவிட இத்தனை வருஷமா ஒரு பேரனுக்கு செஞ்ச பாவத்தை கழுவுறதும் ரொம்ப முக்கியம். இப்போ நான் அதைத்தான் செய்யப் போறேன்.. புகழை விட வெற்றி தான் என் பேத்திக்கு பொருத்தமானவன்னு அடிக்கடி உன் அம்மா சொல்லுவா, ஆனா உனக்கு பயந்து எதையும் வெளிக்காட்டினது இல்ல, இப்போ கடவுளோட சித்தம் அதுதான்னா அதை மாத்த யாரல முடியும். விடு... மனசை மாத்தி தேத்திக்கிட்டு வா. ஆண்டவனோட சித்தம் என்னன்னு யாருக்கும் தெரியாது. புகழைத் தேட நான் ஆள் அனுப்பிருக்கேன். நீ வருத்தப்படாம இப்ப இங்க அடுத்து என்ன செய்யனுமோ அதைப் பாரு,” என தந்தையின் கூற்றில் இருந்த உண்மைப் புரிய, வனிதாவிற்கும் நெஞ்சுக் கனத்துப் போனது.

“மேட்டுப்பாளையத்தில் இருந்து கோவை செல்லும் வழியில் அமைந்துள்ளது துடியலூர். மேற்குத்தொடர்ச்சி மலை அருகே இருக்க அதிக வெயிலும் இல்லமால் அதிக குளிரும் இல்லாத ஒரு சீரதோஷ்ண நிலை எப்போதும் இங்கு உண்டு.

ஒரு டையிங் மில்லையும், ஒரு ஸ்பின்னிங் மில்லையும், ஒரு கார்மெண்ட்ஸையும் வைத்து கோவையில் தொழில் நடத்திக் கொண்டிருந்தார் ராமசாமி.. அவர் மனைவி அங்காத்தாள். அவர்களுக்கு ஒரு மகன் –சுந்தரேசன், மகள் - வனிதா. சிறுகுடும்பம் சீரான வாழ்வு அவர்களது.

சுந்தரேசனுக்கு மேட்டுப்பாளையத்தில் தன் உறவிலேயே சாரதாவை மணம் முடித்தார் ராமசாமி. வனிதாவிற்கு தன் தூரத்து சொந்தம் ஒருவரின் மூலம் வந்த வரனை முடித்தார். அவர் தான் பாலமுருகன், ஒரே பெண்ணை அவ்வளவு தூரம் கொடுக்க வேண்டுமா? என கேள்வி கேட்ட சொந்தங்களை பாலாவின் நன்னடைத்தையையும் அமுதவல்லியின் வளர்ப்பையும், ஊரில் அவர்களுக்கு இருக்கும் மதிப்பையும் காரணம் காட்டி வாயடைத்தார்.

ஆனால் அங்காத்தாவிற்க்குத் தான் பெரும் கவலை மகளைப்பற்றி, வனிதாவிற்கு அழகு என்ற சொல் மீது அத்தனைப் பைத்தியம். தான் அழகு என்பதிலும் கர்வம் அதிகம். வனிதா படித்த பள்ளி, கல்லூரிகளில் கூட அழகான நட்புகளையே வளர்த்துக் கொண்டாள். சற்றுக் கருமையானவர்களிடம் நெருங்கிப் பழகுவது கூட கிடையாது. மேலதட்டு வர்க்கத்தினரிடம் மட்டும் தான் பழகுகிறாளா? என்றால் அதுவும் இல்லை. அழகானவர்களோடு மட்டுமே அவளது பழக்க வழக்கங்கள் இருக்கும்.

முதலி அதைக் கவனிக்காமல் விட்ட அங்காத்தாள், கவனித்து சொல்லித் திருத்த முயலும் போது மகள் அந்தக் கட்டத்தைத் தாண்டி வந்திருந்தாள். கணவரிடம் புலம்பியதற்கு கல்யாணம், குடும்பம் குழந்தை என்று ஆகிவிட்டால் அனைத்தும் சரியாகி விடும் என்று ஆறுதல், சொல்ல, அப்போதைக்கு அதை ஏற்றாலும், அவ்வப்போது அந்தப் பயம் அவரைப் பிடித்து ஆட்டும்.

அந்த நேரம் நாச்சியார் வீட்டிலிருந்து பெண் கேட்டு வர, சுபி, சுமி பாலா ஏன் நாச்சியாரும் கூட அழகாக இருக்க, உடனே சரியென்று விட்டார் வனிதா. மகளின் விருப்பம் தான் முக்கியம் என்பது போல், ராமசாமியும் சரியென்று விட, பூ வைப்பு, தேதி குறிப்பு, நிச்சயதார்த்தம், திருமணம் என அனைத்தும் வெகு விரைவாக, விமர்சையாக நடந்தேறியது. திருமண நிகழ்வு ஒவ்வொன்றிலும் தன்னை அழகுப் படுத்தி, வந்தவர்களின் கண்களைக் கவர்ந்தார் வனிதா.

நாச்சியாருக்கு இது பெரிதாக படவில்லை. வீட்டிற்கு ஒற்றைப் பெண். செல்லமாக வளர்ந்தவள். இப்படி இருப்பதில் தவறில்லை என்று உணர்ந்து கொண்டார். தானும் இரு பெண்களைப் பெற்றதால்.

மகளைப் பற்றி முழுதாகத் தெரிந்த அங்காத்தாளுக்கோ மனதில் பெரும் பயம். அவளுக்கு அழகென்ற பைத்தியக் குணம் இருப்பதை கண்டுணர்ந்தவர் இல்லையா அங்கு போய் எப்படி இருப்பளோ, என்ன பிரச்சினையை இழுத்துக்கொண்டு வருவளோ என்ற பயம் அவரை இருப்புக்கொள்ள விடாமல் தடுத்தது.

ஆனால் அவர் கவலைப்படும் அளவிற்கெல்லாம் வனிதா ஆரம்பத்தில் நடந்து கொள்ளவில்லை, நல்ல மனைவியாக, குடும்பத்துக்கு ஏற்ற மருமகளாக அனைவருக்கும் பாந்தமாக அடங்கியிருந்தாள். அமுதவல்லியின் வார்த்தைக்கு மறுவார்த்தை பேசாத மருமகளாக வலம் வர, பாலனுக்கு தன் மனைவியின் மேல் காதலும் அன்பும் பெருகியது. திருமணம் முடிந்து மூன்று ஆண்டுகள் கழித்து தான் வனிதா கருத்தரித்தாள்.

இருக் குடும்பமும் கொண்டாடி தீர்த்தது அவரை. நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமுமாக நாட்கள் கரைய, அவளது கருவில் பொண் முத்துக்களாக இரட்டையர்களாக குழந்தைகளும் வளர்ந்தனர்.. வனிதாவின் அழகு என்ற மயக்கமும் அதோடு வளர்ந்தது தான் விதியின் விளையாட்டோ..?

"அம்மா வர்ரியா இல்லையா, அப்பா கூப்பிடுறாங்க.." என்ற மகள் மொழியின் சத்ததில் மீண்டவர், வேண்டா வெறுப்பாக முன்னறைக்கு சென்றார்.. பெண் வீட்டிற்க்கு செல்ல எல்லா ஏற்பாடுகளும் நடந்திருக்க, தனக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று எண்ணத்தில் இருவர் மட்டும் எங்கோ பார்வையைப் பதித்து இருந்தனர். அது வனிதாவும், வெற்றியும் தான்.

பூஜையறையில் விளக்கேற்றி விட்டு, மங்கை வெளியில் வர, அவளை சுமித்ரா அழைத்து வந்து நாச்சியரிடம் விட, புரிந்தது போல் அவர் காலில் விழுந்து எழப் போனவளைத் தன்னருகே அமர்த்திக் கொண்டார் நாச்சி.

பின் கனிவாக, “மங்கை உன்னோட மனநிலை இப்போ எப்படி இருக்கும்னு எனக்குப் புரியுது. ஆனா நிதர்சனம் என்னன்னு நீ புரிஞ்சுக்கனும். கல்யாணம் என்பது ஆயிரம் காலத்து பயிர் அதைக் கடைசி வரைப் பாதுக்காக்கனும், இந்த கல்யாணத்தை உண்மையா உணர்ந்து நீங்க ரெண்டு பேரும் வாழனும்.. உனக்கு அவன், அவனுக்கு நீ, இது துவும் இனி மாறப்போறது இல்லை. உங்க வாழ்க்கை நலமா, வளமா இருக்கனும். நீ இந்த வீட்டுக்கு வந்த மகாலட்சுமி.. உன் மனசுப் போல எல்லாமே நல்லதா நடக்கட்டும், நீங்க ரெண்டு பேரும் பதினாறு செல்வங்களையும் பெற்று நூறு வருஷம் சந்தோஷமா வாழனும், அதுதான் என்னோட ஆயுசுக்குமான பிரார்த்தனை, செய்வியா..? என அவள் வளைக்கரத்தைப் பிடித்துப் பேச,

மங்கையும் பெரியவரின் கையை ஆதாரவாகப் பிடித்துக் கொண்டு, “ஆச்சி நீங்க என்ன சொல்ல வர்ரீங்கன்னு எனக்குப் புரியுது. வாழ்க்கையை விளையாட்டாப் பார்க்குற சின்னப் பிள்ளைங்க இல்ல நாங்க. எங்களால உங்களுக்கு எந்த கஷ்டமும் வராது. இதுவரை கவலைப்பட்டது எல்லாம் போதும். இனிமேலும் எங்க வாழ்க்கையைப் பத்தி கவலைப் பட்டு உங்க உடம்பைக் கெடுத்துக்காதீங்க.” என்றவளின் தலையில் கை வைத்த நாச்சி,

“எனக்கு நம்பிக்கை இருக்கும்மா, உன்னால தான் என்னோட குடும்பம் தழைக்கப் போகுதுன்னு, அது நடக்கும். கண்டிப்பா நடக்கும். நல்லபடியா போயிட்டு வாங்க..” என நல்லாசி கூறி அனுப்பி வைக்க,

இந்த ஆச்சிக்கு வேற வேலை இல்ல. இது என்ன புது நாடகம் என்ற ரீதியில் தான் வெற்றி நின்றுக் கொண்டிருந்தான். “அம்மா நல்ல நேரம் முடியப் போகுது கிளம்பலாம்” என்ற சுமித்ரா அவனை அழைத்துக் கொண்டு முன்னே நடக்க, மங்கையை அழைத்துக் கொண்டு அவர்கள் பின்னே சென்றாள் சுபத்ரா.

அனைத்தையும் பார்த்துக் கொண்டிருந்தாலும் எதிலும் தலையிடாமல், இந்த வீட்டின் மருமகள் என்ற எந்த எண்ணமும் இல்லாமல், யாருக்கோ என்று நின்றிருந்த வனிதாவைப் பார்த்து ஆத்திரம் வந்தது நாச்சியாருக்கு.

அது கொடுத்த எரிச்சல் மகனிடம் பாய வைத்தது. “என்ன பாலா உன் பொண்டாட்டிக்கு இன்னும் புத்தி வரலியா, பெத்த புள்ளையைத் தான் புரிஞ்சுக்கல, வளர்த்தப் புள்ளையைக் கூடவா புரிஞ்சுக்கல, அந்த சின்னப் பொண்ணு மனசு எம்புட்டு வேதனப் படும்.. இதெல்லாம் அவளுக்குப் புரியுதா இல்லையா..” என ஆற்றாமையில் பேசியவர்,

பின் வெற்றி முறைப்பதைக் கண்டு “ம்ப்ச்.. விடு..” என்று மருமகளைத் தீப்பார்வைப் பார்க்க, அதுவரை புகழின் எண்ணத்தில் இருந்தவர்.. அப்போது தான் மங்கையைக் கவனிக்க ஆரம்பித்தார்..

முகம் முழுவதும் பயமும் பதட்டமும் சூழ, சுபத்ராவின் கையைப் பிடித்தப்படி கண்கள் மிரள பார்வையைச் சுழற்றிக் கொண்டிருந்தாள் மங்கை. தன்னால் எதுவும் பிரச்சினை ஆகிவிடுமோ என்று பயத்தில் வேறு இருந்தாள்.

சற்றுமுன் தன் தந்தை சொன்னது வனிதாவின் ஞாபகத்தில் வர, வேகமாய் மங்கையின் புறம் நகர, அதை உணர்ந்தவள், வனிதவை ஒரு வெற்றுப் பார்வை பார்த்துவிட்டு, சுபத்ராவின் கையை விலக்கி, முன்னே நடந்த வெற்றியின் கரத்தைப் பிடித்தப்படி நகர்ந்து விட்டாள்.

இப்படி ஒரு செய்கையை மங்கையிடம் யாருமே எதிர்பார்க்கவில்லை. இரண்டெட்டு எடுத்து வைத்த வனிதா, அதிர்வில் அப்படியே நிற்க, எந்த வருத்தமோ, கோபமோ, ஏன் ஒரு சிறு முகச்சுழிப்போ என்று எதுவும் இல்லாமல், தன் பேரனின் கையைப்பிடித்தப் பேத்தியை, அந்த நொடி அமுதவல்லிக்கு அத்தனை பிடித்தது.

புகழுக்கு என்று நிச்சயமானவள், மணவறை வரை அவன் தான் மாப்பிள்ளை என்ற எண்ணத்தில் இருந்தவள், திடிரென மாப்பிள்ளை மாறினால் அந்த பெண்ணின் மனநிலை எப்படி இருக்கும் என அறியாதவர் இல்லை நாச்சி. இருவரும் முன்பின் தெரியாதவர்களும் அல்ல. சொந்த தாய்மாமனின் மகள் தான். ஆனால் புகழோடு இருந்த நெருக்கம் வெற்றியிடம் இல்லை. அவனின் இறுகியத் தோற்றமும் மங்கையை நெருங்க விட்டதில்லை.

அதோடு மங்கை ஆலங்குடி வந்தாலும், புகழோடு தான் அவளது சுற்றுப்பயணம். மொழிக்கு எப்போதும் தன் பெரியண்ணன் பின்னே தான் சுற்ற வேண்டும். மங்கையையும் உடன் அழைப்பாள் தான். ஆனால் மங்கையால் அவனிடம் ஒன்ற முடியாது. அதனால் ஏதேனும் காரணம் கூறுவாள். முதலில் இதைக் கவனிக்காத வெற்றியும், கவனித்த பிறகு அவளை அழைக்கவோ, பேசவோ செய்வதில்லை.

இவை எல்லாம் நாச்சியாருக்கும் தெரியும். அப்படி ஒதுங்கி ஒதுங்கி போனப் பெண் இன்று எல்லார் முன்னும் சற்றும் பதட்டமோ பயமோ இல்லாமல், அவன் கையைப் பிடித்தது, அதுவும் யாரும் சொல்லாமல் அப்படி செய்தது அத்தனை மகிழ்வைக் கொடுத்தது. தன் பேரனை இனி இவள் பார்த்துக் கொள்வாள் என்ற ஆசுவாசமும் நிம்மதியும் ஒன்றாய் தோன்றியது.

மற்றவர்கள் மனநிலைதான் இப்படி என்றால், வெற்றியின் மனநிலையோ வேறு வகை. தம்பியின் மனைவியாக இருக்க வேண்டியவள், தன் மனைவியாக இருப்பது ஒருவகையில் அவமானமாகத் தோன்ற, எப்போதும் அவன் கழித்து கட்டிய மீதம் தான் தனக்கா எனவும் தோன்ற, அவனால் இந்த திருமணத்தை ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை. தன் ஆச்சியின் ஒரு வார்த்தைக்காக மட்டுமேத் தாலியைக் கட்டியிருந்தான், யாரைப்பற்றியும் எதைப்பற்றியும் யோசிக்காமல்.

இந்தத் திருமணம் நிலைக்குமா இல்லையா என்றெல்லாம் அவனுக்குத் தெரியாது. அதைப்பற்றி யோசிக்கவும் விரும்பவில்லை அவன். அவளுக்கு பிடிக்கவில்லையென்றால் விட்டுவிட வேண்டும், அவள் முகத்தைப் பார்த்தால், அதில் இருக்கும் தவிப்பைப் பார்த்தால் புகழை மனதார விரும்பி இருப்பாள் போல அவனிடம் போக வேண்டும் என்றுக் கேட்டாலும் அனுப்பி விட வேண்டும் என்றுத் திருமணம் முடிந்த நொடியில் இருந்து பலவாறாக யோசித்துக் கொண்டிருந்தவனுக்கு, மனையாளின் செய்கை எப்படி இருக்கிறதாம். ஆனால் காதலித்தவன் ஏன் விட்டுவிட்டுப் போய்விட்டான் என யோசிக்கத் தவறியது தான் விதியின் சதியோ..?

மனைவியின் முதல் தொடுகை அவனின் உடலில் சிறு அதிர்வுத் தோன்றியது நிஜம். அதை அவளும் உணர்ந்தாள். உணர்ந்தும் அதை வெளிக்காட்டாமல் காரிலேறி அமர்ந்து விட, மங்கையைத் தொடர்ந்து வெற்றியும் அமர, கார் கோவையை நோக்கி பறந்தது.

நீண்ட நெடுஞ்சாலையும் மரங்களும் கடந்து கொண்டிருக்க அவனைப் பார்க்கவும் வெளியே பார்க்கவும் என இருந்தவளிடம் "உனக்கு என்கிட்ட எதுவும் வேணுமா..?" எனச் சரியாகக் கேட்டான் வெற்றி.

அவன் கேட்டதும் முகம் தவுஸ்சண்ட் வாட்ஸ் பல்பு பிரகாசிக்க, ‘ஆமாம்.. ஆமாம்’ என வேகமாய் தலையை மேலும் கீழும் ஆட்டி, “உங்க போன் தரிங்களா” எனக்கேட்டாள்.

அதுவரை குழப்பம் கோபம் எரிச்சல் பயம் என பல உணர்வுக் குவியலாய் இருந்தவனின் முகம் புன்னகையில் குளிக்க போனை எடுத்து நீட்டியபடியே “உன் போன் என்னாச்சு..” என,

அதை வாங்கியவள் “தெரியல, தாத்தாக்கிட்ட இருக்கும்ன்னு நினைக்கிறேன்” என்றபடியே, அடுத்து அவள் கேட்டக் கேள்வியில் மொத்தமாய் துவண்டுதான் போனான் வெற்றி மாறன்.

காதல் என்பது அன்பு அல்ல, காதல் என்பது பாசம் அல்ல. ஆனால் காதல் என்பது சில நேரங்களில் மற்றவர்களால் ஏற்றுக்கொள்ள முடியாது என்று தெரிந்தும் ஏற்றுக்கொள்வதுதான். உதாரணத்திற்கு ஒருவரிடம் உள்ள குறைபாடுகள். அதுவே காதலை இன்னும் சிறப்பாக மற்றும் நேர்மையானதாக ஆக்குகிறது.



சரணடையும்…
 
Top