Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

நட்பென்னும் முடிவிலியில்!- 64(1)

Advertisement

praveenraj

Well-known member
Member
அன்றைய பொழுது துவாராவின் குடும்பத்தினர் அனைவரும் பல வருடங்கள் கழித்து உண்மையான மகிழ்ச்சியோடு இருந்தனர். அவர்கள் ஒன்றாகக் கூடிப் பேசி, உண்டு எத்தனை வருடங்கள் ஆகிவிட்டது. அன்றிரவு துவாராவும் அவன் தந்தையும் ஒன்றாகக் கதை பேசியபடியே உறங்கினர். மறுநாள் பொழுது இனிதே புலர்ந்தது. காலையிலே அனேஷியா அவனை அழைத்து அவர்கள் வரும் நேரத்தைக் குறிப்பிட அவர்களுக்கும் சேர்த்து லன்ச் தயார் செய்தாள் கீர்த்தி. பத்து மணி வாக்கில் அனேஷியாவும் அவள் தந்தையும் அங்கே வந்தனர். கீர்த்தியின் கணவரும் துவாராவும் அவர்களை வரவேற்று அழைத்து வர அவர்களுக்காக ஹாலில் காத்திருந்தார் துவாராவின் தந்தை.
பல வருடங்கள் கழித்து சந்திப்பதால் மாமனும் மச்சானும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டார்கள். அனேஷியா தான் அந்த இடத்தில் சற்று அசௌகரியமாக உணர்ந்தாள். துவாரா கீர்த்தியை அழைத்து அனேஷியாவிடம் அறிமுகப்படுத்த வேறு வழியின்றி அவளுடன் பேசினார். அங்கே ஹாலில் மாட்டப்பட்டிருந்த துவாராவின் அன்னையின் படத்தைப் பார்த்த அனியின் தந்தை காலம் கடந்து அனைத்தயும் உணர்ந்தவராக,"நீ அன்னைக்கு ஒரு தப்பான முடிவெடுக்காம இருந்திருந்தா இன்னைக்கு இதுக்கெல்லாம் அவசியமே இல்லாம போயிருக்கும்!" என்று சலித்து உரைக்க அது அனேஷியா மற்றும் துவாரா இருவருக்கும் அவரவர் தவறுகளை நினைவுப்படுத்தியது. அனிச்சையாக இருவரும் பார்த்துக்கொண்டனர். அதன் பின் பேச்சு ஒவ்வொருவராய்ச் சென்று வர கீர்த்தி கர்ப்பமாக இருப்பதை அறிந்த அனேஷியாவின் தந்தை அவளுக்காக நிறைய பொருட்களை வாங்கிவந்திருந்தார். அவளை அருகில் அமர்த்தியவர்,"என்னை மன்னிச்சுடுமா. ஒரு தாய் மாமாவா உனக்கு நான் எதுவுமே இதுவரை செய்யல. இதையாவது வாங்கிக்கோ" என்று கொஞ்சம் நகை உடைகள் என்று பரிசளிக்க அவளோ தன் தந்தையைத் தான் பார்த்தாள். உண்மையில் இதெதையும் வாங்கிக்கொள்ள அவர்கள் இருவருக்கும் விருப்பமில்லை தான் என்றாலும் அவர் மனம் வருந்தக் கூடாதென்று அனைத்தயும் பெற்றுக்கொண்டாள்.
அனேஷியாவின் மற்ற பெரியப்பா சித்தப்பா குடும்பத்தைப் பற்றி சற்று பேசியவர்கள் அதன் பின் மதிய உணவை உண்டார்கள். அனேஷியாவைப் பார்த்தவர் அவளுடன் கொஞ்சம் உரையாடினார். உண்மையில் துவாராவின் தந்தைக்கு அனேஷியா -துவாரா இருவரின் ரகசியம் பற்றி எதுவும் தெரியாது என்பதால் அவளுடன் தயக்கமில்லாமல் உரையாடினார். ஆனால் அனேஷியாவின் தந்தைக்குத் தான் துவாராவுடன் அப்படியொரு சகஜமான உரையாடலைத் தொடர முடியவில்லை. அவர்கள் மாலை வரை நிறையப் பேசினார்கள். கீர்த்திக்கோ இத்தனை நாட்கள் இருந்த தன் தந்தையைக் காட்டிலும் இன்று அவர் அதிக உற்சாகமாய் இருப்பதாகவே தோன்றியது.
அனேஷியாவைத் தனியே அழைத்த துவாரா,"திவேஷ் ஏதாவது சொன்னானா?" என்று வினவ அவளோ திவேஷ் தன்னிடம் உரைத்ததை மறைக்காமல் சொன்னாள்.
"எதுனாலும் சீக்கிரம் முடிவெடு அனி. காலம் கடந்தப் பிறகு ஃபீல் பண்ற மாதிரி நடந்திடக் கூடாது. உனக்கும் இருபத்தி ஆறாகுது தானே? உன்னோட கல்யாணம் தான் அத்தையோட விருப்பமாவும் இருந்திருக்கும். மாமாவுக்கும் வயசாகிட்டே போகுது. சீக்கிரம் நல்ல முடிவாகச் சொல்லு" என்று உண்மையான அக்கறையில் அவளிடம் பேசினான்.
"துவாரா ஐ அம் சாரி துவாரா. உன்னோட இந்த நல்ல மனசை நான் நிறைய முறை..." என்று பேச வந்தவளை தடுத்தவன்,"நம்ம ரெண்டு பேருக்கும் கடந்த காலம் நிறைய வலிகளையும் வேதனைகளையும் தான் கொடுத்திருக்கு. பார்ஷுனேட்லி நாம ரெண்டு பேரும் அதைக் கடந்து வந்துட்டோம். இனி எதையுமே முன்னோக்கி மட்டும் பார்ப்போம்" என்று முடித்தான்.
அதன் பின் இருவரும் அவரவர் வேலைகளைப் பற்றிக் கொஞ்சம் உரையாட மாலை வேளை நெருங்கியது. எல்லோருக்கும் காஃபீ ஸ்னேக்ஸ் கொடுத்தாள் கீர்த்தி. கீர்த்தியை அழைத்த அனேஷியா அவளிடம் கொஞ்சம் தனியாகப் பேச வேண்டும் என்றதும் துவாரா அங்கிருந்து விலகினான்.
கீர்த்தியுடன் அவளுக்கு இதுவரை நேரடியானப் பேச்சு வார்த்தைகள் என்று இருந்ததே இல்லை. கீர்த்தியைத் தன்னுடைய தோழியாக்க வேண்டுமென்று விரும்பிய அனேஷியா அவளிடம் அனைத்தையும் தெரிவித்தாள். துவாராவுக்கு அவள் செய்தது, அவள் அன்னையின் ஆசை, நடந்த உண்மையை எல்லாம் லேட்டாகவே தெரிந்துக்கொண்டது, அன்னையின் விருப்பத்தின் பேரில் தான் துவாராவை திருமணம் செய்ய முன்வந்தது, இறுதிவரை தன்னிடம் பேசாமலே இறந்துப் போனது வரைச் சொல்லவும் கீர்த்திக்கே மனம் வலித்தது. பின்னே தாயின் முகத்தைக் கூடச் சரியாகப் பார்த்திடாதவள் அவள். ஆனால் அனேஷியாவின் அன்னை அவளுக்குக் கொடுத்துச் சென்ற தண்டனை மிக அதிகம் என்று புரிந்ததும் இதுவரை அனேஷியா மீதிருந்த அந்தக் கோவம் சற்று மட்டுப் பட்டதாகவே தோன்றியது. அனேஷியாவை துவாரா எதனால் மன்னித்திருப்பான் என்று கீர்த்தியால் விளங்கிக்கொள்ள முடிந்தது. அதே காரணங்களுக்காக அனேஷியாவை அவளும் மன்னிக்க சித்தமானாள்.மணி ஆறை நெருங்கவும் அவர்கள் புறப்படத் தயாராக இப்போது உண்மையில் மனதார அவர்களை இங்கே தங்கிவிட்டு நாளை செல்லச் சொன்னாள் கீர்த்தி. பிறகு அவளைச் சமாதானம் செய்துவிட்டு அவர்களை சென்னைக்கு வரும்படி அழைத்துவிட்டு அவர்கள் புறப்பட்டனர்.தன்னுடன் இருந்த சின்ன தயக்கமும் குற்றயுணர்வும் முழுவதும் நீங்கியதாகவே உணர்ந்தாள் அனேஷியா. அதே தான் அவளுடைய தந்தையின் மனநிலையும். இருபது வருடப் பகை, கோவம், வன்மம் என்று அனைத்தும் இன்று அடியோடு மறைந்தது.
அவர்கள் சென்றப் பின் கடந்த கால நிகழ்வுகள் சிலவற்றை யோசித்துப் பார்த்த துவாராவின் தந்தை தன் பிள்ளைகள் இருவரையும் அழைத்து,"இன்றோடு நமக்கும் அவங்களுக்கும் இருந்த கசப்பு எல்லாம் நீங்கிடுச்சி. நாளைக்கு என் காலத்திற்குப் பிறகும் நீங்க அவங்களோட இன்று போல் என்றும் சகஜமாகப் பேசிக்கொள்ள வேண்டும்" என்று அறிவுறுத்தினார். இத்தனை வருடங்கள் தன் மீதிருந்த பழிச் சொல் நீங்கியதாலோ என்னவோ அவரின் மனம் காற்றைப் போல் இலகுவானது. பிறகு சரித்திராவின் புகைப்படத்தை வாங்கிப் பார்த்தவர் துவாராவுக்குப் பொருத்தமான பெண்ணாகத் தான் இருக்கிறாள் என்று எண்ணி மகிழ்ந்தார்.

............................................................

அந்த வாரம் அப்படியே கடந்துவிட மறுவாரம் சரித்திராவின் அன்னையைச் சந்திக்கச் சென்றிருந்தான் துவாரா. விசாரித்த வரையில் துவாரா மீது குறையென்று ஒன்றுமில்லை தான். அவன் அன்னையின் மரணம் மட்டும் அவருக்கு மூளையில் ஒரு நெருடலாக இருந்தது.இதுவரை துவாரா மற்றும் சரித்திரா இருவரின் சந்திப்புகள் பற்றி அனைத்தும் தெரிந்துக்கொண்டவர் பதிலெதுவும் சொல்லாமல் மெளனமாக இருந்தார்.
"ஆண்ட்டி. உங்களின் தயக்கம் எனக்கு நல்லாவே புரியுது. எப்படி என்னை நம்பி உங்கப் பெண்ணைத் தருவதென்று நீங்க யோசிக்கிறீங்க. உங்க தயக்கம் நியாயமே. சருவோட அப்பா செஞ்ச தப்புனால நீங்க என்னை ஏற்க முடியாம தவிக்கறீங்க. நானும் சின்ன வயசுல இருந்து அம்மா இல்லாம வளர்ந்தவன் தான் ஆண்ட்டி. நானும் சரி சரித்திராவும் சரி ஒரு முழுமையான குடும்பத்தோட அட்மாஸ்பியரை மிஸ் பண்ணியிருக்கோம். உங்கப் பெண்ணை என்னை நம்பி கல்யாணம் செஞ்சுக் கொடுங்க. நிச்சயமா நீங்க எடுத்த முடிவு தவறில்லை நான் உணர்த்துவேன். உண்மையிலே அவ என்னை லவ் பண்ற அளவுக்கு நான் அவளை லவ் பண்ணல தான். பின்ன அவளது காதலுக்கு வயசு பத்து. ஆனா எனக்கு ரொம்ப சொற்ப நாட்கள் தான். நான் மறுக்கவில்லை. சில விஷயங்களைச் சொல்லிப் புரியவெக்க முடியாது ஆண்ட்டி. அதை வாழ்ந்து தான் நிரூபிக்கனும். உங்களுக்கு இன்னமும் என் மேல நம்பிக்கை வரலைனா நான் சொல்றவங்கக் கிட்டப் பேசிப்பாருங்க" என்று சொல்லி ராஜசேகர் லலிதாம்மா ஆகியோரின் எண்ணைக் கொடுத்தான்.
"அவங்க என் அப்பா அம்மா மாதிரி. இன்னும் சொன்னா அதுக்கும் மேல. என் அப்பா ஏதாவது சொன்னால் கூட நான் கேட்பேனானு தெரியல ஆனா அவங்க ஒன்னு சொன்னா நான் அப்படியே செய்வேன். நீங்க பொறுமையா அவசரப்படாம நிதானமா விசாரிச்சிட்டு உங்க முடிவை சொல்லுங்க. உங்க வாழ்க்கையில நடந்தது சத்தியமா சரித்திரா வாழ்க்கையில நடக்காது. நான் கேரண்டி தரேன்" என்றவன் சற்று பேசிவிட்டு அங்கிருந்து சென்றான்.

...............................................................

அதன் பின் ஒரு பத்து நாட்கள் கடந்திருக்கும். துஷியின் என்கேஜ்மெண்ட் சம்மந்தமாக வந்த துஷியின் தந்தை பிரவினின் குடும்பத்தைப் பற்றி அனைத்தையும் விசாரித்து விட்டு ஜாதகம் பார்க்க முடிவு செய்தார். இதிலெல்லாம் யாழுக்கு துளியும் நம்பிக்கை இல்லை. அதற்குள் பிரவினின் புத்தகம் பதிப்பிடும் வேலை மும்முரமாக நடைபெற்றுக்கொண்டு இருந்தது.

துஷி-ரேஷா, மிரு-தியா ஆகியோர் தங்களின் கோர்ட்ஷிப் காலத்தை இனிதே கழித்தனர். துவாராவும் சரித்திராவும் தங்களின் காதலை வளர்த்துக்கொண்டிருந்தனர். அடுத்த ஒரு மாத காலகட்டம் அவர்கள் எல்லோரின் வாழ்விலும் மிக முக்கியமானதாக மாறியிருந்தது. ஊருக்குச் சென்ற விடுமுறைகளை எல்லாம் இப்போது தான் காம்பென்ஷேட் செய்ய முடிந்தது. அதில் ஹேமாவின் நிலை இன்னும் மோசம். ஒரு பக்கம் ஜிம் மறுபக்கம் தங்கையின் திருமண வேலைகள் என்று அலைந்தான்.

அங்கே திவேஷும் அனேஷியாவின் பதிலை எதிர்பார்த்தலும் அதைக் காட்டிக்கொள்ளாமலே திரிந்தான். சித்தாரா தன்னுடைய நிறுவனத்தை புதுப்பொழிவுடனும் அதே நேரம் புது உத்வேகத்துடனும் வழி நடத்தினாள்.தன்னுடைய வீட்டில் திருமணம் பற்றிப் பேசும் போதெல்லாம் இப்போதைக்கு வேண்டாம் என்று ஒத்திவைத்துக்கொண்டே இருந்தாள்.

இளாவை பிளே ஸ்கூலாவது சேர்தலாம் என்று எண்ணிக்கொண்டிருக்கும் வேளையில் தான் மகிழ்ச்சியாய் வந்தது நித்யாவின் ப்ரெக்னென்சி செய்தி. எல்லோரும் மகிழ்ந்தனர். லலிதாம்மாவுக்குத் தான் ஆனந்தம் பிடிபடவில்லை. அவரின் உந்துதலால் தானே இது நிகழ்ந்தது என்று அவருக்குத்தெரியுமே. இளா பிறந்த பொழுதே ஒருமுறை பேச்சு வாக்கில் ஒரு குழந்தையோடு போதும் என்று பேசிக்கொள்ள அது அவருக்கு வருத்தம் தந்தது மட்டும் நிச்சயம்.

தனக்கொரு தம்பியோ தங்கையோ பிறக்கப் போகிறது என்று சொன்னது முதல் எப்போ வரும் எப்போ வரும் என்று நச்சரிக்க ஆரமித்திருந்தாள் இளவேனில். இந்தச் செய்தி துவாரா தவிர மற்றவர்களுக்கு உடனே தெரியப்படுத்தவில்லை. இந்த இடைப்பட்ட நாட்களில் சரித்திராவின் அன்னை துவாராவைப் பற்றி விசாரிக்க ஊட்டிக்கே வந்திருந்தார்.

அங்கே ஜிட்டு பேச்சு வாக்கில் தியா திருமணம் மற்றும் துஷியின் திருமணம் பற்றி வீட்டில் சொல்ல,"என்னடா உனக்கும் கல்யாணம் பண்ணனுங்கறதுக்காக இதெல்லாம் எங்ககிட்டச் சொல்றியா என்ன?" என்று அவனை வம்பிழுத்தனர்.

"கல்யாணம் பண்ணுங்கன்னு சொல்லல ஆனா கல்யாணத்தைப் பற்றிப் பேச ஆரமித்தா நல்லா இருக்கும்னு சொல்றேன்" என்று கமல் ஸ்லாங்கில் சொல்ல அவனை வீட்டில் ஆச்சரியமாகப் பார்த்தனர்.

அதன் பின் இதித்ரியின் வீட்டில் பேசினார்கள்.(ஜிட்டு இதி பற்றி அவர்கள் அரசல்புரசலாக அறிவார்கள்)

காலங்கள் இப்படியே உருண்டோட அன்று சரித்திராவின் வீட்டிலிருந்து சம்மதம் தெரிவிப்பதாகவும் சீக்கிரம் வந்து பெண் கேட்குமாறும் தெரிவிக்கப்பட துவாரா கீர்த்தி இருவரும் மகிழ்ந்தனர்.அடுத்த வாரமே துவாரா குடும்பம் சகிதமாய் விவான் லலிதாம்மாவோடு சென்றிருந்தனர். அனேஷியாவின் தந்தையையும் அழைத்திருந்தார் துவாராவின் தந்தை. அனைத்தும் பேசி சுபயோக சுப தினத்தில் துவாரகேஷ் - சரித்திராவின் திருமணம் நிச்சயிக்கப்பட்டது.

நாட்கள் அதன் பின் சக்கரம் கட்டிக்கொண்டு ஓடியது. இதோ இன்னும் ஒரு வாரத்தில் துஷி மற்றும் ரேஷாவின் திருமணம் நிகழவிருக்கிறது. இருவரும் அவரவர் நட்பு வட்டாரத்தை அழைத்திருந்தனர். அசாம் டூர் வந்திருந்த அனைவருக்கும் அழைப்பு விடுக்கப் பட்டருந்தது. செய்தி சித்தாராவையும் வந்தடைந்தது. அங்கே விவிக்கும் தெரிவிக்கப்பட நிச்சயம் சித்தாரா வருவாள் என்று அவன் மனம் சொன்னது.

வெள்ளி மற்றும் சனியாக திருமணம் நடக்கவிருந்ததால் எல்லோரும் மீண்டும் ஒன்றுகூடத் திட்டமிட்டனர். அடுத்த வாரத்திலே ஹரிணியின் திருமணமும் நடைபெற இருந்தது. READ 64(2)
 
நேரம் காலம் கூடி வந்தா எல்லாம் உடனே நடக்கும்னு சொல்வாங்க.... அந்த மாதிரி கதை முடியப்போற நேரம் வந்ததால எல்லாம் ரொம்ப சீக்கிரம் நடக்கற மாதிரி இருக்குது.....
 
நேரம் காலம் கூடி வந்தா எல்லாம் உடனே நடக்கும்னு சொல்வாங்க.... அந்த மாதிரி கதை முடியப்போற நேரம் வந்ததால எல்லாம் ரொம்ப சீக்கிரம் நடக்கற மாதிரி இருக்குது.....
yes of course thank you?
 
Top