Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், tamilnovelwriters@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

நலங்கிட வாரும் ராஜா - 3

Sarayu

Tamil Novel Writer
The Writers Crew
அத்தியாயம் – 3

திருமணம் என்று ஒன்று நடந்தால் அது எழிலரசனோடு தான் என்று அத்தனை பேரின் முன்னிலும் மதுஸ்ரீ சொல்ல, அதன் பிறகு ஆளாளுக்கு அவளை பிடித்து பேச ஆரம்பித்துவிட்டனர். பேரன் அழைத்ததும் வருத்தமாய் கிளம்பிய வேதாச்சலம் இதுதான் சமயம் என்று உறுதியாய் நின்றுவிட்டார்.

“ஏய் என்ன டி சொல்ற??” இங்க நாங்கெல்லாம் பேசிட்டு இருக்கோம்ல..”என்று முறுக்கியபடி ஸ்ரீதரன் வர,

“உன் கல்யாணத்தை யாருண்ணா முடிவு பண்ணா..??”

இந்த ஒற்றைக் கேள்வியில் ஸ்ரீதரனின் கால்கள் தன் முன்னேற்றத்தை நிறுத்திக்கொண்டது.

“இங்க பாருடி, நீ ஒன்னும் சின்னபுள்ள இல்ல எடுத்தோம் கவுத்தோம்னு முடிவு பண்ண..”

“அக்கா இது ஏன் வாழ்க்கை. நான் சின்னபுள்ளையும் இல்ல..”

“மது ஏன் டி இப்படியெல்லாம் சொல்ற.... உனக்கு நல்ல மாப்பிள்ளை நாங்க பார்த்து கட்டிவைக்க மாட்டோமா..??”

“ஏன் இவருக்கு என்ன..??இவரும் நீங்க பார்த்து முடிவு பண்ண மாப்பிள்ள தானே..”

“மது என்ன இது...???”

“தயவுசெஞ்சு பா...”

ஆளுக்கு ஏற்ப அவரவர்க்கு ஒரு பதில் சொல்லிக்கொண்டிருந்தவளை அதிசயித்து பார்த்தான் எழிலரசன்.
மனதினுள் “எப்படிடா இப்படி..” என்று நினைக்காமல் இருக்க முடியவில்லை.

“பொண்ணுக்கே பிடிச்ச பிறகு அப்புறம் என்னங்க..?? நல்ல நேரம் முடிய போகுது.. தட்டு மாத்திக்கலாம்..”

வேதாச்சலம் கந்தவேலுவை பார்த்துக்கேட்க, அவரோ என்ன செய்வது என்று தெரியாமல் விழித்தார்.
யார் பேசுவதற்கும் மதுஸ்ரீ மசிவதாய் இல்லை. இதுதான் என்றால் இதுதான். அனைவருமே கைகளை பிசைந்து நிற்கும் சூழல். ஆனால் மதுஸ்ரீ மட்டும் மிகவும் இயல்பாய் இருந்தாள்.

“இதெல்லாம் குடும்பமா?? சொல்ற பேச்சு யாராவது கேட்கிறாங்களா?? இத்தனை பேர் இருக்கும் போது இதென்ன பிடிவாதம்?”என்று சுபஸ்ரீயின் கணவன் மணிகண்டன் மல்லுக்கு தயாராக,

“அட சகலை எதுக்கு நீங்க இவ்வளோ டென்சன் அகனும்.. அமைதியா இருங்க.. பெரியவங்க பேசுறாங்கல...” என்று நித்யாவின் கணவன் பாஸ்கர் சமாதானம் செய்ய, இது வேறு ஒரு பிரச்சனையா என்று தோன்றியது பெண்களை பெற்றவர்களுக்கு.

மணிகண்டனுக்கு எப்படியும் இந்த திருமணம் நின்றுவிட வேண்டும், அதை வாய்ப்பாய் எடுத்து மதுஸ்ரீயை அவனது தம்பிக்கு முடித்திட வேண்டும். அவ்வளவே. மூத்த பெண்ணின் வாழ்வை பணயம் வைத்தால் தன்னப்போல் கந்தவேலுவும், பாக்கியமும் வழிக்கு வந்துவிடுவார். ஆனால் இந்த மதுஸ்ரீ தான் இப்படி அனைவரின் முன்னும் வாய் திறப்பால் என்று மணிகண்டன் எதிர்பார்க்கவில்லை.
அவனது தம்பிக்கு முதலிலேயே பெண் கேட்டிருக்கலாம்,

ஆனால் அப்படியெல்லாம் கேட்காமல் முதலில் வசதியான இடத்தில் எல்லாம் பார்த்துவிட்டு, ஒன்றும் அமையாமல் இருந்ததும், போதாத குறைக்கும் அவன் தம்பியும் குடிக்கு வாடிக்கையாளர் ஆகவும், போனால் போகிறது நாங்கள் பெண் எடுக்கிறோம் என்ற பாவனையில் எப்படியாவது மதுஸ்ரீயை தங்கள் வீட்டு மருமகள் ஆக்கிட துடித்தான்.

திருமணம் மட்டும் முடிந்துவிட்டால் பிறகு மதுஸ்ரீ ஏதாவது பிரச்சனை செய்தாலும் சுபஸ்ரீயை வைத்து வாயடைத்து விடலாம் என்று எண்ணியிருக்க, மதுஸ்ரீ அனைத்தையும் கெடுத்து விடுவாள் போல இருந்தது.

ஆகையால் தான் இத்தனை சவடால். ஆனால் அனைவருக்கும் முந்திக்கொண்டு பாஸ்கர் அவனை அடக்க, என்ன செய்வது என்று தெரியாமல் நிற்க, அந்த நொடியை எழிலரசன் பயன் படுத்திக்கொண்டான்.

“நான் கொஞ்சம் அவங்கட்ட பேசலாமா..? அதுக்கப்புறம் எதுவும் முடிவு பண்ணலாம்..”என்று மதுவை காட்டி கந்தவேலுவை கேட்க, அவரோ என்ன சொல்வது என்பது போல் மகளின் முகம் பார்த்தார்.

இதற்குமேல் யாரால் தான் என்ன கூற முடியும். சம்மதமாய் தலையசைத்தவள், வீட்டின் பின்புறம் செல்ல, அவளை பின்தொடர்ந்து அவனும் சென்றான்.

இத்தனை நேரம் அத்தனை பேரின் முன்பும் பேசும்போதெல்லாம் ஒன்றுமே தோன்றவில்லை மதுவிற்கு. ஆனால் இப்பொழுது அவனோடு தனித்து நிற்கும்பொழுதோ உலகத்தில் உள்ள அனைத்து பதற்றமும் அவளுக்கே சொந்தமாகியது.

எழிலரசனுக்கோ மதுஸ்ரீ அத்தனை பேரின் முன்பு அப்படி தைரியமா பேசியது ஒரு ஆச்சர்யத்தை குடுத்தாலும், ஒரு பக்கம் மகிழ்வாய் கூட இருந்தது.

அவன் மனதில் இருந்த இறுக்கம் தளர்ந்து, “வெளிய அந்த போடு போட்டீங்க.. இப்போ என்ன இவ்வளோ டென்சன்??” என்று புன்னகையோடு கேட்டவனின் முகத்தை ஏறிட்டு பார்த்தவள், ஒன்றும் சொல்லாமல் நின்றிருந்தாள்.

“ஏன் அப்படி சொன்னீங்க..??”

“எப்படி..??”

“இல்லை இந்த மேரேஜ் உங்களுக்கு அவ்வளோ முக்கியமா??”

எழிலரசன் மரியாதையாய் பேசியது அவளுக்கு இன்னும் அவனை பிடிக்கச் செய்தது. அவளது வீட்டினர் அவனை நடத்திய விதத்திற்கு இப்படி ஒரு மரியாதையை அவள் எதிர் பார்க்கவில்லை.

“எல்லார் வாழ்கைளையும் கல்யாணம் முக்கியம் தானே..??”

“இல்ல மதுஸ்ரீ, நான் அப்படி சொல்லல.. உங்க வீட்டில இது சுத்தமா பிடிக்கல.. அப்படியி..”

“எனக்கு பிடிச்சிருக்கும்னு நீங்க ஏன் யோசிக்கலை...?”

இப்படியான ஒரு கேள்வியில் அவனது வாயை மூடிவிட்டாள். அவனோ ஆச்சரியமாய் பார்த்தான். எழிலரசனுக்கு இப்படியெல்லாம் ஒருநிலை வருமென்று நினைத்துக்கூட பார்த்தது இல்லை. இப்பொழுது தான் முதல் முறையாய் அவளை காண்கிறான். அவளாவது புகைபடத்தில் பார்த்தாள். எழிலோ அதுவும் இல்லையே. ஆனாலும், ஏனோ அவனால் இந்த சம்பந்தத்தை உதறிச் செல்ல முடியவில்லை.

நான் ஆண் பிள்ளை இன்று இல்லையென்றாலும் என்றாவது ஒரு நாள் எனக்கு நல்ல பெண் கிடைப்பாள் என்று இத்தனை நாள் தனக்கு தானே கூறிக்கொண்டவனுக்கு, இன்று மதுவை கண்ட பிறகு அப்படியான எண்ணங்கள் எல்லாம் இல்லை.
ஆனாலும் தன்னிலையும், அவளது நிலையையும் மனதில் வைத்து,

“இல்லை உங்களுக்கு வேற நல்ல மாப்பிள்ளை...” என்று கூறினான்.

“அப்போ உங்களுக்கு என்ன குறைச்சல்..??”

மீண்டும் கேள்விதான் அவளிடமிருந்து பதிலாய் வந்தது.

‘அடடா சரியான அடாவடியா இருப்பா போலவே..’ என்றெண்ணியவன், “பதில் சொல்லாம கேள்வி கேட்டா என்ன அர்த்தம்..??” குரலில் சற்றே அழுத்தம் கொடுத்தான், இதற்கு நீ பதில் சொல்லித்தான் ஆகவேண்டும் என்பதுபோல்.

“ம்ம் சரி நான் நேராவே விஷயத்துக்கு வரேன். எனக்கு இந்த கல்யாணம் அதாவது உங்ககூட நடக்கப் போற இந்த கல்யாணம் ரொம்பவே முக்கியம்.இல்லைனா அந்த குடிகாரனுக்கோ இல்லை லட்சத்துல சம்பாரிக்கிற அந்த நாப்பது வயாசுக்காரனுக்கோ தான் கட்டி வைப்பாங்க.. நான் முழு மனசா தான் இதுக்கு சம்மதம் சொல்றேன்.. இதையெல்லாம் தாண்டி எனக்கு உங்களை பிடிச்சிருக்கு அவ்வளோதான்...”

உன்னை பிடித்திருக்கிறது என்று மதுஸ்ரீ கடைசியாய் சொன்னது ஏனோ அவனுள் சிறிது ஏமாற்றம். ஆனாலும் அவள் உண்மையை சொல்கிறாள் என்பதால் மதுஸ்ரீ மீது ஒரு நல்ல அபிப்பிராயம் தோன்ற, அவள் முகத்தையே பார்த்தபடி நின்றிருந்தான்.

“என்ன அமைதியாகிட்டீங்க..??”

“ஹா...இல்ல என்ன சொல்றதுன்னு தெரியல. அதான்.. ஆனா மது.. மதுஸ்ரீ.. இந்த கல்யாணம் அவசியம் நடக்கணுமா?? ஏன்னா.. நான்..”

“உங்களுக்கு என்னை பிடிக்காட்டி, எல்லார்கிட்டயும் சொல்லிட்டு தாராளமா கிளம்பி போயிக்கிட்டே இருக்கலாம்..”என்று அவன் கூறி முடிப்பதற்குள் இவள் பேசி அவன் வாயை அடைத்துவிட்டாள்.

‘அடப்பாவி.. கடைசியில என் தலையில கை வச்சுட்டாளே.. இப்போ நான் வேண்டாம்னு சொன்னா, இந்த கல்யாணத்தை நானே நிறுத்தின மாதிரி தானே ஆகும். பயங்கரமான ஆளா இருப்பாளோ..’என்று யோசித்து நிற்க,

“வேற எதுவும் பேசணுமா..??”என்று கேட்டவளின் முன்பு, எழிலின் தலை தானாகவே இல்லையென்று ஆடியது.

“ம்ம் சரி..”என்றவள், வீட்டினுள்ளே சென்றுவிட்டாள். இவன் தான் மலைத்து போய் நின்றிருந்தான்.

எழிலரசன் வந்து என்ன சொல்வானோ என்ற அச்சம் மதுவிற்கும் இருந்தாலும், வெளியில் காட்டாமல் நின்றிருந்தாள்.

“இதெல்லாம் உனக்கு தேவையா டி..??”என்று பாக்கியம் கடிந்த போதும்,

“ரொம்ப திமிர் கூடிப்போச்சு உனக்கு..”என்று அக்காக்களும், அண்ணனும் திட்டிய போதும், அமைதியாகவே இருந்தாள்.

இவர்களாய் ஒரு வரன் பார்த்து நல்லது கேட்டது சொல்லி சம்மதம் சொல் என்று கூறினால் உடனே நான் சரியென்று தலையுருட்ட வேண்டும். கடைசி நேரத்தில் வந்து இல்லை இது தோது படாது என்று கூறினால் அதற்கும் நான் சம்மதிக்க நான் மனுசியா இல்லை வேறெதுவுமா??

எனக்கென்று பிடித்தம், பிடித்தமில்லை என்று எதுவும் இருக்காதா..??

எழிலரசன் ஒன்றும் நானாய் தேர்ந்தெடுத்தவன் இல்லையே, வீட்டில் அனைவரும் பார்த்து பிடித்து சம்மதம் சொன்னவன் தானே.
அவனை அவளுக்கு பிடித்துவிட்டது. வீட்டில் பார்த்த வரனுக்கெல்லாம் நான் சம்மதித்தேனே, இன்று எனக்கு [பிடித்தவனுக்கு இவர்கள் சம்மதிக்கட்டுமே என்ற எண்ணம் வெகு வேகமாய் அவள் மனதினுள்ளே பரவ அமைதியாய் நின்றிருந்தாள்.

சிறிது நேர காத்திருப்பிற்கு பிறகு வந்த எழிலரசனோ, நேராக தன் தாத்தாவிடம் “பேசி முடிங்க..”என்று கூற,
மதுவின் முகத்தில் ஒரு நிம்மதி பரவியது.

வேதாச்சலம் சந்தோசமாய் கந்தவேலுவின் முகம் பார்க்க, அவரோ கலக்கமாய் நின்றிருந்தார்.

“இங்க பாருங்க மாமா, நீங்க தாராளமா இந்த கல்யாணத்தை செய்யுங்க, ஆனா நானோ என்னோட பொண்டாட்டியோ இந்த கல்யாணத்துக்கு வர மாட்டோம். அதுக்கு மேல பெரிய மக உறவையே நீங்க மறந்திட வேண்டியது தான்..” என்று மணிகண்டன் கூற, இது அனைவருக்குமே அதிர்ச்சியானது.

சுபஸ்ரீ கூட, இத்தனை நேரத்தில் ஓரளவிற்கு மனதை தேற்றியிருந்தாள், அந்த குடிகாரனை கட்டி தங்கை லோல் பட, எழிலரசன் எப்படியிருந்தாலும் மதுவிற்கு பிடித்தவனாய் இருக்க இதில் சம்மதிப்பதில் அவளுக்கொன்றும் பெரிய தவறு இருப்பதாய் தெரியவில்லை. ஆனால் மணிகண்டன் இப்படி சொன்னதும் ஆடித்தான் போனாள். அவளுக்கு கடைசி வரைக்கும் தாய் வீட்டு உறவு வேண்டுமே.

“என்னங்க என்ன இப்படி சொல்றீங்க..???”

“ஏய் நீ வாய மூடு... எனக்கு இதுல விருப்பமில்ல. அப்புறம் மூத்த மருமகன்னு எனக்கு என்ன மரியாதை இருக்கு.. உனக்கு இதுல சம்மதம்னா நீயும் இங்கயே இருந்துக்க, என் புள்ளைய கூட்டிட்டு நான் நடைய கட்டுறேன்.. அவ்வளோ தான்... இதுக்கு மேல மாமா நீங்க முடிவு செய்யுங்க...” என்று கந்தவேலுவை பார்த்துச் சொல்ல, என்னதான் செய்வார் அவர்.

பிரச்சனை இப்படி ஒருப்பக்கம் திசை திரும்பும் என்று மதுஸ்ரீயே நினைத்திடாத பொழுது, எழிலரசன் மட்டும் என்ன செய்வான். தேவையில்லாமல் இவனால் அவர்கள் வீட்டில் கலாட்டா என்று நினைக்கத் தோன்றியது. என்ன இருந்தாலும் தாங்களும் ஒருமுறை தெளிவாய் அனைத்தையும் பேசியிருந்தால் இப்பொழுது இந்த பிரச்சனை இல்லவே இல்லையே.

வேதாச்சலமோ என்ன ஆனாலும் இதை முடிக்காமல் போக கூடாது என்ற உறுதியில் நிற்க, மதுஸ்ரீயோ கலக்கமாய் எழில் முகம் பார்த்தாள்.அவனுக்கு இப்படி ஒரு சூழ்நிலையில் அங்கே நிற்பது சங்கடமாய் இருந்தது. மணிகண்டன் என்ன சொல்லியும் கேட்பதாய் இல்லை. இதையெல்லாம் விட காதலித்து திருமணம் செய்துக்கொண்ட ஸ்ரீதரன் கூட மதுவின் உணர்வுகளை புரிந்துக்கொள்ளவில்லை.

“மது, தேவையில்லாம உன்னால பிரச்சனை. பாரு சுபா எப்படி நிக்கிறான்னு.. இந்த சம்பந்தம் வேண்டாம்.. இத்தனை நாள் நாங்க சொன்னதை கேட்டதானே இப்போ என்ன??” என்று எகிறினான்.

இது ஒன்று போதாதா மணிகண்டனுக்கு, “அப்படி சொல்லு மச்சான்.. இத்தனை பேர் வேணாம்னு சொல்றோம். பொம்பளை பிள்ளைக்கு அப்படி என்ன பிடிவாதம்..” என்று மீண்டும் தொடங்க,

பாஸ்கரனோ, “அட என்னப்பா ரெண்டு பேரும் இப்படி மல்லுக்கு நிக்கிறீங்க?? மதுக்கு பிடிச்சா செஞ்சுட்டு போகட்டுமே.. இதுல என்ன இருக்கு.. ஏன் ஸ்ரீதர் நீயும் உனக்கு பிடிச்ச பொண்ண தானே கல்யாணம் பண்ணிட்டு வந்த, அப்போ நாங்க உன் விருப்பத்துக்கு மதிப்பு குடுக்கலையா??? இப்போ என்ன வந்தது...” என்றான்.

பாஸ்கரன் கஞ்சன் தான், ஆனால் இதுபோன்ற விசயங்களில் சற்று புரிந்து நடப்பான். அவனை பொருத்தமட்டில் அவனிடம் யாரும் எதற்கும் பணம் கேட்டுவிட கூடாது அவ்வளவே. நித்யஸ்ரீக்கு கூட ஆச்சரியமாய் இருந்தது தன் கணவனா இப்படி என்று.
இப்படியாக ஆளாளுக்கு பேச்சை தொடங்க, அது ஒன்றில் தொட்டு ஒன்றாய் பெரிதாக, கந்தவேலு என்ன செய்வது என்று தெரியாமல் அமர்ந்துவிட்டார். பாக்கியமோ அழவே தொடங்கிவிட்டார்.

ஒரு மகளின் வாழ்வை பார்த்து இன்னொருத்தியின் உறவை துண்டிப்பதா?? இல்லை மூத்தவளின் உறவிற்காக கடைசி பெண்ணின் மனதை நோகடிப்பதா?? எப்பக்கம் நிற்பது என்று தெரியாமல் அந்த தாயுள்ளம் திண்டாடியது.

ஆனாலும் இத்தனை நாள் இல்லாமல் இன்று அனைத்தும் பொருத்தமாய் கூடி வந்திருக்கிறது, எழிலரசனின் குறை கூட இப்பொழுது மதுவின் பெற்றோர்களுக்கு பெரிதாய் தெரியவில்லை போல. மகளுக்கு பிடித்திருக்கிறது என்றதிலேயே மனம் சற்று மாறியதோ என்னவோ.

“ஸ்ரீதர்....” என்று கந்தவேலு மகனை அழைக்க,

“நீங்க என்ன சொன்னாலும் சரிப்பா... இதுக்கு நான் சம்மதிக்க மாட்டேன். அப்படி என்ன இவளுக்கு பிடிவாதம்.. இத்தனை பேர் முன்னாடி இப்படி பேசுறது என்ன பழக்கம்... இத்தனை நாள் எத்தனையோ மாப்பிள்ள கட்டினோமே, ஒரு வரனுக்கு கூட இவ்வளோ பிடிவாதம் செய்யல அப்படி இருக்கும் போது.... இந்த நொண்....” என்று அவன் பேசிக்கொண்டே போக,

“அண்ணா......!!!!!!!!” என்று அலறியே விட்டாள் மது..

அதே நேரம் எழிலரசனும் இருக்கையில் இருந்து எழுந்துவிட்டான். ஏனோ இதற்குமேல் அவனால் அங்கே பொறுமையாய் இருக்க முடியவில்லை. இத்தனை நேரம் இருந்ததே பெரிது. மதுவின் அலறலும், எழிலில் எழுந்து நின்றதும் இன்னும் அங்கே பதற்றத்தை கூட்டியது. ஸ்ரீதரன் ஒன்றும் எழிலரசனை காயப்படுத்த அப்படி சொல்லவில்லை, ஒரு வேகத்தில் பேசும்பொழுது வார்த்தைகள் வந்துவிட்டது. ஆனாலும் வெளியில் அதைக்காட்டிக் கொள்ளாமல் தான் பேசியதில் ஒன்றும் தவறில்லை என்பது போல நின்றிருந்தான்.

மதுஸ்ரீக்கு அத்தனை கஷ்டமாய் இருந்தது. தன் வீட்டினர் இத்தனை கீழிறங்கி நடந்திட வேண்டுமா என்று எண்ணினாள். மன்னிப்பை வேண்டி எழிலரசனை பார்க்க, அவனோ இறுகி போய் நின்றிருந்தான். இருக்காதா பின்னே, அவனும் எத்தனை நேரம் தான் பொறுமை காப்பான். வேதாச்சலம் எதுவோ கூற வருவதற்கு முன்பே,

“எங்களை மன்னிச்சிடுங்க சார். இதுக்கு மேல நாங்க இங்க இருக்க கூடாது.. உங்க வீட்ல எங்கனால வீண் பிரச்சனை.. நாங்க கிளம்புறோம்..” என்று கரங்கள் குவித்தவன், வேதாச்சலத்தை அழைத்துக்கொண்டு திரும்ப,

விழிகள் இமைக்காது அவனையே பார்த்தபடி நின்றிருந்தாள் மது.அவளது கடைசி நம்பிக்கை அவன் தானே. அவனும் கோவித்துக்கொண்டு போகிறானே. அவளுக்கு என்ன செய்து எழில் போவதை தடுப்பது என்று தெரியவில்லை. கண்களில் கண்ணீர் வரவில்லை மாறாக ஒரு வெறுமை குடியிருந்தது. முகத்தில் வேதனையின் ஒப்பனை நன்றாய் பொருந்தியிருக்க, அவளைக்கண்ட எழிலரசனுக்கோ அத்தனை சங்கடமாய் இருந்தது.

தன்னை நம்பி தன் மனதில் இருப்பதை மறையாது சொன்னாளே, அவள் நம்பிக்கையை உடைப்பதா??

முதன் முதலாய் தன் மீதும் ஒருத்தி நம்பிக்கை வைத்து தன் வாழ்வை ஒப்படைக்க முன்வந்தாளே அவளை இந்த சுயநல கூட்டத்தில் விட்டுச் செல்வதா??

இதற்கெல்லாம் மேலாய் மதுவை எனக்கு பிடித்திருக்கிறதே. இந்த எண்ணங்கள் எல்லாம் ஒன்றின் மீது ஒன்றாய் ஏறி அவனது மனதில் சவாரி செய்ய, அவனுக்கோ கால்கள் நிற்க முடியாமல் தடுமாறுவது போல் இருந்தது. இப்படி பேசியவர்களின் முன்னால் விழுந்துவிட்டால் அதை விட பெரிய அசிங்கம் வேறெதுவும் இல்லை.

இந்த எண்ணம் மனதில் தோன்ற, நேராக மதுவிடம் சென்றான்.“எதுக்கும் பயப்படாம தைரியமா இருங்க மதுஸ்ரீ... நம்மலை மீறி எதுவும் நடக்காது..” என்றான் ஆறுதலாய்.

அதன்பின் என்ன நினைத்தானோ, ஒரு உறுதியுடன் திரும்பி, கந்தவேலுவிடம், “உங்க வீட்டு பிரச்சனை எல்லாத்தையும் முடிச்சிட்டு சொல்லுங்க, நாங்க வந்து நிச்சயம் பண்ணிக்கிறோம். மதுஸ்ரீ என்னை நம்பி அவங்க மனசுல இருக்கிறதை பேசுனாங்க. அந்த நம்பிக்கையை நான் காப்பாத்தனும். காப்பாத்துவேன். இன்னிக்கு வந்த நானே உங்க பொண்ணு மனசை புரிஞ்சு நடக்கும் போது, நீங்க எப்படி இருக்கணும்னு உங்களுக்கே தெரியும்...” என்றவன் அவர் பதிலுக்கும் காத்திராது கிளம்பிவிட்டான்.

எத்தனை அழகாய் பேசிவிட்டான். இப்படியான பேச்சிற்கு யார்தான் எதிர்த்து பேச தோன்றும். மதுவே அவன் கூறியதை கேட்டு திகைத்துத்தான் போனாள். கலங்கி போயிருந்த மதுவின் உள்ளத்திற்கு, அவனது வார்த்தைகள் அத்தனை நிம்மதியை கொடுத்தது.
‘எழிலரசன் என்னை கைவிட மாட்டான்’ என்ற எண்ணமே அவளுக்கு அமைதியை கொடுக்க, அனைவரையும் ஒரு பார்வை பார்த்துவிட்டு ஒன்றும் பேசாமல் தன்னறைக்கு சென்றுவிட்டாள்.

ஆனால் அவளது நிம்மதி நிலைக்குமா என்ன??

“ஆனாலும் உனக்கு இவ்வளோ நெஞ்சழுத்தம் ஆகாது. ஊமையாட்டம் இருந்துகிட்டு இப்படி அடுத்தவங்க முன்னாடி எங்களை தலை குனிய வச்சிட்டையே..” என்றபடி வந்து ஸ்ரீதரன் பொரிய,

“அண்ணி ஆனாலும் நீங்க இப்படி பேசுவீங்கனு நாங்க யாருமே எதிர்பார்க்கல..” என்று அவனுக்கு இன்னும் தூபம் போட்டாள் அவன் மனைவி.

அவனது திருமணம் எல்லாம் மறந்துவிட்டது போல. பதிலுக்கு நன்றாய் கேட்கவேண்டும் போல் ஒரு வேகம் வந்தது மதுஸ்ரீக்கு, இவர்கள் திருமணம் செய்துகொண்ட போது வீட்டில் யார் யார் எப்படி இருந்தார்கள் என்று அவளும் கண்டாள் தானே.
ஆண் என்றால் காதலிப்பவளை இழுத்தும் வரலாம். பெண் என்றால் வீட்டில் பார்த்தவனை கூட பிடித்திருக்கு என்று சொல்ல கூடாதா. நல்ல சட்டமாடா சாமி என்று மனதில் சொல்லிக்கொண்டாள். ஆனால் வாய் திறக்கவில்லை.
 
Joher

Well-known member
Member
:love::love::love:

என்னடா இது.......... இவ்ளோ சுயநலமான உடன் பிறப்புகள்.......
வாழப்போறவளே ஓகே சொல்றா இவங்களுக்கென்ன??????

லாஸ்ட் லைன் (y)(y)(y)
 
Last edited:
Advertisement

Advertisement

Top