Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

நள(ன்)தமயந்தி - 13

Advertisement

SatyaSriram

Well-known member
Member
அத்தியாயம் – 13

சென்னை – தி.நகர்

அது ஒரு அழகான அடுக்குமாடி குடியிருப்பு. மாலை வேளையில், பள்ளி விட்டு வந்து, வீட்டுப்பாடங்களையும் முடித்து வந்த சிறார்கள், அங்கிருந்த சிறிய பூங்காவில் விளையாடிக்கொண்டிருந்தனர்.

எந்தவித எதிர்மறையான எண்ணங்களோ,, எதிர்காலத்தை குறித்த பயமோ, அல்லது பணம் சம்பாதிக்க ஓடியாக வேண்டிய கட்டாயமோ இல்லாமல்,, அந்த பிஞ்சுகள் விளையாடிக்கொண்டிருந்தனர். குழந்தைகளின் உலகமே தனி தான்..

அந்த குழந்தைகள் விளையாடுவதைப் பார்க்கும்போது, நாமும் அந்த பருவத்திலேயே இருந்திருக்கலாம் என்று தமயந்திக்கு தோன்றிற்று.
நளனும் அந்த குழந்தைகளையே முகத்தில் பூத்தப் புன்னகையுடன் பார்த்துக்கொண்டிருந்தான்.

இவர்களுக்கு திருமணம் முடிந்து மூன்று மாதங்கள் ஆகிறது. திருச்சியில் இருந்து இந்த சென்னை மாநகரத்திற்கு குடிவந்து ஒருவாரம் கடந்திருந்தது.

அவர்களின் ‘சுந்தரதர்மா’ டீ.நகரில் ஆரம்பித்து ஒன்றரை மாதங்கள் ஆகியிருந்தது. கடையின் அருகிலேயே வீடுப் பார்த்து குடி வரத்தான் சற்று காலதாமதமானது..

நளன் தம்பதிகள் வரும் வரை கடையை திருச்சி ‘சுந்தரதர்மாவில்’ வேலைப்பார்த்த ஒருவர் பார்த்துக்கொண்டார். அவரின் குழந்தைகளின் மேற்படிப்பிற்காக சென்னை செல்ல விரும்பியதின் பேரில் தமயந்தி இங்கு அவரை அனுப்பி வைத்தாள்..

நளன் தம்பதிகள் அவ்வப்போது திருச்சியிலிருந்து, சென்னை சென்று பார்த்துக்கொண்டிருந்தனர்.

இங்கு குடிவந்த பின்பு நளனும் தமயந்தியும் சேர்ந்து தான் ‘சுந்தரதர்மா’விற்கு போய் வருகின்றனர்.

திருச்சியில் இருக்கும் நளனின் ‘நளாஸ்’, இப்பொழுது அவனின் மாமன் மகள் விசாலியின் கணவன் முகுந்தனின் கைவசம் உள்ளது.. முகுந்தனும் நளனும் நண்பர்கள்.. நளன் கல்லூரியில் படிக்கும்போது வந்த நட்பு முகுந்தன். விசாலியை விரும்பி கல்யாணம் செய்துக்கொண்டவன்.

விசாலி மற்றும் அவனின் தாயின் வற்புறுத்தலுடன் இப்பொழுது ‘நளாஸ்’ உணவகத்தை நிர்வகித்து வருகிறான் முகுந்தன். நிர்வாகத்தை மட்டும் தான் முகுந்தன் பார்த்துக்கொள்கிறான். உரிமை நளனிடமே உள்ளது..

மனைவியின் மனநலனை கருத்தில் கொண்டு, அவளை தனியே விடாமல் இருப்பதற்காக தமயந்தியுடன், சென்னையில் உள்ள ‘சுந்தரதர்மாவை’ நிர்வகிக்க ஆரம்பித்திருந்தான் நளன்.

குழந்தைகள் விளையாடுவதைப் பார்த்துக்கொண்டிருந்த தமயந்தியைப் பார்த்த நளனிற்கு, நான்கு மாதங்களுக்கு முன், அவளுடன் தனியே உச்சிபிள்ளையார் கோவிலில் பேசியது நினைவிற்கு வந்தது.

அன்று தமயந்தியுடன் தனியே பேச போன நளனை ஒருவார்த்தைக் கூட பேசவிடாமல் செய்தாள் தமயந்தி.

‘தான் திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்ததால் மட்டும் தான், தர்மா மாமா இறந்தார்.. அதேப் போல் மறுத்திருமணத்திற்கு சம்மதித்து தன்னுடைய பெற்றோரையும் இழக்க விரும்பவில்லை.. இனி தன் வாழ்வில் திருமணம் என்ற பேச்சிற்கே இடமில்லை..!!’ என்று மனமுடைந்து கூறிய தமயந்தி, நளனையும் வேறுப் பெண்ணை பார்த்து திருமணம் செய்துக்கொள்ள பணித்துவிட்டு வேகமாக கோவிலை விட்டு சென்றாள்..

நளன் அவனின் விருப்பத்தை தமயந்தியிடம் தெரிவிக்க முடியாமல் போனது.. அதற்கு தமயந்தி சந்தர்ப்பமே அளிக்கவில்லை என்பது தான் உண்மை.. அவன் வருத்தத்துடன் கோவிலை விட்டு சென்றான்..

அவளின் முடிவை தாய் விசாலாட்சியிடம் தெரிவித்த நளன், மேற்கொண்டு இந்தப் பேச்சை எடுக்க வேண்டாம் என்றான்..

விசாலாட்சி வருத்தத்துடன், ‘வேறு பெண்ணைப் பார்க்கலாம்’ என்று கூறியதற்கும், ‘கொஞ்ச நாள் ஆகட்டும்’ என்று சொல்லிவிட்டான்.. மனதில் புதிதாக தோன்றியிருந்த ‘காதல்’ வேறு திருமணத்திற்கு சம்மதம் சொல்ல ஒத்துழைக்கவில்லை..

அவளின் தந்தை சுந்தரத்திடமும் திருமணப் பேச்சை நிறுத்துமாறு கேட்டுக்கொண்டான்.. நட்பு ரீதியிலான சில சந்திப்புகள் தவிர, தமயந்தி குடும்பத்தை தொடர்புக் கொள்ளவில்லை நளன் மற்றும் விசாலாட்சி.

இப்படியே ஒரு மாதம் கடந்தது..

தமயந்தியின் முடிவு சுந்தரம் தம்பதிகளையும் வருத்தத்தில் ஆழ்த்தியது.. தாங்கள் சரியாக விசாரிக்காமல் செய்த காரியத்தால், தங்கள் பெண்ணின் வாழ்க்கை பாழானது குறித்து மிகுந்த கவலைக்கொண்டனர்..

‘நளனை திருமணம் செய்துக்கொள்’ என்று தமயந்தியை வற்புறுத்தவும் அவர்களால் முடியவில்லை.. அதனால், தங்களின் இறுதி வரை தமயந்தியை மிகவும் சந்தோஷமாக வைத்துக்கொள்ள முடிவெடுத்தனர்..

மீனாட்சியாவது அவரின் வருத்தத்தை அன்னத்திடம் புலம்பி தீர்த்துக்கொண்டார்.. சுந்தரத்தால் ஓரளவிற்கு மேல் மீனாட்சியிடம் கூட அவரின் கவலையை காட்டமுடியவில்லை.. மீனாட்சியின் உடல் நிலையே அதற்கு காரணம்..

அதனால் மனதிற்குள்ளேயே வைத்து புழுங்கினார்.. விளைவு அவரின் இதய நோய் அதிகமாகியது.. அந்த வலியையும் யாரிடம் சொல்லாமல் பொறுத்துக்கொண்டார்..

முன்பே அதற்கு அறுவைசிகிச்சை செய்துக்கொண்டதால் பெரிதாக பிரச்சினை எழ வாய்ப்பில்லை என்று அவராகவே நினைத்துக்கொண்டு, யாரிடமும் சொல்லாமல், ‘சுந்தரதர்மா’ வை சென்னையில் திறப்பதற்காக நிறைய இடங்களுக்கு அலைந்தார்..

அவரின் மனதிற்கு பிடித்த இடத்திற்கு அட்வான்ஸ் கொடுத்துவிட்டு வந்தபின், அவருடைய உடல் நிலை மிகவும் மோசமடைந்தது.. வீட்டிற்குள் நுழைந்ததுமே மயங்கி விழுந்தார். அடுத்த அரைமணி நேரத்தில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

தமயந்தியிடம் மருத்துவர், ‘பைபாஸ் சர்ஜரி சில பேருக்கு பெய்லியர் ஆகும்.. உங்க அப்பாவுக்கு அது மாதிரி பெய்லியர் ஆகிடுச்சு.. மேற்கொண்டு சிகிச்சைக்கு உங்க அப்பா ஒத்துக்கொள்ள மாட்டேன் என்கிறார்.. பேசன்டின் ஹெல்ப் இல்லாமல் சிகிச்சையை தொடர முடியாது.. ப்ளீஸ் அவர எங்களுக்கு கோவாபரேட் பண்ண சொல்லுங்க..’ என்று கூறினார்..

சிகிச்சைக்கு ஒத்துக்கொள்ள சொல்லி, தமயந்தியும் சுந்தரத்திடம் எவ்வளவோ மன்றாடினாள்.. ஆனால் சுந்தரம் மசியவேயில்லை.

‘உன் வாழ்க்கையை கெடுத்த எனக்கு எதுக்கும்மா உயிரு? நானும் தர்மா போன இடத்துக்கே போறேன்.. மீனாட்சியை நல்லாப் பார்த்துக்கோடா தமு..!! எனக்கு அது போதும்.. சீக்கிரம் என்னை வீட்டுக்கு கூட்டிட்டு போயிடும்மா..!!’ என்றார் சுந்தரம் திடமாக..

தமயந்தி மனமுடைந்து அழுது கேட்டுப் பார்த்தும் பலனில்லாமல் போனது.. பிறகு ஏதேதோ யோசித்தாள்..

சுந்தரத்திடம், ‘தான் திருமணம் செய்ய சம்மதம் சொன்னால் சிகிச்சைக்கு ஒத்துழைப்பீர்களா?’ என்று கேட்டாள் தமயந்தி..

தமயந்தியை கார்னர் செய்ய சுந்தரம் ஒரு நாளும் நினைத்ததில்லை.. இப்பொழுது கூட அவருக்கு, பெண்ணின் வாழ்க்கை பாழ் செய்துவிட்டு உயிர் வாழ்வதில் விருப்பமின்மை தான் அதிகமானதே ஒழிய, அதை வைத்து பெண்ணை பணிய வைக்க நினைக்கவில்லை சுந்தரம்..

தமயந்தி அவ்வாறு கேட்டதும் சிறிது யோசித்தார் சுந்தரம்.. ‘கெட்டதிலும் ஒரு நல்லது நடந்தா சரி..!!’ என்று நினைத்து, தன்னுடைய சம்மதத்தை மெளனமாக தலையைத்து தெரிவித்தார்..

அதை தொடர்ந்து காரியங்கள் மிக வேகமாக நடந்தன.. சுந்தரம் நளனை தான் மாப்பிள்ளை என்று திட்டவட்டமாக தெரிவித்துவிட்டு, அன்றே விசாலாட்சியையும், நளனையும் அழைத்து சம்பந்ததை உறுதி செய்தார்.. மீனாட்சியின் உதவியுடன்..

மருத்துவமனையில் அவரைப்பார்க்க வந்த நளன் அவனுடைய சம்மதத்தை தெரிவித்துவிட்டு, தமயந்தியை திருமணத்திற்கு முன் தனியே அவளை சந்திக்க வேண்டும் என்று அவளிடம் தெரிவித்துவிட்டு, அங்கிருந்து சென்றான்..

தமயந்தியை சந்திப்பதற்கு முன்னதாக, விசாலாட்சியுடன் சேர்ந்து சுந்தரம் தம்பதிகளை தனியே சந்தித்தான்..

‘திருமணத்திற்குண்டான எந்த வித சடங்கோ, நகையோ, பட்டுக்களோ எதுவுமே இருக்க வேண்டாம்..!! அதுவுமில்லாம கேலி, கொண்டாட்டங்கள், என்று எதுவுமே எங்கள் கல்யாணத்தில் இருக்கவே கூடாது..!!
சாதாரண பதிவு திருமணம் மட்டும் எங்களுக்கு போதும்..!! கூட்டத்தினரையும் சேர்க்கவேண்டாம்.. நம்ம குடும்ப உறுப்பினர்கள் மட்டும் போதும்..!! அவள் மனதிற்கு குழப்பம் மற்றும் சங்கடம் விளைவிக்கும் எந்த சடங்கும் இந்த கல்யாணத்துல இருக்க நான் அனுமதிக்க மாட்டேன்.!!.’ என்று அவர்களிடம் திட்டவட்டமாகக் கூறினான் நளன்.

விசாலாட்சிக்கு ஒரே மகனின் திருமணம் ‘இவ்வளவு எளிமையாக நடக்கப் போகிறதே..!!’ என்று சற்று வருத்தமிருந்தாலும், மகன் சொல்வதில் உள்ள நியாயம் புரிந்ததால், தமயந்திக்காக ‘சரி’ என்று ஒப்புக்கொண்டார்..

சுந்தரம் தம்பதிகள் பேச்சற்று, கண்களில் நீரோடு நின்றவர்கள், நளனின் கையைப் பிடித்து தங்கள் சம்மதத்தை தெரிவித்தனர்.. மனதார கடவுளிடம் இவர்களின் வாழ்க்கை சிறக்க வேண்டிக்கொள்ளவும் மறக்கவில்லை அவர்கள்..

பின் அனைவரும் இணைந்து திருமண நாளை குறித்தனர்.. கூடவே சுந்தரத்தின் மேற்படி சிகிச்சைகளும் தொடர்ந்தது..

திருமணத்திற்கு இரண்டு நாட்களுக்கு முன் தமயந்தி நளனை தனியே சந்தித்தாள். இம்முறை கோவிலை தவிர்த்து ரெஸ்டாரன்ட்டிற்கு வர சொல்லியிருந்தான் நளன்.. டேபிளும் ரிசர்வ் செய்திருந்தான்..

இருவரும் அமர்ந்ததும் மெனு கார்டை கொண்டு வந்த பேரரிடம், ஒரு அரை மணி நேரம் கழித்து வருமாறு கூறிய நளனை புரியாமல் பார்த்தாள் தமயந்தி..

“பர்ஸ்ட் நாம கொஞ்சம் பேசிடலாம், தென் பூட் ஆர்டர் செஞ்சு சாப்பிட்டுக்கிட்டே பேசலாம்..” என்று பேசுவதிலேயே குறியாக இருந்தான் நளன்..

தமயந்தி சம்மதம் என்று தலையை அசைத்துவிட்டு “ நாம பிரண்ட்சா..” என்று முதலில் பேச்சை ஆரம்பித்தவளை அவளின் கைப் பற்றி தடுத்தான் நளன்..

“உன்னை முதலில் பேசவிட்டா எனக்கு தான் டேஞ்சர்..!! நான் பேசி முடிச்சிடறேன்.. அதுவரைக்கும் நீ வாயே திறக்கக் கூடாது..!!” என்று கூறிய நளன், அவளின் கையை சிறிதாக அழுத்தி கொடுத்துவிட்டு விடுவித்தான்..

மெளனமாக அவளையே சில நொடிகள் பார்த்திருந்தான்.. அவளோ அவனின் ஊடுருவும் பார்வையில், சிறிது அவஸ்தையாக நெளிந்தாள்.

நளனிற்கு அவளின் அவஸ்தை புரியத்தான் செய்தது.. இருந்தாலும் அவளையே பார்த்திருந்தான் மனதில் பொங்கிய காதலுடன்..

சிலநிமிட அமைதிக்கு பின், அவனின் காதலை நேரடியாக தெரிவித்தான்.. காதல் வருவதற்கு முதல் காரணம் அவளின் பெயர் என்று பகிர்ந்தவன், அவளின் புரியாதப் பார்வையில், அன்னையுடன் பேசினவற்றை சுருக்கமாக கூறினான்.

தொடர்ந்து, “நீ சொல்ல வந்தது எனக்கு புரிந்தது தமு..!! கல்யாணம் பண்ணினாலும் நாம நண்பர்களாகவே இருக்கலாம்ன்னு தானே சொல்ல வந்த?” என்று கேட்டான் நளன்..

‘ஆம்..!!’ என்பதாக தலையை ஆட்டினாள் தமயந்தி..

“பாரு இப்போவே உன்னை எப்படி புரிஞ்சு வச்சுருக்கேன்..!!” என்றவன், “ இங்க பாரு தமு.. நான் உன்னை விரும்பி தான் கல்யாணத்திற்கு கேட்டேன்.. இதுல அனுதாபமோ, பச்சாதாபமோ எதுவுமே இல்ல. அந்த அளவிற்கு உன் வாழ்க்கையில ஒண்ணுமே நடக்கவும் இல்லை என்பதுதான் உண்மை தமயந்தி..!!” என்று சொன்னவனை அடிப்பட்ட பார்வைப் பார்த்தாள் தமயந்தி..

“அவன் கிட்டயிருந்து இவ்வளவு சீக்கிரம் தப்பித்ததற்கு நீ கடவுளுக்கு தான் நன்றி சொல்லணும்.. கொஞ்சம் யோசிச்சு பாரு..!! இன்னும் எத்தனை பொண்ணுங்க அந்த மாதிரி இருக்கிற ஆண்களிடமிருந்து தப்ப முடியாம இருக்காங்க.. வெளில கூட சொல்ல முடியாத கஷ்டத்துல கூட எத்தனைப் பேர் இருக்காங்க.. அதெல்லாம் யோசித்துப் பார்க்கும்போது.., அவன் கிட்டயிருந்து நீ தப்பிச்சது எவ்வளவு நல்லதுன்னு, உனக்கு புரியுதா, இல்லையா? தமு?”

“எனக்கு புரிஞ்சதுனால தான், அவனின் அப்பாவிடம் அப்படி பேசினேன்.. என்னுடைய வருத்..” என்று மேற்கொண்டு பேசப்போனவளை..

“ஸ்டாப்..!!” என்று நிறுத்தினான்..

“உன்னோட வருத்தம் எல்லாம் தர்மா சித்தப்பா பத்தி மட்டுமே ன்னு தானே சொல்லப் போற..!! எனக்கு உன்னைப் பார்த்தா அப்படி தெரியல.. ஏன் தெரியுமா? எவனோ என்னமோ சொன்னதை மனதில வச்சி புழுங்கிக்கிட்டே இருந்து, சோறு தண்ணி இல்லாம மயங்கி விழுந்தியே அது எதுக்கு? யாரோ எவனோ அந்த சைக்கோ, அப்படி பேசினா, நீ இப்படி அறிவில்லாம தான் நடந்துப்பியா? உன்னை பெற்றவர்களின் நிலையை கொஞ்சமாச்சும் யோசிச்சு பார்த்தியா முட்டாள்..!!” என்று திட்டினான் நளன்..

தமயந்தி எதுவுமே பேசாமல் அமைதியாக இருந்தாள்..அவளின் உணர்வை நளன் கேலியாகப் பார்ப்பது போல் இருந்தது..

அவளின் முக மாறுதலை கவனித்த நளன்.., தன்னடைய பேச்சு வேறெங்கோ அழைத்து செல்வதை உணர்ந்தான்.. அது தங்களின் வாழ்க்கைக்கு நல்லதல்ல என்றும் புரிந்துக்கொண்டான்..

“சாரி தமு..!! உன்னை ஹர்ட் பண்ணனும்ன்னு நினைக்கலை..ஒன்ஸ் அகைன் வெரி சாரி..!!” என்ற நளனை பார்த்தாள் தமயந்தி..

“இதெல்லாம் நம்ம கல்யாணத்திற்கு பிறகு உனக்கு மெதுவா புரிய வச்சுக்கறேன்.. கண்டிப்பா அப்போ உனக்கு என்மேல கோபமோ, வருத்தமோ வராது.. இப்போ நான் சொல்ல வந்ததை சொல்லி முடிச்சுடறேன்.. என்னதான் நீ நண்பர்களா இருக்கலாம்ன்னு நீ சொன்னாலும் என்னால அது முடியாது.. நாம கணவன் மனைவிங்கறதை உன் மனசுல இப்போ இருந்தே பதியவை.. கணவன் – மனைவிக்குள் நட்பு இருக்க வேண்டும் தான், ஆனா அதுக்கு நண்பர்களா இருக்கணும்ன்னு எந்த அவசியமும் இல்லை...!!” என்று நிறைய சொன்னான் நளன்..

கிட்டத்தட்ட அவர்களின் பேச்சு இரண்டு, இரண்டரை மணி நேரம் சென்றது.. பின்னர் வீட்டிற்கு கிளம்பி சென்றனர்.

அடுத்து வந்த பதிவு திருமணம் மிகவும் எளிமையாக நடந்தது..

“ஹே..!ஹே..!!! நான் தான்.. வின்..!!!” என்று ஒரு குழந்தையின் குரலில் நடப்பிற்கு திரும்பினான் நளன்.. திரும்பி தமயந்தியைப் பார்த்தான்.. அவளோ அமர்ந்த இடத்திலேயே குழந்தைகளைப் பார்த்து ரசித்திருந்தாள்..

“வா தமு..!! உள்ள போகலாம்..!!” என்று அவளையும் வீட்டினுள் அழைத்து சென்றான் நளன்..
 
Top