Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

நள(ன்)தமயந்தி - 7

Advertisement

SatyaSriram

Well-known member
Member
அத்தியாயம்:7

மயங்கி கிடந்த தமயந்தியை தூக்க நளன் விரைந்தான். ஆனால் அதற்குள் அன்னம் அவளின் முகத்தில் தண்ணீரை தெளித்து மயக்கத்தை தெளிய வைத்தார்.

பின் அவரே கை தாங்கலாக தமயந்தியை அழைத்து வந்து மீனாட்சியின் அருகேயே அமர வைத்த பின் சமையலறைக்கு சென்றார்.

மீனாட்சி தன் மகளின் முகத்தை மிகுந்த கவலையுடன் பார்த்திருந்தார். இவ்வளவு நடந்தபோதும் சுந்தரம் அசையாமல் நின்ற இடத்திலேயே நின்றுக் கொண்டிருந்தார்.

மூவர்க்கும் குளிர்ந்த நீருடன் திரும்பிவந்த அன்னம், முதலில் தமயந்திக்கு கொடுத்து விட்டு பின் மீனாட்சிக்கு கொடுத்தார்.

சுந்தரத்திடம் சென்றவர், “அய்யா! இந்தாங்க..!” என்று சத்தம்மாக அழைத்து அவரின் கையில் தண்ணீரை கொடுத்தார்.

“மீனு! இப்போ எப்படி இருக்கு? தமும்மா உனக்கும் பரவாயில்லையாடா, நாம ஹாஸ்பிடல் போகலாமா?” என்று விசாரித்த விசாலாட்சிக்கு மறுப்பாக தலை அசைத்தனர் அவ்விருவரும்.

“அங்கிள் கொஞ்ச நேரம் உக்காருங்க வாங்க.” என்று சுந்தரத்தை அமர வைத்த நளனின் முகத்தில் குற்ற உணர்ச்சியே அதிகம் இருந்தது.
தன் அம்மா இவ்வாறு கேட்பார் என்று சற்றும் அவன் எதிர் பார்க்கவில்லை. அவ்வாறு கேட்டதும், தமயந்தி வீட்டினர் கொடுத்த அதிர்ச்சியையும் எதிர்ப்பார்த்திராததால் ஏற்பட்ட குற்ற உணர்ச்சியை மறைக்க மிகவும் போராடினான்.

நளன்-, “அங்கிள் சாரி.. இப்போ நாங்க வீட்டுக்கு கிளம்பறோம் இதைப் பற்றி பிறகு பேசலாம்.” என்றவன், “அம்மா கிளம்புங்க போகலாம்.” என்றான்.

இன்றே திருமணத்தைப் பற்றி பேசி முடிக்கும் உறுதியுடன் இருந்த விசாலாட்சி, “நளா! நீ கொஞ்சம் இரு..! எனக்கு கொஞ்சம் பேசியே ஆகணும்..! என்றார்.

“ம்மா.. ப்ளீஸ்!” என்று கெஞ்சினான் நளன்.

‘இதற்கெல்லாம் மசிவேனா?’ என்பது போல அவனைப் பார்த்தார் விசாலாட்சி.

“மீனு!, இப்போ எப்படி இருக்கு? இப்போதைக்கு நீயும், தமும்மாவும் போய் ஓய்வெடுங்கள்.! நான், அன்னத்துடன் சேர்ந்து மதிய சமையலை கவனிக்கறேன்.. நான் ரொம்ப உரிமை எடுத்துக்கறேன்னு என்னை தப்பா நினைச்சுக்காதீங்க அண்ணே! இப்போ கல்யாணத்தைப் பத்தி பேச நினைக்கலை.. உங்க எல்லோர் கண்கள்ளேயும் சோகம் தெரியுது. அதைப் பத்தி மட்டுமே பேசலாம்.. அதற்கு முன் நீங்க எல்லோரும் போய் கொஞ்சம் ஓய்வெடுங்கள். மதிய உணவிற்கு பிறகு பேசிக்கலாம்.” என்று முடித்த விசாலாட்சி,

திரும்பி தன் மகனிடம் பேசத்தொடங்கினார். “நளா, இப்போ நீ ஹோட்டல்க்கு போயிட்டு, அப்படியே சுந்தரதர்மாவுக்கும் போயிட்டு வந்துடு.. கிளம்புப்பா சீக்கிரம்.” என்று தன் மகனை அனுப்புவதிலேயே குறியாக இருந்தார்.

“ம்மா.” என்று கெஞ்சுதலோடு அழைத்தாலும் அதில் கோபமும் அடங்கியிருந்ததை விசாலாட்சி அறிந்தார்.
மகனைப் பற்றி தாய் அறியாததா, என்ன? இருந்தாலும் அவருக்கு இன்று சில விஷயங்களை தெரிந்து தெளிவு பெற வேண்டியிருந்ததால் மகனின் கோபத்தை அலட்சியம் செய்தார்.

இவர்களைப் பார்த்துக்கொண்டிருந்த சுந்தரம், “விசாலம் உன்னை தப்பா எல்லாம் எடுத்துக்கலை.. நீ இங்க இருந்துட்டு பிறகு போகலாம். நான் இப்போ நளனுடன் கடைக்கு கிளம்பறேன்.

மத்த விஷயத்தை பிறகு பேசிக்கலாம்.” என்றவர் “மீனு! மதியம் எனக்கு சாப்பாடு வேண்டாம். நளன் கூட மதிய சாப்பாட்டை வெளிய முடிச்சுக்கறேன். வாப்பா நளா நாம கிளம்பலாம்.” என்று மனைவியிடம் கூறிவிட்டு நளனுடன் சென்றார்.

மீனாட்சிக்கு தான் சற்று நேரம் ஒன்றுமே புரியவில்லை. ‘இவர் பாட்டுக்கு கிளம்பிட்டாரே! இப்போ விசாலத்துக்கிட்ட எல்லா விஷயமும் சொல்லலாமா, வேண்டாமா?’ என்று சில நொடிகள் யோசித்தவர், பின் எல்லாவற்றையும் சொல்லிவிடுவதே உத்தமம் என்று முடிவு செய்துக்கொண்டார் மீனாட்சி.
சுந்தரமும் அதற்காகத் தான் நளனை தனியே அழைத்து செல்கிறார் என்றும் புரிந்துக்கொண்டார்.

சுந்தரமும், நளனும் கிளம்பியதும் அந்த இடத்தை மௌனம் மட்டுமே சூழ்ந்துக்கொண்டது.

அவர்களின் மனம் நோகாமல் விஷயத்தைப் பெறுவது எப்படி என்று சில நிமிடங்கள் யோசித்த விசாலாட்சி, “அன்னம், வா! நாம போய் சமைக்கலாம்.” என்றார்.

அன்னமோ, “இல்லைங்கம்மா நான் பாதி சமையலை முடிச்சுட்டேன்.” என்று கூறி விட்டு சமையலறைக்குள் சென்றார்.

அவர் சென்றதும் மீனாட்சியை நோக்கிய விசாலாட்சியின் முகத்தில் மெலிதான புன்னகை இருந்தது. அந்தப் புன்னகையில் வெறும் ஆறுதல் மட்டுமே தெரிவதை மீனாட்சிப் புரிந்துக்கொண்டார்.

“ம்மா, நான் என் ரூமுக்கு போகவா?” என்றாள் தமயந்தி.

“தமும்மா இப்போ எப்படிடா இருக்கு? மாடியில தனியா இருக்காதே! கீழேயே நம்ம ரூம்லேயே ரெஸ்ட் எடுத்துக்கோ போ தமு..” என்ற மீனாட்சிக்கு, ‘ப்ளீஸ்! நான் மாடிக்கே போறேனே!’ என்று பார்வையாலேயே வினவினாள் தமயந்தி.

மீனாட்சியும் அதற்கு மேல் வற்புறுத்தாமல் அவளை மாடிக்கு செல்ல அனுமதித்தார்.

விசாலாட்சியிடம் கண்ணசைவில் விடைப்பெற்று தன்னறைக்கு சென்றாள் தமயந்தி.

“மீனு! நீங்க ஏதோ சோகத்துல இருக்கிற மாதிரி இருக்கு. இப்போ போய் நான் கல்யாண பேச்சை ஆரம்பித்திருக்க கூடாது.. என்னை மன்னித்து விடு மீனு.” என்றார் விசாலாட்சி.

“விசாலம் ரொம்ப பெரிய வார்த்தை எல்லாம் வேண்டாமே! நீ கேட்டதுக்கு தர்மாண்ணா மட்டும் இருந்திருந்தா ரொம்ப சந்தோஷம் பட்டிருப்பார்.. உன் கிட்ட சில விஷயங்களை சொல்லணும்.. ஆனா அதுக்கு முன்னாடி என் காலுக்கு எண்ணெய் தடவிட்டு வரேன்.. கொஞ்சம் ஸ்ட்ரைனா இருக்கிற மாதிரி இருக்கு.”

“மீனு நீ வா, நான் தடவி விடறேன்.. என் கை பிடிச்சுட்டு மெதுவா நடந்து வரியா?” என்று விசாலாட்சி கேட்கும்போதே கையில் எண்ணையுடன் வந்தாள் தமயந்தி.

“ம்மா வாங்க! கீழ விழுந்ததுல கால் இழுக்கும். எண்ணெய் தடவிட்டு கொஞ்சம் வெந்நீர் ஒத்தடம் கொடுக்கிறேன்..” என்றவளை கண் கொட்டாமல் பார்த்திருந்தாள் விசாலாட்சி.

நடந்த பேச்சு வார்த்தையில் நிறையவே மனதளவில் பாதிக்கப் பட்டிருந்தாலும், அதை மறைத்து தன் அன்னையை கவனிக்க வந்திருந்தாள் தமயந்தி.

தமயந்தியின் முகத்தைப் பார்த்த விசாலாட்சிக்கு பிரச்சினையின் தீவிரம் சற்று அதிகம் என்றே தோன்றியது. இதில் தமயந்தி மிகவும் பாதிக்கப் பட்டிருப்பாள் என்றும் புரிந்துக்கொண்டார்.

மீனாட்சியை கை தாங்கலாக அழைத்து சென்று எண்ணெய் தடவி சிறிது மசாஜ் செய்து விட்டு, வெந்நீரை அதற்கு உரிய பையில் விட்டு ஒத்தடம் கொடுக்க ஆரம்பித்தாள் தமயந்தி.

“நீ போ தமும்மா, ஒத்தடம் தானே நானே கொடுத்துக்கிறேன். போய் கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துக்கோடா..” என்றார் மீனாட்சி.

“சரிம்மா.” என்று அவளும் சென்றாள்.

சிறிது நேரத்தில் வெளியே வந்த மீனாட்சி, சமையலறையில் அன்னத்திற்கு உதவி செய்தபடி இருந்த விசாலாட்சியை தன் அறைக்கு அழைத்து சென்றார்.

“விசாலம், எனக்கு கல்யாணம் ஆகி ஏழு வருடத்திற்கு குழந்தையே பிறக்கல.. பார்த்த டாக்டர் எல்லாம் எந்த குறையும் இல்லை உங்களுக்கு நிச்சயமா குழந்தைப் பிறக்கும்ன்னு சொன்னவுடனே, கோவில் கோவிலா ஏறி இறங்கி, தவமா தவமிருந்து தான் தமயந்தியை பெத்தேன்.

(அந்த சமயத்தில் தான் அன்னத்தை சந்தித்ததைப் பற்றியும், தர்மா இவர்களுடன் இணைந்ததுப் பற்றியும் சுருக்கமாக சொல்லி விட்டு, தமயந்தியைப் பற்றி மேலே தொடர்ந்தார் மீனாட்சி)

“ஒத்த பொண்ணு தானேன்னு ரொம்ப நல்ல விதமா தான் வளர்த்தோம். ரொம்ப அமைதியா பொறுப்பா இருப்பா.. இல்லன்னா பன்னிரண்டாவது படிக்கும் போதே வியாபாரத்தை கத்துக்கிட்டு இருக்க மாட்டா.. வாழ்க்கைக்கு ஒரு டிகிரி அவசியம்ன்னு பி.காம் படிக்க வச்சோம்..
படிப்புல ஓஹோன்னு இல்லைன்னாலும் வியாபாரத்த நல்லாவே கத்துக்கிட்டா. மேல படிக்கலைன்னு சொன்னா. நாங்களும் சரின்னுட்டோம். ஒரு வருஷம் கழிச்சு அவளுக்கு கல்யாணம் பேசலாம்ன்னு முடிவு பண்ணினோம். இவருக்கு தெரிந்த குடும்பம் ஒன்று தமுவைப் பெண் கேட்டார்கள். எல்லாமே ஒத்து வந்ததால், நாங்களும் அவர்களுக்கு சம்மதம் தெரிவித்து விட்டோம்.” என்ற மீனாட்சியை அதிர்ச்சியுடன் பார்த்திருந்தார் விசாலாட்சி.

‘ஒரு வேளை அந்த மாப்பிள்ளை பையனுக்கு ஏதாவது ஆகி விட்டதோ?’ அதான் தமயந்தி சோகமா இருக்கிறாளோ?’ என்று மனதினுள் நினைத்துக்கொண்டார் விசாலாட்சி.

“சில மாதங்களுக்கு முன் தான் அவளுக்கு கல்யாணம் நடந்தது விசாலம்.” என்ற மீனாட்சியின் கையைப் பிடித்தப் படி “என்ன சொல்ற மீனு?” என்று அதிர்ச்சி அடைந்தார் விசாலாட்சி.

திருமணத்திற்கு நாள் தான் குறித்திருப்பார்கள் அதற்குள்ளாகவே ஏதாவது நடந்திருக்கும் என்று தான் அவர் நினைத்துக்கொண்டிருக்கும்போது கல்யாணமே முடிந்து விட்டது என்று சொன்னதும் விசாலாட்சிக்கு பேரதிர்ச்சி ஏற்பட்டது.

“என்னத்த சொல்றது விசாலம் எல்லாம் எங்க தலைவிதி!!!” – மீனாட்சி.

“அப்போ அந்தப் பையனுக்கு ஏதாவது ஆகி விட்டதா மீனு?” அதுவரை இந்த கேள்வியை கேட்பதா, வேண்டாமா? என்று மனதினுள் பட்டிமன்றம் நடத்திக்கொண்டிருந்த விசாலாட்சி பிறகு பொறுக்கமுடியாமல் அந்தக் கேள்வியை வருத்ததுடனேயே கேட்டார்.

“எங்க தமயந்தியை மனசளவுல கொன்னுட்டு, அவன் நல்லாத்தான் இருக்கான் இப்பவும்.. ஆனா எங்க தமயந்தி சுத்தமா உருக்குலைஞ்சுட்டா.."

“மீ..னு! எ..எனக்குப் புரியலை.”

“நான் முழுசா சொன்னாத்தான் உனக்கு புரியும்.. “ என்று நடந்தவற்றை கூற ஆரம்பித்தாள் மீனாட்சி.

அதே சமயத்தில் சுந்தரமும் நளனிடம் சொல்லிக் கொண்டிருந்தார்.

தமயந்தியும் படுக்கையில் படுத்தப் படியே தன்னுடைய வாழ்க்கையில் நடந்ததையே நினைத்துப் பார்த்துக்கொண்டிருந்தாள்.
 
Top