Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

நள(ன்)தமயந்தி - 9

Advertisement

SatyaSriram

Well-known member
Member
அத்தியாயம்: 9

தமயந்தியின் அருகில் சென்ற அஸ்வின், அவளை தகாத வாரத்தைகளினால் வதைக்க தொடங்கினான்.

அவளின் உடல் அழகை எவ்வளவு கீழிற(ங்)க்கி பேச முடியுமோ அவ்வளவு கீழிறக்(ங்)கி பேசினான்.

திருமணம் நிச்சயம் ஆனவுடன் சிலருக்கு பயத்தில் உடல் எடை குறையும்.. இன்னும் சிலருக்கு பூரிப்பில் உடல் எடை அதிகரிக்கும். இங்கு மீனாட்சியின் அதிகமான கவனிப்பால் சற்று அதிகமாகவே எடை கூடியிருந்தாள் தமயந்தி. அதை தான் அஸ்வின் கேவலமாக வர்ணித்தான்.

மேலும் அவன் தமயந்தி உணவு உட்கொள்ளும் முறையையும் கேலி செய்தான்..

பொதுவாகவே தமயந்திக்கு உணவை வீணடிக்கும் பழக்கம் கிடையாது. தாய் மீனாட்சியிடம் இருந்து கற்றுக்கொண்டிருந்த நல்லப் பழக்கத்தை தான் அஸ்வின் கேலி கூத்தாக்கிக் கொண்டிருந்தான்.

திருமணநாளுக்கே உண்டான மிகவும் பிரத்யேகமாக செய்திருந்த உணவு வகைகளை, தனக்கு தேவையான அளவு வாங்கிக்கொண்டவள் அனைத்தையும் உண்டு முடித்துவிட்டு தான் எழுந்திருந்தாள் தமயந்தி.

இது ஒன்றும் தவறில்லையே. நாகரீகம் என்ற போர்வையில் பரிமாறிய உணவுகளை சிறிதளவு மட்டுமே கொறித்துவிட்டு எழுந்திருப்பது தான் மிகவும் தவறு (பாவம்) என்றிருப்பவள் தமயந்தி.

அதனால் தான் தன்னுடைய திருமணத்தில் கூட அவள் இலையில் பரிமாறியிருந்த உணவுகளை வீணடிக்காமல் உண்டிருந்தாள். அதுவே அவளுக்கு வினையாய் போகுமென்று நினைத்தேப் பார்த்திருக்க மாட்டாள்.

(பசிக்கு உணவில்லாமல் எத்தனையோ பேர் தத்தளிக்கும் போது, நம்மால் அவர்களுக்கு உதவ முடியாவிட்டாலும் (உங்களில் நிறைய பேர் உதவிகள் செய்துக்கொண்டும் இருக்கலாம்..), உணவை வீணடிப்பதையாவது தவிர்க்கலாமே!! சிந்தியுங்கள் தோழமைகளே!!)

ஒவ்வொரு பதார்த்தத்தையும் தமயந்தி ரசித்து ருசித்து சாப்பிட்டதை, மிகவும் கேவலமாக மல, ஜலத்துடன் ஒப்பிட்டு கூறினான். மனித கழிவுகளுடன் மட்டுமின்றி கால்நடைகளின் கழிவுகளுடனும் ஒப்பிட்டு கூறினான் அஸ்வின்.

தமயந்திக்கு அதனைக் கேட்டதும் வயிற்றைப் பிறட்டிக் கொண்டு வர, வேகமாக அருகில் இருந்த குளியல் அறைக்குள் சென்று வாந்தி எடுக்க ஆரம்பித்தாள்.

அவள் பின்னே அஸ்வினின் அத்தை சென்று தலையைப் பிடித்துக்கொண்டார். சிறிது நேரத்தில் உண்ட உணவு எல்லாவற்றையும் வெளியேற்றிருந்தாள் தமயந்தி.

வயிற்றில் ஒன்றும் இல்லாமல் வெறும் குமட்டல் சத்தம் மட்டுமே வந்ததால் அவளை கை தாங்கலாக பிடித்துக்கொண்டு அழைத்து வந்ததை கண்ட அஸ்வினுக்கு கோபம் தலைக்கு ஏறியது.

“அத்தை..!! நீ எனக்கு தானே சொந்தம்.. அவளுக்கு ஏன் உதவி செஞ்சுக்கிட்டு இருக்க?”

“டேய்!! அஸ்வினு! நல்லாத்தானேடா இருந்த..!! நீ இந்த மாதிரியெல்லாம் பேசினதே இல்லையே கண்ணு..!! இவ வொன் பொ..ஞ்சாதி டா தம்பி..!!”

“நிறுத்துங்க அத்தை!!” என்று பல்லைக்கடித்த அஸ்வின், அத்தையிடமிருந்து தமயந்தியின் கைகளைப் பிடித்து இழுத்து தள்ளினான்.

அதில் நிலை தடுமாறிய தமயந்தி அருகில் இருந்த சுவற்றின் முனையில் வேகமாக இடித்துக்கொண்டதால் தலையிலிருந்து இரத்தம் கசிய தொடங்கியது..

“அ..ஸ்வி.னு..!! நீயெல்லாம் மனுசனாடா..?? என்று கேட்ட அத்தை தமயந்தியை தாங்கிக்கொண்டார்.

“அத்தை நீ தள்ளி போயிரு.. நான் கொல வெறில இருக்கேன்..”

“காலையில தான் தொட்டு தாலி கட்டியிருக்க.. அந்த தாலியோட ஈரம் கூட இன்னும் காயலை டா அஸ்வினு.. அதுக்குள்ள இப்படி நடந்துக்க உனக்கு எப்படி டா மனசு வருது? கல்யாணமான மொத நாளே சம்பந்த குடும்பத்திற்கு முன்னாடி எப்படி இப்படி கேவலமா நடந்துக்க முடியுதோ?” என்ற அத்தையின் வார்த்தைகளினால் கோபத்தின் உச்சியை அடைந்தான் அஸ்வின்.

அத்தையின் அருகே வேகமாக சென்றவன் அவரிடமிருந்து தமயந்தியை அதிரடியாகப் பிரித்து, அவள் கழுத்திலிருந்த தாலியை வலுக்கட்டாயமாக அவிழ்த்து எறிந்தான் அஸ்வின்.

“அய்யோ..!! அஸ்வினு..!! என்ன காரியம்டா செஞ்சு இருக்க.??” என்றவாறே அவனை அடித்து துவைத்தார் அஸ்வினின் அத்தை.

அஸ்வின் தூக்கி எறிந்த தாலி சுந்தரத்தின் கால்களில் விழுந்ததும் அதைப் பார்த்தப் படியே மயங்கினார் சுந்தரம்.. அவர் கண்ணில் இருந்து கண்ணீர் மட்டும் வந்துக்கொண்டே இருந்தது.

இந்த காட்சிகளைப் மீனாட்சிப் பார்த்துக்கொண்டிருந்தாலும் அவரின் உடல் அவருக்கு ஒத்துழைக்காத காரணத்தால் மெளனமாக கண்ணீர் மட்டுமே சிந்தினார்.

தர்மாவின் நிலையில் எந்தவித மாற்றமும் இல்லாமல் கீழேயே கிடந்தார். அவருக்கு பிரஞ்ஞை என்பதே இல்லாமல் அங்கு நடந்ததைப் பார்த்துகொண்டிருந்தார்.

அஸ்வினின் அமிலம் கலந்த வார்த்தைகளினால் சுத்தமாக துவண்டிருந்தார் தர்மா. ‘தான் சுந்தரத்தின் வீட்டிற்கே வந்து இருக்க கூடாது’ என்று மனதினுள்ளேயே மெளனமாக அழுதார். ‘என்னால் தமும்மாவின் வாழ்க்கையே போய்விட்டது..’ என்று ஏதேதோ சிந்தித்தபடி இருந்த அவருக்கு அங்கு நடந்துக்கொண்டிருப்பது கண்ணிற்கு தெரிந்தாலும் மனதிற்கு புரியாமல் கீழே சரிந்த நிலையிலேயே இருந்தார்.

தமயந்தி நெற்றியில் இருந்து வழிந்த குருதியோடு அஸ்வின் நடந்துக்கொண்ட விதத்தைப் பார்த்து பயந்து நடுங்கிக் கொண்டிருந்தாள். அவளுக்கு துணையாக அன்னமும் அவ்வாறே காணப்பட்டார்.

முருகானந்தம் ஒருவர் மட்டுமே சுயநினைவுடன் இருந்ததால் அஸ்வினை அடித்துக் கொண்டிருந்த தன்னுடையை அக்காவின் கைகளைப் பிடித்து தடுத்து தமயந்தியின் தாய் மீனாட்சிக்கு உதவிட கண்களால் பணித்தார்.

பின் அஸ்வினின் கன்னத்தில் ஓங்கி அறைந்து விட்டு அவனைப் பிடித்து தர தரவென இழுத்து வீட்டிற்கு வெளியே தள்ளினார். என்ன பிரச்சினை என்று தெரிந்துக்கொள்ள வேண்டும் என்பது முருகானந்தத்திற்கு புரிந்து தான் இருந்தது..

ஆனாலும் இங்கு இருக்கும் அனைவருக்குமே மருத்துவ உதவி உடனடியாக தேவைப் படுவதால் முதலில் அதை கவனிக்க விரைந்தார்.

தன் உறவினர்களை உதவிக்கு அழைத்தால் குடும்ப மானம் கப்பல் ஏறும் என்றும் தெரிந்தும், அவரின் நெருங்கிய உறவினர்க்கு அழைத்து உதவி கேட்டார்.

ஆம்புலன்ஸ் உதவியுடன் மீனாட்சி , சுந்தரம் மற்றும் தர்மாவுடன் தமயந்தியையும் மருத்துவமனைக்கு அழைத்து சென்றார் முருகானந்தம். அவர்களுக்கு உதவிட அவருடைய அக்கா மற்றும் அன்னமும் கூடவே சென்றார்கள்.

தர்மாவின் நிலை மிகவும் கவலைக்கிடமாக மாறியதும் மிகவும் சோர்ந்தார் முருகானந்தம்.

முருகானந்தத்தின் வயதை மனதில் கொண்டு தன்னுடைய குடும்பத்தின் பொறுப்புகளை தமயந்தியே ஏற்றாள். அவளின் பொறுப்பு மற்றும் உறுதியை கண்ட முருகானந்தத்திற்கு வியப்பேற்பட்டது. தன்னுடைய குடும்பம் இப்படிப்பட்ட பெண்ணை இழந்தது குறித்து மிகுந்த வருத்தத்தை கொடுத்தது அவருக்கு.

கல்யாணம் ஆன முதல் நாளே தன் கணவரால் தன்னுடைய குடும்பமே நிலை குலைந்து இருக்கும் இந்த நேரத்தில் அஸ்வினின் மீது இருக்கும் கோபத்தை வெளிப்படுத்த சரியான சமயம் பார்த்துக்கொண்டிருந்தாள் தமயந்தி.

ஆனால் முருகானந்தத்தின் அதிரடியான நடவடிக்கைகளினால் அவளுடைய கோபம் மட்டுப்பட, தன்னுடைய குடும்பத்தையும் சுந்தரதர்மாவையும் மேற்கொண்டு நடத்த ஆரம்பித்தாள் தமயந்தி.
அவளுக்கு நெற்றியில் இரு தையல்கள் போடப்பட்டது.

நெற்றியின் காயம் தவிர அவளுக்கு உடலி ல் எந்த பாதிப்பு இல்லாததால் அவளே மற்ற எல்லாவற்றையும் கவனிக்க ஆரம்பித்தாள். ஆனால் அவளின் மனதில் ஏற்பட்ட பாதிப்பு யாராலும் கண்டுபிடிக்க முடியாமல் போனது.

அவளின் உணவின் மீதான வெறுப்பு நாளாக நாளாக அதிகரித்தது.. அவளாக குடும்பத்தினர் முன் மயங்கி விழும் வரை அவள் மனதிற்குண்டான சிகிச்சைகள் மேற்கொள்ளப் படவில்லை.

மிகவும் கால தாமதமாகத்தான் அவளின் மனதிற்கு சிகிச்சைகள் கிடைத்தது. அதற்கு பெற்றவர்கள் மற்றும் மாமனின் உடல் நிலைகள் மட்டுமே காரணமாக இருந்தன.

சுந்தரத்திற்கு மாரடைப்பு ஏற்பட்டு உடனடியாக அறுவை சிகிச்சை செய்யப்பட்டு காப்பற்றப்பட்டார்.

தர்மாவிற்கும் அறுவை சிகிச்சை பரிந்துரைக்கப்பட்டது. ஆனால் தர்மா அதற்கு ஒரேடியாக மறுப்பு தெரிவித்துவிட்டதால் அவரின் நிலை கடைசிக் கட்டத்திற்கு நெருங்கியது. அவரின் மன உறுதியால் சில மாதங்கள் இருந்துவிட்டு பின் இந்த உலகத்தை விட்டு மறைந்தார்.

மீனாட்சியின் உடல் நிலையும் மிகவும் பாதிக்கப்பட்டது. அவருக்கு கை கால்கள் செயல் இழந்தன. அவருக்கு குணமாக சிறிது காலம் ஆகும் என்று சொன்ன மருத்துவர்கள் மேற்கொண்டு அவருக்கான சிகிச்சைகளையும் பரிந்துரைத்தனர்.

சுந்தரத்தின் அறுவை சிகிச்சை முடிந்த பின் ஒருவாரம் கழித்து தான் அவர் வீட்டிற்கு சென்றார். அதுவரை மீனாட்சி மற்றும் தர்மாவையும் அங்கேயே வைத்திருந்து கவனித்துக்கொண்டாள் தமயந்தி.

முருகானந்தம் மற்றும் அவரின் அக்காவின் உதவிகளை மிகவும் உறுதியாக மறுத்துவிட்டு, அன்னத்தை மட்டுமே உடனிறுத்திக் கொண்டாள்.

இதில் சற்றே முகம் திருப்பிக்கொண்டார் முருகானந்தத்தின் அக்கா. அஸ்வினிடம் என்ன ஏது என்று பேசி தெரிந்துக்கொண்டு அவர்களின் வாழ்க்கையை சீக்கிரம் நேராக்கி தமயந்தியை வீட்டிற்கு அழைத்துச் செல்ல மிகவும் விரும்பினார் அவர்.

பொட்டப் புள்ளைக்கு இவ்வளவு வைராக்கியம் ஆகாது என்று முருகானந்தத்திடம் குறைப் பட்டு கொண்டார். அந்த காலத்து மனுஷியான அவருக்கு இவர்களின் வாழ்க்கையை சீக்கிரம் சரி பண்ணவே எண்ணம். அதற்கு தமயந்தியின் ஒத்துழைப்பையும் எதிர்ப்பார்த்தார்.

அதில் தவறில்லை தான். ஆனால் இங்கு எந்தவித தவறும் செய்யாமலே தண்டனை பெற்றிருந்த தமயந்தியின் ஒத்துழைப்பை எங்கனம் எதிர்பார்த்தார் என்று தான் முருகானந்தத்திற்கு புரியவில்லை.

அவரும் அந்த கால மனிதராக இருந்தாலும் மிகவும் நாகரீகம் தெரிந்தவர்.

இங்கு நாகரீகம் என்பது கண்ணுக்குப் புலப்படும் நடை, உடை பாவணை அல்ல. சக மனிதர்களின் (அனைத்து பாலினத்தவரும் உள்ளடங்கியது) உணர்வுகளுக்கு மதிப்பளித்து நடப்பது தான் உண்மையான நாகரீகம்.


(இங்கு அனைத்து பாலினத்தவரும் என்று குறிப்பிட்டவுடன் அஸ்வினின் நடவடிக்கைகள் மீது சந்தேகம் வரலாம்.. ”அவனா நீ..?” என்று அஸ்வினைப் பார்த்து கேள்வி கேட்கவும் தோணலாம்.. ஆனால் உறுதியாக சொல்லுகிறேன் அஸ்வினின் பாத்திரம் அந்த மாதிரி கிடையாது.. அவனின் பிரச்சினை என்ன என்பதை கதையின் போக்கிலேயே தெரிந்துக்கொள்ளலாம்.)

தமயந்தியின் குடும்பத்தினரை மருத்துவமனையில் அனுமதித்த உடனேயே அவர் சென்று சந்தித்தது ஒரு குடும்ப நல வழக்கறிஞரை தான்.அவரின் உதவியுடன் காவல் துறையின் உதவியையும் பெற்றார் முருகானந்தம்.

அஸ்வினின் மூலம் அவனைப்பற்றி அறிந்துக்கொண்ட அவர், அதைப்பற்றி தெரிவிக்க தமயந்தியை சந்திக்க சென்றார்.

தமயந்தியுடன் அறுவைசிகிச்சை முடிந்த சுந்தரமும் இருந்தார். சுந்தரத்தின் உடல் நிலையை முதலில் அறிந்த முருகானந்தம் பின் அனைத்தையும் ஒன்றுவிடாமல் அவர்களிடம் கூறினார்.
 
Top