Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

நாயகனோ நானறியேன் - நாயகன்5

Advertisement

Kokilavaniarjunan

Well-known member
Member
இரண்டு மூன்று நாட்கள் எந்த வித பரபரப்புமின்றி மெதுவாகக் கழிந்தன.. அன்று காலை மகிழினி கண் விழித்ததே.. 'இன்னைக்கு சாயங்காலம் கருவலூர் மாரியம்மன் கோவில் சாட்டுக்கு நாயம் பேசறாங்க.. எல்லாரும் வந்துடுங்க' என்ற தண்டோரா போடுபவரின் குரலில் தான்.

மனதில் உற்சாகம் முகிழ்க்க.. குளித்து ஹாலிற்கு வரும்போதே.. கோவில் சாட்டுக்கு அழைப்பதற்காக ஊர் மக்கள் இருவர் வந்திருந்தனர்.. தனம் அவர்களுக்கு காஃபி கொடுத்துக் கொண்டிருக்க.. தாத்தா, அப்பா, முகிலன் என மூன்று தலைமுறையும் அவர்களுடன் அமர்ந்திருந்தது.

நாராயண சாமி தெலுங்கைப் பூர்விகமாகக் கொண்டவர் தான் என்றாலும்.. ஊர் என்ற ஒன்று உருவாகும் முன்னே இங்கே வந்து சேர்ந்திருந்தனர்.. இந்தக் கோவிலும் இவர்களுக்கு இரண்டு தலைமுறை முன்னர் கட்டப்பட்டிருக்க.. அப்பகுதி வாசிகளுக்கு பெரிய திருவிழா இது தான்.. ஊர்ப் பொது கோவில் என்பதால் இனம், சமூகம் தாண்டி அனைத்து மக்களும் மகிழ்ச்சியாக இது நாள் வரை கொண்டாடி வருகின்றனர்.

கோவில் விவகாரம் முழுதும் தாத்தா தான் பார்த்து வந்தார்.. நான்கு வருடங்கள் முன்பு வரையில்.. ஆனால் அவர் தோழன் குமாரசாமி (நந்தாவின் தாத்தா) இறந்து பிறகு.. அதை ஏற்றுக் கொள்ள மறுத்துவிட்டார்.. கிட்டத்தட்ட இருபது இருபத்து ஐந்து வருடங்களாக இருவரும் பார்த்து வந்தனர்.. மகன்களுக்குள் சண்டை வந்த போதிலும்.. கோவிலில் அருகருகே அமரும் அந்த சிறு மகிழ்வே போதுமாயிருக்க.. அவரும் போன பின்.. இதை வேண்டாம் என்றுவிட்டார்.

இப்போது நந்தாவின் அப்பா சரவணப் பெருமாளும்.. முத்துவின் அப்பா பார்த்துக் கொள்ள.. ராகவன் தந்தையைப் பின்பற்றி மறுத்துவிட்டார்.. கூட்டு எவ்வளவு எனக் கேட்டு கொடுத்துவிட்டு.. கோவில் வேலைகளை எல்லாம் மகன் புறம் தள்ளிவிட்டு.. திருவிழா அன்று மட்டும் சென்று நாள் முழுக்க அங்கே இருப்பார்.

நியாயம் பேசுவது என்றால்.. கோவில் திருவிழாவிற்கு பூச்சாட்டுதல் தொடங்கி.. ஒரு வாரம் கழித்து வைக்கும் மறுபூஜை வரை அனைத்தையும் பேசி முடிவு செய்தல்.. ஒவ்வொருவருக்கும் ஒரு முறைமை அளிக்கப்படும்.. மகிழினின் வீட்டிற்கு கம்பம் வெட்டும் முறைமை.. நந்தாவின் வீட்டிற்கு அதை பிடுங்கும் முறைமை.

தாத்தாவுக்கு அன்று உடல்நிலை படுத்த.. முதல் முறையாக ராகவன் சென்றார்.. முகிலனோடு.. அரச மரம் ஒன்றை தேர்வு செய்து.. பூசை போட்டு முடிக்க.. ராகவன் முதலில் வெட்ட.. பின்.. மற்றவர்களும் சேர்ந்து வெட்ட ஆரம்பித்தனர்.

கம்பம் வெட்டப்பட்டு கோவில் முன்பு செதுக்கப்படும் போது தான்.. நோம்பி தொடங்கிய மகிழ்ச்சியே தெரியும்.. அதோடு சேர்ந்த எட்டு நாட்களும்.. எல்லோருக்கும் கொண்டாட்டம் தான்.

பூச்சாட்டும் அன்று கம்பம் நடவே நேரமாகி இருக்க.. அடுத்த நாள் இரவில் இருந்து தான் ஆட்டம் களை கட்டும்.. புதன் பூச்சாட்டு முடிந்திருக்க.. வியாழன் மாலையே முத்து ஃபோன் செய்து விட்டாள் "நாலு வருஷம் கழிச்சு நீ இந்த நோம்பிக்கு இருக்க.. சோ கம்பத்தாட்டம் பாக்க வர" என முடித்துவிட்டாள்.

மகிழினிக்கும் வெகுநாட்களுக்குப் பிறகு அதெல்லாம் பாக்க வேண்டும் போல இருக்க.. சிறுவயதில் அவர்கள் தெரு முடியும் இடம் கோவில் என்பதால்.. இரவு முழுதும் அதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பாள்.. இரவு முத்து வந்ததும்.. இருவரும் கோவிலுக்குச் சென்றனர்.. அப்போது தான் வடக்குப் பூஜை நடைபெற்றுக் கொண்டிருந்தது.. அதன்பின் சாமிக்கு அபிஷேக அலங்காரப் பூசைகள் நிறைவுற.. முதன்மைப் பூசாரி பூவோடு ஏந்தி கம்பத்தை மும்முறை சுற்றி அதன் மேல் வைத்தார்.. விடிய விடிய இது எரியும்.. விடிந்த பின்.. இதை எடுத்துவிட்டு பொரியோடு வைப்பார்கள்..

முந்தி முந்தி விநாயகனே
முருகா சரஸ்வதியே
கந்தனுக்கு முன்பிறந்தா
கற்பகமே முன்நடவாய்
ஆறையடிப் பிள்ளையாரே
அரசடி அந்நாயகமே
தொந்தி வைத்தவனே
தொழுதேனே உம்பாதம்


என விநாயகரை வரவேற்ற.. வாக்குவரம் சொல்பவரின் கணீர்க்குரலோடு ஆட்டம் துவங்கியது.. குழந்தைகளுக்கும்.. வயதுப் பையன்களுக்கும் தான் மகிழ்ச்சி.. பரிட்சை எல்லாம் முடிந்து விட.. இந்த எட்டு நாளும் இரவு உறக்கம் ஒரு மணிக்கு மேல் தான்.

பறையிசை ஒலிக்க.. அனைவரின் உற்சாகக் கூச்சலுடன் கம்பத்தைச் சுற்றி சுற்றி ஆட.. மகிழுக்கு அப்போது தான் இத்தனை நாட்கள் இருந்த அந்த ஒட்டாத தன்மை மறைய.. முத்துவோடு ஜாலியாக பேச ஆரம்பித்தாள்.
தாத்தா வீட்டில் இருக்க.. ராகவனும்.. பெருமாளும் ராஜவேலுவை நடுவில் விட்டு அமர்ந்திருக்க.. அப்போது தான் முகிலன் வந்தான்.. கோவிலுக்குப் போக வந்தவனை தடுத்து அவனிற்கு திருநீரு கொடுத்தவள் "நீ எல்லாம் வேஸ்ட்.. அங்க பாரு பொடிசுக எல்லாம் என்ன ஆட்டம் ஆடுது" என அவனிடம் சொல்ல

"ப்ச்.. இங்க ஆடி என்ன பண்ண.. பக்கத்து ஊரு போனா கூட நல்ல புள்ளைங்க இருப்பாங்க.. நம்ம திறமையைக் காட்டலாம்.. இங்க" என சுற்றிச் சுற்றிப் பார்த்தவன் ஒரு அதிருப்தியோடு தோள் குலுக்க.. முத்து வழக்கம் போல மைன்ட் வாய்சில் அவனைத் தாளிக்க ஆரம்பித்தாள்.

முகிலன் நகர்ந்து சென்றிருக்க.. இருவரும் அங்கு ஆடுபவர்களை கலாய்த்தபடியே சிரித்துக் கொண்டிருந்தனர்.. மணி பனிரெண்டுக்கும் மேல் ஆக.. முத்து வீட்டுக்கு கிளம்புவதாகச் சொன்னாள்.. அப்போது மத்தளம் காய்ச்ச சென்றிருக்க.. பக்கத்து ஊரில் இருந்து ஆட வந்தவர்கள் அங்கும் இங்குமாய் நடந்து கொண்டிருக்க.. முத்துவை தனியே அனுப்பவே மனதில்லை மகிழுக்கு.

கோவில் கல்லில் அமர்ந்திருந்த முகிலனை கை காட்டி அழைத்து.. அவனிடம் முத்துவை விட்டு வரச் சொன்னாள்.. அவனோ "நீ எப்படி தனியா இருப்ப" என தயங்க.. "இங்க இவ்வளவு பேர் இருக்காங்க இல்லை.. நீ இவளை கூட்டிட்டு போய்.. மறக்காம அத்தைகிட்ட சொல்லி விட்டுட்டு வா" என இருவரையும் அனுப்பி வைத்தாள்.

கரகம் சலகலங்க
கண்ணிரண்டும் சோர்ந்து வரும்
சொம்போ சலசலங்க
சேர்ந்த கண்ணும் சோர்ந்து வரும்
எடுத்தா திருக்கரகம்
மாரி எடுத்தா


என தூரத்தில் வாக்குவரம் சொல்பவரின் குரல் மட்டும் அந்த இரவுப் பொழுதின் நிசப்தத்தைக் கிழித்து ஒலித்துக் கொண்டிருக்க.. இருவரும் மௌனமாக நடந்து கொண்டிருந்தனர்.. முகிலன் என்னவோ எப்போதும் கடைக்குப் போகும் கடைசிப் பையனைப் போல முகத்தை வைத்திருக்க.. முத்துவின் மனதிலோ
'ஹோ திருவிழா கடைகளைப் போல
திணறுறேன் நான் தானே
எதிரில் நீ வரும்போது
மிரளுறேன் ஏன் தானோ' என ஜிவி சிட்டுவேஷன் சாங் ப்ளே பண்ணிக் கொண்டிருந்தார். (புள்ளை 90s கிட் போல)

அவ்வளவு சந்தோஷமாக இருந்தது அவளுக்கு.. இத்தனை நாட்களில் அவன் இவளை நிமிர்ந்து கூடப் பார்த்தது இல்லை.. ஆனால் அவன் மீது எப்படி இத்தகைய நேசம் என்பது அவளாலேயே அறுதியிட்டுக் கூற முடியாத ஒன்று.. இன்னமும் எத்தனை நாட்களானாலும் சரி அவளாகச் சென்று தன் மனதை முகிலனிடம் சொல்லப் போவதில்லை.. முகிலன்.. ம்கூம்.. சான்ஸே இல்லை.. அவன் இதுவரை அவளை நிமிர்ந்து பார்த்திருப்பானா என்பதே சந்தேகம் தான்.

இருந்தாலும் அவளால் இந்த சூழ்நிலையை ரசிக்காமல் இருக்க முடியவில்லை.. அடுத்த பாட்டை அவள் யோசித்தவாறே அவள் நடக்க.. உறக்கத்தில் இருந்த தெருநாய் ஒன்றின் வாலை மிதித்து விட்டாள்.. அது ஆக்ரோஷமாக 'வௌ' என இவளை நோக்கிப் பாய.. முகிலன் சட்டென அவளை தன்புறம் இழுத்தான்.. அந்த நாய் குரைக்க.. அதற்கு எசப்பாட்டாக தூரத்தில் இன்னொரு நாயும் குரைக்க.. அந்தச் சத்தத்திலும் முகிலனின் கைப்பிடி அழுத்தத்திலும் மீண்டு உலகிற்கு வந்தாள் முத்து.

எதிரில் அய்யனார் கணக்காக முகில் முறைத்தவாறே "அதென்ன எப்பப்பாரு ட்ரீம் உனக்கு.. கொஞ்சம் ரோட்டைப் பாத்து நட.. எதையும் கவனிக்காம மனசுக்குள்ளயே பேசிக்க.. சீக்கிரமா வா.. ஏன் நின்னுட்டே இருக்க.. உங்கூட வந்ததுக்கு நடு ராத்திரியில நாய் மேய்க்கறேன்" என அவளைத் திட்டியபடியே வீட்டுக்கு அழைத்துச் சென்றான்.

அவள் அம்மாவிடம் இரு வார்த்தைகள் பேசியவன்.. ஏக்கமாக அவன் முகம் பார்த்தவளை ஏமாற்ற மனம் இல்லாமல் சென்று வருவதாய் தலையசைக்க.. முத்து முகம் ஸ்விட்ச் போட்டாற் போல ஒளிர்ந்தது.. அவனது இந்த சின்ன செய்கையே அவளுக்கு போதுமானதாக இருக்க.. அன்றைய இரவு அமைதியாகக் கழிந்தது.

இதே போலவே மீதம் இருக்கும் ஆறு நாட்களும்.. பட்டுப் போர்த்துதல், தீர்த்தம் எடுத்தல் சடங்குகளோடு கழிய.. திருவிழா நாளும் அழகாக விடிந்தது.. ஆண்கள் அனைவரும் அம்மையழைக்கச் சென்றிருக்க.. பெண்கள் பொங்கல் வைக்க குழுமியிருந்தனர்.

எதிர்பாராத விதமாக தனத்திற்கும் (மகிழ் அம்மா), சகுந்தலாவிற்கும் (நந்தா அம்மா) அடுப்புக் கற்கள் அருகருகே கிடைக்க.. இருவருமே ஒன்றையும் கண்டு கொள்ளாமல் தங்கள் பாட்டில் விறகு எடுத்து.. பொங்கல் வைக்கத் துவங்கினர்.

தனம் பொங்கல் தவளையை சற்று வேகமாக நங்கென்று வைத்து விட.. அருகில் இருந்த இன்னொரு பெண்மணி "பாத்து பாத்து.. எங்கண்ணனூட்டு பானையை உடைச்சுடாதிங்க" என அவரை கேலி செய்தார்.

அவர் இங்கேயே பிறந்து இங்கேயே திருமணம் செய்தவராக இருக்கும்.. வேறு வேறு இனம் என்றாலும்.. அவர்களைப் பொறுத்த வரையில் வேறு ஊரில் இருந்து திருமணம் செய்து வந்த பெண்கள் அனைவரும் அண்ணன் தம்பி மனைவிகள் தான்.. அனைவரும் உறவுகள் தான்.

தனம் அவரிடம் ஏதோ சொல்ல வர சகுந்தலா "பயப்படாதே துளசி.. உங்கண்ண ஊட்டு தங்கப் பானை பரண்ல பத்திரமா இருக்கு.. இது வெறும் பித்தளை தான்" என அவருக்கு பதில் கொடுக்க.. அந்தப் பெண்ணும் "அதெல்லாம் அண்ணன் பொண்டாட்டிக நல்ல வியாக்கியானமாத்தான் பேசுவிங்க" என சீண்டியவாறே உலை கொதிக்கவும் அதில் கவனமானார்கள்.

தனம், சகுந்தலை இருவரது உலையும் அடுத்தடுத்து கிழக்கு முகமாகப் பொங்க.. அப்போது தான் நிம்மதியாக இருந்தது தனத்திற்கு.. நான்கு வருடங்கள் முன்பு பொங்காமல் கண்ணீர் வடிக்க.. அதன் தொடர்ச்சியாக குடும்பமே அழுதது.. இருவரும் ஒரு நொடி பார்த்துக் கொண்டு.. சுற்றி இருந்த பெரியவர்களிடம் சொல்லிவிட்டு.. அரிசியை உலையில் போட்டனர்.

அடுத்த நிகழ்வாக மாவிளக்குப் பூஜையும் நினைவு பெற.. மதியம் அக்னிக் கும்பம் எடுத்து வந்தனர்.. மகிழினியும் முத்துவும் மற்ற பெண்களுடன் அவர்களுக்கு தண்ணீர் ஊற்றிக் கொண்டிருந்தனர்.. தார் உருகும் சித்திரை மாத வெயிலில் கையில் தீச்சட்டியோடு வருவார்கள்.

ஆண்கள் மட்டுமே அதை எடுக்க.. அந்த மேளச் சத்தத்திற்கு நிறையப் பெண்கள் சாமியடியபடி வந்து கொண்டிருந்தனர்..

கூட்டத்தில் கொஞ்சம் பூசினாற் போல ஒரு பெண் நல்ல ஆக்ரோஷமாக சாமியாடியபடி வர.. அவரது கணவன் "ஆத்தா.. மாரியாத்தா.. இது உனக்கே நியாயமா இருக்கா.. இவளை எல்லாம் புடிக்க முடியுமா.. வேற ஆருமே உனக்கு கிடைக்கலையா" என புலம்பியவாறே அவரைக் கட்டுப்படுத்தப் போராட.. மகிழினிக்கு சிரிப்பு தாங்க முடியவில்லை.. கூட்டத்தில் சிரித்தால் எதாவது சொல்வார்கள் என அவரை நோக்கி தண்ணீர் குடத்தை சுமந்து செல்ல..

அவர் மனைவியோ திமிறி ஆடியபடியே கணவன் முதுகில் சுரீர் என ஒன்று வைக்க "சாமியா இருந்தாலும் அடிக்கிறா.. பொண்டாட்டியா இருந்தாலும் அடிக்கிறா" என்றவரைக் கண்டு சிரித்த மகிழினி.. அவர் மனைவி மேல ஒரு குடம் தண்ணீரையும் முழுமையாக ஊற்றிவிட.. அவரோ நன்றியோடு அவளைப் பார்த்துவிட்டு "ஆ.. ஆ.. மலையேறு ஆத்தா.. ஊட்டுல வடைக்கு பருப்பு ஊறுது" என பின்பாதியை யாரும் கேட்காதவாறு வாய்க்குள் சொல்லியவராக மனைவியை தள்ளிக் கொண்டு சென்றார்.

பகலவன் ஓடி முடித்து.. ஓய்வுக்குத் திரும்ப.. மாலை தான் நன்றாக இருக்கும்.. வெயில் தாழத்தான் ஆட்டம் ஆரம்பிப்பார்கள்.. மகிழினியும் மாலை கோவிலுக்குச் செல்வதற்காக கிளம்பிக் கொண்டிருந்தவள தாத்தாவின் அழைப்பில் ஹாலிற்கு வந்தாள்.

அங்கு ஏற்கெனவே முகிலன் மற்றும் தனத்தோடு அவ்வாவும் இருக்க.. தாத்தா மருமகள் மற்றும் பேரன், பேத்திக்கு 'நோம்பி காசு' கொடுத்தார்.. அனைவரின் கையிலும் பிங்க் கலர் இரண்டாயிரம் ரூபாய் நோட்டு விளையாட.. இறுதியாக தாத்தா அவ்வாவிற்கு மட்டும் ஐம்பது ரூபாய் கொடுத்தார்.

அவளுக்கு நினைவு தெரிந்த நாளில் இருந்து இந்த ஐம்பது ரூபாயும்.. அவர்களின் பாசப் பார்வையும் மாறியதே இல்லை.. வருடங்கள் கடந்த போதிலும் அன்பும்.. ஒருவர் மீது ஒருவர் கொண்ட பற்றும்.. இம்மியும் குறையவில்லை.. சொல்லப் போனால் கூடித்தான் இருந்திருக்கிறது..
இத்தனைக்கும் வீட்டின் அனைத்து வரவு செலவுகளும் அவ்வாவின் கைப்பிடியில் தான்.. ஆனாலும் தாத்தா நோம்பிக்கு தரும் அந்த ஒற்றை ஐம்பது ரூபாயை முகம் எல்லாம் பூரிக்க அவ்வளவு ஆசையாக வாங்கிக் கொள்வார் அமிர்து அவ்வா.

அந்த ஐம்பது ரூபாய்க்கு அவ்வாவின் நோம்பி செலவு கண்ணாடி வளையல் தான்.. வருடம் முழுதும் அந்த சத்தம் வீட்டில் கேட்டுக் கொண்டே இருக்கும்.. சிவப்பும் பச்சையுமாய் அந்த கண்ணாடி வளையல்களுடன்.. நூல்புடவையில்.. முகம் நிறைந்த மஞ்சளுடன் அவ்வாவைப் பார்த்தால்.. அவ்வளவு அழகாக இருப்பார்.

மகிழுக்கு அந்தச் சத்தம் மிகவும் பிடிக்கும்.. அவளுக்கு தலையில் எண்ணெய் வைக்கும் போதும்.. அவள் படிக்கும் போது.. புத்தகத்தின் மடங்கிய ஓரங்களை நீவி விடும் போது.. வளையல் குலுங்கி இன்னிசையாய் ஒலிக்கும்.

பாட்டியைப் பார்த்தபடி இத்தனையும் யோசித்தவாறே நின்றவளின் கையில் இருந்த பணத்தை முகிலன் பிடுங்க.. அதை திரும்ப வாங்க இவள் முயற்சிக்க கையை உயர்த்தியவன் "முடிஞ்சா வாங்கிக்கோ" என நின்ற இடத்திலேயே அவளுக்கு விளையாட்டு காட்ட.. அவனை முறைத்தவள் "நாலு டாக்ஸ்க்கு புரை பிஸ்கெட் வாங்கிப் போட்டதா நினைச்சுக்கறேன்.. பே" என சோஃபாவில் அமர்ந்து கொள்ள..

அவள் தலையில் கொட்டியவன் "அதுல உனக்கும் பங்கு உண்டு.. இந்தா" என அவனது பங்கு பணத்தையும் சேர்த்து அவளிடமே கொடுத்தவன் "ம்மா.. நான் கோவிலுக்குக் கிளம்பறேன்" என நகர்ந்தவனை "ஆமா.. அப்படியே போன உடனே மைக்கல் ஜாக்சன் அக்கா பையன் மாதிரி ஆடப் போற.. ஒரு ஓரமா நின்னு வேடிக்கை பாக்க இவ்வளவு சீன்" என அவனைக் கலாய்த்து அவன் கொட்ட வருவதற்குள் ஓடிச் சென்றிருந்தாள்.

கோவிலுக்குச் செல்வதற்காக கிளம்பி வந்தவளைக் கண்டு.. வியந்து தான் போயினர்.. ஆழ்ந்த ஊதா நிறப் பட்டுப் பாவடையும் சந்தன நிற தாவணியும் அணிந்து.. குடை ஜிமிக்கி கன்னத்தை நலம் விசாரிக்க.. வேல்விழி இரண்டும் அஞ்சனம் சுமந்திருக்க.. கை வளையும், கால் கொலுசும் அவள் வருகையை கட்டியம் கூற.. தண்மதியின் துகளென இருந்தாள் மகிழினி.. மகளை கண்குளிரக் கண்டவாறே அவளுக்கு.. மல்லிகை மலரை சூட்டி மூவருமாக கோவிலுக்கு கிளம்பினர்.

இன்றைய மாலை பூஜை இவர்களுடையதாய் இருக்க.. முத்துவுக்கு ஃபோன் செய்து வரச் சொல்லிவிட்டு.. அம்மா பாட்டியுடன் கிளம்பினாள்.. கோவிலைச் சுற்றியும் நிற்க இடமில்லாமல் கூட்டம்.. ஒரு வழியாய் உள்ளே நுழைந்தவர்கள்.. சாமி கும்பிட்டு விட்டு நகர.. அப்போது தான் உள்ளே வந்தனர் நந்தாவின் குடும்பத்தினர்.. சரியாக சாரதா அப்பத்தாவின் மீது மகிழினி இடித்து விட.. இருவரும் முறைக்க.. கூட்டத்தில் சண்டை போட வழியில்லாமல் முகத்தை தோளில் இடித்துக் கொண்டு நகர்ந்துவிட்டனர்.

வெளியே வந்த பின்.. முத்துவும் அவள் அம்மாவும் வந்து சேர்ந்திருக்க.. பெரியவர்களைக் கோர்த்து விட்டு.. இருவரும் தேர்க்கடை சுற்றிப் பார்க்கக் கிளம்பினர்.

சாலையின் இருபுறமும் திருவிழாக் கடைகள் முளைத்திருக்க.. சுற்றி எங்கு பார்த்தாலும் மகிழ்ச்சி.. மகிழ்ச்சி மட்டுமே.. மகிழ் முதலில் செய்த வேலை.. அருகில் இருந்த கடையில் நல்ல காய்வெட்டாக ஒரு மாங்காயை எடுத்துக் கொடுத்து அதை கட்பண்ணி வாங்கிக் கொண்டது தான்.. மாங்காய் இல்லாம சம்மர் சீசனா??

சிறு வயதில் நோம்பிக்கு முன் தினமே என்னென்ன வாங்க வேண்டும் என யோசித்து வாங்குவாள்.. தற்போது இதில் எல்லாம் ஆர்வம் போயிருக்க.. வேடிக்கை பார்க்கும் ஆர்வம் மட்டும் குறையவில்லை.

தள்ளுவண்டிக் கடைகள், பலூன் விற்பவர்கள்.. குழந்தைகளின் விளையாட்டு பொம்மை கடைகள், புத்தகக் கடைகள்.. விளையாட்டுக்கள் பாத்திரக் கடைகள், ஆயுதங்கள் கூட கிடைக்கும் அங்கே.. அனைத்தையும் ஒரு ரவுண்டு பார்த்துவிட்டு.. ஒரு கூட்டம் குறைந்திருந்த கடைக்குள் சென்றனர் இருவரும்.

அங்கே ஒரு பதினாறு வயது மதிப்பிடும் ஒரு பையனும் பெண்ணும் இருந்தனர்.. மகிழுக்கு வளையல் வாங்க மிகவும் பிடிக்கும்.. ஆனால் போட்டுக் கொள்ள மாட்டாள்.. எப்போதும் பிரேஸ்லெட் தான்.. ஆனாலும் வாங்குவாள்.

இப்போதும் அவள் தன்னிடம் இல்லாத நிறத்தைப் பார்த்துக் கொண்டிருக்க.. பக்கத்தில் இருந்த அந்தப் பையன் "இப்பவே ரொம்ப மிச்சம் பண்ணாதே.. உனக்குப் பிடிச்சா எடுத்துக்க" என அந்தப் பெண்ணிடம் சொல்லிக் கொண்டிருந்தான்.

மகிழும் முத்துவும் சிரித்துக் கொள்ள.. அவர்கள் நகர்ந்த பின் "பாத்தியாடி.. இதுங்க வயசு என்ன.. ஆனா பண்ற வேலைய பாரு" என முத்து கூற.. மகிழும் "ஆமான்டி.. நாம தான் ரொம்ப அப்பாவியா இருந்திருக்கோம் போல" என ஒத்து ஊதினாள்.

அவளை முறைத்த மகிழ் "ஹலோ மேடம்.. உங்க லீலை எல்லாம் எங்களுக்கு தெரியும்" என்க.. மகிழ் "சரி.. சரி விடு" என வளையலை தேர்ந்தெடுத்துவிட்டு.. பப்புள்ஸ் வாங்கி அதை ஊதியவாறே செல்ல.. முத்துவும் அதை உடைத்தவாறே நடந்தாள்.

ஆனால் அவள் கண்கள் முகிலனைத் தான் தேடியது.. வழக்கம் போல ஏமாற்றம் தான்.. அவனுக்காகப் பார்த்துப் பார்த்து தேர்ந்தெடுத்துப் போட்ட.. அந்த பாவாடை தாவணி அவளை கேலி செய்ய.. முயன்று மனதை வேறுபுறம் திருப்பினாள்.

இதழ்களோடு கண்களும் சிரிக்க.. தேர் போல நடந்து வந்த மகிழின் மீது இருந்து கண்களை எடுக்க சிரமப்பட்டான் முத்துக்குமரன்.. ஆனாலும் அவனுக்கு பாதுகாப்பு பணிகள் இருக்க.. வேறு வழியின்றி அவளை பார்வையால் பின் தொடர்ந்தான்.

இருவரும் பேசிச் சிரித்தவாறே திரும்பவும் கோவிலுக்கு வந்தனர்..

விசாழக் கிழமையிலே
நம்ம பொம்மாரித் தாய்க்கு
வாலையில பழுத்த பழம்
வாழைப்பழம் ஆயிரம்
சொம்புல பழுத்த பழம்
செவந்த
பழம் ஆயிரம்
கொம்புல பழுத்த பழம்
கோவைப்பழம் ஆயிரம்


வாக்குவரத்தைத் தொடர்ந்து காதைக் கிழிக்கும் சத்தத்துடன் பறை ஒலிக்க.. இருவரும் சுவாரஸ்யமாக கம்பம் ஆடுவதைப் பார்த்திருந்தனர்.. வழக்கமான ஊர் ஆட்களைத் தவிர்த்து பக்கத்து ஊரில் இருந்து.. மற்றும் வெளியூரில் குடிபெயர்ந்தவர்கள் கூட வந்திருக்க.. ஆட்டம் களைகட்டியது.

அப்போது தான் முத்துவின் அக்கா தமிழரசி பக்கத்து வீட்டு பெண்ணோடு வந்திருந்தாள்.. அவளுக்கு எட்டு மாதம் பிரசவத்திற்கு தாய்வீடு வந்திருந்தாள்.. அவளைக் கண்டதும் மகிழும் முத்துவும் அவளிடம் சென்று.. மகிழ் அவளை நலம் விசாரித்தபடி பேச ஆரம்பித்தனர்..

சிறிது நேரத்தில் தமிழரசிக்கு கால் வலி எடுக்க.. முத்து அவளை வீட்டில் சென்று விட்டு வருவதற்காக கிளம்பினாள்.. மங்கை (அவள் சின்னத் தாத்தாவின் மனைவி) அருகில் தான் நின்றார்.. ஆனால் மகிழ் அவரை கண்டு கொள்ளாமல் தனியாகவே நிற்க.. 'என்ன ஆனாலும் திமிர் மட்டும் குறையலை.. இவளைத் தான் கட்டுவேன்னு இந்த கிறுக்குப் பய அடம் பிடிக்கிறான் என பல்லைக் கடித்துக் கொண்டு நின்றார் மங்கை.

அதற்குள் வேறு யாரோ ஒரு பெண்மணி மங்கையை நெருங்கி அவரை நலம் விசாரித்துவிட்டு "இது உங்க மச்சாண்டார் பேத்தி தானே.. அம்சமா இருக்கு" என மகிழினியைக் கை காட்டி சொல்லி.. இத்தனை நேரம் இருந்த கடுப்பின் விளைவால் "பாக்க பளபளன்னு இருந்தா நல்லவளா" என அவளைப் பற்றி புறணி பேச.. மகிழினி ஒரு பெருமூச்சோடு அங்கிருந்து சற்றே நகர்ந்து நின்றாள்.

அவள் மங்கை பேசியதைப் பற்றியே யோசித்துக் கொண்டே நிற்க.. அருகில் "பாப்பா.. பாப்பா" என்ற குரல் கேட்க.. பார்த்தால்.. இந்த ஏழு நாட்களாக அங்கு கம்பம் ஆட வரும் இளைஞன் ஒருவன் நின்றிருந்தான்.. அவன் பார்வையின் சுவாரஸ்யமே அவன் நோக்கத்தை உரைக்க.. மகிழுக்கு சிரிப்புத்தான் வந்தது.

அவனை விட தான் நிச்சயம் பெரியவளாக இருப்போம்.. 'பாவம் கடலை போட்டாலும் வேஸ்ட் தான்' என நினைத்தவள்.. ஒன்றும் பேசாமல் சற்றுத் தள்ளி நிற்க.. அவனோ விடாக்கண்டனாய் "ஏங்க.. உங்க பேரு என்ன" என மீண்டும் கேட்க.. 'என்னடா புது வம்பு.. கூட்டத்துல யாராவது பாத்தா என்ன சொல்லுவாங்க' என நினைத்தவள் அவனைத் திட்டத் திரும்ப.. அதற்குள் யாரோ அவளை தன்புறம் இழுத்து.. அவளுக்கும் அந்தப் பையனுக்கும் நடுவில் நிற்க.. தடுமாறியவள்.. அங்கு நின்றிருந்தவனைக் கண்டு அதிர்ந்தாள்.

வலது கை இவளை இறுக்கிப் பிடித்திருக்க.. இடது கையால் அந்தப் பையனின் தோளில் கை போட்டபடி ஏதோ பேசிக் கொண்டிருந்தான் நந்தா.. அவன் என்ன சொன்னானோ.. அந்தப் பையன் முகத்தை தொங்கப் போட்டபடி செல்ல.. இவளைத் திரும்பி முறைத்தவன்.. யாரைப் பற்றியும் கண்டு கொள்ளாமல் அவள் கை பிடித்து அழைத்துச் சென்றான்.

மகிழினி கூட்டத்தில் திமிற முடியாமல் அவனோடு நகர.. கோவிலின் பின்புறம் இருந்த ஒரு பலூன் கடையில் ஊதா நிற பலூனை வாங்கி அவள் கையில் கொடுத்தவன்.. முத்து வருவதைப் பார்த்து நகர்ந்து சென்றான்.. எந்த கோவிலுக்குச் சென்றாலும்.. அவள் போட்டிருக்கும் உடையின் நிறத்தில் பலூன் வாங்குவது மகிழின் பழக்கம்.. இன்றும் இதை கையில் வைத்தபடி அவனையே பார்த்தபடி நின்றிருந்தாள்.

அவர்களை தூரத்தில் இருந்து பார்த்தவாறே வந்த முத்து.. "அண்ணா மாறவே இல்லைடி" என்க.. 'நிறைய மாறிட்டார்' என மனதில் நினைத்தவள் ஒன்றும் பேசவில்லை.

அதன்பிறகு எட்டு மணி போல கம்பம் பிடுங்கப்பட.. அனைவரும் வீடு வந்து சேர்ந்தனர்.. மகிழ் உணவை மறுத்துவிட்டு.. தன் அறைக்குள் புகுந்து கொண்டாள்.. உறக்கம் வரவில்லை.. இன்று காலையில் இருந்து நடந்தவை அனைத்தையும் யோசித்தவாறே படுத்திருந்தாள்..

மங்கைப் பாட்டி பேசியது.. நந்தாவின் செய்கைகள் என எல்லாவற்றையும் வரிசையாக.. எண்ணிப் பார்த்துக் கொண்டிருந்நவளை.. அவள் ஸ்டடி டேபிள் சேரில்.. ஃபேன் காற்றுக்கு குதித்துக் கொண்டிருந்த பலூன் வேடிக்கை பார்த்தது.. இப்படி கலவையான யோசனைகளுடனே இரவு கடந்திருக்க.. அடுத்த நாள் மஞ்சள் நீர் உற்சவம்..

உற்சவ சாமியை அலங்கரித்து ஊர் முழுதும் சுற்றி வருவார்கள்.. ராகவன் தோட்டம் வரை சென்றிருக்க.. முகிலன் மட்டுமே சாமியோடு சென்றிருந்தான்.. இறுதியில் புறப்பட்ட இடத்திற்கு வரும்போது தான்.. பக்கத்தில் இருப்பவர்கள்தேங்காய் பழம் மாற்றுவார்கள்..

சாமி வரும் மேளச் சத்தம் கேட்க.. மகிழினி தேங்காய் பழத் தட்டத்துடன்.. டம்ளரில் மஞ்சள் கலந்த நீரோடு கோவிலுக்குச் சென்றாள்.. முகிலன் ஒவ்வொரு தட்டிலும் தேங்காயை உடைத்து ஒருபாதியை தட்டிலும்.. மறுபாதியை அருகில் இருந்தவரிடமும் கொடுத்துக் கொண்டிருக்க.
நந்தா.. ஒவ்வொரு தட்டிலும் இருந்த மஞ்சள் நீரை எடுத்து கூட்டத்தின் மேல் தெளித்தபடி இருக்க.. பெண்கள் தங்கள் முந்தானையில் பெற்றுக் கொண்டனர்.. மகிழ் ஓரமாகவே நின்றுவிட.. தீபாராதனை முடிந்த பின் தங்கள் தட்டை எடுத்துக் கொண்டு.. முத்துவோடு நடந்தாள்.

யோசனையிலேயே இரண்டெட்டு நடந்திருக்க முத்து தான் "ஏய்.. இங்க பாருடி.. மஞ்சத்தண்ணி உம்மேலே விழுந்திருக்கு.. ஊத்தும் போது தெரியாம பட்டிருக்கும் போல" என அவள் தோளில் இருந்த மஞ்சளை சுட்டிக் காட்ட.. அவளும் பார்த்துவிட்டு ஏதோ யோசனையில் திரும்பிப் பார்க்க.. 'நான் தான் பண்ணேன்' என்ற படியான விஷமப் புன்னகையை இவளிடம் சிந்திவிட்டு.. சாமி தேரின் பின் சென்றான் நந்தா..

நாயகன் வருவான்..

பிரெண்ட்ஸ்.. சாரி.. லேட் ஆகிடுச்சு.. படிச்சுட்டு மறக்காம கமெண்ட்ஸ் சொல்லுங்க..
 
அருமையான பதிவு
திருவிழா தேரில் பார்த்த மாதிரி
இருந்தது
 
Top