Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

நீதானே என் பொன் வசந்தன்-அத்தியாயம் 10

Advertisement

நீதானே என் பொன் வசந்தன்
அத்தியாயம் 10
அருண் ஈரமணலில் ஆர்ப்பரிக்கும் கடலலைகளை வெறித்த வண்ணம் அமர்ந்திருந்தான், அவனது உள்ளமும் அந்த கொந்தளிக்கும் அலைகளை போல் நிலை கொள்ளாமல் தவித்துக்கொண்டிருந்தது..
"எப்படி முடிந்தது என்னால்? நான் என்ன அவ்ளோ அலையறவனா? ச்ச.. என்னை நினைச்சா எனக்கே கேவலமா இருக்கு "
அவனுக்கு முதலில் இந்த மாதிரி அபியுடன் நெருங்க வேண்டும் என்று எந்த எண்ணமும் இல்லை,அவளை நடனமாட அழைத்தது அவளது கூச்சத்தையும் ஒதுக்கதையும் போக்கி அவளை அவளது கூட்டுக்குள் இருந்து வெளியே கொண்டுவரும் ஒரு முயற்சியாக தான் ,ஆனால் அந்த முயற்சி எப்போது உணர்ச்சி பிரவாகமாக மாறியது என்று அவனுக்கே தெரியவில்லை ,நடந்தது எல்லாம் ஏதோ கனவு போல்தோன்றியது.. நிஜமாகவே கனவாகவே இருந்திட கூடாதா என்றும் ஏங்கினான்..
இப்போது எந்த முகத்தை வைத்துக்கொண்டு அபி முகத்தில் முழிப்பது? அவள் என்னை பற்றி என்ன நினைப்பாள்? பொறுக்கி,கேடுகெட்டவன்? இப்படி நினைப்பாளோ..?
அவர்கள் இருவருக்கும் நடுவே மெதுவாக மலர தொடங்கி இருந்த ஒரு நல்லுறவை தன் அவசரபுத்தியால் மொட்டிலேயே கருக்கி விட்டதாக எண்ணித் தவித்தான்.
அபி இப்போது தான் கொஞ்சம் சகஜமாக பேசத்தொடங்கி இருந்தாள்,இப்போது மீண்டும் பழையபடி இரும்புத்திரைக்குள் ஒளிந்துகொள்வாளோ என்றும் அஞ்சினான்…
இவ்வாறாக உழன்றுகொண்டிருந்த அவன் எண்ணஓட்டத்தை கலைப்பதுபோல் விக்கியின் கலகல சிரிப்பு கேட்டது ,
"டேய் சிரிக்காதடா…நான் செம காண்டுல இருக்கேன்..” என்றான் அருண்எரிச்சலாக
"நீ ஏன்டா காண்டுல இருக்க..? உன்னோட ரொமான்டிக் பர்பாமன்ஸ பார்த்த நாங்க தான்டா காண்டாகனும்..” என்று ஏக்க பெருமூச்செறிந்தான்..
“ஆனா சும்மா சொல்ல கூடாதுடா.. வாட் ய பர்ஃபாமன்ஸ் வாட் ய கிளாசிக்கல் பர்ஃபாமன்ஸ்மச்சி..!! மச்சான் இந்த கெமிஸ்ட்ரி பிசிக்ஸ் லாம் நான் சப்ஜெக்ட்ல தான்டா பார்த்திருக்கேன் பட் இப்ப தான்டா லைவ் ஆ பார்க்கறேன் என்னா கெமிஸ்ட்ரி என்னா பிசிக்ஸ்ஸு..”
அருண் அவனை கோபமாக முறைக்க
"முறைக்காதடா ,பண்றதெல்லாம் பண்ணிட்டு நீ முறைக்கவேற செய்யறீயா ?அதெப்படிடா நானும் ஒரு வருஷமா ட்ரை பண்றேன் கைய புடிக்கற சீன் கூட வரமாட்டேங்குது ,ஆனா வந்து ஒரு மாசம் கூட ஆகலை அதுக்குள்ள உனக்கு கட்டி புடிக்கற சீன்லாம் வருது..” என்று கிண்டலடிக்கவும்
“வாய மூடுடா அசிங்கமா பேசாத..” என்று சீறினான்
“என் வாய மூடலாம் மச்சான்.. ஆனா ஊர் வாய மூட முடியுமா?” என்று சுற்றிலும் இருப்பவர்களை சுட்டிக்காட்டினான்…ரெசார்ட்டிற்கு வந்திருந்த மற்ற விருந்தாளிகள் அங்கங்கே குழுவாக நின்று ஏதோ சீரியசாக பேசிக்கொண்டிருந்தனர் ,அது என்ன பேசினார்களோ தெரியாது ஆனால் அருணின் மனதிற்கு அவர்கள் அனைவரும் தன்னைப் பற்றியே பேசுவதாக தோன்றியது..
டேய்.. எல்லோரும் என்னைப் பத்தி என்னடா நெனைச்சிருப்பாங்க..” என்றான் கவலையாக..
“யாரு.. சுத்தி நின்னு வேடிக்கை பார்த்தாங்களே அவங்களா? அவங்களாம் ஃபிரீயா ஒரு ரொமான்டிக் டான்ஸ் பார்த்த சந்தோஷத்துல இருப்பாங்கடா..” என்று விளையாட்டாக கண் சிமிட்டினான்.
டேய் அவங்கள கேக்கலை ,அவங்க என்ன நினைச்சா எனக்கு என்ன?நான் மத்தவங்களை கேட்டேன்..”
"நம்ம டீம் மேட்ஸ் பத்தி கேக்குறியா? மச்சான் நீ ஆடி முடிச்சதும் விசில் சத்தம் பட்டைய கெளப்புச்சே அது யாருன்னு நெனைக்கற நாங்க தான்டா நாங்கல்லாம் செமையா என்ஜாய் பண்ணினோம், ஒருத்தர தவிர, நீ ஆடும் போது எதேச்சையா இந்த பக்கம் திரும்பி நித்தியாவ பார்த்தா… அவ காதுல புகை வராதது தான்டா பாக்கி, அவ்ளோ சூடா இருந்தா, ஆனா அவ என்ன நினைச்சான்னு தான்டா தெரியலை, நான் வேணா கேட்டு சொல்லவா? “என்று சீரியஸ் ஆகா கேட்க பதிலுக்கு அருண்அவனை முறைத்தான்
"ஆனா ஒன்னுடா நல்லவேளை விவேக் இன்னிக்கு வரலை வந்திருந்தா பாவம் வயிறு எரிஞ்சே செய்திருப்பான்..” என்று தன் வழக்கம் போல தன் ஜோக்குக்கு தானே சிரித்துக்கொண்டான் "டேய்..லூசு.. நான் அபி என்ன நினைச்சிருப்பான்னு கேட்டேன்டா உன் மர மண்டைல ஏதாவது ஏறுதா?
“ஓஹ்.. அபிதான் உன்னோட எல்லாருமா? சொல்லவே இல்லை…ஆனா அபி இதுல நினைக்க என்ன இருக்கு..?அவங்களும் சேர்ந்து தானே ஆடினாங்க..”
என்று சாதாரணமாக கேட்டான்
"இல்லைடா.. அவ என்னை தப்பா நெனைச்சிருந்தா ?”
"டேய்..நீ பண்ணது தப்புனா அதுல அவங்களுக்கும் சம பங்கு இருக்கு, ஃபிரீயா விடுடா பார்த்துக்கலாம்..”
என்று அவனை தேற்றினான்,ஆனால் அருணின் மனம் சமாதானம் ஆகாமல் முரண்டியது..
“அபி தன் முகத்தில் குளிர் நீரை வாரி இறைத்து எங்கோ கனவுலகில் உலாவ சென்ற தன் மனதை தட்டி எழுப்பிக்கொண்டிருந்தாள்,மேலும் மேலும் நீரை இறைத்து நடந்த நிகழ்வுகளை மனத்திரையிலிருந்து அகற்றிட முயன்றாள்,ஆனால் மூடிய கண்களின் வழியே அவனது முகம் மிக அருகில் முத்தமிடுவது போல் குனிய சட்டென்று கண்திறந்தாள்,உடல் முதுவதும் இன்னும் அவனது ஸ்பரிசம் ஒட்டிக்கொண்டுருப்பது போல் அப்போதும் அவன் நினைவில் உடல் சிலிர்த்தது.. இருகைகளையும் தண்ணீர் குழாயின் அடியில் நீட்டி அவன் தீண்டிய உணர்வை அழிப்பது போல் தேய்த்து கழுவினாள், கை சிவந்தது தான் மிச்சம், அந்த குறுகுறுப்பு மறையவே இல்லை
"அவனை மட்டும் இதில் குறைகூற முடியாது, நடந்த தப்பில் எனக்கும் சரி பாதி பங்கு இருக்கிறதே "அந்த காரணம் தான் அவளை மேலும் ஆத்திரம் கொள்ள செய்தது, சுய கட்டுப்பாட்டையும் ,சிறுவயதுமுதல் தான் கடைபிடித்து வந்த கோட்பாட்டையும் காற்றில் பறக்க விட்டு தான் நடந்து கொண்ட விதத்திற்காக தன் மீதே வெறுப்பாக வந்தது . ஏதோ நடந்த எல்லாவற்றையும் நினைவிலிருந்து கழுவி போக்குவதாக எண்ணி மேலும் இருமுறை நீரை வாரி முகத்தில் இறைத்து கொண்டு வெளியே வந்தாள்..
வெளியே இவளை கண்ட ஒரு பெண் இவளிடம் வந்து
"ஹே ,சூப்பரா ஆடினீங்க நீங்களும் உங்க பாய் ஃபிரெண்டும் ,செம கெமிஸ்ட்ரி சான்ஸே இல்லை..” என்று பாராட்டவும் ,என்ன சொல்வதென்றே தெரியாமல் விழித்துக்கொண்டு நின்றாள்..
“எக்ஸ்கியூஸ் மீ..” என்று அந்த இடத்தை விட்டு விரைவாக நகர்ந்து சென்றுவிட்டாள்..
அபியின் மனம் முழுவதும் குழம்பி இருந்தது ,அவளது படபடக்கும் இதயத்துடிப்புக்கு பக்கவாத்தியம் போல் அலைகள் ஆர்பரித்துக்கொண்டிருந்தது..
“என்ன ஆயிற்று எனக்கு? அவனுடன் அதனை பேர் முன்னிலையில் அப்படி ஒட்டி கொண்டு ஆட எப்படி முடிந்தது? எல்லாவற்றிற்கும் மேலாக அப்படி ஆடியது அருவருப்பாகவோ குற்றஉணர்ச்சியாகவோ இல்லை, அவள் ஆழ் மனதிற்குள் கிளர்ச்சிஊட்டுவதாகவே இருந்தது, அதை தான் அவளால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை..
நான் ஏன் இப்படி ஆனேன்..? யாரவன் ? நான் சில வாரங்களே அறிந்த கிட்ட தட்ட அந்நியனான ஒருவன் அவ்வளவுதான் , இதே வேறு ஒரு ஆண்மகனின் கை தன் மேல் பட்டிருந்தால் ,கன்னம் பழுத்திருக்கும் என்பது உறுதி ,ஆனால் அருணிடம் அப்படி நடந்துகொள்ள முடியவில்லையே ஏன்? அவன் என்ன அவ்வளவு ஸ்பெஷல் யாரும் புகமுடியாதபடி? என்னை சுற்றி நானே எழுப்பி கொண்ட இரும்பு கோட்டையை அவன் தகர்கிறானா?”
யோசிக்க யோசிக்க தான் மேலும் குழம்புவதாகவே தோன்றியது
அதே சமயம் பூர்ணாஅபியை தேடி அங்கு வந்தாள்
“ஹே அபி ,இங்க என்ன பண்ற உன்னை எங்கெல்லாம் தேடுறது? சரி வா போலாம்..” என்றாள்
“எங்க?”
“வீட்டுக்கு தான் வேற எங்க? ஏன் உனக்கு இன்னும் டான்ஸ் ஆடணுமா?

என்றதும் அபியின் முகம் கன்றி சிவந்தது கண்டு பூர்ணா தன் விளையாட்டு பேச்சை நிறுத்தினாள், அவளுக்கு புரிந்தது அபி நடந்த நிகழ்விற்காக வருந்துகிறாள் என்று, எனவே அவளை மேலும் தர்மசங்கடப்படுத்த விரும்பாமல் அமைதியாக உடன் நடந்தாள்…யாரிடம் என்ன சொன்னாளோ தெரியாது, வேறு யாரும் அபியை ஒரு வார்த்தை பேசவில்லை
அபி யாருடைய முகத்தையும் பாராமல் தவிர்த்தாள் குறிப்பாக அருணின் புறம் நிமிர்ந்தும் பார்க்க வில்லை ,மற்ற அனைவரும் விக்கியின் காரில் சென்று விட அருணும் அபியும் மட்டும் தனித்து விடப்பட்டனர் அருண் பைக்கை ஸ்டார்ட் செய்து விட்டு அபி ஏறுவதற்காக காத்திருந்தான் ,
அவளுக்கு தெரியும் அவனுடன் தான் போய் ஆகவேண்டும் என்று,இந்த நடு ராத்திரியில் அவனுடன் போகமாட்டேன் என்று ஆடம் பிடிப்பது எவ்வளவு பெரிய பைத்தியக்காரத்தனம் என்று அவள் அறியாதது இல்லை.. வேறு வழியில்லாமல் வேண்டாவெறுப்பாக பட்டும் படாமலும் அவன் பின்னால்அமர்ந்தாள்..
ஒருவரும் பேசிக்கொள்ளவில்லை ,பேசுவதற்கான முயற்சியில் கூட ஈடுபடவில்லை ,இருவருக்கிடையே நிலவிய தர்மசங்கடமான சூழல் அவர்களுக்கு நடுவே ஒரு பெரும் தடைசுவரை எழுப்பியிருந்தது ,அதை தகர்க்க வழியறியாமல் அமைதியாகினர்.. வார்த்தைகள் ஊமையாகி போனாலும் அவர்கள் மனங்களில் எண்ணங்கள் பேரோசையுடன் முட்டி மோதிக்கொண்டிருந்தன …அருண் இம்முறை மிக கவனத்துடன் வண்டி ஓட்டினான்.. ஒரு சிறு அசைவில் கூட அபிக்கு சந்தேகத்தையோ, சங்கடத்தையோ ஏற்படுத்திவிட கூடாதென்று, தனக்குளேயே நடந்த மனப்போராட்டதால் சஞ்சலப்பட்டு கொண்டிருந்த அபி அருண்வண்டியை நிறுத்தியதை கூட உணரவில்லை ,
"இறங்கு அபி" என்று என்று அவன் கூறியதும் தான் சுயநினைவு வந்தவளாக சுற்றிலும் பார்த்தாள்..
அபார்ட்மெண்ட்க்கு சிறிது தூரம் முன்பாகவே வண்டியை நிறுத்தி இருந்தான்.. “எதுக்கு இங்கேயே நிறுத்திஇருக்கான்? இங்க இருந்து நடந்து போக சொல்ல போறானா?” என்று யோசனையாக அவனை பார்க்க ,
உடன் வருமாறு தலையசைத்து விட்டு முன் நடந்தான், ஏன் என்று புரியாமல் தயக்கத்துடன் பின் தொடர்ந்தாள் அபி ,அவன் தாங்கள் முதன் முதலில் சந்தித்த ஐஸ்கிரீம் பார்லர்குள் நுழைவதை கண்டு யோசனையாக புருவம் சுருக்கினாள்..
எதற்கு இங்க கூட்டி வந்திருக்கிறான்? அதுவும் இந்த அர்த்த ராத்திரியில் இந்த கடை மட்டும் எப்படி திறந்திருக்கிறது?
கேள்விகள் வரிசையாக அணிவகுத்தாலும் அதற்கு விடை தேட முனையவில்லை அவள்,
அருண் ஒரு இருக்கையில் அமர்ந்து அவளையும் உட்காருமாறு சைகை செய்யவும் அவளுக்கு ஆத்திரமாக வந்தது ,இந்த நாடகம் எதையும் ரசிக்கும் மனநிலையில் இல்லை அவள் ,வீட்டிற்கு போனால் போதும் என்றிருந்தது
"என்ன இதெல்லாம், நான் வீட்டுக்கு போறேன்…” என்று கோபமாக உரைத்துவிட்டு திரும்பியவளை அவனது ஆழ்ந்த குரல் தடுத்தது..
"அபி, இப்ப நீ இங்க உக்காரலைனா நான் உன் கைய புடிச்சி இழுத்து உக்காரவைப்பேன் பரவாலையா?" என்ற அவன் வார்த்தைகளில் அதிர்ந்து விழித்தாள்..
“ஒருவேளை உனக்கு அதான் இஷ்டம் போல..” என்று அவன் ஏளனமாக கேட்கவும், அவனை கோபமாக முறைத்தாலும்,எங்கு அவன் சொன்னது போல்செய்துவிடுவானோ என்று சட்டென்று அமர்ந்தும் விட்டாள்..அவனை எரிப்பவள்போல் பார்த்த போதிலும் அதனால் சிறிதும் அவன் கலங்க வில்லை அதனை சிறிதும் சட்டை செய்யாமல் ,கடைக்காரனை பார்த்து ஏதோ ஜாடை செய்யவும் அவன் ஒரு சிறிய பெட்டியை தட்டில் ஏந்தி எடுத்து வந்தான் ,
அசிரத்தையாக பார்த்தவளுக்கு அது ஒரு கசாட்டா ஐஸ்கிரீம் பெட்டி என்று தெரிந்தது
“எதற்கு இதெல்லாம் பண்றான்? என்னை சமாதானபடுத்தவா?” என்று குழப்பத்துடன் அவனை பார்க்க..
"ரொம்ப யோசிக்கவேணாம் இது வெறும் ஒரு ஐஸ்கிரீம் ..சாப்பிடு” என்றான் மெதுவான குரலில்
அவள் அசையாமல் அமர்ந்திருப்பதை பார்த்தவனுக்கு கோபம் எட்டி பார்த்தது
"இப்போ நான் ஊட்டி விடணும்னு எதிர்பாக்கிறியா?”
பதிலுக்கு அவள் அவனை முறைக்க அதை கண்டு கொள்ளாமல், தன் பாட்டிற்கு அந்த அட்டையை பிரிக்க தொடங்கினான்..
“என்ன செய்கிறான்..? சொன்ன மாதிரியே ஊட்டிவிட போகிறானா?
செஞ்சாலும் செய்வான்..” என்று எண்ணி விட்டு ,வெடுக்கென்று அவன் கையிலிருந்து பிடுங்கி தானே பிரித்தாள்..அவள் ஒரு வாய் ஐஸ்கிரீம் ஐ சுவைத்தும் ,"ஹாப்பி பர்த்டே டு யூ..”என்று மொபைலில் பாடல் ஒக்க அருணும் உடன் சேர்ந்து பாடினான்..மணி சரியாக 12 என்று கடை கடிகாரத்தில் காட்டியது…ஏனோ அபியின் கண்கள் பனித்தது,அதுவரை இருந்த மனக்குழப்பம் ,கோபம் நீங்கி நொடியில் உற்சாகம் கரைபுரண்டது போல் உணர்ந்தாள்...
ஏனோ அபியின் கண்கள் பனித்தது… நம்மை ஒருவர் நினைக்கிறார் அதுவும் நமக்கு மிகவும் முக்கியமான நாளில் என்பதை விட சிறந்த உணர்வு எதுவும் இருப்பதாக தோன்றவில்லை, அப்படி ஒரு சந்தோஷ கடலில் மூழ்கிப்போனாள் அபி..
அதுவும் அவள் சிறிது நேரத்திற்கு முன் இருந்த மனநிலைக்கு நேர் மாறாக இந்த இனிய ஆச்சர்யம் அவளுக்கு பேரானந்தத்தை தந்தது..
அருண் என்று உணர்ச்சிபூர்வமாக அவள் அழைத்து ஏதோ சொல்ல தொடங்கவும் அவளை இடைமறித்து..
"போதும் நீ பீல் பண்ணது ,ஐஸ்கிரீம் உருதுகு சாப்பிடு..”என்று அந்த கனமான சூழ்நிலையை சாதாரணமாக்கினான்..சிறு புன்னகையுடன் அவள் ஐஸ்கிரீமை ருசித்து சாப்பிடுவதை ரசித்தான்..
"உங்க ஊர்லலாம் இப்படிதான் அடுத்தவங்களை பார்க்க வச்சிட்டு சாப்பிடுவாங்களா?”
நீ வேணும்னா வேற வாங்கிக்கோ நான் தர மாட்டேன்..” என்றாள் சிறுபிள்ளை போல
“இல்லை.. எனக்கு இந்த ஐஸ்கிரீம் தான் வேண்டும்…”என்று அவனும் பிடிவாதமாக அவளது ஸ்பூனை பறித்து சாப்பிட தொடங்கினான்
"நான் எச்சி சாப்பிட மாட்டேன்..” என்றாள்,
" பட் நான் சாப்பிடுவேன்..” என்றான் குறுப்பு சிரிப்புடன்
முதலில் அவனுடன் பகிர்ந்து சாப்பிட தயங்கினாலும் பிறகு மெதுவாக அதற்கு பழகிவிட்டாள்..
அவனுடன் இருக்கும்போது எதுவுமே தப்பாக தெரிவதில்லை ,அவள் எதெல்லாம் தன் வாழ்க்கையில் செய்யவே மாட்டோம் என்று இருந்தாலோ அதெல்லாம் மிகவும் சாதாரணமாக தோன்றியது… வேடிக்கையும் விளையாட்டுமாக ஐஸ்கிரீமை சாப்பிட்டு முடித்த நேரம் இருவருக்கு நடுவிலும் இருந்த இறுக்கம் தளர்ந்து எல்லாம் சரியாகிப்போனது..
அருணின் போன் ஒலிக்க அவன் எடுத்து பேசிக்கொண்டே வெளியே சென்றான், அவன் வெளியே சென்றதும் கடைக்காரர் டேபிளை சுத்தம் செய்ய வந்தார்… ஏதோ தோன்ற
"இந்த நேரத்துல எப்படி கடை திறந்து வச்சிருக்கீங்க?” என்று ஆச்சரியமாக கேட்டாள்..
“அருண் சார் நேத்தே வந்து சொன்னாரு நீங்க இன்னிக்கு 12 மணிக்கு வருவீங்கன்னு.. இப்போ பத்து மணிக்குகூட போன் பண்ணி கன்பார்ம் பண்ணாரு…”
“ அதெப்படி நாங்க வராமலே போய் இருந்தா? இந்த ஒரு ஐஸ்கிரீம் பிஸ்னஸ்காகவா நீங்க இவ்ளோ நேரம் வெயிட் பண்ணீங்க?”
“ சார் ஏற்கனவே 1000 ரூபாய் அட்வான்ஸ் குடுத்தாங்க, 1௦௦ ரூபாய் ஐஸ்கிரீம்க்கு 1000 ரூபா கிடைச்சா யாராவது விடுவாங்களா..?என்ன ஒரு ரெண்டு மணிநேரம் கழிச்சி கடையை மூட போறேன் அவ்வளவுதானே..”
என்று கூறிவிட்டு “ஆனால் மேடம், சார் உங்க மேல அவ்ளோ பிரியம் வச்சிருக்காரு ,நீங்க ரொம்ப லக்கி மேடம்…”என்று சேர்த்து கூறிவிட்டு போனான்…
உண்மை அறிந்து அபி திகைத்து போனாள் "பார்ட்டில அவன் ஐஸ்கிரீம் தராமல் போனது கூட இப்படி ஒரு சர்ப்ரைஸ் குடுக்கதானா? பத்து மணிக்கு அங்கு எல்லாருடனும் பிஸிஆகா இருந்த போதும் போன் பண்ணி சொல்ல மறக்கவில்லை , நான் என்ன அவனுக்கு அவ்ளோமுக்கியமா? என்னோட சந்தோஷத்துக்காக ஏன் இதையெல்லாம் பன்றான்? என்கிட்ட என்ன எதிர்பார்க்கிறான் ? இப்படிலாம் பண்ணி என்னை ரொம்ப பலவீனப்படுத்துறானே,இப்படி இவனுடைய அன்புக்கு கட்டுப்பட்டு அதில் மனம் குதூகலிக்க தொடங்கிவிட்டால் அப்புறம் அந்த அன்பு கிடைக்காமல் போகும் பாலைவன வறட்சி வரும் காலத்தில் அதை எப்படி தங்குவது?”
என்று பலவாறு யோசித்து மனம் குழம்பினாள், அதே சமயம் இந்த தருணம் நிஜம் ,இதில் இவன் தரும் இந்த சந்தோஷம் நிஜம் இதை நான் மனப்பூர்வமாக அனுபவிக்கவேண்டும், எதிர்காலத்தை நினைத்து நிகழ்காலத்தை இழக்க கூடாது.. என்று மனதின் மற்றொருபாதி அறிவுறுத்தியது…
தூரத்தில் அருண் சிறு புன்னகையுடன் இவளை நோக்கி வருவது தெரிந்தது..முதல் முறையாக அவனை விழிவிரிய அசந்துபோய் பார்த்தாள் அபி.. இதயம் அவளையும் மீறி ஆனந்த கூத்தாடியது
அவளின் பார்வையில் மாறுதலை கண்டு அருண் “என்ன..?” என்பது போல் ஒற்றை புருவம் உயர்த்தினான். அவள் “ஒன்றும் இல்லை” என்பது போல் மறுப்பாக தலையாட்டி விட்டு லேசாக முகம்சிவந்தாள்…
அருண் கூர்மையாக அவளை பார்த்துவிட்டு, எதுவும் தோண்டி துருவல் விட்டுவிட்டான் ..இருவரும் மெதுவாக நடந்து தங்கள் வீட்டு கதவினருகில் வர தானாக கால்கள் தயங்கி நின்றன ,
அருண் தீவிரமான முகத்துடன்
"அபி..” என்று சொல்ல தொடங்கவும் அவனை பாதியிலேயே தடுத்தாள் அவள்..
"ப்ளீஸ் அருண், இப்போ நான் ரொம்ப சந்தோஷமா இருக்கேன், அதை கெடுக்கற மாதிரி நாம எதுவும் பேச வேண்டாமே..” என்றாள்..
அவனுக்கும் அதை விட வேறு என்ன வேண்டும்,சிறு ஆயாச பெருமூச்சுடன் சரி என்று தலையாட்டினான் ,
“ஃபிரெண்ட்ஸ்..?” என்று தன் கையை அவள் புறம் நீட்டினான்.
“ஃபிரெண்ட்ஸ்..” என்று அவளும் அவன் நீட்டிய கையை பற்றி குலுக்கினாள்.
பின்னர் தனது லேப்டாப் பையில் இருந்து அழகாக பேக் செய்யப்பட்ட ஒரு சிறு பரிசை அவளிடம் நீட்டினான்..
"யார்ரா இவன்..? என்னை இப்படி அசத்துறான்..?” என்று உள்ளம் துள்ள அதை பெற்றுக்கொண்டு நன்றியுரைத்துவிட்டு, வீட்டுக்குள் வந்து புன்னகையுடன் அந்த கிப்ட்டை திறந்தாள்
பார்த்தவள் ஒரு கணம் அதிர்ந்து பின்னர் கோபம் கொப்பளிக்க “அருண்…” என்று உச்சஸ்தாயில் கத்தினாள்…
தொடரும்


author's note

romba sorry makkale ,romba delay aagiduchi ..konjam personal work la busy aagitadhaala update panna mudiyalai ,inimel regularaa update panna plan panni iruken ..avasaragadhila update panni iruken mistakes irundhaa ignore pannidunga ..





Ava kathum alavuku enna gift ah irukum??? Niceupdate ma
 
Top