Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

நீதானே என் பொன் வசந்தன்-அத்தியாயம் 7

Advertisement

Kalarani Bhaskar

Well-known member
Member
நீதானே என் பொன் வசந்தன்
அத்தியாயம் 7
நுழைவாயிலில் நிழலாட நிமிர்ந்து பார்த்தால், அங்கே அருண், முகம் முழுவதும் சிரிப்பாக இவளை பார்த்து கையசைத்துக்கொண்டுருந்தான்.. அபி இமைத்தட்டவும் மறந்து அவனை விழிவிரிய வியந்து நோக்கினாள்…
அதுவரை நிலைகொள்ளாமல் தவித்த அபியின் மனம் அருணை பார்த்த நொடியில் அமைதியுற்றது ,அவளது பிரமித்த விழிகளில் இனி எதை பற்றியும் கவலை படவேண்டாம் என்றது போல நிம்மதி குடியேறியது , அனிச்சையாக இதழ்கள் விரிய அருணை பார்த்து புன்னகை பூத்தாள்.
ஆனால் அருணை அந்த வேளையில் சற்றும் எதிர்பார்க்காத விவேக் திக்பிரமை பிடித்தவனை போல் அவனை வெறித்தான் , அருணை மட்டும் அல்ல அந்த சமயத்தில் அவன் யாரையுமே அங்கு எதிர்பார்க்கவில்லை.
"அருண் நீ என்ன பண்ற இங்க?” என்றான் எரிச்சலாக,
“அபியை கூட்டிட்டு போக வெயிட் பண்றேன்..” என்றான் அருண் உள்ளுக்குள் அவனது எரிச்சலை ரசித்தவாறு.
“நீயேன் அபியை கூட்டிட்டு போகணும்…?” என்றான் குழப்பத்துடன் .
பாஸ்.. உங்களுக்கு விஷயமே தெரியாதா? டீம்ல எல்லாருக்குமே தெரியும், நாங்க ஒரே அபார்ட்மெண்ட்ல தான் இருக்கோம், டெய்லி நான் தான் அபியை பிக்அப் அண்ட் ட்ராப் பன்றேன்னு…” என்று புளுகினான் நொடியும் தயங்காமல்.
விவேக் கேள்வியாக அபியை பார்த்தான் "இவன் சொல்லுவது உண்மையா?” என்ற பாவனையில்… அபி அவசரமாக ஆமாம் என்று தலையாட்டினாள், இப்போதைக்கு அவளுக்கு விவேக்குடன் டின்னர் போகாமல் தப்பித்தால் போதும், மற்றதை பிறகு பார்த்துக்கொள்ளலாம் என்று தோன்றியது..
"எஸ் சார் , அருண் கூட தான் டெய்லி ஆபீஸ்கு வருவேன்…”என்று அருணை ஒட்டியே பேசினாள்.
“அருண் வெயிட் பண்ரான்னு நீ ஏன் என்கிட்ட சொல்லவே இல்லை?” என்று குறுக்கு விசாரணை செய்தான், அபி சொல்வதை நம்பமுடியாமல் …
அபி எதுவும் பேச வாய் திறப்பதற்கு முன்னால்,அவளை இடைமறித்து ,
"அபி போகதான் சொன்னா நான் தான் அவளை சர்ப்ரைஸ் பண்றதுக்காக அவளுக்கு தெரியாம வெயிட் பண்ணிட்டு இருந்தேன் "என்றான் அபியை பார்த்து சிரித்தபடி
விவேக் கடுப்பானது அவன் முகத்தில் அப்பட்டமாக தெரிந்தது
அருண் அதை கண்டும் காணாதவன் போல் அபியிடம் திரும்பி "அபி வேலை முடிஞ்சதா நாம போலாமா..” என்றான் விவேக்கை சிறிதும் சட்டை செய்யாமல்,
அபியும் ஆமோதிப்பான தலையசைவுடன் அவனுடன் செல்வதை பார்த்த விவேக்கிற்கு உள்ளுக்குள் தீ பற்றியதுபோல் எரிந்தது அவர்கள் ஜோடியாக செல்வதை கண்களில் கலப்படமில்லா தூய வெறுப்புடன் பார்த்தான்.
"அருண் நான் உன்னை விடப்போறது இல்லை, இதுக்கு நீ விலை கொடுத்தே ஆகணும்" என்று அடிபட்ட புலியாக உள்ளூர கருவினான்
இருவரும் பார்க்கிங் பகுதியை அடைந்ததும் ,அருண் தன் பைக்கை ஸ்டார்ட் செய்துவிட்டு அபி ஏறுவதற்காக காத்திருந்தான்.
அவள் அப்போதும் வண்டியில் ஏறாமல் தயக்கத்துடன், துப்பட்டா நுனியில் விரலால் முடிச்சிட்டு கொண்டு நிற்பதை பார்த்தவன் ஒரு பொறுமை இழந்த வேகமூச்சுடன் ,
"அபி… ஐ டோன்ட் ஹவ் ஆல் டே டு வெயிட், ப்ளீஸ் மேக் இட் ஃபாஸ்ட்…” என்றான் எரிச்சலுடன்…இவ்வளவிற்கு பின்னும் அபி அவனுடன் பைக்கில் வர தயங்குகிறாள் என்ற எண்ணமே அவனை கோபம் கொள்ள செய்தது.
மேலும் சிறு தயக்கத்திற்கு பின் அவள் ஒரு புறமாக அமரப் போக, அவளை தடுத்து "ரெண்டு பக்கம் கால் போட்டு உக்காரு அபி, அப்போ தான் எனக்கு பாலன்ஸ் பண்ண ஈஸி ஆ இருக்கும்” என்றான் கறார் குரலில்.
“எல்லாம் என் நேரம்…” என்று வாய்க்குள் முணுமுணுத்தபடி ,அவன் கூறியபடி அமர்ந்தாள்.
அவள் சரியாக உக்கார்ந்தாளா என்று சரி பார்த்த பின் அருண் வண்டியை கிளப்பபோகும் நேரம், திடீரென அபி "ஐயோ..” என்று அலறினாள்.
“என்ன ஆச்சு?” என்றான் பதற்றத்துடன்.
"இந்த பைக்கில புடிச்சிக்கறதுக்கே இடம் இல்லை "என்றாள் குறை கூறும் சிறுபிள்ளை போல
"இதெல்லாம் ஒரு ப்ராப்மா? அதான் இவ்ளோ பெரிய உருவம் முன்னாடி இருக்குல புடிச்சிக்க வேண்டியது தானே?” என்றான் சாதாரணமாக.
அவள் கண்களை ஆச்சர்யத்தில் அகலமாக விரிக்க
"பரவால்ல அபி, நான் ஒன்னும் தப்பா நெனைச்சிக்க மாட்டேன், நீங்க என்னை கெட்டியா புடிச்சிக்கலாம்" என்றான் சிரிப்பை உள்ளடக்கிய குரலில்,
அபிக்கு அவன் ஜோக் ஒன்றும் ரசிக்கவில்லை என்றாலும் வேறு வழி இல்லாமல், பட்டும் படாமலும் அவன் தோள்மீது கை வைத்தாள்.
“இது சரியா வராது..” என்று உள்ளுக்குள் நினைத்தவன் பைக்கை முழுவேகத்துடன் கிளப்பவும்..
அந்த எதிர்பார்க்காத அதிர்ச்சியில் நிலைதடுமாறியவள் விழாமல் இருப்பதற்காக அனிச்சையாய் அவன் தோள்களை இறுக பற்றினாள், ஒரு விஷம புன்னகையுடன், அவன் வேகத்தை மேலும் அதிகரிக்க அவன் தோள் மீது அவள் கைகள் இன்னும் அழுத்தமாக பதிந்தன. அவன் வேகமாக சென்ற போதிலும் முழு கட்டுப்பாட்டுடன் தான் ஓட்டுகிறான் என்று தெரிந்ததால் அபியாலும் ஒன்றும்கூற முடியவில்லை, அருண் சரியாக தான் வண்டியை ஓட்டினான் ஆனால் அபியை எரிச்சலூட்டியது அவன் திடீர் திடீர் என்று பிரேக் போட்டதுதான், ஒவ்வொரு பிரேக்குக்கும் அபி அவன் மீது விழ வேண்டி இருந்தது ,
அபியும் சிலமுறை எச்சரித்து பார்த்தாள்..ஆனால் அது செவிடன் காதில் விழுந்தது போல் பயனில்லாமல் போனது.
அவன் பிரேக் போடும் போதெல்லாம் அவள் அவன் முதுகை கோபமாக வெறித்தாள்..
“மொறைக்காதீங்க அபி…நீங்க பின்னாடி மொறைக்கறது முன்னாடி தெரியுது..”என்று அவளை சீண்டினான்.
"ஒழுங்கா ஓட்ட கூடாதா?” என்று குறைப்பட்டாள்.
"ரோடு மோசமா இருக்கு நான் என்ன பண்றது?" என்று எல்லா பழியும் சென்னை கார்பொரேஷன் மேல் போட்டான்.
அவள் ஏளனமாக உதட்டை சுளித்தாள்..
சிறு அமைதியின் பின்,"அபி ஏன் அமைதியா வரீங்க ,ஏதாவது பேசுங்க, போர் அடிக்குது எனக்கு.. "என்றான் அருண்.
"உங்களுக்கு போர் அடிச்சா பேசறதுக்கு நான் என்ன ஆர் ஜே வா?” என்று எரிச்சலாக திருப்பி கேட்க..
"பார்ர்ரா.. அபி நீங்க காமெடி கூட பண்ணுவீங்களா? உங்களுக்கு கோபப்பட மட்டும் தான் தெரியும்னு நெனச்சேன்..”என்று அவளை காலை வாரினான்.
அவள் அவன் முகத்திற்கு பின்னால் நாக்கை நீட்டி அழகு காட்டினாள் அதை பக்கக் கண்ணாடி வழியாக கண்டுவிட்ட அருண் ,அவளுடைய சிறுபிள்ளை தனமான செய்கையை எண்ணி உள்ளுக்குள் சிரித்துக்கொண்டான், அவன் அபியின் குறும்பில் லயித்திருந்த நேரம் சாலையில் சிறிது கவனம் பிசகியதால் ,எதிர்ப்பட்ட ஸ்பீட் ப்ரகேரை கடைசி வினாடியில் கவனித்து வேகத்தை முழுவதும் குறைப்பதற்காக முடிந்த அளவு பிரேக்கை பிடித்து வண்டியை நிறுத்தினான். அந்த எதிர்பாராத அதிர்ச்சிக்கு தயாராகாத அபி நிலைதடுமாறி அருணின் மீது விழுந்தாள்,கீழேவிழாமல் இருக்க முடிந்த அளவு கெட்டியாக அவனை பற்றிக்கொண்டாள் .
அபியின் உடல் முழுவதுமாக அருணின் முதுகில் ஒட்டிக்கொள்ள , இதயம் படபடக்க, அவள் அவனுடைய தோளில் முகம் புதைத்திருந்தாள்.
அருண் அவசரமாக , “சாரி அபி… ஐ அம் ரியலி சாரி.. ஆர் யூ ஓகே..? என்றான் கவலையும் வருத்தமும் தோய்ந்த குரலில்.
அவனது கரிசனையான குரல் ,அதிர்ந்திருந்த அபியின் செல்களை முழுவதுமாக உயிர்த்தெழ செய்தது, உடனடியாக தன்னை அவனிடமிருந்து விலக்கிக்கொண்டு
"எவ்ளோ கீழ்த்தரமா நடந்துக்கிட்டான்? அந்த விவேக்குக்கும் இவனுக்கும் என்ன பெரிய வித்தியாசம்? எல்லா ஆம்பளைங்களும் ஒன்னுதான், எல்லாருமே சந்தர்ப்பவாதிகள் ,வாய்ப்பு கிடைக்காதவரை எல்லாருமே உத்தமர்களா காட்டிக்குவாங்க,வாய்ப்புகிடைச்சாதான் அவங்க சுய ரூபம் வெளியவரும்.. இவன் மட்டும் விதிவிலக்காகவா இருக்க போகிறான் ? இவனும் அதே குட்டையில் ஊறிய மட்டை தான்…” என்று தோன்றிய கணம் இனி ஒரு நொடி கூட இவனோட பைக்ல இருக்க கூடாது என்று, உடனடியாக வண்டியிலிருந்து இறங்கினாள் .
“ஏன் அபி இறங்கிடீங்க.. என்ன ஆச்சு..? எதுனா அடிபட்டுச்சா..” என்றான் அக்கறையாக
ஆனால் அவனை சிறிதும் சட்டை செய்யாமல் தன் பாட்டில் வேகமாக நடக்க தொடங்கினாள்.
அவள் கோபமாக இருக்கிறாள் என்று அறிந்த அருண்,,,அவளுக்கு தன் நிலையை விளக்க முயன்றான், அவளுடைய நடைக்கு ஈடுகொடுத்து வண்டியை மெதுவாக ஒட்டியவாறு,
“அபி… இது ஒரு ஆக்சிடென்ட், அவ்ளோ தான்.. இதுல நீங்க கோபப்பட எதுவுமே இல்லை, ப்ளீஸ் வாங்க..”என்று கிட்ட தட்ட கெஞ்சினான்.
"இல்லை அது ஆக்சிடென்ட் இல்லை நீங்க வேணுமே பிளான் பண்ணி பண்ணி இருக்கீங்க..” என்று நேரடியாக குற்றம் சாற்றினாள்.
“இல்லை அபி.. நான் வேணும்னே எதுவும் பண்ணலை, நான் லாஸ்ட் மினிட்ல தான் அந்த ஸ்பீட் பிரேக்கர பார்த்தேன், அதான் சடன் பிரேக் போடவேண்டியதா போச்சி…” என்று பொறுமையாக விளக்கினான்.
ஆனால் அவன் கூறும் எந்த விளக்கத்தையும் ஏற்கும் மனநிலையில் அபி இல்லை,
"போதும் நீங்க இதுவரைக்கும் பண்ண ஹெல்பே போதும் இனிமேல் நானே போய்க்கறேன்..” என்றுவிட்டு தன் நடையின் வேகத்தை மேலும் கூட்டினாள்.
"அபி விளையாடாதீங்க, இந்த நடுராத்திரில எப்படி போவீங்க? பேசாம வந்து வண்டில ஏறுங்க இனிமேல் நான் பிரேக்கே போடமாட்டேன் ,பத்து கிலோ மீட்டர் ஸ்பீட் கு மேல ஓட்ட மாட்டேன்.. ப்ராமிஸ்..” என்றான் மன்றாடும் குரலில்,
அவள் அதற்கும் சமாதானம் ஆவதாக தெரியவில்லை
ஒருமுறை சொன்னா புரியாது..? உங்க உதவி தேவை இல்லை, ஜஸ்ட் லீவ் மீ அலோன்,,” என்று படபடத்துவிட்டு, மீண்டும் வேகமாக நடக்க தொடங்கினாள்.
இப்போது அருணுக்கு ஆத்திரம் வந்தது ,
"ஒரு மனுஷன் எவ்ளோ தூரம் கெஞ்சுறது? ஆனாலும் இவ்ளோ திமிரு ஆகாது, எப்படியோ போய் தொலையட்டும் இவளுக்கு பட்டாதான் புத்திவரும்..” என்று கோபமாக நினைத்து விட்டு வண்டியின் வேகத்தை கூட்டி முழுவேகத்துடன் அவளை கடந்து சென்றான்.
அபியின் உள்ளுக்குள் எரிந்த கோபக்கனல் உந்தித்தள்ள அவள் வேக நடையுடன் மூச்சு வாங்க நடந்தாள் ,அருணின் பைக் வெளிச்சம் தூரத்தில் தேய்ந்து மறையும் வரையிலும் அவளது வேகம் சிறிதும் குறையவில்லை ,ஆனால் அந்த சிறு வெளிச்சமும் மறைந்த பின்னர்தான் தன் சுற்றுப்புறத்தை கவனிக்க தோன்றியது …அது புதிதாக வளர்ந்து வரும் புறநகர் பகுதி..அவ்வளவாக ஆள் நடமாட்டமோ வாகன போக்குவரத்தோ இல்லை, பேருக்கு இருந்த தெருவிளக்கும் முணுக் முணுக் என்று இப்போதோ அப்போதோ என்று அரைகுறை ஆயுளுடன் எரிந்து கொண்டிருந்தது ,பாதி கட்டுமானத்தில் முடிக்கப்படாத பெரிய அடுக்குமாடி கட்டிடங்கள் அந்த இருட்டில் அச்சுறுத்தும் கருப்பு பூதங்களாக காட்சியளித்தது, சாலையின் இருபுறமும் மண்டிக்கிடந்த புதர்கள்,ஏதோ அமானுஷ்யத்தை தன்னுள் ஒளித்து வைத்திருப்பது போன்ற பிரமையை தந்தது ,எங்கோ தூரத்தில் கேட்ட தெரு நாயின் ஓலம், இதயத்தை பதைக்க செய்தது ,அருகில் இருந்த செடி காற்றில் அசைவது கூட இதயத்துடிப்பை கூட்டியது… பாழடைந்தஒரு பழைய கட்டிடத்தை கடக்கும் போது,உலகில் தேவையில்லாத எண்ணங்கள் அனைத்தும் தோன்றி அவள் நெஞ்சுரத்தை அசைத்து பார்த்தது …
மனிதமனம் ஒளியின் வேகத்தையும் விஞ்சும் வல்லமை உடையது என்று கூறுவதை மெய்ப்பிப்பதை போல அபியின் மனம் கட்டுக்கடங்காமல் தறி கெட்டு ஓடியது…காண்பவை அனைத்தும் அச்சுறுத்துவதாகவே இருந்தது.
திடுமென தனக்கு பின்னால் யாரோ வரும் அரவம் உணர்ந்து அவளது இதயம் ஒருகணம் நின்று மறுகணம் வேகமாக துடித்தது.. பதற்றத்துடன் திரும்பி பார்த்தால், ஒரு தெருநாய்,அவளை வினோதமாக பார்த்துவிட்டு கடந்து சென்றது , நிம்மதி பெருமூச்சுவிடும் போதே மனம் சோர்ந்தது, "இன்னும் எவ்ளோ தூரம் இப்படி பயந்துகிட்டே போறது? அவன் அவ்ளோ தூரம் கெஞ்சினான், என்னோட திமிரு பெரிய வீராங்கனை மாதிரி பேசி அனுப்பிட்டேன், இப்போ இப்படி வந்து மாட்டிகிட்டேன்.. " என்று தன்னை தானே நொந்து கொண்டாள்.
வீடுபோய்சேரும் தூரம் ஏதோ நீண்ட வழி நெடும்பயணம் போல் மலையாய் மருட்ட… தானாக கண்ணீர் முட்டி கொண்டு வந்ததது…அழுதுவிட போகிறோம் என்று அவள் எண்ணிய அதே சமயம்..சாலையில் அவளுக்கு பின்னால் ஒரு சிறு வெளிச்சமும் ஏதோ பைக் வரும் ஓசையும் கேட்க மீண்டும் பயம் பற்றிக்கொண்டது.
“ஒருவேளை யாராவது திருடனாக இருந்தால்? எதுக்கும் அருணை கூப்பிடலாமா? எப்படியும் ரொம்ப தூரம் போய் இருக்க மாட்டான்.. வேணாம் அவன் கேட்டப்போ ஜம்பமா பேசிட்டு இப்போ கால் பண்ணா ரொம்ப இழப்பமாக நினைப்பான்..” என்று அவளது ஈகோ தடுத்தது.
அவள் சாலை ஓரமாக தள்ளி அந்த பைக்கிற்கு வழிவிட்டு மெதுவாக நடந்தாள், ஆனால் அவளை கடந்து செல்வதற்கு பதிலாக அந்த பைக்கின் வேகமும் குறைந்தது போல்தோன்றியது, அபி மேலும் அதிர்ந்தாள் ,தன் நடையின் வேகத்தை அதிகரித்தாள், இப்போது பைக்கின்வேகமும் கூடுவாதாக தெரிந்தது ,
அந்த பைக்கில் வருபவன் தன்னை பின்தொடர்கிறான் என்று தெளிவாக புரிய ,இதயம் தடதடக்க முதுகுத்தண்டில் சில்லிட்டது… அதற்கு மேல் ஒருகணமும் யோசியாமல் தன் முழுவேகத்துடன் ஓடத்தொடங்கினாள்..
பைக்கும் அவளை விரட்டியது.. சிறிது நேரத்திலேயே அபியின் கால்கள் சோர்ந்தன, தொண்டை வறண்டு ,கண்கள் இருட்டி விழப்போகிறோம் என்று அவள் உணர்ந்த கணத்தில் அந்த பைக் வேகமெடுத்து அவன் முன்னாள் வந்து வழி மறுப்பது போல்நின்றது ,
அபி வேகமூச்சுடன் அந்த பைக்காரனை விழி உயர்த்தி பார்த்தாள். ஹெல்மெட்டை கழற்றி விட்டு அருண் அவளை பார்த்து சிரித்து கொண்டிருந்தான்..
அபியின் கண்கள் அதிர்ச்சியில் விரிந்தன..
அவ்வளவு நேரமும் அவள் அனுபவித்த தவிப்பு, பதைப்பு ,அச்சம் எல்லாம் இப்போது கோபமும் கொதிப்புமாக உருமாறியது ,
"இவ்ளோ பயம் இருக்குல்ல..அப்புறம் எதுக்கு நடிக்கணும்?” என்று
அவளது நிலையை கண்டு அருண் மேலும் நகைக்கவும் ,
அபி ஆத்திரத்துடன் நிமிர்ந்து "டேய் ,சிரிக்காதடா ,உனக்கு அறிவு இருக்கா? இப்படி யாராவது பண்ணுவாங்களா?” என்று கத்தினாள்.
"டேய் யா?”என்று அதிர்ந்து விழித்தான் அருண், “கொஞ்சம் ஓவரா தான் போயிட்டமோ ..?” என்று கவலை அடைந்தான்.
அவள் அவனை மேலும் முறைக்கவும்
"ஓகே சாரி.. வா போலாம்.. " என்றான் தணிந்த குரலில்.
மறுவார்த்தை பேசாமல் பைக்கில் அமர்ந்தாள் அபி.
அவளுடைய அதிர்ந்த நிலையினில் அருண் அவளை ஒருமையில் அழைத்ததை கூட அவள் உணரவில்லை.
அவளின் சில்லிட்ட கரங்கள் அழுத்தத்துடன் தன் தோள்களில் பதிந்த போது அவளின் அச்சத்தை உணர்ந்தவன் ,குற்றவுணர்வில் கண் மூடி திறந்தான் ,இப்படி முட்டாள்தனமாக அவளிடம் விளையாடியதற்காக தன்னையே உள்ளுக்குள் திட்டிக்கொண்டான்..
மீதி பயணம் மௌனமாக கடந்தது… இருவரும் தங்கள் பிளாட் கதவின் அருகில் வரும் வரை இருவரும் பேசிக்கொள்ளவில்லை, அருண் கடைசியாக அபியின் முகத்தை யோசனையாக பார்த்துவிட்டு தன் வீட்டு பக்கம் திரும்பும்போது… அபியின் குரல் அவனைத் தேக்கியது
“அருண்…”
அவன் கேள்வியாக அவளை பார்க்க
"குட் நைட்… " என்றாள் கம்மிய குரலில்..
அவன் புருவங்கள் உச்சிவரை உயர்ந்தது, அவர்களின் வினோத உறவில் இப்படியான சம்பிரதாய வார்த்தைகளுக்கு அதுவரை இடமிருந்ததில்லை.
அவனது ஆச்சரியத்தை உணர்ந்தவள், "ரொம்ப தேங்க்ஸ்,அருண்”
அபி அவனை நேராக பார்ப்பதைத் தவிர்த்து எங்கோ பார்த்துக்கொண்டு தடுமாறுவதை கண்டவன், அவளின் சங்கடத்தை குறைக்க எண்ணி
"நான் எப்படி அந்த நேரத்துக்கு ஆபீஸ்க்கு வந்தேன்னு நீங்க கேக்கவே இல்லையே?” என்று கேட்டான்.
அதன் பிறகுதான் இந்த முக்கியமான விஷயத்தை கேட்க மறந்தது உரைத்தது "ஆமா அவன் எப்படி அந்த லேட் டைம்ல ஆபீஸ்க்கு வந்தான்? அவள் குழப்பத்துடன் அவனை பார்க்கவும், அருண், பூர்ணா மூலம் அபிக்கு லேட் நைட் வேலை இருப்பதை அறிந்ததை சொன்னான்.
“ஆனா எதுக்காக நீங்க வெயிட் பண்ணீங்க?” என்று ஆச்சர்யத்தில் விழிமலர கேட்டாள்.
"தெரியல, சும்மா… தோணிச்சி…” என்று தோளை குலுக்கினான்.
அபிக்கு எல்லாமே வெட்ட வெளிச்சமாக புரிந்தது, அருண் எல்லாமே அவளுக்குகாக, அவளது பாதுகாப்பிற்காக செய்திருக்கிறான்…
“ச்ச.. அவன் எனக்கு நல்லதுக்கு எல்லாம் பண்ணி இருக்கான். அதை புரிஞ்சிக்காம அவன் மேலையே எப்படி பழிபோட்டுடேன், அது மட்டும் இல்லாம பார்த்த முதல் நாள்ல இருந்து அவனை தப்பா தான் நினைச்சிருக்கேன்..” என்று அவன் மேல் அதுவரை கொண்டிருந்த மோசமான அபிப்பிராயத்திற்காக மனம் வருந்தி கழிவிரக்கம் கொண்டாள்.
இவ்ளோ மோசமா நடந்துக்கிட்டதுக்கு அப்புறம் எப்படி அவன் கிட்ட சாரி கேக்குறது என்று அவன் தயங்கவும்
எதையோ சொல்ல முடியாமல் தவிக்கும் அவளது நிலையை சரியாக யூகித்து,
" இன்னும் ஏதோ மிச்சம் மீதி இருக்கறது போல தெரியுதே…” என்றான் விளையாட்டாக
"வந்து.. சாரி ..” என்றாள் கம்மிய குரலில்.
"எதுக்கு சாரி? நீங்க கோபமா பேசினதுக்கா? நெவெர் மைண்ட்” என்று பல் வரிசை தெரிய அழகாக சிரித்தான்.
“அதுக்கு இல்லை… முதல்ல இருந்தே உங்களை தப்பா நெனைச்சதுக்காக..” என்று அவள் உண்மையான வருத்தத்துடன் பேசவும்,
“என்ன தப்பா நினைச்சீங்க..?”என்று தெரியாதவன் போல் கேட்டு,யாதோ யோசிப்பவன் போல் பாவனை செய்து விட்டு ,"ஓஹ்.. என்னை ஒரு ஜொள்ளு பார்ட்டினு நீனைச்சீங்களே அதுக்கு தானே இந்த சாரி?”என்று கேட்க… அபி அதை ஆமோதிப்பவள் போல் மவுனமாக இருந்தாள்
"அதுல ஒன்னும் தப்பு இல்லை அபி… நான் கொஞ்சம் ஜொள்ளு தான்.. பட் நீங்க கவலை படாதீங்க, நான் அழகான பொண்ணுங்கள பார்த்து தான் ஜொள்ளுவேன்… சோ உங்களுக்கு ஒரு ப்ராபளமும் வராது " என்றான் சிரிப்பை உள்ளடக்கி சீரியஸ் குரலில்..
அவனது கேலியை உணரவே அபிக்கு சிறிது நேரம் பிடித்தது ,உணர்ந்த மறுகணம் ஆத்திரத்தில் முகம் சிவந்தது… அருண் அவள் கோபத்தில் அடிப்பதற்குள் தன் வீட்டுக்குள் போய் மறைந்தான் ,
அபி உள்ளுக்குள் புகைந்து கொண்டே வீட்டிற்குள் சென்றாள்..
"கொரங்கு ,நாயி ,பேய் இவன் திருந்தவே மாட்டான்… நான் அழகா இல்லையாம்…” என்று எரிச்சலுடன் உதட்டை சுளித்தாள்.
ஆளுயர ட்ரெஸ்ஸிங் டேபிள் கண்ணாடி முன் நின்று அதில் தெரிந்த தன் உருவத்தை பார்த்தாள்.
கசங்கிய உடை.. நலுங்கிய தோற்றம்… களைந்த கூந்தல்.. ஜீவனில்லாத முகம் என்று ஏதோ பஞ்சத்தில் அடிபட்டவள் போல் காட்சியளித்தாள்.
"இப்படி இருந்தா அவன் அப்படி தான் சொல்லுவான் "என்று மனம் சோர்ந்தது.
என்னை ஏன் அவனுக்கு பிடிக்கலை?” என்று குறைப்பட்டாள்.
ஆனால் அவனக்கு ஏன் தன்னை பிடித்திருக்க வேண்டும் என்று யோசிக்க மறந்தாள்.
அதே நேரம் அருண் அவனது பிளாட்டில் வாய்விட்டு சிரித்து கொண்டிருந்தான் …
"நான் அப்படி சொன்னதும் அவ முகத்தை பார்க்கணுமே… இட் வாஸ் ப்ரைஸ்லெஸ்"
அன்றைய நினைவுகளை அசைபோடுகையில் அந்த விவேக்கை நினைத்து அவனது ரத்தம் கொதித்தது..
"நான் ஏன் அபியோட சேப்டில அவ்ளோ அக்கறையா இருந்தேன்.. இது வெறும் மனிதாபிமானமா இல்லை அதுக்கும் மேலையா?”
அருணால் தான் அபியை நேசிக்கிறோமா என்பதை உறுதியாக கூற முடியவில்லை ஆனால் அதற்கான பாதையில் சரியா பயணித்துக் கொண்டிருக்கிறான் என்பதில் மட்டும் அவனுக்கு சந்தேகமே இல்லை..
“இப்படியே போனா நான் அவளை லவ் பண்ணிடுவேன் போல இருக்கே..”என்று நினைத்துக்கொண்டே மென்னகையுடன் நித்திரையில் ஆழ்ந்தான்..

தொடரும்
 
Top