Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

நீதானே என் பொன் வசந்தன்-அத்தியாயம் 9

Advertisement

Kalarani Bhaskar

Well-known member
Member
நீதானே என் பொன் வசந்தன்
அத்தியாயம் 9

அந்த வாரம் சட்டென்று கடந்து விட அன்று வெள்ளிக்கிழமை மாலை,அபி தீவிரமாக வேலை செய்துகொண்டிருக்க, திடீரென்று பக்கவாட்டிலிருந்து விக்கியின் கண்டன குரல் கேட்டது…
"அபி என்ன இது? நீங்க பண்றது கொஞ்சம் கூட நல்லா இல்லை..”

அவனை கேள்வியாக நோக்கி "என்ன விக்கி நான் என்ன பண்ணினேன்? என்றாள்.

“இன்னிக்கு என்ன டே? ஃப்ரைடே… ஃப்ரைடே அதுவுமா ஆறு மணிக்கு மேல வேலை செய்யறீங்க தெய்வகுத்தம் ஆகிடும் அபி.. இது சாப்ட்வேர் ப்ரொபஷன்னுக்கே அவமானம், உடனே சிஸ்டம ஷட்டௌன் பண்ணிட்டு கிளம்புங்க…” என்று நாடகபாணியில் கட்டளையிட்டான்.

அபி அவனது பாவனையில் சிரித்துக் கொண்டே,"எங்க கெளம்பனும்? “ என்று கேட்டாள்.
“மொதல்ல நீங்க சிஸ்டம ஆப் பண்ணுங்க, நாம டின்னர் அவுட்டிங் போறோம்..” என்றான் உற்சாகம் பொங்க,

"விக்கி…!!” என்று அவள் அதிர்ச்சியில் கண்களை விரித்து முறைக்கவும்.

"ஐயோ ஏங்க, நாமன்னா.. நாம ரெண்டு பேருமட்டும் இல்லை, நம்ம டீம்ல எல்லாருமே போறோம்ன்னு சொல்ல வந்தேன்..” என்று அவசரமாக தெளிவுபடுத்தவும், அபி கோபம் நீங்கி ஆசுவாச பெருமூச்செறிந்தாள், இருப்பினும் "சாரி விக்கி நான் வரலை.. "என்றாள் மன்னிப்பு கோரும் தொணியில்,

"அதெல்லாம் நீங்க எக்ஸ்கியூஸ் சொல்லி தப்பிக்கவே முடியாது நைட் எவ்ளோ நேரம் ஆனாலும் உங்களை கூட்டிட்டு போறதுக்கு கைவசம் ஆள் ரெடியா இருக்கு, சோ நோ மோர் எக்ஸ்கியூஸ்சஸ் ஆர் அலௌட் திஸ் டைம்..” என்றான் கறாராக..

அபி அப்போதும் யோசனையும் தயக்கமுமாக இருக்கும் போது..

“என்னடா இங்க பஞ்சாயத்து?” என்று கேட்டு கொண்டே அங்கே வந்தான் அருண்.

“உன்னோட ஆளு டின்னர் அவுட்டிங்க்கு வரமாட்டேங்குறாங்க அதான் பஞ்சாயத்து..” என்று யோசியாமல் பட்டென்று பேசிவிடவே இதை சற்றும் எதிர்பாராத அபியும் அருணும் அதிர்ந்து போயினர்..

அருண் அடிக்குரலில் “டேய்..” என்று விக்கியை எச்சரிக்கவும் ,

"அதாவது உன்னோட டீம் ஆளு வராம அடம்புடிக்கறாங்கன்னு சொன்னேன்" என்று மழுப்பலாக சிரித்து சமாளித்தான் விக்கி,

“சரி நான் பார்த்துக்கறேன் நீ கெளம்பு..” என்று விக்கியின் காதில் கிசுகிசுத்தான் அருண்.

“சரி நீ கடலை போடாம சீக்கிரம் வந்து சேரு…”என்று பதிலுக்கு நக்கலடித்துவிட்டு சென்றான் விக்கி..

“ஏன் அபி? என்ன ப்ராப்ளம்..? இதை பெர்சனல்ன்னு எடுத்துக்க வேண்டாம்.. ஃபார்மலா டீமோட ஒரு டின்னர் பார்ட்டி போறோம் அவ்ளோதானே..”

"அது வந்து…”
என்று அவள் மேலும் தயங்கவும்,

“என்ன அபி.. டீம்ல எல்லாரும் போகும் போது நீ மட்டும் வரலைன்னா நல்லா இருக்காது ,மோர் ஓவர் இது வெறும் டின்னர் பார்ட்டி இல்லை,கயிண்ட் ஆப் டீம் பாண்டிங் டெக்னிக் , இப்படி ஒண்ணா போனா நமக்குள்ள ஒரு நல்ல டீம் பாண்டிங் உருவாகும் அது தான் மெயின் ரீசன்,போதுமா?” என்று பொறுமையாக விளக்கினான்…

“நைட் பார்ட்டினா எப்படி இருக்கும், யாருலாம் வருவாங்க ??” என்று கண்களில் கவலையுடன் குரல் எழும்பாமல் கியூட்டாக அவள் கேட்ட விதத்தில் அவனுக்கு அவளை வாரி அணைத்துக்கொள்ள வேண்டும் போல் இருந்தது, நொடியில் அந்த எண்ணத்தை ஒதுக்கிவிட்டு, முயன்று வரவழைத்த சாதாரணமான குரலில்,

“இதான் உன் பிரச்சனையா....? யாரு வந்தா என்ன? அதான் நான் இருக்கேன்ல அப்புறம் என்ன கவலை?” என்று கேட்கவும்.

ஆச்சர்யத்தில் விழி மலர அவனை பார்த்தாள், அதுவரை மலையாய் மருட்டி கொண்டிருந்த பிரச்சனை அவனது ஒரு சொல்லில் பனியாய் காற்றில் கரைந்து மனதில் ஒரு நிம்மதி பரவுவதை பரவசமுடன் உணர்ந்தாள்.. இரவு பார்ட்டிக்கு சென்று பழக்கமில்லாததால் அங்கே எப்படி போவது என்று தயங்கி கொண்டிருந்தவளுக்கு, அவளது முணுமுணுக்கும் மூளையை சமாதானப்படுத்த அவனது ஒரு சொல் போதுமானதாக இருந்தது.. வெகு சாதாரணமாக கூறியது போல் தோன்றினாலும் அவன் ஒவ்வொரு வார்த்தையையும் அடி மனதிலிருந்து உணர்ந்து கூறியது அபியை மெய் சிலிர்க்க வைத்தது.
மந்திரத்திற்கு கட்டுண்ட மானை போல் மறு வார்த்தையின்றி தன் கால்கள் அவனை பின்தொடர்வதை ஆச்சரியமுடன் உணர்ந்தாள்,

"யாரிவன்…? இவனின் ஒரு வார்த்தை எப்படி என்னுடைய மனசஞ்சலங்களை நொடியில் தீர்க்கிறது? இவன் உடன் வருகிறான் என்றதும் ஏன் இப்படி பாதுகாப்பாக உணர்கிறேன்,விக்கியிடம் முடியாது என்று கூறிய திடம் இவனிடம் ஏன் வரமறுக்கிறது..?” ஏதோ கண்ணுக்கு தெரியாத மந்திரஜாலத்தில் அவன் தன்னை கட்டி போடுவதுபோல உணர்ந்தாள்.

...................……...…….


பார்க்கிங் பகுதியில் விக்கி அவனுடைய காரின் டிரைவர் இருக்கையில் அமர்ந்திருக்க பக்கத்து சீட்டை பூர்ணா ஆக்ரமித்திருந்தாள். அன்று அவர்கள் டீம்மேட் ஜோதி ஆபீஸ் வராததால், மற்றுமொரு டீம்மேட் ஆனா ஜானகி மட்டும் பின்னிருக்கையில் அமர்ந்திருந்தாள். அருண் தன் பைக்கில் அமர்ந்து ஸ்டார்ட் செய்யாமல் காத்திருந்தான், அபி கண்களில் குறும்பு மின்ன அவனை கடந்து போய் விக்கியின் காரில் ஜானகியின் பக்கத்தில் அமர்ந்து கொண்டு அருணின் முகத்தில் நொடியில்தோன்றி மறைந்த ஏமாற்றத்தை ரசித்தாள். அவன் எரிச்சலுடன் அவளை உறுத்துவிழிக்க, அவள் பார்வையில் சவாலுடன் அதை எதிர் கொண்டாள்..சூழ இருப்போர் அறியாமல் அவர்களுக்கிடையேயான அந்த ரகசிய போட்டி இருவருக்கும் இனம் புரியாத குதூகத்தை உண்டாக்கியது, அவர்களின் இந்த ரகசிய பரிபாஷையில் அபஸ்வரமாக நித்யாவின் குரல் ஒலித்தது
"அருண் , நான் உன்கூட பைக்ல வரட்டுமா?”என்று அவனிடம் குழைந்து கொண்டிருந்தாள்,
அதிர்ச்சியில் அபியின் விழிகள் பெரிதாக விரிந்தது, இப்படி ஒரு திருப்பம் நேரும் என்று அவள் சற்றும் எதிர்பார்க்கவில்லை ,அந்த நித்தி, அருணுடன் பைக்கில் செல்கிறாள் என்று எண்ணும் போதே அவளுக்கு கசந்தது ,
அவள் முகம் போன போக்கை பார்த்து அருண் கண்களால் சிரித்தான்,இப்போது சவால் விடும் பார்வை அவனது முறையானது.
கடைக்கண் பார்வையை அபியிடம் நிறுத்தி ,
"கண்டிப்பா கூட்டிட்டு போறேன் நித்தி…” எனவும்,அபி திகைத்து போய் முகம் சிணுங்கினாள்.

அருண் பொங்கிவந்த சிரிப்பை அடக்கி கொண்டு ,முகத்தை சோகமாக வைத்து கொண்டு
“ஆனால் அதுல ஒரு சின்ன பிரச்சனை…” என்று இழுக்கவும்

“என்ன பிரச்சனை அருண்…? உன்னோட கூட வர்ரதுக்கு எந்த பிரச்சனையா இருந்தாலும் அட்ஜஸ்ட் பண்ணிப்பேன்.” என்றாள்

“அது ஒன்னும் இல்லை நான் ஆல்ரெடி பத்ரீய கூட்டிட்டு போறதா கமிட் பண்ணிட்டேன், உனக்கு பைக்ல ட்ரிப்பிள்ஸ் அடிக்க ஓக்கேனா போலாம்..”
என்றான்…

அதை கேட்டு வாயடைத்து போன நித்தி ,கோபமாக காலை தரையில் உதைத்து விட்டு விக்கியின் காரில்போய் அமர்ந்து கதவை டொமென்று சாத்தினாள்..
அபியின் கண்கள் சிரிப்பை அடக்க முடியாமல் தவிப்புடன் இங்கும் அங்கும் அலைபாயும் போது ,அருணின் குறும்பு மின்னும் கண்களாலுடன் கலந்தது,ஒரு கணம் அபிக்கு உலகமே மறந்து ,இரும்பினால் ஈர்க்கப்பட்ட காந்தம் போல் கண்களை எங்கும் நகர்த்தமுடியவில்லை, அந்த மந்திர கட்டை அறுப்பது போல் பத்ரீயின் குரல் நாராசமாக உரத்து ஒலித்தது..
“அண்ணே போலாம்ணே ..” என்று அவன் பைக்கின் பின்புறம் அமர்ந்த அதிர்வில், அருண் ஒரு நொடி தடுமாறி பின் சமாளித்து வண்டியை கிளப்பினான்.


டின்னர் பார்ட்டி ஒரு பீச் ரெசார்ட்டில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது, பரந்த மணல் பரப்பில் சிறு சிறு குடில்கள் போன்ற அமைப்பிற்கு கீழ், மேசைகள் போடப்பட்டிருந்தன,வர்ண ஜாலம் காட்டும் ஒளியமைப்பு, அலங்கரிக்க பட்ட மேடை ,ஏதோ ஒரு இனிமையான மேற்கத்திய பாடல் ஒலிக்க ,அதற்கு பின்னணி வாசிப்பது போல் தூரத்தில் கடல் அலைகள் சப்தமிட்டு கொண்டிருக்க…அந்த இடமே ஏதோ தேவலோகம் போல் ரம்மியமாக இருந்தது..
எல்லோரும் அந்த இடத்தின் அழகில் லயித்திருக்க, அபி வங்கக்கடலின் பிரம்மாண்டத்தில் தன்னை தொலைத்தவளாக மெய் மறந்து ரசித்து பார்த்துக் கொண்டிருந்தாள். அருண் அவளருகில் வந்து "ஹவ் டூ யூ லைக் திஸ் பிளேஸ்?” என்றான்..

அவனை திரும்பியும் பாராமல் "பியூட்டிஃபுல்..” என்றாள் கடலின் மீதே பார்வையை பதித்தபடி..

அவனின் பார்வையோ அவளிடமே நிலைத்திருந்தது, எப்போதும் முகத்திலிருக்கும் இறுக்கம் தளர்ந்து.. இதழ்களில் சிரிப்புடன், கண்கள் மின்ன நின்ற அபியின் முகம் அப்படியே அவன் மனதில் பதிந்தது..

முதலில் அனைவரும் கடற்கரையில் அலைகளுடன் நடந்தனர் ,சிலர் அலைகளில் விளையாட, சிலர் வித்தியாசமான சிப்பிகள் சங்குகளை சேகரித்தனர், வேலை, ப்ராஜெக்ட் ,டெட்லைன் என்ற கவலை இல்லாமல் சீனியர் ஜூனியர் பாகுபாடை மறந்து ஒருவரை ஒருவர் சீண்டியும், கிண்டலடித்து நன்றாக கொட்டமடித்தனர்…பின்னர் பஃபே முறையில் ஏற்பாடுசெய்யப்பட்ட உணவை ருசித்து மகிழ்ந்தனர்…

கடைசியாக அருண் கைகளில் இரு கப் ஐஸ்கிரீமுடன் தங்கள் டேபிளை நோக்கி வருவதை பார்த்த அபி அவன் தனக்காகதான் எடுத்துவருகிறான் என்ற களிப்பில், அவன் அருகில் வந்தவுடன் ஒரு கையை அனிச்சையாக உயர்த்த, அவன் அவளை சிறிதும் கண்டுகொள்ளாமல் கடந்து சென்று அவளை அடுத்து அமர்ந்திருந்த நித்திக்கு கொடுத்தான், அவமான பட்ட உணர்வில் அபி சட்டென்று கையை உள்ளிழுத்துக்கொண்டாள்.. அருணும், நித்தியும் ஐஸ்கிரீமை ரசித்து சுவைப்பதை பார்த்து மனதிற்குள் குமைந்தாள், எதிலோ தோற்றுவிட்டது போன்ற உணர்வில்அவளுக்கு தொண்டை அடைத்தது…
“ஹே அபி.. நீ ஐஸ்கிரீம் சாப்பிடலையா..?” என்ற பூர்ணாவிடம் "எனக்கு தொண்டை சரி இல்லை..”என்று பொய் உரைத்தாள்.
‘பின்னே அவளிடம் சொல்லவா முடியும்? அருண் தனக்கு கொடுக்காமல் நித்திக்கு கொடுத்துவிட்ட கோபத்தில் சாப்பிடவில்லை’ என்று..

அப்போது விக்கி "கம் ஆன் கைஸ் லெட்ஸ் ராக் தி டான்ஸ் ஃப்ளோர்” என்று அனைவரையும் நடனமாட அழைத்தான்.

எல்லோரும் குதித்துக்கொண்டு எழுந்து செல்ல அபி மட்டும் இடத்தைவிட்டு அசையவில்லை.. நடன மேடையில் “சும்மா கிழி” என்று அனைவரும் தங்கள் தயக்கம் கூச்சம் மறந்து செமையாக குத்தாட்டம் போட்டு கொண்டிருக்க அதை முகத்தில் புன்னகையுடன் பார்த்து ரசித்து கொண்டிருந்தாள் அபி..

பத்ரீ,ஜானகியுடன் ஏனோ தானோ வென்று இஷ்டத்திற்கு ஆட.. விக்கி பூர்ணாவை சுற்றி சுற்றி ஆடி அவளுக்கு சிரிப்பு மூட்டி கொண்டிருந்தான்.. இந்த காட்சிகளை முகத்தில் சிறு புன்னகையுடன் கடந்தவள், மறுபுறம் அருண் நித்தியுடன் சிரித்துக்கொண்டே ஆடுவதை கண்டு ஒருகணம் இதயம் வலிக்க சட்டென்று கண்கள் குளமாகின… அந்த காட்சியை பார்க்க முடியாமல் முகத்தை வேறுபுறமாக திருப்பிக்கொண்டாள்.. வேறு புறமாக திரும்பினாலும் அருண் அந்த நித்தியுடன் நடனமாடும் காட்சி மனத்திரையில் விரிந்து அவளை வதைத்தது, “இது எந்த மாதிரியான உணர்வு? எனக்கு ஏன் கஷ்டமாக இருக்கிறது..” என்று குழம்பிப்போனாள்..
அது என்னவாக இருந்தாலும் அவன் நித்தியுடன் நெருக்கமாக இருப்பதை அவளால் ஏற்று கொள்ளவே முடியவில்லை, அவன் எப்படி அவளுடன் ஆடலாம் என்று மனம் கொதித்தது, இப்படி அவள் மனதில் குழம்பி கலங்கி கொண்டிருக்கையில்..

பாடல் நின்று விட, மேடையில் அறிவிப்பாளர் ,ஜோடியாக நடனமாடும் நேரம் என்று அறிவிக்க, ஒரு ரொமான்டிக் மெலடி பாடல் பின்னணியில் பாட தொடங்கியது..கூட்டமாக ஆடியவர்கள் மேடையிலிருந்து இறங்கிவிட.. சில ஜோடிகள் மட்டும் பாடலுக்கு ஏற்றவாறு மெதுவாக நடனமாடினர்..
அருண் அபியிடம் வந்து அவளை நடனமாட அழைத்தான், ஆனால் அவள் மறுத்தாள்

"வா அபி ஜாலியா இருக்கும்..”

"இல்லை அருண்.. எனக்கு ஆட தெரியாது..”
அவளுக்கு அவன் நித்தியுடன் ஆடிய காட்சி கண்முன்னே நின்றது..
‘இல்லை இந்த முறை இவன் எவ்வளவு கெஞ்சினாலும், இவனுடைய விருப்பத்திற்கு வளைய கூடாது..” என்று மனதில் உறுதிபூண்டாள்.

“எனக்கும் தான் ஆட தெரியாது, சும்மா ஃபன்காக ஆடுவேன், நல்லா மைண்ட் ரிலாக்ஸ் ஆகும் தெரியுமா?”

"எனக்கு இங்க இருக்கிறதே ரிலாக்சிங்ஆ தான் இருக்கு
..” என்றாள் பிடிவாதமாக அசைய மறுத்து,

"நோ வே, நீ என்கூட டான்ஸ் ஆடாம உன்னை விட போறதில்லை..” என்று அவள் கையை பற்றி அவளை கிட்ட தட்ட மேடைக்கு இழுத்து சென்றான்.
வெளியே தெரியாதபடி அவளும் கையை விடுவித்துகொள்ள எவ்வளவோ முயன்றும் முடியவில்லை, அவன் பிடி இரும்பாக இருந்தது..

மிகவும் உணர்ச்சிபூர்வமான காதல் பாடல் ஒலித்து கொண்டிருந்தது, சுற்றியும் ஜோடிகள் மெய்மறந்து , இசையில் லயித்து ,அவரவர் உலகில் சஞ்சரித்துக்கொண்டிருந்தனர் ..
அபியை இழுத்துவந்து மேடையில் நிறுத்தினான் அருண், அவள் சிலை போல அசையாமல் நின்றபடி தன்னுடைய விருப்பமின்மையை தெளிவாக காட்டினாள்.

அருண் , அவளுடைய ஒரு கையை எடுத்து தன் தோள் மீது வைத்து, மறுகையை தன்வலக்கரத்தில் பற்றிக்கொண்டு, இடக்கையினால் அவள் இடையை சுற்றிவளைத்து லேசாக பற்றி கொண்டு இசைக்கு ஏற்றவாறு நடனமாட தொடங்கினான். அபி திகைத்துபோய் அவனை பார்க்க, உதட்டோரம் ஒரு சிறு நகையுடன் அவளை இன்னும் அருகிழுத்தான் இருவர் உடலும் பட்டும் படாமல் ஒரு நூலிழை அளவே இடைவெளி இருந்தது..

“என்ன பண்ற அருண்?” என்றாள் கோபமாக

"டான்ஸ்.." என்றான் அழகாக சிரித்தபடி

அவள் அவனை விட்டுவிலக முயல அவன் ஒரே கையிழுப்பில் அவளை மீண்டும் தன்வசப்படுத்தினான்.. இப்பொழுது அவள் முதுகுப்புறம் அவனது மார்பில் ஒட்டிக்கொண்டது, அவளை பின்னாலிருந்து லேசாக அணைத்தவாறு, குனிந்து தன் மோவாயை அவளது தோளின் மேல் வைத்தான், அவளது மதிமயக்கும் வாசனையை நுகர்ந்து தன் நாசியில் நிறைத்தான், அவன் மூச்சு காற்று தன் வெற்று தோள்மீதுபட்டதும் அபியின் உயிர் வரை சிலிர்த்தது, அந்த அதிர்வலையை கட்டுப்படுத்திக்கொண்டு அவள் கோபமாக ஏதோ சொல்ல எண்ணி அவன் புறமாக திரும்ப, அவளது இதழ்கள் அவன் கன்னத்தை லேசாக உரசியதில் அருண் உடலில் மின்சாரம் பாய்ந்தது போல உறைந்தான். அவளது அருகாமை, போதை தரும் அவளது மணம், அந்த பாடல், சூழல் எல்லாம் அவனை பித்தம் கொள்ள செய்தது..

"அருண் என்ன இது, என்னை விடு..”

கோபமாக ஒலிக்கவேண்டிய அபியுடைய குரல் அவளுக்கே கிசுகிசுப்பாகத்தான் கேட்டது… அவனுடைய தொடுகையில் தன்னிலை இழப்பதை உணர்ந்த அபி, பொதுவெளியில் ரசாபாசம் ஆகிவிடக்கூடாதென்று பிறர் அறியாமல் அவன் பிடியிலிருந்து தன்னை விடுவித்துக்கொள்ள முயன்றாள்.ஆனால் அவன் அவளை மேலும் தன்னுடன் இறுகப்பற்றி அணைத்தபடி,

“ரொமான்டிக் டான்ஸ்னா இப்படி தான் இருக்கனும், நீ டிவில டான்ஸ் ப்ரோக்ராம்லாம் பார்த்ததில்லை?” என்று அவள் காதருகில் கிசுகிசுத்தான் அவன் மூச்சுக்காற்று பட்ட இடமெல்லாம் தீப்பற்றியெரிய அபி ஒருகணம் கிறங்கி போனாள்..

அந்த அதிர்வலையிலிருந்து அவள் மீளும் முன்பே திடீரென்று அவளை விடுவித்து.. ஒரு சுற்று சுற்றி திரும்ப தன் கையணைப்பில் சுண்டி இழுத்து சிறைபிடித்தான்..

இருவர் முகங்களும் மிக அருகில் முத்தமிடும் தொலைவில் இருக்க, அவளது அழகென்னும் மாய வலையில் சிக்கி சிதறிப்போனான் அருண்.. தான் எங்கிருக்கிறோம் என்ன செய்கிறோம் என்பதையே மறந்து,அவளுள் கட்டுண்டான்..அபியும், அவன் கண்கள் பேசிய மந்திரமொழியில் பிணைக்கப்பட்டு உலகம் மறந்தாள், இருவரும் சுற்றுப்புறம் மறந்தனர் அவர்களுக்காக அவர்களே உருவாக்கிய ஒரு மாய உலகில் மோனநிலையில் சஞ்சரிக்க தொடங்கினர்…

“மின்வெட்டு நாளில் இங்கே மின்சாரம் போலே வந்தாயே வா வா என் வெளிச்ச பூவே வா
உயிர்தீண்டும் உயிலே வா
குளிர் நீக்கும் வெயிலே வா
அழைத்தேன் வா அன்பே
மழைமேகம் வரும் போது மயில் தொகை விரியாதோ அழைத்தேன் வா அன்பே
காதல் காதல் ஒரு ஜுரம், காலம் யாவும் அது வரும், ஆதாம் ஏவாள் தொடங்கிய கலைதொடர்கதை அடங்கிய தில்லையே “


என்று வாலியின் வரிகளில் காதல் உருகி வழிய.. அருணும் அபியும் ஆடிய நடனத்தில் மேடையில் காதல் அனல் தெறித்தது.. ஒருவழியாக பாடல் முடிவு பெற இவர்களின் நடனமும் முடிவுக்கு வந்தது, சுற்றி இருந்தவர்கள் ஆர்ப்பரித்து ஆரவாரம் செய்யும் சத்தம் அவர்கள் கட்டுண்டிருந்த மாய வலையை கூறு கூறாக கிழித்தது, இருவரது உடலும் ஒட்டிக்கொண்டிருக்க அதிகபடியான நெருக்கத்துடன் தாங்கள் நிற்கும் கோலம் புத்தியில் உரைக்க தீச்சுட்டார் போல் விலகி நின்றனர்,சுற்றிலும் பார்வையை ஓட்டிய அபி ,மேடையில் இவர்கள் இருவரும் மட்டும் தனித்திருப்பதை கண்டு திடுக்கிட்டாள் ,கூட ஆடியவர்கள் எப்போது நடனத்தை நிறுத்திவிட்டு இறங்கினார்கள் என்று தெரியவில்லை ,எல்லோர் கண்களும் தன்னையே வெறித்து நோக்குவதை போல் உணர்ந்து உடல் கூசிப்போனாள்,

"என்ன காரியம் செய்துவிட்டேன், எப்படி இப்படி கட்டுப்பாட்டை இழந்து தன்னிலை மறக்க முடிந்தது என்னால்..?” கண்கள் சட்டென்று குளமாகின. இவை அனைத்திற்க்கும் காரணகர்த்தாவான அருணின் மீது கடுங்கோபம் வந்தது ,குற்றம் சாட்டும் பார்வையால் அவனை குத்திக்கிழித்துவிட்டு அங்கிருந்து விரைந்தோடிப்போனாள்.
அருண் தான் செய்த பிழையை சீர்செய்ய வழியறியாது திகைத்து குழம்பி நின்றான் …

தொடரும்
 
Last edited:
Top