Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

நீதான் எந்தன் அந்தாதி - அத்தியாயம்-4

Advertisement

daisemaran

Well-known member
Member
"நீதான் எந்தன் அந்தாதி"

அத்தியாயம்-4

“பூமி எதையும் தன்னால் எட்டிப்பிடிக்க முடியவில்லையே என மனச்சோர்வடைந்த சின்னம்தான் மலைகள் " என்கிறார் மகாகவி ரவீந்திரநாத் தாகூர். ஆனால், அந்த மலைகளிலும், பாறைகளிலும் தங்களின் கலைத்திறனால் உயிரோட்டமுள்ள சிலைகளைச் செதுக்கி ஏராளமான இதயங்களைக் கொள்ளையடித்தவர்கள் சிற்பிகள். அதிலும் மாமல்லபுரம் சிற்பிகள் பற்றிச் சொல்லவே வேண்டாம். உலகிலேயே சிற்பக்கலைக்கென்று ஒரு நூல் வகுத்த மகேந்திரவர்ம பல்லவன் ஆட்சி செய்த மண் இது.

இன்றும், இந்தியாவின் தெற்குப்பகுதி நோக்கி உலகெங்கிலும் இருந்து மக்கள் படையெடுப்பதற்கு மாமல்லபுரம் சிற்பங்களும், அதை வடித்த சிற்பிகளுமே காரணம்.

அப்படிப்பட்ட கைதேர்ந்த சிற்பிகளில் முருகவேலும் ஒருவர். கோவில் சிலையாகட்டும் தலைவர்களின் சிலையாகட்டும் குறிப்பிட்ட நேரத்திற்குள் சிலையை நேர்த்தியாக செய்து முடித்து, சொன்ன நேரத்திற்குள் கொண்டு போய் சேர்த்தும் விடுவார். அப்படி செய்து முடிக்கப்பட்ட மூன்றடி உயர சாமி சிலையை கோவிலில் கொடுப்பதற்காக மதுரைக்கு அருகில் இருக்கும் ஒரு ஊருக்கு சென்று இருந்தார் முருகவேல்.

அந்த நேரம் பார்த்துதான் முருக வேலுவின் நண்பரான ரகுபதி, சாமி சிலைகளை கடத்திய குற்றத்திற்காக கைது செய்யப்பட்டார். அவர் மட்டும் தனியாக இதை செய்திருக்க வாய்ப்பில்லை. ஒரு குரூப்பாக தான் இந்த வேலையை செய்திருக்க வேண்டும் என்று சந்தேகப்பட்ட காவல்துறை ரகுபதியின் நெருங்கிய நண்பரான முருகவேலுவை சந்தேகத்தின் பெயரில் விசாரணை பண்ண தேடி வந்தது.

கூடா நட்பு கேடாய் முடியும் என்பார்கள். அதுபோல ரகுபதியின் நட்பால் போலீஸ் தேடி வரும் அளவிற்கு கொண்டு வந்து விட்டுவிட்டது. தன் அப்பா, ரகுபதியோடு பழகுவது வேழவேந்தனுக்கு சுத்தமாகப் பிடிக்கவில்லை. காரணம் ரகுபதி இதற்கு முன் இரண்டு மூன்று முறை அரஸ்டாகி ஜெயிலுக்குப் போய் திரும்பவும் ஜாமீனில் வெளி வந்திருக்கிறார்.

வேழவேந்தன் தன் அப்பா முருகவேலுவிடம் நேரடியாக சொல்ல தயங்கி மறைமுகமாக இரண்டொரு முறை சொல்லிப் பார்த்தான். ஆனால் அதை அவர் நம்புவதாக இல்லை. “இந்த தொழில்ல இப்படி எல்லாம் பிரச்சினைகள் வரத்தான் செய்யும். தொழில் செய்யுறவனுக்கு எதிரின்னு ஒருத்தம் இருக்கத்தான் செய்வான் எவனாவது தப்பா போட்டு கொடுத்திருப்பான்.” என்று வாதம் பண்ணினார். இவனும் மேற்கொண்டு எதுவும் பேசாமல் அத்தோடு விட்டு விடுவான்.

முருகவேல் மதுரைக்கு கிளம்பிய அன்று தான் வேழவேந்தன் அபிநயாவை பார்க்க அவளுடைய கல்லூரிக்கு சென்றிருந்தான். அவளுக்காக காத்திருந்த நேரத்தில் கடையில் வேலை பார்க்கும் சங்கர் கால் பண்ணினான்.

" அண்ணா எங்க இருக்கீங்க உடனே வாங்க அண்ணா" சங்கரின் குரலில் பதற்றம் தெரிந்தது.

" என்னாச்சு சங்கர் நான் வர்றதுக்கு கொஞ்சம் லேட் ஆகும்"

"ஐயோ அண்ணா உடனே கிளம்பி வாங்க அண்ணா.."

" என்ன சங்கர் ஏதாவது பிரச்சனையா ஏன் இப்படி பதற்றமா பேசுற...?"

" ஆமாண்ணா பிரச்சனைதான் போலீஸ் நம்ம கடையை தேடி வந்து இருக்கு என்ன விவரம் என்று அவங்க கிட்ட பேசுறீங்களா...?"

" என்ன போலீசா... போன அவங்ககிட்டே கொடு... " சங்கரின் படபடப்பு இப்போது இவனுக்கு தாவியது.

" ஹலோ மிஸ்டர் வேழவேந்தன் நான் இன்ஸ்பெக்டர் பேசுறேன். எங்க இருக்கிறீங்க உங்ககிட்ட ஒரு என்கொயரி பண்ணனும் உடனே வர முடியுமா..."
"சார் நான் கொஞ்சம் தூரமாதான் இருக்கேன் ஒரு அரை மணி நேரத்துல வந்துருவேன் சார்..."

" வாங்க வாங்க நாங்க வெயிட் பண்றோம்."
போனை கட் பண்ணியவனுக்கு ஒரு நிமிடம் கூட அங்க நிம்மதியா இருக்க முடியவில்லை.

'மிக மிக அவசரம் உடனே கிளம்புறேன். இன்னொரு முறை மீட் பண்ணலாம் கடைக்கு போயிட்டு கால் பண்றேன்.'
என்று அபிநயாவுக்கு ஒரு மெசேஜை போட்டுவிட்டு பைக்கை ஸ்டார்ட் பண்ணி அவசர அவசரமாக கிளம்பினான் வேழவேந்தன்.

வரும் வழியில் தான் அந்த நீலவேணியை பார்த்தான். ரோட்டு ஓரத்தில் நின்றுகொண்டு வருகிற வாகனங்களை ஒவ்வொன்றாக கையசைத்து நிறுத்தும்படி சைகை செய்து கொண்டிருந்தாள். நீலவேணி வேறு யாருமில்லை. ரகுபதியின் ஒரே மகள்தான் நீலவேணி. சிலை கடத்தல் ஏற்றுமதி-இறக்குமதி என ஏதேதோ மோசடி பண்ணி பல கோடிகள் சொத்து சேர்த்து வைத்திருந்தான் ரகுபதி.

வேழவேந்தன் படித்த கல்லூரியில்தான் நீலவேணியும் படித்தாள். வேழவேந்தனுக்கு நீலவேணியை கண்டாலே பிடிக்காது. காரணம் எப்ப பார்த்தாலும் ஓவர் பந்தா பண்ணுவாள். காரை அவளே ட்ரைவ் பண்ணுகிறேன் என்று கண்ணு மண்ணு தெரியாமல் ஓட்டி இரண்டு முறை ஆக்சிடென்ட் வேறு பண்ணி இருக்கிறாள். சக மாணவிகளை அடிமைகள் போல் ட்ரீட் பண்ணுவாள். இவளுடைய பணத்திலும் ஓவர் மேக்கப்பிலும் மயங்கி சில பெண்கள் இவள் பின்னால் சுற்றிக் கொண்டு திரிவார்கள். தான் ஒரு பெரிய உலக அழகின்னு அவளுக்கு நினைப்பு. அவளைப்பற்றிய இப்படிப்பட்டதான சில காரணங்கள் மனதில் நிரந்தரமாக பதிந்துப்போனதால் அவளை கண்டாலே வெறுத்து ஒதுங்கி விலகி சென்றான் வேழவேந்தன்.

கல்லூரியில் எல்லாரும் தன்னை சுற்றி சுற்றி வருகிறார்கள். இந்த வேழவேந்தன் மட்டும் அதற்கு விதிவிலக்கா இருக்கிறானே அவனை தன் வலையில் விழ வைக்க வேண்டும் என்று பல நாட்களாய் கரவம் கட்டிக்கொண்டிருந்தாள் நீலவேணி. ஆனால் அதற்கான சந்தர்ப்பம் அவளுக்கு கிடைக்கவே இல்லை.
ஆனாலும் மறைமுகமாகவே வேழவேந்தனின் நடவடிக்கைகளை கவனித்துக் கொண்டுதான் இருந்தாள். அவனைப்பற்றி துப்பு கொடுக்க ஒரு ஆளையும் நியமித்திருந்தாள். ஒரு சில மாதங்களாகவே அவனுடைய நடவடிக்கைகள் எதுவும் சரியாக இருப்பது போல் அவளுக்கு தோன்றவில்லை.

அவ்வப்போது கடையை விட்டு விட்டு வெளியில் சென்று விடுவதாகவும் அதிக நேரம் போனில் யாருடனோ சிரித்து பேசிக் கொண்டிருப்பதாகவும் நீலவேணி க்கு தகவல் வரவே, அவனுக்கு காதல் கத்தரிக்காய் என்று ஏதாவது இருக்குமோ என்று சந்தேகம் வந்துவிட்டது நீலவேணிக்கு. அவன் எங்கே போகிறான் எங்க வருகிறான் என்பதை தெரிந்து கொள்ள வேறு யாரையும் நம்பாமல் தானே களத்தில் இறங்கி விட்டாள் நீலவேணி.

அன்று கூட அவன் கடையிலிருந்து வெளியே சென்றவுடன் இவளுக்கு தகவல் சொல்லப்பட்டது. உடனே தன் காரை எடுத்துக்கொண்டு அவனை பின்தொடர்ந்தாள். அவன் அந்த மகளிர் கல்லூரி வாசலில் நின்றதும் இவளுடைய சந்தேகம் ஊர்ஜிதம்மானது. தொலைவில் காரை நிறுத்திவிட்டு அவனுடைய நடவடிக்கைகளை கவனிக்கலானாள்.

ஆனால் அவளுக்கு பெரும் ஏமாற்றமே வெகுநேரமாக கல்லூரி வாசலில் நின்று இருந்தானே தவிர யாரையும் பார்க்கவும் இல்லை பேசவும் இல்லை. தீடிரென்று அவசர அவசரமாக அவன் கிளம்பவும் அவனை முந்திக் கொண்டு ஸ்பீடாக சென்றாள். அப்போதான் கார் பஞ்சர் ஆகிவிட்டது. இறங்கி உதவிக்கு ஆள் தேடிக் கொண்டிருந்த போதுதான் வேழவேந்தனின் பைக் அந்த வழியாக வந்தது.

தூரத்தில் வரும்போதே அவளை கவனித்துவிட்டான். கடையில் இன்ஸ்பெக்டர் வெயிட் பண்ணு கொண்டிருந்ததால் அவளைத் தவிர்த்து விட்டு முன்னேறி செல்ல முயன்றான். ஆனால் நீலவேணியோ குறுக்கே புகுந்து அவன் பைக்கை நிறுத்தி விட்டாள்.

" என்ன...என்ன ஆச்சு?" பொறுமையின்றி கேட்டான்.

" கார் பஞ்சர் ஆயிடுச்சு வீடுவரை கொஞ்சம் டிராப் பண்ண முடியுமா?"

‘ஏன் ஆட்டோ புடிச்சு போக வேண்டியதுதானே’ என்று மனம் நினைத்தாலும் ஆள் நடமாட்டம் இல்லாத அந்த ரோட்டிலே நிற்கிறாளே என்று மனம் இறங்கியவன் அவளை தன் பைக்கில் ஏற்றிக்கொண்டு கிளம்பினான்.
சற்று தூரம் சென்றவன் வேகத்தை குறைத்தான் காரணம் எதிரில் ஒரு ஆக்சிடெண்ட் நடந்திருந்தது. போலீஸ் சுற்றி நிற்க விபத்தில் இறந்துப்போனவரின் உடலை போட்டோ எடுத்துக் கொண்டிருந்தது மீடியாக்கள்.

“என்னவென்று பார்ப்போம் வண்டியை நிறுத்துங்கள்.” என்று நீலவேணி சொல்ல “இதெல்லாம் எனக்கு தேவையில்லாத வேலை...எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு நான் கிளம்புறேன். நீ இருந்து பார்த்துட்டு வா...” என்று அவளை இறக்க சொன்னான் வேழவேந்தன்.

"வேண்டாம் வேண்டாம் பரவாயில்லை உங்க கூடவே வரேன் வண்டியை எடுங்க..."வண்டியிலிருந்து இறங்கிய முயன்றவள் மீண்டும் ஏறி அமர்ந்து கொண்டாள்.

மேற்கொண்டு எதுவும் பேசாமல் வண்டியை ஓட்டியவன் ஊருக்குள் நுழைந்தவுடன் அவளை இறக்கி விட்டுவிட்டு தன் கடையை நோக்கி விரைந்தான்.

இவன் வரவுக்காகக் காத்திருந்த போலீஸ்காரர்கள் இவன் வந்த உடன் சில விசாரணைகளை தொடங்கினார்கள். அப்பாவுக்கும் இதுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பதை தெள்ளத் தெளிவாக விளக்கி கூறினான். வேறு சில ஆட்களிடமும் விசாரித்தோம் எங்கே தவறு நடந்தது என்று தெரியவில்லை. ஒரு சந்தேகத்தின் பெயரில் தான் விசாரிக்க இங்கு வந்தோமே தவிர வேறொன்றுமில்லை என்று வந்தவர்கள் கிளம்பி சென்றார்கள்.

அத்தோடு பிரச்சினை முடிந்தது என்று நிம்மதி பெருமூச்சு விட்டான் வேழவேந்தன் ஆனால் அன்றே பிரச்சனை நீலவேணி மூலமாக ஆரபித்து விட்டது என்பது அவனுக்கு மறுநாள் செய்தித்தாளை பார்த்தபோதுதான் தெரிந்தது.

‘ஈசிஆர்’ ரோட்டில் காரும் பஸ்சும் நேருக்கு நேராக மோதிய விபத்தில் சம்பவ இடத்திலேயே காரோட உரிமையாளர் இறந்துப்போனார். என்ற பெரிய எழுத்து செய்தியும் அதற்குக் கீழே இருந்த படத்தில் இறந்தவரின் உடல் அடையாளம் தெரிந்ததோ இல்லையோ, நெருக்கமாய் இவனை ஒட்டி அமர்ந்திருந்த நீலவேணியும் பைக்கில் அமர்ந்திருந்த வேழவேந்தனும் தெளிவாகவே தெரிந்தார்கள்.

"ஏன்டா என்னடா ஆச்சு பேப்பர்ல எல்லாம் உன் போட்டோ வந்திருக்கு?"

" என்னடா சொல்ற என் போட்டோ பேப்பர்லையா...?"

"ஆமாம் மொதல்ல தினமலர் பேப்பரை வாங்கிப் பாரு அதுல உம்முகந்தான் பளிச்சுன்னு தெரியுது."

நண்பர்கள் போன் பண்ணி சொன்னார்கள்.
குழப்பத்தோடு பேப்பரை வாங்கி பார்த்தவனுக்கு முகம் வெளிறிப்போனது. 'நெனச்சேன் நான் நெனச்ச மாதிரியே நடந்துருச்சு. அவளை பாவம் பார்த்து பைக்ல ஏத்துனதுதான் நான் செஞ்ச பெரிய தப்பு‌'.

அன்று மதியம் அபிநயாவிடமிருந்து கால் வந்தது.

"முக்கியமான வேலை என்று அவசரமாய் கிளம்பி போனீங்களே அது இதுக்குத்தானா...?" எடுத்த எடுப்பிலேயே கேட்டாள்.

இவன் எதிர்பார்த்தது தான் இருந்தாலும் புரியாதது போல் கேட்டான்.

" என்ன சொல்ற அபி...நீ சொல்றது எனக்கு எதுவுமே புரியலை.?"

"அந்த நியூஸ் பேப்பரில் வந்த நீயூஸ், பைக்கில் நெருக்கமாய் அமர்ந்திருந்த அந்த பொண்ணு, இது எதுவுமே உங்களுக்கு தெரியாதா? இல்ல அந்த பைக்ல இருக்கிறவன் நான் இல்லேன்னு சொல்லப் போறீங்களா‌‌...?"

"அபி எதையும் நான் மறுக்கப் போவதில்லை. ஆனால் நான் என்ன சொல்றேன்னு கேட்டுட்டு அப்புறம் பேசு..."

" வேணாம் ப்ளீஸ்.... நீங்க எதுவும் சொல்ல வேணாம். பொய் மேல பொய் சொல்லி எம்மனச மாத்த முயற்சிப் பண்ணாதீங்க. ஒரு.... ஒரு வாரத்துக்கு அப்புறம் மனசு சரியாயிடுன்னு நி...நினைக்கிறேன். சரியானதுக்கு அப்புறம் நானே கூப்பிடுறேன். பிளீஸ்...அதுவரை என்னை தொந்தரவு படுத்தாதீர்கள்."

பட்டென்று போனை கட் பண்ணிவிட்டாள் அபிநயா.
வேழவேந்தனுக்கு கோபம் கோபமாய் வந்தது. என்ன நடந்துச்சுன்னு கேக்குற பொறுமை கூட இல்லையே. அப்படியே இருந்தாலும் ஒரு பொண்ணு கூட பைக்ல போனா தப்பா? ஆபத்துக்கு உதவி செய்ய நினைத்தது அவ்வளவு பெரிய குற்றமா? அந்த விஷயத்தை சொல்லறதுக்குள்ளே கட் பண்றாளே? இந்த பொம்பளைங்களே இப்படித்தான் என்று புலம்பி தீர்த்தான் வேழவேந்தன்.

அழகாய் சென்று கொண்டிருந்த அவர்களின் காதல் வாழ்க்கையில் இடறல் வந்தது நீலவேணியின் உருவத்தில்.


-தொடரும்
 
Last edited:
Top