Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

நீதான் எந்தன் அந்தாதி -அத்தியாயம் -6

Advertisement

daisemaran

Well-known member
Member
அத்தியாயம்-6
ஒருமுறை சிலை செய்யும் தன் பட்டறைக்கு அபிநயாவை அழைத்துச் சென்றான் வேழவேந்தன்.
அந்தக்கிராமத்தில் குடியிருக்கும் மக்களில் விரல் விட்டு எண்ணக்கூடிய சிலரை தவிர மற்ற ஏனைய குடும்பங்கள், அனைத்தும் வறுமை எனப்படும் வலையில் சிக்குண்டு பரிதாப நிலையில் காணப்படும் அப்பாவி மக்கள். இருந்தாலும் தன் கஷ்டங்களை தன்னோடு தாங்கிப்பிடித்து தலை நிமிர்ந்து நடக்கும் தைரியசாலிகள்.

படிப்பறிவில் குறைந்தமக்கள், படித்து பட்டம் பெற்றவர்கள் ஒருசிலரே. இருந்தாலும் நாகரிகத்தோடும் நிதானத்தோடும் சிந்தித்து செயல்படும் நல்ல உள்ளம் கொண்டவர்கள். என்பது அவர்களோடு பேசியப்போது தெரிந்தது. அந்த கிராமத்தில் சுமார் 250 குடும்பங்கள் இருந்தார்கள். அவர்களின் பிரதான தொழில் சிலைசெதுக்குதல். அதில் ஓரு சிலர் மீன்பிடித்தொழில், மற்றும் சிலர் வியாபாரம், செய்யக்கூடியவர்கள்.
அந்த ஊர் பள்ளியில் பத்தாம் வகுப்பு வரையில்தான் படிக்க முடியும் காரணம் மேற்படிப்புக்காக அந்த கிராமத்தில் இருந்து 10 கிலோ மீட்டர் துரத்தில் இருக்கும் துறையுர் என்ற ஊருக்கு சென்று படித்து விட்டு வேர்க்க விருவிருக்க அவர்கள் வீட்டை அடையும்போது பொழுது சாய்ந்து இருள் சூழ தொடங்கிவிடும். ஆம்பிள்ளை பிள்ளைகளாவது பரவாயில்லை.பொம்பிள்ளை பிள்ளைகள் வீடு சேரும்வரை பெற்றோர்கள் வயிற்றில் ஈரத்துணியை கட்டிக்கொண்டு காத்திருப்பார்கள். வியர்வை சிந்திய நிலையில் வீடு திரும்பும் மாணவர்களை பார்க்கவே பரிதாபமாய் இருக்கும். வேழவேந்தனின் அப்பா முருகவேலு ஊர் பிள்ளைகளின் எதிர்காலத்தை கருத்தில்கொண்டு பஞ்சாயத்து தலைவர் செங்கையனின் குட்டியானை வண்டியை வாடைகைக்கு பேசி விட்டிருந்தார். அதுக்கு உண்டான காசுல பாதி நான் கொடுத்துடுறேன், மீதி பாதியை கோயில் பணத்துல கொடுக்க சொல்றேன்னு அவர் வாக்கு கொடுத்ததால செங்கையனும் மறு பேச்சி பேசாமல் குட்டியானையை கொடுக்க சம்மதிச்சார்.

இப்பவெல்லாம் பிள்ளைங்க ஒழுங்கா பள்ளிக்கு போயிடுறாங்க, குறிப்பிட்ட நேரத்துல வீட்டுக்கு திரும்பிடுறாங்க.

அந்த ஊர் மகாபலிபுரத்திலிருந்து சற்று தொலைவில் இருந்தது. அந்த இடம் புதுமையாய் இருந்தது. ஊரை சென்றடையவே இரண்டு மணி நேரமாயிற்று.

“முதல் முறை வருவதால் இவ்வளவு தூரமா தெரியுது. அடிக்கடி வந்தேன்னா இந்த அளவுக்கு அசதி தோன்றாது...” என்று இவளை உற்ச்சாகப்படுத்தினான்.
கற்களும் பாறைகளும் அடுக்கப்பட்டிருக்க, விதவிதமாக சிலைகளை சுறுசுறுப்பாக செய்துகொண்டிருந்தார்கள். ஆண்கள் பெண்கள் என்று பாகுபாடு இல்லாமல் கிட்டத்தட்ட பத்துக்கும் மேற்பட்டோர் அந்த வேலையில் ஈடுபட்டு இருந்தார்கள். வியப்போடு பார்த்தவளை,

“இவங்க செய்யிறது எல்லாமே பிள்ளையார் சிலைகள். மொத்த ஆர்டர் வந்திருக்கு, அதான் வேலை கிடைச்ச சந்தோஷத்துல எல்லோரும் சுருசுருப்பா இருக்குறாங்க.” சொல்லும்போதே அவன் முகத்தில் சந்தோஷ ரேகை தென்பட்டது. அந்த ஆடரை வாங்கிகொடுத்து வயத்து பாட்டுக்கு வழி வகுத்துவிட்டான் என்று இவளும் பெருமிதம் அடைந்தாள். சற்று நேரத்தில் இவளை தனியாக ஒரு இடத்திற்கு அழைத்து சென்று மரத்தடிக்கு கீழ் மரசேரில் அமர வைத்தான்.

“உன்னை போல் ஒரு சிலையை முழுக்க முழுக்க நானே என் கைகளால் வடிக்கப் போகிறேன்.” என்றான்.
அடுத்து அவளை பல கோணங்களில் அமர வைத்து அவுட்லைன் வரைந்தான்.

“சிலை வேலையை இன்றே தொடங்கிவிடுவேன் முழுவதுமாக முடித்த பிறகு உன்னை அழைத்து வந்து காட்டுகிறேன்.” என்றான். அதேப்போல ஒரு மாதத்திற்கு பிறகு இவளை அந்த இடத்துக்கு அழைத்துச்சென்றான்.
இவள் கண்களை பொத்தியவாறு ஒரு இடத்திற்கு அழைத்துசென்றவன்,

“இப்போ கண்ணை திறந்துப்பார்...” என்றான்.
கண்களை திறந்துப்பார்த்தவளுக்கு அந்த கீத்துக்கொட்டகையில் சூழ்ந்திருந்த இருள்தான் முதலில் கண்ணில் பட்டது.

“ஒன்னுமே தெரியில...”

“சாரி...சாரி...கொஞ்சம் இரு...” என்றவன் அங்கிருந்த குண்டு பல்பை ஆன் பண்ணினான்.
இப்போ துணியில் போர்த்தப்பட்ட ஒரு உருவம் கண்ணில் தென்பட்டது. குழப்பத்தோடு அவன் முகத்தை ஏறிட்டாள்.
அவனோ சிறு புன்னைகையோடு போர்த்தப்பட்டிருந்த துணியை மெல்ல உருவினான்.
அடுத்த நிமிடம் தலை, நெற்றி, கண், காது, கழுத்து என்று ஒவ்வொன்றாக உயிர் பெற்றது. அதையே வைச்ச கண் வாங்காமல் பார்த்துக்கொண்டிருந்தவளில் கண்களிலிருந்து தாரைதாரையாகா கண்ணீர் வடிந்தது. இவ்வளவு அழகாக தத்ரூபமாக செதிக்கி இருக்கிறானே! என்று ஆச்சரியப்பட்டாள்.

“என்னாச்சி...டா...?” என்று உடைந்த குரலில் கேட்டான்.
பதில் பேசாமல் அந்த சிலையை ஒருமுறை தடவிப்பார்த்தவள் அடுத்தகணம் உடல் சிலிர்ப்போடு அவன் மார்பில் புதைந்தாள். அவனும் அவளை அணைத்தப்படி நின்றான். அந்த நிலையில் இருவர் மனதிலும் விரசமில்லை. தாயை அண்டியிருக்கும் குழந்தையில் மனநிலையில் இருந்தாள் அபிநயா. வேழவேந்தனால் அவளுடைய மனநிலையை புரிந்துக்கொள்ள முடிந்தது. தன் வாழ்வில் இதுவரை சாதிக்காதா எதையோ சாதித்துவிட்ட மனநிறைவோடு அவனும் இருந்தான்.
சற்று நேரத்துக்கு பிறகு,

“அபி....”

“ம்ம்....”

“போகலாமா...?”

“ம்ம்.......”

“இப்படியே இருந்தால் எப்படி போவது?”

“சா....சாரி...” முகசிவப்போடு தன் பிடியை தளர்த்திக்கொண்டாள்.
நலுன்கியிருந்த உடையை சரிபண்ணிகொண்டு அந்த கொட்டகையை விட்டு வெளியில் வந்தாள். அவனோ அந்த சிலையை திரும்பவும் துணியால் மூடி வைத்துவிட்டு லைட்டை ஆப் பண்ணி வெளிப்பக்க மூங்கில் படலை பூட்டிவிட்டு வந்து இவளோடு இணைந்து நடந்தான்.
அம்பதடி தூரம் நடந்து சென்றார்கள். அங்கு தென்பட்ட பந்தலின் கீழ் ஒருவர் சிற்பத்தை செதுக்கிய வண்ணமிருந்தார்.

“பெரிப்பா...இவங்க எனக்கு தெரிஞ்சவங்க நீங்க செய்யிற வேலையைப்பத்தி கொஞ்சம் தெரிஞ்சிக்கணுமாம்.”
அவர் சிற்ப்பத்தை செதுக்கியவண்ணம் பேசத் தொடங்கினார். தனது பெயரை மாயாண்டி என அடையாளப்படுத்தினார்.

“ஆண்டாண்டுகாலம் எங்கள் தொழில் சிற்பம் செய்வதுதான். நான் பத்து வயசுல இருந்து சிற்ப வேலைகளை செய்து வருகிறேன். எங்க கிராமத்துல ஆண், பெண் அனைவருமே சிற்பம் செய்யும் தொழிலில் ஈடுபட்டு வருகிறோம். அஞ்சு தலைமுறையா சிற்பம் செதுக்கும் வேலையைத்தான் பார்த்து வருகிறோம். நான் அஞ்சாவது தலைமுறை.

“இந்த வேலையை வருமானத்துக்காக செய்றீங்களா? அல்லது மன ஈடுபாட்டோடு செய்றீங்களா?” கேட்கும்போதே இதை கேட்பது சரியா? தவறா என்ற குழப்ப மனநிலையில்தான் கேட்டாள்.

“நான் மட்டுமல்ல எங்க கிராமத்துல நீங்க யாரக் கேட்டாலும் இந்த பதிலத்தான் சொல்லுவாங்க. தாத்தா இந்த வேலைதான் பார்த்துட்டு இருந்தாங்க, எங்க அப்பாவும் இந்த வேலைதான் பார்த்துட்டு இருக்காங்க, அதனால எனக்கும் இந்த வேலை பிடித்திருந்தது. மன ஈடுபாடு இல்லாம எந்த வேலையையும் ஒழுங்கா செய்ய முடியாது. அதுமட்டுமல்ல வயித்துப்பாட்டுக்கு வருமானமும் முக்கியமில்லையா? என் ஒருவருடைய உழைப்பால் மட்டுமே ஒரு சிற்பத்தை செய்ய முடியாது. பாறையை ஒருவர் வெட்டிக்கொடுப்பார்.
உருவத்திற்கு ஏற்ப வெட்டி எடுக்கப்பட்ட கல்லில், ஒருவர் படத்தை வரைந்து கொடுப்பார். பிறகு தான் உருவத்தை என்னால் செதுக்க முடியும். பெரும்பாலும் கோயில் சிலைகள்தான் அதிகம் ஆர்டர் வரும். கட்சி பிரமுகர்கள் சிலர் அரசியல் தலைவர்கள் சிலைகளை செய்து தரச் சொல்லி கேட்பார்கள். ஆர்டர் பெற்று கொண்டு, குறிப்பிட்ட நாட்களுக்குள் செதுக்கி கொடுத்து விடுவோம்.”

“.............”

“தம்பி வேழவேந்தன்தான் எங்கள் தொழிலை ஊக்கப்படுத்தி வெளி ஊரிலிருந்தும் வெளிநாட்டிலிருந்தும் சிலை செய்வதற்கு ஆர்டர் வாங்கி கொடுத்துகிட்டு இருக்கு.” என்றார்.

“அப்படியா?” என்று வேழவேந்தனை பார்த்து கேட்டாள்.

“ஆமாம்...இவங்க எல்லாம் என் உறவுக்காரர்கள்தான். அவங்க கஷ்டப்படுவதை பார்த்துகிட்டு என்னால எப்படி சும்மா இருக்க முடியும்? பணம் காசு கொடுத்து உதவினாலும் அவங்க அதை ஏத்துக்கமாட்டாங்க, அதான் இதுபோன்ற உதவிகளை செய்கிறேன்.”

“வாவ்..................”

“உனக்கு ஒன்னு தெரியுமா? நாற்ப்பத்தி ஐந்து வருஷமா இந்த வேலையைதான் பார்த்துட்டு இருக்கிறார் என் அப்பா. என்னுடைய சித்தப்பாவும் சிற்பக் கலைஞர் என்பதால் இந்த சிற்பம் செதுக்கும் வேலை எனக்கு நன்றாக பழகிப் போனது. இருவருமே ஒன்றாக வேலை செய்வதால் எனக்கு இது கடினமான வேலையாக தெரியவில்லை. சில நேரங்களில் என்னுடைய அப்பா சிலைகளை வடிவமைத்துத் தருவார், கண், காது, ஆபரணங்கள் போன்ற சிறு சிறு நுணுக்கமான வேலைப்பாடுகளை நான் செய்து கொடுத்து விடுவேன்.
சிற்ப வேலையில் கிடைக்கும் வருமானத்தை வைத்துதான் எங்க அக்காவுக்கு திருமணம் செய்து வைத்தோம். இன்றைய நாள் வரை எந்த விதமான இடையூறுகளும் இந்த வேலையில் எங்களுக்கு கிடையாது. ஆனா வருமானம் அப்படின்னு பார்த்தா மத்த தொழிலைவிட இதுல கிடைக்கிறது மிகவும் குறைவுதான்.’’ என்றவன்,

“உனக்கு ஒரு சின்ன சிலை செய்து காட்டுகிறேன்...” என்று ஒரு சிறு கல்லை கையில் எடுத்தவன், பேசிக்கொண்டிருந்த ஐந்து நிமிடத்தில் ஒரு வினாயகர் சிலையை செய்து காண்பித்தான்.

“அப்பா செய்த பொற் சிலைகள், தமிழக அரசின் சிறந்த சிற்பிக்கான மாநில விருதை பெற்றுத் தந்துள்ளது. உருவச் சிலைகள் மட்டுமல்லாமல் உணர்வு பூர்வமான சிலைகளும், விழிப்புணர்வு ஏற்படுத்தும் சிலைகளையும் வடிவமைத்து இருக்கிறார். பொற்கலைஞர் என்ற பெருமையையும் இவர் பெற்றுள்ளார்.
ஆண்களைப்போல் பெண்களும் வீட்டில் இருந்தபடியே சிறு சிறு கற்சிற்பங்கள் செய்து வருகிறார்கள். இதோ வராங்களே இவங்க பேரு காளியம்மா நீங்க இப்படி இந்த தொழிலை கத்துகிட்டீங்கன்னு இவங்க கிட்ட சொல்லுங்க.”
அந்த காளியம்மாவின் தோள்களை அணைத்தவாறு இவளிடம் அழைத்துவந்தான். அந்த அம்மா முந்தானையால் முகத்தை மூடி வெட்கப்பட்டாள்.

“ஆரு...இது?”

“இதுவா என் சிநேகிதி...”

“ஓ,...செத்த இரு...” என்றவள் தன் வாயில் அடக்கிவைத்திருந்த வெத்தலைப்பாக்கை துப்பிவிட்டு வந்து, எம்முட்டு நேரம் நின்னுகிட்டு இருப்பே? செத்த இப்படி குந்து...” என்று இருக்கைப்போல் வடிவமைக்கப்பட்ட ஒரு கல்லை காட்டினாள்.
தலையசைத்து நன்றி சொல்லிவிட்டு, “உங்களைப்பற்றி சொல்லுங்க..?” என்றாள்.

‘‘என்னப்பத்தி சொல்லுறதுக்கு நெறையா இருக்கு என் கல்யாணத்துக்கு பிறகுதான் சிற்ப வேலையை கத்துகிட்டேன். என்னுடைய ஊட்டுக்காரர் குடும்பம் மொடையூர் கிராமத்தில் காலம் காலமாக சிற்பம் செதுக்குற வேலைதான் பார்த்து வர்றாங்க. ஊட்டுக்காரருக்கு உதவியா சின்னச் சின்ன சிற்ப வேலையை செஞ்சிகிட்டு வந்தேன். வருமானம் பத்தாம போனதால ஒரு தெரிஞ்சவங்க மூலியமா இந்த ஊருக்கு வந்தோம்.
ஆரம்பத்தில் எனக்கு சிற்பம் செதுக்க சொல்லி கொடுத்தது என்னுடைய ஊட்டுகாரர்தான். என்னைப்போலவே இந்த கிராமத்தில் வீட்டில் இருந்தபடியே பொம்பளைங்க பலர் சிற்ப செதுக்கியும், சிலைகளுக்கு டிசைன்கள் செய்தும் வராங்கள். நானும் எப்பவாவது ஒரு நாள் பட்டறைக்கு போய், செய்து வைத்த செலைகளுக்கு டிசைன் போட்டு தருவது, சிலைகளுக்கு கலர் கொடுப்பது என சிற்பம் சம்மந்தமா சில வேலை எல்லாம் செய்வேன்’’

“ரொம்ப நன்றிங்க....” என்றவள் நேரமின்மை காரணமாக தன் வாட்சை காட்டி நேரமாச்சி வீட்டுக்கு கிளம்பனும்.” என்றாள்.
சற்று நேரத்தில் அங்கிருந்து கிளம்பினார்கள்.
அங்கிருந்து வரும் வழியில் தன் சித்தப்பாவை பார்த்துவிட்டு போகலாம் என்று இவளை அழைத்துக்கொண்டு போனான். வேழவேந்தன் தன்னுடைய வீட்டுக்கு அழைத்துப்போவான் என்று எதிர்ப்பார்த்தவளுக்கு பெரும் ஏமாற்றமே. அவனாக அழைத்துபோகவேண்டும் நாமாக எதுவும் கேட்கக்கூடாது என்று அமைதியாக இருந்தாள்.
வேழவேந்தனின் சித்தப்பா இளமையாகத்தான் இருந்தார். என்ன அவனைவிட ஒரு ஐந்து வயது மூத்தவராய் இருப்பார் என்று யூகித்தாள். முதலில் சந்தேக கண்ணோடு பார்த்தவர் இவன் தன்னுடன் படித்த பெண் என்றபோது இயல்பாக தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டு பேசத்தொடங்கினார்.

“மாமல்லபுரத்தில் ஆறாம் நூற்றாண்டில் இருந்து சிற்பக்கலை வளர்ந்து வருகிறது. அன்றைய காலகட்டத்தில் இரும்பினால் தயாரிக்கப்பட்ட சிறிய பெரிய உளிகளைக் கொண்டு நுண்ணிய சிற்பங்கள் வடிக்கப்பட்டன.
தற்போது சிரமம் ஏதும் அதிகமாக எடுத்துக் கொள்ளாமல் மின்மோட்டார் பொருத்திய நவீன துளையிடும் கருவிகள், பாலிஷ் போடுவதற்கான கருவிகளும் சிற்பங்கள் உருவாக்குவதற்கு பயன்படுத்தப்படுகின்றன. அக்காலத்தில் சிற்பத்தை செதுக்கி முடிப்பதற்கு காலம் அதிகமாகும்.
தற்போது புதிய கருவிகளைக் கொண்டு வேலையை எளிதாகவும் குறைந்த கால அவகாசத்திலும் செய்ய முடிகிறது. மாமல்லபுரத்துக்கு பெருமை சேர்க்கும் வகையில் அங்குள்ள அரசு சிற்பக்கலை கல்லூரியில் பயின்றோர் இன்று உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் சொந்தமாக தொழில் நடத்தி வருகின்றனர்.
பொதுவாக சிற்பம் செதுக்கும் தொழிலில் ஈடுபட்டுள்ள சிற்பக்கலைஞர்களைக் கேட்டிங்கன்னா, மற்ற தொழில்களைவிட கலைநயமிக்கதும் வருவாய் ஈட்டக் கூடிய வாய்ப்பையும் தரும் தொழில் அப்படின்னுதான் சொல்லுவாங்க. ஆனா அதுல இருக்குற சிரமம் அவங்களுக்கு மட்டும்தான் தெரியும். ஆர்டரின் பேரில் கோயில்களுக்கு வேண்டிய விநாயகர், பெருமாள், ஆஞ்சநேயர், நடராஜர், நாகதேவதை சிலைகள் துவாரக பாலர்கள் உள்ளிட்ட தெய்வச் சிலைகளையும், நந்தி, யானை, யாளி ஆகிய சிலைகளையும் செய்து தருகிறோம்.
வீடுகளில் வைப்பதற்கு பிள்ளையார் சிலைகள், தேவதைகள் உள்ளிட்ட உருவச் சிலைகளையும் சிற்பக்கலைஞர்கள் வடிவமைக்கிறார்கள். சிலைக்கடத்தல், சிலைகள் பதுக்கி வைப்பது போன்ற குற்றச் சம்பவங்களால் சிலைகளை விற்பனைக்கு அனுப்புவதில் கெடுபிடிகளும் சிக்கலும் இருந்து கொண்டுதான் இருக்கிறது.
தற்போது விதிமுறைகள் தளர்த்தப்பட்டுள்ளதால் கோயில்கள் மட்டும் அல்லாமல் பூங்காக்களில் வைப்பதற்காக கண்கவரும் மாடர்ன் ஆர்ட் என சிற்பக்கலை மென்மேலும் வளர்ந்து வருகிறது.
வெளிநாட்டினரை கவரும் கலை: இதுமட்டுமல்லாமல் மாமல்லபுரத்தைச் சுற்றிப்பார்க்க வரும் வெளிநாட்டு கலைஞர்கள் இங்குள்ள சிற்பக்கலையை ரசிப்பதுடன் சிற்பக்கலையை கற்றுக் கொள்ள ஆர்வம் காட்டுகின்றனர். இதனால் ஆண்டுதோறும் இத்தாலி, ஜெர்மனி, ஹாங்காங் உள்ளிட்ட வெளிநாட்டுக் கலைஞர்கள் நவம்பர் மாதம் முதல் மார்ச் மாதம் வரை மாமல்லபுரத்துக்கு வந்து தங்கி இங்குள்ள சிற்பக்கலைக் கூடங்களில் சிற்பக்கலையை கற்றுக்கொள்வதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

நான் மாமல்லபுரம் வரும்போது சிற்பங்கள் செதுக்குவதைப் பார்த்து சிற்பம் செய்வதில் ஆர்வம் கொண்டு 16 வயதிலேயே ஒரு சிற்பக்கலைக் கூடத்தில் பணிக்கு சேர்ந்து தொழிலைக் கற்றேன். அந்த 3 ஆண்டுகள் அனுபவம் தான் சொந்தமாக சிற்பக்கலைக்கூடம் வைத்து, தற்போது 15-க்கும் மேற்பட்டவர்கள் என்னிடம் 20 ஆண்டுகளுக்கும் மேலாக வேலை பார்த்து வரும் நிலைக்கு உயர்த்தியுள்ளது.
பொதுவாக சிற்பங்கள் செதுக்குவதற்கான கல் பல்வேறு இடங்களில் கிடைத்தாலும், காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள சங்கராபுரம், சிறுதாமூர் மற்றும் சேலம் ஆகிய இடங்களில் இருந்து சிற்பம் செதுக்குவதற்கான கல்லை கொண்டு வருகிறோம்.
சிறுதாமூர் குவாரியில் எடுக்கப்படும் கற்கள் சிற்பம் செய்வதற்கு உகந்தவையாக உள்ளன. தமிழக அரசு சிற்பக்கலைக்கான குவாரி ஒன்றை தனியாக உருவாக்கித் தந்தால் தமிழ்நாட்டில் சிற்பக்கலை மேலும் புகழ்பெற்று விளங்கும். மேலும் சிறுதாமூர் குவாரியை அரசு சிற்பக்கலைக்கான குவாரியாக அறிவிப்பதன் மூலம் சிற்பக் கலைஞர்களுக்கு நல்ல வாய்ப்பாக அமையும். அதற்காகத்தான் நாங்க போராடிகொண்டிருக்கிறோம். என்று நெகிழ்வோடு கூறினார்.
 
ரொம்ப நாளைக்கு அப்புறமா மாமல்லபுரம் சிற்பங்கள் பற்றிய செய்திகள் படிக்க ரொம்பவே சந்தோஷமா இருக்கு, டெய்சி டியர்
 
கல்கி எழுதிய "சிவகாமியின் சபதம்".
நாவல் ஞாபகம் வருதுப்பா
ஆயனரின் உளிச் சத்தம் மீண்டும் காதுகளில் கேட்கிறது
 
Top