Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், tamilnovelwriters@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

நீயின்றி வாழ்வேனோ 11 2

Admin

Admin
Memberரிஷியும், சாதனாவும் கீழே வந்த போது... அங்கே ஏற்கனவே சந்தானம் அவர்களுக்காகக் காத்திருந்தார். ப்ரீதா அவர்கள் மூன்று பேருக்கும் சிற்றுண்டியும், காப்பியும் கொண்டு வந்து வைக்க.... சிற்றுண்டியை ஒதுக்கி விட்டு ரிஷி காபி மட்டும் எடுத்துக்கொள்ள....

“ஏன் மாப்பிள்ளை கொஞ்சமா சாப்பிடுங்க.” என்றதற்கு,

“வயிற்றில் இடம் இல்லை மாமா...” என்றான்.

சாதனா மெதுவாகச் சிற்றுண்டியை சாப்பிடும் போதே... வெற்றி மேலிருந்து இறங்கி வந்தான்.

அவனைப் பார்த்த சந்தானம் “என்ன டா கிளம்பலை?” எனக் கேட்க....

வெற்றி “இல்லைப்பா... நாங்க நாளைக்குப் போறோம்.” என்றான்.

ரிஷிக்குப் பயங்கரமாகக் கோபம் வர... அவன் சாதனாவை பார்க்க... அவள் சாப்பிடுவதில் கவனமாக இருந்தாள். ரிஷி அவளைத் தான் பார்கிறான் என்று தெரிந்தும், அவன் பக்கம் திரும்பாமல் இருந்தாள்.

நேற்று இவன் வெற்றியை பற்றி எவ்வளவு கேவலமாகப் பேசினான். தன் அண்ணனை பற்றி அவனே தெரிந்து கொள்ளட்டும் என்று தான் அவள் இந்த விஷயத்தில் தலையிடவே இல்லை.

“ஏன் இன்னைக்குப் போறதா தான இருந்தது?” என்ற சந்தானம் , மருமகளைப் பார்க்க.... அவள் அழுகையை அடக்கி கொண்டிருப்பது நன்றாகவே தெரிந்தது.

வெற்றி, “நான் போகமாட்டேன்னா சொன்னேன். நாளைக்குப் போறேன்னு தான சொல்றேன்.” என்றான்.

மருமகள் கண் கலங்கி நிற்பதை பார்க்க சந்தானத்திற்குப் பொறுக்கவில்லை....
“வரேன்னு சொல்லிட்டு போகாம இருந்தா நல்லா இருக்காது வெற்றி. ப்ரீதா அவங்க அம்மா வீட்டுக்கு போறோம்னு ஆசையா இருந்திருப்பா இல்லை... இன்னைக்கே போங்க.” என்றார்.

“சாதனாவும், மாப்பிள்ளையும் இப்ப தான வந்தாங்க. அவங்களை வேணா இன்னைக்கு இங்க இருக்கச் சொல்லுங்க. நாளைக்கு நாங்களும் அவங்களோட சேர்ந்து போறோம்.” என்றான் வெற்றி முடிவாக.

வெற்றி கிளம்பமாட்டான் என்று ரிஷிக்கு புரிந்து விட்டது. தன் தங்கையை அப்படியே விட்டுவிட்டு கிளம்பவும் மனம் வரவில்லை....

“சரி மாமா நாங்க நாளைக்கே போறோம்.” என்றவன், ப்ரீதாவிடம் “அம்மாகிட்ட எனக்கு டிரஸ் கொடுத்து விடச் சொல்லு.” என்றான்.

அதைக் கேட்டதும் ப்ரீதாவின் முகம் மலர... அவன் தங்க சம்மதிப்பான் என்று வெற்றியும் எதிர்பார்க்கவில்லை.... “தேங்க்ஸ் ரிஷி...” என்றான்.

“எங்களுக்கும் நீங்க வந்ததும் கிளம்புறீங்கலேன்னு இருந்தது.மறுவீட்டுக்கு வந்தா தங்கிட்டு தான் போகணும். உங்க அம்மா சொல்லும் போது... மறுத்து சொல்ல முடியாம இருந்தேன். இதே சாதனாவோட அம்மா இருந்தா மகளை இப்படி விருந்தாளி மாதிரி வந்திட்டு போக விடுவாளா....” என்றார் அதுவரை அமைதியாக இருந்த மேகலா.


“மாமா, நான் கொஞ்சம் வெளிய போயிட்டு வந்திடுறேன்.” என்றபடி ரிஷி கிளம்ப... சாதனா அப்போது தான் அவனை நிமிர்ந்து பார்த்தாள்.

அவளைத் தன்னோடு வரும்படி ஜாடை காட்டிவிட்டு ரிஷி வெளியில் செல்ல... சாதனாவும் அவன் பின்னே சென்றாள்.

தன் காரின் அருகே வந்ததும், சாதனாவின் பக்கம் திரும்பிய ரிஷி “என்ன அண்ணனும், தங்கையும் படம் காட்றீங்களா.... நினைச்சதை சாதிச்சிடோம்னு சந்தோஷப்படாத..... உனக்குப் பிறகு இருக்கு.” என்றுவிட்டு, கோபமாகக் காரை கிளப்பிக்கொண்டு சென்றான்.

தான் இயல்பாகும் வரை அங்கேயே வேடிக்கை பார்ப்பது போல் நின்றுவிட்டு, சிறிது நேரம் சென்று சாதனா உள்ளே சென்றாள்.

ப்ரீதா தன் அம்மாவிடம் போன் பேச சென்றிருக்க.... உள்ளே வந்த தன் தங்கையின் முகத்தை வெற்றி ஆராய்ந்தான். அதைப் பார்த்ததும் சாதனாவிற்குச் சிரிப்பு வர... தன் அண்ணனின் அருகே சென்று அமர்ந்தாள்.

“என்ன ரிஷிக்கு கோபமா? வெற்றி சரியாகக் கணித்துக் கேட்க....

“கொஞ்சம்.” என்றவள், “அவர் கோபம் வந்த வேகத்தில போய்டும். நீங்க போய் அண்ணியைச் சமாதனம் செய்யுங்க.” என்று அவனை அனுப்பி வைத்தாள்.

வெற்றிச் சென்றதும் தன் தந்தையோடும் பெரியம்மாவுடனும் பேசிக்கொண்டு இருந்தாள்.

“உனக்கு அங்க பிடிச்சிருக்கா... ரிஷி உன்கிட்ட பிரியமா இருக்காரா....” சந்தானம் மகளிடம் கேட்க....

“ரொம்பப் பிடிச்சிருக்கு பா... அத்தையும், மாமாவும் நல்லா பார்த்துகிறாங்க. பாசமாவும் இருக்காங்க. இன்னைக்கு ரிஷி அவரே எனக்குத் தோசை ஊத்திக் கொடுத்தார்.” என்றதும், சந்தானதிற்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.

ரிஷிதான் சாதனாவிடம் எப்படி நடந்து கொள்வானோ எனப் பயந்து கொண்டே இருந்தார்.

தங்கள் அறைக்குச் சென்ற வெற்றியை கண்டுகொள்ளாமல்... ப்ரீதா தன் அம்மாவிடம் போன் பேசிக்கொண்டு இருந்தாள்.

போன் பேசி முடித்துவிட்டு வெளியே செல்ல பார்த்தவளின் கையைப் பிடித்து இழுத்து வெற்றி நிறுத்தினான்.

“செய்றது எல்லாம் செஞ்சிட்டு... இப்ப ஒன்னும் சமாதானம் சொல்ல வேண்டாம்.”

“நான் எதுக்கு உனக்குச் சமாதானம் சொல்லணும்? நான் என்ன தப்பா செஞ்சேன்.” என்றதும், ப்ரீதா அவனைக் கோபமாகப் பார்க்க....

“தப்பு என் மேலையா உங்க அண்ணன் மேலையா... முறைன்னு ஒன்னு இருக்கு இல்ல.... அவன் யார் வீட்டுக்கோ வந்த மாதிரி வந்திட்டு உடனே கிளம்புவான். அதே நான் மட்டும் உங்க வீட்ல வந்து தங்கனுமா...”

“என்னைப் பார்த்தா எப்படி இருக்கு உனக்கு? நீ சொல்றதுக்கு எல்லாம் தலைய தலைய ஆட்டுவேன்னு நினைச்சிட்டு இருக்கியா....”

இதுவரை வெற்றி கனிவாகப் பேசி மட்டுமே கேட்டிருந்த ப்ரீதாவிற்கு இப்போது அவன் கோபத்தைப் பார்த்துப் பயம் வந்தது.

“இல்லை... நான் காலையிலேயே எங்க அம்மா சொன்னாங்கன்னு சொன்னேன் இல்லை...அதுதான்.” என அவள் இழுக்க....

“உங்க அம்மா ஆயிரம் சொல்வாங்க. உனக்கு எங்க போச்சு புத்தி?”

“இதே நம்ம அம்மா இருந்திதிருந்தா... நம்மை இப்படி வந்த அன்னைக்கே திருப்பி அனுப்பி இருப்பாங்களான்னு சாதனா நினைச்சா... அதுக்குப்பிறகு நானும், எங்க அப்பாவும் அவளுக்கு இருந்து என்ன ப்ரோஜனம்?”

“இன்னைக்கு நான் உங்க அண்ணனுக்கு விட்டுக் கொடுத்தா... அவன் எப்பவும் இப்படித்தான் நடந்துப்பான்.”

“நாங்க ஒன்னும் சாதனாவை உங்க வீட்டுக்கு சும்மா அனுப்பலை.... நகை, சொத்துன்னு உங்களுக்குக் குறை இல்லாம தான் செஞ்சிருக்கோம். அதனால மரியாதை கொடுத்ததா தான் அது திரும்பக் கிடைக்கும். இதை நியாபகம் வச்சுக்கோ...உங்க அண்ணனுக்கும் நியாபகப்படுத்து.” என்றவன்,

“சீக்கிரம் கீழ வா.... சாதனா எதாவது தப்பா நினைச்சுக்கப் போறா...” என்றபடி வெளியே சென்று விட....

“அம்மா ! இவன் ஒன்னும் லேசுபட்டவன் இல்லை.” என ப்ரீதாவிற்கு இப்போது புரிந்தது.

ப்ரீதா சொன்னதை ஜோதி ராஜ்மோஹனிடம் சொல்லி நன்றாக வாங்கிக்கட்டிக் கொண்டார்.

“அவன் தான் அறிவு இல்லாம பேசுறான்னா... நீயும் அவங்க வீட்ல அப்படியா சொல்வ....”

“உன் பையனை பத்தி தெரிஞ்சு தான் சந்தானம், நம்ம பெண்ணை அவங்க பையனுக்குக் கேட்டார். தங்கச்சியை அவங்க வீட்ல செஞ்சிருக்கும் போதே... உன் பையன் இந்த ஆட்டம் ஆடுறானே... இதுல ப்ரீத்தாவுக்குக் கல்யாணம் பண்ணாம, இவனுக்கு மட்டும் பண்ணி இருந்தா... இந்நேரம் அவங்களை வந்து பாருன்னு நின்னிருக்க மாட்டான்.”

“இதோ இப்ப பதிலுக்கு வெற்றி நாங்க ஒன்னும் உங்களுக்குக் குறைஞ்சவங்க இல்லைன்னு காட்டிட்டான் இல்ல....இனியாவது உன் பையனுக்குப் புத்தி வருதான்னு பார்க்கலாம்.”

அங்கே இரவு நெருங்க நெருங்க சாதனாவிற்கு த் தவிப்பாக இருந்தது. இன்றும் ரிஷி குடித்து விட்டு வந்துவிடுவானோ எனப் பயத்துடன் இருந்தாள்.
 
SINDHU NARAYANAN

Well-known member
Member
:love: :love: :love:

புருஷனுக்கும் அண்ணனுக்கும் இடையில மாட்டிகிட்டு முழிக்கிற ரெண்டு தங்கச்சிகளுமே பாவம் தான்...
 
Last edited:

Banumathi jayaraman

Well-known member
Member
அதானே
சாதனாவுக்கு சீர் செனத்தியெல்லாம் சந்தானம் நிறையத்தானே செய்திருக்காரு
சபாஷ் வெற்றி
சரியாகத்தான் சொன்னான்
ப்ரீத்தாவை விட டாக்டர் சாதனா எந்த வகையிலும் குறைந்து விடவில்லை
 
Last edited:
Advertisement

Advertisement

Top