Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

நீயின்றி வாழ்வேனோ 13 2

Advertisement

Admin

Admin
Member


தேநீர் குடித்ததும் வெற்றி வெளியில் சென்று விட்டு வருவதாகக் கிளம்ப....

“ரெஸ்ட் எடுக்கலாமே மாப்பிள்ளை.” என்றார் ஜோதி.

“ப்ரீதா தான் உங்களைப் பார்க்கனும்னு ஆசையா இருந்தா... நீங்க அவளோட பேசுங்க. நான் மதியம் வரேன். பத்து நாளா ஒரு வேலையும் பார்க்கலை....” என்றபடி வெற்றி கிளம்பிவிட்டான். அவன் சென்றதும் ராஜ்மோகனும் வெளியே செல்ல கிளம்பினார்.

அதற்கு முன்பே ரிஷி அவனது அறைக்குச் சென்று இருந்தான். தன் கணவன் சென்றதும் “உங்ககிட்ட நிறையப் பேசணும் மா...” என்றபடி ஜோதியை அழைத்துக்கொண்டு ப்ரீதா கீழே இருந்த அறைக்குள் சென்று விட...

அவர்கள் அறையில் ரிஷி இருந்ததால்.... சாதனா அங்கே செல்லாமல் ஹாலில் அமர்ந்து டிவி பார்த்துக் கொண்டு இருந்தாள்.

காலையில் எழுந்து ஒரு ரெண்டு வார்த்தை அன்பாகப் பேசி இருப்பானா... இவன்தான் நேற்று இரவில் அப்படி நடந்துகொண்டான் என்பதை நம்பவே முடியவில்லை... ஒருவேளை கனவா... என நினைத்து குழம்பி போய் இருந்தாள்.

சிறிது நேரம் சென்று கீழே இறங்கி வந்த ரிஷி சாதனா மட்டும் ஹாலில் அமர்ந்திருப்பதைப் பார்த்து, “ஏன் இங்க தனியா உட்கார்ந்து இருக்க? அம்மாவும் ப்ரீதாவும் எங்க?” எனக் கேட்க....

சாதனா, அவர்கள் இருந்த அறையின் பக்கம் கைகாட்டிவிட்டு அமைதியாக இருந்தாள்.

அறைக்குள் வந்த ரிஷியை பார்த்ததும் ஜோதியும், ப்ரீதாவும் தங்கள் பேச்சை நிறுத்த....

“நீங்க ரெண்டு பேரும் இங்க என்ன செய்றீங்க? அங்க ஹால்ல சாதனா மட்டும் தனியே இருக்கா.... அங்கயே உட்கார்ந்து பேச வேண்டியது தான...”

சாதனா அவளுக்கு அண்ணி மட்டும் இல்லையே... நாத்தனாரும் தானே... அவள் முன்பு புகுந்த வீட்டை பற்றித் தன் அம்மாவிடம் இயல்பாகப் பேச முடியாமல் தான் ப்ரீதா தனியே வந்தது.

“அம்மா கிட்ட பேசி ரொம்ப நாள் ஆச்சே அண்ணா...அதுதான் பேசிட்டு இருந்தோம்.”

“நீ என்ன வெளிநாட்டுக்கா போகப்போற... உள்ளுருள தான இருக்கப்போற.... பிறகு பேச முடியாதா.... அவ அங்க ஹால்ல உட்கார்ந்து இருக்க... நீங்க ரெண்டு பேரும் மட்டும் தனியா வந்து பேசினா நல்லா இருக்குமா...”

“தப்பு தான் டா... நான் அவ ரூமுக்கு போய் இருப்பான்னு நினைச்சேன்.” என்றபடி ஜோதி எழுந்துகொள்ள....

“இதெல்லாமா சொல்லணும். உங்களுக்கே தெரியாதா...” என்றான் ரிஷி மேலும் கடுப்புடன்.

“இங்கப்பாரு உனக்கு உன் பொண்டாட்டி மேல அவ்வளவு அக்கறை இருந்தா.... நீ அவங்க கூட உட்கார்ந்து பேசு... நாங்க வர முடியாது.” என்ற ப்ரீதா ஜோதியை போக விடாமல் பிடித்துக்கொள்ள... ரிஷி அவளை முறைத்தபடி வெளியே வந்தான்.

“எதோ பிடிக்காம கல்யாணம் பண்ண மாதிரி சீன் போட்டான். இப்ப பொண்டாட்டியை இந்தத் தாங்கு தாங்குறான்.”

“அவன் பொண்டாட்டி அவன் தாங்குறான். நீ ஏன் டி கண்ணு வைக்கிற?” ஜோதி கேட்க....

“அதுதான மகனை விட்டு கொடுப்பீங்களா...” என்றவள், “வாங்க, உங்க மகன் என்ன பண்றான்னு பார்ப்போம்.” எனத் தன் தாயுடன் வெளியே வந்தாள்.

ரிஷி சாதனாவோடு அமர்ந்து டிவி பார்த்துக் கொண்டு இருந்தான்.

அவர்கள் எதிரில் அமர்ந்த ஜோதி “பாரு சாதனா, என் பொண்டாட்டியை தனியா உட்கார வச்சிட்டு, நீங்க இங்க என்ன பண்றீங்கன்னு? உன் புருஷன் எங்களோட சண்டை போடுறான்.” என்றார் கேலியாக....



“அண்ணி, எங்க அண்ணனை என்ன சொக்கு பொடி போட்டு மயக்குனீங்க.” ப்ரீதா மேலும் கேலியில் இறங்க....
யாரு? நானு இவனை மயகிட்டாலும் என மனதிற்குள் சாதனா நொடிக்கும் போதே....

“என்ன பேச்சு பேசுற நீ? கொஞ்சமாவது உனக்கு அறிவு இருக்கா...” என ரிஷி ப்ரீதாவிடம் வள்ளென்று விழுந்தான்.

அவன் பேசுவதைக் கேட்ட சாதனாவிற்கு , இவன் நம்மகிட்ட மட்டும் இல்லை... எல்லார் கிட்டயும் இப்படி வள்ளுன்னு தான் விழுவான் போலிருக்கு... எனத் தன்னையே தேற்றிக்கொண்டாள்.

“நீ எங்கையும் வெளிய போகலையா ரிஷி.”

“மதியம் சாப்பிட்டதும் நம்ம பண்ணைக்குப் போகணும். ஆஸ்திரேலியா அனுப்ப வேண்டிய சரக்கு எல்லாம் சரியா இருக்கான்னு பார்க்கணும்.”

“அதுக்கு நீயே போகனுமா...”

“நாம பார்க்கலைன்னா நல்ல தரமானதை ஆட்டைய போட்டுட்டு... எதாவது மிச்சம் மீதி கிடக்கிறதை பாக் பண்ணி அனுப்பிடுவாங்க. பிறகு சரக்கு தரமா இல்லைனா.. நம்ம ஆர்டர் கான்செல் பண்ணிடுவாங்க. அதனால நானே போறது தான் நல்லது.”

“நீ போனா உடனே திரும்ப முடியாதே....”

“ஆமாம் நாளைக்கு நைட் ஆகிடும்.”

“அப்ப சாதனாவையும் கூடக் கூடிட்டு போ...”

“என்ன விளையாடுறீங்களா நீங்க. நான் அங்க போய் வேலை பார்க்கிறதா இல்லை இவளை பார்க்கிறதா...”

அதுவரை தாயும் மகனும் பேசுவதை வாய் பார்த்துக் கொண்டிருந்த சாதனா “நான் என்ன சின்னக் குழந்தையா நீங்க என்னைப் பார்த்துகிறதுக்கு?” என்றாள் துடுக்காக.

“அதுதான அவங்க என்ன சின்னக் குழந்தையா நீ பார்த்துக்க.... அவங்க பாட்டுக்கு அங்க இருக்கப் போறாங்க...” ப்ரீதாவும் ஒத்து ஊத...

“கூடிட்டு போ டா... அவளும் நம்ம பண்ணை எல்லாம் எப்ப பார்க்கிறது?” ஜோதி மருமகளுக்குப் பரிந்து பேச....

“நீங்க எல்லாம் ஒரு முடிவோட தான் இருக்கீங்க.” என்ற ரிஷி “சரி வா... ஆனா அங்க வந்து என்னைத் தொந்தரவு பண்ணக்கூடாது. எனக்குத் தலைக்கு மேல வேலை இருக்கும்.” என்றான் கண்டிப்பாக.

சரி சரியெனச் சாதனா மண்டையை நன்றாக உருட்டி வைத்தாள்.

“அதுதான் தாய்க்குலம் எல்லாம் ஒன்னு சேர்ந்தாச்சே... நீங்க எல்லாம் உட்கார்ந்து பேசுங்க. நான் கொஞ்ச நேரம் படுக்கப் போறேன்.” என்றபடி ரிஷி எழுந்தான்.

தன் தமயனை கிண்டலாகப் பார்த்த ப்ரீதா “அண்ணியை வேணும்னா கூடக் கூடிட்டு போ.... நாங்க ஒன்னும் நினைச்சுக்க மாட்டோம்.” என்று சிரிப்பை அடக்கிக்கொண்டு சொல்ல...

ரிஷி “நீ ஒன்னும் எனக்குப் பெர்மிஷன் தர வேண்டாம். உன் வேலையை மட்டும் பாரு...” என்றவன்,

“அம்மா, இவ ரொம்பப் பேசுறா சொல்லி வைங்க.... ஒருவேளை உங்க மாப்பிள்ளை இவளுக்குப் பயந்திட்டு தான் வேலை இருக்குன்னு ஓடிட்டாரோ...” என்றான்.

“இருக்கும்... இருக்கும்...” ஜோதியும் மகனுக்கு ஒத்து ஊத.... ப்ரீதா அவர்களை முறைத்தாள்.

ரிஷி மாடிக்கு சென்று விட... அப்போது தான் ப்ரீதா சாதனாவை கவனித்தாள். அவள் எதோ தீவிர சிந்தனையில் இருப்பது தெரிந்தது.

“என்ன அண்ணி யோசிக்றீங்க?”

“இல்லை உங்க அண்ணன் தலைக்கு மேல வேலைன்னு சொன்னாரே... ஒருவேளை சலூன் கடை வச்சிருப்பாரோ....”

சாதனா சிரிக்காமல் சொல்ல.... ப்ரீதா பக்கென்று சிரித்துவிட்டாள்.

“இதைத் தான் இவ்வளவு தீவிரமா யோசிச்சீங்களா....”

“இதை மட்டும் உன் புருஷன் கேட்டிருக்கணும். ஆமாம்னு சொல்லி இந்நேரம் உன் தலை முடியை வெட்டிட்டு தான் மறுவேலை பார்த்திருப்பான்.” ஜோதி சொல்ல....

“ஐயோ ! எனக்கே கொஞ்சம் தான் இருக்கு.... இதையும் வெட்டிட்டா....”

சாதனாவின் கவலையைப் பார்த்து ஜோதியும், ப்ரீதாவும் வாய்விட்டு சிரித்தனர்.

“எங்க இருந்து தான் உங்க மகனுக்கு இவ்வளவு கோபம் வருதோ.... பேருக்கு பொருத்தமா எப்ப பாரு நெற்றிக்கண்ணைத் திறந்திடுராறு.... சூடு தாங்க முடியலை...”

“ஆமாம் மா... அண்ணி சொல்றது கரெக்ட். ஒரு கமல், கார்த்திக் இப்படிப் பேர் வச்சிருந்தா ரொமாண்டிகா இருந்திருப்பானோ...”

“சாமி பேர் ஆச்சேன்னு வச்சேன். இப்படி இருப்பான்னு நான் என்னத்தைக் கண்டேன்.”

“சாமி பேரா சாமியார் பேரா....”

“ரொம்பத் தேவை இப்ப இந்த ஆராய்ச்சி.”

“நீங்க என்ன அண்ணி எப்பபாரு பேசிட்டு இருக்கும் போதே வேற சிந்தனைக்குப் போயிடுறீங்க?”

“இல்லை... உங்க அண்ணனை பத்தி தான் யோசிக்கிறேன். சில நேரம் நல்லாத்தான் பேசுறாரு ஆனா திடிர்ன்னு கோபம் வருது அதுதான் ஏன்?”

“இதை நீங்க உங்க மாமியார் கிட்ட தான் கேட்கணும். எதோ தயாரிப்புல குறைன்னு நினைக்கிறேன்.”

ப்ரீதா கேலியாகச் சொல்ல... அவள் முதுகில் ஒரு அடி வைத்த ஜோதி “அவன் என்னோட மாமானார் மாதிரி மா.... அவருக்குப் பயங்கிற கோபம் வரும். இவனும் அவர மாதிரியே இருக்கான். அதுதான் என் மாமியாருக்கு அவனை ரொம்பப் பிடிக்கும்.”

“ரிஷிக்கு குழைந்து எல்லாம் பேச தெரியாது. எதுனாலும் முகத்துக்கு நேரா பட்டுன்னு சொல்லிடுவான். அதுக்காக மனசுல பாசம் இல்லாம இருக்காது.”

“இப்ப எனக்கே உடம்பு சரியில்லைன்னு சொல்றேன் வச்சுக்கோ.... உடனே என்கிட்டே உட்கார்ந்து உருகி எல்லாம் பேச மாட்டான். ஏன் உடம்பு சரியில்லாம போச்சு... நீங்க என்ன பண்ணீங்கன்னு ஒரு பெரிய விசாரணையே பண்ணிடுவான்.”


“திட்டிடேனாலும் அவன்தான் டாக்டர்கிட்ட கூடிட்டு போவான். மனசுல வருத்தம் இருக்கும், ஆனா... வெளிய காட்டிக்க மாட்டான்.”

“பாவம் அண்ணி, முன்னாடியாவது கொஞ்சம் தான் குழம்பி போய் இருந்தாங்க. இப்ப நீங்க சொன்னதும் ரொம்பக் குழம்பின மாதிரி தெரியுது.”

ப்ரீதா சொன்னதைக் கேட்டுச் சாதனா புன்னகைக்க...ஜோதி அவளைக் கவலையாகப் பார்த்தார்.

“சாதனா, உன்கிட்ட அவன் நல்லா நடந்துகிறான் தானே...”

“அண்ணி, உங்களுக்குப் பர்ஸ்ட் நைட் நடந்துச்சான்னு எங்க அம்மா மறைமுகமா கேட்கிறாங்க.”

ப்ரீதா கிசுகிசுப்பாகச் சொன்னதும் சாதனா வெட்கப்பட....

“உங்க அம்மா இருந்திருந்தா... நான் இப்படிக் கேட்க வேண்டியது வந்திருக்காது. என்னை உன்னோட அம்மாவா நினச்சுக்கோமா....”

“பாவம் அண்ணி, சொல்லிடுங்க. உங்க மாமியார் ரொம்பப் பீல் பண்றாங்க பாருங்க.”

சாதனா ஆமாம் என்பதாகத் தலையசைக்க.... ஜோதி மிகவும் சந்தோஷபட்டார்.

“அம்மா தாயே ! மருமகளைப் பத்தி மட்டும் இவ்வளவு கவலைப்படுறீங்களே... மகளைப் பத்தி ஒரு கவலையும் இருக்க மாதிரி தெரியலையே....” ப்ரீதா பொய்யாக அலுக்க....
“உன்கிட்ட என்ன கேட்கிறது? அதுதான் உன் முகத்தைப் பார்த்தாலே தெரியுதே....” ஜோதி மிடுக்காகச் சொல்ல.....

“அப்படி வெளிப்படையாவா தெரியுது....” ப்ரீதா தன்னையே கேட்டுக்கொள்ள.... சாதனாவிற்குச் சிரிப்பை அடக்க முடியவில்லை.

“சரி, நான் போய் மதியம் சமையல் எப்படி நடக்குதுன்னு ஒரு எட்டு பார்த்திட்டு வரேன்.” என்றபடி எழுந்த ஜோதி “சாதனா, கணக்கா இல்லாம கூட ரெண்டு டிரஸ் எடுத்து வச்சுக்கோ...” என்றார்.

“எல்லாமே புடவையே எடுத்துக்கவா அத்தை.”

“வேண்டாம், சுடிதாரே கொண்டு போ... எதுக்கும் ஒரு புடவை மட்டும் எடுத்திட்டு போ.”

“சரிங்க அத்தை.”


தங்கள் அறைக்கு வந்த சாதனா கட்டிலை பார்க்க ரிஷி ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தான். அவன் தூக்கம் களைந்து விடாமல் மெதுவாகக் கட்டிலில் சென்று உட்கார்ந்தவள், அவன் முகத்தை ஆசையாகப் பார்த்துக் கொண்டு இருந்தாள்.

தூங்கும் போது கூட ஸ்ட்ரிக்ட் ஆபீசர் தான் என் செல்லமாகத் தன் கணவனைச் சீராடியவள், கணவனுடன் செல்லப்போகும் தனியான பயணத்தைப் பற்றிய... சுகமான கனவில், அப்போதிருந்தே மிதக்க ஆரம்பித்தாள்.
 
Nice update

ரிஷி கூட தனியா போகப்போற பயணத்தை பத்தி சாதனா கனவுல மிதக்குறா... இவன் அங்க போய் என்ன ஏழரைய கூட்ட போறானோ..???
 
Last edited:
Top