Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

நீயின்றி வாழ்வேனோ 131

Advertisement

Admin

Admin
Member

பகுதி – 13

சாதனா குளித்து விட்டு தன் அறையில் இருந்து வெளியே வந்த போது... அங்கே மற்றவர்கள் தயாராக இருந்தனர்.

அவளைப் பார்த்ததும் ப்ரீதா, “அண்ணி சாப்பிட போகலாமா....” என்றாள் ஆர்வமாக.

சாதனா குளித்து மட்டும் தான் முடித்திருந்தாள். இன்னும் தலை கூடத் துவட்டவில்லை.... வேலை ஆளை அழைப்பதற்காக வெளியே வந்திருந்தாள்.

ப்ரீதா அவள் தாய் வீட்டிற்குச் செல்லும் ஆர்வத்தில் இருக்கிறாள் என நன்றாகவே புரிந்தது.

“அண்ணி, நீங்களும் அண்ணாவும் வேணா முன்னாடி போங்க. நாங்க கொஞ்ச நேரம் கழிச்சு வரோம்.” என்றாள் சாதனா.

“இல்லையில்லை.... நீ மெதுவா கிளம்பு, நாம சேர்ந்தே போகலாம்.” வெற்றி சொல்ல.... ப்ரீத்தாவின் முகம் வாடியது.

அதைக் கவனித்த ரிஷி “அப்படி என்ன வேலை இருக்கு உனக்கு? சீக்கிரம் கிளம்பு.” என்றான் அதட்டலாக.

ரிஷி பேசியதை கேட்ட வெற்றி “உனக்கு அப்படி என்ன அவசரம்?” என்றான் ப்ரீதாவை பார்த்து,

வெற்றி தனக்காக ப்ரீதாவை கோபிப்பது சாதனாவிற்குப் பிடிக்கவே இல்லை. நேற்று வேறு ப்ரீதா சிறிது நேரம் சாதனாவோடு பேசாமல் முகத்தைத் தூக்கி வைத்துக்கொண்டு இருந்தாள்.

“அண்ணா, ப்ளீஸ்.... எனக்கு என்னைப் பார்த்துக்கத் தெரியும். நீங்க எனக்காகப் பேச வேண்டாம்.” என வெற்றியிடம் கடுப்பாகச் சொன்னவள்,

ரிஷியின் பக்கம் பார்த்து “நான் இன்னைக்குப் போனா திரும்ப என்னைக்கு இங்க வருவேன்னு எனக்குத் தெரியாது. நான் அப்படி அப்படியே போட்டுட்டு போக, எனக்கு இங்க அம்மா இல்லை.... நான் எல்லாம் ஒதுங்க வச்சிட்டு தான் வரணும்.” என்றாள்.

அவள் பேசி முடித்ததும் ஒரு நிமிடம் அங்கே கனத்த அமைதி நிலவியது.

“சீனி அக்கா...” எனச் சத்தமாக அழைத்த சாதனா “நீங்க எல்லாம் போய்ச் சாப்பிடுங்க. நான் அதுக்குள்ள என் வேலையை முடிச்சிட்டு வந்திடுறேன்.” என்றபடி அறைக்குள் சென்று விட....

“உங்க அண்ணனை சாப்பிட கூடிட்டு வா...” என்ற வெற்றி கீழே இறங்கி செல்ல....

“வா அண்ணா....” ப்ரீதா அழைக்க....

“நீ போ நான் வரேன்.” என்ற ரிஷி அவர்கள் அறைக்குள் சென்றான்.

சாதனா கட்டிலில் இருந்த போர்வையை எடுத்து நேற்று இரவு இருவரும் உடுத்தி இருந்த ஆடைகளோடு சேர்த்து வைத்தவள், வேறு போர்வை எடுத்து விரிக்க ஆரம்பித்தாள்.

அவள் ரிஷியை கண்டுகொள்ளவே இல்லை.... அப்போது வேலை செய்யும் பெண் வந்துவிட... ரிஷி கீழே இறங்கி சென்றான்.

“சீனி அக்கா, இந்தத் துணி எல்லாம் துவைக்க எடுத்திட்டு போங்க. அதுக்கு முன்னாடி கொஞ்சம் இந்த ரூமை சீக்கிரம் கிளீன் பண்ணுங்க.” என்றவள், தானும் கிளம்ப ஆரம்பித்தாள்.
அறையைச் சுத்தம் செய்துவிட்டு அழுக்கு துணிகளோடு வேலை செய்யும் பெண் கீழே இறங்கியதும், சாதனாவும் தன் அறையைப் பூட்டிக்கொண்டு வெளியே வந்தாள்.

அவள் வந்த போது மற்றவர்கள் சாப்பிட்டு முடித்து இருந்தனர்.

“நீயும் சாப்பிட வா சாதனா...” மேகலா அழைக்க...

“இல்லை இருக்கட்டும் பெரியம்மா.... நான் அங்க போய்ச் சாப்டுக்கிறேன்.” என்றாள்.

அதைக் கேட்டு வெற்றியின் முகம் மாறியது. ஆனால் அவன் எதுவும் சொல்லவில்லை.... அதைக் கவனித்த ப்ரீதா, போச்சு அப்புறம் நம்மை நல்லா காய்ச்ச போறான் என நினைத்தவள் “அண்ணி சாப்பிட வாங்க.” என அழைக்க....



சாதனா “இருக்கட்டும் மணி ஒன்பதரை தான... நான் அங்க அத்தைகிட்ட போய்ச் சாப்ட்டுகிறேன்.” என்றாள்.

அப்போது அவர் அறையில் இருந்து வெளியே வந்த சந்தானம் “கிளம்பிடீங்களா....” என்றதும்,

சாதனா, “கிளம்பிட்டோம் பா...” என்றவள், ஹாலில் இருந்த தன் அன்னையின் புகைப்படத்தைப் பார்த்ததும் கண் கலங்க....

“கிளம்பும் போது அழக்கூடாது. சந்தோஷமா போயிட்டு வா...உன் அண்ணனும் உன்னோட வரான் தான...” என்றார் சந்தனாம்.

“சரிப்பா, நீங்க உடம்பை பார்த்துக்கோங்க. மறக்காம மாத்திரை போடுங்க. நான் அடிக்கடி வந்து உங்களைப் பார்த்துகிறேன்.”

“சரி டா மா ...”

“வரேன் பெரியப்பா, வரேன் பெரியம்மா. நீங்க இன்னும் கொஞ்ச நாள் இங்க இருப்பீங்க தான....”

“உங்க கல்யாண ரிஷப்ஷன் வரை இருந்திட்டுப் போகச் சொல்லி உங்க அப்பா சொல்லி இருக்கார்.”

“அப்படியா... சரி பெரியம்மா. நான் போயிட்டு வரேன்.”

சந்தானத்தின் உதவியாளர், வீட்டு வேலை ஆட்கள் என்று ஒருவர் விடாமல் எல்லோரிடமும் சொல்லிக்கொண்டே சாதனா கிளம்பினாள்.

கிளம்பும் முன் தான் மட்டும் மாலை வருவதாக வெற்றி சொல்ல...

சந்தானம், “வேண்டாம் எதுக்கு வீணா அலையற.... நானும் உன்னோட மாமனாரும் இன்னைக்கு நைட் சென்னை போறோம். உங்க வரவேற்ப்பு வேலை பார்க்க....” என்றார்.

“இருக்கட்டும் பா.... நான் நீங்க கிளம்புறதுக்கு முன்னாடி வரேன்.”

“சொன்னா கேளு வெற்றி வேண்டாம். நீ ப்ரீதாவோட வெளிய எங்காவது போயிட்டு வா....”

சந்தானம் சொன்னதற்கு வெற்றியும் சம்மதமாகத் தலையசைத்தான்.

ரிஷியும், வெற்றியும் அவரவர் காரில் தங்கள் மனைவிமாருடன் கிளம்பினர். கண்ணை விட்டு மறையும் வரை சாதனா அவள் வீட்டை திரும்பித் திரும்பி பார்த்துக்கொண்டு வந்தாள்.

“ஹப்பா ! தாங்கலைடா சாமி...”

“என்னது?”

“நீ போடுற சீன் தான்.” ரிஷி நக்கலாகப் பேச.... சாதனாவிற்குக் கோபம் வந்துவிட்டது.

“நான் என்ன சீன் போட்டேன்?”

“காலையில நீ லேட்டா எழுந்திட்டு, மத்தவங்களைக் கடிச்சு வச்சியே... அதைதான் சொன்னேன்.”

“ஆமாம், நான் எது செஞ்சாலும் தப்பு தான்.”

“நான் அப்படிச் சொன்னேனா....” என்ற ரிஷி மேலும் எதோ சொல்ல வர....

“இப்ப உங்களோட சண்டை போடுற நிலைமைல நான் இல்லை.... என்னைத் தயவு செய்து விட்டுடுங்க ப்ளீஸ்.” எனச் சாதனா கையெடுத்து கும்பிட.... ரிஷியும் மேற்கொண்டு பேசவில்லை ஆனால் கடுப்பாக இருந்தான்.

சாதனாவின் பார்வை வெளியில் இருந்தாலும் சிந்தனை வேறாக இருந்தது.
ரிஷி சொன்னது போல் காலையில் தான் தாமதமாக எழுந்தது தான் தவறோ.... நேரத்துடன் எழுந்து கிளம்பி இருந்தால்.... இந்த வீண் விவாதம் வந்திருக்காது தானே.... என நினைத்தபடி வந்தாள்.

சாதனாவின் வீடு மதுரை நகருக்குள் இருக்கும். அதே ரிஷியின் வீடு நகரை விட்டு தள்ளி இருந்தாலும், சுற்றிலும் பசுமையான தோட்டத்தின் மத்தியில் அமைந்த அழகான வீடு.

அவர்களின் வீடு நெருங்க... சாதனா சாதாரணமாக இருப்பது போல் காட்டிக்கொள்ள முயன்றாள்.

இவர்கள் கார் வந்த சத்தம் கேட்டு எட்டி பார்த்த ஜோதி மகிழ்ச்சியுடன் வந்து அவர்களை வரவேற்றார்.

“வாங்க... வாங்க...”

தன் அன்னையைப் பார்த்ததும், ப்ரீதா வேகமாகச் சென்று அவரைக் கட்டிக் கொண்டாள்.

தன் மகளைப் பார்த்த சந்தோஷத்திலும் மருமகனை வரவேற்க ஜோதி மறக்கவில்லை.

“வாங்க மாப்பிள்ளை....” என்றவர், மற்றொரு காரில் இருந்து இறங்கிய தன் மகனைப் பார்த்து “மாமனார் வீட்டை விட்டு கிளம்ப மனசு வரலையா ரிஷி....” என்றார் கேலியாக.

“பிறகு, என் பெரிய மாமியார் எப்படிக் கவனிச்சாங்க தெரியுமா...கிளம்பவே மனசு இல்லை.... எல்லாம் உங்க மகள் தான் போகணும் போகணும்னு ஒரே அனத்தல்....” ரிஷியும் விட்டுக்கொடுக்காமல் பதில் கொடுக்க.... அவன் பேசியதை கேட்டு சாதனாவின் முகம் கூட மலர்ந்தது.

“நான் மதியம் சீக்கிரம் சாப்பிட வந்துடுங்கன்னு சொன்னா... இவ இப்பவே உங்களை இழுத்திட்டு வந்துட்டாளா....” ஜோதி சொல்ல....

ஐயோ ! இந்த அம்மா இப்படியா போட்டு கொடுக்கணும் என நினைத்த ப்ரீதா வெற்றியை பார்க்க.... அவனும் அவளைத் தான் பார்த்துக்கொண்டு இருந்தான்.

அப்போது அவர்கள் வந்தது தெரிந்து ராஜ்மோகனும் வெளியே வந்து வரவேற்க... எல்லோரும் அவரோடு வீட்டின் உள்ளே
சென்றனர்.

ஹாலில் இருந்த சோபாவில் சென்று அமர்ந்ததும், தன் மனைவியைப் பார்த்த ராஜ்மோகன் “குடிக்க எதாவது கொண்டு வா...” என்றார்.

அதைக் கவனித்த வெற்றி “இப்பதான் மாமா வரும் போது சாப்பிட்டோம். இன்னும் கொஞ்ச நேரம் ஆகட்டும்.” என்றான்.

அவன் சொன்னதை ஏற்று ஜோதியும் அவர்களோடு உட்கார்ந்தார்.

ரிஷிக்கு அப்போது தான் சாதனா இன்னும் சாப்பிடவில்லை என்பது நினைவு வர...அவன் அதைச் சொல்ல வர.... அது புரிந்த சாதனா “எனக்குத் தெரியும் சாப்பிட... நீங்க ஒன்னும் சொல்ல வேண்டாம்.” என்று சற்று சீரலாகவே, அதே சமயம் ரிஷிக்கு மட்டும் கேட்கும்படி சொன்னவள், அங்கிருந்து எழுந்து சென்றாள்.



தான் சாப்பிடவில்லை என்பது தெரிந்தால்... தன் மாமாவும் அத்தையும் ஏன் என்று கேட்பார்கள்? பிறகு ப்ரீதாவை வேறு எதாவது சொல்வார்கள், எதற்கு வம்பு? என்றுதான் சாதனா ரிஷியை பேச விடவில்லை...

உணவு மேஜைக்கு வந்து அமர்ந்தவள், அங்கிருந்த பாத்திரங்களைத் திறந்து பார்க்க... பூரியும், உருளை கிழங்கு மசாலாவும் இருந்தது.

மூன்று பூரிகளை எடுத்துத் தட்டில் வைத்துக்கொண்டு அவள் சாப்பிட.... அங்கே வந்த ரிஷி “ஏன் ஆறிப்போனது சாப்பிடுற. சூடா கொண்டு வர சொல்ல வேண்டியது தான.” என்றான்.

“எனக்கு இதே போதும்.” என்றாள் சாதனா.

ரிஷியா விடுவான், சாமி என்று சமையல்காரரை அழைத்து “சூடா பூரி கொண்டு வாங்க.” என்றான்.

“எனக்கு வேண்டாம். நீங்க போங்க.” என்று அவரை அனுப்பிய சாதனா, அவர் சென்றதும் ரிஷியை பார்த்து முறைத்தாள்.

ஹாலில் இருந்து பார்த்தால் உணவு அறை தெரியும். சாதனா சாப்பிடுவதையும் ரிஷி அவளோடு இருப்பதையும் பார்த்த வெற்றிக்கு, ஏட்டிக்கு போட்டி நடந்து கொண்டாலும், சாதனாவின் மீது ரிஷிக்கு அக்கறை இருக்கிறது என்று பார்த்த அளவில் அவனுக்குப் புரிந்தது. அதனால் அவர்கள் விஷயத்தில் இனி தலையிடுவது இல்லை என்று நினைத்துக் கொண்டான்.

அப்போது அங்கே வந்த ஜோதி சாதனா சாப்பிடுவதைப் பார்த்து “நீ உங்க அம்மா வீட்ல சாப்பிடுலையா சாதனா....சொல்லி இருந்தா சூடா பூரி போட சொல்லி இருப்பேனே....” என்றார்.

அவர் சொன்னதைக் கேட்ட ராஜ்மோகனும் திரும்பி பார்த்தார்.

“அப்ப எனக்குப் பசிக்களை அத்தை. இங்க வந்து சாப்பிடலாம்னு வந்துட்டேன்.”

யாருக்கும் சங்கடம் வராத மாதிரி சாதனா பதில் சொல்ல....

“ப்ரீதா உன்னைச் சாப்பிட விடாம இழுத்திட்டு வந்துட்டாளா...” ஜோதி கேட்க.... அதைக் கேட்ட ப்ரீதாவின் முகம் மாற... அதைக் கவனித்த சாதனா “இல்லையில்லை..... நான்தான் எப்பவும் போல லேட்டா எழுந்தேன்.” என்றாள்.

அவள் சொன்னதைக் கேட்டுச் சிரித்துக்கொண்டே ஜோதி உள்ளே சென்று விட... சாதனாவிற்கு ஹப்பாடா என்று இருந்தது.

இவர்கள் வந்தது தெரிந்து வெளியே வந்த அமிர்தா பாட்டி, தன் பேத்தியை ஆரத்தழுவி கொண்டு நலம் விசாரித்தார். மேலும் அதில் சில நேரங்கள் செல்ல... சாதனா எல்லோருக்கும் டீ கொண்டு வந்தாள்.
 
Top