Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

நீயின்றி வாழ்வேனோ 5 1

Advertisement

Admin

Admin
Member
பகுதி – 5

மறுவாரம் ஒரு பெரிய நட்சத்திர ஹோட்டலில் இரு ஜோடிகளுக்கும் நிச்சயதார்த்தம் நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு வெறும் உறவினர்கள் மட்டுமே அழைக்கப்பட்டு இருந்தனர். கட்சியைச் சார்ந்த யாரையும் அழைக்கவில்லை. அதனால் ஒரு குடும்ப விழா போல் இருந்தது.

மனைவி இல்லாததால் நிச்சய தட்டு மாற்ற தன் சகோதரரையும் அவர் மனைவியையும் சந்தானம் அழைக்க.... அப்போது அங்கே வந்த சாதனா “இல்லைப்பா எங்களுக்கு நீங்க தான் செய்யணும்.” என்றாள் அழுத்தமாக.

“அம்மா இல்லாம நான் மட்டும் எப்படி டா?” சந்தானம் மகளைத் தயக்கத்துடன் பார்க்க...

“அம்மா இல்லாம எங்களை இவ்வளவு தூரம் வளர்த்தது நீங்க தானே பா.... எங்களுக்கு நீங்க செஞ்சா தான் சந்தோஷமா இருக்கும்.”

சாதனா சொல்ல அதை வெற்றியும் ஆமோதிக்க.... பிள்ளைகளின் பிடிவாதத்தைப் பார்த்துச் சந்தானம் தயங்கி நிற்க....

“ஏன் இவ்வளவு யோசிக்றீங்க அண்ணா? பிள்ளைங்க சொல்றாங்க இல்ல... உங்களை விட யாரு அவங்க நல்லா இருக்கனும்னு நினைக்கப் போறா... அதனால எதுவும் நினைக்காம வாங்க வந்து உட்காருங்க.” ஜோதி உரிமையுடன் சொல்ல....

“வாங்க சந்தானம்... நம்ம பிள்ளைங்களுக்கு நாம செய்யாம யாரு செய்வா...” என்று ராஜ்மோகனும் அழைக்க... அதற்கு மேல் மறுக்க முடியாமல் சந்தானம் மேடைக்குச் சென்றார்.

சரியாக விழா தொடங்கும் நேரத்திற்குத் தான் ரிஷி தன் நண்பர்களுடன் உள்ளே நுழைந்தான். நிச்சயதார்த்தம் முடிந்து பெண்கள் இருவரையும் புடவை மாற்றி வர சொல்லி அனுப்பி வைத்தனர்.

முதலில் ரிஷியையும் சாதனாவையும் மேடைக்கு அழைத்தனர். ரிஷியை இன்னும் சாதனா பார்க்கவே இல்லை... அதனால் மேடை ஏறும் போதே... அவளின் கண்கள் ரிஷியை ஆவலாகத் தேடியது.

அவளைச் சிறிதும் ஏமாற்றாமல் ரிஷி அங்கே அழகாக அதே சமயம் கம்பீரமாக நின்று கொண்டிருந்தான். இவனுக்கு எந்த டிரஸ் போட்டாலும் நல்லாத்தான் இருக்கும் என மனதிற்குள் பாராட்டியபடியே சாதனா சென்று ரிஷியின் அருகில் நின்றாள்.

முதலில் ஜோதி கொடுத்த வைர மோதிரத்தை வாங்கிய ரிஷி அதைச் சாதனாவின் விரலில் போட்டு விட.... அடுத்துச் சந்தானம் கொடுத்த மோதிரத்தை வாங்கிய சாதனா, அதை மெதுவாக ரிஷியின் விரலில் நுழைத்தாள்.

அவனின் வலதுகையைத் தன் இடதுகையில் மென்மையாகப் பிடித்து நிதானமாக அவள் மோதிரம் அணிவிக்க.... அதுவரை யாருக்கு வந்த விருந்தோ என்பது போல்... எதிலும் ஒட்டாமல் இருந்த ரிஷி.... இவ்வளவு நேரமா என்ன பண்றா? என்பது போல் சாதனாவை பார்த்தான்.

அவர்கள் வாழ்க்கையின் முக்கியமான நிகழ்வு, சாதனா ஒவ்வொரு சின்ன விஷயத்தையும் ரசித்துச் செய்ய.... ரிஷிக்கு கடுப்பாக இருந்தது.

ஜோதி மகனிடம் சாக்லேட் கொடுத்து சாதனாவிற்கு க் கொடுக்கச் சொல்ல... ரிஷி அதை வாங்கி அவள் வாயில் கொடுக்காமல், அவள் கையில் கொடுத்தான்.
“டேய் மச்சான் ரொம்ப நல்லவனா நடிக்காத டா...” ரிஷியின் நண்பர்கள் கேலி செய்ய... ரிஷி பேருக்கு சிரித்து வைத்தான்.

“அவன் கிடக்கிறான் மா நீ கொடு...” ஜோதி தன் மருமகளிடம் சாக்லேட் கொடுக்க....

புன்னகையுடன் அவர் கொடுத்த சாக்லேட்டை வாங்கிய சாதனா எதுவும் அலட்டிக்கொள்ளாமல் ரிஷிக்கு ஊட்டி விட.... அவனுக்கு இஷ்ட்டம் இல்லை என்றாலும், மற்றவர்கள் முன்பு மறுக்காமல் அவள் கொடுத்ததை வாங்கிக்கொண்டான்.

பின்பு இருவரையும் நிற்க வைத்துப் புகைப்படம் எடுத்தனர். இதையெல்லாம் வெற்றி மேடையில் ஒரு ஓரமாக நின்று பார்த்துக்கொண்டு இருந்தான்.

பார்த்த அளவிலேயே ரிஷி எல்லாவற்றையும் விருப்பம் இல்லாமல் செய்கிறான் என்று நன்றாகவே புரிந்தது. அதே நேரம் சாதனா மிகவும் மகிழ்ச்சியாக இருந்தாள்.

ஒரு அண்ணனாகத் தன் தங்கையின் வாழ்க்கையை நினைத்துக் கவலையாக இருந்தது. அவனும் சாதனாவிற்கு எத்தனையோ முறை எடுத்து சொல்லி பார்த்தான்.

“சாது இந்தக் கல்யாணம் அவசியமா.... நீ சொன்னா அப்பா கேட்பாரு. வேண்டாம்னு சொல்லிடு....”

“ஏன் அண்ணா? உங்களுக்கு ரிஷியை பிடிக்கலையா....”

“எனக்குப் பிடிக்குது பிடிக்கலை... அது இல்ல இப்ப பிரச்சனை. எனக்கு அவனைப் பத்தி நல்லா தெரியும். அவன் ஒரு விஷயம் செய்யனும்னு நினைச்சிட்டா... அதை எப்பாடு பட்டாவது முடிச்சிடுவான். அதுக்கு அவன் எந்த அளவுக்கும் போவான்.”

“ஒரு விஷயத்துல தீவிரமா இருக்கிறது நல்லது தான அண்ணா...”

“நீ புரியாம பேசாத சாதனா... அவன் ஜெயிக்கணும் அதுதான் முக்கியமா நினைப்பான். தோல்வியை ஏத்துக்கிற மனபக்குவம் அவனுக்குக் கிடையாது.”

“அவங்க அப்பா அவனை என்ன சொல்லி இந்தக் கல்யாணத்துக்குச் சம்மதிக்க வச்சாருன்னு தெரியலை.... ஆனா ரிஷி அவ்வளவு சீக்கிரம் சமாதானம் ஆகிறவன் கிடையாது. இதுனால உனக்கு எதாவது பிரச்சனை வந்தா....”
“நிறையப் பேர் கல்யாணத்துக்கு முன்னாடி காதலிக்கத் தான் செய்றாங்க. அவங்க எல்லார் காதலும் கல்யாணத்துல முடியுதா என்ன? அதுக்காக அவங்க வேற யாரையும் கல்யாணம் பண்ணிக்காமலா இருக்காங்க.”

“அதுபோலத் தான் ரிஷி. எனக்கு அவங்க பாஸ்ட் பத்தி கவலை இல்லை... என்னைக் கல்யாணம் பண்ணினதுக்கு அப்புறம் அவங்க ஒழுங்கா இருந்தா போதும்.”

சாதனா பேசுவதைக் கேட்டு வெற்றிக்குச் சிரிப்புதான் வந்தது. ஆனால் சந்தோஷத்தில் அல்ல....

இப்படி எல்லாம் போய் ரிஷியிடம் இவள் பேசி வைத்தாள். அவன் போடின்னு சொல்லிட்டு போயிட்டே இருப்பான். அவனை யாரும் கட்டுபடுத்த எல்லாம் முடியாது. அவனாக நினைத்தால் தான் உண்டு.

அதோடு இன்னொன்றும் நிச்சயம். என்ன சொன்னாலும் ரிஷியை திருமணம் செய்வதில் இருந்து சாதனா பின்வாங்க போவது இல்லை என்பதையும் புரிந்து கொண்டான். அது முன்பே அவனுக்குத் தெரிந்தது தான்.

இதையெல்லாம் யோசித்தபடி வெற்றி இருக்க.... அடுத்து மேடைக்கு அவனையும் ப்ரீதாவையும் அழைத்தனர். ரிஷி மேடையில் இருந்து இறங்கி அவன் நண்பர்களோடு சென்று அமர்ந்து விட.... சாதனா மட்டும் அங்கேயே இருந்தாள்.

ரிஷியும் வெற்றியும் ஒருவரை ஒருவர் நேருக்கு நேர் பார்ப்பதை கூடத் தவிர்த்தனர். கீழே சென்று அமர்ந்த ரிஷி அப்போது தான் சாதனாவை நன்றாகக் கவனித்தான்.

இள ரோஜா நிற பட்டு புடவையில் எளிமையான அலங்காரத்தில் இருந்தாள். அதிகபடியாகச் சொல்லும்படி எதுவுமே இல்லை.... தலை அலங்காரம் கூடப் பெரிதாக எதுவும் செய்யவில்லை... பின்னி பூ வைத்திருந்தாள் அவ்வளவுதான். அதே இந்தப் பக்கம் ப்ரீதாவோ ஜகஜோதியாக இருந்தாள்.

வெற்றி இந்தத் திருமணத்திற்கு விருப்பட்டுச் சம்மதிக்கவில்லை...தன் தங்கைக்காக ஒத்துக்கொண்டான். அதே போல் ப்ரீதாவும் வெற்றியை வீட்டில் பார்த்த மாப்பிள்ளை என்ற அளவில் தான் இதுவரை இருந்தாள்.

ஆனால் இருவரும் மோதிரம் மாற்றிக்கொண்ட அந்த நொடி எல்லாமே மாறியது. இருவருமே ஒரு சொந்தத்தை, உரிமையை அடுத்தவரிடம் உணர்ந்தார்கள்.

ஒருவருக்கொருவர் இனிப்பை ஊட்டி விட்ட போது... மனதளவில் இன்னும் நெருங்கி இருந்தனர். இருவரும் தங்கள் பக்க உறவினரை அடுத்தவருக்கு அறிமுகம் செய்யும் சாக்கில் இயல்பாகப் பேசிக் கொண்டனர்.

ரிஷியின் பார்வை எல்லோரையும் சுற்றி வந்தது. முதலில் தன் பெற்றோரை அடுத்து தன் தங்கையையும், வெற்றியையும் அதற்கு அடுத்துச் சந்தானத்தைக் கடைசியாகச் சாதனாவை. அவள் அருகில் இருந்த உறவினரிடம் எதோ சொல்லி சிரித்துக் கொண்டு இருந்தாள்.

தன்னைத் தவிர எல்லோரும் சந்தோஷமாக இருப்பதாக ரிஷிக்கு தோன்றியது. தன்னையோ தன் விருப்பத்தையோ யாரும் பெரிதாக மதிக்கவில்லை என்ற எண்ணம் மனதில் தீயாக எரிந்து கொண்டே இருந்தது.

இதுவரை தன் எதிரியாக இருந்தவன், இனி தன் தங்கையின் கணவன் என்பதை நினைக்கும் போது இன்னும் ஆத்திரமாக வந்தது.

வெற்றியையும் ப்ரீதவையும் வைத்துப் புகைப்படங்கள் எடுக்க.... மேடையில் இருந்து இறங்கிய சாதனாவிற்கு எங்கே போவது என்று தெரியவில்லை.

அப்போது கீழே அமர்ந்திருந்த சத்யா கை அசைக்க.... அவனைப் பார்த்ததும் முகம் மலர்ந்தவள், அங்கே சென்றாள்.

சத்யாவுடன் சாதனாவின் தோழிகளும் இருந்தனர்.

“வாங்க... வாங்க... எப்ப வந்தீங்க? நான் பார்க்கவே இல்லை....” சாதனா சொல்ல...

“ரிஷி உன் பக்கத்தில இருக்கும் போது.... உனக்கு எங்களை எல்லாம் கண்ணுல தெரியுமா என்ன?” சத்யா கேலி செய்ய... அதை மற்றவர்களும் ஆமோதித்தனர்.

அவன் சொன்னதைக் கேட்டு வெட்கப்பட்ட சாதனா “அப்படியெல்லாம் இல்லை....” என்றவள், அவர்களுடனே உட்கார்ந்து விட்டாள்.

“உன் ஆளு சூப்பர் டி... உங்க ஜோடி பொருத்தம் சூப்பரா இருக்கு....” என அவள் தோழிகள் சொல்ல.... சாதனா “தேங்க்ஸ்...” என்றாள்.

“சாது நீ இன்னும் கொஞ்சம் கிராண்டா டிரஸ் பண்ணி இருக்கலாம்.” ஷீபா சொல்ல....

“இல்லை டி இது தான் நல்லா இருக்கு.... உன் நாத்தனார் தான் கொஞ்சம் அதிகமா போட்டிருக்க மாதிரி இருக்கு...” என்றாள் வந்தனா.
 
Top