Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், tamilnovelwriters@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

நீயின்றி வாழ்வேனோ 7 2

Admin

Admin
Member


இரவு ஏழு மணிக்கு தான் ராஜ்மோகன் வீட்டிற்குள் நுழைந்தார். மிகவும் களைத்துப் போய் காணப்பட்டார். அப்போதும் சாதனாவை நலம் விசாரித்தார்.

“நான் நல்லா ரெஸ்ட் எடுத்தேன் மாமா... உங்களுக்கு தான் ரொம்ப வேலை....”

“கல்யாண வீடுன்னா அப்படிதான் மா... அதுவும் ரெண்டு கல்யாணம். இன்னும் சென்னையில வரவேற்பு வேற இருக்கே..... அடுத்து அந்த வேலையை ஆரம்பிக்கணும்.”

“சரி நீங்க ரூமுக்கு போய் குளிங்க. நான் உங்களுக்கு சாப்பாடு கொண்டு வரேன். சீக்கிரம் சாப்டிட்டு தூங்குங்க. நாளைக்கு காலையில குல தெய்வ கோவிலுக்கு போகணும்.” ஜோதி சொல்ல.... சரி என்றபடி ராஜ்மோகன் உள்ளே சென்றார்.

சாதனா ஹாலில் அமர்ந்து இருந்த உறவினர்களுடன் டிவி பார்க்க.... ரிஷியும் அங்கே தான் இருந்தான். தன் கணவரின் தேவைகளை கவனித்து விட்டு வந்த ஜோதி... அவருக்கு உணவு எடுத்துக்கொண்டு சென்றவர், அவர் சாப்பிட்டதும் அவரும் வந்து ஹாலில் அமர்ந்து பேசிக்கொண்டு இருந்தார்.

“இந்த ப்ரீதா பொண்ணு ஒரு போன்னாவது பண்ணக்கூடாது. அங்க போய் என்ன பண்ணுதோ?” என அவர் கவலைப்பட....

“அதுதான் அண்ணன் இருக்காங்க இல்ல அத்தை பார்த்துப்பாங்க. அதோட பெரியம்மா நல்லா பார்த்துப்பாங்க.” என சாதனா அவருக்கு சமாதானம் சொன்னவள், அவள் இருந்த அறைக்குள் சென்று தன் அப்பாவை அழைத்து பேசினாள்.

“அப்பா, ரொம்ப வேலையா... சாப்டீங்களாப்பா...”

“இல்லமா இனிமே தான். வேலை எல்லாம் பெரிசா இல்லை... உன் மாமனாரே பார்த்துக்கிட்டார்.”

“சரிப்பா சாப்டிட்டு ரெஸ்ட் எடுங்க.”

“சரிமா...” என்றவர் அழைப்பை துண்டிக்க.... அடுத்து தன் அண்ணனை அழைத்து பேசினாள்.

“அண்ணா, என்ன பண்றீங்க? அண்ணி எப்படி இருக்காங்க?”

“ம்ம்... இங்க தான் எல்லார் கூடவும் ஹால்ல உட்கார்ந்து பேசிட்டு இருக்கோம்.”

“அண்ணி என்ன பண்றாங்க?”

“அவ ஒரே பிஸி..... அவளும் பெரியம்மாவும் சேர்ந்து, வந்த விருந்தாளிங்க எல்லோரையும் கவனிச்சிட்டு இருக்காங்க.”

“அண்ணி இன்னைக்கேவா வேலை செய்றாங்க. ரெஸ்ட் எடுக்கலையா....”

“இல்லை.... சொன்னா கேட்டா தானே.... அவ தான் இழுத்து போட்டுட்டு செய்றா.... சமையல் வேலைக்கு தான் ஆளுங்க இருக்காங்களே... அவளும் பெரியம்மாவும் எல்லோரையும் கவனிச்சிகிறாங்க அவ்வளவு தான்.”

“ஓ.... சரி, அத்தை தான் அண்ணி என்ன பண்றாங்களோன்னு கவலைப்பட்டாங்க. கொஞ்சம் அண்ணியை அத்தைக்கு போன் பண்ண சொல்லுங்க அண்ணா...”

“சரி சாதனா... இதோ இப்பவே பண்ண சொல்றேன்.”

“ஓகே அண்ணா.... வச்சிடுறேன்.”

“இரு சாதனா... நீ எப்படி இருக்க? உனக்கு அங்க பிடிச்சிருக்கா.... ரிஷி என்ன பண்றார்?” வெற்றி பொறுப்பான அண்ணனாக கேட்க....

“எனக்கு என்ன நல்லா இருக்கேன். இங்கதான் அத்தை இருக்காங்களே... அதனால நான் ப்ரீயா தான் இருக்கேன். ரிஷி ஹால்ல தான் இருக்கார்.”

“சரி சாதனா வச்சிடுறேன்.” வெற்றி வைத்து விட... தன் அண்ணனிடம் சாதாரணமாக பேசினாலும், போன்னை வைத்த பிறகு... அவள் கண்களில் இருந்து கண்ணீர் கொட்ட ஆரம்பித்தது.

சாதனா தைரியமான பெண் தான். ஆனால் இதுவரை வாழ்ந்த பிறந்த வீட்டை விட்டு புகுந்த வீட்டிற்கு வந்ததாலோ... அல்லது தன் தந்தை தமயனை விட்டு வந்ததோ... அதையெல்லாம் விட மிக முக்கிய காரணம், ரிஷிக்கு விருப்பம் இல்லது இந்த திருமணம் நடந்தது. எல்லாம் சேர்ந்து அவளை மனதளவில் பலகீனமாக்கி இருந்தது.

கணவன் தனக்கு பக்கபலமாக இருப்பான் என்ற நம்பிக்கையில் தான் ஒவ்வொரு பெண்ணும் புகுந்த வீட்டிற்கு செல்கிறாள். ஆனால் இங்கே அவளுக்கு பிரச்சனையே தன் கணவன் தான்.

இன்று மாலை அவன் அவளை அலட்சியமாக நடத்தியது வேறு அவளுக்கு பிடிக்கவில்லை... அவள் வீட்டில் அவள் அப்பாவோ அண்ணனோ அவளிடம் ஒருநாளும் அப்படி நடந்து கொண்டது இல்லை.

அதுவும் அம்மா வேறு இல்லை என்று அவளிடம் இருவருமே கனிவுடன் தான் நடந்து கொள்வார்கள். ரிஷிக்கு உதவ சென்ற அன்று மட்டும்தான், அவளை வெற்றி அடித்திருக்கிறான்.

இந்த சாதாரண செயலே அவளால் தாங்க முடியவில்லை.... இன்னும் அடுத்து ரிஷி என்னென்ன செய்வானோ என்று நினைக்கும் போதே கலக்கமாக இருந்தது.

உள்ளே சென்ற சாதனா ரொம்ப நேரமாக வராததால்.... “நீ போய் அவளை அழைச்சிட்டு வா....” என ஜோதி சொல்ல.... அவனுக்குமே இவ்வளவு நேரமாக அவள் என்ன செய்கிறாள் என தெரிந்து கொள்ளும் ஆர்வம் இருந்ததால்.... ரிஷி மறுக்காமல் எழுந்து சென்றான்.

கதவு லேசாக திறந்து தான் இருந்தது. அதனால் ரிஷி அதை மேலும் சிறிது திறக்க... கட்டிலில் உட்கார்ந்து அழுது கொண்டிருந்த சாதனா தான் தெரிந்தாள்.

அதைப் பார்த்ததும் ரிஷிக்கு ஒருமாதிரி ஆகிவிட்டது. அவனுக்கு தெரிந்து சாதனா குறும்பான பெண். தைரியமானவலும் கூட... அவள் இப்படி உட்கார்ந்து அழுவாள் என்று அவன் எதிர்ப்பார்க்கவே இல்லை....

வெளியில் இருந்தே கதவை மூடியவன், கதவை மெதுவாக தட்ட.... சாதனா கண்ணீரை துடைத்து விட்டு நிமிர்ந்து அமர்ந்தாள்.

ரிஷி அப்போது தான் வருவது போல் உள்ளே நுழைந்தான். “இங்க தனியா உட்கார்ந்திட்டு என்ன பண்ற? அம்மா உன்னை கூப்பிடுறாங்க வா...” அவன் அழைத்ததும் அவளும் சென்றாள்.

ஜோதி அங்கே உறவினர்களுக்கு இரவு உணவு பரிமாறப்படுவதை நின்று பார்த்துக்கொண்டு இருந்தார்.

“வா சாதனா நீயும் ரிஷியும் சாப்பிடுங்க.” என்றவர்,

“அக்கா இன்னும் பாயசம் போட்டுக்கோங்க....” என அவர் அக்காவை உபசரித்துக் கொண்டிருந்த போது... ப்ரீதா ஜோதியை கைப்பேசியில் அழைத்தாள்.

மகளிடம் இருந்து அழைப்பு என்றதும் சந்தோஷப்பட்டவர், இப்போது எப்படி பேசுவது என்று யோசிக்க... “அத்தை நீங்க போய் பேசிட்டு வாங்க, நான் பார்த்துகிறேன்.” என்ற சாதனா நின்று விருந்தினர்களை கவனிக்க ஆரம்பித்தாள்.

எல்லாவற்றிருக்கும் ஆட்கள் இருக்கிறார்கள். நின்று அவர்களுக்கு எந்த குறையும் இல்லாமல் கவனிக்க வேண்டும் அவ்வளவு தான்.

ஜோதி சென்றவர் அரைமணி நேரம் சென்றே வந்தார். வந்தவர் முகத்தில் அவ்வளவு பூரிப்பு. மகள் என்ன செய்கிறாளோ என கவலைப் பட்டால்....

எங்க வீட்ல மாமியார் இல்லை... அப்ப நான் தானே பார்த்துக்கணும் என்று அவள் இவருக்கே புத்தி சொல்கிறாள். எப்படியோ சந்தோஷமாக இருந்தால் சரி என்று நினைத்தார்.

அவர் வந்த போது... மருமகள் விருந்தினர்களை நன்றாக கவனிப்பதை பார்த்து இன்னும் மகிழ்ச்சியாக இருந்தது.

இரவு அவளும் ரிஷியும் ஒன்றாக சேர்ந்து தான் சாப்பிட்டனர். ரிஷியும் அதன்பிறகு அவளை வம்பிழுக்கவில்லை....

இரவு உணவிற்கு பிறகு அவளை அறைக்குள் அழைத்துக்கொண்டு வந்த ஜோதி “குளிச்சு எதாவது லேசான புடவை கட்டு மா... நான் இதோ வந்திடுறேன்.” என்று சென்று விட....

ஐயையோ ! ரிஷியோட தனியாக இருக்க வேண்டுமென்றாலே அவளுக்கு பயமாக இருந்தது.

அவள் நிதானமாக குளித்து கிளம்ப... ஜோதி கைநிறைய மல்லிகை பூவுடன் வந்தார். அதை மருமகளுக்கு சூடி அழகு பார்த்தவர் “ரிஷியோட பாட்டிகிட்ட ஆசிர்வாதம் வாங்கிக்கோ.... அவங்களுக்கு உடம்பு முடியலை ரூம்ல இருக்காங்க.” என்றார்.

“ஆமாம், இவ்வளவு நேரமாக தான் அவரை பற்றி நினைக்க கூட இல்லை... தவறு தானே... வீட்டின் மூத்த உறுப்பினர். தான் அவரை சென்று பார்த்திருக்க வேண்டும்.” என நினைத்தவள், ஜோதியோடு சென்றாள்.

இவர்கள் அந்த அறைக்கு சென்ற போது... பாட்டி கட்டிலில் கால் நீட்டி உட்கார்ந்து இருந்தார்.

“எப்படி இருக்கீங்க பாட்டி?” சாதனா கேட்க... அவளை முறைத்து பார்த்த அமிர்தா பாட்டி “ரொம்ப சீக்கிரம் கேட்டுட்ட....” என்றார் கேலியாக.... அப்படியே ரிஷியை போல்....

“சாரி பாட்டி, நீங்க இங்க இருந்தது தெரியாது.”

“உனக்கு தான் தெரியாது, உன் மாமியாருக்குமா தெரியாது...” அவர் ஜோதியை பார்க்க....

அமிர்தா பாட்டி சொல்லியது காதில் விழாதது போல்... “சாதனா, பாட்டிக்கு உடம்பு சரி இல்லை... அவங்க ரெஸ்ட் எடுக்கட்டும். நீ அவங்ககிட்ட ஆசீர்வாதம் வாங்கிட்டு கிளம்பு.” என்றார்.

சாதனா தன் மாமியார் சொன்னதை செய்ய... “அத்தை நீங்க தூங்குங்க.” என்ற ஜோதி சாதனாவோடு வெளியே வந்தார்.

“சாதனா, மேல ரெண்டாவது ரூம் ரிஷியோடது. போ மா...” ஜோதி சொல்ல.... படி ஏறிய சாதனாவிற்கு கால்கள் பின்னியது.

அறை வாசல் வரை வந்துவிட்டவளுக்கு, அதற்கு மேல் உள்ளே செல்ல தைரியமில்லை... அப்போது குளியல் அறை கதவை திறந்து கொண்டு ரிஷி வெளியே வந்தான்.

வெறும் முட்டி வரை இருந்த கால்சட்டை மட்டுமே அணிந்து இருந்தான். மேல் சட்டை எதுவும் அணியவில்லை... அப்போது தான் குளித்திருப்பான் போல.... ஆனால் அதெல்லாம் சாதனாவின் கவனத்தில் இல்லை....

அவள் அவனை பார்த்து வெட்கப்படவெல்லாம் இல்லை.... ஒரு வித பயமே இருந்தது. ரிஷியும் அவளைத் தான் பார்த்துக் கொண்டு இருந்தான்.

“உள்ள வான்னு உன்னை வெத்தலை பாக்கு வச்சு கூப்பிடனுமா...” அவன் கேட்டதும், சட்டென்று உள்ளே வந்த சாதனா தன்னை தைரியமாக காட்டிக்கொள்ள முயன்றாலும், அவள் முகம் வெளுத்து அவளை காட்டிக்கொடுத்தது.

ரிஷி சென்று ஒரு பனியனை எடுத்து அணிந்தவன், அவளைத் திரும்பி பார்த்து “ஏன் நின்னுட்டே இருக்க.... போய் தூங்கு...” என்றான்.

அவன் சொன்னதை சாதனாவால் நம்பவே முடியவில்லை.... அவள் எதையெதையோ நினைத்து பயந்து போய் இருந்தாள். ரிஷி மனம் மாறுவதற்குள் உறங்குவதே நல்லது என்று கட்டிலில் தள்ளி சென்று படுத்தவள், போர்வையை எடுத்து தலை முதல் கால் வரை மூடிக்கொண்டாள்.

ரிஷி அவளையே பார்த்தபடி நின்றிருந்தவன், பின்பு அந்த அறை கதவை சாத்திவிட்டு பக்கத்து அறைக்கு சென்று படுத்துக்கொண்டான். இன்று இரவு யாரையும் மாடி பக்கம் ஜோதி அனுப்பமாட்டார் என்று அவனுக்கு தெரியும்.

இங்கே தங்கள் அறைக்கு வந்த ப்ரீதா மிகவும் வெட்கப்பட... வெற்றி அவளை ஆசையாக அணைத்தான்.

“வீட்ல விருந்தாளிங்க எல்லாம் வச்சிட்டு வேண்டாமே... ப்ளீஸ்.” ப்ரீதா சொல்ல.... வெற்றி அவளின் உணர்வுகளுக்கு மதிப்பளித்தான். இருவரும் விடியும் வரை பேசியே பொழுதை கழித்தனர்.
 
Advertisement

Advertisement

Top