Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், tamilnovelwriters@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

நீயின்றி வாழ்வேனோ 8 2

Admin

Admin
Member


“யாரு நிறுத்த விட்டா? என்னைக் கேட்காமலையே பத்திரிக்கை வரை சொல்லிட்டாங்க. அப்படி இருந்தும் நான் நேகாவை போய்க் கல்யாணம் பண்ணிக்கக் கேட்டா.... அவ நடிக்கிறது தான் முக்கியம்னு சொல்லிட்டா..... பொம்பளைங்க எல்லாம் சுயநலவாதிகள். உங்களைப் பத்தி மட்டும் தான் யோசிப்பீங்க இல்லை...”

“இதுல என்னோட தப்பு என்ன ரிஷி? நான் வீட்ல சொன்னதுக்குச் சரின்னு சொன்னேன் அவ்வளவு தான்.”

“எல்லாம் உன்னால தான் சாதனா... நீ மட்டும் அன்னைக்கு நைட் என்னைத் தேடி வரலைன்னா... இப்படி எல்லாம் நடந்திருக்காது.”

“நான் உங்களுக்காகத்தான் வந்தேன் ரிஷி.”

“எனக்கு என்னைக் காப்பாத்திக்கத் தெரியும் சாதனா... நீ வந்ததுனால தான் இப்ப கல்யாணத்துல வந்து நிக்குது.” ரிஷி சொல்ல...

“சரி அப்படியே வச்சுக்கோங்க.... அதுக்கு இப்ப என்ன பண்ணப்போறீங்க?” சாதனாவும் பொறுமை இழந்து பேச....

“நான் அன்னைக்கே சொல்லிட்டேன் சாதனா.... இந்தக் கல்யாணம் என்னை எந்த விதத்துலேயும் கட்டுப்படுத்தாது... நான் எப்படி இருக்கனும்னு நினைக்கிறேனோ... அப்படித்தான் இருப்பேன்.” என்றான் ரிஷி அழுத்தமாக.

“இதுக்கு என்ன ரிஷி அர்த்தம்?”

“நீயே போகப் போகப் புரிஞ்சிப்ப....” என்றவன், அறையில் இருந்து வெளியே செல்ல....

அவன் சொன்னதைக் கேட்டுச் சாதனா பயந்துவிடவெல்லாம் இல்லை.... ரிஷி கொஞ்சம் முன்கோபியே தவிரக் கெட்டவன் எல்லாம் இல்லை... அதனால் அவள் தைரியமாகவே இருந்தாள்.

ராஜ்மோகனும் , ஜோதியும் வருபவர்களை வரவேற்க முன்பே மண்டபம் சென்றிருக்க... மதியம் ஒருமணி போல் ரிஷியும் சாதனாவும் சென்றனர்.

அப்போது அங்கே வெற்றியும், ப்ரீதாவும் ஏற்கனவே வந்திருந்தனர். தன் அண்ணனையும் அண்ணியையும் பார்த்ததும், ப்ரீதா வேகமாக வந்தாள்.

“வாங்க அண்ணா... வாங்க அண்ணி...” அவள் பெரியமனுஷி போல் அவர்களை வரவேற்க....

“கல்யாணம் ஆகி ஒரே நாள்ல இவ்வளவு மாற்றமா....” ரிஷி வியக்க....

“ம்ம்... அங்க மட்டும் என்னவாம்.... காலையில ரூமை விட்டு வெளிய வர வைக்கவே பெரியபாடா இருந்ததாமே.....அத்தை சொன்னாங்க.” என ப்ரீதா சிரிக்க....

“இவங்க இப்படி ஒவ்வொருத்தர் கிட்டயா சொல்றதுக்கு, பேசாம மொத்தமா எல்லோரையும் நிக்க வச்சி சொல்லிடலாம்.” என நினைத்தவன், தன் நண்பர்களைப் பார்ப்பது போல் அங்கிருந்து நழுவினான்.

ரிஷி சென்றதும் ப்ரீதாவும், சாதனாவும் ஒருவரை ஒருவர் பார்த்துச் சிரித்துக் கொண்டனர். வெற்றி வந்தவர்களைக் கவனிப்பதில் பிஸியாக இருந்தான்.

ப்ரீதாவும், சாதனாவும் தோழிகள் போல் பேசி சிரித்துக்கொண்டு இருந்தனர். அவர்களோடு அவர்கள் உறவுப் பெண்களும் இருந்தனர்.

“உங்க ரெண்டு பேருக்கும் ஒரு போட்டி... அதுல யார் ஜெயிக்கப் போறீங்கன்னு பார்க்கலாம்.” ப்ரீத்தாவின் அத்தை பெண் சுகந்தி சொல்ல....

“என்ன போட்டி?” என ப்ரீதாவும், சாதனாவும் அவளை ஆர்வமாகப் பார்க்க....

“ம்ம்... உங்க ரெண்டு பேருக்கும் ஒரே நாள்ல தான கல்யாணம் ஆகி இருக்கு. யாருக்கு முதல்ல குழந்தை பிறக்குதுன்னு பார்க்கலாம்.” என்றாள்.

“இதுக்குப் போட்டி வைக்கணுமா என்ன? நானே சொல்வேன் எங்க அண்ணன் தான் ஜெயிக்கும்.” என்றாள் ப்ரீதா..... அப்போது அங்கே ரிஷியும் வர.... எல்லோரும் அவனைப் பிடித்துச் சாதனாவின் அருகே உட்கார வைத்தனர்.

“அத்தான், நாங்க உங்களை நம்பி பந்தயம் வச்சிருக்கோம். நீங்க தான் எப்படியாவது எங்களை ஜெயிக்க வைக்கணும்.” சுகந்தி தீவிரமான குரலில் சொல்ல....

“சரி... என்னன்னு சொல்லு.... முடியுதான்னு பார்க்கலாம்.” எதோ நிஜமாகவே பந்தயம் என நினைத்து ரிஷி சொல்ல....

“பேச்சு மாறக்கூடாது சரியா....”

“ஏய் ! ரொம்பப் பில்ட்அப் குடுக்காம விஷயத்தைச் சொல்லு.....” என்றான் ரிஷி....

“அதாவது போட்டி என்னன்னா... முதல்ல ப்ரீதாவிற்கு க் குழந்தை பிறக்குதா.... இல்லை சாதனாவிற்கு க் குழந்தை பிறக்குமான்னு தான். நீங்க இருக்கிற வேகத்தைப் பார்த்தா... நீங்க தான் ஜெய்பீங்கன்னு தெரியும். இருந்தாலும், ஒரு வார்த்தை சொல்லி வைக்கலாம்னு....” எனச் சுகந்தி இழுக்க.....

“அத்தை இங்க முதல்ல வாங்க.” என ரிஷி கத்த....

எந்த அத்தையைச் சொல்ற டா... என்றபடி எல்லா அத்தைகளும் வந்து நின்றனர்.

“காலங்காத்தால வேற வேலை வெட்டி இல்லாம... எங்க ரூமுக்கு வந்து எட்டி பார்த்ததும் இல்லாம.... எல்லோர்கிட்டயும் போய் எங்களைப் பத்தி கிசுகிசு சொல்லிட்டு இருக்கீங்களா....நான் என் பொண்டாட்டி கூடத் தான ரூம்ல இருந்தேன். வேற யார் கூடவுமா இருந்தேன்.” ரிஷி உமாவை பார்த்து கேட்க....

போச்சு... எல்லார் முன்னாடியும் இருக்கிற மிச்ச மீதி மானத்தையும் இவன் வாங்கிறான் என நினைத்து, சாதனா தலையில் கைவைத்துக் கொண்டாள்.

“டேய் ரிஷி, தெரியாம பேசாத.... நான் ஒண்ணுமே சொல்லலை.... புதுசா கல்யாணம் ஆனவங்க, பாவம் அவங்களை ப்ரீயா இருக்க விடாம, இன்னைக்கே கோவில் குளம்னு அலைய வைக்கணுமான்னு தான் கேட்டேன்.”

“நீயும், உன் பொண்டாட்டியும் உங்க அம்மா அத்தனை தடவை கூப்பிட்டும் இறங்கி வரலை.... அதனாலதான் எல்லோரும் உங்களைக் கிண்டல் பண்றாங்க. மத்தபடி நான் சொன்னதுனால இல்லை...” உமா சொல்ல... ரிஷி அவரை நம்பவில்லை என அவன் பார்வையே சொன்னது.

“நான் குளிச்சிட்டு இருந்தேன் பெரியம்மா.... இவங்க தூங்கிட்டு இருந்தாங்க.” சாதனா சமாளிக்க....

“அப்படியா மா... சரிமா....” என வெகு பவ்யமாகச் சொல்லிவிட்டு உமா அங்கருந்து செல்ல...

அவங்கதான் நேர்லயே பார்த்தாங்களே.... அவங்ககிட்ட போய் எப்படிச் சொல்றா பாரு லூசு... என ரிஷி நினைக்க.... சாதனாவிற்கு ப் பிறகு தான் அவரிடம் தான் உளறியது புரிந்தது.

அவள் ரிஷியை பார்க்க பயந்துகொண்டு, வேறு எங்கோ பார்க்க... நல்லவேளை அப்போது ஜோதி வந்து அவர்களைச் சாப்பிட அழைத்தார்.

ரிஷியும், சாதனாவும் அருகருகே அமர.... அவர்களோடு விஜி, சுகந்தி, ரிஷியின் நண்பர்கள் எல்லோரும் அமர... அதே போல் வெற்றியும், ப்ரீதாவும் எதிர்வரிசையில் இருக்க... உடன் அவன் நண்பர்கள் இருந்தனர்.

அசைவ விருந்து பரிமாற வந்தவர்களிடம், சாதனா தான் சைவம் என்றதும், அவளுக்குச் சைவ உணவு வகைகள் கொண்டு வரப்பட்டது.

“முட்டை மட்டும் வைங்க.” எனக் கேட்டு வாங்கிக் கொண்டாள்.

“நீ சைவமா சாதனா...” ரிஷி கேட்க... அவள் ஆமாம் என்றாள்.

“உனக்கு இங்க உட்கார்ந்து சாப்பிட கஷ்ட்டமா இருக்குமா...”

“அப்படியெல்லாம் எதுவும் இல்லை... நானும் எங்க அம்மா இருந்த வரை சாப்டிருக்கேன். அப்புறம் தான் விட்டுட்டேன்.” என்றவள், அப்போது தான் ரிஷியின் இலையைக் கவனித்து விட்டு...

“ஐயோ ! இவ்வளவு ஐடமா.... கொம்புல இருந்து கொளம்பு வரை ஒன்னுத்துதையும் விடலை போல....உங்களுக்கு நான்வெஜ் பிடிக்குமா ரிஷி...” எனக் கேட்க....

“பிறகு... ரொம்பப் பிடிக்கும். எனக்கு அசைவம் இருந்தா தான் சாப்பாடு தொண்டையில இறங்கும். நீ என்ன பண்ற? எல்லாத்தையும் எப்படிச் செய்றதுன்னு கத்துக்கிற.... தினமும் நீ தான் எனக்குச் சமைக்கிற....” என்றான் கெத்தாக....

அவன் சொன்னதைக் கேட்டும் சாதனா அமைதியாகச் சாப்பிட....

“என்ன பதிலை காணோம்.” என்றான் ரிஷி.

“நான் சமைக்கிறதை சாப்பிட்டா... நீங்களே என்னைச் சமைக்க வேண்டாம்னு சொல்லிடுவீங்க.” சாதனா கேலியாகச் சொல்ல....

“நல்லா மட்டும் சமைக்கலைன்னு வச்சுக்கோ... அதை உன்னையே சாப்பிட வச்சிடுவேன். அதனால எப்படியாவது தப்பிசுடலாம்னு நினைக்காம, ஒழுங்கா சமைக்கக் கத்துக்கிற....” என்றான் மிரட்டலாக.... சாதனா அவனைப் பார்த்து ஒழுங்கு காட்டிவிட்டு முகத்தைத் திரும்பிக்கொண்டாள்.

பக்கத்தில் இருந்த சுகந்தி அவளிடம் எதோ கேட்க... சாதனா அவளோடு பேசிக்கொண்டிருந்த நேரம், ‘ஒழுங்கா காடுற... இருடி.” என நினைத்த ரிஷி, ஒரு சிக்கன் துண்டை அவள் இலையில் போட்டு விட்டு நல்ல பிள்ளை போல் சாப்பிட.... அதை எதிரில் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்த வெற்றி கவனித்து விட்டான்.

அவனுக்கு அதைச் சாதனாவிடம் சொல்வோமா... வேண்டாமா என்று குழப்பம். அவனுக்கே இருவரையும் பார்த்து ஆச்சர்யமாக இருந்தது. ரிஷி சாதனாவை திருமணம் செய்து கொண்டதும், மனம் மாறி விட்டானா என்ன? அப்படி மட்டும் இருந்தால்... அதிகமாகச் சந்தோஷப்படுவது தானாகத் தான் இருக்கும் என நினைத்துக்கொண்டான்.

இன்று தான் இருவரும் கேலியும் கிண்டலுமாகப் பேசிக்கொள்கிறார்கள். நாம் வேறு எதாவது சொல்லப்போய்ச் சண்டை வந்துவிடுமோ என அவனுக்குக் கவலையாக இருக்க.... அவன் இதை மெதுவாக ப்ரீதாவிடம் சொல்ல.... அவள் அவர்கள் இருவரையும் கவனித்தாள்.

சாதனா சுகந்தியோடு பேசும் தீவிரத்தில் இருந்தாள். ரிஷி அவளை ஓரக்கண்ணில் பார்த்துக்கொண்டு இருந்தான்.

“அண்ணி, பேசுறதிலேயே கவனமா இருக்காம... கொஞ்சம் இலையில என்ன இருக்குன்னு பார்த்து சாப்பிடுங்க.” ப்ரீதா மறைமுகமாகக் குறிப்பு கொடுக்க....

அவளைப் பார்த்து முறைத்த ரிஷி “சாதனா, அங்கப் பாரு... அவங்க உங்க சொந்தக்காரங்களா...” எனக் கேட்க... சாதனா யாரை சொல்கிறான் என்று பார்த்த நொடி, ரிஷி அவள் இலையில் இருந்து சிக்கனை எடுத்து விட்டான்.

“யாரைங்க சொல்றீங்க?”

“இல்லை, அவங்க போய்டாங்க. நீ சாப்பிடு...” என்றான் ரிஷி.

வெற்றியும் ப்ரீதாவும் சிரிக்க.... ரிஷி அவள் இலையில் இருந்து எதையோ எடுத்ததைச் சாதனாவும் கவனித்து இருந்தாள்.

“என்ன பண்ணீங்க? ஒழுங்கா சொல்லுங்க.”

“நான் ஒன்னும் பண்ணலை பா...” ரிஷி அப்பாவியாகச் சொல்ல....

“இல்லை எதோ பண்ணி இருக்கீங்க. அவங்க சிரிக்கிறாங்க பாருங்க.” என்றாள் சாதனா....

“அவ இன்னைக்குத் தான் சிரிக்கிறாளா... கல்யாணம் நிச்சயம் ஆனதுல இருந்து அப்படித் தான் லூசு மாதிரி இருக்கா.... நீ அதை எல்லாம் கண்டுக்காத...” ரிஷி சொல்ல.... சாதனா அவனை நம்பாமல் பார்த்தாள்.

அப்போது புகைப்படம் எடுப்பவர் வந்து இருவரையும் ஊட்டி விடச் சொல்ல.... முதலில் சாதனா தன் இலையில் இருந்து இனிப்பை எடுக்க....

“உவ்வ... எனக்கு ஸ்வீட்டே பிடிக்காது... நான் சுத்த அசைவம்.” ரிஷி சொல்ல.... அவனை முறைத்தாலும், அவன் இலையில் இருந்து கொஞ்சமாகப் பிரியாணி எடுத்துச் சாதனா கொடுக்க... ரிஷி வாங்கிக் கொண்டான்.

அடுத்து ரிஷியின் முறை, தன் இலையில் இருந்து என்ன எடுப்பது என்பது போல் அவன் பார்க்க....

“இங்க இருந்து எடுத்து கொடுங்க...” என்றாள் சாதனா...

“நான் எனக்குப் பிடிச்சது தான் கொடுப்பேன்.”

“இது போங்கு ஆட்டம். எனக்குப் பிடிச்சது தான் குடுக்கணும்.”

“நான் இன்னைக்குச் சைவத்தைக் கையாள கூடத் தொட மாட்டேன். உனக்கு வேண்டாம்னா போ....” ரிஷி முறுக்கிக் கொள்ள....

“சரி எதையோ ஒன்னை கொடுங்க...” என்றாள் சாதனா கடுப்பாக....

இவனிடம் ஒருவாய் சோறு வாங்க என்ன பாடு பட வேண்டியது இருக்கு என நினைத்தவள், ஐயோ ! என்னத்தைக் கொடுக்கப் போறான்னோ தெரியலையே... எனப் பயந்து கொண்டு இருந்தாள்.

அதை இதை எடுப்பது போல் போக்கு காட்டிவிட்டு, கடைசியில் முட்டையில் பாதியை எடுத்து அவன் கொடுக்க..... தப்பிச்சேன் டா சாமி எனச் சந்தோஷபட்டபடி, சாதனா முட்டையோடு அவன் விரலையும் வேண்டுமென்றே சேர்த்து நறுக்கென்று கடித்து வைக்க....

“ஹா...அடிப்பாவி ! சைவம்னு சொல்லிட்டு... இப்படி விரலை கடிச்சு வைக்கிறயே....” என்றான் ரிஷி பாவமாக.... சாதனாவிற்கு அவனைப் பார்க்க சிரிப்பாக வந்தது.

திரும்பி காரில் வீட்டிற்குச் செல்லும் போது... சாதனா ரிஷியோடு நெருங்கி உட்கார்ந்து வந்தாள். அவனோடு இருந்த ஒவ்வொரு நொடியும் ரசிக்கும் படி இருந்தது. அவன் செய்கை ஒவ்வொன்றுமே ரசனையாக இருந்தது.

ரிஷிக்கு சாதனா மீது கோபம் இருந்த போதிலும், அவன் மற்றவர்கள் முன்பு அதைக் காட்டிக்கொள்ளவில்லை.... அந்தக் குணம் ரிஷியிடம் அவளுக்கு மிகவும் பிடித்தது.

அவர்கள் சென்ற கார் அப்போது ஒரு கோவிலை கடக்க....

கடவுளே ! எப்பாடியாவது ரிஷிக்கு என்னைப் பிடிக்க வச்சிடுங்களேன் என வேண்டியபடி சென்றாள்.
 
Top