Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பூந்தென்றல் தீண்டுமோ-1

Advertisement

Samyukta Ram

Member
Member
வீட்டின் முன்னறையில் சோகமாக இருந்த தந்தையைக் கண்டு வருந்தினாள் எழிற்கயல்.வேலை போன அந்த ஒரு வாரமாக இப்படித்தான் சரியாக ஊணுறக்கம் இல்லாமல் சோக சிலையாக அமர்ந்திருந்தவரைப் பார்க்க பார்க்க மனம் வலித்தது அவளுக்கு.மருதைய்யா திருச்சி பேக்டரி ஒன்றில் இருபது வருடங்களாக வேலைப் பார்த்து வந்தார்.திடிரென பேக்டரி நஷ்டத்தில் ஓடுவதாகக் கூறி மூடிவிட்டனர்.

சிறு வயதினருக்கே சட்டென வேலை கிடைக்காத போது நாற்பத்தைந்து வயதான அதிகம் படிக்காத அவருக்கு எப்படி வேலைக் கிடைக்கும்?...இனி என்ன என்ற எண்ணமே அவரை பயமுறுத்துகிறது என்று புரிந்தது அவளுக்கு.வெறும் பன்னிரெண்டாம் வகுப்பை அப்போதுதான் முடித்திருந்த அவளுக்கு எந்த வேலை கிடைக்கும்.அப்படியும் தகுதிக்கு தகுந்த வேலை கிடைக்குமா என்று நான்கு நாட்களாக அவள் அலைந்துப் பார்த்தாள் தந்தைக்கு தெரியாமல் தான்.ஏனெனில் மகளை வேலைக்கு அனுப்பி அந்த சம்பளத்தில் தான் வாழ்வதா என்று அதை தன்மான மிக்கவரான அவர் ஒப்ப மாட்டார் என்பது அவளுக்குத் தெரியும்.

ஆனால் அவள் நினைத்ததுப் போல் வேலை ஒன்றும் கிடைக்கவில்லை.வெயிலில் சோர்ந்து அப்போதுதான் வீட்டிற்கு திரும்பியவள் தந்தை அமர்ந்த கோலம் கண்டு வருந்தினாள்.அவள் வருந்துவதை அவர் பொறுக்க மாட்டார் என்பதால் வருவித்த புன்னகையோடு அவர் அருகில் சென்று அமர்ந்தவள் உள்ளே சமையலறையில் இருந்த தாயை,

"அம்மா மூணு டம்பளர் கொண்டாங்க"என்று கத்த தலையை நிமிர்த்தி அப்போதுதான் அவளைக் கண்ட மருதைய்யன்,

"எதுக்குடா டம்பளர்?"என்று கேட்க,

"உங்களுக்கு பிடிக்குமேன்னு மாதுளம் ஜூஸ் வாங்கிட்டு வந்தேன்ப்பா"என்று கூறும்போதே டம்பளரோடு அவள் அன்னை மீனாட்சி வந்தாள்.தாய் வைத்த டம்பளரில் கொண்டு வந்து ஜூஸை ஊற்றியவள் பெற்றோருக்கு கொடுத்து தானும் ஒன்றை எடுத்துக் கொண்டாள்.

"என்னங்க ஏதாச்சும் சோலி கிடைச்சுதா?"என்று மனைவி வினவ,

"எங்க மீனா இப்ப எல்லா இடத்திலையும் ஆட்கொறப்பு செய்யறாங்களாம் புதுசா எடுக்கறதில்லேன்னு ஒருவா பத்தாப்புல எல்லாரும் சொல்றாங்க"என்று அவர் வருந்த,

"கவலைப்படாதீங்க ப்பா... நமக்கு நல்ல காலம் கண்டிப்பா வரும்" என்று கயல் நம்பிக்கையோடு கூற அப்போது மருதைய்யனின் சின்னஞ்சிறு போன் ஓசையெழுப்ப எடுத்துப் பேசியவர் விஷயத்தைக் கேட்டு அதிர்ந்தாற் போல் ஆனார்.

"என்னங்க போன்ல என்ன சொன்னாங்க?ஏன் இப்படி அதிர்ந்து உட்கார்த்துட்டீங்க?"என்று மீனாட்சி பதட்டத்தோடுக் கேட்க,

"சின்னம்மா ரொம்ப உடம்பு முடியாம இருக்காங்களாம்!என்னை உடனே பாக்கனும்னு சொல்றாங்களாம்...என்னை உடனே கிளம்பி வர சொல்றாரு குத்தகக்காரரு!"என்று கூற,

"அப்போ உடனே கிளம்பலாம்...சொந்தம்னு சொல்ல உங்களுக்கு இருக்கிறது அவங்க ஒருத்தரு தான்"

"ஆமா ஆனா நீங்க இப்ப வர வேணாம்!நான் போயி பாத்திட்டு போன் பண்றேன்...அப்ப வரலாம்"என்று கூறியவர் உடனே அவர் சொந்த ஊரான வீரத்தேவனுக்கு கிளம்பி விட்டார்.

சென்றது மேல் அவரிடமிருந்து போன் வராமல் இருக்க இங்கே தாயும் மகளும் கவலைக் கொண்டனர்.அவர்கள் கவலையை போக்குவதுப் போல அன்று காலை போன் வந்தது.மருதைய்யனின் சின்னம்மா இறந்துவிட்டதாகவும் அவருக்கு சொந்தமான வீட்டையும் நிலத்தையும் மருதைய்யனின் பேரில் எழுதி வைத்திருப்பதாகவும் கூறியவர் தாங்கள் இனிமேல் வீரத்தேவனிலேயே இருக்கப் போவதால் வீட்டை ஒழித்து பொருட்களை கட்டி வைக்கும்படி கூறினார்.சிறிய அத்தை இறந்தது வருத்தமாக இருந்தாலும் மேலே என்ன என்ற கவலை அகன்றதில் நிம்மதியாக உணர்ந்தார் மீனாட்சி.

இரண்டு நாட்களில் மருதைய்யன் வர அவ்வளவு வருடங்கள் இருந்த ஊரை துக்கத்தோடு பிரிந்து கிராமத்தை நோக்கிப் புறப்பட்டனர்.பசுமை கொஞ்சும் வயல் வெளிகளும், தோப்புகளையும் கண்கொட்டாமல் பார்த்தாள் கயல்.பார்த்தவுடன் அந்த அழகான ஊர் அவள் உள்ளத்தைக் கொள்ளைக் கொண்டு விட்டது.இனி இங்கே தான் இருக்கப் போகிறோம் என்றதில் அவள் மனம் மகிழ்ச்சியில் துள்ளியது.

கிராமத்து வீடாக முற்றும் கூடம் பின்கட்டு கொல்லை அதன்பின் பூக்கள் நிரம்பிய தோட்டம் என்று சிறியதாக இருந்தாலும் அழகாக இருந்த வீடு அவர்களுக்கு மிகவும் பிடித்துவிட்டது.ஒருவாரத்தில் அந்த சூழ்நிலைக்கு தக்கவாறுப் பொருந்திக் கொண்டுவிட்டனர்.சின்னம்மாவின் காரியங்கள் முடிய அன்று நிம்மதியோடு அமர்ந்திருந்த மருதைய்யன் மனைவி மகள் அருகே வந்து அமர,

"மீனா! ஒரளவு இந்த வாழ்க்கை நமக்கு பிடிப்பட்டுடிச்சு!இனி கயல் படிப்பை பத்தி யோசிக்கனும்"என்று அவர் கூற,

"ஆமாங்க காலேசு தொடக்கப் போகுதுன்னு கயல் சொன்னா..சட்புட்டுன்னு சேர்த்து வுட்டுடுங்க! ஏற்கெனவே ஒரு வருசம் ஜாஸ்தியா போச்சு!"என்றார் மீனாட்சி.அதன்படி பக்கத்து டவுனில் இருக்கும் கல்லூரியில் சேர்ந்தாள் கயல்.

முதல் நாள் பரபரப்பாக கிளம்பினாள் கயல்.கல்லூரி வாழ்வைப் பற்றி எத்தனையோ கேட்டிருக்கிறாள் கயல்.அதை தானே இப்போது அனுப்பவிக்க போவது அவளுள் குதூகலத்தை உண்டாக்கியது.முதல் நாள் என்பதால் மருதைய்யன் தானே அவளை கொண்டு வந்து விட்டார்.பி.லிட் தமிழ் வகுப்பை அவள் தேட எதிரில் அவளைப் போலவே பார்த்தபடி ஒரு பெண் வர இருவரும் மோதிக் கொண்டனர்.இருவர் கையிலிருந்த புத்தகங்கள் விழ இருவரும் சாரி என்றபடி தங்கள் புத்தகத்தை பார்த்து எடுத்துக் கொண்டனர்.நிமிர்ந்த அந்த பெண் நட்பாக புன்னகைக்க கயலும் அவளைப் பார்த்துப் புன்னகைத்தாள்.இவள் புறம் அவளை கையை நீட்டியபடி,

"நான் பூங்குழலி பி.லிட் தமிழ்...நீங்க?"என்று அவள் கேட்க அதை சொன்னதில் புன்னகை மேலும் விரிய,

"நான் எழிற்கயல்...நானும் பி.லிட் தமிழ்தான்"என்று கூற,

"வாவ் அப்ப ஒரே க்ளாஸ் தான் வாங்க க்ளாஸை கண்டுப்பிடிப்போம்"என்று பூங்குழலி கூறவும் சரியென கயல் தலையாட்ட இருவரும் அவரிவரைக் கேட்டு வகுப்பில் சென்று அமர்ந்தனர்.ஆசிரியர் வருவதற்கு இன்னும் நேரம் இருந்ததால் இருவரும் பேசத் தொடங்கினர்.

"நீங்க எந்த ஊரு?"என்று குழலிக் கேட்க,

"சொல்ல முடியாது!"என்று கயல் கூறியதும் ஆவென்று பார்த்தாள் குழலி அதில் பக்கென்று சிரித்த கயல்,

"பின்ன என்ன ஒரே க்ளாஸ் மேட் ஆயிட்டோம் பிரண்ட்ஸும் ஆயிட்டோம்னு நினைக்கிறேன்...இதுல நீங்கன்னு சொல்லிக் கேட்டா நான் பதில் சொல்ல மாட்டேனாக்கும்"என்று வேடிக்கையாக கயல் முறைக்க,

"ஓ நீ அப்படி வரியா!சரி சரி இனிமே வாடி போடி தான்...இப்ப சொல்லு நீ எந்த ஊரு?"

"வீரத்தேவன்...நீ?"

"எதே வீரத்தேவனா அங்க எங்க உங்க வீடு?"என்று குழலி ஆச்சரியமாகக் கேட்க,

"நாங்க இப்பத்தான் பதினைஞ்சு நாள் முன்னாடி திருச்சிலேந்து வீட்டை காலி பண்ணி வீரத்தேவன் வந்தோம்.. நான் பிறந்து வளர்ந்தது திருச்சில தான்.."என்று விவரிக்க,

"அப்போ சோலையம்மா பாட்டி வீட்டுக்கு வந்தவங்க நீங்கதானா?"என்று குழலி குதூகலமாக கேட்க,

"ஆமா அது உனக்கு எப்படி தெரியும்?!"

"நானும் வீரத்தேவன் தான்!...உங்க வீட்டுக்கு கிழக்குல தான் எங்க வீடு இருக்கு"என்று குழலி கூறவும் கயல் சந்தோஷத்தில் துள்ளாத குறைத்தான்.

ஒரே வகுப்பு என்றதில் நட்பாகி இருந்தவர்கள் ஒரே ஊர் என்றதும் நெருங்கிய தோழிகள் ஆகிவிட்டனர்.முதல் நாள் என்பதால் வகுப்பு சாதாரணமாக இருந்தது.மாலையும் ஒருவருக்கொருவர் பேசி சிரித்தபடி தங்கள் ஊருக்கு பஸ் ஏறினர்.பஸ்ஸில் செல்லும் போது,

"ஆமா நீ ஒரு வருஷம் லேட்டுன்னு சொன்னியே ஏன்?"என்று குழலிக் கேட்க,

"அது நாலாம் கிளாஸ் போது ஏதோ உடம்பு வந்திடுச்சு அதான் நடுவுல ஒரு வருஷம் கேப் ஆயிடுச்சு!... உனக்கு ஏன் லேட்?"

"அது...அது வீட்ல ஏதோ தொந்தரவு அதான் ஒரு வருஷம் போயிடுச்சு"என்று அவள் மென்று விழுங்க அதைப்பற்றி மேலே துருவாமல் விட்டுவிட்டாள் கயல்.

அவரவர் வீட்டுப் பாதையில் பிரியும் முன் தங்கள் வீட்டிற்கு அவசியம் வந்தே தீர வேண்டும் என்று குழலியை கேட்டுக் கொண்டு சென்றாள் கயல்.

ஒரு மாதம் சென்றிருந்தது.அதற்குள் இருவருமாக விடுமுறை நாட்களில் டவுனில் இருக்கும் சினிமா பார்க் லைப்ரரி என்று சுற்றியிருந்தனர்.சேர்ந்தே துணிக்கடை சென்று ஒரே மாதிரியான சுடிதாரை வாங்கி வந்தனர்.பார்த்தவர் எல்லோரும் இருவரும் ஒட்டிப் பிறந்த இரட்டையரா என்று கேட்கும் அளவு உணவு உறக்கத்தை தவிர மீதி நேரம் சேர்ந்தே இருந்தனர்.அன்று கல்லூரியிலிருந்து ஊருக்கு பஸ்ஸில் வந்து இறங்க முகத்தை திருப்பியிருந்த கயலின் நாடியைப் பிடித்துக் கொஞ்சிய குழலி,

"என்னடி அழகி இன்னும் என் மேல கோபமாய் தான் இருக்கியா?"என்று பாவமாக கேட்க,

"பேசாதடி என்னோட!...நானும் எவ்ளோ நாளா கூப்பிட்றேன் வீட்டுக்கு ஒரு தடவையாச்சும் வந்தியா?!"என்று தோழியை முறைக்க,

"சாரிடி நான் எப்படியாவது பேசி அவங்க கிட்ட பர்மிஷன் வாங்கி இந்த ஞாயித்து கிழமை கண்டிப்பா வந்திட்றேன்...சரியா இப்பவாவது என்னை பாத்து சிரிடி"என்று கயலின் இடுப்பில் கிச்கிச்சு மூட்ட கலகலவென சிரித்தாள் அவள்.

அன்று வீட்டில் உணவுக்கு பின் அனைவரும் முன்கட்டில் அமர்ந்திருக்க அதுவே சரியான சமயம் என்று எண்ணிய குழலி தன் தாயிடம்,

"அம்மா அது நான் என் பிரெண்ட் கயல்ன்னு சொல்வேன்ல..."என்று ஆரம்பிக்க,

"ஒரு மாசமா நீ அதை மட்டும் தான் சொல்ற"என்று அவளின் மாமன் மகன் விக்னேஷ் கவுண்டர் கொடுக்க அவனை முறைத்தவள் திரும்பி தன் தாயிடம்,

"அம்மா அவ வீட்டுக்கு என்னை கூப்பிட்றாமா!... இன்னிக்கி போயிட்டு நாளைக்கு மதியானமா திரும்பி வந்திட்றேன்மா ப்ளீஸ்மா"என்று தாய் சிவகாமியின் தோளை உலுக்க அவர் பதில் கூறுமுன் வாயிலிலிருந்து,

"அந்த தங்குற வேலையே வேணாம்"என்ற குரல் கடினமாக வர குழலியை முறைத்தபடி உள்ளே வந்தான் இளஞ்சேரல்.குழலியின் அண்ணன்.அண்ணன் பேச்சில் முறைத்தவள்,

"அம்மா பாரும்மா இந்த அண்ணன நான் என் பிரண்ட் வீட்டுக்குப் போறது தப்பா?"என்று அன்னையிடம் முறையிட,

"என்னய்யா புள்ள ஏதோ ஆசைப்படுது...இப்பத்தானே நாலு இடம் சந்தோசமா போயி வர முடியும்...கண்ணாலம் காட்சின்னு ஆயிட்டா வீடே பாடுன்னு தானே இருக்கனும்"என்று மகளுக்கு பரிந்து பேச,

"நான் ஒண்ணும் அவளை கட்டுப்படுத்த மாட்டேன் அத்த!"என்று விக்னேஷ் முணுமுணுத்தது யார் காதில் விழவில்லை என்றாலும் குழலி காதில் நன்றாகவே விழ திரும்பி அவனை முறைத்தாள்.அவனா அதுக்கெல்லாம் பயப்படுவான்.அவள் ஏனோ காதலாகப் பார்த்துவிட்டதைப் போல அவளைப் பார்த்து சிரித்து வைத்தான்.அடங்கவே மாட்டடா நீ என்று மனதுள் அவனை திட்டினாள்.அதற்குள் அண்ணன் ஏதோ பேச ஆரம்பிக்க அதில் தன் கவனத்தைத் திருப்பினாள்.

"அம்மா நான் குழலிய போக வேணாம்னு சொல்லல போகட்டும் ஒரு அரைமணியோ ஒரு மணி இருந்திட்டு வந்திடட்டும் யாரோ முன்பின் தெரியாதவங்க வீட்ல ராதங்கறது சரியில்லை சொல்லிட்டேன்"என்று கண்டிப்பாகக் கூற தன் தோழியை யாரோ என்று கூறிவிட்டான் என்று கோபம் பொங்கிய குழலி,

"இத பாருண்ணா என் கயலை யாரோன்னு சொன்ன நா கேட்டுட்டு சும்மா இருக்க மாட்டேன்...ஆமா!"என்று தோழிக்காக பரிய,

"என்ன பெரிய பிரெண்ட்டு அவளை இந்த ஒரு மாசமாத்தேனே உனக்கு தெரியும்...என்னமோ பல வருஷ பழக்கம் போல பேசுறியே"

"பிரண்ட் ஆகுறதுக்கு வருஷ கணக்கு ஒன்னும் தேவையில்லை... எனக்கு அவள பாத்தோன்ன புடிச்சுப் போச்சு..."என்று வாதிட,

"இது ஏதுடா எனக்கு போட்டி!"என்று யார் கூறியது என்று கூற தேவையில்லை.அதில் கோபம் தலைக்கேற கீழே இருந்த டம்பளரை எடுத்து அவன் மேல் வீசினாள்.அது அவன் முகத்தில் மோதும் முன் சரியாக கேட்ச் பிடித்தவன் தன் காலரை தூக்கி விட்டுக் கொண்டான்.

"குழலி!"என்று அவளை கண்டித்தனர் அண்ணனும் தாயும்.

"அண்ணா நா வேற எங்கேயும் போகனும்னு கேக்கல...அவ இவ்வளோ நாளா கூப்பிட்டும் வரலேன்னு வருத்தப்படுறா...ப்ளீஸ் அண்ணா தயவு பண்ணி என்னை அனுப்பி வை!"என்று கண்கலங்கிக் கேட்க இதுவரை எதற்கும் பிடிவாதம் பிடித்திறாத தங்கையின் போக்கு விசித்திரமாகத் தோன்ற அவள் கண்ணீர் விடுவதைப் பார்க்க முடியாமல் சரியென்று தலையசைத்தான்.அவன் ஒத்துக் கொண்டான் எனவும்,

"ஐயோ தேங்க்யூ அண்ணா...நீ தான் உலகத்துலேயே பெஸ்ட் அண்ணா!"என்று சந்தோஷத்தில் அவன் கையைப் பிடித்து உலுக்கியவள் தோழி வீட்டிற்கு செல்ல தயாராக தன் அறை நோக்கி ஓடினாள்.

தங்கை இவ்வளவு உற்சாகம் கொள்ள அந்த பெண்ணிடம் அப்படி என்னதான் இருக்கிறது என்று யோசித்தான் அவன்
 
Top