Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பூவாசம் மேனி வீசுதம்மா - 7

Advertisement

Sarayu

Tamil Novel Writer
The Writers Crew
பூவாசம் மேனி வீசுதம்மா – 7

தோப்புப்பட்டி கிராமமே திருவிழா கோலம் பூண்டிருந்தது. சும்மாவா பின்னே, நடக்கவே நடக்காது என்று நினைத்த விஷயம் அல்லவா இப்போது நடந்துகொண்டு இருக்கிறது.

சேரவே மாட்டார்கள் என்று நினைத்தவர்கள் அல்லவா, இப்போது சேர்ந்து நிற்கிறார்கள்.

அதுவும் சம்பந்திகளாக..!!

ஆம்.!! நடந்துகொண்டு இருப்பது கஸ்தூரி, கமலக்கண்ணனின் திருமணம். பார்ப்பதற்கு அப்படியொரு ஜோடிப் பொருத்தம். அனைவரும் சொன்னது இதைதான்.

இது சாத்தியமா??!! என்று எண்ணியிருந்தவர்களுக்கும், இதெல்லாம் எங்கே நடந்திடப் போகிறது என்று இருந்தவர்களுக்கும், இன்று இந்தத் திருமணம் மகிழ்ச்சியைக் கொடுத்தது எனலாம்.

கண்ணனும், கஸ்தூரியும், மாப்பிள்ளை பெண் கோலத்தில் அமர்ந்திருக்க, அவர்களின் திருமணம், அங்கே மாரியம்மன் கோவிலில் தான் நடந்தது.

“அம்மன் முன்ன வச்சுத்தான் தாலி கட்டுவேன்..” என்றுவிட்டான் கண்ணன்.

கமலக்கண்ணன் வீட்டில் இருந்து, மாரியம்மன் கோவில் கொஞ்சம் பக்கம் என்பதால், கோவிலில் இருந்து வீடு வரைக்கும் பந்தல் போட்டிருந்தார்கள். சாப்பாடு பந்தி கூட அந்த பந்தலுக்குக் கீழே தான்..

கஸ்தூரியின் வீட்டிலிருந்து, டீ கடை வரைக்கும் பந்தல் போட்டு, மைக் செட் வைத்து செல்லப்பாண்டியும் அமர்க்களப் படுத்தினார். சந்திரபாண்டி அதற்குமேலே, அவரின் வீட்டினையும், மாரியம்மன் கோவிலையும் அலங்கார விளக்குகளால் ஜொலிக்க விட்டார்.

ஆகமொத்தம் இருவரின் அப்பாவும் போட்டிப் போட்டுக்கொண்டு இந்த திருமணத்தை செய்தார்கள் என்றுதான் சொல்லவேண்டும்.

இந்தத் திருமணம், கண்ணன் கஸ்தூரியிடம் தன் மனதினை புரியவைத்தோ, இல்லை இருவரின் வீட்டினரும் அமர்ந்து பேசி சம்பந்தம் முடித்தோ நடந்திடவில்லை.

ஒருவித பிடிவாதத்தின் பேரில் நடக்கிறது.

ஆம்..!! பிடிவாதமே தான். சந்திரபாண்டியும், செல்லப்பாண்டியும் கொண்ட பிடிவாதம்.

முருகேஸ்வரிக்கு எந்த பெண்ணைப் பார்த்தாலும் பிடிக்கவில்லை. கஸ்தூரியை விடச் சிறப்பாய் பெண் பார்க்க வேண்டும் என்று பார்க்க, ம்ம்ஹும் எதிலுமே மனது திருப்தியுற வில்லை.

நேராய் சென்று மகனிடமே கேட்டார் “உனக்கு எப்படியாபட்ட பொண்ணு வேணும்...” என்று.

அவனோ “நீ எப்படியாப்பட்ட பொண்ணு பாக்குற..??” என,

“எம்மவனுக்கு பொருத்தமா, இந்த வீட்டுக்கு ஏத்தது மாதிரி பாக்குறேன்..” என, “அப்படியே பாரு...” என்றுவிட்டு மில் கிளம்பிவிட்டான்.

“ஏ... கண்ணா.. நா என்னத்த கேக்குறேன்.. நீ என்னத்த சொல்லுற...” என்று முருகேஸ்வரி பின்னேயே போக, அவனோ “எனக்கு நேரமாச்சும்மா..” என்று சென்றுவிட்டான்.

பக்கத்து வீட்டு முத்தரசி அவள் வீட்டிலிருந்து எட்டிப்பார்க்க, மகன் கிளம்பிப் போன கடுப்பில் இருந்த முருகேஸ்வரி “என்ன டி எவ்வீட்டு மேல என்ன பார்வ வேண்டி கிடக்கு..” என, “தம்பி என்னத்துக்கு இம்புட்டு வேகமா போகுது..” என்று அவளும் கேட்க,

“அ..!! நீ வந்து கணக்கு எழுதிக்கொடுன்னு கேட்டுட்டா.. அதான் ஓடுறான்.. போவியா.. வந்துட்டா, அடுத்த வீட்ல என்ன நடக்குதுன்னு பாக்க..” என்று சடைத்தபடி உள்ளே வர,

சந்திரபாண்டி “எதுக்கு எல்லார் கூடவும் வாய் கொடுக்குற..” என்று கடிந்தார்.

முருகேஸ்வரி எரிச்சலாய் விளக்க, “ம்ம் உம்மவன் மனசுல என்னருக்குன்னு இன்னுமா உனக்கு புரியல முருகு..” என்று கணவர் கேட்டதில்,

“என்னருக்கு??!!” என்று நிஜமாகவே புரியாது பார்த்தார் முருகேஸ்வரி.

“இல்ல, ஒனக்கே, அந்தப்புள்ள கஸ்தூரிய விட அழகா மருமக வேணும்னு தோணிருக்கே, அப்போ அவனுக்கு அவள மாதிரி பொண்டாட்டி வேணும்னு தோணியிருந்தா என்ன செஞ்சிருப்ப??” என்று சந்திரபாண்டி கேட்டதும்,

“ஆத்தாடி..!!” என்று ஆடிப்போனார் முருகேஸ்வரி.

“என்னங்க??!! என்ன சொல்லுறீங்க...” என்று இன்னமும் அதிர்ச்சி நீங்காமல் கேட்க,

“அப்படியொரு அபிப்பிராயம் அவன் மனசுக்குள்ள இருக்குமோன்னு தோணுது. இல்லாம போயி செல்லப்பாண்டியோட பேசிருக்க மாட்டான். அந்தப்புள்ள கூட வம்பு வளத்திருக்க மாட்டான்..” என்று சொல்ல, முருகேஸ்வரி அப்படியே அமர்ந்துபோனார்.

‘இவள்லாம் யார் வீட்டுக்கு போயி என்ன பொழப்பு செய்ய போறாளோ..’

‘முதல்ல இவ ஆத்தாக்காரி செஞ்ச வேலைக்கு, இவள நம்பி எவன் கட்டுவான்..’

‘மேனாமினுக்கி.. எப்படி போறா திமிர்த்தனமா...’

இதெல்லாம் கஸ்தூரியை, முருகேஸ்வரி பேசிய பேச்சுக்கள் தான். இதுமட்டுமா இன்னும் இன்னும் எத்தனையோ. இப்போதோ அவளைப் போல, அவளைக் காட்டிலும் மேலாய் பெண் வேண்டும் என்றால், அப்போது தன் மனதில் கஸ்தூரி எந்த இடத்தினில் இருக்கிறாள் என்று தோன்றியது முருகேஸ்வரிக்கு.

அதையும் தாண்டி மகன் மனதில் அவள் எங்கே இருக்கிறாள் என்ற கேள்வி??!!

கலவரமாய் கணவர் முகம் பார்க்க “ஆசை யாருக்கும் வரும் போகும்.. ஆனா அதுவே அஸ்திவாரமா ஆகிடக் கூடாது..

அதுக்குள்ள அவனுக்கு கல்யாணம் பண்ணிடணும்னு பாக்குறேன்.. புரியுதா...” என, அப்போதுதான் கஸ்தூரிக்கு மாப்பிள்ளை பார்த்து பேசிவிட்டனர் என்ற செய்தி ஊர் முழுக்க பரவியது.

ஆம்..!! கஸ்தூரி சம்மதம் என்று சொன்னதுமே, இரண்டே நாட்களில் மாப்பிளை வீட்டினரை வரச் சொல்லிவிட்டார் செல்லபாண்டி. எதற்கும், யாருக்கும் அவகாசம் கொடுக்க அவருக்குப் இஷ்டமில்லை. கண்ணன் அவரோடு பேசவேண்டும் என்று பார்க்க, அவரோ சரியாய் அவன் வந்து போகும் நேரங்களில் கடையில் இருப்பதில்லை.

இரண்டு நாட்களில் மாப்பிள்ளை வீட்டினர் வர, பெண் பார்த்து பிடித்துவிட்டது என்று சொல்ல, கஸ்தூரியோ அப்போதும் ‘உன்னோட முடிவுப்பா..’ என்றிட, அடுத்த வாரம் பரிசம் போட வருவதாய் சொல்லிவிட்டுச் சென்றிருந்தனர்.

அந்தச் செய்தி காட்டுத் தீயாய் கிராமத்திற்குள் பரவ, முருகேஸ்வரிக்கோ “அவளுக்கு கல்யாணம் முடியறக்குள்ள எம்மவனுக்கு நான் பொண்ணு பார்த்து முடிக்கணும்...” என்ற வேகமே கிளம்பிவிட்டது.

சந்திரபாண்டிக்கோ இதனைக் கேட்டு, சற்று நிம்மதி என்றாலும், மகனுக்கு இது தெரிந்தால், என்ன செய்வான் என்று யோசனைப் போனது.

கமலக்கண்ணனுக்கு இச்செய்தியை மரிக்கொழுந்து போனில் அழைத்து சொல்லிவிட, அன்றைய தினம் பாதி நாள் வேலை தான் என்பதால், ஏற்கவனே வீட்டிற்குக் கிளம்பிக்கொண்டு இருந்தவன், இப்போதோ அடித்துப் பிடித்து வந்தான். வந்தவன் நேராய் சென்று நின்றது செல்லப்பாண்டியிடம் தான். இந்த நேரத்திற்கு அவன் வருவான் என்று எதிர்பார்க்காதவர், கடையினில் இருந்தவரிடம் சந்தோசமாய் பேசிக்கொண்டு இருக்க,

“மாமா...!!” என்று வந்து நின்றவனைக் கண்டு, கொஞ்சம் திடுக்கிட்டார் எனலாம்.

“அப்படி என்ன என்கிட்டே குறை பார்த்தீங்க.. ஏன் நான் எல்லாம் உங்க கண்ணுக்குத் தெரியலையா??!! யாரு எவன்னே தெரியாது அவனை நம்பி கஸ்தூரிய கொடுப்பீங்க. உங்க கண்ணு முன்ன வளந்தவன் நான், எனக்குக் கொடுக்க மாட்டீங்களா??!!” என்று
கொஞ்சம் சத்தமாகவே பேச,

“நான் யாருக்கும் இங்க பொண்ணுத் தர்றேன்னு உறுதி தரலையே..” என்றார் செல்லப்பாண்டி.

“உறுதி தரலை.. ஆனா என்னை உங்களுக்குத் தெரியலையா..??”

“வீண் பிரச்சனை வேணாம்..”

“என் வாழ்க்கைன்னு வர்றப்போ நான் பிரச்சனை செய்வேன் மாமா...” என்றவனின் குரல் தன்னப்போல் உயர, கடையில் இருந்த இரண்டொருவர் வேடிக்கைப் பார்க்க,

“இருந்திருந்து எம்மவளுக்கு ஒரு நல்லது நடக்கப் போகுது. அதை இப்படி பேசி கெடுத்துட வேணாம்..” என்றவர், கடையின் உள் பகுதிக்குச் சென்றுவிட, அங்கே யாருமில்லை.

கண்ணனும் பின்னோடு சென்றவன், “ கஸ்தூரி உங்க மகதான். ஆனா அவளத்தான் நான் என் வாழ்க்கை முழுசுக்கும்னு நெனச்சு வச்சிட்டேன்.. என்னால மாத்திக்க முடியாது மாமா.. இப்போ சொல்லுங்க.. எங்கப்பா அம்மாவ வந்து நான் பேச சொல்றேன்..” என்று நிற்க,

செல்லப்பாண்டியோ “அதெல்லாம் நடக்குற காரியம் இல்ல கண்ணா.. வேணாம்.. யார் முன்னமும் என் பொண்ணு பேச்சு வாங்க வேணாம்.. தலை குனிஞ்சு நிக்க வேணாம்..” என,

“இவ்வளோ சொல்றீங்களே.. சரி சொல்லுங்க.. உங்க பொண்ணு, இப்போ நீங்க பார்த்த மாப்பிள்ளைய பிடிச்சிருக்கு சொன்னாளா??!! அவன் மூஞ்சியவாது நிமிர்ந்து பார்த்தாளா?? இருக்காது.. பார்த்திருக்கவும் மாட்டா, சொல்லியிருக்கவும் மாட்டா...” என்று அத்தனை உறுதியாய் கண்ணன் சொல்லவும், ஆடித்தான் போனார் செல்லப்பாண்டி.

நிஜம் அதுதானே..!!

‘உன்னிஷ்டம்ப்பா... உன்னோட முடிவுப்பா..’ என்றாளே தவிற, ஒருவார்த்தை எனக்குப் பிடித்திருக்கிறது என்று சொல்லிடவே இல்லையே.

அத்தனை ஏன் “மாப்புளய பாத்தியா??” என்று கேட்டதற்குக் கூட “நீ பாத்துட்டல்லப்பா..” என்றுதானே சொன்னாள்.

‘ஐயோ..!!’ என்று இருந்தது.

“அவளுக்கு என்னையத் தவற வேற யாரையும் பிடிக்காது. பாக்கவும் மாட்டா. இதுக்காக போய் நீங்க அவள திட்டவேணாம்.. ஏனா இன்னமும் எம்மனசுல என்ன இருக்குன்னு அவக்கிட்ட நான் சொல்லவேயில்லை. அப்படியே சொன்னா கூட, அவளுக்குமே எம்மேல விருப்பம் இருந்தாலும் கூட, அவ நீங்க சொல்றவன கட்டிக்கிட்டு, போனா போகுதுன்னு ஒரு வாழ்கைய வாழ்வா. இதுக்கா நீங்க இவ்வளோ முயற்சி செய்றீங்க. எம் பொண்ணு நல்லா வாழணும்னு...” என, அவரால் ஒன்றுமே சொல்ல முடியவில்லை.

“யோசிங்க மாமா.. உங்க கண்ணு முன்னாடி உங்க பொண்ணு சந்தோசமா வாழ்றது பெருசா.. எங்கயோ கண் காணாத இடத்துல அவ, ஏப்ப தாப்பையா ஒரு வாழ்க்கை வாழ்றது முக்கியமா. அதைவிடுங்க, நான் சொல்றேன் மாமா, நீங்க பார்த்திருக்க மாப்பிள்ள எவ்வளோ பெரிய ஆளா வேணா இருக்கட்டும். ஆனா கண்டிப்பா அவனோட இருக்கிறத விட, என்கூட கஸ்தூரி ஆயிரம் மடங்கு சந்தோசமா இருப்பா. நான் அப்படிப் பார்த்துப்பேன்..” என, செல்லப்பாண்டி என்ன சொல்ல முடியும்.

தொய்ந்து போய் அமர்ந்துவிட்டார். ஏடாகூடமாய் பேசி சண்டை போட்டால் ‘சரிதான் போடா ...’ எனலாம்,

அவனோ ‘உன் மகளை நான் சந்தோசமாய் பார்த்துக்கொள்வேன்..’ என்றல்லவா சொல்கிறான்.

சிறு வயதில் ‘மருமவனே..’ என்று வாய் நிறைய அழைத்தவர் தான். ஒதுங்கியது சந்திரபாண்டி தானே. இவரல்லவே..

சந்திரபாண்டியை நினைக்கையில் இப்போது கண்ணன் வந்து நிற்பதும் கண்டு மனதில் சட்டென்று ஒரு பெருமை வந்து உட்கார்ந்துகொண்டது செல்லப்பாண்டிக்கு.

‘கடசில உம்மவன், என்னையத் தேடி வந்து நிக்கிறான்...’ என்று எண்ணியவர்,

“இதுக்கெல்லாம் உங்கப்பாரு சம்மதிக்க மாட்டாரு..” என்றிட,

“நான் சம்மதிக்க வச்சு கூட்டிட்டு வருவேன்.. நீங்க பொண்ணு தருவீங்களா..” என்று அப்போதும் கேட்க, “நடக்கிற காரியமா இதெல்லாம்..” என்றார் செல்லப்பாண்டி மழுப்பலாய்.

“நடத்திக் காட்டுறேன் மாமா..” என்றுவிட்டு போனான் கமலக்கண்ணன்.

அவனின் பொறுமை எல்லாம் காணாது போயிருந்தது. யாரின் மனதையும் நோகடிக்கக் கூடாது என்று எண்ணியிருந்தது எல்லாம் காற்றில் பறந்தது. மனம் அனலாய் தகிக்க, அவனின் அனலை அதிகரிக்கவென்றே அவனி கண்ணில் பட்டாள் கஸ்தூரி.
அவளின் தோட்டத்தில் செடிகளுக்கு நீர் பாய்ச்சிக்கொண்டு இருந்தாள். சின்னதாய் பார்டரிட்ட சேலை, தலை நிறைய பூ, இரு கைகளிலும் சிவப்பும் பச்சையும் கலந்து கண்ணாடி வளையல் போட்டு, அதற்கு இரு பக்கமும் தங்கத்தில் வளவி போட்டு, கழுத்தில் வேறு உபரியாய் ஒரு பெரிய சங்கிலி போட்டு ஒப்பனையாகவே இருந்தாள்.

பார்த்த நொடியில் இதெல்லாம் கண்ணன் கண்ணில் பட்டுவிட, செய்திருக்கும் அலங்காரத்திற்கும் அவளின் முகத்திற்கும் எவ்வித சம்பந்தமும் இல்லாது இருப்பது போல் இருந்தது.

‘பண்றதெல்லாம் பண்ணிட்டு இப்படிவேற நின்னுப்பா...’ என்று பல்லைக் கடித்தவன், பைக்கை வெளியே நிறுத்திவிட்டு,
தோட்டத்தினுள் செல்ல, அவன் வந்தது கூட அவளுக்குத் தெரியவில்லை..

எதோ ஒரு யோசனை.. அப்படியே நின்றுவிட்டாள்.. கை அதுபாட்டிற்கு பைப் பிடித்து செடிகளுக்கு நீர் பாய்ச்சிக்கொண்டு இருந்தது.

“கஸ்தூரி..!!” என்ற கமலக்கண்ணின் அழைப்பில், தூக்கிவாரிப் போட, “ஆ..!!” என்று அவள் பார்க்கும் முன்னமே, அவளின் கையில் இருந்த பைப்பை பிடுங்கி கீழே போட்டவன், அவளின் கரம் பற்றி இழுத்து தன்னருகே நிற்க வைக்க, வேகமாய் கஸ்தூரியின் பார்வை சுற்றிலும் பார்த்தது.

யாரேனும் இருக்கிறார்களா என்று??!! நல்லவேளை யாருமே இல்லை..

“யாரும் பார்த்தா பார்க்கட்டும்.. என்னைய பார்த்தா எப்படி டி இருக்கு உனக்கு..” என்று கண்ணன் பேசும்போதே, கஸ்தூரி விலகிப் போகப் பார்க்க,

“நீ என்னை விட்டு எங்கயும் போக முடியாது.. போகவும் விடமாட்டேன்..” என்றான், பிடியையும், குரலையும் கடினமுறச் செய்து.

“ம்ம்ச்.. போயிடு..” என்று அவள் வலி பொருத்து சொல்ல,

“நான் போறது இருக்கட்டும்.. நீ இந்த ஊரத்தாண்டி போறது என் பொண்டாட்டியா, என்கூட மட்டும்மாத்தான் இருக்கும்.. இருக்கணும்..” என,

“எனக்கு எங்கப்பா சொல்றதுதான்..” என்றாள் கஸ்தூரி பிடிவாதமாய்.

“ஏய்..!! நிறுத்து டி.. அப்படியென்ன உங்கப்பா என்னயவிட ஒசத்தியா பார்த்துட்டார்..” என,

“எங்கள வேணாம்னு இருக்கவங்க, எங்களுக்கும் வேணாம்.. அதுவும் நீ..” என்று அவனை நேருக்கு நேர் பார்த்தவள், “வேணவே வேணாம்...” என்று நிறுத்தி நிதானமாய் சொல்ல,

“சொல்லிக்க.. நம்ம கல்யாணம் நடந்த அப்புறம் இதை நீ எப்படிச் சொல்றன்னு நானும் பாக்குறேன்...” என்று கமலக்கண்ணன் வார்த்தைகளை கொட்டிவிட்டுச் செல்ல, கஸ்தூரியோ சிலையென அப்படியே நின்றிருக்க,

இவை அனைத்தயும், இவர்களுக்குப் பின்னே இருந்த, கண்ணனின் சோளக்காட்டில், மோட்டார் போட வந்த சந்திரபாண்டியின் கண்களில் அப்படியே விழுந்து வைத்தது. உடன் அவரின் நண்பர் ஒருவரும் இருக்க, சந்திரபாண்டிக்கு பெருத்த அவமானமாய் போய்விட்டது.

அவர் மட்டும் பார்த்திருந்தால் கூட, உடனே அங்கேயே மகனிடம் வந்து எதுவும் பேசிருப்பார். உடன் அவர் நண்பரும் இருக்க, சந்திரபான்டியால் யோசிக்க கூட முடியவில்லை. அவருமே சிலையாகித்தான் போனார்.

அதற்கு முன்னம் தான் அவரின் நண்பர் “என்ன சொல்லு சந்திரா, செல்லப்பாண்டி மவள நீ பொண்ணு பேசிருக்கணும்யா. பழசெல்லாம் விட்டுத்தள்ளு.. அந்தப்புள்ளைக்கு என்ன கொறச்சலு.. ஆனா ஒன்னு செல்லப்பாண்டி வைராக்கியமா இருந்து நெனச்சத நடத்திப்புட்டான்..” என,

“என்ன சொல்ற நீ??!!” என்றார் சந்திரபாண்டியும்.

“உம்மவன பேசலாமேன்னு நான்கூட அன்னிக்கு சொன்னேன்.. அதெல்லாம் வேண்டாம்னு சொல்லிட்டான்.. அன்னிக்கு நீ வேணாம்னு சொன்ன, இப்போ அவங்க வேணாம்னு சொல்றாங்க...” என்கையில் தான் இந்த காட்சிகள் எல்லாம் கண்ணில் பட,
அப்போதும் கஸ்தூரி ‘வேணாம்..’ என்று சொல்ல, ‘நான் வேணாம்னு ஒதுக்கினவங்க இப்போ எங்கள வேணாம்னு சொல்றதா??!!’ என்ற கேள்வி அவருள்.

மகன் இத்தனை தூரம் வருவான் என்று அவர் நினைக்கவில்லை. அதிலும் கஸ்தூரியின் கை பிடித்து உரிமையாய் பேசியது எல்லாம் அவரால் ஜீரணிக்கக் கூட முடியவில்லை.. அப்படியே இருக்க, அவரின் நண்பரோ

“சந்திரா.. சொல்றேன்னு தப்பா எடுத்துக்காத.. ஒன்னு கெடக்க ஒன்னு ஆகுறதுக்கு முன்ன, முடிவெடு.. இப்பவும் எதுவும் கெட்டுப்போகல.. நீ மட்டும் கஸ்தூரிய உம்மருமவளா கொண்டு போனா.. இந்த ஊரே உன்ன மெச்சிப்போகும்யா.. பரவாயில்ல சந்திரபாண்டி பெருந்தன்மையா நடந்துட்டாப்ளன்னு உம்மேல எல்லாருக்கும் இன்னமும் மரியாதை வந்திடும்யா...” என, அது அப்படியே பசுமரத்தாணிப் போல் பதிந்தது சந்திரபாண்டிக்கு.

‘ஊரே உன்ன மெச்சும்யா... உம்மேல எல்லாருக்கும் இன்னமும் மரியாதை வந்திடும்யா..’ இவ்வார்த்தைகள் சந்திரபாண்டிக்குக் கொடுத்த பிடிவாதத்தின் பேரிலும்,

‘வேணாம்னு சொன்னவங்க, தேடி வரட்டும்.. வந்து எம்மவனுக்கு உங்க மகள கொடுங்கன்னு கேக்கட்டும்.. உங்க மகதான் எங்க வீட்டுக்குன்னு சொல்லி பேசட்டும்.. அப்புறம் பாப்போம்...’ என்ற செல்லப்பாண்டி மனதில் விளைந்த பிடிவாதத்தின் பேரிலும் தான் இந்தத் திருமணம் நடந்தது..

அவர்களும் பெண் கேட்டு வர, இவர்களும் மறுக்கவில்லை..

செல்லப்பாண்டி மகளின் முகம் பார்க்க “இப்பவும் எப்பவும்.. உன்னோட முடிவுதான்ப்பா..” என, அந்த அப்பாவின் முகத்தில் ‘இப்ப வாங்கடா..!! ஒருவார்த்தை இனி எவனாவது எம்மவள சொல்லட்டும்..’ என்ற பெருமை வந்து அமர்ந்துகொண்டது..

‘சந்திரபாண்டிக்கு எம்புட்டு பெரிய மனசு.. கடைசில கஸ்தூரிய மருமவளா கொண்டு வந்துட்டாப்ல.. பழசு எல்லாம் மறந்து சம்பந்தம் வைக்கிறதுக்கும் ஒரு மனசு வேணும்...’ என்ற ஊரார்கள் சிலரின் பேசுக்கள் காதில் விழுந்து சந்திரபாண்டி முகத்திலும் ஒரு பெருமை வந்து ஒட்டிக்கொண்டது.

இப்படி நடந்ததுதான் கண்ணன், கஸ்தூரி கல்யாணம்..

ஆனால் இனி எல்லாம் அவர்களின் கையில் தான் இருக்கிறது..

போர்களமா?? பூக்களமா??
 
:love: :love: :love:

அடேய் உங்க வெட்டி வீரப்புக்காக தான் இந்த கல்யாணமா???
பையன் சந்தோசமா கட்டிவச்சாங்கன்னு இருக்கிறான்........
இதுக்கு முருகேசே பரவாயில்லை போல.......
பையனுக்கு விருப்பமனு தெரிஞ்சதும் மனசு மாத்திக்கிட்டாங்களே.......

கண்ணா கஸ்தூரிகிட்ட உன் பாச்சா பலிக்குமா???

கஸ்தூரி போர்க்களத்தில் ஒரு பூக்களம் :p :p :p
 
Last edited:
Top