Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பெண் சிலை

Advertisement

இப்பாரானது நிலாவுக்கு டாடா பாய் பாய் கூறி ஆதவனை எதிர் நோக்கி காத்திருந்த நேரத்திலே அவளது வேலைகள் தொடங்கி விட்டன. அதிகாலையிலே எழுந்து குளித்து முடித்து, வாசல் தெளித்து கோலம் போட்டு, பால் காய்ச்சி, காபி போட்டு அவளது கணவரையும், மகளையும் எழுப்பி, காய்கறிகளை நறுக்கி சமையல் செய்து, பூஜை செய்துவிட்டு தன் கணவரயும் மகளயும் அலுவலகத்திற்க்கும் பள்ளிக்கும் கிளப்பும் வரை காலில் சக்கரம் கட்டி விட்டாற்போல் வேலை செய்துக் கொண்டே இருப்பாள். பிறகு உட்கார்ந்து காலை உணவை முடித்தவுடன் மறுபடியும் அவளுக்கு ட்யூட்டி ஆரம்பமாகி விடும். வீட்டைப் பெருக்கி சுத்தம் செய்து, துணிகளை துவைத்து காய வைத்து, சமான் மத்தப் பாத்திரங்களை கழுவி வைத்து மாலையில் தன் மணாளணும் மகளும் வந்தவுடன் சிற்றுண்டி செய்து கொடுத்து, இரவு உணவை செய்து அனைவரும் உண்டபின் சமையலறையை சுத்தம் செய்து வைத்து உறங்க செல்ல இரவு பத்து ஆகிவிடும்.

வார நாட்களில் தான் வேலை இருக்கிறது, வார இறுதியான ஞாயிறன்றாவது அவளுக்கு வேலை இருக்காதல்லவா என்றால் இல்லை என்றே கூற வேண்டும். ஒரே ஒரு வேலையை தவிர, அவளது குடும்பத்தினரை தம் தம் பணிக்கு கிளப்புவது. மீதி இருக்கும் அனைத்து வேலைகளை அவள் தான் செய்தாக வேண்டும்.அனைவருக்கும் விடுப்பு என்றால் அன்று தான் அவளுக்கு வேலை அதிகாம இருக்கும்.


அவளது கணவர் வாசுதேவன் அடிக்கடி ஜானகியிடம் "என்ன ஜானகி இன்னுமா செய்ற? லேட் ஆயிடுச்சி. வீட்டுலே இருக்கறதுனால உனக்கு ஒன்னுமே தெரிய மாட்டேங்குது. எவ்ளோ கஷ்டபட்டு சம்பாதிக்றேன் தெரியுமா உனக்கு? உனக்கு சம்பாதிச்சா தானே தெரிவதற்கு. நீ வீட்ல சும்மா தான இருக்குற" என அவள் வீட்டு வேலை மட்டும் தானே செய்கிறாள் அதில் என்ன கஷ்டம் இருக்கப்போகிறது என எண்ணி காலையில் திட்டி தீர்த்துவிடுவார்.

ஜானகிக்கு கஷ்டமாக இருந்தாலும் வெளியே காட்டி கொள்ள மாட்டார். அனைத்து வேலைகளையும் இன்முகத்துடனே செய்வாள். ஜானகியும் படித்து பட்டம் பெற்று அவளது மகள் ப்ரீத்திக்கு ஐந்து வயது ஆகும் வரை வேலைக்கு சென்று கொண்டிருந்தவள் தான்.ஆனால் கணவன் மனைவி இருவரும் வேலைக்கு செல்வதால் குழந்தையை பார்த்துக்கொள்ள ஆள் இல்லாததால் வாசுதேவன் ஜானகி வேலை விட்டு விடுமாறு கூறிவிட்டார்.

அவளது மகள் ப்ரீத்தி வளர்ந்தவுடன் வேலைக்கு செல்வதாக ஜானகி கூற "அதான் நானே போதுமான அளவுக்கு சம்பாதிக்கிறேன்ல. அது போதும் நம்ம குடும்பத்துக்கு. நீ வேலைக்குலாம் போக தேவை இல்லை.நம்ப குடும்பத்த மட்டும் கவனித்துக்கிட்டாளே போதும்" எனக்கூறி மறுத்துவிட்டார்.

கணவர் தான் இப்படி இருக்கிறார் என்றால் மக்கள் ப்ரீத்திக்கும் ஜானகி வேலைக்கு செல்வதில் இஷ்டம் இல்லை. அம்மா வேலைக்கு சென்றாள் எனில் தானும் வீட்டு வேலைகளில் சிறு சிறு வேலைகளை செய்ய வேண்டும், பள்ளியில் இருந்து சோர்வாக வரும் போது ஸ்நாக்ஸ் தர கூட ஆள் இருக்க மாட்டார்கள், தன் வேலைகள் அனைத்தும் தானே செய்து கொள்ள வேண்டும் ஆனால் இப்போது அம்மா வேலைக்கு செல்லாததால் வீட்டு வேலைகளை அவரே முழுவதும் செய்துவிடுகிறார். மாலை பள்ளியில் இருந்து வந்தவுடன் சுட சுட ஸ்நாக்ஸ் ரெடி ஆக இருக்கும். மேலும் அவளுக்கு ரெகார்ட் வரையவும் ப்ராஜெக்ட் செய்யவும் கூட உதவியாக இருக்கிறார் என பக்குவபடாத அவ்வயதில் தனக்கு சாதகமான சுயநலமான முடிவையே எடுத்தாள்.

வீட்டு வரவு செலவுகள் அனைத்தையும் வாசுதேவனை பார்த்துக் கொள்வதால் ஜானகியிடம் பணம் என்பது அவ்வளவாக இருக்காது.மளிகை சாமான்,காய்கறிகளை கூட அவரே வாங்கி வந்து விடுவார்.அவளுக்கென்ன ஒரு சேலை, ஏன் ஒரு பொட்டு வாங்க வேண்டுமென்றால் கூட வாசுதேவனிடமே அவள் காசு கேட்க வேண்டும்.வாசுதேவன் கணக்கு எழுதி வைத்து விட்டு காசை கொடுத்து விடுவார் எனினும் ஜானகிக்கு தான் தனது ஒவ்வொரு தேவைக்கும் கணவரிடம் பணம் வாங்குவது சங்கடமாக இருக்கும். அதனாலேயே அவள் எளிமையாக வாழ்வாள்.

இவ்வாறு வருடங்கள் உருண்டோட ப்ரீத்திக்கும் திருமணம் ஆனது. அவளுக்கு திருமணமான மூன்று மாதங்களிலே வாசுதேவனுக்கு அவனது பிசினஸில் நஷ்டம் ஏற்ப்பட்டது. அவர்கள் குடும்பம் நடுத்தர குடும்பம் என்பதால் ப்ரீத்தியின் கல்யாண செலவுக்காக சிறிது பணம் கடன் வாங்கி விட்டு, மீதியை அவர்கள் சேமிப்பில் இருந்து செலவழித்தனர். இப்போது வரும் வருமானம் எல்லாம் கடன் தொகையை அடைக்கவே சரியாக இருக்கவே, ஜானகி தான் வேலைக்கு சென்று உதவுவதாக கூற வாசுதேவனும் ப்ரீத்தியும் "இந்த வயசுல உனக்கு யார் வேலை தருவா? நாங்களே பாத்துக்குறோம்" எனக் கூறி மறுத்து விட்டனர். ப்ரீத்தியும் கடனை அடைக்க பணம் கொடுத்து உதவினாள்.

வாசுதேவனின் பிஸ்னஸும் நஷ்டத்தில் இருந்து மீண்டு லாபத்தை ஈட்ட துவங்கியது. ப்ரீத்திக்கும் வருண் என்னும் மகன் பிறந்தான். வருண்ணிற்கு மூன்று வயது ஆனதும் அவனுக்கு காதுக்குத்து விழா வைத்தனர் வீட்டிலுள்ளோர். அந்த விழா இனிதே நடைபெற்றுக் கொண்டிருந்தது. வாசுதேவனும் சீர் செய்து அசத்தி விட்டார் அப்போது ப்ரீத்தியின் கணவர் சூர்யா ஒரு சிறிய நகை பெட்டியுடன் வந்து "அத்தை இந்தாங்க, இந்த மோதிரத்தை வருணுக்கு போட்டு விடுங்க. இது உங்க சம்பாதியத்துல வாங்குனது தான்" எனக் கூறினான். இதைக் கேட்ட ஜானகி உட்பட அனைவருக்குமே அதிர்ச்சியாக இருந்தது. "போட்டு விடுங்க அத்தை" என சூர்யா வற்புறுத்தவே தயங்கிக்கொண்டே ஜானகி வருணுக்கு அதை அணிவித்தாள். விழா முடிந்ததும் அனைவரும் வீட்டிற்கு வந்த உடனே ப்ரீத்தியும் வாசுதேவனும் ஜானகியை பிடித்துக்கொண்டு "நீ எப்போதிலிருந்து வேலைக்கு போக ஆரம்பிச்ச? ஏன் எங்ககிட்ட சொல்லல? என அடுக்கடுக்காக கேள்விகளை கேட்க ஆரம்பித்தனர்.ஜானகிக்கு தெரிந்தால்தானே கூற, அவள் முழித்துக் கொண்டிருந்தார்.

"அங்க அத்தை கிட்ட என்ன விசாரணை?" என சூர்யா கேட்க "அம்மா எப்போதிலிருந்து வேலைக்கு போக ஆரம்பிச்சாங்கனு கேட்டுட்டு இருக்கோம்" என பதிலளித்தாள் ப்ரீத்தி.

"அத நான் சொல்றேன்.அத்தைக்கு சின்ன வயசுல இருந்தே கதை எழுதுற பழக்கம் இருந்திருக்கு. அந்த கதைகளை நான் பிரீத்தி வீட்டுக்குப் போகும்போது எதிர்ச்சியா பாத்துட்டு அத்தை கிட்ட கேட்டேன்,அப்ப அவங்க தான் இதெல்லாம் எழுதினதா சொன்னாங்க. நான் அத்தை கிட்ட இருந்து அதை வாங்கிட்டு போயிட்டு புக்கா வித்து அதிலிருந்து வந்த காசுல தான் அந்த மோதிரத்தை வாங்கினேன்.இது சின்ன வருமாணமா இருந்தாலும் அத்தையே சொந்தமா சாம்பாதிச்சது.அத்தை வேலைக்கு போயிட்டு சம்பாதிக்கிறேனு சொல்லும் போதெல்லாம் நீயும் மாமாவும் வேணாம்னு சொல்லிட்டீங்க. இது அவங்க வாழ்க்கை. அவங்க வேலைக்கு போகனுமா போகக் கூடாதுனு அவங்க தான் முடிவு எடுக்கனும்.நீங்க எல்லாம் இல்ல. அவங்க சம்பாதிச்சு சொந்த கால்ல நிக்கனும்னு ஆசைப்படுறாங்க, அதை ஏன் தடுக்கனும்?என்ன தான் மாமா சீர் செய்தாலும் அத்தைக்கு அவங்க சம்பாதிச்ச காசுல அவங்க பேரனுக்கு வாங்கி தர சந்தோஷம் கிடைக்காது. ஏன் மாமா சப்போஸ் ப்ரீத்தியையும் வருண பார்த்துகறத்துக்காக அத்தை மாதிரி வீட்டிலேயே வச்சுக்கிட்டா உங்களுக்கு சந்தோஷமா இருக்குமா? பிரீத்தி நீ சொல்லு,உங்க அம்மா மாதிரி நீ வேலைக்கு போகாம என்னையும் வருணையும் மட்டும் பார்த்துட்டு வீட்ல மட்டும் உன்னால இருக்க முடியுமா? மாமாக்கு ஒரு கஷ்டம் என்றவுடனே நீ உதவி செஞ்சல, அதே மாதிரிதானே அத்தைக்கும் அவங்களோட கணவருக்கு உதவனும்னு தோன்றியிருக்கும். அவங்களோட ஒவ்வொரு தேவைகளுக்கும் உங்களை சார்ந்தே இருக்கனும்ன அவங்களுக்கு அது கஷ்டமா இருக்காதா?" என அவனின் ஒவ்வொரு கேள்வியும் ப்ரீத்தியையும் வாசு தேவனையும் உறுத்தியது.

"அம்மா சாரிமா.நாங்க எங்க பக்கத்துல இருந்து மட்டுமே யோசித்தோமே தவிர உன் பக்கத்தில் இருந்து யோசிக்கல" என ப்ரீத்தி ஜானகியிடம் கூற, "நம்ம வீட்ல எல்லாம் பெண்களை சிலையாக வச்சிக்கிறோம். அவங்களுக்கு வடிவம் கொடுத்து நமக்கு ஏத்த மாதிரி மாத்திக்கிறோம். இது அவங்க வாழ்க்கை,அவங்க தான் முடிவு எடுக்கனும்னு நம்ப நினைக்கிறதே இல்லை. இனியாவது இதெல்லாம் மாறட்டும்" என சூர்யா கூற வாசுதேவனுக்கு தான் ஜானகியை வீட்டுக்குள்ளே அடைத்து வைத்திருக்கிறோம் என்று அல்லாமல் அவரது திறமையையும் பூட்டி வைத்து இருந்திருக்கிறோம் என குற்ற உணர்ச்சியாக இருந்தது.

வாசுதேவன் சூர்யா கூறியவற்றை புரிந்துகொண்டு ஜானகிக்கு அவளது துறையில் முன்னேற உதவியாக இருந்தார். ஜானகியும் சாதிக்க வயது தடை இல்லை என உழைத்துக் கொண்டிருந்தார்.

பெண்களுக்கு படிப்பு சுதந்திரம், ஓட்டுபோட சுதந்திரம் போன்றவைகள் இருந்தாலும் பொருளாதார சுதந்திரம் அனைத்து பெண்களுக்கும் இருக்கின்றதா என்பது கேள்விக்குறியே. தன் கையே தனக்கு உதவி என்பதை போல அனைவரும் பொருளாதார சுதந்திரதோடு வாழ்தல் அவசியம். பெண்கள் என்றால் வீட்டைப் பார்த்துக்கொண்டு குழந்தைகளை கவனித்துக் கொண்டு அவர்களின் காலத்தை கழிக்க வேண்டும் என்று இல்லாமல் அவர்களுக்கும் தனி வாழ்க்கை உண்டு, கனவுகள் உண்டு, திறமைகள் உண்டு என புரிந்து கொண்டு அவர்களை அவர்களது துறையில் பறக்கவிடவேண்டும்.குருவி போல் இருக்கும் ஒவ்வொரு பெண்களுக்குள்ளும் உயரப் பறக்கும் கழுகும் இருக்கிறது.
 
Top