Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மஞ்சள் வெயில் மாலையிலே!-1

Advertisement

praveenraj

Well-known member
Member
இந்தக் கதையின் பெரும்பாலான கதாபத்திரங்கள் மராத்தி, ஹிந்தி, பெங்காலி, ஆங்கிலம் முதலிய மொழியையே பேசுவார்கள். ஆனால் நம்முடைய வசதிக்காக அவை தமிழில் கொடுக்கப்பட்டியிருக்கிறது.

மகாராஷ்டிரா சட்டப்பேரவை வளாகம், நரிமன் பாயிண்ட், மும்பை தெற்கு.

"மிகவும் பரபரப்பான சூழ்நிலையில் இன்று காலை பதினோரு மணிக்கு மகாராஷ்டிரா சட்டப்பேரவை கூடுகிறது. ஆளும் ஜெய் ஜனதா கூட்டணியின் (மக்கள் வெற்றி கூட்டணி) பிரதான கட்சியான ஜன்தந்ர் விகாஸ் பார்ட்டி (ஜனநாயக முன்னேற்ற கட்சி-ஜேவிபி) தங்களுடைய சட்டமன்ற உறுப்பினர்களுடன் சட்டப்பேரவை வளாகத்திற்குள் வருகை தந்து கொண்டிருக்கும் காட்சிகளைத் தான் நாம் இப்போது பார்த்துக்கொண்டிருக்கிறோம். இன்றைய நாளில் ஆளும் ஜன்தந்ர் விகாஸ் பார்ட்டி மும்பை உயர்நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் தங்களுடைய பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது. மஹாராஷ்ட்ரா மாநிலத்திற்கு சட்டப்பேரவைத் தேர்தல் முடிந்து இரண்டு வருடங்களே முடிந்துள்ள நிலையில் கடந்த இருபத்தி இரண்டு ஆண்டுகளாக மகாராஷ்டிராவின் முதல்வர் இருக்கையில் அமர்ந்திருக்கும் பிரித்விராஜ் தேஷ்முக் இம்முறை தனக்கு முன்னிருக்கும் இந்தச் சவால்களை எல்லாம் கடந்து மீண்டும் முதல்வராகவே தொடர்வாரா என்பதை தெரிந்துகொள்ளும் நாளாக இன்றைய நாள் அமையவிருக்கிறது. ஏற்கனவே தங்கள் கூட்டணியில் இருக்கும் பல முக்கிய சட்டமன்ற உறுப்பினர்கள் ஆளும் தலைமைக்கு எதிராகவே செயல் படுவதாக ஒரு குற்றசாட்டு எழுந்துள்ளது. அது போக கடந்த இருபது ஆண்டுகளாக தனி பெரும்பான்மையுடன் ஆட்சி செய்து வந்த ஜன்தந்ர் விகாஸ் பார்ட்டி கடந்த சட்டமன்றத்தில் பெரும்பான்மைக்குத் தேவையான இடங்களைப் பெற முடியாத காரணத்தால் தங்களுடைய நெடு நாள் போட்டிக் கட்சிகளுடன் இணைந்து ஆட்சியமைக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டது. எனினும் ஒரு மாதம் கூட இந்த ஆட்சி தொடராது என்று கூறிய பிரதான எதிர்க்கட்சியான பாரதிய லோக் பார்ட்டியின் கணிப்புகளையும் கருத்துக்களையும் பொய்யாக்கும் விதமாக இந்த இரண்டு வருட ஒன்றரை மாதங்களாக ஆட்சியில் இருந்ததையே பெரிய சாதனையாக அரசியல் விமர்சகர்கள் பார்க்கிறார்கள். எது எவ்வாறோ... தற்சமயம் கிடைத்த முக்கிய நிகழ்வுகளைப் பற்றிப் பார்ப்போம். மஹாராஷ்டிரா முதல்வரும் ஜன்தந்ர் விகாஸ் பார்ட்டியின் தலைவருமான பிரித்விராஜ் தேஷ்முக் சட்டமன்ற வளாகத்திற்குள் வருகை தந்துள்ளார்... அடுத்தடுத்த முக்கிய நிகழ்வுகளுக்காக இணைந்திருங்கள் இந்தியா லைவ் நியூஸ் சேனலில் கேமெரா மேன் நீரஜ் உடன் நடாஷா மகாஜன்.

உள்ளே நுழைந்த பிரித்விராஜ் யாருடனும் பேசாமல் முதல்வர் அறையை நோக்கிச் சென்றார். அங்கே கூடியிருந்த எம்.எல்.ஏக்கள் பலர் மரியாதை நிமித்தமாய் அவருக்கு வணக்கம் வைத்தும் அவற்றை எல்லாம் கண்டுகொள்ளாமல் விரைவாகவே நடந்தார். என்று இந்த ஆட்சிக்கு எதிராக மக்களிடம் எதிர்ப்பும் வன்முறையும் தொடங்கியதோ அன்றே தன்னுடைய முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய முன்வந்தவர் தான் இவர். இருந்தாலும் கட்சிக்கு உள்ளிருந்தும் வெளியிலிருந்தும் வந்த தொடர் நெருக்கடிகளால் அம்முடிவை அவரால் ஸ்திரமாக எடுக்க முடியவில்லை. ஆனால் அவருடைய இந்த இருபத்தி ஆறு மாத முதல்வர் அனுபவத்தை கடந்த இருநூற்றி நாற்பது மாத முதல்வர் அனுபவத்துடன் ஒப்பிடுகையில் நூற்றில் ஒரு சதவீத்ம் கூட இருக்காது என்பதே மலைக்க வைக்கும் உண்மை. கடந்த முறை தான் முதல்வராக பதவியேற்றிக்கக் கூடாதோ என்ற காலங்கடந்த ஞானம் தற்போது தான் அவர் மூளையில் உதிர்த்தது. தன்னுடைய ஆட்சிக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை எந்த ஒரு முதல்வரும் விரும்ப மாட்டார்கள் தான். வழக்கமாக அவ்வாறு ஒரு வாக்கெடுப்பை எதிர்பார்க்கும் எந்த ஒரு முதல்வருக்கும் இருக்க முடியாத ஒரு நிம்மதியிலும் மனநிறைவிலும் வியாபித்திருந்தார் பிரித்விராஜ் தேஷ்முக்.

தன்னுடைய இந்த அறுபத்தி எட்டு வருட வாழ்க்கையில் கிட்டத்தட்ட இருபத்தி நான்கு வருடம் அதாவது தன் வாழ்நாளில் மூன்றில் ஒரு பங்கை மகாராஷ்டிரா முதல்வராகவே கழித்திருக்கிறார் என்றால் அவருடைய அரசியல் அனுபவத்தை சற்று எண்ணிப்பார்க்க தான் வேண்டும். ஐந்து முறை முதல்வராகவும் இரண்டு முறை எதிர்கட்சித் தலைவராகவும் இருந்திருக்கிறார். அதும் தன்னுடைய இளம் வயதிலிலே எவ்வித முயற்சியுமின்றி தன்னைத் தேடி வந்த முதல்வர் இருக்கையை இரண்டாண்டுகள் அலங்கரித்து அதன் நெளிவுசுளிவுகளை அறிந்துகொள்ளும் முன்னே அடுத்த பத்து ஆண்டுகள் தன்னை எதிர்கட்சித் தலைவராக மட்டுமே நிறுத்தி அரசியிலின் 'சாணக்கிய தர்மத்தையும்' அதில் ஒளிந்திருக்கும் மோடிமஸ்தான் தந்திரங்களையும் அனுபவத்தின் மூலமாவே கற்றுக்கொண்டவருக்கு இன்றைய தினம் தனக்கு முன்னிருக்கும் சவால்கள் எல்லாம் ஒரு பொருட்டே இல்லை என்று தோன்றியது. இருந்தும் இன்றைய தினம் அவர் அரசியல் வாழ்வில் ஒரு முக்கியமான பரீட்சையை எதிர்கொள்ளப் போகிறார் என்பதே உண்மை. இது வெறும் முதல்வர் இருக்கைக்கான சவாலாக மட்டுமில்லாமல் இதை தன்னுடைய தன்மானத்திற்கு ஏற்பட்டிருக்கும் பெரிய சவாலாகவே தான் பார்க்கிறார்.

அதே நேரம் இன்றைய தினம் ஒன்றும் முற்றிலும் அவர் வசம் இல்லை. 'கேட் ஆன் தி வால்'(மதில்மேல் பூனை) சூழ்நிலையில் தான் இருக்கிறார். இருநூற்றி எண்பத்தி எட்டு உறுப்பினர்கள் கொண்ட மகாராஷ்டிரா சட்டப்பேரவையில் வெறும் எண்பத்தி ஒன்பது உறுப்பினர்களை மட்டுமே பெற்ற தன் கட்சி இந்த இரண்டாண்டுகள் ஆட்சியில் அமர்ந்ததே பெரிய விஷயம் என்று அவரும் அறிவார் தான். பெரும்பான்மைக்குத் தேவையான நூற்றி நாற்பத்தி ஐந்து என்ற மேஜிக் எண்ணிற்கு தன் வசம் இருக்கும் எண்பத்தி ஒன்பது போக இன்னும் ஐம்பத்தி ஆறு வேண்டுமே? அரசியலில் நிலையான நண்பனும் இல்லை நிலையான எதிரியும் இல்லை என்பதற்குச் சான்றாகவே ப்ரித்விராஜின் இன்றைய நிலை இருக்கிறது. ப்ரண்ட் டர்ன்டு ஃபோ(எதிரியாக மாறிய நண்பன்) என்ற நிலையில் இன்று ப்ரித்விராஜ் இருந்தாலும் இது உண்மையிலே ஃபோ டர்ன்டு ப்ரண்ட்(நண்பனாக மாறிய எதிரி) என்ற சூழ்நிலை தான். சந்தர்ப்பவாதக் கூட்டணி என்றும் நிலையான ஒரு முடிவைத் தராது என்று அவர் நன்கு அறிந்துகொண்டார்.

பிரித்விராஜுக்கு அழைப்பு வர அந்த எண்ணைப் பார்த்தவர் ஒரு வித ஏளனத்துடன் அதை எடுக்க,"என்ன மிஸ்டர் சி.எம்... சாரி சாரி நீங்க சி.எம்மா தொடரணுமா இல்லையான்னு இன்னைக்குத் தான் முடிவாகும் இல்ல? ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி வேணுனா நீங்க ஜெயிச்சி இருக்கலாம். ஆனா இன்னைக்கு நீங்க தோக்குறது உறுதி..." என்று மறுபுறம் ஆணவமாகச் சிரித்தான் சஞ்சய் ரத்தோர்.

"குறுக்கு வழியில ஜெயிக்கிறவன் தான் மக்களைச் சந்திக்க பயப்படணும். அண்ட் எனக்கு அந்தப் பயம் இல்ல. நாளைக்கே எலெக்சன் வெச்சாலும் அதைச் சந்திக்கக்கூடிய பலமும் தைரியமும் எனக்கிருக்கு. அண்ட்..." என்று நிறுத்திய பிரித்விராஜ்,"உன் வயசு என்னுடைய அரசியல் அனுபவம்... வெக்கட்டா?" என்று அழைப்பைத் துண்டித்தாலும் ஏனோ பிரித்விராஜின் எண்ண ஓட்டங்கள் எங்கெங்கோ சென்று வந்தது.

சட்டமன்றத்திற்கு ஒவ்வொருவராக வர வெளியே ஒரு கூட்டமாய்த் திரண்டிருந்த ஊடகங்களுக்கு இன்று முழுவதும் தங்கள் வாயில் போட்டு மெல்ல நல்ல 'சீவிங் கம்' கிடைத்தது. அந்தக் கூட்டத்திலும் தன்னுடைய சக ஊடக நண்பர்கள் அனைவரின் பொறாமை பார்வை தன் மீது விழுந்தாலும் அதைப் பெரியதாக எடுத்துக் கொள்ளாமல் 'இந்தியன் வாய்ஸ்' என்னும் பிரபலமான ஊடகத்தின் பதாகை தாங்கிய ஒலிபெருக்கியைக் கையில் பிடித்தவாறு நியூஸ் ரிப்போர்ட் செய்துகொண்டிருந்தாள் யாக்நியா கோஷ்.

எதிர்க்கட்சி உறுப்பினர்கள் ஒவ்வொருவராக அங்கே வர பிரித்விராஜ் அமர்ந்திருந்த அறைக்குள் நுழைந்த அவருடைய தனிச் செயலர் தயக்கத்துடன் நிற்க அதைப் புரிந்துகொண்டவர் சட்டமன்றத்திற்குள் நுழைந்தார்.

அப்போது அந்த வளாகத்திற்குள் நுழைந்த காரிலிருந்து இறங்கிய மாநில உள்துறை அமைச்சரும் ஆளும் ஜெய் ஜனதா கூட்டணியின் இரண்டாவது முக்கிய கட்சியான மகாராஷ்டிரா லோக் ஸமிதியின் (மகாராஷ்டிரா மக்கள் சபை -எம் எல் எஸ்) தலைவருமான அதுல் ஜைஷ்வால் பரபரப்பாகவே உள்ளே நுழைந்தார். வெளியே திரண்டிருந்த பத்திரிக்கையாளர்களின் கூட்டத்தைக் கண்டும் காணாமல் உள்ளே நுழைய அவருக்காகக் காத்திருந்த அவர் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் அவரைத் தொடர உள்ளே நுழைந்தவர் ஆளும் கட்சியினர் அமரும் இருக்கையின் வரிசையில் திரும்பி நடக்க அங்கே முதல்வர் இருக்கையில் அமர்ந்திருந்த பிரித்விராஜ் எவ்வித உணர்வும் வெளிப்படுத்தாமல் தன்னுடைய நண்பரும் தன் கட்சியின் பொது செயலாளரும் இந்தச் சட்டப்பேரவையின் அவை முன்னவருமான அப்துல் சித்திக்கிடம் எதையோ உரையாடிக்கொண்டிருந்தார்.

சிறிது நேரத்தில் உயர்நீதி மன்றத்தின் உத்தரவு படி ரகசிய வாக்கெடுப்பு நடைபெற்றது. வாக்கெடுப்பின் முடிவுகளை சீல் வைக்கப்பட்ட கவரில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவேண்டும் என்றும் அதுவரை முடிவை வெளியிடக்கூடாது என்றும் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்ததால் சட்டமன்ற கூட்டத்தொடர் நடைபெறாத இந்த நேரத்திலும் 'ஸ்பெஷல் ஸெஸ்ஸன்'(சிறப்பு கூட்டத்தொடர்) ஒன்றைக் கூட்டி அரசின் மீது பிராதன எதிர்க்கட்சியான பாரதிய லோக் பார்ட்டி கொண்டு வந்த நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பை நடத்தி முடித்தார் அவையின் சபாநாயகர்.

வாக்கெடுப்பு முடிந்ததும் வேறு எந்த அலுவல்களையும் மேற்கொள்ளாமல் அவை ஒத்திவைக்கப்பட தன்னுடைய காரை நோக்கி வந்த பிரித்விராஜ் தேஷ்முக்கை மடக்கிய ஊடகவியலார்கள் தங்களது கேள்விகளை முன்வைத்தனர்,

"சார் சார் நடந்து முடிந்த நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு உங்களுக்கு சாதகமா இருக்கும்னும் எதிர் பார்க்கறீங்களா?" என்று இந்தியா லைவின் நடாஷா வினவ,

"அதை நாளை கழிச்சு நீதிமன்றம் தான் சொல்லணும்..." என்றார் முதல்வர்.

"அப்போ இது தான் இந்த ஆட்சியுடைய கடைசி சட்டமன்ற கூட்டத்தொடரா இருக்கும்னு சொல்ல வரிங்களா?" என்றான் நியூஸ் 360 டிகிரி ரிப்போர்ட்டர் தீரஜ்.

"அதுக்கும் வாய்ப்பிருக்கு தானே..." என்று கூறி புன்னகைத்தார் தேஷ்முக்.

"அப்போ மகாராஷ்டிரா லோக் சமிதி மற்றும் ஆல் இந்தியா ரிபப்லிக் பார்ட்டியுடனான உங்க ஜன்தந்ர் விகாஸ் பார்ட்டி சேர்ந்து அமைச்ச ஜெய் ஜனதா கூட்டணி தன்னுடைய அந்திம காலத்தை அடைஞ்சிடுச்சினு நாங்க எடுத்துக்கலாமா?" என்று கேட்டாள் இந்தியன் வாய்ஸ் ரிப்போர்ட்டர் யாக்நியா கோஷ்.

"என்னமா கேள்வி இது? பூனைக்கு மணி கட்டுனதே நீங்க தானே?" என்று யாக்நியா கோஷை வினவியவர்,"ஓகே லெட்ஸ் வைண்ட் அப் திஸ் செஷன்... ஐ ஹேவ் டு மூவ்..." என்று கூறி நகர்ந்தார் பிரித்விராஜ்.

"சார் ஒன் லாஸ்ட் கொஸ்டின்..." என்ற நடாஷாவின் புறம் திரும்பியவர் என்ன என்பதைப் போல் பார்க்க,

"அப்போ உள்துறை அமைச்சரான அதுல் ஜைஷ்வால் மேல எழுந்த குற்றச்சாட்டுகள் உண்மைங்கறதுனால தான் இந்தக் கூட்டணி முடிஞ்சதாப் பேசிக்குறாங்களே அது உண்மையா?... ஒருவேளை மீண்டும் சட்டசபைத் தேர்தல் வந்தா உங்க கட்சி அவங்களோட திரும்பவும் கூட்டணி வைக்குமா? அண்ட் இப்போ பாரதிய லோக் பார்ட்டி ஆட்சியமைக்க உரிமை கோர போறாங்கனும் ஒரு ரூமர் வருதே சார்... இதை நீங்க எப்படிப் பார்க்கறீங்க?" என்ற நடாஷாவிற்கு,

"இது ஜனநாயக நாடு. இங்க மக்களின் ஆதரவும் மெஜாரிட்டி நம்பரும் யாருக்கு இருக்கோ அவங்க தாராளமா ஆட்சி அமைக்கலாம்... அண்ட் நாங்க எதிர்க்கட்சி வரிசையில உட்கார என்னைக்கும் பயந்ததில்லை..." என்றவர் முதல்வர் என்று பொறிக்கப்பட்ட தன்னுடைய வாகனத்தில் எறியவர் என்ன நினைத்தாரோ அதிலிருந்து இறங்கி தன் நண்பரான அப்துலின் காரில் ஏறி பயணித்தார்.

அந்நேரம் பார்த்து அவையிலிருந்து வெளியேறிய மஹாராஷ்ட்ரா உள்துறை அமைச்சரும் ஆளும் கூட்டணியின் இரண்டாவது பெரிய கட்சியான மஹாராஷ்டிரா லோக் சமிதியின் தலைவருமான அதுல் ஜைஷ்வால் வெளியே வர அவரைச் சுற்றி பத்திரிகையாளர்கள் அனைவரும் ஈக்களாக மொய்த்தனர். ஆனால் அவர்களுக்கு பதிலளிக்க விரும்பாதவர் தன் கரங்களால் இருபுறமும் இருந்த ஒலி பெருக்கிகளை ஒதுக்கிய வாறே காரை நோக்கிச் செல்ல,"சார் சார் ஒரு கொஸ்டின்... உங்க மேல எழுந்த ஊழல் குற்றச்சாட்டும் சமீபத்துல வெளியான உங்களைப் பற்றிய வீடியோ க்ளிப்பிங்கும் தான் முதல்வர் தேஷ்முக் உங்க மேல நடவடிக்கை எடுக்க வெச்சி இருக்கும்னும் அவருக்கு நீங்க தனிப்பட்ட முறையில அழுத்தம் கொடுக்க தான் ஆளும் கூட்டணிக்குக் கொடுத்துவந்த ஆதரவை உங்க கட்சி எம்.எல்.ஏக்கள் சிலர் வாபஸ் வாங்குனதாப் பேசுறாங்களே அது உண்மையா?" என்று ஸ்கை டிவி ரிப்போர்ட்டர் அர்னாப் கேள்வி கேட்க அதற்குள் அவருக்குப் பின் இருந்த அவர் கட்சியின் பொருளாளரும் விவசாய துறை அமைச்சருமான தினகர் சவாண் கோவத்தில் அந்த ரிப்போர்ட்டரை வேகமாகத் தள்ள திரும்பிய அதுல் வேண்டாம் என்பதைப் போல் ஒரு சமிக்ஞை செய்ய விறுவிறுவென்று தங்களுடைய காரில் அவர்கள் ஏறினார்கள்.

அடுத்த வெளியே வந்த பாரதிய லோக் பார்ட்டியின் மாநிலத் தலைவரும் மஹாராஷ்டிரா சட்டப்பேரவையின் எதிர்க்கட்சி தலைவருமான தீபக் கோவர்த்தனை மடக்கியவர்கள்,"ஆட்சிக்கெதிரா நீங்க கொண்டு வந்த நம்பிக்கையில்லாத் தீர்மானம் வெற்றிபெறும்னு நம்புறீங்களா?"

"நான் ஆரம்பத்துல இருந்தே இது தான் சொல்றேன். மகாராஷ்டிரால இப்போ ஆளுறது மக்கள் விரோத கூட்டணி. மக்கள் அளித்த தீர்ப்புக்கு எதிரா இவங்க அமைச்ச இந்தக் கூட்டணி நிச்சயம் நிலைக்காது..." என்று அவர் சொல்ல,

"அப்படியா? அப்போ போன வருஷம் மேகாலயா மாநிலத்துல தனி பெரும் கட்சியா வந்த ஆல் இந்தியா பீப்பிள்ஸ் பிரண்ட் கட்சியை ஆட்சியமைக்க விடாம மூணாவது பெரும் கட்சியா வந்த நீங்க கூட்டணி அமைச்சு ஆட்சி நடத்துறீங்களே அது மட்டும் மக்கள் விரோதம் ஆகாத?" என்றாள் யாக்நியா கோஷ்.

"அது வந்து... அது... அப்படி இல்ல..." என்று அவர் மழுப்ப,

"சார் நீங்களும் ஆளும் கூட்டணியில் இருக்கும் மகாராஷ்டிரா லோக் ஸமிதியும் இணைஞ்சு ஆட்சி அமைக்கப் போறதா சொல்றாங்களே? அது எந்த அளவுக்கு உண்மைன்னு தெரிஞ்சிக்கலாமா?" என்றான் தீரஜ்.

"அது... அதைப் பற்றி கட்சி மேலிடம் என்ன சொல்லுதோ அதன் படி தான் நாங்க செயல்படுவோம்..." என்று அவர் கூற,

"பிரித்திராஜ் தேஷ்முக்கை முதல் இருக்கையிலே இருந்து நீக்க வேண்டி தான் அந்தக் கூட்டணியில் குழப்பம் ஏற்படுத்த பட்டதாகவும் அதனாலே ஆட்சி கலைக்கப்பட்டதாகவும் இதுக்கெல்லாம் பின்னாடி உங்களோட பாரதிய லோக் பார்ட்டி தான் இருப்பதாகவும் சொல்றாங்களே? இது எந்த அளவுக்கு உண்மைன்னு தெரிஞ்சிக்கலாமா?" என்று நடாஷா வினவ,

"நான்-சென்ஸ் சுத்த புல்ஷிட்... இது சுயநலத்திற்காகவும் மக்கள் விரோதமாவும் ஏற்படுத்தப்பட்ட கூட்டணி. ஓட்டை விழுந்த கப்பல் மூழ்க தானே செய்யும்..." என்று அவர் முடிப்பதற்குள்,

"ஆனா அந்த ஓட்டையை ஏற்படுத்தியதே நீங்க தான்னு சொல்றாங்களே?" என்று யாக்நியா வினவ கடும் சினத்துடனும் எரிச்சலுடனும் அங்கிருந்து அவர் சென்றார்.

"மஹாராஷ்டிரா பேரவையின் எதிர்காலம் என்னவென்பது எழுதப்பட்டுவிட்டது. ஆனால் அதன் முடிவைத் தெரிந்துகொள்ள இன்னும் இரண்டு நாட்கள் காத்திருக்க வேண்டிய சூழல் நிலவுகிறது. உடனுக்குடனான செய்தகளுக்காக ஸ்டே டியூனிட் வித் இந்தியா லைவ் நியூஸ். நன்றி..." என்று முடித்தவள் கேமெரா ஆப் செய்யப்படும் வரை தன்னுடைய குறுஞ்சிரிப்பை இழுத்துப்பிடித்த நடாஷா அதன் பின் கேசுவலானாள்.

அதுவரை ஒரு மீன் மார்க்கெட் போல் கூட்டமும் கூச்சலுமாக இருந்த அந்த சட்டப்பேரவை வளாகம் சற்று நேரத்தில் ஈ எறும்புகள் ஏதுமின்றி பின்-ட்ராப் சைலென்ஸில் மயான அமைதியைத் தழுவியது.

ஹாய் மக்களே! இந்தக் கதை முழுக்க முழுக்க ஒரு பொலிட்டிகள் க்ரைம் திரில்லர். பாலிடிக்ஸ் ஜர்னலிசம் டெர்ரரிசம் கோர்ட் போலீஸ் அது இது என்று பரபரப்பாகவே சென்றாலும் இதற்குள்ளும் நிறைய குடும்பங்களும் மெல்லிய காதலும் நிச்சயம் இழையோடும்... இப்போதைக்கு கதை ரெகுலர் updates வருவது சிரமம். ஆனால் வாரம் இரண்டு அப்டேட்ஸ் வரும்... கதாபாத்திரங்களின் பெயர் குழப்பமாக இருந்தால் கவலை வேண்டாம். அடுத்தடுத்த அத்தியாயங்களில் தெளிவாகிவிடும்.
 
வாழ்த்துக்கள் ப்ரோ ??????

ம்ம்ம்..... ஆரம்பமே கலக்குறீங்க ???
இதுல வர்றது எல்லாம் இப்போ சமீபமா நாம கேள்விப்படற மாதிரியே இருக்கே..... அப்படியா ?????
 
வாழ்த்துக்கள் ப்ரோ ??????

ம்ம்ம்..... ஆரம்பமே கலக்குறீங்க ???
இதுல வர்றது எல்லாம் இப்போ சமீபமா நாம கேள்விப்படற மாதிரியே இருக்கே..... அப்படியா ?????
இருக்கலாம்...? இருந்தாலும் இது எந்த ஒரு குறிப்பிட்ட நபரையோ குறிப்பிடவில்லை. எல்லாம் கற்பனையே? நன்றி?
 
மஞ்சள் வெயில் கதைக்கு வாழ்த்துக்கள் ப்ரவீன்.

பரபரப்பான அரசியல் களம் ஆரம்பம்.
 
Top