Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மஞ்சள் வெயில் மாலையிலே!-4

Advertisement

praveenraj

Well-known member
Member


அன்று காலை அதுல் ஜைஷ்வால் வீட்டிற்கு லஞ்ச ஒழிப்புத் துறையில் இருந்து நோட்டீஸ் வந்திருந்தது. சமீபத்தில் அவரைப் பற்றி வெளியான அந்த வீடியோ க்ளிப்பிங்கில் அவர் பேசியதன் உண்மைத் தன்மையை ஆராய தங்களின் விசாரணைக்கு ஒத்துழைக்குமாறு அதில் வந்திருக்க தன்னுடைய வக்கீலிடம் அது சம்மந்தமாக ஆலோசனையில் ஈடுபட்டார் அதுல். இதற்கிடையில் தன்னைப் படம் பிடித்துக் காட்டிய யாக்நியா கோஷின் மீதும் கொலைவெறியில் இருக்க அதை யூகித்த அவரின் உதவியாளர்,

"ஐயா அந்தப் பொண்ணு இப்போ ஊர்லயே இல்லையாம். அநேகமா தலை மறைவாடிடுச்சினு நினைக்குறேன். நான் வேணுனா நம்ம ஆளுங்களை வெச்சு..."

"முட்டாள். முட்டாள் மாதிரி எதையும் பண்ணிடாதீங்க. அவ இதெல்லாம் திடீர்னு செய்யல. என்னுடைய யூகம் சரினா அவ ரொம்ப நாளாவே நமக்கு எதிரா குழி பறிச்சிட்டு இருந்திருக்கா. கொஞ்ச மாசத்துக்கு முன்னாடி ட்ரக்ஸ் பத்தி பெரிய கவர் ஸ்டோரி எழுதினது அவ தானே? அப்போவே என்னை எந்த அளவுக்குத் தாக்கி விமர்சனம் செஞ்சு இருந்தானு உனக்கு ஞாபகம் இல்லையா? எனக்கென்னவோ இதுல வேற சில சந்தேகம் இருக்கு..."

"புரியலைங்கய்யா" என்று தலையைச் சொரிந்த உதவியாளருக்கு,

"இப்போதைக்கு உனக்கு எதுவும் புரிய வேண்டாம். அண்ட் எனக்கு அந்த பிரித்விராஜ் என்னவெல்லாம் செய்யறான்னு தெரியணும். அவனை க்ளோசா வாட்ச் செய்ய சொல்லுங்க... எலெக்சன் வரதுக்குள்ள என்னைப் பத்தி உலா வரும் இந்த தரித்திரம் ஒழியனும்"

ஏனோ அதுலுக்கு மனம் ஆறவே இல்லை. தான் விரித்த வலையில் ப்ரித்விராஜ் விழுவார் என்று மனக்கோட்டை கட்டிக்கொண்டிருந்த அதுலுக்கு ப்ரித்விராஜின் இந்த புலி பாய்ச்சல் ஆச்சரியத்தை விட அதிர்ச்சியையே கொடுத்தது. இத்தனை ஆண்டுகள் ருசி கண்ட பூனையாக வலம் வந்தவர் இப்போது என்ன செய்வதென்று புரியாமல் தவித்தார். ஆனால் அதுலுக்கு இப்போது ஒன்று நன்கு விளங்கி விட்டது. இனி தன்னுடைய எந்த மிரட்டலுக்கும் ப்ரித்விராஜ் செவிசாய்க்கப்போவதில்லை என்றும் இனி வரும் காலகட்டத்தில் பிரித்விராஜ் என்னும் பந்தய குதிரையை எதிர்த்து தான் அரசியல் செய்யவேண்டும் என்றும் நினைக்கையில் அவருக்கு மூச்சு முட்டியது.

இங்கே இவ்வாறு இருக்க அங்கே ஜன்ந்தர் விகாஸ் பார்ட்டியின் தலைமை அலுவலகம் பரபரப்பாக இருந்தது. இன்று அக்கட்சியின் செயற்குழு கூடவிருக்கிறது. ஆட்சி கவிழ்ந்த பிறகு கூடும் முதல் செயற்குழு. அனைத்து மாவட்டங்களில் இருந்தும் முக்கிய நிர்வாகிகள் மட்டும் அழைக்கப்பட்டிருந்தனர். கட்சியின் பொது செயலாளர் அப்துல் தலைமையில் கூட்டம் தொடங்கியது. இந்த மாவட்ட நிர்வாகிகளுக்கு இடையில் இருவேறு கருத்துக்கள் இருந்தது. ஒரு சாரர்களோ இந்த ஆட்சி தொடர்ந்திருக்க வேண்டும் என்று பேச மற்றவர்களோ இந்தக் கூட்டணி ஏற்பட்டிருக்கவே கூடாது என்ற வாதத்தை முன்வைக்க கட்சியின் துணை பொதுச்செயலாளர் நாராயணன் அவர்களை அமைதிப்படுத்திவிட்டு,

"நடந்து முடிஞ்சதைப் பத்திப் பேசி இப்போ எந்த பிரயோஜனமும் இல்ல. இனி அடுத்து என்ன செய்யலாம்னு தான் யோசிக்கணும்..." என்று முடிக்கும் முன்னே,

"இதுல யோசிக்க என்ன இருக்கு? நாம் எதுக்கு மஹாராஷ்டிரா லோக் சமிதியை கடந்த பனிரெண்டு வருஷமா தூக்கிட்டு அலையுறோம்? போன முறை எலெக்சனுக்கு முன்னாடி பிரிஞ்ச கூட்டணி அப்படியே பிரிஞ்சி இருக்கலாம். நாம அவங்க கூட கூட்டணி வெச்சு ஆட்சி அமைச்சது தான் பெரிய தப்பு" என்று கட்சியின் மூத்த உறுப்பினரும் அம்மாநில தென்மண்டல அமைப்புச் செயலாளருமான கிஷன் தன்னுடைய ஆதங்கத்தைக் கொட்டினார்.

"கிஷன் நீங்களே இப்படிப் பேசலாமா?" என்ற நாராயணனுக்கு,

"பின்ன எப்படிப் பேசலாம்? நான் அப்போவே தலைப்பாட அடிச்சிக்குட்டேன். தேர்தல் பிரச்சாரத்துல அவங்களை கண்டபடி திட்டிட்டு திரும்ப வெக்கம் மானம் ரோஷமே இல்லாம அவங்க கூடவே கூட்டணி வெச்சது தான் பெரிய தப்பு. பத்திரிக்கை காரங்க பிரச்சாரத்துல நான் பேசுனதையும் திரும்ப அவங்க கூடவே கூட்டணி அமைச்சதையும் ஒப்பிட்டு 'அது வேற வாய் இது நாறவாய்ன்னு' கமெண்டும் 'துப்புனா தொடச்சிப்போம்னு' என் போட்டோ போட்டு மீம்ஸ் போட்டதெல்லாம் எனக்குத் தான் தெரியும். உங்களுக்கென்ன நீங்க நெனச்சா முடிவை மாத்துவீங்க மக்களைச் சந்திக்கிறது நாங்க தானே? என்ன தான் அரசியல் வாதினாலும் எனக்கும் தன்மானம் எல்லாம் இருக்குங்க" என்று அவர் பொங்கிவிட,

"ஏப்பா அரசியல்வாதியா இருந்துட்டு இதுக்கெல்லாம் பயந்தா எப்படி? அரசியல்ல இதெல்லாம் சாதாரணம்பா..." என்று சிரித்தவாறே கூட்டத்தில் ஒருவர் பேச, அந்த இடமே சிறிது நேரம் சிரிப்பொலியில் மிதந்தது. சமயங்களில் சுயபகடி போல் சிறந்த நகைச்சுவை இருக்காது அல்லவோ? அப்படித்தான் இது.

"என்ன கிஷன்ஜி, பத்திரிகை காரங்களை எல்லாம் பெருசா எடுத்துக்கிட்டு. மீறிக் கேட்டா அரசியல்ல நிரந்தர நண்பனும் இல்ல நிரந்தர எதிரியும் இல்லைனு ஒரு ஸ்டேட் மென்ட் சொல்லிட்டுப் போயிட்டே இருக்கனும்... இப்போ இதைப் பத்திப் பேசவா வந்திருக்கோம்? அடுத்து எப்போ வேணுனாலும் எலெக்சன் வரலாம். அதை எதிர்கொள்ள நாம தயாரா இருக்கனும். அண்ட் இந்த முறை" என்ற அப்துல் திரும்பி ப்ரித்விராஜை பார்க்க அவரோ தலையசைக்கவும்,

"இந்த முறை என்ன ஆனாலும் சரி நாம தனியா தான் நிக்குறோம். இருநூத்தி எண்பத்தெட்டு இடத்திலும் நம்ம கட்சி வேட்பாளர்கள் தான் நிக்கப்போறாங்க. இது நம்ம தன்மானப் பிரச்சனை. தொடர்ச்சியா இருபது வருடம் தனிச்சு ஆட்சி அமைச்ச நம்மால இந்த முறை ஜெயிக்க முடியாதா என்ன?"

"எல்லாம் சரி, இப்போ தான் போன எலெக்சனுக்கு செலவு பண்ணதையே எடுக்க இருந்தோம். இப்போ அதுக்குள்ள எலெக்சனா? நான் நிக்கல சாமி" என்றார் மற்றொரு மூத்த உறுப்பினர்.

"அண்ணே என்ன இப்படி எதுக்குமே ஒத்துக்காம இருந்தா எப்படி?" என்ற ப்ரித்விராஜுக்கு,

"செலவை கட்சி ஏத்துக்கும்னு சொல்லுங்க நாங்க ரெடி"

பின் சில சலசலப்புடன் கூட்டம் நிறைவடைந்தது.

*******************

தூத்துக்குடி விமான நிலையத்தில் இறங்கிய ஜெய்யும் யாக்நியாவும் அங்குள்ள ஒரு பிரபலமான உணவகத்தில் உணவருந்திவிட்டு கோவில்பட்டிக்கு கேப் புக் செய்தான். ஜெய் வருகிறான் என்றதுமே அவனுக்கு கார் அனுப்ப சந்திர சேகரன் முடிவெடுத்திருந்தார். சிறு வயதில் சந்திர சேகரனுக்கு ஜெய் என்றால் அவ்வளவு பிடித்தம் எல்லாம் இல்லை. தனக்குத் திருமணம் முடிந்து சுமார் பதினைந்து வருடங்களுக்குப் பிறகு பிறந்தவன் என்பதாலே அவருக்கு அவன் மீது ஒரு ஒட்டுதல் இல்லாமல் போனது. பின்னே அவன் பிறந்த சில நாட்களிலே அவன் அக்காவாகிய கண்மணி வயதிற்கு வந்துவிட்டார். அவனுக்கும் அவன் அக்காவுக்கும் பதிமூன்று வருட வித்தியாசம். சந்திர சேகரன் சாந்தலஷ்மி தம்பதிக்கு மூன்றாவது மகனாகப் பிறந்தவன் தான் அரிஞ்சயன். ஜெய் பிறக்கும் சமயத்தில் தான் கண்மணி தீவிரமாக பொன்னியின் செல்வனை வாசித்துக் கொண்டிருந்தார். அப்போது முதலாம் பராந்தக சோழனின் மகனும் சுந்தர சோழனின் அண்ணனும் ராஜராஜனின் பெரியப்பாவுமான அரிஞ்சய சோழனைப் பற்றிப் படித்த கண்மணிக்கு ஏனோ அப்பெயரின் மீது தீரா மயக்கம் ஏற்பட்டு விட அப்போது பிறந்த தன்னுடைய இளைய தம்பிக்கு அரிஞ்சயன் என்று பெயர் சூட்டினார் கண்மணி. ஆகாஷ் கண்மணிக்கு அடுத்து பிறந்தவன்.

ஜெய் பிறந்ததும் அவன் அன்னைக்கு சிறிது உடல் நலம் குன்றிவிட அவனை வளர்க்கும் பொறுப்பு கண்மணிக்கு வந்துவிட்டது. இன்றளவும் ஜெய்க்கு கண்மணி தான் ஒரு அன்னை போன்றவள். கண்மணிக்கு திருமணம் முடிந்து புகுந்த வீட்டிற்குப் போகும் போது அவரைத் தடுத்து அழுததெல்லாம் தனிக்கதை. ஏனோ அதன் பின் அந்த வீட்டில் இருக்க பிடிக்காமல் மதுரைக்குச் சென்று ஹாஸ்டலில் சேர்ந்து தன்னுடைய பள்ளிப் படிப்பை முடித்தான். எல்லோரையும் போல் ஏன் எதற்கு என்று கேள்விகேட்காமல் சென்னையில் மிகப் பிரபலமான ஒரு பொறியியல் கல்லூரியில் சேர்ந்து பட்டமும் பெற்றான். என்ன தான் ஆன் கேம்பஸில் வேலை கிடைக்கா விட்டாலும் ஆப் கேம்பஸில் தேர்ச்சிபெற்று ஒரு பிரபலமான மென் பொருள் நிறுவனத்தில் பணியில் சேர்ந்தான். மெக்கானிக்கல் முடித்து சம்மந்தமே இல்லாமல் மென்பொருள் நிறுவனத்தில் பணிபுரிந்தாலும் அவனுக்கு அந்தச் சமயத்தில் அந்த வேலை அவசியமாகப் பட்டது. காரணம் சௌந்தர்யா! பிறகு நடக்கக்கூடாத சம்பவங்கள் எல்லாம் அரங்கேற அடுத்த ஐந்து வருடம் அவனுக்கு ஒரு வனவாசமாகவே தான் இருந்தது. அதையெல்லாம் கடந்து தன்னுடைய இருபத்தி ஏழாவது வயதில் ஐ.ஏ.எஸ் தேர்வில் தேர்ச்சி அடைந்தவன் இரண்டு வருட பயிற்சி முடித்து கடந்த ஒன்பது மாதங்களாக பூனாவில் ஒரு மாவட்டத்தில் சப் கலெக்டராக பணிபுரிகிறான். பனிரெண்டு வயது வரை இருந்த ஜெய் வேறு. அவன் அக்காவைப் பிரிந்ததும் அவனுள் நிறைய மாற்றங்கள் நிகழ்ந்திருக்க அவனுடைய இருபத்தி மூன்றாவது வயதில் நிகழ்ந்த சில சம்பவங்கள் அவனை முற்றிலும் மாற்றி இருந்தது.

இனி தன் வாழ்வில் ஸ்ரீங்கரா(காதல், ஈர்ப்பு, அழகு) என்னும் ரசமே இல்லை என்று சூளுரைத்தவனின் தவத்தைக் கலைக்கவே அவன் முன் தோன்றினாள் யாக்நியா. வழக்கமான காதல் கதைகளைப் போலே இவர்களின் காதலும் மோதல், தவறான முன்னபிப்ராயம் என்று தொடங்கி இன்று காதலில் நிற்கிறது.

அங்கே கோவில்பட்டியில் ஜெய்யின் வீடே விழாக்கோலம் கொண்டு நிச்சயதார்த்த ஏற்பாடுகள் தடபுடலாக நடைபெற வீட்டின் முற்றத்தில் நின்ற காரிலிருந்து இறங்கிய ஜெய்யைக் கண்டு அவன் சொந்தங்கள் மகிழ அவனுக்குப் பின் இறங்கிய யாக்நியாவை எல்லோரும் குழப்பத்துடன் பார்க்க அங்கே இருந்த ஆதித்யாவுக்குத் தான் வயிற்றில் புளி கரைத்தது.

******************

மேலே சென்ற செல்வி அங்கே சோபாவில் சோர்வாக உறங்கும் தன் மகனைக் கண்டு மனம் நொந்தவராக அவனுக்கு காஃபீ போட்டு அவனை எழுப்பினார். அவனோ அதீத வேலை பளுவின் காரணமாய் ஆழ்ந்த உறக்கத்திற்குச் சென்றிருக்க,

"கண்ணா... ஹே இதயா என்ன அப்படியே படுத்துட்ட? போய் குளிச்சிட்டு வா அம்மா எதாவது ஸ்னேக்ஸ் செஞ்சு வெக்குறேன்" என்று அவன் தலை கோதினார். அதில் விழித்தவன்,

"எனக்கு என்னவோ நம்பிக்கையே இல்லம்மா" என்று சொன்ன தொனியில் எதுவும் புரியாமல் பார்த்தார் செல்வி.

"நீயும் ரெண்டு வருஷமா எனக்கு ஒரு கல்யாணம் செஞ்சு வெக்கணும்னு ஆசைப்படுற. ஆனா உன்னோட ஆசையை என்னால நிறைவேத்தவே முடியலையே... எந்த அம்மாவும் சீக்கிரம் செய்ய துணியாத காரியத்தை நீ செஞ்சும் உன்னோட விருப்பத்தை நான் டீல்ல விட்டுட்டே இருக்கேன் இல்ல?" என்று ஒலித்த குரலில் வேதனையைக் காட்டிலும் குற்றயுணர்ச்சியே மேலோங்கி இருந்தது.

"எனக்கு மட்டும் ஏம்மா இப்படியே நடக்குது? எனக்குப் பிடிச்சவங்க எல்லாம் ஒன்னு ஒரே அடியாப் போயிடுறாங்க இல்ல கிட்ட நெருங்கவே மாட்டேங்குறாங்க. இப்போல்லாம் எனக்கு ரொம்ப நெருடலா இருக்குமா. உன்னையும் தானே நான் அதிகம் ஹர்ட் செய்யுறேன்?" என்று மீண்டும் குரல் உள்ளே செல்ல,

"இதயா, எழு. எழுந்து போய் குளிச்சிட்டு வா. கண்ணெல்லாம் எப்படிச் சிவந்து இருக்கு பாரு. உங்க டிபார்ட்மெண்ட்ல வாங்குற காசுக்கு அதிகம் உழைக்குற ஆள் நீயா தான் இருப்ப போல? ஏதோ அதிசயமா இன்னைக்கு தான் சீக்கிரம் வந்திருக்க. போய் குளிச்சிட்டு வா நான் உனக்குப் பிடிச்ச ராகி ரொட்டி செய்யுறேன். சாப்பிட்டு தூங்கு... என்னைக்காவது ஒரு நாள் தன உனக்கே இப்படி ஓய்வு கிடைக்குது. உடம்பையும் பார்த்துக்கணும். காத்திருந்து கிடைக்குறதோட சுகமே தனி இதயா... நீ எனக்கு கல்யாணம் ஆகி நாலு வருஷம் கழிச்சு தான் பிறந்த. அந்த நாலு வருஷம் நான் பட்ட வேதனையெல்லாம் உன்னை முதன் முதலா கையில தூக்கியதும் காணாம போயிடுச்சு. எல்லாம் நடக்கும் போது நடக்கும். எல்லாத்துக்கும் கால நேரம் இருக்கு. வீணா மனசையும் உடம்பையும் வருத்திக்காத. எழுந்திரு" என்று அவர் அவனை குளிக்க அனுப்பி அவனுக்கு ரொட்டி செய்ய ஆயத்தமானார். ஆனால் அவருடைய எண்ணமெல்லாம் ஜீவிதாவின் மீதே இருந்தது.

முதல் கோணல் முற்றும் கோணல் என்பது போல் முதன் முதலில் அவள் மீது தனக்கு ஏற்பட்ட பிடித்தமின்மை தான் இன்று தன் மகன் வாழ்வில் எதிரொலிக்கிறதோ என்று சம்மந்தமே இல்லாமல் மொட்டை தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போட்டது அவர் மனம்.

இந்த முறை இதை விடப்போவதில்லை என்று எண்ணிய செல்வி நாளை இதயன் வெளியே சென்றதும் செய்ய வேண்டியதை மனதில் ஓட்டிப் பார்த்தார்.

********************

சுகி கௌடாவின் எதிர்பாரா மரணம் பாலிவுட் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருந்தது. அதிலும் குறிப்பாக குப்தா ப்ரொடக்சன்ஸ் நிறுவனர் மாதுர் குப்தா மனதில் ரத்தக்கண்ணீர் வடித்துக்கொண்டிருந்தார். இருநூறு கோடி செலவழித்து அதும் எண்பது சதவீதம் முடித்த படத்தை அடுத்து என்ன செய்வதென்று புரியாமல் விழி பிதுங்கி நின்றார் அவர். இது அவரை மட்டுமல்லாமல் அப்படத்தின் இயக்குனர் ஷ்யாம் சுந்தரையும் கவலையில் ஆழ்த்தியிருந்தது. பாலிவுட்டில், பாலிவுட் என்று இல்லை பெரும்பாலான இந்திய சினிமா துறையில் உழைப்புக்கு எந்த அளவுக்கு முக்கியத்துவம் உண்டோ அதே அளவுக்கு ராசி செண்டிமெண்ட் முதலியவையும் முக்கியத்துவம் பெரும். இப்படி தன்னுடைய படம் பாதியில் நின்றால் தன்னுடைய எதிர் காலம் என்ன ஆகும் என்ற கவலை ஒரு புறம் இருந்தாலும் தன்னுடைய முதல் பாலிவுட் படத்திற்கு வாய்ப்பளித்த சுகியின் மரணம் வேறு ஷ்யாமை வருத்தத்தில் ஆழ்த்தியது. இதை அவனால் ஜீரணிக்கவே முடியவில்லை. எப்போதும் பாசிட்டிவிட்டியோடு புன்னகை முகமாக உலா வரும் சுகி இது போல் ஒரு முடிவை எடுத்திருக்க வாய்ப்பே இல்லை என்று அவனுடன் பழகிய இந்த சிறிது காலத்தில் ஷ்யாமும் உணர்ந்திருந்தான்.

சுகி கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்தவன் என்பதால் அவனுடைய உறவினர்கள் அம்மாநில முதல்வருக்கு விடுத்த கோரிக்கையை ஏற்று அவர் மகாராஷ்டிராவின் தலைமை செயலாளரிடம் வழக்கை விரைவில் விசாரிக்குமாறு கோரிக்கை வைக்க அன்றே அம்மாநில டி.ஜி.பிக்கு உத்தரவு பாய்ந்திருந்தது. அதும் போக இவர்கள் இந்த வழக்கை விரைவில் முடிக்கா விட்டால் வழக்கு சி.பி.ஐ இடம் கைமாறிவிடும். அது இம்மாநில காவல்துறைக்கு ஒரு இழுக்காகவே பார்க்கப்படும்.

அன்றே தன்வீருக்கு மேலிடத்தில் இருந்து உத்தரவு பாய்ந்திருக்க வழக்கை விரைந்து முடிக்க வேண்டிய நிர்பந்தத்தில் தன்வீர் தள்ளப்பட்டான்.
 
???

பாதிக்கதை மறந்து போச்சு மறுபடியும் ஒரு தடவ ரீவைண்ட் பண்ணனும் ????
 
Last edited:
???

பாதிக்கதை மறந்து போச்சு மறுபடியும் ஒரு தடவ ரீவைண்ட் பண்ணனும் ????
? என்ன பண்ண எனக்கும் எழுத நேரமே இல்ல... கொஞ்சம் இப்படியே தான் போகும் போல?
 
Top