Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மஞ்சள் வெயில் மாலையிலே!-6

Advertisement

praveenraj

Well-known member
Member

தன்வீர் அன்றைய வேலையை முடித்து வீட்டிற்குக் கிளம்பாமல் தன்னுடைய அலுவலகத்திலே அமர்ந்திருந்தான். அவன் முகத்தை வைத்தே ஏதோ யோசனையில் இருக்கிறான் என்று அறிந்த அவனுடைய சக அதிகாரியான ஷ்ரேயா,

"என்ன சார் பயங்கர யோசனையில இருக்கீங்க போல? சுகி கேஸ் விஷயமாவா?" என்றவளுக்கு,

"ஷ்ரேயா ஒரு ப்ளாக் காஃபீ சொல்றிங்களா ப்ளீஸ்?" என்றதும் அவள் அவர்கள் அலுவலகத்திற்கு எதிரில் இருக்கும் சாய் கபேவில் ப்ளாக் காஃபீ ஆர்டர் கொடுக்க அப்போதும் அவன் முகம் யோசனையில் இருப்பதை அறிந்து,

"தனு என்னாச்சுப்பா?" என்று அக்கறையாக வினவினாள்.

"நாளை மறுநாள் என்ன நாளுனு ஞாபகம் இருக்கா ஷ்ரேயா?"

"நாளை மறுநாளுக்கு என்ன?" என்று அங்கிருந்த நாட்காட்டியைப் பார்த்தவள் ஏதோ புரிந்து,

"ரன்வீர் அண்ணாவோட நினைவு நாள்" என்று உரைக்க,

"நாலு வருஷம் போனதே தெரியில ஷ்ரேயா. எனக்கு எல்லாமே என் அண்ணா தான். அப்பாக்கு நேவில என்ஜினீயர் வேலை கிடைச்சதும் நாங்க குடும்பத்தோட பஞ்சாபை விட்டு மும்பைக்கு வந்து செட்டில் ஆனோமாம். நான் அப்போ பிறக்கவே இல்லையாம். எங்க குடும்பத்துல எல்லோரும் ஏதோ ஒரு வகையில இந்த நாட்டுக்கு சேவை செஞ்சிட்டு இருக்கோம். இருக்கணுமாம். இது சீக்கியர்களோட பெருமை கவுரவம்னு எங்களுக்கு சின்ன வயசுல இருந்தே சொல்லி சொல்லி வளர்த்துவாங்க. என் தாத்தாவோட அப்பா அம்மா அண்ணன் மூணு பேரும் ஜாலியன்வாலா பாக் படுகொலையில இறந்தவங்க. தாத்தா இந்தியன் நேவியில வேலைக்குச் சேர்ந்து ஓய்வு பெற்றவங்க. அப்பா இந்தியன் நேவியில டெக்கனிகள் என்ஜினீயரா ஒர்க் பண்ணி ரிட்டையர் ஆனவர். அண்ணன் சி.ஆர்.பி.எப்ல சேர நான் யுபிஎஸ்சி எழுதி ஐ பி எஸ் ஆகிட்டேன். எனக்கு உண்மையில் இந்த ஐ பி எஸ் மேல பெரிய இன்ட்ரெஸ்ட் இல்ல. அண்ணன் தான் இத படிக்க சொல்லி நிர்பந்திசான். இன்னைக்கு நான் ஐ பி எஸ் ஆகிட்டேன் ஆனா இதைப் பார்க்க அவன் இல்ல. என் அண்ணிக்கு முப்பத்தி மூணு தான் ஆகும் ஷ்ரேயா. இந்த நாலு வருஷமா நானும் எவ்வளவோ சொல்லிட்டேன். ஏன் என் குடும்பமும் எவ்வளவோ சொல்லிட்டோம். அண்ணி அவங்களுக்குனு ஒரு லைஃப் உருவாக்காம தனியாவே இருக்காங்க. என் அண்ணி மாதிரி எத்தனை பேர் எங்க குடும்பம் மாதிரி எத்தனை குடும்பம் இப்படி தங்களோட நேசத்திற்குரியவங்களை இழந்திட்டு தனியா கஷ்டப்படுறாங்க. இதுக்கெல்லாம் காரணம் தீவிரவாதம். காஷ்மீரில ராணுவ வீரன் பலி, சத்தீஸ்கர்ல துணை ராணுவ வீரன் பலி ஏன் நம்ம டிபார்ட்மெண்ட்ல கூட எத்தனை பேர் டூட்டி பார்க்கும் போது இறந்து போறாங்க. பார்டர்ல பாகிஸ்தான் தீவிரவாதிங்க இங்க மாவோயிஸ்டுங்க. என்னமோ போ. சாரி ஏதேதோ பேசிட்டேன். பிரச்சனை என்னனா வீட்ல எனக்கு மேரேஜ் பண்ண பிளான் பண்றங்க. எனக்கு உண்மையிலே மேரேஜ் மேல விருப்பமே இல்ல ஷ்ரேயா. முதல என் அண்ணி வாழ்க்கைக்கு ஒரு விடியல் வரட்டும். உனக்கொரு விஷயம் தெரியுமா ஷ்ரேயா? அண்ணா சாகும் போது அண்ணி த்ரீ மந்த்ஸ் கன்ஸீவா இருந்தாங்க. அந்த ஷாக்ல அபார்ட் ஆகிடுச்சு. அண்ணாவும் அண்ணியும் லவ் மேரேஜ். அண்ணனோட காலேஜ் ஜூனியர் தான் அண்ணி. கிட்டதட்ட எட்டு வருஷ லவ். இன்டெர் ரிலிஜியஸ் மேரேஜ். அண்ணி ஹிந்து. அண்ணன் தான் என் ரோல் மாடல். நானும் பண்ணா லவ் மேரேஜ் தான்னு சபதமெல்லாம் எடுத்தேன் தெரியுமா?"

"விடு தன்வீர். எல்லாம் ஓகே ஆகிடும். நீ மனசை குழப்பிக்காம வீட்டுக்குப் போ. எனக்கும் நீங்க ரெண்டு பேர் தான் ரோல் மாடல் தெரியுமா? எங்க பிளாட் பக்கத்துல நீங்க குடி வந்திங்க. அப்போ தான் ரன்வீர் அண்ணா சி.ஆர்.பி.எப் பாஸ் பண்ணாங்க. அப்பறோம் பின்னாடியே நீயும் ஐ.பி.எஸ் பாஸ் பண்ண. உங்க அளவுக்கு இல்லைனாலும் நானும் முயற்சி செஞ்சு ஸ்டேட் கமிஷன் க்ளியர் பண்ணி இங்க இருக்கேன். அண்ட் உன் சபதம் கூட தான் பலிக்கபோகுதே? என்ன சொல்லறாங்க நம்ம ரிவலுசனரி(புரட்சி) மேடம்?" என்றதும்,

"ஐயோ அவளா? முதல் சந்திப்புலயே என்னை எவ்வளவு டேமேஜ் பண்ண முடியுமோ அவ்வளவு டேமேஜ் பண்ணிட்டா"

"அதான் தெரியுமே?" என்று மர்மமாக ஸ்ரேயா சிரிக்க,

"அதுவரை நம்ம டீம்ல நான் கட்டி காப்பாத்துன பேர் எல்லாத்தையும் மொத்தமா காலி செஞ்சிட்டாளே?"

"பட் சீரியஸ்லி நீங்க சூப்பர் ஜோடி தெரியுமா?" என்றவள் மெலிதாக புன்னகைக்க,

"ஏய் நான் ஆறடி மூணு அங்குலம். அவ என்ன ஒரு ஃபைவ் ஃபைவ் இருப்பாளா? குள்ள கத்திரிக்கா"

"ஹெலோ பாஸ், அவ எல்லாம் நார்மல் ஹைட் தான். நீ காம்பிளான் மைலோனு குடிச்சு வளர்ந்தா அதுக்கு அவ எப்படி பொறுப்பாவா சொல்லு?"

"அவளை யாரு அதெல்லாம் குடிக்க வேண்டாம்னு சொன்னா?"

"சரிப்பா நீ கல்யாணம் கட்டிக்கிட்டு அவளுக்கு அதெல்லாம் வாங்கிக்கொடு. கல்யாணமானா பொண்ணுக்கு வயிறு மட்டும் தான் வளரணுமா என்ன? வயிறோடு சேர்ந்து ஆளும் வளரட்டும். என்ன ஓகே வா?" என்று சொல்லி தன்னுடைய சிரிப்பை அடக்க,

"ஏய் என்னடி இப்படிப் பேசுற நீனு? இரு நான் ராகவ் அங்கிள் கிட்ட இதெல்லாம் சொல்றேன்"

"சொல்லு சொல்லு. அப்போ வாச்சும் என் கல்யாணத்தைப் பத்தி யோசிக்கறாங்களானு பார்க்கலாம்" என்றவள் அங்கிருந்து வேகமாக வெளியேற ஏனோ தன்வீருக்கு ஷ்ரேயா சொன்ன அந்தக் காட்சி கண்முன் வந்து செல்ல, 'ஐயையோ என் குழந்தைக்கு அவ அம்மாவா? இது மட்டும் அவளுக்குத் தெரிஞ்சது தாரா சைக்கோம் தாரா சைக்கோ ஆகி என்னை உண்டு இல்லைனு செஞ்சிடுவா' என்றவன் அவன் அண்ணியைக் காணச் சென்றான்.

****************

அன்று காலையில் இதயனை ஆபிசுக்கு அனுப்பிய பிறகு செல்வி ஜீவிதாவுக்கு அழைப்பை விடுத்தார். அது முழு ரிங் போயும் அட்டென்ட் செய்யாமல் போக செல்விக்கு ஏனோ திக்கென்றது. டெல்லியில் இருந்து மும்பைக்கு வரும் போதே ஜீவிதாவையும் மும்பைக்கு அழைத்தார் செல்வி. ஆனால் அப்போது அவள் எடுத்துக்கொண்டிருந்த முயற்சியின் காரணமாக அந்த வேண்டுகோளை அவள் மறுத்துவிட்டார். செல்விக்கு ஜீவியை அங்கே தனியே விட்டு வர மனமே இல்லை தான். என்ன தான் அவளுடன் பழகிய நாட்கள் சொற்பமே என்றாலும் இரண்டு பேர் மட்டுமே கொண்ட தங்கள் குடும்பத்தில் மூன்றாம் நபராய் அவள் என்றோ மாறியிருந்தாள்.
அது நாள் வரை ஒரு பெண்ணால் இவ்வளவு துணிச்சலாக வாழ முடியுமா என்று ஐயம் கொண்டிருந்த செல்வி ஜீவியின் வாழ்க்கையைக் கண்டு மெய் சிலிர்த்து தான் போனார். அவ்வாறே யோசனையில் இருக்க ஜீவியே அவரை அழைத்து இருந்தாள்.

"என்ன நெனச்சிட்டு இருக்க ஜீவிதா நீ? ஒரு போன் இல்ல ஒன்னும் இல்ல. எங்களை சுத்தமா மறந்துட்ட இல்ல?" என்று எடுத்ததும் அவள் மீது கொண்டுள்ள உரிமையில் ஆவேஷமாகவே ஆரமித்தார் செல்வி.

"ஐயோ அப்படியெல்லாம் இல்ல மா. கொஞ்சம் உடம்புக்கு முடியல..." என்ற அவள் குரலே அவள் நிலையைச் சொல்ல,

"என்னாச்சு ஜீவிமா? ஏன் என்கிட்டச் சொல்லல? இப்போ உனக்குப் பரவாயில்லையே?" என்று உடனே தன்னுடைய தொனியை மாற்றி செல்வி பேசவும் அவருடைய அக்கறை கலந்த பேச்சு ஜீவிதாவை சிறிது அசைத்து தான் பார்த்தது. இருந்தும் முயன்று தன்னைச் சுதாரித்தவள்,

"அவ்வளவு முடியாம எல்லாம் ஒண்ணுமில்லை மா. ஒரு வாரமா பனில சுத்துனேனா அதான்... உங்களுக்குத் தான் டெல்லி கிளைமேட் தெரியுமே? அடிச்சா மொட்டை வெச்சா குடுமி தான். இந்த மத்திமமே கிடையாது. அதான் த்ரோட் இன்பெக்சன் ஆகிடுச்சு. சரி என்னை விடுங்க. நீங்க எப்படி இருக்கீங்க? உங்க உடம்பெல்லாம் சரியா பாத்துக்கறிங்களா?" என்றதும் ஒருகணம் யோசித்த செல்வி,

"ஜீவிமா எனக்கு கொஞ்ச நாளா உடம்பே சரியில்லைடா. எனக்கு ரொம்ப பயமா இருக்கு. நீ கொஞ்சம் இங்க வந்து என்னைப் பார்திட்டுப் போறியா?" என்றதும் ஜீவிதாவுக்கு உள்ளம் படபடத்தது.

"என்னாச்சும்மா உங்களுக்கு? இதுக்கு தான் உங்களை வலுக்கட்டாயமா இங்க இருந்து மும்பை கூட்டிட்டுப் போனாரா உங்க புள்ள... அன்னைக்கு என்னமோ வசனமெல்லாம் பேசுனார். என் அம்மாவை எனக்குப் பார்த்துக்க தெரியும் அப்படி இப்படினு" என்று கடுகு போல் பொரிந்தாள் ஜீவிதா. அங்கே ஜீவிதாவைப் பார்க்க வந்த அவள் கொலீக் ஜோதி ஜீவியை ஆச்சரியமாகப் பார்த்தாள். அவளுக்குத் தெரிந்து ஜீவிதா யாரிடமும் நெருங்கிப் பழக மாட்டாள். பழகியதுமில்லை. அவளிடம் ஒரு அக்கறை எப்போதும் இழையோடும் தான். ஆனால் அதை வெளிப்படையாக என்றைக்குமே காட்டிக்கொள்ள மாட்டாள். அவள் பேச்சிலும் பார்வையிலும் ஒரு நிமிர்வும் தைரியமும் ததும்பி வழியுமே ஒழிய தன்னை இலகுவாக எப்போதும் காட்டிக்கொள்ள விரும்ப மாட்டாள். அப்படிப்பட்டவளின் இந்தப் பேச்சு தீபிகாவுக்கு ஆச்சர்யம் கொடுக்காமல் இருந்தால் தான் ஆச்சர்யம்!
'லிட் அப்'(lit up- ஒளி ஏற்று, எரித்து விடு) என்னும் என்.ஜி.ஓ(அரசு சாரா தொண்டு நிறுவனம்) டெல்லியில் பெண்களின் முன்னேற்றத்திற்காகவும் பெண்களுக்கு எதிராக நடைபெறும் வன்முறைகளை வெளிச்சத்திற்குக் கொண்டு வரவும் இயங்கும் ஒரு தொண்டு நிறுவனம். கடந்த ஆறு ஆண்டுகளாக இயங்கிவரும் அந்த நிறுவனத்தில் இரண்டரை வருடங்களாக தன்னை ஈடுபடுத்திக்கொண்ட ஜீவிதா தற்போது அங்கு ஒரு முக்கிய பதவியில் இருக்கிறாள். தன்னுடைய வேலையில் கடமை தவறாது இயங்கும் ஜீவியை இவ்வளவு இலகுவாக யாருமே பார்த்திருக்க மாட்டார்கள்.

"அப்படியெல்லாம் இல்ல டா. அவனும் என்னை நல்லா கவனிச்சுக்கறான் தான்..." என்று முடிக்கும் முன்னே,

"ஆயிரம் இருந்தாலும் பிள்ளையை விட்டுக்கொடுக்க மாட்டீங்களே?" என்று நொடிந்து கொண்டாள் ஜீவிதா.

"ஜீவிமா..." என்று செல்வி இழுக்க,

"என்ன மா? சொல்லுங்க?"

"என்னைப் பார்க்க நீ வருவ தானே?" என்று கேட்டதும் அவருக்கு மறுக்க முடியாமல் தவித்தாள் ஜீவிதா. உண்மையில் செல்வியைக் காண வேண்டும் என்று ஜீவிதாவுக்கு நீண்ட நாட்களாக எண்ணமிருந்தாலும் அவரைச் சந்திக்க வேண்டுமானால் இதயனையும் எதிர்கொள்ள வேண்டுமே என்ற காரணத்திற்காகவே அவள் அந்த எண்ணத்தைக் கைவிட்டாள். ஆனால் இப்போது என்ன செய்வதென்று புரியாமல் ஜீவி குழம்ப,

"அப்போ நீ வரமாட்ட அப்படித்தானே? சரி விடு நானே டெல்லி வரேன். என்ன ஒன்னு முன்ன மாதிரி என்னால பயணப்பட முடியறதில்லை. தேங்காய் வேணும்னா தென்னை மரம் ஏறிதானே ஆகணும். நானே வரேன்..." என்று செல்வி சொன்னதும்,

"இல்லம்மா. நீங்க சிரமப்பட வேண்டாம். நானே வரேன். இன்னும் நாலு நாளுக்கு கொஞ்சம் வேலை இருக்கு. நெக்ஸ்ட் வீக் எண்ட் மும்பைல இருக்கேன். அதுவரை கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணுங்க..." என்றவள் செல்வியை கட்டாயம் ஓய்வெடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டவள் அழைப்பைத் துண்டித்ததும் இதயனைத் தொடர்புகொண்டாள்.

இங்கே செல்விக்கோ உடல் நிலை நன்றாக இருந்தாலும் இதை விட்டால் ஜீவிதாவை இங்கு வரவழைக்க முடியாது என்று பொய்யுரைத்தார்.

****************

அங்கே ஜெய்யின் வீடே பரபரப்பில் இருக்க அதற்குள் சந்திரசேகர் ஆகாஷ் மற்றும் விமல்(கண்மணியின் கணவர்) ஆகியோர் வீடு திரும்பியிருந்தனர். வந்ததும் வராததுமாக விமலைப் பிடித்துக்கொண்டனர் கண்மணி.

"அன்னைக்கு ஜெய்கிட்ட எல்லாம் கேட்டுட்டு தான் இந்த நிச்சயம் ஏற்பாடெல்லாம் நடக்குதுன்னு சொன்னிங்க? என்ன நடக்குது இங்க?" என்றவள் தன் தந்தையையும் முறைக்க,

"ஜெய் லவ் பண்ற பொண்ணு ஒரு வடமாநிலப் பொண்ணு. அந்தப் புள்ளைக்கு நம்ம மொழி பழக்க வழக்கம் எதுவும் தெரியாது. கல்யாணங்கறது ரெண்டு தனிப்பட்ட மனுஷங்க சம்மந்தப்பட்டது மட்டும் இல்ல. ரெண்டு குடும்பம் சம்மந்தப்பட்டது. அதான்..." என்று சந்திரசேகர் முடிக்கும் முன்னே,

"அவன் என்ன குழந்தையா? கையைக் காலைக் கட்டி திருமணம் செஞ்சு வெக்க? நீங்க இதைப்பத்தி ஏன் யாருகிட்டயும் சொல்லல? இப்போ பாருங்க அவன் அந்தப் பொண்ணை வீட்டுக்கே கூட்டிட்டு வந்துட்டான்" என்று கண்மணி சொல்லவும் தான் யாக்நியா இங்கு வந்திருப்பதே சந்திரசேகருக்குத் தெரிந்தது.

அவரோ அதிர்ச்சியாக மேலே பார்க்க,

"சொல்லுங்க இப்போ என்ன பண்ணப் போறீங்க? இது போதாதுன்னு நாளைக்கு நிச்சயதார்தத்துக்கு சொந்தகாரங்க எல்லோரையும் கூப்பிட்டிருக்கிங்க. எதெதுல வீம்பு பண்ணனும்னு உங்களுக்குத் தெரியாதாப்பா?" என்ற சப்தத்தில் யாக்நியா தன்னுடைய அறையில் இருந்து வெளியேறி கீழே பார்த்தாள். அவளுக்கு இவர்கள் பேசுவது புரியாவிட்டாலும் இந்தப் பேச்சின் பேசுபொருளாக இருப்பது என்னவோ தங்களுடைய காதல் தான் என்று அவளுக்கு விளங்கியது. அவளோ தயக்கத்துடன் எல்லோரையும் பார்க்க அப்போது தான் அவளை முதன் முறையாகப் பார்த்தார் சந்திரசேகர். கோதுமை நிறத்தில் ஒப்பனைகள் ஏதுமின்றி கண்ணுக்கு லட்சணமாகவே காட்சியளித்தாள் யாக்நியா கோஷ். அந்தச் சூழ்நிலையிலும் அவரைக் கண்டவள் மரியாதை நிமித்தமாய் ஒரு புன்னகை உதிர்க்க ஏனோ தன்னையும் அறியாமல் சந்திரசேகரும் புன்னகைத்தார். இப்போது அவளே ஜெய்யின் அறையைத் தட்டி அவனோடு கீழே பிரவேசித்தாள்.

இருவரும் ஜோடியாக வரும் போது நிறைவாக காட்சியளித்தாலும் சந்திரசேகருக்கு ஏனோ மனம் ஒப்பவில்லை. அவர் அக்காலத்து ஆள். அவர் வாழ்நாளில் தூத்துக்குடி திருநெல்வேலி ராமநாதபுரம் விருதுநகர் தேனி மதுரை முதலிய தென் மாவட்டங்களைத் தவிர்த்து வெளியில் எங்கும் சென்றிடாதவர். வியாபாரம் செய்து வருகிறார். சொந்தமாக ஒரு தீப்பெட்டி தொழிற்சாலை இருக்கிறது. அதுபோக லாரி டிப்பர் வைத்து தூத்துக்குடி துறைமுகத்தில் சில ஒப்பந்தங்களை மேற்கொண்டு தொழில் புரிகிறார். குறிப்பிடும் படியான சொத்துக்கள் இருக்கிறது. ஆகாஷ் தந்தையோடு இணைந்து தொழில் செய்கிறார். ஜெய்யையும் தன்னுடைய தொழிலுக்கு இழுக்கவே முயற்சித்தார். ஆனால் அவனோ படித்ததும் ஒரு மென்பொருள் நிறுவனத்தில் பணியில் சேர்ந்தான். பிறகு சிவில் சர்விஸ் எழுதுகிறேன் என்று நான்காண்டுகள் முயற்சித்து இன்று நல்ல பணியில் இருக்கிறான். ஜெய் ஓரளவுக்கு நன்கு படிப்பான் என்று சேகருக்குத் தெரிந்தாலும் ஒருநாளும் அவன் ஒரு ஐ.ஏ.எஸ் அதிகாரி ஆவான் என்று நினைத்துகூடப் பார்த்ததில்லை. இன்னும் சொல்லப்போனால் அவன் இதில் தேர்ச்சிபெறும் வரை அவர் அவனை பெரிதாக நம்பவுமில்லை. கடந்த இரண்டாண்டுகளாக அவன் வளர்ச்சியைக் கண்டு மனதில் பூரிக்கிறார். சிறுவயதில் இருந்தே இந்தக் குடும்பத்தில் ஒட்டாமல் வளர்ந்தவன் என்பதால் எங்கே இனி மேலும் குடும்பத்தை விட்டு விலகிவிடுவானோ என்ற ஐயம் அவருக்கும் இருக்கிறது. அதன் பொருட்டே அவ்வூரில் பெயர்பெற்ற கார்த்திகேய ஆசிரியரின் பேத்தியான மணிமேகலையுடன் ஜெய்க்கு திருமணம் நடந்த முடிவெடுத்தார். நீண்ட நாட்களாகவே அவருக்கு அப்படி ஒரு எண்ணம் இருக்க அன்று ஜெய் ஒரு பெங்காலி பெண்ணை விரும்புவதாகச் சொன்னதும் இந்தத் திருமணத்திற்குத் துரிதப்படுத்தினார். இங்கே வரவழைத்து கண்மணி விமல் ஆகாஷ் ஆகியோரை வைத்து அவனைச் சம்மதிக்க வைத்துவிடலாம் என்ற நம்பிக்கையில் தான் அவனிடம் எதையும் தெரிவிக்காமல் வரவழைத்தார். இப்போது நினைக்கையில் தான் அவசரப்பட்டுவிட்டோமோ என்று தோன்றுகிறது. கார்த்திகேயனுக்கு என்ன பதில் சொல்லப் போகிறோம் என்று அவர் மனம் திண்டாடுகிறது. இதில் யாக்நியாவின் குடும்பத்தைப் பற்றித் தெரிந்தால் வேதாளம் மீண்டும் முருங்கைமரம் ஏறிவிடும்.

கதையில் எல்லாக் கதாபாத்திரத்துக்கும் ஒரு பிளாஷ்பேக் இருக்கு. கதை முன்னோக்கியும் அவர்களின் fb பின்னோக்கியும் ஒரே நேரத்தில் பயணிக்கும். இதை அடுத்த அத்தியாயத்தில் இருந்து புரிந்துகொள்வீர்கள். இந்தக் கதையில சில கதாபாத்திரங்கள் எனக்கு ரொம்ப ஸ்பெஷல் ஆனது. அதுல முக்கியமானது ஜீவிதா. ஜீவிதா இதயன் போர்சன முதல தனிக்கதையாவே யோசிச்சேன். பின்னாடி வேணாம்னு இங்க மெர்ஜ் பண்ணிட்டேன். தாரா, ஜிந்தியானு பெண் பாத்திரங்களும் ஸ்பெஷல் தான்.
 
ஸ்ரேயா தன்வீர விரும்புறாளோ ??
இல்லை. ஷ்ரேயா தன்வீரோட neighbour childhood friend. தன்வீரோட ஜோடி தாரா...
 
Top