Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மன அழகு

Advertisement

Vathani

Tamil Novel Writer
The Writers Crew
ஃப்ரண்ட்ஸ்... ரொம்பவே சம்தோசமா இருக்கு உங்கள் வரவேற்பைப் பார்த்து. தேங்க் யூ சோ மச் ஃப்ரண்ட்ஸ்.. மன அழகு நான் எழுதிய முதல் சிறுகதை.. ராணி முத்துவில் வெளியானது இப்போது உங்கள் பார்வைக்கும்.. படித்து பகிர்ந்தால் மகிழ்ச்சி..


மன அழகு

அந்த திருமண மண்டபமே கோலாகலமாக காட்சி அளித்தது.. எங்கு பார்த்தாலும் உறவினர்களின் கூட்டமும், வான வேடிக்கைகளும், கலைநிகழ்ச்சிகளும் என்று பார்க்கும் இடமெல்லாம் ஆரவாரமாக இருந்தது. இது எதிலும் அவன் மனம் செல்லவில்லை.


ஏனோ அவனது திருமணம் நின்று போனதில் இருந்து எந்த ஒரு விஷேசத்திற்கும், அவனது பெற்றோர் செல்வதில்லை. பார்ப்பவர்களும் உறவினர்களும் நின்று போன திருமணத்தைப் பற்றியே பேசுவார்கள், அதைக் கேட்டு மேலும் வருத்தப்பட வேண்டாம் என்று அவர்கள் இந்த மூன்று மாதத்தில் எந்த விஷேசத்திற்கும் போகவேண்டாம் என முடிவு செய்து, அந்த திருமணம் நிற்ககாரணமான அவனையே மற்ற விசேஷங்களுக்கும் கல்யாணத்திற்கும் அனுப்பிவைத்தனர்.


அதன் பொருட்டு இன்று ஒரு உறவினரின் மகனும், அவனின் நண்பனுமான ரமேஷின் கல்யாணத்திற்கு வந்திருந்தான். நல்லவேளையாக பெண் அழைப்பு நடந்து கொண்டிருந்ததால் யாரும் இவனை சரியாக கவனிக்கவில்லை. அவனும் அப்பாடா என்று மூச்சு விட்டுக்கொண்டு அங்கிருந்த சேரில் அமர்ந்தான். அப்போது அவனுக்கு முன்னே அமர்ந்திருந்த ஒரு புதுமணத்தம்பதிகள் அவனது கவனத்தைக் ஈர்த்தனர்.



“என்னங்க.... நீங்க கொஞ்ச நேரம் சும்மா இருங்க, இது என்ன பொது இடத்துல இப்படி பண்ணிட்டு இருக்கீங்க”


“ஹே நான் என்னடி பண்ணேன், பார்க்குறவன் என்னை தப்பா நெனச்சுக்கப் போறான். நான் ஏதோ ரொமான்ஸ் பண்றதா கிண்டலடிக்கப் போறானுங்க, முதல்ல இந்த ஜூசைக் குடிச்சிட்டு டம்ளரைக் கொடு, நான் இடத்தைக் காலி பண்றேன். பாவமே நம்ம பொண்டாட்டி.... சும்மாவே கல்யாண வீட்டுல மாசமா இருக்காணு கூட பார்க்காம வேலை வாங்குறாங்களே, பத்தாதுக்கு என் புள்ளையும் போட்டு படுத்துவானே, எல்லாம் சேர்ந்து டயர்டாகி இருப்பாளேனு ஒரு நல்ல எண்ணத்துல எல்லாரையும் மிரட்டி உன்னை ஒரு இடத்துல உட்கார வச்சேன் பாரு என்னை சொல்லணும், சீக்கிரம் குடிச்சிட்டு ஓடு... பொண்ணு புள்ளை உனக்கு சிநேகிதி வேற... இனி எப்ப கண்ணுல படுவ” என்று தன் புதுமனைவியின் தலையை தடவிக்கொண்டே, அவளுக்கும் பழரசத்தையும் பருக கொடுத்தபடி மிரட்டி கொண்டிருந்தான் முகுந்தன்.



“இருங்க இருங்க... இப்போ நான் என்ன சொன்னேன்... நீங்க எதுக்கு இவ்ளோ நீளமா டயலாக் விடுறீங்க... இப்படியே சொல்லி சொல்லி என்னை ஒரு வேலை செய்ய விடல, நான் வேலை செய்றேனு போனாலும், உங்களுக்கு பயந்து எல்லாரும் என்னை துரத்தி விட்டுறாங்க, அதான் நீங்க நெனச்ச மாதிரி நடந்துடுச்சே அப்புறம் என்ன...? என்று முகுந்தனைப் பார்த்து உதட்டைச் சுழித்தால் அவன் மனைவி மித்ரா...


அவளது முகபாவனையைப் பார்த்து வாய்விட்டுச் சிரித்தவன், “இது மட்டும் நம்ம வீடா இருந்துருக்கணும், அப்போ தெரியும் என்னோட நெனைப்பை பத்தி, என்றவன் “கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துட்டு வேலை செய்டா கண்ணா... அதான் நைட் இங்க தங்குறதுக்கு ஓகே சொல்லிட்டேனே.. பிறகு ஏன் இவ்ளோ சிரமப் படுற..”


“அதெல்லாம் வேண்டாம் மாமா, நாம வீட்டுக்கே போய்டலாம், எனக்கும் தலை பாரமா இருக்கு,நந்தினிக்கிட்ட சொல்லிட்டேன், அவளும் சரி சொல்லிட்டா.. வாங்க ரெண்டுபேரும் போய் சொல்லிட்டு கெளம்பலாம், காலையில் 10 மணிக்குத்தானே முகூர்த்தம், நாம எட்டு மணிக்கு வந்தா போதும், என்ன சொல்றீங்க..”


“நீ சொல்லிட்டா அப்பீல் ஏது..? இந்த லைட் வெளிச்சம், பாட்டு சத்தம் தான் தலை வலிக்க காரணம்,வீட்டுக்குப் போய்ட்டு, காலையில் நேரமே வந்துடுவோம். அதுதான் நல்லது.. சரி வா, உன்னோட சிநேகிதிக்கிட்டையும் சொல்லிட்டு, அம்மா-அப்பாக்கிட்டையும் சொல்லிட்டு கெளம்புவோம்”என்றபடியே எழுந்த முகுந்தன் மித்ராவிற்கும் கை கொடுத்து அழைத்து சென்றான்.



இவர்களுக்கு பின்னாடி அமர்ந்திருந்த அவனின் மனமோ அவர்களை நினைத்து சிரித்துக் கொண்டாலும், கொஞ்சம் பொறாமையும் பட்டது. அவர்களின் அன்னியோன்யம் நீண்ட நாட்கள் திருமண வாழ்க்கையில் இருந்தவர்கள் போலவும், நீண்ட நாள் காதலித்து மணந்தவர்கள் போலவும் இருந்தது. தானும் அன்று திருமணத்தை நிறுத்தாமல் இருந்திருந்தால் நானும் இந்நேரம் என் புதுமனைவியோடு இந்த விஷேசத்திற்கு வந்திருப்பேன் என்று நினைத்துக் கொண்டான்.



முன்னாடி அமர்ந்திருந்தவர்களின் முகம் அவனுக்கு சரியாக தெரியவில்லை, வெளியே செல்ல இப்படித்தானே வரவேண்டும் அப்போது பார்த்துக் கொள்ளலாம் என்று அவர்கள் போன பாதையையே பார்த்தபடி அமர்ந்திருந்தான்.



அவனுக்கு இவ்வளவு அன்பைக் காட்டும் கணவனை அடைந்த அந்தப் பெண் யாரென்று பார்க்க வேண்டும் என்ற ஆர்வம் அதிகமானது. அப்போது உள்ளே சென்ற இருவரும் வெளியே வர,முகுந்தனின் உடன் நடந்து வந்த மித்ராவைக் கண்டதும் அவனின் கால்கள் தன்னையும் அறியாமல் எழுந்து நின்றது, மித்ராளினியா என்று அவன் உதடுகள் உச்சரித்தது.



இவள்தானா... இவளேதானா.. நான் வேண்டாம் என உதாசீனப்படுத்தியவள், எதிலோ தோற்றுப்போன உணர்வு அவனுக்கு, அவர்கள் அருகில் வரும் வரைப் பார்த்துக் கொண்டே இருந்தான் கண்சிமிட்டாமல்.



அவர்களை தலை நிமிர்ந்து பார்க்க இயலாதவனாக தலை குனிந்து கொண்டான். மூன்று மாதங்களுக்கு முன்பு நடந்த நிகழ்வு அவன் மனத்திரையில் படமாக ஓடியது. மித்ராவைத்தான் அவனுக்குப் பெண் பார்த்து நிச்சயத்திருந்தனர். மித்ரா சற்று கருப்பு நிறமுடையவள். அதில் அவனுக்கு சிறிது சுணக்கம் தோன்ற ஆரம்பித்தது.. கொஞ்சம் கலராக பார்த்திருக்கலாமே இந்த அம்மா என்ற எண்ணம் எழுவதை தடுக்க முடியவில்லை அவனால்.


அவனின் அம்மாவிற்கு மித்ராவை மிகவும் பிடித்திருந்தது. கருப்பு நிறம் தவிர அவளிடம் குறை என்று எதுவும் சொல்ல முடியாது, பெண் வீட்டிலும் சீர்வரிசைக் கேட்டதற்கு மேலும் செய்யும் ஆவலில் தான் இருந்தனர். அதுவும் அவனின் தாயாரான மகேஸ்வரிக்கு மிகவும் வசதியகிவிட,அதன்பிறகு கல்யாண வேலைகள் ஜரூராக நடைபெற்றன.. இதற்கிடையில் அவனிடம் இருந்த உற்சாகம் வடிந்தது. ஏதோ ஒரு சுழலுக்குள் தன்னை அமிழ்த்தப் பார்க்கிறார்கள், இதிலிருந்து எப்படி மீள்வது என்ற யோசனையிலேயே அலைந்தான். நிச்சயித்த பெண்ணிடம் பேசவேண்டும் என்ற எண்ணம் கூட அற்றுப்போயிருந்தது. மித்ரா அழைத்த போதும் அவளுடைய எண் என்று தெரியாமலே ஏதோ ஒரு ராங்க் நம்பர் என்று போனை எடுக்காமல் விட்டான்.



இதனால் மித்ராவிற்கு சிறிது சந்தேகம் வந்தது. ஆனாலும் தன் பெற்றவர்கள் மேல் இருந்த நம்பிக்கையில் ஒன்றும் செய்யாமல் அமைதியானாள். திருமணத்திற்கு நாள் நெருங்கிக் கொண்டிருக்கையில் திடீரென அவன் தன் தாயிடம் “அம்மா இந்த கல்யாணத்தை நிறுத்திடுங்க”என்றான்.



அவரோ கொதித்துப் போய் “அதை ஏண்டா இப்போ சொல்ற, பொண்ணு பார்க்க நீயும் தானே வந்த,அப்போவே கேட்டேனே அப்போ சொல்லியிருக்கலாம், இல்லை நிச்சயம் செய்ய ஊரே போனோமே அப்போவாச்சும் சொல்லிருக்கலாம், இப்போ வந்து இப்படி ஒரு குண்டைத்தூக்கி போட்டா எப்படிடா...? அவங்களுக்கு நாம என்ன பதில் சொல்லமுடியும், நம்ம குடும்பத்தைப்பத்தி அவங்க என்ன நினைப்பாங்க.. ஊருக்குள்ள நம்மளைப்பத்தி கேவலமா பேசுவாங்கடா... இதையெல்லாம் விடு,கடைசி நிமிசத்துல கல்யாணம் நின்னுபோயிட்டா அந்தப் பொண்ணோட நிலைமையை கொஞ்சம் யோசிச்சி பாரு, பொண்ணுங்க பாவம் பொல்லாதது,” என்ற தாயின் மனம் வேதனையில் உழன்றது.


“உங்களோட விருப்பத்துக்காக முதலில் அரை மனசோட சம்மதிச்சேன், ஆனா நாள் நெருங்க நெருங்க எனக்கு குழப்பம் அதிகமாகுது, இப்போ எனக்கு பிடிக்கலை. நான் செய்தது தப்புதான்,ஒத்துக்குறேன். அதுக்காக காலம் முழுசும் மனசு கஷ்டத்தோட வாழ முடியுமா.ஏதாவது காரணத்தை சொல்லி கல்யாணத்தை நிறுத்திடுங்க, அப்பாக்கிட்ட என்ன சொல்லணுமோ சொல்லு, இல்லன்னா கொஞ்சநாள் நான் தலைமறைவா போய்டுறேன், அப்போ தன்னால இந்தக் கல்யாணம் நின்னுபோயிடுமில்ல,” என்றான் வெறுப்போடு.


“பொண்ணு கருப்பா இருக்கிறதுதான் பிரச்சனையா..? அவ ரொம்ப நல்ல பொண்ணுடா,அவளைப்பத்தி நல்லா தெரிஞ்சதுனால தான் நான் உனக்கு கட்டி வைக்க முடிவு செஞ்சேன். ஒத்தப்புள்ளைனு செல்லம் கொடுத்து வளர்த்தது தப்பா போச்சு, இப்படி எங்க தலையில் கல்லைத்தூக்கி போட்டுட்டியே” என்று மகேஸ்வரி அழுது புலம்பினார்.



வீட்டில் பேசி பிரயோஜனம் இல்லை என்று நினைத்த அவன் நேரடியாக மித்ராவிற்கே போன் செய்து இந்த திருமணத்தில் விருப்பம் இல்லை, என்னோட அம்மா விருப்பத்துக்காக தான் சம்மதம் சொன்னேன், என்னை மன்னிச்சிடு” என்று கூறி திருமணத்தை நிறுத்திவிட்டான்.


அதன்பிறகு முகூர்த்தம் குறிக்கப்பட்ட அதே நாளில் மித்ராவிற்கு வேறு மாப்பிள்ளைப்பார்த்து திருமணம் முடிந்ததாக கேள்விப்பட்டான். வீட்டிலும் யாரும் அவனிடம் பேசுவதில்லை. மிகுந்த மன உளைச்சலில் இருந்தான்.


அப்போதுதான் அவனின் நண்பன் ரமேஷ் திருமண அழைப்பிதல் கொடுத்துவிட்டு கண்டிப்பாக வரவேண்டும் என்று வேண்டுகோள் வைத்துவிட்டு போனான். அவனுக்கும் ஒரு மன மாறுதல் வேண்டும் என்று நினைத்து இந்த திருமணத்திற்கு வந்தான்.


ஆனால் வந்த இடத்தில் இப்படி மித்ராவை அவள் கணவனோடு பார்ப்பான் என்று நினைக்கவில்லை. இப்போது அவனுக்கு குற்றஉணர்வு சிறிது விலகியது. ஆனாலும் அவளிடம் நேரடியாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்று நினைத்து அவர்களை நெருங்கினான்.



அவர்கள் அவனைக் கண்டுகொள்ளாமல் முன்னேற, அப்போது பாரத்திற்கு மித்ராவிடம் பேசியே ஆகவேண்டும் என்று தோன்றியது. உடனே அவர்கள் முன் போய் நின்றான். “மித்ரா” என்று அழைக்க,அப்போதுதான் இருவருமே அவனைப் பார்த்தனர். இருவருமே அவனைப் பார்த்து சிநேகிதமாக புன்னகைத்தனர். அதுவே நூறு சாட்டையடிகள் வாங்கியது போன்ற உணர்வைக் கொடுத்தது அவனுக்கு. ஏனென்றால் எப்படியும் தன் மேல் கோபம் இருக்கும், அதில் பொது இடம் என்று கூட பார்க்காமல் ஏதேனும் சண்டை போடுவாள் என்றிருக்க, அவர்கள் சிரித்தது முற்றிலும் வேறாக இருந்தது.


“எப்படி இருக்கீங்க பாரத், என்னைத் தெரியுதா..?” என்றாள் மித்ரா.


“ம்ம்” என்று தலையசைத்த பாரத் “என்னை மன்னிச்சிடுங்க மித்ரா. நான் அப்படி செஞ்சுருக்க கூடாது,முன்னாடியே உங்ககிட்ட பேசி இருக்கணும், தப்பு என்மேல தான். அந்த குற்ற உணர்ச்சியே என்னைக் கொல்லுது, வீட்டில் யாருமே என்கிட்டே பேசுறது இல்ல. பெரிய பாவம் பண்ணிட்ட மாதிரி பீல் ஆகுது, தயவு செஞ்சு மன்னிச்சிடுங்க”


“அப்படியெல்லாம் சொல்லாதீங்க பாரத், நீங்க எனக்கு உதவி தான் செஞ்சுருக்கீங்க, அதுக்கு நான்தான் உங்களுக்கு நன்றி சொல்லணும், நீங்க மட்டும் அன்னைக்கு என்னிடம் பேசவில்லை என்றால் ரெண்டு பெரும் காலம் முழுக்க ஒரு பொய்யான வாழ்க்கையை வாழ்ந்து இருப்போம்.


அந்த கஷ்டத்தைக் கொடுக்காம முன்னாடியே சொன்னதுக்கு ரொம்ப நன்றி, நீங்க அப்படி சொல்லலைனா இன்னைக்கு எனக்கு இவ்வளவு அன்பான கணவர் கிடைச்சிருக்க மாட்டார். அதுக்கு நான்தான் உங்களுக்கு நன்றி கடன் பட்டிருக்கேன், இவர்தான் என்னோட கணவர் Mr.முகுந்தன், ஊர்ல விவசாயம் பார்க்குறார், ரொம்ப சந்தோசமா இருக்கேன்” என்று அருகில் நின்றிருந்த கணவனின் தோளில் சாய, முகுந்தனும் அவளை அணைத்துக் கொண்டு,


“நீங்க செஞ்ச உதவிதான் பாரத் எனக்கு உயிரான மனைவி கிடைச்சிருக்கா, அவளுக்காக எதுவும் செய்யனும்னு தோணுகிற அளவுக்கு அவ மேல நான் அன்பா இருக்கேன், அந்தளவுக்கு அவ என்னிடம் பாசமா நடந்துக்குறா.. இதுக்கெல்லாம் உங்களுக்கு நன்றி சொல்லியே ஆகணும் ப்ரதர். நாங்க உங்களை வருத்தப்படுத்தனும் என்று நினைக்கலை, உண்மையா மனசார தான் இந்த நன்றியை சொல்றோம், நீங்க செஞ்ச உதவிக்கு நன்றி பாரத்..” என்றான்.


பாரத்திற்கு என்ன பேசுவது என்றே தெரியவில்லை, சிறிது நேரம் அந்த இடம் அமைதியில் கழிய மீண்டும் முகுந்தனே ஆரம்பித்தான், “ உடல் அழகை விட மன அழகு தான் முக்கியம் பாரத், அதை புரிஞ்சிக்கிட்டா வாழ்க்கையே வண்ணமயமா மாறிடும் எங்க வாழ்க்கை போல.. இனி உங்க வாழ்க்கையையும் அதே மாதிரி மாத்திக்கிற பக்குவம் உங்களுக்கு வந்துருக்கும்னு நெனைக்கிறேன்,சீக்கிரம் உங்க திருமண அழைப்பிதழை எதிர்பார்க்கிறோம், நடக்குமா...?” என்றான்.


பலநாள் யோசனையில் இந்தக் கருத்தும் பாரத்திற்கு தோன்றி இருந்தது, அது இன்று முகுந்தனையும்- மித்ராவையும் பார்த்த பிறகு வலு பெற்றது, அவன் முகத்தில் தெளிவு பிறக்க, “கண்டிப்பா சார், சீக்கிரம் மேரேஜ் இன்விடேஷனோட உங்களை வந்து பார்க்குறேன், நீங்க வருவீங்க தானே” என்றதும்.



"கண்டிப்பா... நாங்க இல்லாமலா, கொண்டாடிடுவோம்” என்று முகுந்தனை முந்திக்கொண்டு மித்ரா பதிலளிக்க, மற்றவர்கள் கவலை மறந்து சிரிக்க ஆரம்பித்தனர். அங்கு கவலைகளும் குற்ற உணர்வும் மறைந்து ஒரு அழகான நட்பு உருவாகியது...


****************************************************************************************************************************************
சுபம்​
****************************************************************************************************************************************
 
Top