Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், tamilnovelwriters@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மரபு வேலி 20 2

Admin

Admin
Member


எட்டு மணிக்கு மனோவும் கரிஷ்மாவும் பிள்ளைகளோடு கிளம்ப, அவர்களுக்கு காலை உணவு தயாராவதை மேற்பார்வை பார்க்க, பின் அவர்களுக்கு பரிமாற, ஸ்ருஷ்டியை சமாதானம் செய்ய என்று அங்கைக்கு நேரம் சரியாய் இருந்தது.

பின்னே ஸ்ருஷ்டி அத்தையை பார்த்து விட்டால் சாமான்யத்தில் ஊருக்கு செல்ல ஒத்துக் கொள்ள மாட்டாள். ஏன் அழாமல் சென்றதே இல்லை எனலாம்.

அங்கைக்கும் ராஜராஜனுக்கும் தனிமை கிடைக்க வில்லை. அதனால் அவர்களுக்கு மேலே பேசும் வாய்ப்பு கிட்டவில்லை. ஆனால் இருவரும் இயல்புக்கு வரவில்லை.

இன்னும் அங்கையினது கோபம் எல்லோர் முன்னும் அவன் மீது நெருஞ்சி முள்ளாய் தான் தைத்துக் கொண்டிருந்தது.

அவர்கள் கிளம்பிய பின், ரதி பூர்ணிமாவிற்கு பசிக்கும் என்பதால் அவளை டைனிங் டேபிளில் அமர வைத்து அங்கை சேரில் அமர்ந்து இட்லி ஊட்டிக் கொண்டிருந்தாள்.

ராஜராஜன் குளித்து கோவிலை ஒரு பார்வை பார்த்து வரக் கிளம்பினான். “நான் கோவிலுக்கு போயிட்டு வர்றேன்” என்று சொல்லி தான் சென்றான்.

அப்போது சௌந்தரியும் விஜயாவும் வர, இருவரும் ஒரே போல புடவை கட்டி இருந்தனர். நேற்று ஒரே மாதிரி கனமான பட்டுப் புடவை, இன்று மெல்லிய கரை வைத்த பட்டுப் புடவை.

அவர்களும் கோவிலுக்கு கிளம்பிக் கொண்டிருந்தனர். சாமியை வணங்கி வந்த பிறகு அவர்களும் காலையில் ஊருக்கு கிளம்புவதாய் ஏற்பாடு. பின்னேயே அவர்களின் குடும்பமும் வர, அவர்களின் உடையிலும் கூட ஒற்றுமை.

தில்லையிடம் “மா பாரு, இந்த கலர் வேண்டாம்னு சொன்ன, எவ்வளவு நல்லா இருக்கு, அன்னைக்கு கடையில நீயும் பெரியம்மாவும் ஒத்துக்கவே இல்லை” என்றாள் சௌந்தரி.

மகளுக்கு உணவு ஊட்டிக் கொண்டே இங்கே ஒரு பார்வை அங்கை வைத்திருக்க,

“ஏண்டி, கோவில் கும்பாபிஷேகத்துக்கு பொண்ணுங்களுக்கு எடுத்துக் கொடுக்கறோம். அது முறை! அப்போ பச்சை, மஞ்சள், சிகப்புன்னு மங்கள கரமா எடுக்க வேண்டாமா? இது இங்கிலீஷ் கலர்! அழகா இருந்தாலும் காரணத்துக்கு பொருத்தமா இருக்கணும்ல?”

“மா, நாங்க என்ன ட்ராஃபிக் சிக்னல் காமிக்க போறோமா?” என்று சௌந்தரி கிண்டல் செய்ய,

அங்கே இருந்த மற்ற இரு மருமகள்களும் “எங்களுக்கும் எடுத்திருக்கலாம்ல அத்தை” என்றனர்.

“அதான் அவங்க அவங்களுக்கு பிடிச்சதா எடுக்க சொல்லிட்டோமே? பணமும் குடுத்துட்டோமே?” என்றார்.

அங்கைக்கு இது புது செய்தி, என்ன நடந்தது என்று ஞாபக அடுக்கினில் ஓட்டி பார்த்தாள். ராஜராஜன் “உடை போய் எடுத்து வந்து விடு, இங்கே நிறைய வேலைகள். கும்பாபிஷேகதிற்கு புதுசு தான் கட்ட வேண்டும்” என்று சொன்னது ஞாபகத்தில் வந்தது.

அங்கை தான் சொல்லி விட்டாள் “ஏற்கனவே உங்களுக்கு நிறைய அலைச்சல். இப்போ இதுக்கு எங்கே நேரம். நான் தனியா எல்லாம் போகலை. புதுசு இருக்கு போதும்” என்று விட்டாள்.

அவளிடம் ஒரு சாஃப்ட் சில்க் புடவையும் இருக்க விட்டு விட்டாள்.

“எங்கே இவளுக்கு பத்தாயிரம் எனக்கு பத்தாயிரம் குடுத்தீங்க, எங்க வீட்ல நாலு பேர், இவங்க வீட்ல நாலு பேர், எப்படி பத்தும்” என்று பெரிய மருமகள் வியாக்கியானம் பேச,

சௌந்தரி விட்டேனா என்று “என்ன அண்ணி விஷேஷமே உங்களோடது. அப்போ அப்பா அம்மா உங்களுக்கு பணம் குடுப்பாங்களா. நீங்க தான் அவங்களுக்கு குடுக்கணும். நீங்க சம்பாதிக்கறீங்க, நாங்க வீட்ல இருக்குறோம், அப்போ நீங்க தானே குடுக்கணும்” என்றாள்.

பெரிய மருமகள் பதில் பேச எத்தனிக்க, அங்கே நாச்சி வந்து விட, வேறு யாரும் பேச வாய்ப்பில்லாது போனது.

அவ்வளவு தான் இந்த பேச்சுக்கள் கேட்டால் தொலைத்து விடுவார்.

அங்கைக்கு மனதிற்கு என்னவோ செய்தது. அவளின் மனதிற்குள் ஓடிக் கொண்டு இருந்தது இது தான். பொண்ணுங்களுக்கு கோவில் கும்பாபிஷேகத்துக்கு எடுத்துக் கொடுக்கிறோம். அது முறை என்பது மட்டுமே!

“அப்போ எங்க அம்மா யாரு?” என்று கேள்வி பூதமாய் அவளின் கண்முன் நின்றது. பல மாதங்களுக்கு பிறகு மனதிற்கு சுணக்கம். எதுவுமே அந்த வீட்டினில் அந்த நொடி பிடிக்காமல் போனது. ஏனென்று சொல்ல முடியாது ஒரு கோபம். அவளின் அம்மாவிற்கு அப்பாவிற்கு எல்லாம் உடை எடுத்துக் கொடுக்கவில்லை. இது நடக்கவே காரணம் கரிஷ்மா. இவர்கள் எல்லாம் அவளின் பக்கத்தில் கூட அந்தஸ்தில் நிற்க முடியாது என்பது வேறு. ஆனால் மனது வேண்டாமா?

இதற்கு ராஜலக்ஷ்மியுன் அன்பழகனும் தான் பரிவட்டம் கட்டுவது என்பது முடிவான உடனே நாச்சியிடம் தான் அன்பழகன் பேசினார். “நாங்கள் என்ன என்ன செய்ய வேண்டும்” என்று.

கோவிலுக்கு செய்ய வேண்டிய முறைகள் மட்டுமே சொல்லப்பட்டன. அவருக்குமே மனதில் மகளுக்கும் மருமகனுக்கும் பேத்திக்கும் புது துணிகள் எடுத்துக் கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் இருக்க, பெரிய குடும்பம் அவர்களது, தன மகளுக்கு மட்டும் என்று சாதாரணமாய் செய்வது வேறு. ஒரு விஷேசம் என்றால் எல்லோருக்கும் தானே முறை செய்ய வேண்டும், அவர்களுக்கு மட்டும் செய்ய முடியாதே.

ராஜியிடம் சொல்ல செய்தார். ஆனால் ராஜி ஒப்புக் கொள்ளவில்லை. “நமக்கு இன்னும் எதுவும் செய்யாதவங்களுக்கு நாம மட்டும் செய்யணும்னு என்ன வேண்டாம்” என்று விட்டார்

“இது ஒரு விஷயமா?” என்று ராஜியிடம் பேசிய போதும், “துணிமணி ஒரு விஷயமில்லை. இது அவங்க நமக்கு குடுக்குற மரியாதை. அவங்களுக்கு மனசில்லாத போது, நாம செய்யணும்னு அவசியமில்லை”

“ராஜராஜன் இதை ஒரு பெரிய விஷயமா எடுத்துக்க மாட்டான். அங்கைக்கு இன்னும் இதெல்லாம் புரியாது” என்று முடித்து விட்டார்.

அவரை மீறி அன்பழகனால் எதுவும் செய்ய முடியவில்லை. இதோ கும்பாபிஷேகமும் சிறப்பாய் முடிந்து விட்டது.

இதெல்லாம் அங்கைக்கு தெரியாத போதும், இன்று தில்லை சௌந்தரியின் பேச்சு மனதை என்னவோ செய்து விட்டது. “பத்தாயிரம் பணமா எனக்கு யாரும் கொடுக்கவில்லையே?” என்ற எண்ணம்.

எப்படி கொடுப்பர்? அவர்களுக்கு பணம் கொடுக்க அம்மாக்களிடம் பணம் கொடுத்ததே ராஜராஜன் தானே!

இவளிடம் சொல்லிவிட்டான் தான், எப்படி சொன்னான் என்றால், “எல்லோருக்கும் துணி எடுக்க பணம் கொடுத்துட்டேன், நாம எப்போ போகலாம். எனக்கு நேரம் இருக்குமா தெரியலை? நீ போயிட்டு வா!” என்று.

அதற்கு அங்கை கொடுத்த பதில் தான் “நமக்கு புதுசு இருக்கு, அப்புறம் பார்த்துக்கலாம்” என்று.

அங்கைக்கு அவர்கள் தான் மற்றவர்களுக்கு பணம் கொடுத்தனர் என்பதே புரியவில்லை.

மனதை ஏதோ செய்ய அங்கே எதுவும் பிடிக்காமல் போக, அங்கை அன்பழகனுக்கு அழைத்து “பா இன்னைக்கு ஊருக்கு போறீங்க தானே, நானும் வர்றேன்” என்றாள்.

“அம்மு நாப்பத்தி எட்டு நாள் மண்டல பூஜை இருக்கு ஏதாவது சொல்லுவாங்க”

“மத்த பசங்க எல்லாம் ஊருக்கு போகாம இங்கேயேவா இருக்க போறாங்க, எனக்கு மட்டும் ரூல்ஸ்ஸா? பாட்டி கிட்ட பேசறீங்க, என்னை கூட்டிட்டு போறீங்க” என்று விட்டாள்.

மகளின் இந்த பேச்சு கவலையை கொடுத்தாலும், அப்படி ஒன்றும் பெரிய பிரச்சனைகள் வராது, இருவருமே பக்குவமானவர்கள் என்று புரிந்தவர்,

“சரி, இப்போ ஊருக்கு கிளம்ப சொல்லிக்க வருவேன். வரும் போது கேட்டுப் பார்க்கறேன்” என்றார் அரை மனதாக.

“சரின்னு சொன்னா உங்க கூட வருவேன், இல்லை தனியா வருவேன்” என்று விட்டாள் முடிவாக.

என்னவோ இங்கே மூச்சு முட்டுவது போல தோற்றம், ஊருக்கு சென்று வரலாம் என்ற எண்ணம்.

இப்போது மனமும் சற்று வருத்தத்தில் இருக்க, இங்கே இருந்தால் ராஜராஜனுடன் சண்டை வலுக்கும், அதையும் விட வீட்டில் இருக்கும் மற்ற உறவுகளுடன் வார்த்தை வளர்ந்து விடுமோ என்ற எண்ணம் தோன்ற, பேசாமல் ஊருக்கு சென்று வருவோம் நினைத்தாள்.

ராஜலக்ஷ்மி சொல்லிக் கொள்ள வரவில்லை. மகளை பார்க்க வேண்டும் என்ற ஆவல் மனது நிறைய இருந்தாலும், ஏனோ இன்னும் நாச்சியும் தன் அண்ணன்களும் அப்படி ஒன்றும் அவர்களை மதிக்க வில்லை என்ற எண்ணம் தான். அதில் வருத்தமெல்லாம் இல்லை ஆனாலும் அங்கே சகஜமாய் செல்ல மனம் ஒப்பவில்லை.

அவர் எப்படியோ, அன்பழகன் தான் அந்த வீட்டின் முதல் மாப்பிள்ளை. ஆனால் மற்ற சிறிய பெண்களின் மாப்பிள்ளைகளுக்கு கிடைக்கும் மரியாதை அவருக்கு இல்லையோ என்ற நினைப்பு!

“ஊருக்கு போகும்முன்ன அங்கையை வர சொல்லுங்க, நான் இங்கேயே பார்த்துகறேன்” என்று விட்டார்.

அன்பழகன் வந்து நாச்சியிடம் கேட்ட போது “ம்கூம், முடியவே முடியாது, மண்டல பூஜை முடியும் வரை போகக் கூடாது” என்றார் அவர்.

அது அங்கையினுள் போயே ஆக வேண்டும் என்றா பிடிவாதத்தை கொடுக்க, “ஏன் போகக் கூடாது?” என்றாள் நாச்சியிடம் நேரடியாக.

குரலில் ஒரு இறுக்கம்! அது நாச்சிக்கு புரியவில்லை!

“எப்படி போவ? மண்டல பூஜை முடியும் வரை போகக்கூடாது”

“ஏன் போகக்கூடாது. இப்போ ஊர்ல இருந்து வந்தவங்க எல்லாம் போகலையா? அவங்க இந்த வீட்டு பிள்ளைங்க தானே! அவங்க போகும் போது நான் மட்டும் ஏன் போகக் கூடாது?”

அந்த நேரம் தான் ராஜராஜன் அவளின் பேச்சினை காதில் வாங்கிக் கொண்டே வீட்டின் உள் நுழைந்தான். “எங்கே போகிறாள் இவள்?” என்ற எண்ணம் தான்.

அன்பழகனுக்கு அங்கை ராஜராஜனிடம் சொல்லாதது தெரியவில்லை.

அவர் நாச்சியிடம், “என்னவோ வரணும்னு பிரியப் படறா அடுத்த வாரமே கொண்டு வந்து விட்டுடறேன்” என்றார் அவரும் தன்மையாக.

“இதென்ன சின்ன பிள்ளைங்க விளையாட்டா போகக் கூடாது அவ்வளவு தான்” என்று அன்பழகனிடம் அதட்டலாக நாச்சி பேச,

‘நான் போவேன் அவ்வளவு தான்” என்றாள் அவரை போலவே.

அவள் பேத்தியாய் அவரிடம் பிடிவாதம் பிடித்து கொண்டிருக்க,

அவர் அந்த வீட்டின் தலைவியாய் மாறி இருந்தார்.

“போகக் கூடாது” என்றார்.

அங்கே பேச்சினில் ஒரு உஷ்ணம் உதித்தது.

தில்லை அதனை உணர்ந்தவர், “அவங்க வீட்டு பெரிய மனுஷியா பேசறாங்க, திருப்பி பேசாத அங்கை” என்றார்.

“என்ன பெரிய பெரிய மனுஷி? எனக்கு நியாயமா நடந்துக்கலை, எனக்கு மட்டும் ரூல்ஸ் போடறாங்க!” என்று தில்லையை பார்த்து சொல்ல ,

“பேசாத அங்கை” என்று ராஜராஜன் அவளின் அருகில் வந்தான்.

வீடு மொத்தமும் அங்கே வந்து விட்டது. பெண் மக்கள் இருவரும் கிளம்பியிருக்க, கௌரிஷங்கரும், நந்த குமாரும் அவர்களின் குடும்பமும் அங்கே தான் இருந்தது.

“ஏன் பேசக் கூடாது? அப்படி தான் பேசுவேன்!” என்று அவனிடமும் எகிறியவள்,

“எல்லோருக்கும் எல்லாம் செய்யறீங்க, எங்க அம்மாக்கு மட்டும் நீங்க செய்யலை, எங்க அம்மாவோட பொண்ணுன்னு வேணும்னே என்னை எக்ஸ்ப்லாயிட் பண்றீங்க நீங்க, எல்லோரும் போகும் போது நான் மட்டும் ஏன் போகக் கூடாது. ஏதோ நியாயவாதி மாதிரி வீட்டு பெரிய மனுஷியாய் எனக்கு ஆர்டர் போட வேண்டிய அவசியமில்லை, நான் போவேன்” என்று அங்கை சொல்ல,

“அம்மு” என்று அன்பழகனின் குரல் ஓங்கி ஒலிக்க, அங்கையற்கண்ணி என்ற ராஜராஜனின் குரல் அதனையும் விட ஒலித்தது.

நாச்சிக்கு அந்த “எக்ஸ்ப்லாயிட்” என்ற வார்த்தை கூட புரியவில்லை. ஏற்கனவே மகளுக்கு ஒன்றும் செய்ய முடியாத நிலையில் இருக்கின்றோம் என்ற குற்றவுணர்சியில் இருந்தவருக்கு அங்கையின் பேச்சு கண்ணீரை கொடுத்து விட்டது.

அந்த வீட்டினர் அவர் அழுது பார்த்தது ராயர் இறந்த போது மட்டுமே, கம்பீரமான பெண்மணி இப்படி கண்ணீர் விடவும்,

அதுவரையும் தலையிட வேண்டாம் என்று நினைத்த சுவாமிநாதன் “என்ன அன்பு? என்ன பேச்சு பேசறா உன் பொண்ணு?” என்று அன்பழகனை பார்த்து சத்தமிட்டார்.

அவ்வளவு தான், “எங்க அப்பாவை எதுக்கு பேசறீங்க, இப்படி தான் உங்க பொண்ணுங்களோட மாப்பிள்ளைங்களை பேசுவீங்களா?” என்று அதற்கும் கோபமாய் அங்கை சொல்லி விட்டாள்.

நாச்சியை தவிர சுவாமிநாதனை அங்கே யாரும் பேச மாட்டார். அதுவும் பேசிய அங்கையின் உடல்மொழியில் சிறிதும் மரியாதை இல்லை. என் அப்பாவை நீ பேசுவாயா என்ற எண்ணம் தான்.

அங்கே மிக மிக உஷ்ணமான சூழ்நிலை!

“என்னடா உன் பொண்டாட்டியை பேச விட்டு வேடிக்கை பார்க்கற” என்று தமிழ்செல்வன் எகிற,

தமிழ்செல்வன் பேசியதும் அப்படி ஒரு கோபம் ராஜராஜனுக்கு வந்து விட்டது.

அவன் பேச ஆரம்பிக்கும் முன்னே அங்கை பேசினாள்.

“நான் ராஜராஜனோட மனைவியா இங்க பேசலை, ராஜலக்ஷ்மி அன்பழகன் பொண்ணா தான் பேசறேன். என் பாட்டி கிட்ட பேசறேன், என் தாய் மாமாங்க கிட்ட பேசறேன், அப்படி தான் பேசுவேன்” என்று சுவாமிநாதனையும் தமிழ்செல்வனையும் பார்த்து நேராய் பேச,

“அம்மாடி! இந்த பெண் மிக புத்திசாலி, அவளாய் நிறுத்தாமல் நிறுத்தவே முடியாது” என்று சுவாமிநாதனுக்கு தெளிவாய் புரிய, அவர் பேச்சை வளர்க்கவில்லை, தமிழ்செல்வனையும் ஒற்றை பார்வையில் அடக்கி விட்டார்.

ஆனால் “பேசக் கூடாது” என்ற ராஜராஜனின் வார்த்தை சீறிப் பாய்ந்து வந்தது.


ஆக்கமும் எழுத்தும்

மல்லிகா மணிவண்ணன்
 
Last edited:

Joher

Well-known member
Member


:love::love::love:

செகப்பு கலரு சிங்குச்சா
பச்சை கலரு சிங்குச்சா
மஞ்சள் கலரு சிங்குச்சா...........
ஆனால் பட்டு புடவையில் இந்த மூன்றுமே pleasant colours :love:

உனக்கும் உங்க அம்மாக்கும் same feel.........
வீட்டு விசேஷத்துக்கு பொண்ணுக்கு செய்றது முறை தான்........ உன் மாங்கா மாமன்களுக்கு தெரியலை போல......
சில நேரம் இப்படி தான்.......
நாம நல்ல இருக்கிறோம் நாமளே வாங்கிப்போம்னு நினைத்தால் ஒன்றும் இல்லை....... இல்லைனா என்றுமே அது வருத்தம் தான்........
அண்ணன்கள் கல்யாணத்துக்கு பிறகு அவங்க கிட்ட எதிர்பார்ப்பது பல நேரம் ஏமாற்றம் தான்.......
அம்மா அப்பானா பொண்ணுன்னு இருக்கும்....... செய்வாங்க அவங்க கிட்ட இருந்தால்........
அவங்களே அண்ணன் தம்பிகளை நம்பியிருந்தால் எப்படி முடியும்??? அதை ஏற்றுக்கொள்வதில்லையா அது மாதிரி தான் ........
குடுத்தா வாங்கிக்கலாம்......... மற்ற படி எதிர்பார்த்தால் ஏமாற்றம் தான் மிஞ்சும்........
இங்கே பணம் கொடுத்ததே உன் வீட்டுக்காரன் தானாம்.......

அங்கை உன்னோட argument ரைட்........ பட் பாட்டி மாமாங்க கிட்ட பேசவேண்டியதை எல்லோர் முன்னாடியும் சொல்லி கெடுத்துட்டியே...... பாரு உன் வீட்டுக்காரன் உக்கிரமாகிட்டான்.......

ராஜலக்ஷ்மி பொணணா பேசினாலும் ராஜராஜன் பொண்டாட்டிய பேசினாலும் கடைசியில் சொல்லப்போறது பொண்டாட்டி பேசுறா நின்னு வேடிக்கை பார்க்கிறான்னு....... இதுக்காகவே வீட்டுக்காரங்க நம்ம எகிறுவாங்க........
எப்படியும் பேசுறவங்களுக்கு கெட்ட பெயர்......... வீட்டுக்காரனை தூண்டிவிட்டு வேடிக்கை பார்க்கும் மனைவிங்க தான் நல்லவங்க குடும்பத்தில்........

போ போ என்ன பண்ண போறானோ உன் வீட்டுக்காரன்.......

மல்லி சீக்கிரமே அடுத்த எபி குடுத்துடுங்க........
 
Last edited:

SINDHU NARAYANAN

Well-known member
Member


:love: :love: :love:

அன்பழகனுக்கும் ராஜலக்ஷ்மிக்கும் கோவில் கும்பாபிஷேகத்தில் பரிவட்டம் கட்டி, அவர்களுக்கான ஊர் மரியதையை ராஜராஜன் வாங்கி கொடுத்தான்...

அதே போல் அங்கை அவளுடைய அம்மாவுக்கான மரியதையை, சொந்த வீட்டில் வாங்கி கொடுக்க வேண்டும் என்று நினைப்பது தவறு அல்ல...

அங்கை சபாஷ் சரியான கேள்வி... (y)(y)

அங்கைக்காக.... :):)

ஓஹ் ஒரு தென்றல் புயலாகி வருமே
ஓஹ் ஒரு தெய்வம் படி தாண்டி வருமே
கால தேவனின் தர்ம எல்லைகள் மாறுகின்றதே
கால தேவனின் தர்ம எல்லைகள் மாறுகின்றதே
ஓஹ் ஒரு தென்றல் புயலாகி வருமே

கோவமாக இருக்கிற ராஜராஜனுக்கு ஒரு Romantic பாட்டு... :p :p

பேசக் கூடாது வெறும் பேச்சில் சுகம்
ஏதும் இல்லை வேகம் இல்லை
லீலைகள் .காண்போமே..
ஆசை கூடாது மண மாலை தந்து
சொந்தம் கொண்டு மஞ்சம் கண்டு
லீலைகள் காண்போமே ...
 
Last edited:

மணிமேகலை

Well-known member
Member


Hi மல்லி சிஸ்,
அங்கை கேட்பது நியாயம் தான்
ஆனால் முறை சரியில்லை..
உடனே அப்பா வீட்டுக்கு போக நினைப்பதும் தவறு..
இந்த துணி எடுக்கும் விசயம்
பெரிய குடும்பத்தில்
எவ்ளோ பார்த்து பார்த்து செய்தாலும் கடைசியில் ஏதும் குறை வம்பு தான்..
நன்றி மல்லி.
 
Last edited:
Advertisement

Advertisement

Top