Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மரபு வேலி 21 1

Advertisement

Admin

Admin
Member
அத்தியாயம் இருபத்தி ஒன்று :

ராஜராஜனின் குரலில் வீட்டினர் அனைவரும் பதறி நிற்க, அங்கை சிறிதும் பதறவில்லை.

“நீ இங்க ராஜராஜனோட மனைவி மட்டும் தான். அப்படி தான் இந்த வீட்டுக்குள்ள வந்த, அதுதான் இங்க நீ. என் பாட்டியை கேள்வி கேட்கற உரிமை, பேசற உரிமை எல்லாம் உனக்குன்னு இல்லை, யாருக்கும் கிடையாது. முதல்ல அவங்க கிட்ட மன்னிப்பு கேள்” என்றவனின் முகத்தினில் அப்படி ஒரு கோபம்.

“என்னோட பாட்டி அவங்க, நான் அப்படி தான் பேசுவேன். எங்கே அவங்க என் பாட்டி இல்லைன்னு ஒரு வார்த்தை சொல்லட்டும். அந்த நிமிஷம் உங்க மொத்த குடும்பத்தோட கால்ல விழுந்து நான் மன்னிப்பு கேட்கறேன், சொல்ல சொல்லுங்க” என்று எகிறி தான் நின்றாள்.

அவளுக்கு கோபம் வந்தால் இப்படி தான் இருக்கும், இடம், பொருள், ஏவல் என்றும் எதுவும் தெரியாது. ஆனால் நியாயம் வழுவாது! எதுவாகினும் உறவு வேண்டும் என்று நினைத்தால் சில சமயம் நியாயம் பேசக் கூடாது.

அன்று அங்கையினுள் ஏதோ ராட்சசி புகுந்து கொண்டாள் என்று தான் சொல்ல வேண்டும்.

மகளின் பேச்சினில் “அம்மு” என்ற அன்பழகனின் குரல் ஓங்கி ஒலிக்க,

“நீங்க இதுல தலையிடாதீங்கப்பா, ராயர் குடும்பத்து மேல உங்களுக்கு நன்றி இருந்தா, அது உங்க வரை. நானும் அப்படி இருக்கணும்னு அவசியமில்லை” என்று அவரை பார்த்து சொன்னவள்,

“அங்கை, நீ பேசறது சரியில்லை” என்று ராஜராஜன் இயலாமையில் பேச,

“நான் பேத்தி இல்லைன்னு சொல்லச் சொல்லுங்க அவங்களை” என்று அவளின் பிடியில் நின்றாள்.

நாச்சி எதுவுமே பேசவில்லை, “அம்மு” என்று மீண்டும் அன்பழகன் அதட்ட,

“எல்லாம் உங்களால தான் பா. என்னை ஏன் அடக்கறீங்க. இவர் சொல்றார் நான் ராஜராஜனோட மனைவி மட்டும்ன்னு. ஆனா அது நான் ஆனதே உங்களால. நீங்க சொன்ன வார்த்தையால, உங்களுக்காக மட்டும் தான்” என்றவள்,

“உங்க அப்பா அம்மாவோட பையன் நீங்க, எங்க வீட்டுக்கு வரும் போது நீங்க என் புருஷன் மட்டும் தான் உங்க அப்பா அம்மாவோட பையன் இல்லைன்னு சொன்னா ஒத்துக்குவீங்களா, மாட்டீங்க தானே”

“அப்போ நான் மட்டும் எப்படி என் அப்பா அம்மாவோட பொண்ணு கிடையாதுன்னு சொல்வீங்க, சொல்லக் கூடாது. நான் உங்க மனைவியானது அவர் சொன்னதனால மட்டும் தான்” என்று தெளிவாய் சொல்ல,

ராஜராஜனால் இதனை தாளவே முடியவில்லை. அதுவும் எல்லோர் முன்னும் அப்படி ஒரு அவமானமாய் உணர்ந்தவன், அவளை பின் முகம் கொடுத்து பார்க்கவேயில்லை.

அன்பழகனிடம் திரும்பி “அவ உங்க பொண்ணு தான் இனி. உங்க பொண்ணு மட்டும் தான். நீங்க சொன்னதுனால உங்க பொண்ணு என்னை கல்யாணம் பண்ணியிருக்கலாம். ஆனா இன்னமும் அதை சொல்றது நாங்க வாழற வாழ்க்கைக்கு அர்த்தமே இல்லை. இப்படி ஒரு வாழ்க்கையும் எனக்கு தேவையில்லை” என்று சொல்லியவன்,

அங்கையிடம் திரும்பி, “இனி நீ இந்த வீட்ல ராஜராஜனோட மனைவி கிடையாது. ராஜலக்ஷ்மி அம்பழகன் பொண்ணு தான். நீ உங்க பாட்டி கிட்ட பேசு, தாய் மாமாங்க கிட்ட பேசு, யார் கிட்ட வேணா பேசு, அவங்களும் பேசினா கேட்டுக்கோ. எனக்கும் உனக்கும் ஒண்ணுமில்லை”

“நான் சொன்னது நீ உங்க அப்பா அம்மாவோட பொண்ணு கிடையாதுன்னு இல்லை, இந்த வீட்ல நீ ராஜராஜனோட மனைவி மட்டும் தான்னு. இப்போவும் சொல்றேன், நீ இந்த வீட்டுக்குள்ள அப்படி தான் வந்த அதை தான் நான் சொன்னேன்”

“உனக்கு அந்த வார்த்தை தேவையில்லைன்னா எனக்கு உன்னோட உறவும் தேவையில்லை” என்றவன் நிற்காமல் வெளியில் சென்று விட..

அவனின் வார்த்தைகளில் ஸ்தம்பித்து நின்று விட்டாள். அவனின் கோபம் தெரியும் தான். இன்று மொத்தமாய் அவனை கோபப் படுத்திவிட்டாள் அவளே அறியாமல்.

அவன் சென்ற நொடி வீட்டின் அத்தனை பேரும் அங்கிருந்து அகன்று விட்டனர், தயங்கி அங்கே நின்ற தில்லையை கூட தமிழ்செல்வன் இழுத்து சென்று விட்டார். அதனை கண்டு விட்ட அங்கை கொதி நிலைக்கே சென்று விட்டாள்.

“நான் யார் இவர்களுக்கு?” என்ற கேள்வி சுழற்றி அடித்தது.

அங்கே நின்றது நாச்சி, அன்பழகன், அங்கை மட்டுமே!

பெண் மக்கள் முன்பே அவர்களின் வீடு கிளம்பியிருக்க, சுவாமிநாதன், வாசுகி, தமிழ் செல்வன், தில்லை, கௌரிஷங்கர் அவனின் குடும்பம், நந்தகுமார் அவனின் குடும்பம் என்று நின்றிருந்த மொத்த பேரும் சென்று விட்டனர்.

ராஜராஜன் சென்றது கோபத்தை கொடுத்திருக்க, இவர்கள் சென்றது காயத்தை கொடுத்தது. பல நேரங்களில் உறவுகளின் புரியாமையும் இது தான், கணவன் மனைவி என்றானாலும் சரியாகி விடுவர். இந்த செயல் காலம் முழுமைக்கும் மறக்காது. குடும்ப பிளவுகள் வர இந்த மாதிரி சில செயல்களும் முக்கிய காரணமாகி விடுகின்றது.

இப்போது ஆத்திரம் எல்லாம் பாட்டின் மீது திரும்பியது. “எல்லாம் உங்களால தான் பாட்டி, இப்படி ஆகும்னு தெரிஞ்சு தானே நான் ஊருக்கு போகக் கேட்டேன். பேசாம சரின்னு சொல்லியிருந்தா இந்த சண்டையே தேவையில்லை. கொஞ்ச நாள் ஊருக்கு போகக் கேட்டா? இப்போ நிரந்தரமா என்னை அனுப்ப வழி பண்ணிட்டீங்க?” என்று பேச,

என்ன முயன்றும் அந்த பெரிய மனுஷியிடம் இருந்து அழுகை வெளிப்பட்டு விட, “அம்மு” என்று கர்ஜித்து மகளை அடிக்க கை ஓங்கி விட்டார் அன்பழகன்.

அங்கிருந்த வந்த சத்தங்களுக்கு என்னவோ ஏதோ என்று வீட்டினர் சிலர் மீண்டும் எட்டி பார்க்க அவர்கள் கண்டது இந்த காட்சியே.

அதற்கு கூட அங்கை அசையவில்லை.

ஆனால் அங்கையின் மகள் அசைந்தாள், உணவு உண்டு அங்கே சோபாவில் நல்ல உறக்கத்தில் இருந்த ரதிக்கு அதுவரையிலும் உறக்கம் கலையவில்லை.

இப்போது கலைந்ததும் அந்த சின்ன சிட்டு பார்த்தது தாத்தா அம்மாவை கை ஓங்குவது தான், பயந்து “வீல்” என்று கத்தி அழ,

அன்பழகன் சுற்றம் உணர்ந்து கை இறக்கினார்.

அங்கை எதுவும் பேசாமல் குழந்தையை சென்று தூக்கியவள், விடு விடு வென்று வாசலை நோக்கி வெளியேற, அவளை நிறுத்துபவர் தான் யாருமில்லை.

இதற்கு பலரும் பார்த்துக் கொண்டு தான் இருந்தனர் அவரவர் அறையில் இருந்து.

அங்கை செல்வதை பார்த்த அன்பழகன், நாச்சியிடம் திரும்பியவர், “அவ சார்பா நான் உங்க கிட்ட மன்னிப்பு கேட்டுக்கறேன். சின்ன பொண்ணு செல்லமா வளர்ந்துட்டா, சரியா நாங்க அவளுக்கு கத்துக் குடுக்கலை போல, தப்பு எங்க மேல, அவ மேல கோபப் படாதீங்க” என்று பேசினார்.

“என்ன அன்பு இப்படி பேசற? என் பேத்தி ய்யா அவ, அவ மேல நான் கோபப் படுவேனா? சில விஷயம் அவ சொல்றது நியாயம் தானே! அதுல தான் எனக்கு அழுகை வந்துடுச்சு!”

“மன்னிச்சிடுங்கம்மா” என்று மீண்டும் ஒரு முறை கையெடுத்துக் கும்பிட்டு மன்னிப்பு கேட்டவர் மகளை தேடி விரைந்து விட்டார்.

அவள் முன்பிருந்த வீட்டில் தான் ராஜலக்ஷ்மியும் அன்பழகனும் வந்தால் தங்குவர். அவள் நேரே அங்கே தான் சென்றாள். சற்று தூரம் கூட, வேகு வேகு என்று மகளை தூக்கி விரைந்து விட்டாள்.

அப்படி ஒரு வேக நடை, அவள் வீடு நெருங்கிய சமயம் தான் அன்பழகனால் அவளை பிடிக்க முடிந்தது.

“அம்மு” என்றவர் அழைக்க, அவர் புறம் திரும்பவேயில்லை, வீட்டின் உள் நுழைந்து தான் நின்றாள்.

வேகமாய் அவளின் கையில் இருந்த குழந்தையை வாங்கினார். சோஃபாவில் சென்று அமர்ந்து கொண்டவள், அவளின் காலை தூக்கி ஒரு சேரில் போட்டுக் கொண்டு “அம்மா தண்ணி” என்று கத்த,

அறையின் உள் பெட்டி கட்டிக் கொண்டிருந்த ராஜலக்ஷ்மி வெளியே வந்தார். அதற்குள் அன்பழகனே அங்கு பாட்டிலில் இருந்த தண்ணீர் கொடுக்க,

அதனை வாங்கி குடிக்க ஆரம்பிக்க, “பட்டு குட்டிக்கு என்ன வேணும் பாரு?” என்று ராஜியிடம் குடுக்க,


சூழ்நிலை சரியில்லை என்று கணித்தவர் “என்ன ஆச்சு?” என்றார் கலவரமாக.
 
Last edited:
:love: :love: :love:

இனியாவது அம்மா எடுத்துசொல்வாங்களா???

எப்போவும் இருவருக்கிடையில் வரும் பிரச்சனையில் குறுக்கிடும் நபர் தான் அதிகம் பாதிக்கப்படுவர்.......
சண்டை போட்டவங்க சமாதானமா போய்டுவாங்க.......

ரொம்ப பாசமா வளர்த்துட்டார் போல........
காலை தூக்கி சேரில் போட்டு அம்மா தண்ணி னு கத்துறாளே.....

இப்போ பிரச்சனை சொன்னதும் ராஜலக்ஷ்மி அன்பழகனை எகிறுவங்களா???
அவங்களுக்கு தான் கல்யாணத்தில் விருப்பம் இல்லையே..........

ராஜராஜன் எங்கே போனான்???
 
Last edited:
:love: :love: :love:

அங்கை கேட்ட கேள்விகளும் நியாயம்தான்..
அதற்கு ராஜராஜன் பதில் சொல்ல முடியாத இயலாமையும் பாவம்தான்..

அங்கை வீட்டை விட்டு போகாம யாரவது தடுத்து இருக்கலாம்...

அங்கைக்குள்ள புகுந்தது அழகான ராட்சசியா இருக்குமோ...

அழகான ராட்சசியே
அடி நெஞ்சில் குதிக்கிறியே
முட்டாசு வார்த்தயிலே
பட்டாசு வெடிக்கிறியே
அடி மனச அருவாமனையில் நறுக்குறியே...
 
Last edited:
Top