Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மழைக்கால மேகங்கள்! - 10

Advertisement

praveenraj

Well-known member
Member

மழைக்கால மேகங்கள்! - 10

தூரிகாவைத் தேடி வந்தவன் அவளிடம் நெருங்கி எதையோ உரைக்க அவளுக்கோ அவளையும் அறியாமல் வியர்வை வழிய தொடங்கியது. நண்பர்களுடன் பேசியவாறே சாப்பிட்டுக் கொண்டிருந்த சரிதா அப்போது தான் தூரிகாவைக் கவனித்தாள். அவளுடைய முகம் அரண்டுபோயிருக்க எதுவோ சரியில்லை என்று மட்டும் அவளுக்கு விளங்கியது. ஒரு முறை அவசரத்திற்கு அவனிடம் இவளும் தான் பணம் வாங்கியிருந்தாள். அதைச் செலுத்த சிறு தாமதம் ஆனதும் அவன் வாயிலிருந்து வந்த வார்த்தைகளை நினைக்கையில் இப்போதும் சரிதாவின் முகம் ஒரு அருவருப்பை வெளிக்காட்டியது.

இன்றளவும் கிராமங்களில் பெரும்பாலானோரின் பணத் தேவையைப் பூர்த்தி செய்வது என்னவோ இவர்களைப் போன்ற தனி நபர்கள் தான். வங்கி முதலிய முறைப்படுத்தப்பட்ட நிதி ஆதார மையங்களை அணுகி கடன் பெறுவோர்கள் பெரும்பாலும் பணக்காரர்களே. அப்படிப்பட்டவன் தான் மூர்த்தி. வெள்ளிமலையை ஒட்டிய கிராமங்கள் முழுவதும் மூர்த்தியைப் போன்ற நான்கு நபர்களை நம்பி தான் இருக்கிறது. கேட்ட நேரத்தில் தாமதமில்லாமல் கிடைக்கும் கடனாயிற்றே? மக்கள் எப்படி அவர்களை ஒதுக்குவார்கள்?

இப்போது அவன் அங்கிருந்து சென்று விட தூரிகாவின் முதலில் முன்பைக் காட்டிலும் ஒரு லேயர் கவலை கூடிவிட்டது. ஆறு வருடங்களுக்கு முன்பு அவளுடைய படிப்பிற்காக சரவணன் மூர்த்தியிடம் சிறிது கடன் வாங்கியிருந்தார். அன்றைய சூழலில் அதை எளிதில் செலுத்திவிடும் நிலையில் தான் அவர் இருந்தார். அதன் பின் ஒரு ஏழு மாதங்களில் நிகழ்ந்த சில சம்பவங்கள் அவர் குடும்பத்தையே மொத்தமாக நிலைகுலைய செய்துவிட்டது. அப்போது தூரியின் அன்னைக்கு வேறு உடல்நிலை சரியில்லாமல் போக கைக்குழந்தையாக இருந்த சூர்யாவுக்கும் மருத்துவ செலவுகள் கூட இறுதியாக வந்த ஒரு இடி அக்குடும்பத்தை சுக்கு நூறாக்க பிறகு அவள் தாயின் மரணம் தந்தையின் உடல்நலத்தையும் சேர்த்து பாதித்துவிட்டது.

உணவருத்திக் கொண்டிருந்தவர்கள் எல்லாம் களைய சரிதா வண்ணனிடம் மூர்த்தி வந்து சென்றதைப் பற்றி மேலோட்டமாகத் தெரிவித்தாள். அவளுடைய இந்த நிலையை எண்ணிப் பார்க்கையில் வண்ணனுக்கும் சற்று வருத்தமாகவே இருந்தது. இருந்தும் இதில் அவன் செய்வதற்கு ஒன்றுமில்லை என்று எண்ணி கடந்துவிட்டான்.

அன்று மாலை வழக்கம் போல் அவன் வீட்டுத் திண்ணையில் அமர்ந்து எல்லோரும் பூ கட்டிக்கொண்டிருக்க அரசி தான் அந்தக் கேள்வியை முன்வைத்தார்.

"தூரி அடுத்த வாரம் சூர்யாவுக்கு பிறந்த நாள் வருதில்ல?" என்று கேட்கவும் தான் தூரிகாவுக்கும் அது நினைவுக்கு வந்தது. கடந்த பிறந்தநாளின் போதே அவன் அவளிடம் ஒரு சைக்கிள் கேட்டிருந்தான். அவன் வயதை உடைய பிள்ளைகள் எல்லோரும் சைக்கிள் வைத்திருக்க இவனுக்கும் சைக்கிள் மீது ஆசை வந்திருந்தது. அப்போது கேட்டவனுக்கு அடுத்த பிறந்த நாளில் வாங்கித் தருவதாக உறுதியளித்திருந்தாள் தூரிகா.

"ஏழு வயசு பிறக்குது தானே?" என்று தேனு கேட்க கிரிஜாவுக்கும் தூரிகாவுக்கும் அவன் பிறந்த பொழுது நிகழ்ந்ததெல்லாம் கண்முன்னே வந்து சென்றது.

காலம் எவ்வளவு வேகமாக ஓடுகிறது என்பதை அப்போது தான் அவ்விருவரும் உணர்ந்திருந்தனர்.

கிட்டத்தட்ட சங்கரசரவணனிற்கும் வைதேகிக்கும் முறையே ஜெயசீலன் கிரிஜா ஆகியோரின் வயதே இருக்கும். அவர்களின் திருமணம் முடிந்து ஒரு வருடத்தில் பிறந்தவன் தான் மணிகண்டன். அவன் வண்ணனைக் காட்டிலும் இரண்டு வருடம் பெரியவன். முன்பு சொன்னதைப்போல அவர்களுக்கு இருந்த கடன் தொல்லையால் மணிகண்டனின் சிறு வயதிலே வெள்ளிமலையை விட்டுச் சென்றுவிட்டனர். அவர்களின் நிலத்தையும் ஜெயசீலன் தான் குத்தகைக்கு எடுத்து உழுது வந்தார்.

மகனைப் படிக்க வைத்து நல்ல வேலைக்கு அனுப்பிவைத்தால் தங்கள் பிரச்சனை எல்லாம் தீர்ந்துவிடும் என்று நம்பியே கடன் வாங்கி அவனைப் படிக்க வைத்தார் சரவணன். மணிகண்டனும் தங்கள் பொருளாதார சூழ்நிலையை மனதில் வைத்தே நன்கு படித்து ஒரு பிரபலமான மென்பொருள் நிறுவனத்தில் பணியில் சேர்ந்தான். அப்போது ஐ.டி துறை நல்ல வளர்ச்சியில் இருந்த காலம். தூரிகாவும் பள்ளிப் படிப்பை முடித்து பி.பி.ஏ சேர்ந்து ஒருவருடம் முடித்திருந்தாள். மகனின் சம்பாத்தியத்தை வைத்தே தற்போது அவர்கள் நடத்தும் உணவக இடத்தையும் அவர்கள் குடியிருக்கும் வீட்டையும் வாங்கினார் சரவணன். தற்போது இருக்கும் வண்ணனின் வீடு தான் சரவணனின் பூர்வீக வீடு. ஜெகதீசனுடன் ஏற்பட்ட மனவருத்தத்தால் அவருடன் இருக்க பிடிக்காமல் அப்போதே சரவணனின் வீட்டிற்கு அவர்கள் குடிவந்து விட்டனர். இதைப்பற்றி ஆறாம் அத்தியாயத்தில் தெளிவாகச் சொல்லியிருப்பேன்.

அப்படியிருக்க திடீரென்று ஒருநாள் ஒரு பெண்ணை வீட்டிற்கு அழைத்து வந்துவிட்டான் மணிகண்டன். விசாரித்ததில் அவனுடன் ஒன்றாகப் பணிபுரியும் பெண் என்றும் இருவரும் காதலிக்கிறார்கள் என்றும் தெரியவந்தது. அவளோ ஒரு வசதியான வீட்டில் பிறந்த ஒரே பெண். மணிகண்டனுடனான தங்கள் பெண்ணின் காதலில் அவர்களுக்குத் துளியும் விருப்பமில்லை. அதனால் மணிகண்டன் அவளை தங்கள் வீட்டிற்கு அழைத்து வந்துவிட்டான். இது நடக்கும் போதெல்லாம் தூரிகாவின் குடும்பம் வெள்ளிமலைக்கு குடிவரவில்லை. விழுப்புரத்தில் இருந்தார்கள். பிரச்சனை விஸ்வரூபமெடுக்க ஜெயசீலனும் கிரிஜாவும் தான் சரவணனிற்கும் வைதேகிக்கும் ஆறுதலாக இருந்தனர். அவர்கள் தான் அந்தப் பெண்ணின் வீட்டில் பேசி அவர்களை திருமணத்திற்கும் சம்மதிக்க வைத்தனர்.

திருமணத்திற்குப் பின் மணிகண்டன் தங்கள் தொழிலைத் தான் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று அவர்கள் வைத்த கோரிக்கையை மறுக்க முடியாத நிலையில் இவர்கள் இருந்தனர். வயது வந்த மகளிருக்க மகனுக்குத் திருமணம் செய்ய எந்தப் பெற்றோர்கள் தான் விரும்புவார்கள்? அதும் மணிகண்டனுக்கே அப்போது இருபத்தி நான்கு தான் நடந்தது.

திருமணம் முடிந்த சில நாட்களிலே இதன் பின் விளைவுகளை அவர்கள் உணரத்தொடங்கி விட்டனர். மணிகண்டனுக்கு மனைவி பக்கமும் பேச முடியாமல் பெற்றோர் பக்கமும் நிற்க முடியாத ஒரு நிலை. அந்தச் சமயத்தில் தான் சூர்யாவும் கருவுற்று இருந்தான். சூர்யாவின் வருகையாவது இரு குடும்பத்தையும் ஒன்றிணைக்கும் என்று கனவுகண்டிருந்த வேளையில் தான் தொழில் நிமித்தமாய் வெளியூருக்குச் சென்ற மணிகண்டனின் கார் விபத்துக்குள்ளாகி அவன் கவலைக்கிடமாக இருப்பதாய் சரவணனிற்குச் செய்தி வந்தது. எவ்வளவு முயன்றும் அவனைக் காப்பாற்ற முடியாமல் போக சரவணனின் குடும்பத்திற்கு முதல் இடி இறங்கியது. முன்பே தங்களுடன் இணக்கமில்லாமல் இருந்த மருமகள் இப்போது முற்றிலும் தொடர்பில்லாமல் போய்விட சூர்யா பிறந்த மறுநாளே அவனுடன் இவர்களின் இல்லம் தேடி வந்த அந்தப் பெண்ணின் பெற்றோர்கள் சூர்யாவை வளர்க்க அவர்கள் விரும்பவில்லை என்றும் சூர்யா அவர்களுடன் இருந்தால் அவர்கள் மகளின் எதிர்காலம் சூர்யாவுடனே முடிந்துவிடும் என்றும் சொல்ல சரவணனிற்கும் வைதேகிக்கும் அடுத்த அதிர்ச்சி காத்திருந்தது.

மேற்கொண்டு அவர்களுடன் பேசிய போது தான் சூர்யா உயிருடன் இருக்கிறான் என்ற செய்தியே அவன் அன்னைக்குத் தெரியாது என்று அவர்கள் தெரியப்படுத்தினர்.

பிறக்கும் போதே தந்தையில்லாத அவனுக்கு தாயையும் இல்லாமல் செய்ய வேண்டாம் என்று சரவணனும் வைதேகியும் அவர்களிடம் கிட்டதட்ட மன்றாடினார்கள்.

"ஒருவேளை இந்த நிலை உங்க பொண்ணுக்கு ஏற்பட்டா நீங்க இப்படித்தான் செய்விங்களா? உங்க பொண்ணோட வாழ்க்கை நல்லா இருக்கணும்னு தானே ஆசைப்படுவீங்க? எங்களுக்கு இருக்குறது அவ ஒரே பொண்ணு. இப்போ இல்லாட்டியும் ஒரு ரெண்டு மூணு வருஷத்துலயாவது அவ மனசை மாத்தி அவளுக்கு ஒரு நல்ல வாழ்க்கை ஏற்படுத்திக் கொடுத்திடுவோம். ஆனா அதுக்கு இந்தக் குழந்தை நிச்சயம் இடைஞ்சலா இருக்கும். ஒருவேளை உங்களுக்கும் இந்தக் குழந்தையை வளர்த்த விருப்பமில்லைனா ஒரு அனாதை ஆஸ்ரமத்துல நாங்க விட்டுடுறோம்.

இவனுக்கு வேண்டிய எல்லாமும் நாங்க செய்வோம். ஆனா மறைமுகமா தான் நடக்கும். இதுக்கு மேல உங்க விருப்பம்" என்று அவர்கள் அங்கிருந்து புறப்பட அதுவரை ஒரு அறைக்குள் இருந்து இதையெல்லாம் கேட்டுக்கொண்டிருந்த தூரிகா ஒரு முடிவுடன் வெளியே வந்தாள்.

"அந்தக் குழந்தையைக் கொடுங்க. அவனுக்குனு இத்தனை உறவுகள் இருந்தும் அவன் ஏன் அனாதை ஆஸ்ரமத்துல வளரனும்? அவனுக்கு இனிமேல் நான் தான் அம்மா" என்று அவனைக் கையில் வாங்கியவள் அவர்கள் செல்லும் முன் அழைத்தவள்,

"எனக்கு நீங்க ஒரே ஒரு ஹெல்ப் பண்றிங்களா?"

"சொல்லுமா. பண எவ்வளவு வேணுனாலும்..." என்று அவர்கள் முடிக்கும் முன்னே,

"இனிமேல் எப்பயுமே எங்களைத் தேடி நீங்க இங்க வந்திடாதிங்க. அது தான் நீங்க எங்களுக்கு பண்ணுற ஒரே உதவி" என்று அவர்களை அனுப்பிவைத்தாள்.

அவர்கள் சென்று சிறிது நேரம் வரை நடந்ததை உணராமல் இருந்த வைதேகியும் சரவணனும் சூர்யாவின் அழுகையில் தான் நிஜத்திற்கு வந்தனர். பசிக்கு அழும் அக்குழந்தையை எப்படிச் சமாதானம் செய்வதென்று கூடத் தெரியாமல் தவிக்கும் தூரிகா இவனை எப்படி வளர்த்தப் போகிறாள் என்றும் இதனால் இவளது எதிர்காலம் என்னவாகும் என்றும் நினைக்கையில் அவர்களுக்கு அழுகை வந்தது.
அதன் பின் விஷயமறிந்து கிரிஜா அங்கே செல்ல மணிகண்டனை நம்பி அவர்கள் வாங்கியிருந்த கடன் அவர்கள் கழுத்தைப் பிடிக்க அதை அடைப்பதற்கே அவர்களின் சொத்து முழுவதும் தீர்ந்தது. சோர்ந்துக் கிடந்த அவர்களை கிரிஜா தான் வெள்ளிமலைக்கு அழைத்து வந்தார். அவர்களுக்கு வேண்டிய பண உதவியையும் அவரே செய்தும் கொடுத்தார்.
இங்கு வந்தவர்கள் தங்களுடைய உணவகத்தைத் தொடங்க தூரிகாவும் மேற்கொண்டு படிக்க நினைத்தாள். தாயென அரவணைத்ததாலோ என்னவோ சூர்யா அவளைத் தவிர வேறு யாரிடமும் ஒன்ற மாட்டான். இவ்வாறு சென்றுகொண்டிருந்தவர்களின் வாழ்க்கையில் வைதேகியின் மரணமும் இணைந்துகொண்டது. தன்னுடைய படிப்புக்கு ஏற்ற வேலையாக இல்லாவிட்டாலும் ஓரளவுக்கு நிறைவான சம்பளத்தில் ஒரு பணி கிடைத்தாலும் அந்தச் சம்பளத்தை வைத்து சென்னை போன்ற ஒரு நகரத்தில் வாழ்வது எளிதல்ல என்று புரிந்துகொண்டவள் இங்கேயே தங்கிக்கொள்ள சரவணனின் மருத்துவ செலவுக்கும் வியாபாரத்தை விரிவாக்கவும் தன்னுடைய நிலத்தை மூர்த்தியிடம் வைத்து சிறிது கடன் வாங்கியிருந்தாள். ஒரு கட்டத்தில் அதற்கான வட்டி கூட நிலத்தை விற்று கடனை அடைந்துவிடலாம் என்று எண்ணியவளைத் தடுத்த கிரிஜா தன்னிடம் இருந்த பணத்தைக் கொடுத்து அதை மீட்டுக் கொடுத்தார். அப்போது சரவணனிற்கு மீண்டும் அடிபட்டு விட யாருக்கும் தெரியாமல் மூர்த்தியிடம் மீண்டும் கடனை வாங்கியிருந்தாள் தூரிகா. கிரிஜாவைக் கேட்டால் கொடுத்திருப்பார் தான்.

ஏற்கனவே மூன்று லட்சம் கொடுத்து இன்றுவரை அதற்காக எந்த வட்டியையோ இல்லை உறுதி பத்திரத்தையோ கேட்காமல் இருக்கும் அவரை மேற்கொண்டு சிரமப்படுத்த அவள் விரும்பவில்லை. அவள் தற்போது இருப்பது பழங்கால வீடு என்பதால் அது மழைக்கு ஒழுக அதைப் புனரமைக்க மேற்கொண்டு அவனிடமே கடன் வாங்கியிருந்தாள். வீடு வேலை செய்யப்படாமலே அந்தப் பணமும் செலவாகிவிட தற்போது அந்த நிலத்தை மனதில் வைத்துக்கொண்டு அவளைத் துரத்துகிறான் மூர்த்தி.
இப்போது அந்த நிலத்தை விற்றாலும் கடனை அடைத்துவிட்டு கையில் கொஞ்ச பணத்துடன் அவளால் வாழ முடியும் தான். ஆனால் அதை வைத்து சூர்யாவுக்கு எப்படி நல்ல கல்வியைக் கொடுக்க முடியும் என்று எதிர்கால தேவையைக் கருத்தில் கொண்டு போராடுகிறாள். இவற்றுக்கு இடையில் தான் தூரிகாவின் வாழ்க்கையை எண்ணி சரவணன் வேறு கவலை கொண்டுள்ளார்.

பழைய நினைவுகளில் இருந்து கிரிஜாவும் தூரிகாவும் வெளிவர ஒருவேளை இதை அறிந்து தான் அன்று வண்ணன் பின்விளைவுகளைப் பற்றிப் பேசினானோ என்று எண்ணி சூர்யாவை வண்ணனிடம் ஒன்ற விடாமல் தடுக்கிறாள். என்னதான் சூர்யாவை அவள் பெற்றெடுக்கா விட்டாலும் அவன் பிறந்த இரண்டாம் நாளிலிருந்தே இவள் தானே வளர்த்துகிறாள். அது போக அவள் அண்ணிக்கும் வேறொரு வாழ்க்கை அமைந்துவிட்டது என்றும் இவள் அறிவாள். ஒருவேளை சூர்யாவுக்கு உண்மை தெரிந்து இதனால் அவள் அண்ணியுடைய வாழ்க்கையும் பாதிக்க இவள் விரும்பவில்லை.
(மழை வருமோ?)
 
Top