Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மழைக்கால மேகங்கள்! - 14

Advertisement

praveenraj

Well-known member
Member

அவனுக்கு காஃபி கலந்தவர் தூரிகாவுக்கும் எடுத்துவர மூவரும் முதன்முறையாக ஓரிடத்தில் சிறிது தள்ளி தள்ளி அமர்ந்தனர். வண்ணன் தான் முடிவெடுத்ததை கிரிஜாவிடம் சொல்ல மனதிற்குள் ஒத்திகை பார்த்தான். இங்கே வம்படியாக அழைத்து வந்தவர் என்றாலும் இப்போது அவரின் அனுமதியுடன் இங்கிருந்து செல்ல எண்ணினான் வண்ணன். அதும் தற்காலிக பயணம் தான். இறுதி மிடறு காஃபியை உறிஞ்சியவன் அந்தக் கோப்பையை உற்று நோக்கியவாறு,

"ம்மா நான் இன்னைக்கு நைட் கோவைக்குப் போலாம்னு இருக்கேன்..." என்றதும் கிரிஜாவுக்கு ஒரு அதிர்ச்சி பரவினாலும் அடுத்தகட்ட நடவடிக்கையை அவன் சொல்லி முடிக்க பேசாமல் அவனை அங்கேயே மறுபடியும் வேலை செய்ய சொல்லலாம் என்று கூட எண்ணினார். பின்னே அவனுடைய மாற்றங்கள் கிரிஜாவையும் மாற்றிவிட்டது என்பது மிகையில்லை.

"நீ வேணுனா மறுபடியும் அங்க வேலைக்குச் சேர்ந்திடுறயா?" என்று அவர் கேட்டது தான் தாமதம்,

"இல்லம்மா. நான் அங்க என் சர்டிபிகேட் வாங்க மட்டும் தான் போறேன். வேற கம்பெனி தான் பார்க்கணும்..." என்றவனின் குரலில் ஒரு உறுதியைக் காட்டிலும் வைராக்கியம் மேலோங்கியது.

இப்போது தூரிகா அர்த்தத்துடன் வண்ணனைப் பார்க்க,

"உடனே வேற வேலை கிடைக்காது தான். இருந்தாலும் என் எக்ஸ்பிரியன்ஸுக்கு தேடுனா கண்டிப்பா கிடைக்கும். என் ஃப்ரண்ட் ஜெ.எஸ்.என் கன்ஸ்ட்ரக்சன்ஸ்ல வேலை செய்யுறான். அவன் கிட்ட இன்னும் பேசல. பேசிட்டுச் சொல்றேன்..." என்று வண்ணன் நிறுத்த அன்று வரதராஜன் தன்னிடம் சொல்லிச் சென்றதை எண்ணிப் பார்த்தாள் தூரிகா.
வழக்கமாக வண்ணனிடம் கிரிஜா தான் ஆணித்தனமாகப் பேசுவார். மாறாக இன்று வண்ணன் அப்படிப் பேச கிரிஜாவுக்கு இதை எப்படி எடுத்துக் கொள்வதென்றே விளங்கவில்லை. அதே நேரம் அவன் வேலை விஷயத்தில் தான் அவ்வளவு பிடிவாதம் பிடித்திருக்க கூடாதோ என்று யோசிக்கத் தொடங்கினார் கிரிஜா. அவர் முகத்தை வைத்தே அவர் கவலையை ஓரளவுக்கு யூகித்த வண்ணன்,

"என்னம்மா எனக்கு வேற வேலை கிடைக்காதுனு யோசிக்கறீங்களா?" என்று கேட்டவன் ஒரு புன்னகை உதிர்க்க கிரிஜா என்ன பேசுவதென்று தெரியாமல் தடுமாறினார்.
"என் கிட்ட திறமை இருக்கு. அனுபவம் இருக்கு. நீங்க ஒன்னும் என் வேலையை நெனச்சு கவலை படவேண்டாம்..." என்றவன் நிறுத்தி,

"இல்ல ஒருவேளை இந்த வேலைக்குத்தானே அன்னைக்கு அவ்வளவு சண்டை போட்டு என்கிட்ட பிடிவாதம் பிடிச்சான். இப்போ அதே வேலையை வேண்டாம்னு சொல்றானேன்னு யோசிக்கறீங்களா?" என்று மீண்டும் அவர் எண்ண ஓட்டத்தை மிக நெருக்கமாகப் படித்தான்.

"நான் போய்ட்டு வரேன். சரியா?" என்றவன் அன்றிரவே கோவைக்குப் புறப்பட ஆயத்தமானான். செல்லும் முன் தூரிகாவைத் தேடி அவள் கடைக்குச் சென்றவன்,

"தூரிகா..." என்று அவளை அழைக்க அவளோ விசித்திரமாகப் பார்த்தாள்.

"அம்மாவைப் பார்த்துக்கோங்க. அண்ட் என்னைப் பத்தி அதிகம் யோசிக்க வேண்டாம்னு சொல்லுங்க. வேலை தானே கிடைச்சுடும். எனக்கு அந்த நம்பிக்கை நிறையவே இருக்கு..." என்று சிரித்தான். அந்தச் சிரிப்பில் ஒரு தன்னம்பிக்கை தெரிந்தது.

"நான் உங்ககிட்ட ஒன்னு சொல்றேன். தப்பா இருந்தா சாரி. ஆனா இதுக்கு நீங்க சம்மதிப்பிங்களானு எனக்குத் தெரியல. இந்த ஊர்ல வரதராஜன்னு ஒரு சிவில் என்ஜினீயர் இருக்கார். கவர்மெண்ட் எஞ்சினீரா இருந்து ரிட்டையர் ஆனவர்..." என்று தொடங்கி அன்று அவர் சொல்லிச் சென்றதை எல்லாம் ஒப்பித்தாள்.

"உங்களுக்கு உங்க பிடிச்ச வேலையைச் செய்யணும். அத்தைக்கு நீங்க அவங்க கூடவே இருக்கனும். இது ரெண்டுக்கும் சேர்ந்த மாதிரி இருக்கும் ஒரு வாய்ப்பு இப்போ கிடைச்சிருக்கு. நல்லா யோசிச்சு உங்க முடிவைச் சொல்லுங்க..." என்று நிறுத்தியவள் அன்று அவனை அடித்ததை எல்லாம் எண்ணி நெளிந்தவள்,

"அன்னைக்கு நடந்ததுக்கு நான் மன்னிப்பு கேட்டுக்குறேன். அதையெல்லாம் மனசுல வெச்சுக்காம சூர்யாவுக்கு சைக்கிள் வாங்கி அதை நான் சொன்ன மாதிரி வேற சொல்லி உங்க மெச்சுரிட்டி லெவலை சொல்லாம சொல்லிட்டீங்க. சாரி அண்ட் தேங்க்ஸ். அத்தையை நான் பார்த்துக்கறேன். நீங்க நிம்மதியாப் போய்ட்டு வாங்க..." என்று அவள் வழி அனுப்பினாள்.

அப்போது தான் சரிதா அந்த இடத்திற்கு வந்தாள். தூரிகாவுடன் தண்மையாகப் பேசிக்கொண்டிருந்த வண்ணன் அவளுக்கு வியப்பை அளிக்க அதே நேரத்தில் சரிதாவிற்காகத் தான் இவ்வளவு நேரம் அவன் காத்திருந்தானோ என்று யோசித்த தூரி அன்று கிரிஜா சொன்னது போல் இவர்கள் காதலிக்கிறார்களோ என்று யோசித்தாள்.
"என்ன வேன் உலகம் சுற்றும் வாலிபன் ஆகிட்டே வரீங்க போல? போற போக்குல நம்ம 'ஜி'கே டப் கொடுப்பிங்க போல? கலக்குற வண்ணா..." என்று அவனை வாரினாள்.
அவளை முறைத்தவன்,"கிளம்பலாமா? டைம் ஆச்சு"

"நீங்களுமா போறீங்க?" என்ற தூரிக்கு,

"நம்ம ஊர்ல ஊருக்குப் போறவங்களைக் காட்டிலும் வழி அனுப்பறவங்க தான் ஜாஸ்தி..." என்று சிரித்த சரிதா அவனுடன் சென்றாள்.

இங்கே வந்த போது இருந்த வண்ணனுக்கும் இப்போது இங்கிருந்து செல்லும் வண்ணனுக்கும் ஆறென அறுபது வித்தியாசம் கூடக் கண்டுபிடிக்கலாம் என்று யோசித்த தூரிகா காலையில் பாதியில் நிறுத்தப்பட அவன் காதல் கதையைக் கேட்கும் ஆவலில் தன் வேலைகளை எல்லாம் துரிதமாக முடித்தவள் சூர்யாவைத் தூங்க வைத்துவிட்டு கிரிஜாவை நோக்கிச் சென்றாள்.

அங்கே வண்ணனின் முகத்தை வைத்தே அவன் ஏதோ குழப்பத்தில் இருக்கிறான் என்று அறிந்த சரிதா,

"என்னாச்சுப்பா? ஏன் இவ்வளவு பீலிங்?" என்றாள்.

"வாழ்க்கையில எதையெல்லாம் நிரந்தரம்னு நெனச்சிட்டு இங்க வந்தேனோ அதெல்லாம் இப்போ தற்காலிகம் ஆகிடுச்சு. எதெல்லாம் தாற்காலிகம்னு இருந்தேனோ அதெல்லாம் நிரந்தரம் ஆகிடுச்சு சரு... கொஞ்சம் பிளோஸப்பிகளா இருந்தாலும் இது தான் உண்மை. எந்த வேலையை விட மாட்டேன்னு அம்மாகிட்டச் சண்டை போட்டேனோ இன்னைக்கு அதே வேலையை அம்மா சொல்லியும் செய்ய விருப்பமில்லை. இந்த ஊர்ல எல்லாம் மனுஷன் வாழுவானானு..." என்று வண்ணன் இழுக்க அவனை முறைத்தாள் சரிதா.

"நான் பொய் சொல்ல விரும்பல சரு. என்னைப் பொறுத்த வரை நான் வாழ இந்த ஊருக்கு எந்த தகுதியும் இல்லைனு தான் நெனச்சிட்டு இருந்தேன். ஏற்கனவே குழப்பத்துல இருந்த என் மனக்குளத்துல தூரிகா ஒரு கல்லை வீசிட்டாங்க. இங்கேயே ஒரு வேலைக்கு அரேஞ் பண்ணியாச்சாம். ஸ்டில் என்னால ஒரு முடிவு எடுக்க முடியல..."

"இது மட்டும் தான் காரணமா இல்லை?"

"நான் தூங்கிட்டு இருக்கேனு நெனச்சு அம்மாவும் தூரிகாவும் எனக்குத் தெரியாத என் வாழ்க்கையின் சில ரகசிய பக்கங்களைப் பேசிட்டு இருந்தாங்க..." என்றவன் அதை அவளிடம் ஒப்பித்தான்.

"இதெதுவும் தெரியாம நான் அம்மாவை ரொம்ப ஹர்ட் பண்ணியிருக்கேன் சரிதா..." என்றவன் தனக்கான பேருந்து வருவதை அறிந்து அவளிடமிருந்து விடைபெற்றான். ஆனால் அவன் எண்ணமெல்லாம் கிரிஜா பேசியதில் தான் இருந்தது. கள்ளக்குறிச்சிக்குச் சென்றவன் அங்கிருந்து கோவைக்குப் பேருந்தைப் பிடித்தவன் தன் கடந்த காலப்பக்கங்களை எல்லாம் அசைபோட்டான்.

அன்று இந்தத் திருமணத்தில் தனக்கு விருப்பமில்லை என்று சொன்ன கிரிஜா வண்ணனை அழைத்துக்கொண்டு புறப்பட்டார். வண்ணனோ கிரிஜாவின் அந்த வார்த்தைகளைக் கேட்டு சிலையென இருக்கும் நிஹாவை திரும்பி திரும்பி பார்த்தவாறு சென்றான். நிஹாவுக்கு கண்கள் கலங்க நேராக தன் தந்தையிடம் சென்று நடந்ததை விசாரித்தாள்.
"இங்க பாருடாம்மா அந்த அம்மாவுக்கு அவங்க பையனை தன் கட்டுப்பாட்டுலயே வெச்சு இருக்கணும்னு எண்ணம் போல. அது போக எங்க நம்ம கூட சம்மந்தம் வெச்சுக்கிட்டா அவங்க பையனை இழந்திடுவோமோனு ரொம்ப காரசாரமாவே பேசுனாங்க. நானும் பொறுமையாவே தான் பேசுனேன். ஆனா அவங்க ரொம்ப ஆர்டர் போடுறாங்க டா. நீ ரொம்ப செல்லமா வளர்ந்த பொண்ணு உனக்கு இங்க எல்லா வசதியும் இருக்குனு தான் சொன்னேன் அதுக்கே அவங்க தாம்தூம்னு குதிச்சு என்னென்னவோ பேசிட்டுப் போறாங்க. நீயும் தானே கேட்ட?" என்று நிறுத்தினார் அவர்.

முன்பே தன் அன்னையைப் பற்றியும் அவரின் கண்டிப்பைப் பற்றியும் பல முறை வண்ணன் சொல்லியிருந்த காரணத்தால் இதை கண்மூடித்தனமாக நம்பினாள் நிஹாரிகா. அதே நேரம் தன் தந்தை தனக்காக இவ்வளவு இறங்கிச் செல்வதிலும் அவளுக்கு உடன்பாடில்லை. தங்கள் முன்னே அவ்வளவு அதிகாரமாகப் பேசிச்சென்ற கிரிஜா தன் தந்தையிடம் எப்படியெல்லாம் பேசியிருப்பார் என்று யோசித்தாள்.

"இனிமேல் நாம எதுவும் பேச வேண்டாம்பா. அவங்களா வந்தா மேற்கொண்டு பேசலாம்" என்றவள் உள்ளே சென்றுவிட்டாள்.

உண்மையில் வண்ணனைப் பற்றி நிஹா தன் தந்தையிடம் சொன்ன போதே வண்ணனை அவருக்குப் பிடிக்கவில்லை. வசதி வாய்ப்பிலும் பழக்க வழக்கத்திலும் வண்ணன் அவரைத் திருப்திப்படுத்த வில்லை என்பதே உண்மை. இருந்தும் மகளுக்காகத் தான் அவனைச் சந்திக்கவே ஒப்புக்கொண்டார். ஆனால் அவர் நினைத்த அளவுக்கு அவன் மோசமில்லை என்று அவருக்குப் புரிந்தது. அதே நேரம் அவன் திறமையை மெச்சியவர் வண்ணனை தன்னுடைய பிஸினஸுக்கு வாரிசாக கொண்டுவர திட்டமிட்டார். கிரிஜாவைப் பற்றி வண்ணன் சொன்னதை எல்லாம் நிஹாவின் மூலம் தெரிந்துகொண்டவர் அதை நேரிலும் கண்டுகொண்டார். ஆனால் இவ்வளவு நடந்தும் வண்ணன் தன் அன்னையை எதிர்த்துப் பேசாதது அவருக்கு ஐயம் ஏற்படுத்தியது. இன்றே அன்னையின் பேச்சை மீறாதவன் நாளை திருமணத்திற்குப் பிறகும் இதே போல் இருந்துவிட்டால் என்று குழம்பினார். தன் மனைவி இறந்த பொழுதே நிஹாவின் எதிர்காலம் ஒன்று தான் அவருக்கு ஒரே கனவாக இருந்தது. நிஹாரிகா வேலைக்குச் செல்வதில் கூட அவருக்கு விருப்பமில்லை. இருந்தாலும் மகளுக்காக அதை ஒப்புக்கொண்டார். அவருக்கு வரப்போகும் மாப்பிள்ளை தங்களுடன் இருந்து தங்கள் தொழிலையும் பார்த்துக்கொள்ள வேண்டும் என்பதே அவர் எண்ணம். இது சிங்கிள் பேரென்சுகளுக்கே இருக்கக்கூடிய கவலை. ஒருவேளை இருவரும் சுமுகமாகப் பேசியிருந்தால் வண்ணன் நிஹாவின் திருமணம் எப்போதோ அரங்கேறியிருக்கும். தங்களுடைய இன்செக்குரிட்டியை அவர்கள் இருவரும் ஒருவருக்கு ஒருவர் காட்டிக்கொண்டனர். விளைவு முதலே கோணலாயிற்று!

ஒருவரை ஒருவர் நம்பாமல் பரிசோதனை செய்யும் முயற்சியில் இருவரும் தங்களுக்குள்ளான நம்பிக்கையை இழந்துவிட்டனர். பெரியவர்களின் ஈகோ சிறியவர்களை எவ்வளவு பாதிக்கும் என்று உணராமல் தவறிழைத்து விட்டனர்.
இங்கே வண்ணனோ கிரிஜாவின் மீது அவ்வளவு கோவத்தில் இருந்தான். அவனும் பயங்கர பிடிவாதக்காரன்.

"ம்மா நீ என்ன நெனச்சு இதெல்லாம் செய்யுறனு எனக்குத் தெரியில. ஆனா ஒன்னு ஞாபகம் வெச்சுக்கோ. நிஹா இல்லாம என் எதிர்காலம் கிடையாது..." என்று உறுதியாக உரைக்கும் மகனை நிஜத்திலும் அதிர்வாகவே பார்த்தார் கிரிஜா.

"டேய் நேத்து வந்த அந்தப் பொண்ணு..." என்று கிரிஜா பேசத் தொடங்க,

"நான் பயங்கரமான கோவத்துல இருக்கேன். என் வாயைப் பிடுங்கி எதையாவது பேச வெச்சுடாத. தயவு செஞ்சு ஊருக்குக் கிளம்பு..." என்று அவரை வெள்ளிமலைக்கு அனுப்பியவன் தான். அத்துடன் அவருடனான உரையாடலை தொன்னூறு சதவீதம் குறைத்துக்கொண்டான். அதற்குப் பிறகு அவன் வெள்ளிமலைக்கே வரவில்லை.
இதற்கிடையில் நிஹாரிகாவும் அவனுடன் பேசுவதைத் தவிர்க்க பொறுக்க முடியாமல் நிஹாவை தனியே சந்தித்தான்.

"என்ன நிஹா என்னை அவாய்ட் பண்ணுற?" என்றவனை முறைத்தவள்,

"அதான் உங்க அம்மாக்கு எங்க குடும்பத்தைப் பிடிக்கலையே. அப்பறோம் என்ன செய்ய?" என்றவள் அவளையும் அறியாமல் அழ,

"நிஹா எனக்கு கொஞ்சம் டைம் கொடு. நான் எங்க அம்மாவை கன்வின்ஸ் பண்ணுறேன்..." என்று அவன் முடிக்கும் முன்னே,

"வண்ணா உன் அம்மா என்ன சொன்னாலும் ஏன் எதுக்குன்னு விசாரிக்கவே மாட்டியா? அன்னைக்கு உன் அம்மா கூப்பிட்டதும் அவங்க பின்னாடியே போன?" என்று அன்று தன்னைக் கண்டுகொள்ளாமல் அவன் சென்றதை நினைவு படுத்தினாள் நிஹாரிகா.

"பிரச்சனை நம்ம ரெண்டு பேரோட பேரென்ஸ்க்குள்ள தான். அதை நாம சேர்ந்தே சமாளிப்போம். இப்போ ஏன் என்னை அவாய்ட் செய்யுற? நான் ஏன் என் அம்மாவை எதிர்த்துப் பேசுறதில்லைனு உன்கிட்ட முன்னமே சொல்லியிருக்கேன். அது என் அப்பாவோட கடைசி ஆசை. கொஞ்சம் டைம் கொடு பொறுமையாப் பேசுவோம்..."

"சரி டைம் கொடுத்தா உன் அம்மா என் அப்பாகிட்ட சாரி கேப்பாங்களா சொல்லு? அப்படினா உனக்கு எவ்வளவு நாள் டைம் வேணும்?" என்று அடுத்த சிக்கலை அவனுக்கு ஏற்படுத்தினாள் நிஹாரிகா.

"அவங்க ரெண்டு பேரும் என்ன பேசுனாங்கனு எனக்குத் தெரியாது. சோ தப்பு யார் மேலனு தெரியாம நான் எப்படி உனக்கு வாக்கு கொடுப்பேன்?" என்று வண்ணன் முடிக்க,

"சோ தப்பு எங்க அப்பா மேலனு சொல்லுற ரைட்? இப்பயும் உன் அம்மாவை நீ விட்டுக்கொடுக்க மாட்ட இல்ல?"

"நிஹா நீ ஏன் இப்படிப் பேசுற? முதல நாம எதுக்கு இப்போ சண்டை போடுறோம்? பிரச்சனை நம்ம பேரென்சுக்குள்ள தானே? இதை நாம ரெண்டுப் பேரும் சேர்த்து சமாளிக்கலாம் நிஹா. உன் அப்பா கிட்ட நான் வந்து பேசுறேன். சாரி கேக்குறேன். என்ன நடந்ததுன்னு தெரிஞ்சுக்கலாம். அப்பறோம் யார் மன்னிப்பு கேட்கணும்னு முடிவுபண்ணி அதைச் செய்யலாம் நிஹா"

முதலில் பிடிவாதம் பிடித்தவள் வண்ணனின் கெ(கொ)ஞ்சலில் ஒருவாறு சமாதானம் அடைந்தாள்.

ஆனால் இங்கே கிரிஜாவின் எண்ணமோ எங்கெங்கோ சென்றது. தன்னுடைய சொத்துக்களை எல்லாம் மேற்பார்வை செய்ய ஒரு மருமகன் வேண்டும் என்று கேட்டவர் ஒருவேளை மணிகண்டனைப் போல் வண்ணனையும் மாற்றி விடுவாரோ என்ற அச்சம் அவருள் விரிந்துகொண்டே இருந்தது. அதுபோக வண்ணனும் நிஹாரிகாவைத் தான் திருமணம் செய்வேன் என்று உரைத்தது வேறு அவருக்கு பயத்தைக் கொடுக்க வண்ணன் தன்னை விட்டுப் பிரிந்து விடுவானோ என்ற எண்ணத்தை வலுப்படுத்தியது.
நிதானமாக யோசித்தவர் ஒரு முடிவுக்கு வந்தார். இன்றில்லை என்றாலும் நாளை திருமணம் முடிந்த பின் வேறு சில நாடகத்தைப் போட்டால் என்ன செய்வது என்று எண்ணியவருக்கு நிஜத்திலும் இந்தத் திருமண பேச்சை ஆரமித்ததில் இருந்து இருக்கும் ஒரு சஞ்சலம் என்றும் தீராது என்றும் இந்தத் திருமணம் வேண்டாம் என்றும் உறுதி எடுத்தார்.

அங்கே வண்ணன் நிஹாவின் தந்தையுடன் பேசி அவரையும் சமாளித்து தன் அன்னையை சமாதானம் செய்ய வெள்ளிமலைக்கு வந்தான். நீண்ட நாட்களுக்குப் பிறகு வந்த மகனை எண்ணி மகிழ்ந்தவருக்கு அவன் வந்ததன் நோக்கம் தெரிந்ததும் மனம் படபடப்பானது.
"வண்ணா எனக்கு இந்தத் திருமணத்துல மனசு லயிக்கல. உனக்கு அந்தப் பொண்ணு தான் வேணும்னா நீ தாராளமா கல்யாணம் செஞ்சுக்கோ. ஆனா நான் வரமாட்டேன்..." என்று சொன்னவர் உண்மையில் அப்படி ஏதும் நடந்துவிடக் கூடாது என்று தான் வெள்ளிமலை ஈசனை வேண்டினார். இப்போது வண்ணன் என்ன செய்வான்? அன்னையை நம்பி நிஹாவுக்கு வாக்குக் கொடுத்துவிட்டான். இதைத் திக்கித் திணறி நிஹாரிகாவுடன் வண்ணன் தெரிவித்தும் விட்டான்.

(மழை வருமோ?)
 
Top