Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மழைக்கால மேகங்கள்!- 15

Advertisement

praveenraj

Well-known member
Member

கிரிஜாவைச் சமாதானப்படுத்தி தங்கள் திருமணத்திற்கான பேச்சுவார்த்தை தொடர்பாகப் பேசுவான் என்று எதிர்பார்த்த நிஹா வண்ணனின் பதிலில் உண்மையிலும் அதிர்ந்தாள். பின்னே அன்று அவளை அந்த அளவிற்கு சமாதானம் செய்து தானே வெள்ளிமலைக்கே சென்றான்.

நீண்ட நேரம் மௌனமே ஆட்சிசெய்ய அவர்களுக்குள் இருந்த பனிக்கட்டியை அவளே உடைத்தாள்.

"சரி, அடுத்து என்ன பண்ணலாம்?" என்று அவள் கேட்ட தொனி வண்ணனை மேலும் தர்மசங்கடத்திற்கு உள்ளாக்கியது.

"நிஹா, நம்ம ரெண்டுப் பேருக்குமே ஒரு ஒற்றுமை இருக்கு. ரெண்டு பேருமே சிங்கிள் பேரண்ட்டோட தான் இருக்கோம். அதனால நாம எடுக்குற எந்த முடிவும் நம்ம நாலு பேரையும் கண்டிப்பா பாதிக்கும். உனக்கெப்படி உன் அப்பாவோ எனக்கு என் அம்மா. என்ன தான் எனக்கு என் அம்மாவோட நிறைய முரண் இருந்தாலும் அவங்க தான் எனக்குன்னு இருக்குற ஒரே உறவு. அவங்களை நான் ஜஸ்ட் லைக் தட் கடந்திட முடியாது. அவங்க என்னை இந்த நிலைக்கு கொண்டு வர நிறைய கஷ்டப்பட்டிருக்காங்க. இது எடுத்தோம் கவிழ்த்தோம்னு முடிவெடுக்க முடியாது. நாம ரெண்டுப் பேரும் எவ்வளவு உறுதியா இருக்கோமே அதைப் பொறுத்து தான் நம்ம எதிர்காலமும் இருக்கு..." என்று அவன் கூற அதிலிருக்கும் நியாயம் அவளுக்குப் புரிந்தாலும் ஏனோ கிரிஜாவின் மீதான அவளது பிம்பம் அவளையும் அறியாமல் சிதைந்துகொண்டிருந்தது.

அதன் பின் வந்த நாட்கள் ஏனோ முன்பு போல் சுமுகமாக இல்லாமல் ஒரு வித அலைக்கழிப்பிலே சென்றது.

அன்று வழக்கத்திற்கும் மாறாக யோசனையில் இருந்த தன் தந்தையைக் கண்டு அவர் அருகில் அமர்ந்தாள் நிஹாரிகா.

"என்னாச்சுப்பா ரொம்ப டல்லா இருக்கீங்க?"

"எனக்கு உன்னை விட்டா வேற என்ன கவலை இருக்கு?" என்று விளையாட்டுப் போக்கில் அவர் சொல்ல நிஹாவுக்கு அவர் நிலை புரிந்தது. ஒரே மகள். வேலை வேலை என்று நிற்காமல் சுழன்று கொண்டிருந்த மனிதர் என்று தன் மனைவி இறந்தாரா அன்று முதல் தன்னுடைய வாழ்க்கையையே அவளுக்காக தானே செலவழித்துக் கொண்டிருக்கிறார். ஊர்க் கூட்டி தனக்கு பிரமாண்டமாக ஒரு திருமணம் செய்ய வேண்டும் என்பது தான் அவரின் ஒரே ஆசை என்று அவள் மட்டும் அறியமாட்டாளா என்ன? இன்றோடு தன் திருமணத்தைப் பற்றிப் பேசி இரண்டு மாதங்கள் ஆனது. வண்ணன் ஒருபுறம் கிரிஜாவைச் சமாதானம் செய்ய முயற்சிக்க நிஹா அக்கேள்வியைக் கேட்டும் விட்டாள்.

"அப்பா, அன்னைக்கு வண்ணன் அம்மா கிட்ட நீங்க என்ன பேசுனீங்கப்பா?"
இம்முறை அவர் எதையும் மறைக்கவில்லை. அன்று தான் பேசிய அனைத்தையும் தெரிவித்தார். அதைக் கேட்ட நிஹா அதிர்ச்சியில் உறைந்து,

"என்னப்பா சொல்றிங்க? வண்ணன் என்னை சொத்துக்காக லவ் பண்றான்னு கேட்டீங்களா? இப்படிக் கேட்டா யாருக்குத் தான் கோவம் வராது சொல்லுங்க? நீங்க ஏன் ப்பா அப்படிக் கேட்டீங்க? உங்களுக்கு வண்ணனைப் பிடிக்கலையா?" என்று கேட்டவள் ஒரு இயலாதப் பார்வையை அவர் மீது செலுத்த,

"நான் கேட்ட முறை தப்பா இருக்கலாம் நிஹா. ஆனா கேட்டதுக்கு நியாயமான காரணம் இருக்கு. என் இடத்துல இருந்து யோசி. எனக்கிருக்குறது நீ ஒரே பொண்ணு. நமக்குன்னு பெருசா சொந்தம் யாருமில்லை. நான் எவ்வளவு நாள் உன் கூட இருக்க முடியும்? ஆப்டர் ஆல் ஒரு பவுன் அவ்வளவு எதுக்கு வெறும் நூறு இருநூறுக்கு கூட யோசிக்காம கொலை பண்ணுற சமூகம் இது. நீயோ எவ்வளவு கோடிகளுக்கு அதிபதி தெரியுமா? எனக்கு உன்னோட சந்தோசத்தை விட உன் பாதுகாப்பு முக்கியம். நான் இல்லைனாலும் நீ இங்க எந்தப் பிரச்சனையும் இல்லாம நிம்மதியா வாழனும். அஞ்சு ரூபாய்க்கு பேனா வாங்கினாலே அது எழுதுதான்னு அவ்வளவு முறை கிறுக்கிப் பார்த்து தான் வாங்குறோம். அப்படி இருக்கும் போது நான் எப்படி உன் விஷயத்துல அவ்வளவு அஜாக்கிரதையா இருப்பேன் சொல்லு. திங்க் நெகட்டிவ் ஆக்ட் பாசிட்டிவ்னு ஒரு வாசகம் இருக்கு (தவறாகவே நினை ஆனால் சரியாக நடந்துகொள்). பிசினெஸ் சர்க்கிள்ல எல்லோரும் அப்படிதான் இருப்போம்.
வண்ணனையோ இல்லை அவர் குடும்பத்தையோ நமக்கு எவ்வளவு நாளா தெரியும்? எதை நம்பி நான் முடிவெடுப்பேன்? நான் வெளிப்படையா ஒன்னு சொல்றேன். உனக்குன்னு நான் நம்ம பிசினெஸ் சர்க்கிள்ல அலைஞ்சு திரிஞ்சு ரெண்டு மூணு மாப்பிள்ளை பார்த்திருந்தேன். அப்போ தான் நீ வண்ணனை லவ் பண்றதா என்கிட்ட வந்து சொன்ன. நான் அவரை பெர்சனலா மீட் பண்ற வரை எனக்கு அவர் மேல எந்த ஒப்பீனியனும் இல்லை. நீ தானே சொன்ன அவருக்கும் அவர் அம்மாவுக்கும் அவ்வளவா டேர்ம்ஸ் சரியில்லைன்னு. இப்படி இருக்கும் போதே அவங்க அம்மாவை எதிர்த்து ஒரு வார்த்தையும் பேசாம இருக்கார் அவர். ஒருவேளை நாளைக்கு அவங்களுக்குள்ள எல்லாம் ஓகே ஆனா உன்னோட நிலை? நீ என்னை தப்பா நெனச்சாலும் சரி. எனக்கு என் பொண்ணோட எதிர்காலம் ரொம்ப முக்கியம். நீ என் இடத்துல இருந்து ஒரு நிமிஷம் யோசிச்சுப் பாரு. நீ இன்னைக்கு அனுபவிக்குற இதே சந்தோசம் இதே சுதந்திரம் உன் இறுதி மூச்சு வரை நிலைக்கணும்னு தான் நான் ஆசைப்படுறேன். வண்ணன் அவங்க அம்மாவைச் சமாதானம் செய்யுறேன்னு சொன்னாரே? இந்த ரெண்டு மாசத்துல அவரால அதைச் செய்ய முடிஞ்சதா? என்னோட பயமே அது தான். அவர் இன்னும் அவங்க அம்மாவோட நிழல்லயே தான் வாழுறார். அண்ட் இதை நல்லாக் கேட்டுக்கோ, இன்னைக்கு இல்லை என்னைக்குமே அவரால அதுல இருந்து வெளிய வர முடியாது. அவங்க அம்மாவை அவர் சமாதானமும் செய்ய முடியாது அதே நேரம் அவரால எதிர்க்கவும் முடியாது. இது என்னைக்கும் இம்பாஸ்லேயே தான் இருக்கும். (impasse- முன்னேற்றம் காண முடியாத சிக்கலான நிலை) ஒருவேளை வண்ணனால சுயமா ஒரு முடிவெடுக்க முடிஞ்சா நான் இப்போவே அவங்க அம்மா கிட்ட என் மன்னிப்பை கேட்டு உங்க மேரேஜுக்கு சம்மதம் சொல்றேன். நான் அவங்களுக்கு வெச்ச டெஸ்ட்ல இன்னும் அவங்க பாஸ் ஆகலை. இன்னும் சொல்லப் போனா பாஸ் ஆகுறதுக்கான முயற்சியே அவங்க இன்னும் எடுக்கல..." என்று சொல்லி அவர் சென்று விட்டார்.

'என்னால அவங்களை ஜஸ்ட் லைக் தட் கடந்திட முடியாது' என்று கிரிஜாவைப் பற்றி வண்ணன் தெரிவித்தது ஏனோ அவள் மூளையில் ஒலித்துக்கொண்டே இருந்தது.

வண்ணனைப் பற்றி அறிந்துகொள்ள நிஹாவின் தந்தை எடுத்த முயற்சியில் அவருக்குக் கிடைத்த பதில்கள் அவ்வளவு திருப்திகரமாக இல்லை. எதற்கும் மெனக்கெடாமல் கவலைகளின்றி பொறுப்புகள் இன்றி வாழ்க்கையை அதன் போக்கில் வாழ நினைக்கும் ஒரு நவயுக இளைஞன் தான் பொன்வண்ணன் என்று அறிந்துகொண்டவருக்கு அவன் மீது ஆவல் ஏதும் தோன்றவில்லை. இலக்குகள் அற்ற மனிதனை நம்பி தன் மகளை ஒப்படைக்க அவருக்கு விருப்பமில்லை. சம்பாதிக்கிறான் செலவு செய்கிறான் தன் மகளைக் காதலிக்கிறான் ஆனால் எதிலும் ஒரு தீவிரத்தை அவர் உணரவில்லை. ஒரு பிசினெஸ் மேனான நிஹாவின் தந்தைக்கு வண்ணனனைப் பிடிக்காமல் போனதிற்கு இதை விட வேறு காரணங்களும் வேண்டுமா என்ன?


பேருந்தில் ஏறியவன் தன்னுடைய கடந்த கால வாழ்க்கையை ஒருமுறை அலசிப் பார்த்தான். அதில் உருப்படியான விஷயம் எதுவும் அவனுக்கே தென்படவில்லை. சரிதாவுடன் பழகிய பிறகு தான் ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு சமுதாயக் கடமை இருக்கிறதென்ற ஒரு உண்மையே விளங்கத் தொடங்கியது. 'man is by nature a social animal' என்ற அரிஸ்டாட்டில் கூற்றின் அர்த்தமே இன்று தான் அவனுக்குப் புரிந்தது.

அவன் தந்தையின் இறப்புக்குப் பின் அவன் யாரையும் மனதார நேசிக்கவே இல்லை. அவன் அதிகம் நேசிப்பதாக நினைத்த நிஹாவை அடைவதற்காகக் கூட அவன் பெரிய முயற்சிகளை எடுத்ததாக அவனுக்கு நினைவில்லை. கிரிஜாவை அவன் சமாதானம் செய்ய முயற்சி எடுக்காமல் பிரச்சனைகளைக் கண்டு ஒதுங்க தொடங்கிவிட்டான்.

இறுதியாக ஒருநாள் நிஹாரிகா அவனைத் தேடி வந்தாள். அதற்கு முன் பலமுறை அவனைச் சந்திக்க வேண்டி நிஹா எடுத்த முயற்சிகளை எல்லாம் அவன் தவிர்க்க அன்று தவிர்க்க முடியாத ஒரு பிரிவு கட்டாயமானது. தன் தந்தை மீது தான் தவறு என்று நிஹா புரிந்துகொண்டாலும் பிரச்சனைகளைக் கண்டு ஒளிந்துகொள்ளும் வண்ணனின் குணமும் அவளுக்கு நன்றாகவே புரிந்தது.

"வண்ணா உன்னுடைய எந்தக் குணத்தைப் பார்த்து உன்னை லவ் பண்ண ஆரமிச்சேனோ அதே குணம் தான் இன்னைக்கு நம்ம காதலுக்கு பெரிய கேள்விக்குறியா வந்து நிக்குது. அன்னைக்கு என்ன நடந்ததுனு உன் அம்மா கிட்ட இன்னைக்கு வரை கேக்கல. இவ்வளவு நாளா நம்ம காதல் கல்யாணத்துல முடியறதுக்கு எந்த முயற்சியும் நீ எடுத்ததா தெரியல. உன்கிட்ட ஒரு உறுதியே இல்லை. இத்தனை வருஷத்துல உன் அம்மாவைப் புரிஞ்சிக்கவே முயற்சி எடுக்காத நீ நம்ம எதிர்காலத்தைப் பத்தி என்ன முடிவெடுத்திருக்க சொல்லு?"

"நிஹா, எனக்கு கொஞ்சம் டைம் கொடு..." என்று வண்ணன் முடிக்கும் முன்னே,

"இட்ஸ் டூ லேட் வண்ணா. நீயும் பேச மாட்டேங்குற என்னையும் பேச வேண்டாம்னு சொல்லிட்ட. நாம என்ன முடிவெடுக்குறோங்கறதைக் காட்டிலும் எப்போ எடுக்குறோங்கறது ரொம்ப முக்கியம் வண்ணன். இன்னைக்கே நானா உன் அம்மாவானு ஒரு முடிவுக்கு வர முடியாம நீ இருக்குற. ஒருவேளை நம்ம மேரேஜ் ஆச்சுன்னா? சில முடிவுகள் நமக்கு ரொம்ப கஷ்டமா தான் இருக்கும். ஆனாலும் நமக்கு அதை விட வேற வழி இல்ல. இதை இந்த இடத்துல முடிச்சிடலாம் வண்ணா. எனக்கும் இதை நெனச்சு ரொம்ப ஸ்ட்ரெஸ் ஆகுது. எனக்குத் தெரிஞ்சு உன் அம்மா ஒன்னும் உன்னை கன்ட்ரோல் பண்ணல வண்ணா. நீயா தான் அப்படியொரு மாயபிம்பத்தை உனக்குள்ள உண்டாக்கிகிட்ட. உன் அப்பா சொல்லிட்டாருனு உன் அம்மா சொல்றதுக்கெல்லாம் நீ உன்னை அறியாமலே சம்மதம் சொல்லிட்டு இருக்க. அட்லீஸ்ட் இனிமேலாச்சும் இதைப் பத்தி யோசி. பை" என்று நிஹா அவனை விட்டுச் சென்றுவிட்டாள்.


அதுவரை அன்னை சொல்லுக்கு வேண்டா வெறுப்பாகவே சம்மதம் சொன்னவன் அதன் பின் அவரிடம் பேசுவதை முற்றிலும் குறைத்துக்கொண்டான். இடைவெளி பெரியதாகிக்கொண்டே போக ஒரு கட்டத்தில் கிரிஜாவுடனான அவன் பேச்சுவார்த்தைகள் முற்றிலும் நின்றுவிட அப்போது தான் அவனுக்கு உடல்நிலை சரியில்லாமல் போனது. அவனைக் காண சென்றவர் அவனை வற்புறுத்தி இங்கே அழைத்து வந்துவிட்டார். இங்கே வந்தவனுக்குள் ஆயிரம் மாற்றங்கள் நிகழ்ந்து வாழ்க்கையை பேலன்ஸ் செய்வது எப்படி என்ற யுக்தியை மிகுந்த காலதாமதமாகவே உணர்ந்துகொண்டான். பேருந்து கோவை வந்தடைய முன்பு தான் தங்கியிருந்த வீட்டிற்குச் சென்றான்.

கோவையில் முன்பு தான் தங்கியிருந்த அறைக்குச் சென்றவனைக் கண்ட அவன் நண்பர்கள் உளமார வரவேற்க வண்ணனோ எவ்வித உணர்வுகளையும் வெளிக்காட்டாமல் வெகு சகஜமாக அதேநேரம் பெரிய ஒட்டுதல் ஏதுமின்றி எதிர்கொண்டான்.

அவன் நடவடிக்கைகளைக் கண்ட அவன் நண்பர்கள் அவனைச் சமாதானம் செய்ய முனைய அதை விரும்பாமல்,

"மச்சி நான் பழசை எதையும் பேச விரும்பல. அண்ட் உங்க மேல எனக்கு எந்த வருத்தமும் இல்லை. இங்க எல்லாமே ரயில் சிநேகம் தான். அவனவனுக்கு ஒவ்வொரு டெஸ்டினேஷன். எதுவரை அவன் கூட பயணிக்கிறாங்களோ அதுவரை மட்டும் தான் அவங்க நண்பர்கள். எனக்கெந்த ஹார்ட் ஃபீலிங்க்ஸும் இல்ல. உண்மையைச் சொல்லனும்னா வாழ்க்கையோட அடிப்படை விதியே இப்போ தான் எனக்குப் புரிய ஆரமிச்சிருக்கு. நானும் உங்க கூடவே வந்து செர்டிபிகேட்ஸ் வாங்கிட்டு அப்படியே ஊருக்குப் போகணும்..." என்ற வண்ணன் அவர்களுக்கு முற்றிலும் மாறுபட்டவனாகவே தெரிந்தான்.

"டேய் நீ ஏன் இப்படிப் பேசுற? நீ இங்க எவ்வளவு நாள் வேண்டுனாலும் தங்கலாம் மச்சான். நீ..." என்ற சுதாவுக்கு,

"டேய் நீ இப்போ கூட நம்ம கம்பெனில ஜாயின் பண்ணலாம் மச்சி" என்றான் ஈஸ்வர்.

"இரு நான் நம்ம மது கிட்டப் பேசி எச்.ஆர் கிட்ட நீ வந்து ஜாயின் பண்றதா சொல்ல சொல்றேன்..." என்று சத்யமூர்த்தி முடிக்கும் முன்னே,

"சுதா, நான் திரும்பவும் அன்னைக்குப் பேசுனதை ரிப்பீட் செய்ய விரும்பல. நீங்க என் மேல வெச்சிருக்க அன்பு அக்கறை எல்லாமே எனக்கு நல்லாப் புரியுது. ஆனா அதுக்காக எல்லாம் என் முடிவுகளை யாரும் எடுக்க முடியாது..." என்று வண்ணன் பேசியது அவர்களுக்கு ஒரு சர்காசம்(கிண்டல்) போலவே ஒலித்தது.

சுதாவும் சத்யாவும் ஒருவரை ஒருவர் அர்த்தத்துடன் பார்க்க,

"என் பேச்சில கிண்டலோ கேலியோ உள்குத்தோ வெளிகுத்தோ எதுவும் இல்லை. சோ சும்மா ஷாக் ஆகாம ஆபிஸுக்கு கிளம்புற வழியைப் பாருங்க டா. நான் குளிச்சிட்டு வரேன்..." என்று அவன் சென்றுவிட்டான்.
அதன் பின் நேரம் அதிவேகமாகவே நகர்ந்தது. குளித்து தயாராகி அவர்களுடனே சஞ்சீவி கன்ஸ்ட்ரக்சன்ஸ் சென்றவன் எச்.ஆரை சந்தித்து தன்னுடைய ரிலீவிங் ஃபார்மாலிட்டீஸ் அனைத்தையும் மேற்கொண்டான். முன்பே இது சம்மந்தமாக அவரிடம் பேசியிருந்ததால் அவனுக்கு அதிக சிரமங்கள் ஏதும் உண்டாகவில்லை.

இறுதியாக எல்லா நடைமுறைகளையும் முடித்த அந்த எச்.ஆர் ஒருகணம் வண்ணனைப் பார்த்து,

"வேன், நீங்க இங்கேயே கண்டினு பண்ணலாமே. சஞ்சீவி கண்ஸ்ட்ரெக்சன்ஸ் ஆல்வேஸ் வெல்கம்ஸ் யூ..." என்று சொல்ல இந்த ஒருகணம் தான் இத்தனை ஆண்டுகள் இங்கு பணிபுரிந்ததற்கான ஒரு நிறைவும் ஆத்ம திருப்தியும் அவனுள் எழுந்து அடங்கியது.

"தேங்க்ஸ் ஃபார் யுவர் வேல்யுவபிள் ஆஃபர் சார். ஐ வுட் லைக் டு டேக் ரெஸ்ட். திரும்ப வேலைக்குச் செல்லும் எண்ணமிருந்தா கண்டிப்பா இங்க தான் முதல அப்ரோச் பண்ணுவேன் சார்..." என்றவன் ஒருகணம் நிறுத்தி,

"வரலாம் தானே சார்?" என்று சிரிக்க,

அவன் எண்ணவோட்டத்தை மிகத் துல்லியமாகப் படித்த அவன் எச்.ஆர் ஒருகணம் அவன் பதிலில் திக்குமுக்காடித் தான் போனார்.

"மௌனம் சம்மதத்தின் அறிகுறி தானே?" என்று மீண்டும் அவருடன் ஒரு வார்த்தை விளையாட்டை நடத்தினான்.

இதுவரை அவர் பார்த்த வண்ணன் இவனில்லை என்று அவன் பதிலில் உணர்ந்துகொண்ட அவன் எச்.ஆர் மேற்கொண்டு எதையும் பேசாமல் அவனது ரிலீவிங் ஆர்டெரை அவனிடம் நீட்டினார்.

"இவ்வளவு சீக்கிரம் எல்லா ஃபார்மாலிட்டீஸையும் முடிச்சதுக்கு தேங்க்ஸ் சார்..." என்றவன் தன்னுடைய கொலீக்ஸ் அனைவரிடமும் சொல்லிவிட்டு லிப்ட் நோக்கி நடந்தான்.

எத்தனை பெரிய கனவுகளுடன் இங்கு பணியில் சேர்ந்தவன் இதுபோல் பாதியில் அதுவும் தானாக இந்த வேலையை விட்டுச் செல்லும்படியான சூழல் நேரிடும் என்று கனவிலும் நினைத்துப் பார்த்ததில்லை. அந்த யோசனைகளுடனே லிப்டை நோக்கி வந்தவனுக்கு நிஹாரிகாவின் எண்ணம் எழவில்லை என்றால் தான் ஆச்சர்யம்.

இந்த லிப்டிற்கும் அவன் வாழ்க்கைக்கும் பெரிய பந்தம் தொடங்குமென்று அவன் ஒரு நாளும் நினைத்ததில்லை. ஆறாவது மாடியில் தான் நிஹாரிகா பணிபுரியும் அலுவலகம் இருக்கிறது. அவள் இன்னும் இங்கு தான் பணிபுரிகிறாளா என்று கூட அவனுக்குத் தெரியவில்லை.

'இவ்வளவு தூரம் வந்ததற்கு ஒருமுறை ஆறாவது மாடிக்குச் சென்று அவள் இருக்கிறாளா என்று பார்க்குமாறு அவன் மூளை கட்டளையிட அதே நேரம் அவள் இன்னும் இங்கு தான் பணியில் இருக்கிறாளா என்றும் அப்படியே இருந்தாலும் அவள் எந்த மனநிலையில் இருக்கிறாள் என்றும் அவனால் யூகிக்க முடியவில்லை.

அவளுடனான தொடர்புகள் முற்றிலும் துண்டிக்கப்பட்டு ஆறேழு மாதங்களுக்கு மேல் ஆகிவிட்டது. நீண்ட யோசனையில் இருக்க லிப்ட் அவனது மாடியில் நின்று திறக்கவும் அதிலிருந்தவர்கள் அவன் ஏறுவானா என்பது போல் பார்க்க சிறிதும் யோசிக்காமல் உள்ளே எறியவன் அவள் அலுவலக தளஎண்ணை அழுத்த நினைக்க அது முன்பே அழுத்தப்பட்டிருந்தது.

எப்போதும் திட்டமிடாமல் நிகழும் சம்பவங்களில் தான் சுவாரஸ்யம் அதிகமுண்டு. ஒத்திகைகளற்ற பேச்சுகளும் எதிர்பார்த்திடாத மனிதர்களும் யூகித்திடாத நிகழ்வுகளும் எதிர்நோக்காத சூழல்களும் வாழ்க்கையின் சுவையை நிச்சயம் கூட்டும். அப்படியொரு மாய வினாடியில் தானே அவன் வாழ்வில் நிஹாரிகா நுழைந்தாள். அதேபோலொரு மாய வினாடியில் தானே அவனை விட்டுப் பிரிந்தும் போனாள்.

ஒவ்வொரு வினைக்கும் அதற்கு தகுந்த எதிர்வினை இருக்கும் என்ற நியூட்டனின் மூன்றாம் விதி இந்தச் சூழலுக்கும் பொருந்தும் தானே? இரவுக்கு ஒரு பகலைப் போல் குளிருக்கு ஒரு வெப்பத்தைப் போல் பிரிவுக்கு ஒரு கூடல் உண்டு தானே? ஆனால் பிரிந்தவருடனே தான் கூடலும் நிகழவேண்டும் என்று விதி ஏதும் உண்டோ? ஆயிரம் அலைக்கழிப்புகள் அவனுள் ஓட ஆறாவது தளத்தில் அந்த லிப்ட் நிற்க அவன் வெளியேறியும் விட்டான்.

அவளது அலுவலகத்தில் பலமுறை அவளை பிக் அப் செய்துள்ளான் தான். ஆனால் இன்று போல் ஒரு நிலை வருமென்று அன்று ஒருபோதும் அவன் நினைத்ததே இல்லை. யோசனைகளுடனே அவன் ரிசப்ஷனுக்கு செல்ல அங்கே வழக்கமாக இருக்கும் பெண்ணிற்கு பதிலாக வேறொருவர் இருந்தார்.

"எஸ் சார், ஹொவ் கேன் ஐ ஹெல்ப் யூ?" என்ற அந்தப் பெண்ணிற்கு,

"நிஹாரிகா இருக்காங்களா? நான் அவங்களைப் பார்க்கணும்" என்றான் வண்ணன்.

"வெயிட் எ மினிட் சார்" என்ற அப்பெண் தன்னிடமிருந்த ஒரு லிஸ்டை எடுத்துப் பார்த்து அவனை ஐயமாக நோக்கினாள்.

"என்ன மேடம்?"

"என்ன பேர் சொன்னிங்க?"

"நிஹாரிகா"

"சாரி சார் அப்படி யாரும் இங்க இல்ல. நான் போன வாரம் தான் இங்க ஜாயின் பண்ணேன். எனக்குத் தெரிஞ்சு அப்படி யாரும் இங்க வேலை செய்யுறதில்லை" என்றவள் அவனை ஒருவாறு பார்த்தாள்.
இங்கு வந்து அவனே இரண்டரை மாதங்களுக்கு மேல் ஆகிறது. அவனுக்குத் தெரிந்து அவள் இங்கே தான் பணிபுரிந்தாள். பரீட்சை ஹாலில் கேள்வித்தாளைப் பார்த்து எல்லாமே பிளாங்க் ஆகி நிற்கும் மாணவனைப் போல் வண்ணனும் அடுத்து என்ன செய்வதென்று புரியாமல் விழித்தான்.

"சார், வேற ஏதாவது ஹெல்ப் வேணுமா?" என்று அவனைப் பார்த்த அப்பெண்மணியிடம்,

"சரி சுஜிதானு யாராச்சும் இருக்காங்களான்னு பாருங்க" என்று அவன் கேட்க இப்போது அவள் அவனுக்குச் சாதகமாக பதிலளித்தாள்.

"சரி அவங்களைப் பார்க்க பொன்வண்ணன் வந்திருக்கேன்னு சொல்லுங்க. நான் வெய்ட் பண்றேன்" என்று அங்கிருந்த இருக்கையில் அவன் அமர்ந்தான்.

அப்போது அவனுக்கு சரிதாவிடமிருந்து அழைப்பு வர அப்போது தான் அவன் கோவைக்கு வந்து சேர்த்த தகவலை யாரிடமும் தெரிவிக்க வில்லை என்ற எண்ணமே வந்தது.

"சாரி சாரி சாரி" என்று எடுத்ததும் அவன் மன்னிப்பு வேண்ட,

"மானே தேனே பொன்மானே எல்லாம் ஊர் எல்லையைத் தாண்டும் வரைக்கும் தான் இல்ல? ஊருக்குப் போனதும் ஒருத்தி போன் பண்ண சொன்னாளே அவளுக்கு ஒரு தகவல் கொடுப்போம்னு எண்ணமெல்லாம் துளியும் இல்ல தானே?" என்று அவனை சரமாரியாக வாரினாள் சரிதா.

"சரு அப்படியெல்லாம் இல்லை. உண்மையாவே வந்ததுல இருந்து ஒரே வேலை. ரூம் போய்ட்டு ரெஃப்ரெஷ் ஆகிட்டு நேரா ஆபிஸ் வந்து இப்போ தான் வேலையே முடிஞ்சது. பிலீவ் மீ. நான் பொய் சொல்லல..." என்றவனின் குரலில் இருந்த பதற்றம் அவளுக்கு நன்கு புரிந்தது.

"என்னாச்சு வண்ணா? ஆட்டோகிராஃப் சேரன் போல 'ஞாபகம் வருதே ஞாபகம் வருதே பொக்கிஷமாக நெஞ்சில் புதைந்த நினைவுகளெல்லாம் ஞாபகம் வருதேன்னு' பாட்டு பாட ஆரமிச்சிட்டயா?" என்று விளையாட்டுப் போக்கில் அவன் மனதை ஓரளவுக்கு யூகித்தாள் சரிதா.

"நிஹாவைப் பார்க்க வந்தேன் சரு. ஆனா அவ வேலையை விட்டுட்டாளாம். அதான்..." என்றவனின் குரல் உள்ளே சென்றது.

"வண்ணா ஒன்னு சொல்றேன் தப்பா எடுத்துக்காத. வாழ்க்கையில எதையுமே இருக்கு இல்லைங்கற இந்த ரெண்டு ஆப்சனுக்குள்ள கொண்டு வரப்பாரு. அதை விட்டுட்டு தேவை இல்லாம எஸ்.ஜே சூர்யா மாதிரி இருக்கு ஆனா இல்லைனு போட்டுக் குழப்பிக்காத. இது எல்லாத்துக்கும் பொருந்தும். டோன்ட் காம்ப்ளிகேட் திங்ஸ். ஏன்னா எப்போலாம் நாம இந்த ரெண்டு ஆப்ஷனை விட்டுட்டு மூணாவதா இருக்கு ஆனா இல்லைனு யோசிக்குறோமோ அப்போவே நாம தேவையில்லாம குழம்பி ஒரு வித தேக்க நிலையை நோக்கித் தள்ளப்படுறோம். அது நம்மை மேற்கொண்டு முன்னேற விடாம தடுக்கும். பேசிட்டு நல்ல முடிவோட வா. ஆல் தி பெஸ்ட்" என்று அவள் அழைப்பைத் துண்டிக்கவும் சுஜிதா வெளியே வரவும் சரியாக இருந்தது.

இந்த நேரத்தில் அதும் இவ்வளவு நாட்கள் கழித்து அவனை இங்கே சுஜிதா எதிர்பார்க்கவே இல்லை.

"சொல்லுங்க வண்ணன். எதுக்கு என்னைப் பார்க்க வந்திருக்கீங்க?"

"நிஹாரிகா எங்க இருக்கா? ஏன் வேலையை விட்டுட்டா? இப்போ என்ன பண்ணுறா?"

"இதைத் தெரிஞ்சு என்ன பண்ணப் போறீங்க?"

"நான் என்ன பண்ணப் போறேன்? ஒரு விடை கிடைத்த திருப்தியோட ஊருக்குப் போவேன். அவ்வளவு தான்"

"ஆக்சுவலி அவளுக்கு மேரேஜ் ஃபிக்ஸ் ஆகியிருக்கு. இந்த முடிவெடுக்க அவ அவ்வளவு கஷ்டப்பட்டா. இங்க வந்தா உங்க ஞாபகம் வருதுனு தான் இந்த வேலையையும் விட்டுட்டா. உங்களுக்காக அவ எவ்வளவு செஞ்சிருப்பா? ஆனா நீங்க எந்த முயற்சியுமே எடுக்கல தானே?" என்று குற்றம்சாட்டும் பார்வையை அவன் மீது வீசினாள் சுஜிதா.

"ஏங்க எல்லாத்தையும் எடுத்தோம் கவிழ்த்தோம்னு செய்ய முடியாது. சிலதுக்கு டைம் ஆகும்..."

"ஓஹோ! இப்போ உங்க அம்மா சம்மதம் சொல்லிட்டாங்களா?" என்று பார்த்தவளை எதிர்கொள்ள உண்மையிலும் தடுமாறினான் வண்ணன். பின்னே இன்றளவுக்கும் கூட அவனால் அவன் அன்னையின் சம்மதத்தைப் பெற முடியவில்லையே? சொல்லப்போனால் இப்போது தானே அவரைப் புரிந்துகொள்ளவே முயற்சி எடுத்துள்ளான். அந்த உண்மை அவனைச் சுட்டது.

"ஓகே. நான் வந்ததையோ அவளை விசாரிச்சதையோ அவகிட்டச் சொல்ல வேண்டாம். தேங்க் யூ..." என்றவன் அங்கிருந்து வெளியேறி வெள்ளிமலைக்கு தன் பயணத்தைத் தொடங்கினான். கோவையை விட்டுப் புறப்படும் முன்னே பெருமழைக்கான முதல் அத்தியாயம் எழுத தொடங்கப்பட்டு விட்டது.
(மழை வருமோ?)
 
Top