Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மழைக்கால மேகங்கள்!- 16

Advertisement

praveenraj

Well-known member
Member
கோவையிலிருந்து புறப்படும் முன் வண்ணன் கிரிஜாவை அழைத்து தான் வந்த வேலை முடிந்துவிட்டது என்பதைத் தெரிவித்தான். அதைத் தெரிவிக்கும் போதே அவன் குரல் உள்ளே சென்றிருந்தது. அவன் மனதைப் படித்த கிரிஜா,

"வண்ணா, அம்மா ஒன்னு கேப்பேன் உண்மையைச் சொல்லணும். சரியா?" என்று வழக்கத்திற்கு மாறாக மிக மென்மையாகவே ஒலித்தது கிரிஜாவின் குரல்.

"கேளும்மா..."

"என்னால தான் நீ இந்த வேலையை விட்டயா வண்ணா? உண்மையாவே உனக்கு நான் பாரமா இருக்கேனா வண்ணா? நானும் பார்க்கறேன் சில நாளாவே நீ நீயா இல்லை. உன்கிட்ட நிறைய மாற்றங்கள் தெரியுது. நீ எப்படியெல்லாம் இருக்கணும்னு நான் ஆசைபட்டேனோ அப்படியெல்லாம் நீ மாறிட்டு வர. ஆனா இந்த மாற்றம் என்னுடைய வற்புறுத்தலால் வருதா?" என்று சில நாட்களாய் அவர் மனதைக் குடைந்துகொண்டிருந்த அந்தக் கேள்வியைக் கேட்டும் விட்டார் கிரிஜா.

மறுபுறம் வண்ணனோ அன்னையின் இந்த மாறுபட்ட அவதாரத்தில் திக்குமுக்காடித் தான் போனான்.

"அய்யா என்ன அமைதியாகிட்ட? நான் உன்னை ரொம்ப கஷ்டப்படுத்தறேனோ?"

"அம்மா இப்போ ஏன் நீ இப்படியெல்லாம் கேக்குற?" என்று அவனையும் அறியாமல் வார்த்தைகள் விழுந்தது.

"இல்ல செத்துப்போன உன் அய்யனை இன்னும் நெனச்சு வருத்தப்படுற... ஆனா உயிரோட இருக்குற என்கிட்ட மட்டும் ஏன் நீ தள்ளியே இருக்க? உனக்கு என்னைப் பிடிக்காதா வண்ணா?" என்று கிரிஜா வெளிப்படையாகவே பேசிவிட்டார்.

"அம்மா, உனக்கென்ன ஆச்சு? நீ ஏன் இப்படியெல்லாம் பேசிட்டு இருக்க? உன்னை எனக்குப் பிடிக்காதுன்னு நான் எப்பயாவது சொல்லியிருக்கேனா? முதல நீ எங்க இருக்க? இன்னும் ஏன் நீ தூங்கல? கண்டதையும் போட்டுக் குழப்பிக்காம நிம்மதியாப் படு..." என்று வண்ணன் சற்று அதட்டலாகவே அவரிடம் உரைத்தவன் என்ன நினைத்தானோ,

"அம்மா, நமக்குள்ள நிறைய முரணிருக்கு, நாம நிறைய விஷயத்துல வாக்குவாதம் செஞ்சிருக்கோம். உன்மேல நான் நிறைய கோவப்பட்டிருக்கேன். உன்கூட நான் நிறைய சண்டை போட்டிருக்கேன். உன்னோட பல முடிவுகள் என்னைக் காயப்படுத்தியிருக்கு. உன்னால நான் நிறைய வருத்தப்பட்டிருக்கேன். ஆனா இது எல்லாத்தையும் மீறி உன் முடிவுக்கு நான் எப்பயுமே கட்டுப்பட்டிருக்கேன். பிடிக்காத ஒருத்தருக்காக யாராச்சும் இவ்வளவு செய்வாங்களா? நான் காலையில வந்திடுவேன். பாத்து பத்திரமா இரு. குட் நைட்..." என்று அழைப்பைத் துண்டித்தான் வண்ணன்.

அவனுக்குள் புதுவித உணர்வு எழுந்து அவனை வாட்டியது. தன் அன்னை ஏன் இந்தக் கேள்வியை அதும் இந்த நேரத்தில் வினவினார் என்ற கேள்வி அவனுள் குழப்பத்தை விதைக்க அவர் கேள்வியின் உள்ளார்ந்த பொருள் தான் அவன் மனதை ரீங்காரமிட்டுக் கொண்டே இருந்தது.

இப்போது அன்று இறுதியாக நிஹாரிகா அவனிடம் பேசியது நினைவில் வந்து போனது.

"எனக்குத் தெரிஞ்சு உன் அம்மா ஒன்னும் உன்னை கண்ட்ரோல் பண்ணல வண்ணா. நீயா தான் அப்படியொரு மாயபிம்பத்தை உனக்குள்ள உண்டாக்கிகிட்ட..." என்ற நிஹாவின் வார்த்தைகளை மீண்டுமொரு முறை யோசித்தவன் இப்போது தான் அந்தக் கேள்வியின் அர்த்தத்தை விளங்கிக்கொண்டான். அவன் அம்மாவிடம் அவன் பேசும் விதத்தில் பேசியிருந்தானே ஆனால் இந்நேரம் அவனுக்கும் அவன் அன்னைக்கும் இடையே இப்படியொரு விரிசல் வந்திருக்கவே வாய்ப்பில்லை என்றும் நிஹாவையும் அவன் இழந்திருக்க தேவையில்லாமல் போயிருக்கும் என்றும் இப்போது தான் அவன் விளங்கிக்கொண்டான்.

இத்தனை வருடங்கள் அவன் எவ்வளவு முட்டாளாக இருந்திருக்கிறான் என்ற உண்மை அவனைச் சுட்டது. காலம் கடந்த ஞானம் யாருக்கு உதவும்? தன் மூடத்தனத்தால் அவன் வாழ்வில் அவன் எவ்வளவு விஷயங்களை இழந்திருக்கிறான் என்று நினைக்க நினைக்க அவனுக்கே அவன் மீது அருவருப்பாக இருந்தது.

அவன் வாழ்வில் நிகழ்ந்த அனைத்திற்கும் அடுத்தவர்களையே கைகாட்டிக் கொண்டிருந்தவனுக்கு தீதும் நன்றும் பிறர் தர வாரா என்னும் வரி நினைவுக்கு வந்தது.

உடன் யாரிடமாவது புலம்பித் தீர்க்க வேண்டும் என்று தோன்ற உடனே சரிதாவுக்கு அழைத்தான்.

"சொல்லுங்க சார், ஊருக்குக் கிளம்பியாச்சா?" என்றது தான் தாமதம் அவன் மனதில் சற்று முன் நிகழ்ந்த மாற்றங்களை எல்லாம் ஒன்று விடாமல் அவளிடம் ஒப்பித்தவன்,

"சரு, நான் எவ்வளவு பெரிய முட்டாளா இருந்திருக்கேன் பாரு. நானே என் வாழ்க்கையில சிக்கலை உண்டாக்கி அதுக்கு என் அம்மாவையும் நிஹாவையும் தூரிகாவையும் பழியாக்கி இருக்கேன். இன்னைக்கு எல்லாமே எனக்குப் புரியுது. ஆனா என்கிட்ட எதுவுமே இல்லை சரு. ஐ ஃபீல் லோன்லி. இப்போ நான் என்ன பண்ணனும் சரு? எனக்கு ஒண்ணுமே புரியல. இதுக்கு நீ தான் முடிவு சொல்லணும்" என்று முடித்தான்.

வண்ணனின் நிலை சரிதாவுக்கு நன்கு விளங்கியது. மெல்ல தெளிவடைந்து கொண்டிருந்த அவன் மனம் மீண்டும் ஒரு சூழலில் சிக்கிவிடக் கூடாது என்று எண்ணியவள்,

"இப்போ உனக்கு யார் மேலயாவது கோவமோ வருத்தமோ இருக்கா?"

"என் மேல மட்டும் தான் எனக்கு கோவமா வருது..."

"ஜஸ்ட் காம் டௌன் வண்ணா. வாழ்க்கைக்கு ஒரு ஃபிக்சட் டெம்ப்லேட் கிடையாது. அது எப்போவுமே ட்ரையல் அண்ட் எர்ரர் தான். இதுவரை உன் லைஃப்ல நடந்த எதையும் யாராலயும் மாத்த முடியாது. ஆனா இனிமேல் உன் வாழ்க்கையில என்னவெல்லாம் நடக்கணுமோ அதை நோக்கி ஒரு ரோட்மேப் போடலாம். அதுவும் நிரந்தரம் இல்ல. ஆனா நீ சாதூர்யமா இருந்தா அதை உன் கண்ட்ரோல்ல கொண்டு போகலாம். முதல ஊருக்கு வா. வந்ததும் ஜாப்ல சேரு. புதிய அத்தியாயம் தொடங்கு. இவங்க இப்படி இருப்பாங்களோ இது இப்படி நடக்குமோனு எல்லாம் யோசிக்காம குழப்பிக்காம புது ஜர்னியை தொடங்கு. எல்லாத்தையும் விட முக்கியம், டோன்ட் ரிஃரெட் தி பாஸ்ட்(கடந்த காலத்தை எண்ணி வருந்தாதே) டோன்ட் ப்ரிடிக்ட் தி ஃபியூச்சர்(எதிர் காலத்தை யோசிக்காதே) லிவ் தி மொமெண்ட்(இந்த நொடியை மட்டும் வாழ்) இதை மட்டும் செய் வாழ்க்கை தன்னால உன்னை வழி நடத்தும். எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது. எது நடக்கிறதோ அதுவும் நன்றாகவே நடக்கிறது. எது நடக்க இருக்கிறதோ அதுவும் நன்றாகவே நடக்கும். கடைசியில என்னையும் இந்த அர்த்த ராத்திரியில பிளோஸப்பி பேச வெச்சிட்டயே வண்ணா" என்று அவள் சலித்துக்கொள்ள வண்ணனோ ஆழ்ந்த யோசனையில் சென்றான்.

"வண்ணா, நீ இருக்கியா? முழிச்சிருக்காம முதல தூங்கு"

"சரு, இவ்வளவு நாள் நான் தூங்கிட்டு தான் இருந்தேன். இப்போ தான் முழிச்சே இருக்கேன்..."

"ஹேங்???" என்று சரிதா குழம்ப,

"தேங்க்ஸ் டி. காலையில பார்க்கலாம்" என்று அழைப்பைத் துண்டித்தவன் ஆழ்ந்த யோசனைக்குச் சென்றான்.

மறுநாள் காலையில் வெள்ளிமலைக்குச் சென்றவன் கிரிஜாவைக் கண்டவன் துளியும் யோசிக்காமல் அவரை நெருங்கி இறுக்கி அணைத்துக்கொண்டான். சில நிமிடங்கள் வரை நீண்ட இந்த அணைப்பு ஏனோ தாய்க்கும் மகனுக்கும் இடையே நிலவி வந்த மனக்கசப்புகள் அனைத்தையும் கொஞ்சம் கொஞ்சமாக துடைத்தெறிந்து கொண்டிருந்தது.
அப்போது அங்கே வந்த சரிதா அவர்களைக் கண்டு ஒருகணம் ஆனந்த அதிர்ச்சியில் உறைந்தவள் அவர்களைத் தொந்தரவு செய்யாமல் விலகிய நிற்க, அப்போது சூர்யா கிரிஜாவை "பாட்டி பாட்டி" என்று அழைத்தவாறு வந்தான்.

கிரிஜாவை விட்டு விலகியவன்,"அம்மா நான் குளிச்சிட்டு வரேன். எனக்கு பயங்கரமா பசிக்குது. சாப்பிட்டு நிறைய வேலை இருக்கு. வெளிய போகணும்..." என்று உள்ளே சென்றுவிட கிரிஜாவுக்கு தன் ஆறு வயது மகன் திரும்ப கிடைத்ததில் ஒரு நெகிழ்ச்சி உண்டானது.

சூர்யாவைத் தொடர்ந்து சரிதாவும் வீட்டிற்குள் நுழைந்தாள்.

"பாட்டி, அம்மா ஆப்பம் செய்யுறாங்களாம். உங்கள எதுவும் செய்ய வேண்டாம்னு சொல்லச் சொன்னாங்க" என்று சொல்லிவிட்டு ஓடி மறைந்தான்.

இத்தனை வருடங்களில் கிரிஜாவின் முகத்தில் தான் காணாத ஒரு நிறைவையும் மகிழ்ச்சியையும் கண்ட சரிதா,

"என்னம்மா பையன் வந்ததுல அவ்வளவு சந்தோசம் போல? உங்க முகமே காட்டிக்கொடுக்குதே?" என்று செல்லமாக வம்பிழுத்தாள்.
மிகச் சமீபமாக வண்ணனுடன் சரிதாவுக்கு இருக்கும் நெருக்கத்தை அறிந்திருந்த கிரிஜா எதையும் மறைக்காமல் நேற்று நடந்ததையும் இப்போது நடந்ததையும் தெரிவித்தார்.

"அவன் ஏன் உங்களை ஹக் பண்ணுனான் தெரியுமா?"
கிரிஜா அதற்கு பதில் யோசிக்காமல் அவளின் பதிலுக்காகவே காத்திருந்தார்.

"நேத்து நீங்க அவன்கிட்ட ஒரு கேள்வி கேட்டீங்க இல்ல? அதுக்கான பதில் தான் இந்த ஹக். அவனுக்கு உங்களை ரொம்ப பிடிக்கும். அதையே அவன் இப்போ தான் உணருறான். இனி பாருங்க அடிக்கடி கமலஹாசன் மாதிரி கட்டிப்புடி வைத்தியம் தான். அண்ட் உங்க மகன், நீங்க எப்படியெல்லாம் இருக்கணும்னு ஆசைப்பட்ட உங்க மகன் உங்களுக்குக் கிடைச்சிட்டான். சாயந்திரம் நானே உங்களுக்குச் சுத்திப் போடுறேன். இப்போ எனக்கு வேலைக்கு டைம் ஆச்சு. வரேன்" என்று அவள் புறப்பட்டுவிட்டாள்.
குளித்து வந்தவனுக்கு சூடாக ஆப்பமும் தேங்காய்ப்பாலும் தயாராக இருக்க அதை ஒரு பிடிபிடித்தவன்,

"அம்மா, தூரிகா யாரோ வரதராஜன்னு ஒருத்தரைப் பத்திச் சொன்னாங்க இல்ல? நான் போய் இன்னைக்கே அவரை மீட் பண்ணிட்டு வரேன். தூரிகா ஃப்ரீயா தானே இருப்பாங்க?" என்று மணியைப் பார்த்தான்.

"என்ன என் பேர் அடிபடுது?" என்று உள்ளே வந்த தூரிகா கிரிஜாவின் முகத்தையும் வண்ணனின் முகத்தையும் பார்த்ததுமே சரிதா சொன்னதன் பொருள் விளங்கிவிட,

"ஆப்பம் எப்படி இருந்தது அத்த?" என்று கேட்டவளுக்கு,

"செமயா இருந்தது தூரிகா. அந்தத் தேங்காய்ப்பாலோட டேஸ்ட் அதிலும் அந்த ஏலக்காய் சுவை என் நாக்குலேயே நர்த்தனம் ஆடுது..."
என்னதான் அவனுக்கும் அவளுக்குமான வாய்க்கால் தகராறு முடிந்திருந்தாலும் அவனது இவ்வளவு எதார்த்த பதிலை அவள் எதிர்பார்க்கவில்லை. அதில் அவள் உறைந்து நிற்க,

"உங்களுக்கு எதுவும் வேலை இல்லையே. கொஞ்சம் என்கூட வந்து என் வேலைக்கு ஒரு சிபாரிசு செஞ்சிட்டுப் போறது..." என்று அவன் கேட்ட தொனி தூரிகாவுடன் சேர்த்து கிரிஜாவுக்கு (ஏன் உங்களுக்கும்?) ஆச்சர்யம் கொடுத்தது.

இது வரை இருந்த கோட்டையெல்லாம் அடித்துவிட்டு புதியதாக பரோட்டா சாப்பிட ஆரமித்துள்ளான் வண்ணன்.

அவனது கேள்வியில் ஒருகணம் உறைந்து போன தூரிகா கண்ணிமைக்காமல் அவனையே பார்க்க அவள் எண்ணவோட்டங்களை எல்லாம் படித்த கிரிஜா தான்,

"என்னடா தூரி இப்படி சிலையாகிட்ட? என் பையனுக்கு ஒரு வேலை வாங்கித் தரமாட்டியா?" என்று கிண்டலாக வினவினார் கிரிஜா.
அதில் தன்னிலை அடைந்தவள் இல்லை என்பதைப்போல் தலையாட்ட,

"அப்போ சிபாரிசு செய்ய மாட்டிங்களா? உங்களை நம்பி இருந்த வேலையை வேற விட்டுட்டேனே? கப்பல்ல வேலை வாங்கித்தரதா சொன்ன செந்தில் பேச்சைக் கேட்டு இருந்த வேலையை விட்ட கவுண்டமணி போல என் நிலைமை ஆகிடுச்சே? இப்போ நான் மீண்டும் சஞ்சீவி கன்ஸ்ட்ரெக்சன்ஸ் போனா என்னை வாட்ச் மேனா கூட அங்க சேர்த்துக்க மாட்டாங்களே? அப்போ என் நிலைமை?" என்று பரிதாபக் குரலில் வண்ணன் பேசவும் அப்படியொரு நிலையில் வண்ணன் மீண்டும் அங்கு சென்றால் அவன் நிலை எவ்வாறு இருக்கும் என்று எண்ணிப் பார்க்கையில் கிரிஜா மற்றும் தூரிகா இருவருக்கும் அவர்களையும் மீறி சிரிப்பு வெடித்தது. நீண்ட நாட்கள் கழித்து அவ்விரு பெண்மணிகளும் மனம் விட்டுச் சிரித்தனர். அவர்களின் சிரிப்புச் சப்தம் கேட்டு தேனு மற்றும் அரசி இருவரும் வீட்டிற்குள் வந்துவிட எதிர்வீட்டுத் திண்ணையில் இருந்த சரவணனுக்கும் தன் மகளின் ஆத்மார்த்தமான சிரிப்பின் சப்தம் 'சஹானா' ராகமாய் அவர் செவிகளைத் தீண்டியது. (சஹானானு சொன்னதும் யாரும் கீர்த்தனை அப்டேட் கேக்க கூடாது. கேட்டாலும் கிடைக்காது அது வேற விஷயம் ?)

உள்ளே வந்தவர்களுக்கு ஆச்சர்யம் பிடிபடவில்லை. கிரிஜாவும் தூரிகாவும் தங்களை மறந்து சிரித்துக் கொண்டிருக்க அவ்விருவரின் அந்தச் சிரிப்பிற்குக் காரணமானவனோ நடுநாயகமாக அவர்களைச் செல்லமாக முறைத்துக் கொண்டிருந்தான். என்ன தான் தங்கள் வாழ்க்கையில் இருக்கும் சோகங்களையும் கஷ்டங்களையும் வெளிகாட்டிக்கொள்ளாமல் இருந்தாலும் கிரிஜா மற்றும் தூரிகா ஆகியோரின் இத்தனை வருட மனப்போராட்டங்களை அவர்கள் இருவரும் நன்கு அறிவார்களே!

"கூப்பிட்டுருந்தா நாங்களும் சிரிச்சிருப்போமில்ல?" என்று வண்ணனைச் சீண்டினார் தேனு.

"ஏன் கேக்க மாட்ட பெரிம்மா? என்னை வெச்சு இதுங்க ரெண்டும் காமெடி பண்ணிட்டு இருக்குங்க. நீயாச்சும் எனக்கு சப்போர்ட்டா பேசுவேன்னு பார்த்தா நீயும் இவங்க கூடச் சேர நெனக்கறியா?" என்ற வண்ணன் நிஜத்திலும் தன் மனதிலிருந்த பாரங்களில் பெருமளவை இறக்கி வைத்ததைப் போலவே உணர்ந்தான். ஜெயசீலன் இருந்த வரை அவ்வபோது இதுபோல் ஏதாவது சொல்லி தன்னையும் தன் அன்னையையும் சிரிக்க வைத்துவிடுவார். வாழ்க்கையை ஒரு பொதி மூட்டையாக உணரும் பலருக்கு மத்தியில் அதை ஒரு கோழி இறகாக மட்டுமே எண்ணி அதை முன்னே பறக்க விட்டு அதன் பின்னே ஓடித் திரிந்தார் ஜெயசீலன். அவருக்கு எல்லாமே ஒரு இறகைப் போன்றது தான். கவலைகளை சோகங்களை நேற்றுகளை நாளைகளை என்று பல 'களை'களை தன்னுடன் சேர்த்து வைக்காமல் இன்று இந்த நிமிடம் என்று மட்டுமே பயணித்த ஒரு ஜீவன் அவன் தந்தை. ஆனாலும் அவன் தந்தையைப் பற்றி இன்று நினைக்கையில் அவனால் முழுவதும் மகிழ முடியவில்லை.
அவரோ தன் வாழ்க்கை என்னும் நந்தவனத்தில் ரோஜாக்களை மட்டுமே பறித்துக் கொண்டிருந்தார். அந்த ரோஜாக்களை அவர் சிரமமில்லாமல் பறிக்க அதன் முட்களை தன் கரம் கொண்டு பிடித்துக் கொண்டிருந்தது தன் மனைவி தான் என்னும் உண்மையை அவர் வாழ்நாளில் உணராமலே சென்று விட்டார். விளைவு, முட்கள் கிழித்து குருதி வழிய நின்ற தன் அன்னை மீண்டும் அந்த ரோஜாக்களைப் பறிக்க எவ்வளவு சிரமப்பட்டார் என்று வண்ணனே இப்போது தான் உணருகிறான். இத்தனை வருடங்களாக தான் அணிந்து வந்த ரோஜா மாலையில் தன் அன்னையின் குருதிகளும் ஒளிந்திருக்கிறது என்று தாமதமாகவே உணர்ந்துகொண்டவனால் எப்படி அந்த மாலை அணிந்த நிகழ்வுகளை எல்லாம் எண்ணி மகிழமுடியும்?
இப்போது ஆழ்ந்த யோசனைகளுக்குச் சென்ற வண்ணன் தன்னைச் சுற்றி என்ன நடக்கிறது என்று புரியாமல் இருக்க தங்களுக்குள் ஏதோ பேசிக்கொண்டிருந்தவர்கள்,

"என்ன ராசா நான் சொல்றது சரிதானே?" என்று கேட்ட தேனுக்கு என்னவென்றே தெரியாமல் தலையசைத்தான். அவன் யோசனைகளில் இருந்த நிமிடம் அங்கு வந்த அரசி,

"அக்கா, நீங்க சந்தோசமா இருக்குறத பார்க்கவே எங்களுக்குச் சந்தோசமா இருக்கு. இந்த சந்தோஷத்தோடவே நம்ம வண்ணனுக்கு ஒரு கல்யாணத்தையும் முடிச்சிட்டா எல்லாமே சரியாகிடும் க்கா..." என்று சொல்ல,

"சரியா சொன்ன அரசி. எல்லாம் காலாகாலத்துல செஞ்சிடனும் தாயி. புள்ளைக்கும் வயசாகிட்டே போகுதுல்ல?" என்ற தேனு அப்போது தான் வண்ணனிடம் மேற்சொன்ன கேள்வியைக் கேட்டுவிட அவனும் புரியாமல் தலையாட்டி வைத்தான்.

வண்ணனின் தலையாட்டுதல் கிரிஜாவுக்கு ஆனந்த அதிர்ச்சியைக் கொடுத்தது. அவனுக்கு ஒரு திருமணத்தை முடித்தால் தன் கடமை முடிந்தது என்று எல்லா சராசரி பெற்றோர்களைப் போலே அவரும் பலசமயம் நினைத்ததுண்டு. அதற்குள் தான் நிஹாவைப் பற்றி அவரிடம் சொல்லி என்ன என்னவோ நிகழ்ந்துவிட்டது.

இப்போது கிரிஜா அரசி தேனு மூவரும் அர்த்தத்துடன் தங்களை ஒருமுறை பார்த்துக்கொள்ள தூரிகாவோ சம்மந்தமில்லாமல் அந்த இடத்தில் தான் இருப்பதாய் உணர்ந்து,

"சரி அத்தை நான் கடைக்குப் போறேன். போட்டது போட்டபடியே இருக்கு..." என்று அவள் நாகரிகமாக நகர,

"தூரி நாம எப்போ கிளம்பறது?" என்ற வண்ணனின் கேள்வி அவளை நிறுத்த,

"பத்தரை பன்னண்டு ராகு காலம். முடிஞ்சதும் கிளம்பலாம். மதியம் அவர் ரெஸ்ட் எடுக்க போயிடுவார். இன்னைக்கு நாளும் நல்லா இருக்கு. நான் போய் வேலையெல்லாம் முடிச்சிட்டு ரெடி ஆகிடுறேன்..." என்று அவள் சென்றுவிட்டாள்.

இங்கே வரும் வரை, ஏன் வந்த பின்னும் கூட, கண்களால் செவிகளால் பேச்சுக்களால் அவள் மனதில் பதிந்திருந்த வண்ணனின் பிம்பம் முற்றிலும் வேறுபட்டிருந்தது. பெயரளவில் மட்டுமே தன்னுடன் வண்ணங்களைக் கொண்டிருந்தவன் இப்போது உண்மையிலும் தன் மீது வண்ணங்களைப் பூசி சற்று வண்ணமயமாகவே காட்சியளிக்கிறான். கருப்பு வெள்ளைகளால் நிறைந்திருந்த போது அவனை ரசிக்க விரும்பாதவளையும் தன் வண்ணம் என்னும் பரிமாணத்தில் மிளிரத் தொடங்கியதும் அவளையும் ஒருகணம் நின்று ரசிக்குமளவிற்கு மாற்றிவிட்டானே என்று எண்ணி தனக்குள் குழம்ப ஆரமித்து விட்டாள். ரெகார்டஸ் ஆர் மேட் டு பி ப்ரொக்கன்(சாதனைகள் நிகழ்த்தப்படுவதே முறியடிக்கப் படுவதற்காகத்தானே) என்னும் சச்சின் டெண்டுல்கரின் வாசகத்தை மெய்ப்பிக்கும் வகையில் சூர்யா தான் தன் வாழ்க்கை என்றிருந்தவளுக்குள் சலன விதைகளை சப்தமே இல்லாமல் தூவிச் சென்றுவிட்டான் வண்ணன். விதைப்பதே அறுவடைக்காகத்தானே? ஆனால் விதைக்கப்பட்டதையெல்லாம் அறுவடை செய்யவும் முடியாதன்றோ?

சில வினாடிகள் தான் இந்த எண்ணங்கள் அவள் மனதில் ஓடியது. தன் கடைக்குச் சென்றவளுக்கு அவள் முன்னிருக்கும் வேலைகள் எல்லாம் அவளது தற்போதைய எண்ணங்களை எல்லாம் பின்னுக்குத் தள்ளி ஒரு கட்டத்தில் அவை இருந்ததற்கான எச்சங்களே இல்லாமல் துடைத்தெறியப்பட்டிருந்தது.

அதன் பின் கடிகார முட்கள் மாரத்தான் ஓடி பனிரெண்டே காலுக்குத் தான் தன் ஓட்டத்தை நிறுத்தியது. வண்ணனும் அதற்குள் தயாராய் அவள் கடைக்கு வந்துவிட பத்து நிமிடத்தில் தன்னைத் தயார் படுத்திக்கொண்டவள் அவனுடன் புறப்பட சித்தமானாள்.
வண்ணனின் பைக்கை அவன் இங்கே எடுத்துவந்திருக்க அதிலே சென்றுவிடலாம் என்றவனுக்கு ஒரு புன்னகையைப் பரிசளித்தவள்,

"இங்க தான் இருக்கு. பஸ் வர நேரமும் ஆகிடுச்சு..." என்றவளின் தயக்கம் அவனுக்குப் புரியுமளவிற்கு வண்ணன் பரிணாம வளர்ச்சியடைந்து இருந்தான் என்றால் அது மிகையில்லை?.

அதன் பின் வரதராஜனின் வீட்டிற்குச் சென்றவர்கள் அந்த வீட்டின் முற்றத்தில் இருந்த ஒரு அறையிலிருந்து ஒலித்த குரலில் சற்று துள்ளி விழுந்தார்கள்.

"வா மா தூரிகா. இப்போ தான் இங்க வரணும்னே உனக்குத் தோணுச்சா?" என்றார் அவர்.

"ஐயோ அப்படி இல்ல சார். என் பொழப்பு என்னனு உங்களுக்கே தெரியும். காலையில கடை சாயங்காலம் கோவில்னு அப்படியே போகுது. அதான் வர முடியல..." என்றவள் எப்படி பேச்சை ஆரமிப்பது என்று தடுமாறினாள்.

"வாங்க என்ஜினீயர் சார். யு ஆர் மோஸ்ட் வெல்கம் யங் மேன். இப்போ உங்க உடல்நிலை எல்லாம் தேறிடுச்சா?" என்று அவனைப் பற்றி அறிந்தவராகவே அவர் வினவ,

வண்ணன் புரியாமல் தூரிக்காவைப் பார்க்க அன்று அவனைப் பற்றி அவரிடம் தெரிவித்ததை எல்லாம் நினைவு படுத்தினாள் தூரிகா.

"சார் அது ஒரு ஹெல்ப். நீங்க அன்னைக்கு ஒன்னு கேட்டீங்க இல்ல?" என்று தூரி தயக்கத்துடன் ஆரமிக்க,

"என்ன யங் மேன் சஞ்சீவி கன்ஸ்ட்ரெக்சன்ஸ்ல இருந்து விலக்கிட்டீங்களா?" என்று அவர் கேட்ட விதமே அவனை நெகிழ்ச்சியடைய செய்தது. பின்னே,"உன்னை வேலையை விட்டுத் தொரத்திட்டாங்களா?" என்று கேட்பவர்களுக்கு மத்தியில் அவரது இந்தக் கேள்வியே அவனுக்கு நிறைவளிக்க,

"எஸ் சார். ஐ க்விட். பணம் எப்போ வேணுனாலும் சம்பாதிச்சிக்கலாம். ஆனா ஆரோக்கியம் மனநிம்மதி இது எல்லாம் திரும்ப கிடைக்காது. அப்படியே கிடைச்சாலும் அது உடைஞ்ச கண்ணாடியாவே நம்ம கண்ணை உறுத்திட்டே இருக்கும்..."

"சபாஷ்! மனுஷனுக்கு இந்தத் தெளிவு வந்துட்டாலே போதும். அவன் கரை சேர்ந்திடுவான். சுவரிருந்தா தானே சித்திரம் வரைய முடியும். சுவரை உடைஞ்சி தான் சித்திரம் வரைஞ்சிட்டு இருக்கோம்னே இங்க பலருக்குப் புரியறதில்லை. யு ஆர் அப்பாயிண்ட்டெட் ஆன் ஒன் கண்டிஷன்..." என்று அவர் நிறுத்த வண்ணனுக்கு அவரது இந்த அணுகுமுறையும் பேச்சும் மகிழ்ச்சியளிக்க இறுதியாக அவர் சொன்ன கண்டிஷன் என்ற வார்த்தை அவனை யோசிக்க வைத்தது.

"அங்க என்ன உங்களுக்கு ஒரு எண்பதாயிரம் கொடுத்திருப்பாங்களா? என்னால அவ்வளவு அஃபோர்ட் பண்ண முடியாது. தேர்ட்டி டு தேர்ட்டி ஃபைவ் அவ்வளவு தான் என்னால முடியும். நைன் டு ஃபைவ் அப்படினு ஒரு ஃபிக்சட் நேரம் கிடையாது. வேலையைப் பொறுத்து நேரம் மாறும். எல்லாத்தையும் விட முக்கியம், என் கட்டிடம் தி கிரேட் பாத், பிரமிட், மஹாபலிபுரம், தஞ்சை பெரிய கோவில் மாதிரி காலத்தைக் கடந்து நிற்கணும். என் லட்சியம் பேராசை தான். குறைஞ்சது பிரிட்டிஷ் கால கட்டிடங்கள் போலவாச்சும் இருக்கனும். இட் ஹேஸ் டு ஸ்டேண்ட் அகைன்ஸ்ட் தி டைம் (காலத்தைக் கடந்து நிற்க வேண்டும்). அதை விட்டுட்டு குழந்தைங்க கட்டுற மணல்வீடு மாதிரி நம்ம அரசியல்வாதிங்க கட்டுற பாலம் மாதிரி அன்னைக்கே உடையும் கட்டிடம் ஆகக் கூடாது. நான் சொல்ல வரது புரியுது தானே? என்கிட்ட பிளான் கேட்டு வரவங்க அதை வெறும் பிளானா மட்டும் பார்த்திடக் கூடாது. இங்க ஒரு வீடுங்கறது பலரோட பலவருஷ கனவு. உழைப்பு. அவங்க நம்பிக்கையை நாம என்னைக்கும் காப்பாத்தணும். புரியுதா?" என்று தன்னுடைய டேர்ம்ஸ் அண்ட் கண்டிசன்ஸை இரத்தின சுருக்கமாக அவனுக்குப் புரியவைத்தவர் அன்றே அவனைப் பணியில் இணைத்துக்கொண்டார்.
தான் வந்த வேலை முடிந்தது என்றதும் அவனுக்கு 'ஆல் தி பெஸ்ட்' என்று சொல்லிவிட்டு அங்கிருந்து விடைபெற்ற தூரிகாவைக் கண்டவன்,

"சார் ஒரு டூ மினிட்ஸ்" என்று அவரிடம் சொல்லிவிட்டு வெளியேறியவன் வேகமாக அவளைக் கடந்து அவளை வழிமறித்தான்.

"என்னாச்சு? எதையாவது மறந்துட்டீங்களா?" என்றவளுக்கு ஆமாம் என்று தலையசைத்தான்.

"எதை?"

"இதோ" என்றவன் நொடியும் தாமதிக்காமல் அவளை அணைத்தவன்,

"தேங்க்ஸ் அப்படிங்கறது ரொம்ப சின்ன வார்த்தை தூரிகா. நான் வந்த வேலை இவ்வளவு சீக்கிரம் முடியும்னு நான் துளியும் நினைக்கல. இருந்தாலும் சொல்றேன், தேங்க்ஸ் ஃபார் எவெரிதிங்..." என்றவனுக்கு அப்போது தான் அவன் செய்கையின் அர்த்தமே விளங்க அவசரமாக அவளை விட்டு விலகியவன் அவளை ஏறெடுத்துப் பார்க்க முடியாமல் தடுமாற அவன் நிலை அறிந்தவள்,

"அத்தையும் நீங்களும் எனக்குச் செஞ்சதுக்கு செய்யுறதுக்கு முன்னாடி இதெல்லாம் ஒண்ணுமே இல்ல வண்ணா. சேலரி பத்தி யோசிக்காதிங்க. இங்க பிடிச்ச வேலையைச் செய்யும் பாக்கியம் எல்லோருக்கும் கிடைக்குறதில்லை. ஜஸ்ட் கிராப் இட்..." (பிடித்துக்கொள்ளுங்கள்) என்றவள் அங்கிருந்து நகர்ந்தாலும் அவள் எண்ணமெல்லாம் வண்ணனின் எதிர்பாரா அந்தச் செயலிலே உறைந்துபோனது.

(மழை வருமோ?)
 
அடடா நல்லவனா ஆனாலும் ஆனான் இவ்வ்வ்வளவு நல்லவன் ஆகிருக்க வேணாம்.....டக்கு டக்குனு கட்டிப்பிடிக்கிறானே ???


நிஹாரிகா பாஸ்ட், சரிதா பெஸ்ட் பிரண்ட், தூரிகா தான் பெட்டர் ஹாப் கரெக்ட்டா ??
 
Top