Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மழைக்கால மேகங்கள்!- 17

Advertisement

praveenraj

Well-known member
Member
மழைக்கால மேகங்கள்!- 17

தன்னுடைய செய்கையை எண்ணிப் பார்க்கையில் அவனுக்கே ஒரு தயக்கமும் குழப்பமும் வந்து சென்றது. நம் வாழ்க்கை தான் எவ்வளவு விசித்திரம் நிறைந்தது. ஒருவரைப் பற்றி நாம் அறிந்துகொள்ளும் முன்னமே நாம் அவர் மீது வைக்கும் தவறான அபிப்ராயயங்கள் அனைத்தும் சுக்குநூறாக நம் கண் முன்னே உடையும் வேளையில் இப்படிப்பட்டவருடனா இத்தனை நாட்கள் குரோதம் கொண்டு வீண் பிடிவாதம் கொண்டு வெறுத்து ஒதுக்கி வைத்திருந்தோம் என்றும் இவருடன் முன்பே ஒரு நல்லுறவை ஏற்படுத்தி இருக்குமாயின் இந்நேரம் நம் வாழ்வில் எவ்வளவு தென்றல் வீசியிருக்கும் என்ற மெய் ஞானம் மிகுந்த காலத் தாமதமாகவே நம்மை வந்தடையும். அப்படியொரு நிலையில் தான் வண்ணனும் இருந்தான்.

எந்த வாழ்க்கை முறைக்குள் தான் சிக்கிக்கொள்ளவே கூடாது என்று பயந்து ஓடினானோ இன்று அந்த வாழ்க்கை முறையையே விரும்பி அணுவணுவாய் ரசித்துக்கொண்டிருக்கிறான். ஆடம்பரம் பகட்டு நிறைந்த போலியான நகர(ரக)த்து வாழ்க்கையைக் காட்டிலும் எளிமையும் அமைதியும் நிறைந்த இந்தக் கிராமத்து வாழ்க்கை அவனுக்கு மிகவும் பிடித்துப் போனது. இங்கு போலிகள் இல்லை வேஷங்கள் இல்லை. தான் எவ்வளவு சம்பாதிக்கிறோம் என்பதை அடுத்தவர்களுக்கு உணர்த்தும் அவசியம் துளியும் இல்லை. மதுவை விட்டே இரண்டு மாதங்கள் ஆனதாலும் முன்பைக் காட்டிலும் சற்று உடல் எடை குறைந்த காரணத்தாலும் உடலாலும் உள்ளத்தாலும் அவனுக்குள்ளே ஒரு பாரம் குறைந்ததை அவன் நன்கு உணரத்தொடங்கி இருந்தான்.
மீண்டும் உள்ளே சென்றவனுக்கு அவருடன் பணிபுரியும் இருவரை அறிமுகப்படுத்தினார் வரதராஜன்.

"வண்ணன் மீட் மிஸ்டர் சாதிக் அண்ட் மிஸ் ரித்திகா. இது கிருஷ்ணன் நம்ம ஆபிஸ்ல அட்டெண்டர் ஆபிஸ் பாய் எல்லாமே இவர் தான். சாதிக் அண்ட் ரித்திகா ரெண்டுப் பேரும் எனக்கு பிளானிங்ல ஹெல்ப் பண்ணுவாங்க. நாம எந்த கஸ்டமரையும் தேடிப் போக வேண்டிய அவசியமில்லை. அவங்களாவே நம்மைத் தேடி வந்திடுவாங்க. அது போக நாம ப்ளூபிரிண்ட் கொடுக்கறதோட நம்ம வேலை முடிஞ்சது. கன்ஸ்ட்ரெக்சன்ஸ்ல நாம தலையிடுறது இல்ல..." என்று நீண்ட விளக்கத்தைக் கொடுத்து முடிக்கும் முன்னே 'ஏன்' என்ற பாவனையை வண்ணன் வெளிப்படுத்தினான்.

"அதுக்கு ரெண்டு காரணங்க. முதல என் வயசுக்கு கன்ஸ்ட்ரெக்சன்ஸை எல்லாம் பார்த்துக்க முடியாது. ரெண்டாவது இன்னைக்குச் சூழ்நிலைக்கு காண்ட்ரேக்டர்ஸ் கூட மல்லுக்கட்டி அவங்களை வெச்சு தொழில் பண்ணுற அளவுக்கு எனக்கு பொறுமையும் இல்ல சகிப்புத்தன்மையும் இல்லை. ஆனா என்னைத் தேடி வரவங்க கிட்ட நான் எல்லாத்தையும் தெளிவா சொல்லிடுவேன். இந்த சிமெண்ட் இந்த ஜல்லி இந்த பொருட்கள் எல்லாம் வெச்சு கட்டினா அது இவ்வளவு வருஷம் உறுதியா இருக்கும், இல்லைனா வீட்ல கனவு மெய்ப்பட வேண்டும்னு பாரதி வாசகத்தை வேணுனா வீட்டுல ஒட்டி மனதில் உறுதி வேணுங்கற வாசகத்தை வாழ்க்கையா சுவாசிக்கணும்னு சொல்லிடுவேன்..." என்றவர் மென்மையாகப் புன்னகைக்க வண்ணனுக்கு அவரொரு வியத்தகு விசித்திரமாகவே விளங்கினார்.

அவன் வேலை செய்த சஞ்சீவி கன்ஸ்ட்ரெக்சன்ஸ் என்னதான் கட்டுமான துறையில் ஒரு அரசனாகவே விளங்கினாலும் லாபமே அவர்களின் பிரதானமாக இருந்தது என்ற உண்மையை அவன் நன்கு அறிவான். அதுவே கார்பரேட்களின் தாரக மந்திரம். நூற்றாண்டுகள் கடந்து தங்கள் கட்டிடங்கள் உயிர்ப்புடன் இருக்க வேண்டும் என்ற ஆசை எல்லா நிறுவனத்திற்கும் இருந்தாலும் நோய்கள் உள்ள வரை தான் மருத்துவர்களுக்கு வேலை, குற்றங்கள் நடைபெறும் வரை தான் காவல்துறைக்கும் நீதித் துறைக்கும் வேலை என்ற வாழ்க்கை முரண் இங்கேயும் பொருந்திப்போகும் அல்லவா? ஆண்டவர் ஸ்டைலில் சொன்னால்,'தப்புகள் இல்லையென்றால் தத்துவம் இல்லையடா தத்துவம் வளரட்டுமே தப்பு செய்யேண்டா' எனலாம்.

அன்று மாலை சரிதாவுக்கு அழைத்தவன்,

"என்ன டீச்சர் மேடம் இப்போவாச்சும் பேசலாமா?" என்று வம்பு இழுத்தான். வேலை கிடைத்ததும் அவளுக்கு அழைத்து விஷயத்தை தெரிவிக்க விரும்பியவனுக்கு 'பிசி. டெக்ஸ்ட் மீ' என்றவளின் பதில் சற்று ஏமாற்றம் அளித்தாலும் அவளுடைய சூழ்நிலை என்னவோ என்ற 'எம்ப்பதி' (empathy- அடுத்தவர்களின் மனதை புரிந்துகொள்ளும் நிலை) அவனுக்குள் அதிகம் வந்திருந்தது.

"ரொம்ப சாரி அண்ட் ரொம்ப ரொம்ப சந்தோசம் வண்ணா. ஹேப்பி ஃபார் யூ. யூ டிசர்வ் தி பெஸ்ட்..." என்று அவள் முடிக்கும் முன்னே,

"கண்டிப்பா. இல்லைனா என் வாழ்க்கையில நீ, தூரிகா எல்லாம் வந்திருக்கவே மாட்டீங்களே!"

"அப்பப்பப்பா! ஏற்கனவே ஜலதோஷம் இருக்கு. என்னைப் படுக்க வெச்சிடாத டா. ஹாஸ்பிடல்க்கும் வீட்டுக்கும் அப்பறோம் அலைய முடியாது..." என்று அவள் சொல்ல,

"எல்லாம் என் டையம் டி. என் டர்ன் வருமில்ல அப்போ பார்த்துக்கறேன்" என்று செல்லமாகவே ரிவெஞ் எடுத்தான்.

"பிடிச்சிருக்கா வண்ணா? நீ யாருக்காகவும் எதுக்காகவும் இந்த முடிவெடுக்கல தானே? ஏன்னா ஆயிரம் பேருகிட்ட ஒப்பீனியன் கேக்கலாம். அது தப்பில்லை. ஆனா முடிவு நம்முடையதா தான் இருக்கனும். நாளைக்கு அடுத்தவனை குறை சொல்லக் கூடாது. ஹோப் யூ அண்டர் ஸ்டேண்ட்..." என்று அவள் நிறுத்த,

"எப்படி டி நீங்க எல்லாம் இப்படி இருக்கீங்க? ஐ மீன் இந்த வயசுல எனக்கில்லாத இந்தத் தெளிவு என்னை விட சின்ன பொண்ணுங்களா இருக்க உங்களுக்கு எப்படி வந்தது? இவ்வளவு வருஷம் என்ன வாழ்க்கை வாழ்ந்தோம்னு நினைக்கும் போது ஒரே அவமானமா இருக்கு..."

"வண்ணா, நீ உன் வாழ்க்கையில எந்தக் கஷ்டத்தையும் பார்க்காம வளர்ந்தவன். அப்படிச் சொல்றதைக் காட்டிலும் பார்க்க விடாம வளர்க்கப்பட்டவன். நீ இதுக்காகவே உன் அம்மாவுக்கு நன்றிக்கடன் பட்டிருக்க. நாங்க அப்படியில்ல. சரி அதெல்லாம் இப்போ எதுக்கு? இப்போ டைம் டு செலிப்ரேஷன். ட்ரீட் எப்போ கொடுக்குற? எனக்கெல்லாம் வெயிட்டா எதாவது வேணும்?"

"வீட்ல எட்டு கிலோ டம்பெல்ஸ் இருக்கு. அது போதுமா இல்லை இன்னும் வெயிட்டா வேணுமா?" என்று சிரித்தான் வண்ணன்.

"ஓ! இப்படியெல்லாம் ஜோக் அடிப்பேன்னு ஒரு வாரத்துக்கு முன்னாடியே இன்டிமேட் பண்ணா தானே நாங்களும் இதுக்கு சிரிக்க கொஞ்சம் தயாராகுவோம்..." என்று அவள் சொன்ன தொனியில் வண்ணனுக்கு கோவம் வந்தது.

"சரி அதெல்லாம் விடு. சின்ன வயசுல நான் படிச்ச பழமொழி உண்மை தான் போல..." என்று பொடி வைத்தாள் சரிதா.

"என்ன பழமொழி?"

"அடிக்கிற கை தான் அணைக்குமாம்" என்று சொல்லி ஒரு நமட்டுச் சிரிப்பை அவள் உதிர்க்க அது வண்ணனின் செவிகளில் தெளிவாக விழுந்தது.

"கிட்ட இல்லைங்கற தைரியத்துல நீ வாய்க்கு வந்ததெல்லாம் பேசுற? சாயுங்காலமே உனக்கு பனிஷ்மென்ட் காத்திருக்கு..." என்றான்.

"வண்ணா, நான் ஒன்னு கேப்பேன். எனக்கு உண்மையான பதில் வேணும்..."


"கேளு"

"டூ யு ஸ்டில் லவ் நிஹாரிகா?"

ஏனோ இந்தக் கேள்வியை வண்ணன் எதிர்பார்க்காததால் அவன் திகைக்க,

"என்ன பதிலே காணோம்? எஸ் ஆர் நோ?"

"இப்போ எதுக்கு இந்தக் கேள்வி?"


"காரணம் இருக்கு. நீ பதில் சொல்லு"

"கிடைக்காதுங்கற உண்மை என் மூளைக்குப் புரிஞ்சாலும் மனசு இன்னும் முழுசா வெளி வரல. ஆனா வந்திடும். ஆப்டர் ஆல் லைஃப் ஹேஸ் டு மூவ் ஆன். அப்பா இல்லாத ஒரு வாழ்க்கையை ஒரு உலகத்தை நானோ அம்மாவோ நெனச்சுக் கூடப் பார்த்ததில்லை. ஆனா இன்னைக்கு எட்டு வருஷத்துக்கு மேல ஆகிடுச்சு. இதுவே சாத்தியங்கற அப்போ..." என்று வண்ணன் கோடிட்ட இடங்களை விட அதை அவன் சொல்லாமலே நிரப்பிக்கொண்டாள் சரிதா.

"வாழ்க்கையில எல்லாம் கிடைச்சிட்டா மேற்கொண்டு ஆசைப்படவே தோணாது. சில வலிகள் சில தோல்விகள் சில ஏமாற்றங்கள் சில அவமானங்கள் இது தான் நம்மை வெற்றி புகழ் இதையெல்லாம் நோக்கி ஓடவே வைக்கும். என் அம்மா செஞ்ச தப்பு என்னையும் என் அப்பாவையும் என் குடும்பத்தையும் எங்க ஊரை விட்டு ஓட வெச்சது. அவங்களை வெச்சு என்னை யாரும் ஜட்ஜ் பண்ணிடக் கூடாதுங்கற அந்த வைராக்கியம் தான் என்னை இன்னைக்கு இந்த நிலைக்கு கொண்டு வந்திருக்கு. சாரி உன்னை ரொம்ப போர் அடிச்சுட்டேன் இல்ல? நீ ஹேப்பி மூட்ல கால் பண்ண. நான் எல்லாத்தையும் கெடுத்துட்டேன். சாரி வண்ணா. ஆனா இத்தனை வருஷத்துல இந்த விஷயத்தை உன்னைத் தவிர யாரு கிட்டயுமே எனக்கு ஷேர் பண்ண தோணுனதே இல்ல வண்ணா. யூ ஆர் சோ ஸ்பெஷல் டு மீ. ஒரு உண்மையைச் சொல்லட்டா? உன்னை மாதிரி ஒருத்தன் தான் என் லைஃப் பார்ட்னரா வரணும்னு நான் பல முறை நெனச்சிருக்கேன். ஆனா ஒரு முறை கூட அது நீயா இருக்கணும்னு நான் யோசிச்சதே கிடையாது. எல்லோரும் ஒரிஜினல் வேணும்னு தான் ஆசைப்படுவாங்க. ஆனா எனக்கு ஒரிஜினல் வேணாம். எனக்கு உன்னைப் போலவே ஒரு நகல் வேணும். நம்ம ரிலேஷன் ஷிப்பை ஹஸ்பண்ட் வொய்ப் அப்படினு ஒரு சின்ன வட்டத்துக்குள்ள சுருக்க நான் விரும்பல. இட் ஷுட் நாட் ஹேவ் எனி காண்டூர்ஸ். நம்ம ரிலேஷன் ஷிப் இந்த அண்டம் போல விரிஞ்சிட்டே இருக்கனும். ஆனா ஒன்னு, எது ஒண்ணுமே நாம விலகி போகும் போது தான் நம்மைத் தேடி வரும். அமைதியான கடலுக்குள்ள தான் ஆக்ரோஷமான அலைகள் ஒளிஞ்சிட்டு இருக்கு. சுனாமி ஏற்படலாம்னு தெரிஞ்சும் கூட மக்கள் இன்னும் கடலுக்கு மீன் பிடிக்க போயிட்டே தான் இருக்காங்க. அதுக்குப் பேர் அறியாமை இல்ல. சீக்கிரம் அம்மா ஆசைப்படி ஒரு மேரேஜ் பண்ணு. அதுக்கு நீ கடந்த காலத்துல இருந்து வெளிவரனும். காலம் எல்லாத்தையும் குணப்படுத்தும். இப்போ நான் எதுக்கு தேவையில்லாம இதெல்லாம் பேசுனேனு உனக்குத் தோணுனா நான் முன்னாடி சொன்ன அந்தப் பழமொழியை ஒருமுறை யோசிச்சுப் பாரு..." என்றதும் வண்ணன் அது என்னவென்று யோசிக்க,

"என்ன ஞாபகமில்லையா? அடிக்கிற கை தான் அணைக்குமாம்..." என்று சொன்னவள்,

"என்ன தான் பழசானாலும் டாம் அண்ட் ஜெர்ரி மேக்ஸ் எ பெர்பெக்ட் ஆன் ஸ்க்ரீன் பேர்..." என்று அழைப்பைத் துண்டித்தாள்.

வண்ணனோ ஆழந்த யோசனைக்குச் சென்றான்.
(மழை வருமோ?)

 
ஆரம்பத்துல மூணு ரி சொல்லிட்டு இப்போ நாலாவதா ஒரு ரி யோட வந்திருக்கீங்க ??
 
Top