Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மழைக்கால மேகங்கள்!- 18

Advertisement

praveenraj

Well-known member
Member
வெள்ளிமலையில் மஹாசிவராத்திரிக்கான ஏற்பாடுகள் தடபுடலாக நடந்துகொண்டிருந்தது. எல்லா வருடமும் அந்த ஊர் மக்கள் அந்நாளை அமர்களப்படுத்திவிடுவார்கள். அபிஷேக பிரியர் என்று அழைக்கப்படும் சிவபெருமானுக்கு மஹா சிவராத்திரி அன்று நான்கு ஜாமங்களும் விதவிதமான உச்சிகால பூஜை அரங்கேறிக்கொண்டிருந்தது. ஊரே விழாக்கோலம் பூண்டிருக்க சிவராத்திரிக்கென்று பிரத்யேக கடைகளும் குவிந்திருந்தது. அவற்றுடன் அருகிலிருக்கும் ஊர்களில் இருந்து பக்தர்களும் திறந்துகொண்டிருந்தனர். இம்முறை சனிக்கிழமை இரவில் சிவராத்திரி வந்திருக்க வண்ணனும் ஊருடன் ஒன்றி கோவிலுக்குச் செல்ல ஆயத்தமாகிக்கொண்டிருந்தான்.

இன்றுடன் வரதராஜனிடம் பணியில் சேர்ந்து இரண்டு மாதங்கள் ஓடியிருந்தது. இந்த இரண்டு மாதங்களில் அவன் வாழ்க்கை நிறையவே மாறியிருந்தது. தன்னுடைய பள்ளிப் பருவத்திற்குப் பிறகு இப்போது தான் தினமும் வீட்டிலிருந்து சென்று வருகிறான். தினமும் தவறாமல் வீட்டுச் சாப்பாடு வந்துவிட அன்றாடம் செய்யும் நடைப்பயிற்சி சரியான வாழ்க்கை முறை சுத்தமான காற்று ஆகியவை அவன் உடலில் நிறைய மாயாஜாலங்களை நிகழ்த்தியிருந்தது. இங்கு வந்திருந்ததைக் காட்டிலும் இப்போது சுமார் எட்டுக் கிலோ எடை குறைத்திருந்தான். அத்துடன் நைன் டு ஃபைவ் என்னும் அளவான வேலை நேரம் அவனுக்கு வேண்டிய நிம்மதியையும் அமைதியையும் கொடுத்தது என்றால் அது மிகையில்லை. சஞ்சீவி கன்ஸ்ட்ரெக்சன்ஸ் என்னதான் எழுபது எண்பதாயிரம் சம்பளம் கொடுத்தாலும் அதற்கு இரண்டு மடங்கான வேலையை அவனிடமிருந்து வாங்கிவிடுவார்கள். இது எல்லாவற்றையும் விட இப்போது தான் வண்ணன் தன் தாயின் பாசத்தை முழுமையாக உணரத்தொடங்கினான். இப்போதெல்லாம் முன்பைப்போல அவனிடம் அவர் எதையும் திணிப்பதில்லை. உண்மையில் அவர் திணிப்பதற்கான அவசியம் அவருக்கு ஏற்படவே இல்லை எனலாம். அவனிடமிருந்த பொறுப்பற்ற குணம் குறைந்தவாறே இருக்க அதே நேரம் முன்புபோல் அல்லாமல் எல்லாவற்றையும் ஒரு விழிப்புடன் கையாளத் தொடங்கியிருந்தான்.

தன் பெரியப்பா ஜெகதீசனின் குணத்தையும் மிகக் குறுகிய காலத்திலே புரிந்து கொண்டான். அவன் இங்கேயே பணியில் சேர்ந்து விட்டதை அறிந்து அவருக்குள் அமைதியிழந்து காணப்பட்டார். பின்னே அவர் பிள்ளைகள் இங்கே படிக்காமல் ஏதோ செய்து பிழைத்துக்கொண்டிருக்கும் வேளையில் இங்கேயே நல்ல வேலையில் நல்ல சம்பளத்தில் அதும் ஊரார் மெச்சும் அளவுக்கு இருக்கும் வண்ணனைக் காணும் போதெல்லாம் அவருக்கு எங்கெங்கோ எரியும். ஒருநாள் அவனைச் சந்தித்த அவர்,

"என்ன வண்ணா, நான் சொன்ன மாதிரியே உன் அம்மா செஞ்சிட்டா பாத்தியா? உன்னை இங்கேயே இருக்க வெச்சு உன்னையும் என் தம்பியைப்போல ஆட்டி வைக்க நெனைக்குறா" என்று தூபம் போட,

"நானே என் அம்மாவை இப்போ தான் புரிஞ்சிக்கிட்டேன் பெரியப்பா. அங்க நான் பத்து பனிரெண்டு மணிநேரம் வேலை பார்த்தாலும் மாசம் இருபதாயிரம் சேமிக்க முடியாது. ஆனா இங்க ஏழு மணிநேரம் வேலை செஞ்சே அம்பதாயிரம் சேமிக்குறேன். அது போக நான் இங்க இருந்தாலும் என் படிப்புக்கு ஏத்த வேலை தானே செய்யுறேன். நானென்ன அண்ணங்க மாதிரி நல்ல வேலைவெட்டி இல்லாமலா இருக்கேன்? படிச்சிருக்கேன். என் படிப்புக்கேத்த வேலை. அதும் சொந்த ஊர்லயே. இதை விட வேற என்ன பெரியப்பா வேணும்? நான் இங்க வந்ததால என் அம்மாக்கு இருந்த ஒரே கவலையும் இப்போ இல்லை. அவங்க அவ்வளவு நிம்மதியா இருக்காங்க. அது எனக்கு அவ்வளவு மகிழ்ச்சியா இருக்கு. எனக்குன்னு இருக்குறது அவங்க ஒருத்தங்க தானே? அண்ட் எல்லாத்தையும் விட ரொம்ப முக்கியமான ஒரு விஷயம், நான் இங்க இருக்கணும்னு நெனச்சது நானா எடுத்த முடிவு. ஆமா உங்களுக்கும் பெரியண்ணனுக்கும் ஏதோ சண்டையாமே? அவரு சொத்தைப் பிரிக்க சொல்லி கேட்டதா நான் கேள்விப்பட்டேனே அது நிஜமா பெரியப்பா? அதான் பெரியம்மாவும் நீங்களும் தனியா தோட்டத்துக்கே குடிபோயிட்டீங்களா? ஊர்ல அப்படித்தான் பேசிக்குறாங்க... சின்ன அண்ணன் கூட ஏதோ..." என்று வண்ணன் மிகவும் கூலாக வினவ ஜெகதீசனுக்கோ வெடவெடத்து உடல் வேர்வையில் நனைந்தது.

இங்கே தன் வீடு தீப்பற்றி எரிந்தாலும் அடுத்தவர் வீட்டு ஜன்னலை எட்டிப் பார்க்கவே பலருக்கு விருப்பம். விருப்பம் என்பதைக் காட்டிலும் அதில் அவர்களுக்கொரு அற்ப சுகம். வேடிக்கை மனிதர்கள்!

அத்துடன் சரி. அதன் பின் இந்த ஒரு மாதக் காலத்தில் பல முறை வண்ணனைச் சந்தித்தும் எதுவும் பேசாமல் சென்று விட்டார் ஜெகதீசன். இப்போது தான் கிரிஜாவின் மனவலிமை வண்ணனுக்குப் புரிந்தது. இப்படிப்பட்ட மனிதரின் பேச்சுக்களையும் தாண்டி அல்லவா சாதித்துள்ளார். அதில் அவனுக்கொரு கர்வம் எழுந்து அடங்கியது.
இதையெல்லாம் அன்று மாலையே சரிதாவிடம் சொல்லி வேதனையும் கர்வமும் கொண்டான் வண்ணன். ஒரு மனிதன் தன் வாழ்க்கையில் அதும் இத்தனை குறுகிய காலத்தில் இவ்வளவு மாற முடியுமா என்று அவளும் அடிக்கடி ஆச்சர்யம் கொள்வாள். வண்ணனின் மாற்றங்களை அவள் ஒருபோதும் சந்தேகித்தது இல்லை. ஆனால் ஒரு மனிதனிடம் இத்தனை முரண்களை அவள் கண்டதே இல்லை. முரணில்லா வாழ்க்கை தான் உண்மையில் முரணானது என்ற உண்மையை அவள் புரிந்துகொண்டாள்.
வாழ்க்கை செடிகளில் இருந்து பறிக்கப்பட்ட ஆச்சர்ய மலர்களால் தொடுக்கப்பட்ட மாலையாகவே அவனைக் கண்டாள். இந்த ஆச்சர்ய மாலையைச் சூடிக்கொள்ளப்போகும் சுடர்க்கொடி யாரென அறிய அவளுக்குள்ளே ஒரு ஆவல். தூரிகாவுக்கு வண்ணன் மீது பிறந்திருக்கும் விருப்பத்தை அவள் நன்கு அறிவாள். ஆனால் அதே போலொரு எதிர்வினை வண்ணனிடம் இன்னும் எழவில்லை என்றும் அவள் அறிவாள். அவன் மனதில் நிஹாரிகாவுக்கான இடம் மிகவும் ஸ்பெஷலானது என்று அவளைப் பற்றி அவன் பேசிய போதெல்லாம் அவன் முகத்தில் தெரிந்த ஒளி வட்டமே அவளுக்கு உணர்த்திவிட்டது. இனி நிஹாரிகா போல் ஒருத்தியை அவன் காதலிக்கவும் கூடுமா என்று சமயங்களில் அவளுக்குத் தோன்றும்.

அதேநேரம் ஸ்பெஷல் என்பது மிகவும் அரிதானது. எல்லா நொடிகளும் ஸ்பெஷல் என்று மாறிவிட்டால் அதிலேது சுவாரஸ்யம்? தினம் தினம் தீபாவளி என்றால் தீபாவளிக்கேது மதிப்பு? நன்றாக யோசித்துப் பார்த்தால் நம் வாழ்க்கையில் நாம் மிகவும் ரசித்த அல்லது விரும்பிய ஒன்று இனி நம் வாழ்வில் மீண்டும் நிகழாது அல்லது கிடைக்காது என்று உணரும் வேளையில் தான் அது நமக்கு ஸ்பெஷல் ஆகிறது. அப்படி இருப்பதால் தானோ ஸ்பெஷல் மொமெண்ட்ஸ் நமக்கு ஸ்பெஷல் ஆகிறது? இல்லையேல் அது இன்னுமொரு சாதாரண நிகழ்வு என்று கடந்து விட மாட்டோமா?

(you cannot recreate the magic of that special moment yet again in your lifetime. thats why those are so special to us. that spark that liveliness that second are always frozen. இதை எப்படி தமிழில் எழுதுவதென்று எனக்கு சத்தியமா தெரியல. ஒருவேளை இதை நான் தமிழில் எழுதினாலும் இது போலொரு ஸ்பெஷல் வாக்கியமாக அமையுமா என்பதும் கேள்விக்குறியே! even some magical lines cannot be recreated! ?)

சனிக்கிழமை காலையிலிருந்தே வெள்ளிமலை சிவன் கோவில் களை கட்டியிருந்தது. வியாபாரம் முழுவீச்சில் நடந்துகொண்டிருக்க தூரிகாவுக்கு நிற்க கூட நேரமில்லாமல் போனது. எல்லாம் நல்ல படியாக கைகூடினால் ஈசனுக்கு தான் செய்வதாக வேண்டிக்கொண்ட பிரார்த்தனைகளை எல்லாம் கிரிஜா நிறைவேற்றிக்கொண்டிருந்தார். வழக்கமாக இது போன்ற நாட்களில் தூரிகாவுக்கு சிறிது ஓய்வளிக்க கிரிஜா தான் அவளை மாற்றிவிடுவார். இன்றோ அதற்கும் வாய்ப்பில்லாமல் போக தூரிகா சோர்வாகிக்கொண்டே போக தூரத்தில் அமர்ந்து கடைத்தெருக்களை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தவனின் கண்களில் அந்தக் காட்சி தென்பட்டது. அவள் நிலை அறிந்தவனாக அவள் கடைக்குச் சென்றவன் அவளுடன் சிறிது ஒத்தாசை செய்ய அவளே அவனிடம் கடையை ஒப்படைத்துவிட்டு வெளியே சென்றாள்.

தனக்கு ஒரு நல்ல இடத்தில் வேலை வாங்கிக் கொடுத்தவளுக்கு ஏதேனும் கைமாறு செய்ய வேண்டும் என்று நீண்ட நாட்களாகவே வண்ணன் யோசித்துக்கொண்டிருக்கிறான். ஆனால் அதை எப்படி நிறைவேற்றுவது என்று வழி புரியாமல் இருக்க ஒருமுறை மூர்த்தியிடம் பேசிக்கொண்டிருக்கும் தூரிகாவைக் கண்டவன் அவளது கடனை அடைக்க தன்னால் முடிந்த உதவியைச் செய்ய வேண்டும் என்று முடிவெடுத்தான். ஆனால் அதைப் பற்றி தூரிகா ஒருத்தி தானே முழுதும் அறிவாள். அவ்வளவு சுலபத்தில் அவளிடமிருந்து ரகசியத்தை வாங்கிவிட முடியுமா என்ன?
வெளியே சென்று விட்டு வந்தவளின் முகம் களையிழந்து காணப்பட்டது. ஆனால் மக்கள் கூட்டம் திரண்டு கொண்டிருந்ததால் அவனால் அவளிடம் பேச முடியவில்லை. அதே நேரம் அவளிடம் நிறைய தடுமாற்றம் கண்டவன்,

"தூரிகா, ஏன் இவ்வளவு பதற்றம்? என்னாச்சு? இவ்வளவு நேரம் நல்லா தானே இருந்த. இப்போ என்னாச்சு?" என்று கேட்பவனுக்கு பதிலளிக்க முடியாமல் அவள் திணறினாள்.

ஒரு கட்டத்தில் பொறுமையிழந்தவன் அவளை விடாப்பிடியாக நிறுத்த அவளோ முதன்முறை அவன் முன் பலமிழந்தவளாகக் காட்சியளித்தாள்.

சற்று முன் வெளியே சென்றவளை மூர்த்தியும் அவன் கூட்டாளிகளும் தண்ணி அடித்துவிட்டு தவறாக நடக்க முயல தூரிகா அவனை அடித்துவிட்டாள். அதில் ஆத்திரம் அடைந்தவன் நாளை காலைக்குள் அவனுக்கு வரவேண்டிய பணம் அனைத்தும் வரவேண்டும் என்றும் இல்லையென்றால் அவள் கொடுக்க வேண்டிய பணத்திற்கு அவளுடைய வீட்டையும் நிலத்தையும் அவன் எடுத்துக்கொள்வான் என்றும் மிரட்டியிருந்தான். அவளும் எவ்வளவு தான் போராடுவாள்? தந்தைக்கும் உடல்நிலை சரியில்லை ஆறுவயதில் தன்னையே உலகமென எண்ணும் மகன். இவர்களை எப்படி அவள் காப்பாற்றுவாள்?

தூரிகா எதையும் யாரிடமும் வெளிப்படுத்தவே மாட்டாள். கிரிஜா தானாக அவளைப் பற்றிக் கண்டுபிடித்தால் தான் உண்டு. கிட்டத்தட்ட அவளது நிலையில் அவரும் இருந்ததால் ஓரளவுக்கு அவளைப் பற்றி அவர் அறிந்திருந்தார். வாழ்க்கையைப் பற்றியும் எதிர்காலத்தைப் பற்றியும் அவளுக்குள் தகிக்கும் நெருப்பை ஒருவரும் அறியார்.

வண்ணனிடம் அனைத்தையும் தெரிவித்தவளுக்கு பயத்தில் உடல் நடுங்கியது. ஒரு வேகத்தில் அவனை அறைந்து விட்டாள். நாளை காலைக்குள் எப்படி அவ்வளவு பணத்தைப் புரட்ட முடியும்? அப்படி எல்லாவற்றையும் கொடுத்து விட்டால் அவளது நிலைமை? அந்த நேரத்தில் கடைக்கு ஆட்கள் வர வண்ணனே அவர்களுக்கு வேண்டியதைக் கொடுத்தான். பிறகு அவள் அருகில் சென்று அமர்ந்தவனின் தோளில் எதிர்பாரா நேரத்தில் சாய்ந்தவள்,

"வண்ணா, எனக்கு ரொம்ப பயமா இருக்கு வண்ணா..." என்று தேம்பி அழுதாள்.

இங்கே வந்த இத்தனை மாதங்களில் ஒருமுறை கூட அவள் அழுது பார்த்திடாதவன் என்ன செய்வதென்று யோசித்தான்.
வண்ணனின் திருமணத்தைப் பற்றி வேண்டுதலை வைத்த கிரிஜா எதேர்ச்சையாகத் திரும்ப வண்ணனின் தோளில் சாய்ந்திருக்கும் தூரிகையின் காட்சி அவருக்குள் சொல்ல முடியாத ஆனந்தத்தைக் கொடுத்தது.

"இப்போவாது நான் சொல்றதைக் கேளுடா. நாம வெள்ளிமலைக்குப் போகலாம். நீ எதுவும் பேச வேண்டாம். எல்லாமே நானே பேசுறேன். எல்லாத்தையும் அப்பா பார்த்துக்கறேன் டா..." என்றார்.

"வேண்டாம்ப்பா. வண்ணன் என்கிட்டப் பேசி பத்து மாசம் ஆகுது. அது போக எனக்கும் அவரை எதிர்கொள்ளும் தைரியம் இல்ல. நானா தான் பிரேக் அப் பண்ணிக்கலாம்னு சொன்னேன். இப்போ நானே?"

"இன்னமும் உன்னை மறக்காததால தான் ரெண்டு மாசத்துக்கு முன்னாடி கூட உன்னைத் தேடி உன் ஆபிஸ்க்கு வந்து போயிருக்கார். அது போக இங்க இருந்தா உன்னைப் பார்க்க வேண்டி வரும் மறக்க முடியாதுனு தான் அவர் ஊருக்கே போயிருப்பார்..."

"அதெல்லாம் இல்லை. அவருக்கு உடம்பு சரியில்லைன்னு தான் ஊருக்குப் போனாராம்..."

"அது கூட உன்னைப் பிரிஞ்சதால தான் நடந்ததுனு அவரோட ஃப்ரெண்ட்ஸ் கூடச் சொன்னாங்களே! நான் தான் கையில கிடைச்ச ஒரு வைரத்தை விட்டுட்டு எங்கெங்கோ அலைஞ்சேன். என்னை மன்னிச்சிடுடா நிஹா..."

"அப்பா, ப்ளீஸ் என்னைப் புரிஞ்சிக்கோங்க. எனக்கு ஒரு மாதிரி எம்பேரசிங்கா இருக்கு. அவரை வேண்டாம்னு சொல்லி நான் தானே வேற மேரேஜுக்கு ஓகே சொன்னேன். இப்போ நானே எப்படித் திரும்ப போய் அவரை மீட் பண்றது?" என்னும் வேளையில் அவள் கண்கள் கலங்கியது.
தன்னுடைய வறட்டு பிடிவாதத்தால் இன்று தன் மகளின் எதிர்காலம் கேள்விக்குறியாக இருப்பதைக் கண்டவர் எப்பாடு பட்டாவது வண்ணனையும் நிஹாரிகாவையும் சேர்த்து வைக்க வேண்டி வெள்ளிமலைக்குப் புறப்பட்டார்.
(மழை வருமோ?)
 
முடிந்த அத்தியாயம் திரும்பவும் தொடங்குகிறதா ??
 
Top