Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மழைக்கால மேகங்கள்!- 19

Advertisement

praveenraj

Well-known member
Member
மழைக்கால மேகங்கள்!- 19



ஞாயிறு காலை வரை வெள்ளிமலை சிவன் கோவிலில் அபிஷேகங்கள் நடந்து பக்தர்களும் தங்கள் வேண்டுதலை எல்லாம் வல்ல ஈசனிடம் வைத்துவிட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்தனர். இரவெல்லாம் பக்தர்கள் வந்த வண்ணமே இருந்ததால் வண்ணன் தூரிகாவுடன் இருந்து அவளுக்குப் பெரிதும் உதவினான். அதே நேரம் இரவுக்குள் தூரிகாவின் கடனை அடைப்பதற்குத் தேவையான பணத்தையும் புரட்டிக்கொண்டிருந்தான். அவனுடைய சேமிப்பு கிரிஜாவின் வங்கிக்கணக்கில் இருக்கும் பணம் என்று அனைத்தையும் கூட்டியவன் தூரிகா சொன்ன ஆறு லட்சத்திற்கு எண்பதாயிரம் குறைவாக இருப்பதை எண்ணி யோசித்தான். அப்போது தான் வரதராஜனின் நினைவு வர அன்று காலையிலே அவரைத் தேடிச் சென்றவன் தூரியின் நிலையை எடுத்துச் சொல்ல அவரும் தன் வங்கிக்கணக்கில் இருக்கும் பணத்தை அவனுக்குப் பரிமாற்றம் செய்திருந்தார்.

இரவெல்லாம் பயத்தில் உறக்கமில்லாமல் இருந்தவளின் முகம் கவலையில் இருக்க கடையை மூடிவிட்டு வீட்டிற்கு வந்தவள் இன்னும் சற்று நேரத்தில் மூர்த்தியின் ஆட்கள் வந்து இங்கு செய்யப்போகும் களேபரங்களை எல்லாம் எண்ணிப் பார்க்கும் போதே அவளுக்கு உடல் படபடத்தது.

அப்போது அந்த வழியில் வந்த வண்ணன் அவள் முகத்தைப் பார்த்தே அவள் எண்ணவோட்டங்களை எல்லாம் படித்திருந்தான்.

"தூரி, வீட்டுக்கு வா" என்று சொல்லி அவன் முன்னே செல்ல அவனுக்குப் பின் வந்த தூரிகாவைக் கண்டு கிரிஜாவுக்கு எதுவோ சரியில்லை என்று நன்கு புரிந்தது.

"அந்த மூர்த்தியோட போன் நம்பர் சொல்லு..." என்ற வண்ணனை அதிர்ச்சியுடன் பார்த்தாள் தூரிகா.

"விடிஞ்சும் விடியாத இந்தக் காலையில எதுக்கு டா அந்தக் கடங்காரன் நம்பர் கேக்குற?" என்று கிரிஜா சொன்ன தொனியே நேற்று தூரிகாவை எந்த அளவுக்கு பயமுறுத்தி இருப்பான் என்று வண்ணனுக்கு விளங்கியது.

"என்ன மம்மி இப்படிப் பேசுற? அவன் கிட்ட கடன் வாங்குறவங்களைத் தான் கடங்காரங்க என்று அழைக்கப்படுவார்கள். அவன் கடன் கொடுப்பவன். எங்க சொல்லு பார்ப்போம்..." என்று என்றைக்கும் இல்லாத திருநாளாய் அவரை 'மம்மி' என்றழைத்து வம்பிழுத்தான் வண்ணன்.

"இப்போ எதுக்கு வண்ணா அவன் நம்பர்?" என்று கேட்டவளின் உடல் வேர்த்து நடுங்கியது. தூரிகாவின் பலவீனத்தை இன்று தான் முழுவதுமாகப் பார்த்தான் வண்ணன்.

"அதானே இப்போ எதுக்கு அவனைப் பத்திப் பேசுற?" என்ற கிரிஜாவுக்கு,

"உன் மருமக மருமகனு எப்போ பாரு செல்லம் கொஞ்சுறயே அந்தச் செல்ல மருமக உனக்குக் கூடத் தெரியாம என்ன என்ன காரியம் செஞ்சிருக்கா தெரியுமா?" என்றவன் மூர்த்தியிடம் அவள் வாங்கியிருக்கும் கடன் பற்றியும் அதை வைத்து அவளை மிரட்டிக்கொண்டிருக்கும் அவனைப் பற்றியும் எல்லாமும் சொல்லி முடித்தது தான் தாமதம் நொடியும் யோசிக்காமல் அவள் கன்னத்தில் ஒன்றை வைத்தார் கிரிஜா. அதை எதிர்பார்க்காத வண்ணனும் அதிர்ந்து எழுந்தான்.

"ஏண்டி எத்தனை முறை உன்கிட்ட நான் மறைமுகமாவும் நேரடியாவும் இதைப் பத்திக் கேட்டிருப்பேன்? எதாவது பணம் வேணுமா கேக்கும் போதெல்லாம் எனக்குத் தேவை இருந்தா முதல உங்ககிட்டத் தான் வருவேன் அத்தைனு சொல்லிட்டு போயும் போயும் அவன்கிட்ட பணம் வாங்கியிருக்க? அதும் இவ்வளவு பணம் எப்படி டி?" என்று கேட்டவர் கோவமாக அவளை விட்டு விலகி நிற்க அதைப் புரிந்து கொண்டவள்,

"அத்த நான்..." தூரி தொடரும் முன்பே,

"என்கிட்டப் பேசாத. உன்னை நான் எந்த அளவுக்கு நெனச்சிட்டு இருந்தேன். ஆனா நீ என்னைக்கும் என்னை ஒரு அம்மாவா நெனச்சே இல்ல தானே?" என்றவர் கோவமாக உள்ளே செல்ல,

"நான் கேக்காமலே எனக்கு இவ்வளவு உதவி பண்றீங்களே அத்தை நான் கேட்டிருந்தா நீங்க எல்லாமே எனக்குகே கொடுத்திருப்பிங்க. பிரதி பலன் பார்க்காம செய்யுற உங்க மனசையும் உங்களையும் நான் ஒரே அடியா யூஸ் பண்ணிக்க விரும்பல அத்த. என்னைப் புரிஞ்சிக்கோங்க அத்த. நீங்க பேசாம மட்டும் போகாதீங்க அத்த ப்ளீஸ். இவ்வளவு கஷ்டத்துலையு நான் உறுதியா இருந்தேன்னா அது நீங்க என் கூடவே இருக்கீங்கன்னு தைரியம் தான்..." என்றவள் உடைந்து அழ வண்ணன் அவளை நெருங்கி அணைத்திருந்தான்.

"ஏ தூரி! நீ தான் என்னோட இன்ஸ்பிரேசன். உன்னைப் பார்த்து தான் நான் இன்னைக்கு கொஞ்சமாச்சும் மெச்சூரா நடந்துக்குறேன். காம் டௌன். ஒண்ணுமில்ல. அம்மாவால என்கிட்ட கூடப் பேசாம மாசக்கணக்கா இருக்க முடியும். ஆனா அவங்களோட செல்ல மருமகளான உன் கிட்டப் பேசாம ஒரு மணிநேரம் கூட இருக்க முடியாது. நீ இதையெல்லாம் என்கிட்ட இருந்து மறைச்சிருக்கனு நினைக்கும் போது எனக்கே அவ்வளவு கோவம் வருது. அம்மாக்கு எப்படி இருக்கும்? முதல இன்னையோட இந்தப் பிரச்சனையை முழுசா முடிச்சிடுவோம். அதுக்குப் பிறகு அம்மாவை உன்கூடப் பேச வெக்குறது என் பொறுப்பு. அதுக்கெல்லாம் அவசியமே இருக்காது. நீ தான் அம்மாவை உன் பாச வலையில கட்டிவெச்சிருக்கயே?" என்று வண்ணன் சொல்ல சொல்ல தூரிகா மெல்ல ஆசுவாசம் அடைந்தாள். அப்போது தான் அவனுடைய அணைப்பில் இருப்பதையே தூரிகா உணர்ந்தாள். அது அவளுக்குள் சிலிர்ப்பை ஏற்படுத்த அதற்குள் தங்களை யாராவது பார்த்துவிட்டால் என்ன ஆவது என்று நொடியில் அவனை விட்டு விலகினாள்.

பிறகு மூர்த்தியை அழைத்தவன் அவனை வரவழைக்க அவனோ தனக்கு முன் இவள் முந்திக்கொண்டாளே என்று எண்ணி ஆத்திரத்தில் மிதந்தான். அது போக இன்றைக்குள் எப்படியும் அவளால் பணத்தைப் புரட்ட முடியாது என்று உணர்ந்தவன் சற்று மெத்தனமாகவே இருந்தான். ஆனால் அவன் நினைத்ததற்கு மாறாக எல்லாம் நடக்கவும் பொய்க்கணக்கை எல்லாம் சொல்லி அவளுடன் சேர்த்து அவனையும் மிரட்டிப்பார்த்தான். இதையெல்லாம் உள்ளே இருந்து கேட்டுக்கொண்டிருந்த கிரிஜா பொறுக்கமுடியாமல் வெளியே வந்து,

"என்ன மூர்த்தி? என்ன கணக்கிது? இது சரிப்படாது. என்ன கேக்க ஆளில்லைனு நெனச்சிட்டு இருக்கியா? தனியா இருக்குற பொண்ணு கிட்ட தப்பா நடந்துக்க பார்த்தனு உன்மேல கேஸ் கொடுக்கவா? இந்த ஊர்ல நீ பண்ணிட்டு இருக்குற விஷயமெல்லாம் எனக்குத் தெரியாதுனு நெனச்சிட்டு இருக்கியா? ஒழுங்கா கணக்கைச் சொன்னா இங்கேயே எல்லாம் முடிச்சிக்கலாம். இல்லைனா வா எங்க பார்க்கணுமோ அங்க பார்த்துக்கலாம். போலீசுக்கு போனா நீ ஃபைனான்ஸ் பண்ணுறதுக்கு லைசென்ஸ் இருக்கானு கேப்பாங்க. என்ன வெச்சிருக்கயா?" என்று கிரிஜா கேட்டதும் அவன் மட்டுமல்லாமல் வண்ணன் தூரிகா உட்பட அவன் ஆட்கள் எல்லோரும் அரண்டனர்.

பிறகு ஒருவாறு பேசி மூர்த்தியின் கணக்கை எல்லாம் முடித்துவிட்டு அவனிடம் இருந்த தூரிகாவின் நிலத்துப் பாத்திரங்களை எல்லாம் வாங்கி அவனை வெளியே அனுப்பியவுடன் திரும்பி தூரிகாவை முறைத்த கிரிஜாவைக் கண்டு வண்ணனுக்கும் சற்று பீதி கிளம்பியது என்னவோ உண்மை.

"படிச்சவங்க தானே நீங்க ரெண்டுப் பேரும்? அவன் பாட்டுக்குப் பேசிட்டு இருக்கான் ரெண்டு பேரும் எருமைமாடு மாதிரி நின்னு அதைக் கேட்டுட்டு இருக்கீங்க? என்கிட்ட அந்த எகிறு எகுறுவ எங்கடா போச்சு அந்த வீரம்? உனகென்னடி ஆச்சு? இப்படித்தான் ஒவ்வொரு முறையும் அவன் பேசும்போதெல்லாம் நின்னுட்டு இருப்பியா? நீங்கலாம் என்னத்த படிச்சுக் கிழிச்சீங்கனே தெரியில..." என்றவர் உள்ளே சென்றுவிட வண்ணன் தன் அன்னையின் மகிஷாசுரவர்தினி அவதாரத்தில் கோபமாக நிற்க,

"ஐ! அத்த பேசிட்டாங்க!" என்று சந்தோஷத்தில் தூரிகா ஆரவாரமிட்டாள்.

"ஏண்டி உனக்காகப் பேச போய் எங்கம்மா என்னை புள்ளைன்னு கூடப் பார்க்காம அந்தக் கிழி கிழிக்குது உனக்கு உங்க அத்த பேசிட்டாங்கனு சந்தோசமா? உன்னை..." என்று அவளைத் துரத்தினான் வண்ணன்.

இதுவரை தன் மனதில் இருந்த பயமெல்லாம் விலக்கியதாலோ என்னவோ கவலைகள் ஏதுமின்றி ஒரு குழந்தைக்கு அம்மா என்பதையும் மறந்து எட்டு வயது பிள்ளையாக துள்ளிக்குதித்து ஓடினாள் தூரிகா. இவர்களின் பேச்சுக்களை எல்லாம் சமையலறைக்குள் இருந்து கேட்டவாறே இந்தப் பிரச்சனனையைக் கையாண்ட வண்ணனின் முதிர்ச்சியையும் அதன் பின் வெளிப்பட்ட தூரியின் குழந்தைத்தனத்தையும் ஒருசேரவே ரசித்தார் கிரிஜா.

அப்போது அவருக்கு நேற்று அவர் கண்ட காட்சி அவர் கண்முன்னே வந்து போக விரைவில் இது சம்மந்தமாக அவர்கள் இருவரிடமும் பேச வேண்டும் என்று எண்ணிக் கொண்டார்.

அங்கே நிஹாரிகா வண்ணனை விட்டுப் பிரிந்த இந்தப் பத்து மாதங்களில் அவள் வாழ்வில் நிகழ்ந்தவற்றை எல்லாம் அசைபோட்டாள். சொத்துக்குப் பஞ்சமேதும் இல்லாவிட்டாலும் அவளுக்குப் பிடித்த ஒரே காரணத்திற்காக வேலைக்குச் சென்றவள் அங்கே அவளுக்குப் பிடித்த வண்ணனையும் சைட் அடித்தவாறே நாட்களைக் கடத்திக்கொண்டிருக்க திடீரென்று ஒரு நாள் அவள் அந்த லிஃட்டில் ஏறி அவன் மனதிற்குள் சென்று இறங்கியும் விட்டாள். வண்ணனை அவளுக்கு எதற்காகப் பிடித்ததென்று என்று எப்.பி.ஐயே வந்து விசாரித்தாலும் விடை கிடைக்குமா என்றால் அதொரு ஜில்லியன் டாலர் கேள்வி! (அதென்ன ஜில்லியன்? மில்லியன் பில்லியன் ட்ரில்லியன் என்று நீண்டு கொண்டே போனால் வரும் கடைசி எண்ணை யாருமே சொல்ல முடியாது தானே? இன்பினிட்டி என்று அழைக்கப்படும் முடிவிலியை zillion என்று அழைப்பார்கள்!)

அதே போல் எதற்காக தன் தந்தைக்கு வண்ணனைப் பிடிக்கவில்லை என்பதும் இன்று வரை அவளுக்குப் புரியவில்லை. தந்தையை எதிர்த்து வண்ணனைத் திருமணம் செய்யுமளவுக்கு அவளுக்குத் தைரியமில்லை. கிட்டத்தட்ட வண்ணனும் தன்னைப் போல் ஒரு தவிர்க்கயிலாத ஒரு நிலையில் தான் தத்தளித்தான் என்பதே மிகத் தாமதமாகவே அவளுக்குப் புரிந்தது. வண்ணனைப் பிரிந்த பின் சில மாதங்கள் தனிமையில் தவித்தவள் தன் தந்தையின் ஆசைக்காக இன்னொருவரை திருமணம் செய்ய சம்மதம் தெரிவித்தாள். எல்லோருக்கும் பிடித்த வாழ்க்கை கிடைப்பதில்லையே? பலர் தங்களுக்குக் கிடைத்த வாழ்க்கையைப் பிடித்துக்கொள்ள வேண்டிய (hold/like) நிர்பந்தத்திற்குத் தள்ளப்படுகிறார்கள். நிஹாரிகாவும் அதற்குத் தயாரானாள். வண்ணனைச் சந்திக்கக்கூடாது என்பதற்காகவே அந்த வேலையை விட்டாள். தந்தை தேர்ந்தெடுத்த பையனை தனக்குப் பிடிக்க வைக்க முயன்றாள். திருமண தேதியும் குறிக்கப்பட அவள் தந்தைக்கு உடல் நிலை சரியில்லாமல் போனது. திருமணத்தை ஒத்திவைத்தவள் அவருடனே இருந்து கவனித்துக் கொண்டாள்.

தன் வருங்கால மருமகனிடம் தான் எதிர்பார்த்த அன்பும் அக்கறையும் அவருக்குக் கிடைக்கவே இல்லை. தன்னை உடனிருந்து கவனித்துக்கொண்ட மகளை அப்போது தான் கவனித்தார். மகளின் மகிழ்ச்சி வண்ணனிடம் தான் இருக்கிறது என்ற உண்மையே அவருக்கு இப்போது தான் புரிந்தது. எப்படியாவது வண்ணனுடன் அவளைச் சேர்த்து வைக்க வேண்டும் என்று முடிவெடுத்தனர் இப்போது வெள்ளிமலைக்குப் புறப்பட்டார்.

எப்போதும் ஒருவித இறுக்கத்தோடும் மனதில் எதையோ வைத்துப் பூட்டிக்கொண்டே திரிந்த தன் மகள் இன்று எந்தக் கவலையுமின்றி வலம் வருவதை கவனித்த சரவணனிற்கு குற்றயுணர்ச்சி தலைதூக்கியது. எப்படி இருந்த மகளை இத்தனை நாட்கள் எவ்வளவு மனத்துயரத்துக்கு ஆளாக்கிவிட்டோமே என்று யோசித்தவாறே இருந்தார். மூர்த்தியைப் பற்றி அவரும் அறிவார் தானே? குறிப்பிட்ட வயதுக்கு மேல் யாருக்கும் பாரமாக இருக்கக்கூடாது. இங்கே சரவணனோ பல வருடங்களாகவே தூரிகாவுக்கு ஒரு சுமையாகவே தான் இருக்கிறார். இதைப் பற்றி பல சமயங்களில் அவர் யோசித்திருந்தாலும் மூர்த்தியிடம் மாட்டிக்கொண்டு தப்பிக்க முடியாத சூழலில் கூட தன்னிடம் இதைப் பற்றித் தெரிவிக்காமல் இருந்த மகளை எண்ணி மருகினார். ஒருவேளை முன்கூட்டியே தெரிவித்திருந்தாலும் தன்னால் என்ன செய்திருக்க முடியும் என்ற எண்ணமும் அவருக்கு மேலோங்கியது. அடுத்தடுத்த நாட்களிலும் சரவணனிடம் வழக்கமாக இருக்கும் உற்சாகம் பேச்சு ஆகியவை படிப்படியாகக் குறைந்தது. அவரை சில நாட்களாக கவனித்து வந்த கிரிஜா அன்று அவரிடம் வெளிப்படையாகவே கேட்டும் விட்டார்.
ஒரு தந்தையாக தூரிகாவின் எதிர்காலத்தைப் பற்றியும் சூர்யாவைப் பற்றியும் மனம் விட்டுப் புலம்பினார்.
"எனக்கு ரொம்ப பயமா இருக்குமா. இந்தப் புள்ள எப்போ சூர்யாவை இனி தான் வளர்த்துறதா சொல்லுச்சோ அன்னைக்கே இவளோட அம்மா இவளோட எதிர்காலத்தைப் பத்திப் புலம்ப ஆரமிச்சா. எனக்கு அன்னைக்கு அதோட வீரியம் புரியல. மகன் தான் இல்லைனு ஆகிடுச்சு. சரி பேரனாச்சும் இருக்கட்டும்னு இருந்தேன். ஆனா இன்னைக்கு..." என்றவருக்கு அவரையும் அறியாமல் உதறல் ஏற்பட,
"பயமா இருக்கு தாயீ... இவளோட வாழ்க்கை அவனோடவே போயிடுமோ?" என்று கலங்கினார்.
ஒரு தாயாக கிரிஜாவுக்கு சரவணனின் நிலை நன்கு விளங்கியது. நிகழ் காலமே இவ்வளவு சுயநலமாக மாறிக்கொண்டு இருக்கும் பட்சத்தில் எதிர்காலத்தில் மனிதர்களின் மனங்களையும் இந்தச் சமூகத்தின் செயல்பாடுகளையும் பற்றி யோசிக்கையிலே அவருக்கு நெஞ்சம் திகிலடித்தது. விழுமியங்களுக்கான (values) மதிப்புகளும் உணர்ச்சிகளுக்கான மரியாதைகளும் இயற்கையைப்போலும் நீர்நிலைகளைப் போலும் காடுகளைப் போலும் குறைந்துகொண்டே வருகிறதே. மாறிவரும் உலகில் மனிதமும் மானுடமும் மட்டும் மாறாமல் இருக்கும் என்பதற்கான சாத்தியக்கூறுகள் ஏதும் உண்டோ?
"அப்படியெல்லாம் ஒன்னும் ஆகாது அண்ணா. நான் இருக்கேன். ஏன் நீங்களும் இருப்பிங்க. நாமளே இல்லைன்னாலும் வண்ணன் இருப்பான். நீங்க அவளை நெனச்சு எதுக்கும் கவலை படாதீங்க..." என்று சொன்னவருக்கும் ஒரு பதற்றம் தொற்றிக்கொண்டது. ஒரு தைரியத்தில் வண்ணன் இருப்பான் என்று சொல்லிவிட்டார் தான். ஆனால் அவன் மனதில் என்ன ஓடுகிறது என்று இவரும் அறியமாட்டாரே?
நல்லவேளையாக சரவணன் இருந்த குழப்பத்தில் கிரிஜா சொன்னதை அவர் கவனிக்கவில்லை. இவர்கள் இருவரும் அருகருகே அமர்ந்து இருவேறு யோசனையில் இருக்க அப்போது தான் வண்ணனும் தூரிகாவும் தங்கள் தோட்டத்திலிருந்து வந்தார்கள்.
வண்ணனுக்கு இந்த வாழ்க்கை மிகவும் பிடித்துவிட்டது. காலையில் எழுந்து தோட்டத்திற்குச் சென்று அங்கிருக்கும் வேலைகளை இவனால் முடிந்த அளவிற்குச் செய்து அங்கேயே ஒரு குளியல் போட்டுவிட்டு வீடு வருவான். அதற்குள் இவனுக்குத் தேவையான காலையுணவு தயாராக இருக்கும். ஆற அமர செய்தித்தாளை ஒரு புரட்டு புரட்டிவிட்டு ஆபிசுக்கு தயாராகி சென்றுவிடுவான். வரதராஜனுக்கு தூரிகாவிடமிருந்து மதிய உணவு செல்லும் போதே இவனுக்கும் சூடான உணவு கேரியரில் சென்றுவிடும். வீட்டிலிருந்து இருபது நிமிடத்திற்கும் குறைவான பயணம் டார்கெட் முடிக்கவேண்டும் என்ற நிர்பந்தம் இல்லாத வேலை, மாலையில் வந்ததும் சரிதாவிடம் அன்றைய பொழுதைப் பற்றி ஒரு அலசல் பிறகு சூர்யாவிற்கு ஒரு டியூசன் வாத்தியார், எல்லாவற்றுக்கும் மேலாக தினமும் மாலை வெள்ளிமலை ஈசனை மனதார தரிசித்து முன்பு தன் தந்தை செய்து வந்த ஊழியத்தை அவனாகவே செய்ய தொடங்கிவிட்டான். வண்ணனின் மாற்றங்களிலே கிரிஜாவை அதிகம் ரசிக்க வைத்தது இந்த மாற்றம் தான். ஆயிரம் இருந்தாலும் அவன் ஜெயசீலனின் வாரிசல்லவா? இவற்றுக்கெல்லாம் முத்தாய்ப்பாக கிரிஜாவின் சொல் கேட்டு நடக்கும் பிள்ளையாகிவிட்டான்.கிரிஜாவும் முன்பு போலில்லாமல் அவனை அவன் போக்கிலே விட்டு விட்டார்.
வெள்ளிமலைக்கு சுற்றுலா வரும் மக்களைக் கவரும் விதத்தில் அவர்களுக்குத் தேவையான தங்குமிடம் உணவு முதலியவை பற்றி ஒரு அறிவிப்பை கூகுளில் பதிவிட்டு இருந்தான் வண்ணன். இதில் வண்ணன் தூரிகா சரிதா மூவரும் தொழில் முறை பார்ட்னர்கள். தமிழ்நாட்டில் இன்னும் மக்கள் அதிகம் அறியாத பல சுற்றுலாத் தலங்கள் இருக்கிறதே!
இதற்கிடையில் ஒருநாள் வண்ணனின் முன்னாள் அலுவலகத் தோழர்களான சுதா ஈஸ்வர் சத்யா மது ஆகியோர் ஒருநாள் சர்ப்ரைஸாக வெள்ளிமலைக்கு வந்து இறங்கினார்கள். சஞ்சீவி கன்ஸ்ட்ரெக்சன்சில் இருந்து தன் செர்டிபிகேட்ஸ் எல்லாம் வாங்கி வந்த பின் இங்கே தனக்கு கிடைத்திருக்கும் வேலையைப் பற்றியும் வரதராஜனைப் பற்றியும் ஒருநாள் தெரிவித்தான் வண்ணன். ஒரு காலத்தில் நகமும் சதையுமாக அல்லவா இவர்கள் ஐவரும் இருந்தனர். வண்ணனுக்கு உடல்நிலை சரியில்லாத வேளையில் கூட அவர்கள் தானே இவனை மருத்துவமனையில் அனுமதித்தனர். இடையில் ஏற்பட்ட பணிச்சுமை காரணமாக அவர்கள் வண்ணனைத் தொடர்புகொள்ளாமல் போக இன்று அவர்களின் நட்பு பெரிய அளவில் விரிசல் கொண்டிருப்பதை அறிந்தவர்கள் அதைச் சரிசெய்யும் முனைப்பில் இங்கே வந்தார்கள்.

பழைய வண்ணனாக இருந்தால் அவன் நடவடிக்கை வேறுமாதிரி இருந்திருக்கும். ஆனால் இப்போது தான் அவன் நிறைய பக்குவப்பட்டிருந்தானே? முன்பு எல்லாமே அவனுக்கு எக்ஸ்ட்ரீம் தான். ஒன்று எதைப் பற்றியும் கவலை கொள்ள மாட்டான். இல்லையேல் அதிக உணர்சிவசப்பட்டுவிடுவான். இப்போது தான் ஒரு விஷயத்தை எவ்வாறு அணுக வேண்டும் என்றே அறிந்து கொண்டான். வந்தவர்களை உளமார வரவேற்றவன் அவர்களை எல்லாம் சரிதாவுக்கும் தூரிகாவுக்கும் கிரிஜாவுக்கு தேனு முதலிய எல்லோருக்கும் அறிமுகப்படுத்தினான். அவர்களை தன் தோட்டத்திற்கு தங்கள் ஊரிலிருக்கும் அருவி முதலிய அனைத்துத் தலத்திற்கும் அழைத்துச் சென்றான். வெள்ளிமலைக்கு அவர்கள் வருவது இதுவே முதல் முறை. இந்த ஊரையும் இதன் அழகையும் அவர்கள் அதிகம் ரசித்தனர். அதை விட தங்களைப் பார்த்துக்கொள்ளும் முறையிலே தாங்கள் இன்னும் வண்ணனின் மனதில் நண்பர்களாகவே தான் இருக்கிறோம் என்ற உணர்வு அவர்களுக்கு நெகிழ்ச்சியைக் கொடுத்தது.

"வண்ணா, வீ ரியலி மிஸ் யுவர் ப்ரெசென்ஸ் டா..." என்று அழுத்திச் சொன்னான் சுதாகர்.

"நீ இப்போ மட்டும் ஊம் சொல்லு உன்னை எங்க கூடவே கூட்டிட்டுப் போயிடுறோம்..." என்று மது சொல்ல வண்ணனையும் மீறி ஒரு சிரிப்பு உதிர்ந்தது.

"டேய், இது நிஜம் டா. நாங்க ஜோக் அடிக்கல..." என்றான் சத்யா.

"இதோ நாம மீட் பண்ணி மூணு மாசம் ஆகுது. ஆனாலும் நீங்க என்னைத் தேடி இங்க வந்திருக்கீங்க. இது போதும். எனக்கு நம்ம நட்பு மேல நம்பிக்கை வந்திடுச்சு. நாம ஆளுக்கு ஒரு மூலைக்குப் போனாலும் நிச்சயம் நம்ம நட்பு நம்மளை ஒன்னு சேர்க்கும். நீங்க கூப்பிட்டதும் அவ்வளவு நிறைவு. ஆனா மச்சி, எனக்கு இந்த வாழ்க்கை செட் ஆகிடுச்சு. இது நானா விரும்பி ஏத்துக்கிட்ட மாற்றம். போதும். என்ன என்னால பப் பார்ட்டி மால் தியேட்டர் எல்லாம் போக முடியாது. அதை நான் மிஸ் பண்றேன் தான். இல்லைனு எல்லாம் பொய் சொல்லல. ஆனா அதெல்லாம் ஒரு 'மாயை'ங்கறது எனக்குப் புரிஞ்சிடுச்சு. இது தான் என்னோட ரியல் ஹேப்பினெஸ். யூ நோ, மந்த்லி ஒன்ஸ் நானும் சென்னைக்குப் போறேன். சரிதா. அவளோட ஆர்கனைசேஷன். அதுல இப்போ நானும் ஒரு மெம்பெர். காலையில என் தோட்டம் சாயுங்காலம் கோவில் இதெல்லாம் என்னுடைய அன்றாடம் ஆகிடுச்சு. ஒரு விஷயத்தை தொடர்ந்து தொன்னூறு நாள் செஞ்சா அது நம்மோட பழக்கமாகிடுமாம். இன்னைக்கு இதெல்லாம் என் ரொட்டின் ஆகிடுச்சு. இதை பிரேக் பண்ணி... என்னால முடியும் தான். ஆனா வேண்டாம். ஒருவேளை இந்த லைஃப் போர் அடிச்சாலோ இல்லை இதுல இருந்து எனக்கு மாற்றம் வேண்டும்னு என் மனசு சொன்னாலோ அப்போ கண்டிப்பா நான் வர போற இடம் கோவை தான். அண்ட் இனிமேல் இதைப் பத்தி எப்பயுமே என்கிட்டப் பேச வேண்டாம். நீங்க எப்போ வேண்டுனாலும் வரலாம். ஏதாச்சும் டூர் பிளான் பண்ணா சொல்லுங்க போலாம். மது கல்யாணம் பண்ணுறானா சொல்லுங்க போய் ஃபன் பண்ணலாம்..." என்று சொல்ல அதுவரை அமைதியாக இருந்தவர்கள் வெடித்துச் சிரித்தனர்.

"அதென்ன என் கல்யாணம்? ஏன் நீங்கல்லாம் கைலாஸா போய் நித்தியோட சீடர்கள் ஆகப்போறிங்களா என்ன?" என்றாள் மதுபாலா.

"ஏ நான் ரெடி நான் ரெடி..." என்றான் சத்யா.

சிறிது நேரம் அந்த இடமே கலகலப்பானது. நிஹாரிகாவுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை என்பதை அறிந்துகொண்டவர்கள் அதைப் பற்றித் தெரிவிக்க எண்ணினார்கள். ஆனால் வண்ணன் பேசியதை எல்லாம் கேட்ட அவர்களுக்கு அவன் சொல்லாமலே அவன் எண்ணம் விளங்கியது. அதனால் அதைப் பற்றிப் பேசி தேவையில்லாத குழப்பத்தை ஏற்படுத்த அவர்கள் விரும்பவில்லை.

பிறகு அனைவரும் வண்ணனின் இல்லத்திற்கு வர அவர்களுக்கென்று ஸ்பெஷல் உணவுகளை எல்லாம் கிரிஜா தூரியுடன் இணைந்து செய்திருந்தார். வந்த முதல் நாளிலே வண்ணனின் மாற்றங்களையும் அதனால் மகிழ்ச்சியாக இருக்கும் கிரிஜாவையும் அவர் மனமறிந்து நடக்கும் தூரிகாவையும் சில அர்த்தத்துடனே பார்த்துக்கொண்டிருந்தார்கள் வண்ணனின் நண்பர்கள்.
 
என்ன இது பதினெட்டாவது எபில வெள்ளிமலைக்கு வரத் தொடங்கினவர் இன்னும் வந்து சேரல ????
 
என்ன இது பதினெட்டாவது எபில வெள்ளிமலைக்கு வரத் தொடங்கினவர் இன்னும் வந்து சேரல ????
அவங்க வந்த டிரெயின் நடுவுல block ஆகிடுச்சு ?
 
Top